Friday, December 30, 2016

லண்டனில் திருவள்ளுவர்

அன்புள்ள விஓவி குடும்பத்தாருக்கு,

வணக்கம்.சென்னையில் பாலா அவர்களின்  நாட்டுக்குறள் பாட்டு வெளியீடு விழாவும், ஈரோட்டில் சங்ககிரி சகோதரி ஹெலனா எழுதிய வள்ளுவம் பற்றிய புத்தக வெளியீடு விழாவும் சிறப்பாக நடந்தேறியது கண்டு மகிழ்ந்தேன். இரண்டு விழாக்களிலும் பெரிய அளவில் நம் வள்ளுவ குடும்பத்து அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான். மேலும் தலைவர் சி.ரா அவர்களும் சென்னையிலே வந்து குடியேறிவிட்டது ரெட்டிப்பான மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான்.

இந்தக் கடிதம் முழுதும் திருவள்ளுவரின் சிலை பற்றியதுதான் என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன். அதுவும் லண்டன் திருவள்ளுவர் சிலை பற்றிய விஷயம் என்றால் சாதாரணமானதல்ல என்பதால் உடனடியாக இந்தக் கடிதத்தை எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது.

எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1995 இல் ஜனவரி மாதம் முதல்வாரத்தில் தஞ்சையில் நடந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் இந்த மகாநாட்டினை லண்டன் மகாநகரத்தில் நடத்தத்தான் திட்டமிட்டிருந்தார்களாம். அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்கிணங்க லண்டனிலிருந்து தஞ்சைக்கு மாற்றப்பட்டதாம். இருந்தாலும் லண்டனுக்கு தமிழக அரசால் ஏதாவது தமிழ் சார்பாக செய்யவேண்டும் என்று கோரப்பட்டதால் லண்டனில் திருவள்ளுவர் சிலை ஒன்றினை அன்பளிப்பாக அமைக்க ஒப்புக்கொண்டதாக மாநாட்டிலேயே சொன்னார்களா. (மாநாட்டில் சொன்னார்கள் என்பது உறுதி செய்யப்படவேண்டும்தான். கலிபோர்னிய ராஜம் அம்மா இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அவர்களை கேட்கிறேன்) ஆனால் கொடுத்த வாக்கினை உடனடியாக செல்வி ஜெயலலிதா காப்பாற்றியதோடு அந்த சிலை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
லண்டன் நகரத்தில் மட்டமத்தியில்  உள்ள லண்டன் பல்கலைக்கழகத்தின்  எஸ் ஓ ஏ எஸ் - (ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆஃப்ரிகன் ஸ்டடீஸ்) வளாகத்தில் இந்த சிலை வைக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட, 1996 ஆம் ஆண்டு மே மாதம்  அங்கே ஒரு மரத்தின் கீழே பீடம் செய்து அந்த மரத்து நிழலில் நம் வள்ளுவரை அழகாக உட்கார வைத்துவிட்டார்கள். ஆடம்பரம் இல்லை.. கோலாகலம் இல்லை. மிக எளிமையான முறையில் அன்றைய இந்தியத் தூதர் சிங்க்வி தலைமையில் மொத்தம் பத்து பேர் கலந்துகொள்ள திருவள்ளுவர் ஹாயாக மரத்தின் கீழே அமர்ந்து விட்டார் என்று ஸ்வாமிநாதன் தெரிவித்தார்.

அடடா, நம் லண்டன் ஸ்வாமிநாதன் பற்றி இன்னமும் ஓன்றுமே சொல்லவில்லையே.. தங்கத்துக்கு மறு பெயர்தான் லண்டன் ஸ்வாமிநாதன். தமிழுக்கு இந்த லண்டன் மாநகரத்திலே பல சேவைகளை செய்துகொண்டு வருபவர் திரு ஸ்வாமிநாதன். பிபிசிக்காக 1987 இல் லண்டன் வந்தவர் தமிழ் அவரை நன்றாக பயன்படுத்திக்கொண்டதுதான். மாயவரத்தைச் சேர்ந்தவர் மதுரை புலம் பெயன்று அங்கிருந்து லண்டன் மாநகரத்துக்கு வந்து சேர்ந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தொண்டு செய்கிறார். இன்னமும் கூட வகுப்புகள் எடுத்துக்கொண்டு வருகிறார். இங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் இவரின் மேலான ஆலோசனைகளைக் கேட்டு தமிழ்ச் சேவைகள் புரிகின்றன. தமிழ் இலக்கியங்கள் மேல் இவருக்குள்ள ஆழ்ந்த பற்று அவரை பல சமயங்களில் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தும். மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்குறளும் இவரை வெகுவாகக் கவர்ந்தவை.   
கம்பராமாயணமும் பெரியபுராணமும் கூட அவர் மாணவச் செல்வங்களுக்கு  கற்றுத் தரும் இலக்கியங்கள்தான்.இவரோடு பேசப் பேசத்தான்  இவரிடம் தமிழ் பயிலும் மாணவர்கள் எத்தனை கொடுத்து வைத்தவர்கள்தான் என்பதை நாம் உணரலாம்.. 

இதற்கும் மேலாக இவரின் வலைப்பூக்கள் ஏராளமான வாசகர்களை இவரிடம் ஈர்த்தவை. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் 1996 இல் இந்த இடத்தில் நடந்த திருவள்ளுவர் சிலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பத்து பேரில் இவரும் ஒருவர். ஆகையினால்தான் நான் லண்டன் திருவள்ளுவரைச் சந்திக்கவிரும்பிய போது திரு ஸ்வாமியுடன் செல்லவேண்டுமென அவருடன் தொடர்பு கொண்டேன். மிக மகிழ்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்று திருவள்ளுவரை அங்கே அறிமுகம் செய்தார். அங்கே சென்றவுடன் சில திருக்குறள்கள் ஓதினோம். நெஞ்சுக்கு நிம்மதி.
நாங்கள் சென்றபோது யாருமில்லைதான். ஆனால் எங்கள் பின்னாலேயே ஒரு இசுலாமியக் குடும்பம் அங்கே வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது. ஈராயிரம் வருடங்களுக்கு முன் பிறந்து உலகுக்கு இந்த உலகமக்கள் உய்ய திருக்குறளைப் பரிசாகத் தந்த முனிவர் என்று அவர்களுக்கு எடுத்துச் சென்னார். வந்தவர்களின் ஆர்வம் கூடியதை அவர்களின் முகக்குறிப்பே எங்களுக்குச் சொன்னது.

எத்தனைதான் பல்கலைக்கழக திறந்தவெளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இருந்தாலும் யாராலும் பராமரிக்கமுடியாத சூழ்நிலையில் இருந்தது அந்த இடம். இப்போது குளிர்காலம்.. அவர் அமரந்த இடத்தில் இருந்த மரத்தில் இலைகளெல்லாம் விழுந்து விட்ட காலகட்டம். பறவைகளே அரிதாக வசிக்கும் கால கட்டமும் கூட. அதனால் சற்று சுத்தமாக இருந்ததுதான். ஆனால் கோடை வர ஆரம்பித்து இலைகளும் துளிர்விட ஆரம்பித்துவிட்டால் மீண்டும் பறவைகள் வாசம் செய்ய ஆரம்பிக்கும். இதனால் திருவள்ளுவருக்கு சில கஷ்டங்கள் அங்கே உண்டு. பறவைகளின் எச்சங்கள் அவர் மேனி மீது விழுந்து அசுத்தப்படுத்த அந்த காய்ந்து போன எச்சங்களை பலவருடங்களாய் அகற்றாமல் இருந்ததால் லண்டன் பல்கலைக்கழக நிர்வாகம் சுத்தம் கருதி திருவள்ளுவரையே சென்றவருடம் இங்கிருந்து அகற்றி எடுத்து உள்ளே வைத்துவிட்டார்கள். ஆனால் மறுபடியும் சுத்தம் செய்து இந்த வருடம் ஜூன் மாதத்தில் வைத்தாலும், மறுபடியும் கோடையும் வரும், பறவைகளும் வந்து ம்ரத்தில் குடியேறும். மறுபடியும் எச்சங்கள் வருவதும், அவர் மேல் விழுவதும்,அதனை அகற்றமுடியாமல் காலத்தைப் போக்குவதையும் தடுக்க முடியாது. 

