Monday, June 04, 2007

எழுத்தாளர் தேவன் மறைந்து சரியாக ஐம்பது ஆண்டுகள் (5, மே - 1957) ஓடிவிட்டன் என்றாலும் அவர் எழுத்துக்கள் மட்டும் என்றும் மக்கள் மனதை விட்டு மறையவே மறையாது. எளிமையான் நகைச்சுவை (தேவன் வார்த்தையில் 'ஹாஸ்யரஸம் ) என்பது தேவனுக்கு கை வந்த கலை. அவரை சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, நாட்டின் அன்றைய நிலை இவை எல்லாமே அவர் கதைகளில் மிக நேர்த்தியாகவும் வாசகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும்படியாகவும் சொல்லப்பட்டிருக்கும்.'மிஸ்டர் வேதாந்தம், மிஸ் ஜானகி, கல்யாணி, ஜஸ்டிஸ் ஜகன்னாதன்,(SRI) சீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, இன்னும் எத்தனையோ புதினங்கள் மூலம் தேவனின் எழுத்துக்கள் தமிழுலகத்தில் நீண்ட நெடுங்காலம் நிலைத்து இருக்கும்.

அந்தக் காலத்தில் ஆங்கில மோகம் பிடித்து ஆங்கிலக்கதைகளையே படித்துப் பழக்கப்பட்ட வர்க்கத்தினரை, தன் இயல்பான நகைச்சுவை சேர்த்த எழுத்து் மூலம் தமிழுக்கு இழுத்தவர் தேவன்.

என் எழுத்துகளுக்கு ஆத்திசூடி தேவன் எழுத்துகள்தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்வேன். தேவனின் புதினங்கள் மட்டுமல்ல அவர் எழுதிய சிறு கதைகளும் கட்டுரைகளிலும் அவர் கைவண்ணம் அதிகமாகவே ரசிக்கலாம்.
1947 ஆம் ஆண்டில் வெளிவந்த தேவனின் கட்டுரை 'கோபம் வருகிறது' ஒரு பகுதியை பார்ப்போமா?
-------------------------------------------------------------------------------------------
'மனிதருக்கு மனிதர் கோபம் வித்தியாஸப்படுகிறது. கோபமூட்டக் கூடிய சந்தர்ப்பங்களின் தன்மையும் அதை அடக்கப் பெற்ற்ருக்கும் சக்தியையும் பொறுத்திருக்கிறது அது. 'முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம்' என்பது பிரசித்தம்மான வசனம். துர்வாச முனிவருக்குக் கோபம் வர ஒரு காரணமும் தேவை இல்லை. "ஸார்! நீங்கள் கடைசியாக கோபித்துக் கொண்டு எட்டு நிமிஷங்களுக்கு மேல் அகிவிட்டது போல் இருக்கிறதே!" என்று ஞாபகமூட்டினால் போதும்: "பிடி சாபம்! இது வரை ஏன் ஞாபகப்படுத்தாமல் இருந்தாய்?" என்று கோபித்துக் கொண்டு விடுவார்.

எனக்கு கோபம் வரும் விதத்தை பின்னால் நினைத்துப் பார்த்து சிரித்திருக்கிறேன். என்னுடைய கோப வேளையில் எனக்கு யாரைக்கண்டாலும் பிடிக்காது. எனக்குப் பிடித்த டிபனைக் கூட முதலில் தொடமாட்டேன். கோபம் விரக்தியாக வேற்றுருவம் கொண்டு, 'நான் கண் காணாமல் தொலைந்து போய்விடுகிறேன்.. இந்த வீட்டில் இனிமேல் எதையும் சாப்பிடுவதாய் இல்லை" என்றெல்லாம் பேசி, மெள்ள மெள்ள வழிக்கு வந்து.. "சரி.. சரி.. சீக்கிரம் இலையைப் போடு..நான் ஆபீசுக்குப் போகிறேன்!" என்பேன்.

ராஜத்துக்குக் கோபம் வருவதுண்டு. எல்லா ஸ்திரீகளையும் போலவே அது எப்போது எதற்காக வரும் என்று சொல்வதற்கில்லை. கடும் மெளனத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், எனக்கு வேண்டிய சகல உபகரணங்களையும் உரிய காலத்திற்கு முன்னால் அவள் எடுத்து வைப்பதிலிருந்தே அவளுக்கு அது கோப வேளை என்று ஊகித்துக்கொள்வேன்.

'இவ்வளவு நன்றாக சிசுருட்சைகள் நடப்பதென்றால், ராஜம், நீ அடிக்கடி கோபித்துக் கொள்ளேன்' என்று கூட நான் அவளைக் கேட்டுக்கொள்ளலாமா என்று நினைப்பதுண்டு. ஆனால் கேட்பதில்லை.

நானும் என் சகோதரியும் சிறுவர்களாக இருந்த போது எங்கள் தகப்பனாரிடமிருந்து ஒதுங்குவோம். முக்கியமாக அவர் 'சவரம் செய்து கொண்ட தினங்களில்' அதிக கோபமாக இருப்பது போல் எங்களுக்கு ஒரு பிரமை தோன்றும்.

கோபத்தினுடைய குணம் ஒன்று உண்டு. யார் மிகவும் அன்புக்கும் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களோ, அவர்கள் மீதுதான் அது லகுவில் பாயும். நமக்கு வேண்டியவர்களின் சிறு பிழையையும் நாம் மன்னிக்கத் தயாரில்லை. கருங்கல்லுடன் போட்டி போடும் பொரி விளங்காய் உருண்டையை அஞ்சாமல் கடிப்போம் - அன்னத்துடன் ஒரே ஒரு சிறு கல் இருந்துவிட்டால் அதை பொறுக்கமாட்டோம் அல்ல்வா?

பெரிய நோய்களைப் போல் இதயத்தில் கோபத்தைத் தங்கவிடவே கூடாது. பாலிலிருந்து வெண்ணெயைக் கடைந்தெடுத்து விட்டாப் போல, அவ்வப்போது அதை நீக்கி விடுவதே நலம்.

நான் கூர்க்கா சேவகர்களைப் பார்த்திருக்கிறேன். இடையில் ஒரு தோல் பையில் ஒரு கத்தி சதா தொங்கிக் கொண்டிருக்கும். கத்தியின் கைப்பிடி மட்டும் என் கண்ணில் பட்டிருக்கிறதே ஒழிய அதன் இரும்பு பாகத்தை நான் கண்டதே இல்லை. ஆபத்திற்கு கத்தி இருக்கிறது.. ஆனால் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியவரை அதை எடுக்காமலேயே சமாளித்துக் கொள்ளப் பார்க்க வேண்டியதுதான்.

கோபம்தான் அந்தக் கத்தி.

கோபித்துக் கொள்ளாதீர்கள். கட்டுரை இங்கே முடிந்து விட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
(தேவன் எழுதிய 'சீனுப்பயல்' கதைத் தொகுப்பில் இருந்து.)
மறுபடியும் சந்திப்போம் - தேவன் புதினங்களை சற்று மேலோட்டம் விடுவோம்.
அன்புடன்
திவாகர்.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home