அவள் அழகுக்கு ஈடு இணை ஏதுமில்லை. எல்லோரும் அப்படி சொல்லும்போது நானும் ஒப்புக்கொள்கிறேன். அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லைதான். அந்தக் கண்கள்.... அந்தக் கண்களால் சர்வ சாதாரணமாய் வீசப் படுகின்ற காந்தசக்தி..... அவள் விடுகின்ற இளஞ்சூட்டு மூச்சு தென்றலோடு கலந்து அந்த தென்றலை அனுபவிக்கும் அனைவரையும் தாலாட்டும் அதிசயம்.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்தான்.
ஆனாலும்... மறுபடியும் சொல்கிறேன், ஆனாலும் எனக்கு அவள் மேல் காதல் தோன்றவில்லைதான். ஏன் என்று கேட்பீர்களே.. யதார்த்தமான உண்மை சார்! எனக்கும் அவளுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் சார்... நான் எங்கே? அவள் எங்கே? அவள் மலை.. நான் சிறு மணல் துகள்... நான் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தாலும் இன்னும் உயரமாக தெரிபவள்... எனக்கு எதுக்கு சார் வீண் ஆசை? நமக்கு எதுக்கு அவள் சகவாசம்? அவளைப் பற்றி நான் ஏன் நினைக்கணும்? அடைய முடியாதவளைப் பற்றி ஏன் ஆசைப் பட வேண்டும்? ச்சேச்சே... என் சிந்தனையில் அவள் இல்லை சார்.. அவளை என் சிந்தனையிலிருந்து எப்பவோ தூக்கிப் போட்டாச்சு. நீங்க எத்தனை முறை கேட்டாலும் என் பதில் இதுதான். அவள் என் நெஞ்சத்தில் இல்லை.. இல்லை..இல்லை... ரஜினி மாதிரி என் நெஞ்சே தனி நெஞ்சு... அந்த தனி நெஞ்சத்தில் அவளுக்கு இடம் இல்லை.. போதுமா.. ஆளை விடுங்க சாமி..
ச்சேச்சே.. அவளாம் அவள்.. அவள் அத்தனை பெரிய அழகாயிருந்தால் இருந்துவிட்டு போகட்டுமே.. எனக்கென்ன போச்சு?
ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்கள்...அத்தனை பெரிய அழகி ஒய்யாரமாய் நடை நடந்து இடை ஒடித்து சடை விசிறி கால் சலங்கை ஒலி இதயத்தில் வலிக்க ... ஐய்யோ.. பாருங்களேன்.. இதோ என் அருகே வருகிறாளே..அந்தக் காந்தப் பார்வையால் என் கண்களில் ஊடுருவி உள்ளே போக வழி கேட்கிறாளே.. இது என்ன நியாயம்.. என் கண்களும் எனக்கு சதி செய்கின்றது. என்னைக் கேளாமலே என் பார்வை வெறித்து அவளை பார்த்ததோடு மட்டுமில்லாமல் என் அனுமதி பெறாமலே கண் வாசல் வழியாக என் இதயத்திற்கு அவள் மொத்த வடிவத்தையும் அனுப்பிவிட்டது. என் தனி நெஞ்சை வஞ்சித்து விட்டது.
என் கையைப் பிடிக்கிறாள்.. ஐய்யய்யோ.. இது என்ன சோதனை.. நானா அவளைப் பார்க்க ஏங்கினேன்? இத்தனை பெரிய அழகி என்னிடம் ஏன் தானாக வரவேண்டும்? ஏதோ பார்த்தோமா .. போனோமா என்றிருக்கக் கூடாதா? என் உடலுக்குள் புகுந்து என் உயிரில் கலந்து என் தனி நெஞ்சத்தை என்னிடமிருந்து ஏன் பிரித்தாய்? இனியும் உன்னை விட்டு என்னால் பிரிய முடியுமா?
என்ன..என்ன? மறுபடியும் சொல்லடி... நான் போகச் சொன்னாலும் என்னை விட்டு விலக மாட்டாயா? சொல்.. சொல்லடி.. நீ பேச பேச எனக்கு கவிதை தோன்றுதடி...
யானொட்டி வந்து இருத்துவம் என்றிலன்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என் உயிருனுள் கலந்து இயல்
வானொட்டுமோ ... என்னை நெகிழ்க்கிவே.--------------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள கவிதை எப்படி இருக்கிறது? இந்தக் கவிதை எழுதியது நம்மாழ்வார். என்ன.. அவர் ஆண்டவனை நினைத்து எழுதினார்.. அவ்வளவுதான்.. ஆனால் எத்தனை உயிர்ப்பு சக்தி
அந்த உயிர்ப்பு சக்தி என்னையும் ஆட்கொண்டதின் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லைதான்.
''உள்ளன மற்றுளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணிவண்ணா என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்த்தே எனை கண்டுகொண்டு உய்ந்தொழிந்தாய்
வெள்ளத்தனைக் கிடந்தாய் - இனி என் செய்கெனே"
நம்மாழ்வாரின் இந்தப் பாடல் வரிகள் என்னை முதல் முதலாக அவர்பக்கம் ஈர்த்தன. சாதாரண மனிதன் ஆயிரத்தெட்டு கவலைகளில் ஆழ்ந்து கொண்டே ஆண்டவனையும் சலனம் ஏதுமின்றி சிந்தித்து பூசனை செய்வது என்பது முடியாத காரியம்தான். ஆண்டவன் பெயர் மட்டுமே நம் நாவில் - ஆனால் நம் மனதோ மாறுபட்ட நினைவுகளில். கவலைப்பட வேண்டாம் பக்தரே..ஆண்டவன் உனது கள்ள மன நினைவுகளை கண்டுகொள்வதில்லை - உனது நாவில் வரும் தன் நாமத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறான் - நம்மை வாழவைக்கிறான்.
சாதாரண மனிதனுக்கு இப்படி ஒரு நம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தவர் நம்மாழ்வார் ஒருவர் மட்டுமே.
Labels: நம்மாழ்வார் - நம்ம ஆழ்வார்
0 Comments:
Post a Comment
<< Home