திருவள்ளுவரை வேறு இடத்துக்கு மாற்றவும் முடியாது. ஆனால் தற்சமயம் இருக்கும் இடத்திலேயே அவரைச் சுற்றி கம்பிகளும், தலைக்கு மேலே கூரையும் வைக்க ஆறாயிரம் பவுண்ட் எஸ்டிமேட் ஒன்று போடப்பட்டுள்ளதாக திரு ஸ்வாமி தெரிவித்தார். பல்கலைக் கழக நிர்வாகம் செலவு செய்யாவிட்டாலும் இதற்கான பணத்தைச் சேர்ப்பது ஒன்றும் கடினமல்ல என்று ஸ்வாமி தெரிவித்தார். ஆனால் கோடை வருவதற்குள்  இந்த வேலை முடியவேண்டுமே என்ற கவலை அவருக்கு உண்டுதான். தமிழ்மக்கள் அதிலும் லண்டன் வாழ் தமிழ்மக்கள் தங்கள் ஆதரவை நல்கிடவேண்டும். விரைவில் திருவள்ளுவர் சிலை பொலிவுடன் இருப்பதற்கான ஆயத்தங்களைத் தொடரவேண்டும். 

திருவள்ளுவரின் குறளைப் பரப்பினால் போதாதா, சிலை வைத்துதான் என்ன ஆகப் போகிறது என்று தோன்றலாம். சிலை வைப்பதில் சிரமம் கூட இருக்கிறது. சிலை வைத்தால் அவர் நிற்பது போலா, அமர்வது போலா, அல்லது அவருக்குத் தாடி இருக்கிறது என்று எப்படி ஊகிக்கமுடிந்தது. மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று முழங்கியவருக்கு தாடி எதற்கு, என்றெல்லாம் கேள்வி எழும்பும்தான். 

ஏற்கனவே விசாகப்பட்டினத் தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பதற்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்தவன். ஏன் சிலை வேண்டுமென்றால் எதிர்கால குழந்தைகள் தெரிந்து கொள்ளவேண்டும்.. இப்படி ஒரு மனிதர் அந்தக் காலத்தில் தமிழகத்தில் உதித்து. உலகத்துக்கே நல்வழி காட்ட திருக்குறள் எழுதி அந்த நல்வழியைத் தந்தார் என்று சிலைகளை முன் வைத்து திருக்குறளின் பெருமையை எதிர்காலத்தவர் கருத்தில் ஏற்ற வேண்டும்... சிலை ஒரு கருவிதான், ஆனால் அதன் பின்னே ஒளிந்திருக்கும் உண்மையான கருத்து உன்னதமான கருத்தல்லவா.. 

லண்டனில் பாராளுமன்றத்துக்கருகே பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டில் உதித்த உலகத் தலைவர்களை சிலைகளாகச் செய்து சுற்றுலாக்காரர்களைக் கவர்கிறார்கள். காந்தி, சர்ச்சில், மாண்டெலா போன்றவர்களை பொதுமக்கள் பார்வையிடும்போது அவர்கள் உலகத்துக்குச் செய்த சேவைகள் நினைவுக்கு வருகின்றன என்பது உண்மைதானே. திருவள்ளுவரோ இவர்களையெல்லாம் விட மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர் என்பதை உலகமெலாம் உணரவேண்டும். அவர் எழுதிய திருக்குறள் வழியைத் தேர்ந்தெடுத்து வாழவேண்டும் என்பதுதானே நம் எல்லோர் விருப்பமும் கூட..

இதனிடையே பனி படர்ந்த லண்டன் மாநகரத்து ஈரவீதிகளில் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டே நடந்து செல்வது கூட ஒரு தனி இன்பம்தானே... அந்த அனுபவத்தை என்னவென்று சொல்ல..

அன்புடன் 

உங்கள் குடும்பஸ்தன்.
திவாகர்.Friday, April 15, 2016

சீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் கேள்விகளும்.இந்தப் பதிவுக்கு ஒரு முன்னோட்டம் உண்டு. என் நாடகம் ஒன்றில் சீதை அக்கினியில் குளிப்பித்தது என்பது கதாநாயகனாகிய இராமன் தன்னை ஒருபடித் தாழ்த்திக் கொண்டு தன் அருமை மனைவியின் புகழ்பரப்பச் செய்யத்தான், என வசனம் எழுதினேன். கலிஃபோர்னியா வாசியும் என் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய பேராசிரியை ராஜம் அம்மா இதைப் படித்துவிட்டு அவர்கள் சில கேள்விகள் எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலாகத்தான் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளேன். படியுங்கள். போகப் போக விவரங்கள், கேள்விகள் புரியும்.
                                                                       ************

அன்புள்ள ராஜம் அம்மா!

முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.. பொதுவாக ராம நவமியன்று ராமரைப் பற்றி எழுதுவது சில வருடங்களாக வழக்கப்படுத்திக் கொண்டுள்ளேன். காரணம் அந்த ஒரு நாளாவது ஸ்ரீராமன் நினைவில் சில மணித்துளிகள் செலவழிக்கலாமே என்றுதான். ஆனால் இந்த ராமநவமியன்று அவன் திருவுளம் வேறாகியுள்ளது என்பது உங்களின் கடிதம் மூலம் நிரூபித்துள்ளான். ’அவனை அதிக நேரம் நினை மனமே’ என்று போதித்துள்ளான். அவன் எப்போதுமே அப்படித்தான். 

உங்கள் பதிவில் இரண்டு விஷயங்கள் உங்களுக்கு ஒவ்வாததாக குறிப்பிட்டுள்ளீர்கள். 
1. சீதையை அக்கினியில் குளிப்பித்து அவள் கற்பின் மீது சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது (!)
2. கர்ப்பஸ்திரீ சீதையை அடவிக்கு அனுப்பி ஒரேயடியாக தள்ளிவைத்தது.

இது பற்றியெல்லாம் நான் புதிதாக என்ன பதில் சொல்வது.. ஆனால் கொஞ்சம் பொறுமை கொண்டு நீங்கள் படித்தால் ஏதேனும் புதிய விஷயம் கிடைக்கலாம். மேலும் ஒரு கோரிக்கை. தயை செய்து திறந்த மனத்துடன் இதைப் படிக்கவேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை தவறு என அந்தத் திறந்த மனதுக்குப் பட்டால் நீங்கள் உரிமையோடு என்னைக் கண்டிக்கலாம். சரியென்று பட்டாலும் சொல்லி விடுங்கள். உங்கள் தமிழுக்கும், தனிப்பட்ட முறையில் உங்கள் பண்பான உணர்வுகளுக்கும் நான் அடிமை. இப்போது இதை எழுதும்போது யாருக்குப் பதில் எழுதுகிறோம் என்பதை நினைத்துக் கொண்டே ‘ கொஞ்சம் அடக்கி வாசி; என என் அடிமனது கண்டித்துக் கொண்டே இருக்கிறது.

சீதையின் அக்னிப்பிரவேசம்:

தமிழ் மண்ணில் கடந்த ஐம்பதாண்டு காலமாக எத்தனையோ கணக்கிலடங்கா பட்டிமன்றங்களில் இந்தச் செய்திகள் மிகப் பெரிதாக வாதாடப்பட்டுள்ளன.. இந்தப் பட்டி மன்றங்களில் சீதையின் பரிதாபநிலை கேட்டு அவளுக்காக மருகி அழுதவர் பலபேரைப் பார்த்திருக்கிறேன். ஏன் நானே சில சமயங்களில் ஸ்ரீராமன் மீது கோபம் கொண்டுள்ளேன். ஆனால் அப்படிப் பேசியவர்கள் வேறு இடங்களில் ஸ்ரீராமனுக்கு ஆதரவாகவும் சீதை அக்கினியில் குளிப்பித்தது சரிதான் என்று கூட மாறிப் போய் பேசுவர். அடக் கடவுளே.. அப்படியானால் தமிழ்ப் பேச்சாளர்களின் மகிமையினால்தானா இந்தப் பிரச்சினை இத்தனைப்பெரிதாக எழுகிறது என்று கூட நினைப்பேன். அதுதான் உண்மையோ என்னவோ என்று பல சமயங்களில் தோன்றும். பல புத்தகங்கள், பல கவிதைகள் அக்கினிப்பிரவேசத்தால் மெருகேறியுள்ளன. சீதை மட்டும் அக்கினிப் பிரவேசம் அன்று செய்திராவிட்டால் பல கவிஞர்களின் கற்பனை வறண்டு போயிருந்திருக்குமோ என்று கூட தோன்றும். ஏனெனில் தெலுங்கு நாட்டில் இதைக் காணவில்லை. அங்கெல்லாம் ராமபக்தி மட்டும்தான் உண்டு.

எனக்கு மூதறிஞர் ராஜாஜியை அவருடைய கடைசிகால கட்டத்தில் அடிக்கடி (தினந்தோறும் குடிநீருக்காக மதிய வேளையில் - பள்ளிக்குப் பக்கத்து வீடு) சந்திக்கும் பேறு கிடைத்தது. அவை பள்ளி நாட்கள். பள்ளிக் கல்வி முடியும் போது மாணவர்களான எங்கள் நால்வருக்கு அவர் எழுதிய பழைய புத்தகங்கள் பரிசாகக் கொடுத்தார். எனக்குக் கிடைத்தது அவர் எழுதிய ராமாயணம் ஆங்கில நூல். அப்போது உடனடியாக படிக்கவில்லை.. ஆனால் பாதுகாத்து வந்தேன்.விஜயவாடா சென்ற பிறகுதான் ஒருநாள் சாவகாசமாகப் படிக்க ஆரம்பித்தேன். அதை முடிக்கும்போது ராஜாஜியின் வரிகள் ‘ஐய்யோ ராமகாதையின் கடைசிக் கட்டத்துக்கு வந்துவிட்டேனே’ என்று மனமுருக அவர் எழுதி ராமபட்டாபிஷேகத்தினை முடித்திருப்பார். கடைசியில் முத்திரை வரிகளாக எத்தனைதான் ஸ்ரீராமன் மகாபுருஷனாக செயல்பட்டு அத்தனை அசுரர்களையும் அழித்து லோககல்யாணம் செய்திருந்தாலும் அவன் சீதை அக்கினி பிரவேசத்தின் போது நடந்துகொண்டது எனக்குப் பிடிக்கவில்லைதான்’ என்று எழுதியிருப்பார்.

புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் எனக்கு அவர் கருத்தில் ஈடுபாடுகொண்டு, இராமன் செய்தது சரிதானா என்று  மனம் ஒருபக்கத்தில் வலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் காலம் செல்லச் செல்ல வால்மீகி ராமாயணத்தைப் பலபேர் சொல்ல பலதடவை கேள்விஞானம் பல விஷயங்களில் பெற முடிந்தது. கம்பராமாயணப் புத்தகங்கள் வாங்கினோம். நண்பர்களுடன், பெரியவர்களுடன் விவாதித்தோம்.. கம்பர் வால்மீகியை விட தீவிர ராமபக்தர். அவர் கருத்தும் மனதுக்குள் விவாதிக்கப்பட்டதுதான். அக்கினிப்பிரவேசம் சரிதானா, அது ஏன் நடத்தப்படவேண்டும்..

ராமகாதையில் ஒவ்வொரு நாளும்நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் வால்மீகி எழுதவில்லைதான். இப்படி எழுதாத வால்மீகி வெகு எளிதாக சீதையின் அக்கினிப் பிரவேசத்தையும் ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ளாமல் யுத்தம் முடிந்தவுடன் சுக்ரீவனுக்கு பட்டம் கட்டினோமா, அயோத்தி திரும்பினோமா என்று அவர் நிகழ்வைக் கொண்டு சென்றிருக்கலாம். இதனால் சீதையின் இந்தக் கட்டமே தெரியாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு.. 

நன்றாக இந்த இடத்தில் சில விஷயங்களைக் கவனிக்கவும்..

#அதாவது சீதையின் கற்பு விஷயத்தில் அந்த யுத்த களத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்று சீதையை விடுவித்து அழைத்துச் செல்லும் கதாநாயகனை அவ்விடத்தில் கேள்வி கேட்போர் யாரும் இல்லை. ஸ்ரீராமனையே அதுவும் அந்த அசகாய சூரனை ராவணனை அவன் பத்துத் தலைகளையும் அறுத்த இடத்தில், இப்படி ஒரு கேள்வி கேட்பதா.. அது முடியுமா? 

#சீதையின் ஸ்ரீராமபக்தி அதாவது பதிபக்தி கேள்விக்கு அப்பாற்பட்டதாக கதையின் மொத்தக் கட்டத்திலும் சொல்லப்பட்டது. குறிப்பாக  சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையைத் தான் மீட்டுச் செல்வதாக வரும் கட்டத்திலும், இராவணன் அசோகவனத்தில் கண்டு தன்னை ஏற்றுக் கொள்ளும்படிக் கெஞ்சும் கட்டத்திலும் சீதையின் பதிபக்தி மிக அதிகமாகத் தெரியவரும். தன்னை மீட்டுச் செல்வதாகச் சொன்ன அனுமனை மென்மையாகக் கண்டிப்பாள்., அசுரனையோ துச்சமென மதித்து ஏசுவாள். இராமனின் கையில் ஏற்படப்போகும் ராவணனின் முடிவை அவனுக்கு முன்பே தெரிவித்தவள் சீதை. இதையெல்லாம் அந்த இடத்தில் நேரடியாகக் கவனித்த அனுமன் பின்னாட்களில் - அதாவது யுத்தத்துக்கு செல்லுமுன்னர் - இராமனிடம் தெரிவித்தும் இருப்பான் அல்லவா.. சீதையின் பரமபக்தனாக மாறியவனாயிற்றே..

சுந்தர காண்டத்தில் அனுமனுக்கு சீதையே சொல்லும் காகாசுரனின் கதையை இங்கே நினைவுபடுத்துகிறேன்.
வனவாசத்தின் போது வனத்தில் ராமன் சீதையின் மடியில் தலைசாய்த்து நிம்மதியாக உறங்கும் நேரத்தில் காக்கை ஒன்று சீதையின் மார்பகத்தைக் கொத்துகிறது. ஆனால் சீதைக்கு எங்கே தன் கணவன் உறக்கம் தெளிந்து எழுந்துவிடுவானோ என்ற கவலையினால் அந்த வலியைப் பொறுத்துக் கொள்கிறாள். ஆனாலும் காக்கைக் கொத்தக் கொத்த மார்பகத்தின் ரத்தம் ஸ்ரீராமன் மீது பட அவன் எழுந்துகொள்கிறான். கோபம் கொண்டு காக்கையை ஓட ஓட விரட்டுகிறான். கடைசியில் காக்கை சீதையின் காலடியில் வந்து வீழ்கிறது. இரக்கம் காட்டுகிறாள் சீதை. இங்கே ஸ்ரீராமனின் கோபத்தைக் காணவேண்டும்.ரௌத்ரமூர்த்தியாக மாறுகிறான். சீதைமேல் அவன் கொண்ட காதல் இப்படியெல்லாம் அவனை மாற்றுகிறது. அப்படிப்பட்ட ஸ்ரீராமன் வந்து தன்னை மீட்டு அழைத்துச் செல்லும் வரை காத்திருப்பதுதான் ஒரு பத்தினிக்கு அழகு என்கிறாள் சீதை.

ஆகையினால் இந்த ராமாயணக் காதையில் சீதையின் கற்புக்காக அக்கினிப் பிரவேசம் என்ற ஒன்று தேவையே இல்லை.சரி அப்படியே நடந்திருந்தாலும் வெற்றிவீரன் ராமனின் புகழுக்குக் களங்கம் ஏற்படும் விதத்தில் இதை ஏன் வால்மீகி எழுத வேண்டும்.. தேவை இல்லையே.. . 

ராமன் மானிடனாக அவதாரம் செய்தான். மானிடனாக கல்வி,  வீரம் கற்றான். முனிவர்களை அவர்கள் துயரிடமிருந்து காப்பாற்றினான். யாரும் முறிக்கமுடியாத வில்லை முறித்து சீதையைக் கைக்கொண்டான். பின்னர் மாற்றாந்தாய்க்காகக் காட்டுக்குச் சென்றான். காட்டு வாழ்க்கையை அனுபவித்த சமயத்தில் சீதையைப் பறிகொடுத்து கோபம்கொண்டு வானரர் படை துணைக்கொண்டு அசுரனை அழித்து சீதையை மீட்டு அயோத்தி சென்று பட்டாபிஷேகம் சூட்டிக் கொண்டான்.

ராஜம் அம்மா!.. இந்த நான்கரை வரியில் இராமாயணம் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் விவரித்தால் ராமனின் வீர தீர பராக்கிரமங்களையும் விரிவாகப் பேசினால் ‘சீவகசிந்தாமணி’ அளவில் சீவகனின் வீரதீரசாகசத்தைப் போல ஒரு சிறு காவியமாகப் படைக்கலாம். அவ்வளவுதான். ஆனால் காலாகாலத்துக்கும் பேசப்படும் ராமாயணத்தை அப்படி எழுதவில்லை. அதற்கு ஆதிபெயர் சீதாயணம். சீதை எனும் துயர்மிகுந்த  பெண்ணின் கதை இது. அவள் துயரம் மிகத் தெளிவாகப் பரவ வேண்டும். அவள் செய்த தியாகம், ஸ்ரீராமன் மேல் கொண்ட பற்று, பாசம், காதல் அதற்கும் மேலே ஸ்ரீராமனே தன்னை விடுதலை செய்து மீட்டு அழைத்துச் செல்வான் என்ற நம்பிக்கை. சுந்தரகாண்டம் முழுவதும் அவள் புகழ்தான், அவள் மேன்மைதான் பேசப்படுகிறது. சீதையை ஆசைகாட்ட,ராவணன் அவள் தந்தை போல மாறி அசோகவனத்தில் வருகிறான். ராவணனை மணந்துகொள் என்று அறிவுறுத்திய ஜனகனை தந்தையென்றும் பாராமல் ஏசுகிறாள். எப்படிப்பட்ட பதிபக்தி இது என்று ராவணனே மயங்குவதாகக் கூட வால்மீகி எழுதுவார்.அப்படிப்பட்டவள் தன் தூய்மையை நிரூபிக்க அக்னியில் குளிக்கவேண்டுமாம்.

அப்படியானால் ராஜாஜியும் ராஜம் அம்மாவும் சொன்ன கருத்து நியாயமாக இருக்கிறதே என்று கேட்கத்தான் தோன்றும். ஆனால் தீர ஆராய்ந்து பார்க்கும்போது இவர்களும் இருவரும் எத்தனைதான் தெளிவாக, ஞானிகளாக இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட கருத்தை ஓர் சார்பு முறையாகத்தான் பார்த்திருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படியானால் எதிர்த்துப் பதில் சொல்லும் நான் இவர்கள் இருவரை விட நான் ஞானம் மிகுந்தவனா என்றால் நிச்சயம் இல்லை.. 

உங்கள் கேள்விக்கு வருகிறேன். 
//ஆகா, ஆகா, அக்னிக்கும் ராமனுக்கும் சீதைக்கும் இடையே ஒரு mutual agreement இருந்திருந்தால் ... கல்ச்சரோ காவியப்படைப்பாளனோ ஏன் ராமனைத் தீக்குள் அனுப்பவில்லை? குளூகுளூ என்ற தீயில் அவன் புகுந்து புறப்பட்டிருந்தால் ... ? தீக்குள் அனுப்பப் பெண் என்பவள்தான் கிடைத்தாளோ? வாய்பேசமுடியாத விலங்குகளையும் வாய்பேசும் உரிமையில்லாத பெண்களையும் தீக்குள் அனுப்பிய சமூகத்தின்மேல் எனக்கு மதிப்பில்லை. சீச்சீ என்றுதான் உதறுகிறேன்//

கணவன் மனைவியாக ஸ்ரீராமனும் சீதையும் இந்த மண்ணுக்காக நிகழ்த்திக்காட்டிய ஒரு நிகழ்ச்சிதான் அம்மா.. ஸ்ரீராமன் அவளைத் தீக்குளிக்கச் சொல்லவில்லை. ஆனால் அவ்ள் தீக்குளிக்கையில் ஏதும் பதில் பேசவில்லை. ஏனெனில் அவனுக்கும் தெரியும் சீதைக்கும் தெரியும் அக்கினிக் குளியலும் அருவிக் குளியலும் அவர்களுக்கு ஒன்றே. இதை அனுமனும் அறிந்ததால்தான் அங்கே மௌனம் சாதிக்கிறான். இது கணவன் மனைவி பிறருக்காகவோ அவர்களுக்காகவோ விளையாடியது போலத்தான். 

ராஜம் அம்மா, நான் உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்.. அதற்கு தயை கூர்ந்து பதில் தரவேணும்.

1.சீதை தானும் காட்டுக்கு வருவதாக ராமனிடம் விண்ணப்பிக்கும்போது ராமன் வேண்டாமென்று மறுக்கிறான். ஒரு பெண் தன்னோடு துயரத்தை அந்த அடவியில் பங்கு கொள்ளவேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட சீதை ராமனைக் கடிந்து கொள்கிறாள்.  இராமனை ‘பேடி’ என இகழ்கிறாள்.
கேள்வி - சீதை இப்படி வாய்க்கு வந்தபடி சொல்லலாமா? நல்ல எண்ணத்தில் சொல்லப்பட்ட அந்த மறுப்புக்கு இதுதான் பதிலா?

2.. பொன்மானைக் கண்டதும் தனக்காகப் பிடித்துத் தரும்படி கேட்கிறாள் சீதை. கேட்பதில் தவறில்லை.. ஆனால் இளவலைக் காவல் வைத்து செல்கிறான் ராமன். ஆனால் ‘லட்சுமணா’ என்ற கூவல் கேட்டுப் பதறும் சீதை லட்சுமணனை அனுப்ப, அவன் அண்ணன் கட்டளையிட்டதற்காக அங்கேயே இருப்பேன் என்று மன்றாடுகிறான். ஆனால் சீதை கேட்கவில்லை.. அவனை நா கூச திட்டுகிறாள்.. அவன் நடத்தையையே சந்தேகிக்கிறாள்.
கேள்வி - இப்படியெல்லாம் எல்லாமறிந்த சீதை இளவலைத் திட்டலாமா? கணவன் சொல்படிதானே காவலுக்கு அங்கேயே நிற்கிறான்?.

3. இளவல் வேறு வழியில்லாமல்  கோடு கிழித்து காப்பு வைத்துவிட்டு செல்லும்போது ராவணசந்நியாஸி பிட்சை கேட்கும்போது தன் நிலையும் தர்ம நெறி பலவும் தெரிந்த சீதை, எத்தனைதான் சந்நியாஸி கோட்டைத் தாண்டி வரச் சொன்னாலும், கோட்டைத் தாண்டிச் செல்லலாமா? 

அறியாமல் செய்தால் அது தவறு. அறிந்து செய்தால் அது தப்பு. சீதை ஏன் இந்தத் தப்பை அறிந்தே செய்யவேண்டும்?

ஆனால் மேற்கண்ட மூன்றும் இல்லாமல் இருந்தால் இராமாயணம் என்பதே வந்திருக்காது என்கிற தெரிந்த பதிலைச் சொல்லவேண்டாம். எனக்குத் தெரியவேண்டியது, நீங்கள் சொன்னீர்களே ‘வாய் பேச முடியாத பெண்’ என்று. அந்தப் பெண் சீதை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்.

4. சுந்தரகாண்டத்தில் அனுமன் வாலுக்குத் தீயிட்ட சங்கதியையும், லங்கா நகரம் தீயில் அழிவதையும் லங்கிணிகள் பயந்துகொண்டே சீதையிடம் சொல்லும்போது, சீதை சொல்கிறாளே ‘ராமன் என்கிற கணவனின் பத்தினியாகிய நான் சொல்கிறேன். அக்னி தேவா, அனுமனுக்கு உன்னால் அந்தத் தீங்கும் நேரக் கூடாது,”
கேள்வி - அக்னி தேவன் அப்படியே செய்கிறான்.. அதெல்லாம் இருக்கட்டும் அக்னி தேவன் ஏன் அப்படி செய்யவேண்டும்? 

ராஜம் அம்மா, பதில் தாருங்கள். இந்தப் பதிலில் உங்கள் கேள்விக்கான பதிலும் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. 

அடுத்த கேள்வி: 
//வயிற்றில் உண்டான கருவுக்காக மூச்சைப்பிடித்துக்கொண்டு ஓர் அனாதை ஆசிரமத்தில் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தபின் சீதை உயிரை மாய்த்துக்கொண்டதைப் போற்றும் சமுதாயம் இது. 4. நான் எழுதினால் ... அரசாளும் ஆணவம் பிடித்த அப்பனுடன் பெற்ற பிள்ளைகளை அனுப்பிவிட்டு ... அனாதை ஆசிரமத்தில் அமைதியாகப் பொழுதுபோக்கும் சீதையை உருவாக்குவேன்.//
ஸ்ரீராமனுடன் சீதா தேவி மிகுந்த சந்தோஷமான நாட்களை வனத்திலும், அதன் பின் ஏற்பட்ட ராவணவதத்துக்குக்கப்பாலும் அயோத்தியில் சில காலமும் கழித்தவள். சீதையின் சரித்திரத்தின் ஆரம்பமே சூசகமாகத்தான் நமக்குத் தெரிவிக்கிறது ராமாயணம். அவள் ஸ்ரீராமனைப் போல பிறந்தவளா.. இல்லை பிறப்பே இல்லாமல் பூமியில் கிடைத்தவளா.. அவள் யார்? ஸ்ரீலக்ஷ்மியின் அவதாரமா, பூதேவியின் மறு உருவா? அல்லது சாட்சாத் சிவபெருமானே பெண்ணின் தன்மை இத்தகையது என்றறிய (இப்படி ஒரு கதையும் உண்டு) சீதாவாக அவதாரம் எடுத்தானா.. சீதையின் தாய் தந்தையர் யார் என்கிற கேள்விகளுக்கு வால்மீகி ராமாயணத்தில் நான் கேட்ட வரை மிகச் சரியான தகவல்கள் இல்லை.
 
அவள் வரவைப் பற்றி கம்பன் வர்ணனை திருமகளாக இருந்து மணமகளாக வரும்போது ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்பதாக இருக்கிறது. அது பாற்கடலில் பள்ளிகொண்டவனைப் பிரிந்தவள் அதன் பிறகு மணமகளாக ஆனபின்னர் பார்க்கிறாள். இது வால்மீகியில் இல்லை. பின் சீதை என்பது யார்? இது மிகப் பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்கு ராமாயணத்தில் பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் மேலே கேட்கப்பட்ட கேள்வி சீதைக்குப் பொருந்தும் என்பது என் தாழ்மையான கருத்து. ஒருவேளை அவள் திருமகள் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால் தெய்வத்துக்கு ஏதும் சிரமம் என்பதே கிடையாது. தெய்வம் தனக்கென நிர்ணயம் செய்து கொண்டதை கேள்வி கேட்பதற்கு நாம் யார்? பார்வதிதேவி காத்யாயினியாக, காமாட்சியாக அவதரித்து பூமியில் சிரமங்களுடன் தவம் செய்தாள். நாம் ஏனென்று கேட்கிறோமா? இல்லையே.. அதுபோலத்தான் சீதைக்கு நேர்ந்த சிரமங்களும். சீதை மாநிடப் பெண் என்று சொன்னால் அதற்கு ராமாயணத்தில் ஆதாரம் ஏது? 

உத்தரகாண்டத்தில் சீதை காட்டில் சிரமப்பட்டதாக எதுவும் எழுதவில்லை.. ஆனால் இராமன் மிகுந்த அவஸ்தைக்குள்ளானான். ராஜ்ஜியம் ஆளுவது என்பது அந்தக் காலத்தில் சத்திரய தர்மத்துடன் கூடிய ஆளுமையைக் காண்பிக்கவேண்டும். இந்தக்காலக்கண் கொண்டு ராஜ்ஜியம் ஆளுவதை நோக்கமுடியாது. அப்படியே நோக்கினாலும் இரண்டு மாதிரிகள் கீழே தருகிறேன்.
1. தர்மம் - மன்னர்கள்/ஆள்பவர்கள் ஸ்வதர்மம் காத்து ஆளவேண்டும் - ஜீலியஸ் சீஸர் சந்தேகத்திற்கப்பாற்பட்டவாறு இருக்க வேண்டும். சமீபகால உதாரணம் பில் கிளிண்டன் - மோனிகா விவகாரம். இந்த விஷயத்தில் பில் பீஸ் பீஸாக்கப்பட்டார். (நமது நாட்டிலும் இத்தகைய விவகாரங்கள் ஏராளமாக இருந்தாலும் அவை தர்மம் தவறியதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்) நம் நாட்டில் கூட குற்றம் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் ஆட்சி கிடையாது. உதாரணங்கள் உண்டு..

2. தலை சரியாக இருந்தால் நாடு உருப்படும், மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி - எல்லா விஷயங்களிலும்.
சீதையைப் பிரிந்தது அந்த ஸ்வதர்மத்தில் சேர்த்திதான்.. உத்தரகாண்டம் பிரகாரம்,  இராமன் அவைக்கு முனிவர்கள் வருகிறார்கள். நாடு ஆளுமை பற்றி ராமச்சந்திர சக்கரவர்த்தி அவர்களைக் கேட்கிறார். முனிவர்கள் அனைவரும் நாட்டின் சுபிட்சத்தை, அரசனின் நல்லாட்சியைப் போற்றிவருகிறார்கள், என்கிறார்கள். இராமன் அவர்களை அப்படியே விடுவதாக இல்லை. வேறு எதிர்வார்த்தைகள் யாரும்பேசவில்லையா என்று கேட்கிறார். உண்மையே பேசும் முனிவர்கள் ‘துணிவெளுப்பவன் ஒருவனின் வம்புப்பேச்சையும் சீதா பிராட்டியை சற்று இழிவாகப் பேசியதைக் குறிப்பாக சொல்கிறார்கள். பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று சொல்லியும் சத்திரிய தர்மத்தின் படி அவன் சீதையைக் காட்டில் கொண்டுவிடுமாறு (முதல்நாள்தான் சீதை இராமனிடம் தாம் இருவரும் ஓடியாடி மகிழ்ந்திருந்த காட்டுக்கு ஒருமுறை செல்லவேண்டும் என்ற ஆசையைத் தெரிவிக்கிறாள்) சக்கரவர்த்தி ராமச்சந்திர மூர்த்தியாக ஆணை போடுகிறான். அவள் போனதும் சீதாராமனாக அவள் நினைவாகவே தன் வாழ்க்கையைக் கழிக்கிறான். 

அஸ்வமேதயாகம் செய்யும் போது கூட தன் மனைவி உருவத்தை பக்கத்தில் வைத்துச் செய்வதாக எழுதுகிறார்கள். சீதையின் வாழ்க்கை மகன்களோடு கழிகின்றது. ஸ்ரீராமனின் வாழ்க்கை தாமரை இலை நீர் போல கடமை மட்டுமே செய்யும் தர்மசீலனாகத் தொடர்கிறது. ஏன் பிற்பாடாவது மனைவியை அழைத்திருக்கலாமே எனக் கேட்கத் தோன்றும். இது அவர்களாகவே தங்களுக்கென விதித்துக் கொண்ட ஒரு செயல். அதனை அதன் கண் விடல் என்பதே பொருத்தம். இது ஒரு தவ வாழ்வு இருவருக்குமே.. இல்லையென்றால் சீதை தன் குமாரர்களிடம் ராமகாதையை ஊரெங்கும் பரப்பிட வற்புறுத்தியிருப்பாளா. சீதை தாய் மட்டுமல்ல. தவசீலி. 

உத்தரகாண்டத்தை நம்மாழ்வார் படித்திருக்கிறார் ராஜம் அம்மா.. தான் திரும்பி வைகுண்டம் செல்லும்போது புல் பூண்டு போன்ற ஈன ஜன்மங்களுக்கும் உய்வளித்தான் ஸ்ரீராமன் என்பார். படித்தால் ராமனின் கதையை மட்டுமே படியுங்கள் என்று வேறு அறிவுறுத்துகிறார். (கற்பார் ராமபிரானையன்றி மற்றும் கற்பரோ)

ஸ்ரீராமநவமியன்று இந்தப் பதிவை இடவேண்டுமென்பது அவன் கட்டளை போலும்.

ஸ்ரீராம ஜெயராம சீதாராம்

அன்புடன்
திவாகர்.

Sunday, February 21, 2016


காந்தியும் மஹாத்மாவும்


 புல்தரையில்தான் அமர்ந்திருந்தார். பார்வையில் கூர்மை அவர் போட்டிருந்த கண்ணாடி வழியே தெரிந்தாலும், அவரை உற்றுப் பார்க்கத் தோன்றவில்லை. கொஞ்சமாக சிரித்தார். அந்த சிரிப்பிலே ஒரு தோழமைத் தனம் தெரிந்தது.

அவர் பெயர் பாபு படேல். அகமாதாபாதில் எனக்குத் தெரிந்தவர் ஒருவரால் சபர்மதி காந்தி ஆசிரமம் செல்லவேண்டுமென்பதற்காக உடனடி உதவிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு எனக்கு கைபேசி மூலம் அறிமுகப்படுத்தப் பட்டவர். அங்கு சென்ற பின்னர்தான் தெரிந்தது. இந்தப் பெரியவர், நண்பரின் சொந்தத் தந்தை, என்பது.. முதலில் அவருடன் சேர்ந்து உட்காரப் போனேன்.
“வேண்டாம்.. இங்கே உட்கார்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்.. போய் அங்கே உள்ளே அமர்ந்து பாருங்கள்..” என்றவர் தன் கையை நீட்டி அந்த அறைகளைக் காண்பித்தார். .பார்க்க அப்படி ஒன்றும் தொண்டுக் கிழவர் போல இல்லைதான். கண்ணாடியும் சற்று குண்டான தோற்றமும் திடகாத்திர உடலும் ஏன் கையில் வைத்துள்ள கைத்தடியும் கூட அவர் வயதைக் கணிக்க உதவவில்லை. இருந்தாலும் அவர் சொல்லுக்கு உடனடியாக மதிப்புக் கொடுக்கவேண்டும் போல தோன்றியதால், அவர் கை காட்டிய இடத்துக்கு செல்வதாக தலையசைத்துச் சென்றேன்.

சபர்மதி நதிக் கரையில், நதியைப் பார்க்கும் திசையில் கட்டப்பட்டிருந்த அந்த சிறிய கட்டடம் எளிமைக்கு மறு சின்னமாக மட்டுமல்லாமல் புனிதத்தின் மறு உருவமாகவும் காணப்பட்டதால் மனதில் மரியாதை ஓங்க உள்ளே நுழைந்தேன்.
படுசுத்தமாக வைக்கப்பட்டிருந்த அறைக்கு ’ஹ்ருதய குஞ்ஜ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இதயமாகத் திகழ்ந்த மகாத்மா காந்தியும் அந்தத் தந்தையின் அன்பான மனைவியான கஸ்தூரிபாய் காந்தியும் ஏறத்தாழ 12 ஆண்டுகள் குடியிருந்த இல்லம். எளிமை என்றால் என்ன என்பதற்கு கண்கூடு சாட்சியாக அந்த அறைகள் இருந்ததைக் கண்டதும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் கர்ப்பக்கிருகமாக அந்த அறை இருந்ததும், நேரு, இராஜாஜி, படேல் போன்ற தலைவர்களின் வருகையால் பெருமை பெற்றதும், கடைசியாக அந்த அறையிலிருந்துதான் புகழ்பெற்ற தண்டியாத்திரைக்கு மகாத்மா பயணப்பட்டார் என்பதெல்லாம் புரிந்ததால் புனிதம் அதிகமாக புலப்பட்டதுதான்.

பத்தடிக்குப் பத்தடியில் இரண்டே அறைகள், அதே அளவில்  ஒரு முற்றம், அந்த முற்றத்தைச் சுற்றி உள்ள சிறிய ஆனால் நீள் வராண்டா பகுதியில்தான் பார்க்க வந்த தலைவர்கள் தரையில் அமர்ந்திருப்பார்களோ என்னவோ, ரகுகுலத்தில் உதித்த அயோத்தி அரசனான இராமபிரானை இந்த முற்றத்தில் குளித்தபடியே மகாத்மா பாடியிருப்பாரோ என்னவோ.. என் மனதுக்குள் பரவசமும் கூடவே அந்த ’ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலும் கலந்து வலம் வந்தன. வலது பக்கப் பகுதி முழுவதும் சமையல் அறையாக கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. எத்தனையோ தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் சோறுடைக்கும் அறையாக இருந்த இடமாயிற்றே. நினைத்தாலே மனம் பரவசத்தால் நிரம்பி வழிந்தது.

மறுபடியும் வெளியே வந்து அந்தப் பெரியவரைச் சந்தித்தேன். இப்போது சந்தித்தபோது என் மனதுள் அவரைப் பற்றிய பெருமை மேலும் உயர்ந்திருந்தது. பணிவோடு நின்று கொண்டேன்.. அவரே நல்ல ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.

”உள்ளே சென்றதும் உனக்குள் என்ன நினைப்பு வந்தது”.?

“மகாத்மா வாழ்ந்த அந்தக் காலத்தில் அவர்கள் எப்படியெல்லாம் இங்கு இருந்திருப்பார்கள் என்ற கற்பனைதான் செய்து பார்த்தேன்”

படேல் சற்றே சிரித்தார். “ஏஸி, கட்டில், மெத்தை எல்லாம் இந்தக் காலத்தின் சொகுசு.. ஆனால் இந்த ஆற்றின் கரையோரம் என்பதால் எப்போதும் காற்று வீசும். இப்போது இங்கே சற்று தூய்மையாக அந்த நதி பார்ப்பதற்கு இருக்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் எல்லாம் அந்த நதிதான் இங்கே எல்லோருக்கும் எல்லாமும். அசுத்தமும் செய்வார்கள், சுத்தமாக இருப்பதற்கும் அந்த நீரை பயன்படுத்துவார்கள்.. ஆனால் மகாத்மா விடமாட்டார்.. அசுத்தம் செய்பவர்களை தன்னுடைய பாணியில் திருத்துவார்.  உப்பு சத்தியாக்கிரகத்து சமயம் ஏராளமாக தொண்டர்கள் அகமதாபாதில் வந்து குவிந்து விட்டார்களாம்.. அவர்கள் அனைவரும் காலைக் கடன்களை இந்த நதிக்கரையிலேயே முடித்துவிட்டு அவைகளை அகற்றாமல் அப்படியே விட்டு விட்டார்களாம். மகாத்மாவுக்கு வந்ததே கோபம்.. அவர் யாரையும் எதுவும் குறை சொல்லாமல் தானே கரைக்குப் போய் அந்த மலங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். உடனே மற்றவர்கள் ஓடி வந்துவிட்டார்கள். அவர்களும் பாடம் கற்று அந்த அசுத்தங்களை அகற்றினராம். என் தந்தையை மிகவும் கவர்ந்த இந்தழ்ச் செயலைச் சொல்லிச் சொல்லி நானும் முடிந்தவரை என் பிள்ளைகளுக்கும் சொல்லி வருகிறேன். மகாத்மாவின் மௌனமான இந்தப் பதில் நடவடிக்கையால் தொண்டர்கள் பயப்பட்டு ஒழுங்காக இருப்பார்கள்”.

“ஜி,, நீங்கள் மகாத்மாவைப் பார்த்திருக்கிறீர்களா?”

”ஏன்.. நான் சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லையா?”
“ஐய்யோ.. அப்படியெல்லாம் இல்லை.. நான் சாதாரணமாகத்தான் கேட்டேன். நீங்கள் தொடருங்கள்..”

அவர் எழுந்தார்.. நதிக்கரையோரம் சென்றார்.. “இந்த நதி ரொம்ப அகலமானது. வெள்ளம் வரும்போது மகாத்மாவின் குடில் அருகே தண்ணீர் வந்து போகும். ஆனால் இப்போதுதான் நன்றாக உள்ளே தள்ளிக் கட்டிவிட்டார்கள்.. இந்த சிமண்ட் படிக்கட்டெல்லாம் ஒருகாலத்தில் தண்ணீர் ஓடும் பிரதேசம்தான்.. பிறகுதான் ஆற்றங்கரை.. ஆனால் இதெல்லாம் இப்போது இல்லை.. இரவு வந்து பார்.. வெளிச்சத்தில் நிறைய பேர் நடைபயிற்சி செய்வார்கள்.”
சபர்மதி நதியின் இரண்டு கரைகளையும் அடக்கிக் கட்டியிருந்தார்கள். சிமெண்ட் நடை பாதை ஏதோ அகலமான சாலை போல அழகாக இருந்ததுதான். அதன் நடுநடுவே விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. நீளமாகத்தான் போய்க்கொண்டிருந்தது அந்த சிமெண்ட் பாதை  துப்புரவுப் பணிகள் வெகு சீராக நடப்பதால் தூய்மையாகக் காணப்பட்டன. ஆனாலும் அந்தப் பட்டப்பகலில் சூரிய வெளிச்சம் அதிகமுள்ள அந்த நேரத்தில் மகாத்மாவின் குடில் அமைந்த பிரதேசம் தவிர அந்த நதிக்கரையோரம் மரங்களே தென்படவில்லை. இயற்கையான ஆற்றங்கரையும், பச்சைப் பசேலென்ற மரங்களும், புல்வெளியும் இல்லாத சபர்மதி ஆற்றின் அழகை ரசிக்க முடியவில்லை. அவரிடம் நேரடியாகவே சொல்லிவிட்டேன்.

“எங்கள் ஊர் நதிகளில் தண்ணீர் ஓடாதே தவிர புல்வெளி ஆற்றங்கரைகளும், மரங்களும் பார்ப்பதற்கு ஒரு அழகைத் தரும். சபர்மதி ஆற்றையும் அதன் கரையோரங்களும் சுத்தமாகத்தான் இருக்கின்றன.. ஆனால் இயற்கை அழகை இழந்து காணப்படுவது என்னவோ போல இருக்கிறது”..

நான் சொல்லக் கேட்ட பாபு படேல்ஜி சற்று நேரம் ஏதும் சொல்லாமல் ஆசிரமத்துக்குள் நுழைந்தார். பிறகு ஆசிரமத்தில் முக்கியமான பகுதியான காந்தி அருங்காட்சியகத்துள் நுழைந்தார். பல சரித்திரக் குறிப்புகள் புகைப்படத்துடன் கூடியவை நன்றாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சிலவற்றை படேல்ஜி விவரித்தார். உப்பு சத்தியாகிரகத்தின் புகைப்படங்கள் அந்தக் கால கட்டத்துக்கே நம்மை அழைத்துச் சென்றன. திரு பாபு படேலிடமிருந்து நிறைய விளக்கங்கள்  கிடைத்தன. சில ஏற்கனவே படித்தவை, சில தெரியாதவை.. ஆனால் அவர் சொல்லும்போது எல்லாமே நேரில் பார்ப்பது போல இருந்தது.
“மகாத்மா மிகப் பெரிய பிடிவாதக்காரர் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அவர் பிடிவாதமெல்லாமே நன்மையில்தான் முடிந்தது. (தண்டி’யில் உப்புக் கிளறும் ஒரு புகைப்படத்தைக் காண்பித்து – இந்தப் படத்தில் ஒரு தமிழ்ப் பிராம்மணர் கூட குடுமியுடன் இருந்தார்) இதோ இங்கே பார்.. இந்த உப்பை எடுப்பதில் எத்தனை பேர் ஒன்றாய் இருக்கிறார்கள் பார், இந்து முஸ்லீம், கிருத்துவர் என்கிற பேதம் கிடையாது. அப்போதெல்லாம் ஜாதி வித்தியாசம் மிகவும் அதிகம். ஹரிஜன்கள் மிகக் கேவலமாக நடத்தப் பட்டார்கள். ஆனால் மகாத்மாவின் இருப்பிடத்தில் ஹரிஜன் மிகக் கௌரவமாக நடத்தப்படுவர். இந்தப் புகைப்படத்தை பார்த்தால் அனைத்து ஜாதியினரும் எப்படி சிரித்துக் கொண்டே பணி செய்தனர் என்பது புரியும். ஹரிஜன் மரியாதை மூலம் மிகப் பெரிய புரட்சியை இந்த நாட்டில் அப்போதே செய்து காட்டினார் மகாத்மா..”

“ஆனால் இப்போது ஜாதி அரசியல்தானே நாட்டை ஆள்கிறது?” என்னுடைய கேள்வி அவருக்கு சிரிப்பைக் கொடுத்தது.

“அரசியல் கிடக்கட்டும், இன்று ஹரிஜனர்கள் எத்தனை மேலிடத்தில் இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமே.. மகாத்மா மட்டும் அன்று ஹரிஜன் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்து இந்தியத் தலைவர்களிடம் புரட்சி செய்திராவிட்டால் இன்றைக்கு நாடு சுதந்திரம் அடைந்திருக்கலாம்தான். ஆனால் அடிமை வாழ்வு என்பது வேறு விதமாக அப்படியே தொடர்ந்திருக்கும்”.

“உண்மைதான் ஜி!. ஆனால்..

”என்ன ஆனால்.. நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது காந்தி என்று சொல்வார்கள்.. ஆனால் நான் அப்படிச் சொல்லமாட்டேன்.. விடுதலை வாங்கித் தந்ததில் எல்லோருடைய பங்கும் சரிசமமாகத்தான் இருந்தது. இதில் மகாத்மாவின் பங்கு அதிகம் என்று கூட சொல்ல விரும்பவில்லை.. ஆனால் அவர் போராடியது இந்திய சமூகத்துக்காகத்தான். ஜாதி மத வேறுபாட்டைக் களைய விரும்பிய மிகப் பெரிய தலைவர் அவர். ஹரிஜன் என்ற பத்திரிகை ஒன்று துவங்கி அவர்களுக்காக மகாத்மா போராடத் துவங்கியது ஒரு மிகப் பெரிய தாக்கமாக இந்திய சமூகத்தின் மீது விழுந்தது..”

படேல்ஜி பேசிக் கொண்டே போனார். அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று தெரிந்துதான் இருந்தது.

”ஜி!.. நீங்கள் மகாத்மாவைப் பார்த்துப் பேசியிருக்கிறீர்களா? எப்படிப் பழக்கம்?”

”நான் சிறு வயதுப் பையன். என் தந்தை இங்கு ஒரு காலத்தில் கௌரவ உத்யோகம் பார்த்தவர்.. அவர் கூட இருப்பதால் அவர் நிறைய சொல்வார்.. நாங்கள் கேட்டுக் கொள்வோம். நான் மகாத்மாவிடம் பேசியதில்லை.. ஒருமுறை சிறுவயதில் தில்லி சென்றபோது இவனை ஏன் கூட்டி வந்தாய்? என்று என் தந்தையை கோபத்துடன் கேட்டார் மகாத்மா. நான் ஏதாவது பதில் பேசினேனா என்பது நினைவில் இல்லை. தந்தையுடன் ஒட்டிக் கொண்டு மகாத்மாவை ஆவலுடன் பார்த்தது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. அது கூட ஒரு சிலமுறைகள்தான். ஏனெனில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிறைய நாட்கள் மகாத்மா சிறையிலே கழித்தது ஒரு காரணம்.. இன்னொன்று அவருக்கும் கஸ்தூரிபாய்க்கும் உடல் நலம் குன்றியதும்தான். அவர்களை அடிக்கடி சபர்மதி வரவிடாமல் செய்துவிட்டது. உண்மையில் மகாத்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதால்தான் அவருக்கு அந்த போர்க்காலத்தில் விடுதலையே கிடைத்தது”..

“காந்தி வெகு வேகமாக வயதான காலத்தில் நடந்து போவதை படங்களில் பார்த்துள்ளேனே..”

“இல்லையில்லை.. அது ஒவ்வொருசமயம்தான்.. மற்றபடி அவருடைய பேத்திகள் துணையுடன் அவர்களைப் பிடித்தபடித்தான் செல்வார்.
1924 களில் ஒருமுறை மகாத்மா எரவாடா சிறையிலிருந்து உடல்நலம் குன்றியதற்காக விடுதலை செய்திருந்ததை ஒரு புகைப்பட விவரம் சுட்டிக் காட்டியது. அதையும் அவரிடம் காட்டினேன்..
“ஆமாம்.. நிறைய நடப்பார். நிறையப் படிப்பார். எல்லோருடையக் கடிதங்களையும் ஒன்று விடாமல்படித்துப் பதிலும் எழுதுவார். (ஒரு கடிதத்தில் கவர் பகுதியில் ‘மகாத்மா காந்தி, தி கிங் ஆஃப் இந்தியா,  – என விலாஸம் எழுதப்பட்டிருந்தது) அதிகம் சாப்பிட மாட்டார். தினமும் அலுவல்கள் அதிகம். நிறைய தலைவர்கள்.. நிறைய பேச்சு, மக்கள் கூட்டங்கள், ஒலிபெருக்கி அதிகம் இல்லாத காலத்தில் கத்திப் பேசவேண்டிய கட்டாயங்கள். தூக்கமின்மை.. இதையெல்லாம் நினைத்துப் பார். எந்த திடகாத்திரத்துக்கும் உடல் நொந்துபோகும்தான்.. மகாத்மாவுக்குத் தன்னைப் பற்றிய எந்தக் கவலையும் கிடையாது.. அதனால் ஓய்வு என்பதே தெரியாமல் பழகிவிட்டார். அவருக்கு ஓய்வு கொடுத்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள்தான். என்ன பார்க்கிறாய்.. அடிக்கடி சிறையில் போட்டால் அவருக்கு ஓய்வுதானே..ஆனால் அங்கும் தூங்கவில்லை. நிறைய எழுதினார். அவருடைய ஜீவன சரித்திரம் கூட சிறையில்தான் எழுதினார்.”

தலையாட்டினேன். எளிமையின் மறு உருவம், உண்மையின் பிரதிபலிப்பு என்றெல்லாம் புகழப்பட்ட மகாத்மாவுக்கு ஓய்வு என்பது ஏது?..

”சரி, ஒன்றை மட்டும் கேட்கிறேன்.. வெளிப்படையாக தெரிந்ததைச் சொல்லுங்கள். காந்தியை ஏன் கொன்றார்கள்? அதுவும் நம்மவர்களே..”

”மகாத்மாவை ஏன் கொன்றார்கள்.. மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள். மிகப் பெரிய கொடுமை அது. ஆனாலும் அப்படிக் கொல்லாவிட்டாலும் கூட அவர் சீக்கிரமாகவே போய்ச் சேர்ந்திருப்பார் என்றுதான் தொன்றியது.”
நான் அவரை ஆச்சரியமாகப் பார்த்தேன்..

”மகாத்மா இறந்தபோது என் தந்தை கதறி அழுதது இன்னமும் கண்ணில் நிற்கிறது.. அந்தநேரத்தில் எனக்கு அது மிகப் பெரிய கவலையைக் கொடுக்கவில்லை.. ஏனெனில் அதைவிட மிகப் பெரிய கொடுமை இந்தியாவில் அந்த கால கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது.. அதுதான் பாகிஸ்தான் பிரிவினையும், இந்து முஸ்லீம் அடிதடியும், ஏகப்பட்ட கொலைகளும்தான். எந்த நேரத்தில் என்ன நேருமோ என்ற பயம்தான் அப்போது இருந்தது. ஆனால் நிறைய வருஷமாக நினைத்துப் பார்த்ததில் மகாத்மா சுதந்திர இந்தியாவில் சீக்கிரமாகவே இறந்தது கூட நல்லதுக்குதான் எனப்பட்டது. பிரிட்டிஷ்காரர்கள் காந்தியைக் கண்டு பயப்பட்டார்கள்.. ஆனால் இந்தியர்கள் பயப்படவில்லை.. மரியாதை மட்டுமே காண்பித்து ஒதுங்கிக் கொண்டார்கள்.. இதுதான் உண்மை.. மகாத்மா தனது சத்தியாக்கிரஹ சக்தியை, எளிமையை, சத்தியத்தை ஊர் உலகம் பூராவும் காண்பித்து விட்டார். ஆனால்.சுதந்திர இந்தியாவில் அதே கொள்கை எடுபடாதோ என்ற சந்தேகம் எனக்கு இப்போதும் உண்டு. இந்த விதத்தில் சர்தார் படேல் நல்ல உத்தியைக் கையாண்டார். கத்திக்குக் கத்தி, சண்டைக்குச் சண்டை என்றுதானே அவர் இந்தியாவை ஒன்று சேர்த்தார்.. மகாத்மா இறந்த கால கட்டத்தில் நமக்குத் தேவையாக இருந்தது தேச ஒற்றுமை.. இது மகாத்மாவின் கடைசி கால கட்டத்தில் அவரால் முயன்றும் முடியாமல் போய்விட்டது.. இதுதான் உண்மை..”

எத்தனை சத்தியமான வார்த்தைகள். சுதந்திரம் வராத காலத்தில், அந்த சுதந்திரத்துக்காகப் பிடிவாதமாகப் போராடியதற்காக மரியாதை கொடுத்து மிகப் பெரிய உயரத்தில் துக்கி வைக்கப்பட்டிருந்த வயதான காந்திஜியை சுதந்திர இந்திய மக்கள் அதே உயரத்தில் வைத்திருப்பார்களா.. இல்லை சுற்றியுள்ள தலைவர்கள் காந்திஜி பேசும் அஹிம்சையயும் சத்தியத்தையும் இன்னமும் சகித்துக் கொண்டு அவர் சொல்படி கேட்டிருப்பார்களா.. ஆறே மாத சுதந்தர இந்தியாவையே அவரால் கண்ணீர் விட்டுக் கொண்டே பார்க்கமுடிந்ததே தவிர கம்பீரமாகப் பார்க்கவைக்கவில்லை என்பதுதானே உண்மை..

படேல்ஜிக்குத் தலை வணங்கினேன்..

“ஜி! நாம் பேசிக் கொண்டதை எழுத எனக்கு அனுமதி உண்டா..”
தாராளமாக எழுதேன்..என் பெயரை என் படத்தையெல்லாம் போடாதே.. என் மகனே திட்டினாலும் திட்டுவான் (ர்).. காந்தியம் பெயருக்குதான் இந்த நாட்டில் வாழ்கிறது.. உண்மையான காந்தியம் பேசி வாழ்ந்து காட்டுபவர்கள் மிக மிகக் குறைவு.. அதிகம் பேசினால் தற்போதைய கால கட்டத்தில் பைத்தியக் காரன் என்றாலும் சொல்வார்கள்”.
சிரித்தார் படேல்ஜி.

மகாத்மா காந்திக்கு மகாத்மா என்ற மரியாதை கொடுத்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த மகாத்மாவின் குடிசைக்குள் செல்லும் பேறு கிடைத்தது. ஆனால் அந்தப் பாக்கியத்தை விட மகாத்மாவின் அனுபவங்கள் பற்றிய படேல்ஜியின் கருத்துகள் எத்தனையோ ஆழமான உணர்வாக உள்ளத்தில் பதிந்துவிட்டதுதான். அவரின் பேச்சில் கடைசிவரை காந்தி எனும் வார்த்தை சொல்வதற்குக் கூட அவர் மறுத்து விட்டதும், மகாத்மா என்றே கூற என்னையும் கடைசியில் பிரியும்போது வற்புறுத்தியதும் நினைவில் கூடவே பதிந்துவிட்டது.


மகாத்மாவின் புகழ் இவரைப் போன்றவர்களால்தான் வளர்ந்து கொண்டே இருக்கிறது.. இன்னொருமுறை அகமதாபாத் சென்றால் மகாத்மாவைப் பற்றி இன்னும் நிறையக் கேட்கவேண்டும் இவரிடம்.. 

                                     *****************************

பின்குறிப்பு:
மேலே உள்ள புகைப்படங்கள் என் ஐ-பேட் மூலம் மகாத்மாவின் அருங்காட்சியகத்துப் புகைப்படங்களை அப்படியே உள்ளடக்கி எடுத்தது.

Sunday, September 14, 2014

அம்ருதா


அம்ருதா


வம்சதாரா, திருமலைத் திருடன் வரிசையில் என்னுடைய இன்னொரு புதினமாக ‘அம்ருதா’ எனும் புதிய புத்தகம் இணைகின்றது... சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிகப்பகத்தினரால் வெளியிடப்படுகின்றது.. பதினொன்றாம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட சரித்திர நாவல்தான் எனினும் என்னுடைய ஏனைய நாவல்களின் விவரணைப் பின்னணியிலிருந்து சற்று விலகி எழுதிய நாவலாகத்தான் என் மனதுக்குப் படுகின்றது.. ஆனால் இது இப்படித்தானா என்று வாசகர்கள்தானே சொல்லவேண்டும்!!

பாரதத்தின் சரித்திர நிகழ்வுகளில் பெண்களின் பங்கினைப் பற்றி தகவல்கள் ’அதிகம்’ இல்லைதான் . அதிலும் அரசகுமாரிகள் என வரும்போது அவர்கள் திருமணச் சந்தையில் பேரம் பேசப்படுவதைப் போலத்தான் அரச காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதை சரித்திர ஆசிரியர்கள் விவரித்துள்ளனர். இப்படிப்பட்ட ஆணாதிக்க சூழலில் ஒரு சரித்திரப் புதினத்தில் பெண்களின் முக்கியப்பங்குடன் கூடிய நிகழ்வுகளைப் பொருத்தி இந்தக் கதையைப் புனைந்துள்ளேன்.

ஏற்கனவே என்னுடைய நாவல்களில் முக்கியமான பாத்திரமாக சோழ மன்னன் குலோத்துங்கனைக் கொண்டு வந்துள்ளேன். இந்த குலோத்துங்கன் தாய்வழித் தோன்றல் மூலம் மிகப் பெரிய சோழதேசத்துக்கு மன்னராக அங்கீகரிக்கப்பட்டவர். தந்தைக்குப் பின் மகன், மகனுக்குப் பின் அவனுடைய மகன் எனும் ஆணாதிக்க வாரிசுப் போட்டியில் தாய்வழித் தோன்றலான குலோத்துங்கன் எப்படி மிகப் பெரிய பேரரசராக அங்கீகரிக்கப்பட்டார் என்பதை எழுத வேண்டும் என்பது என் பல்லாண்டு ஆசை. தமிழின் சிறந்த படைப்பிலக்கியமான கலிங்கத்துப் பரணியில் ஒரு சில செய்திகளும், வடமொழி சிருங்கார காவியமான ’விக்கிலமங்கசரிதா’ வும் சில சான்றுத் தகவல்களைத் தெரிவித்தாலும் இவைகள் வெகு சூசகமாகத்தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பது என்னவோ வாஸ்தவம்தான். தாய்வழித் தோன்றலில் மன்னனான குலோத்துங்கர் எப்படி ஆட்சிபீடம் ஏறினார் என்பதை சரித்திர ஆய்வாளர்கள் இன்னமும் தெளிவாகச் சொல்லவில்லைதான். ஆனால் இன்றைய தென் ஆந்திரப் பகுதிகளின் குலோத்துங்கனைப் பற்றிய பூர்வீக செய்திகள் கல்வெட்டாக, செப்பேடுகளாக நிரவி இருக்கிறது. நிறைய ஆய்வுகள், நிறைய செய்திகள், சில ஆந்திரப் பேராசிரியர்களுடன் கலந்துரையாடல்களுக்குப் பிறகுதான் இந்தப் புதினத்தை எழுத ஆரம்பித்தேன். காலவிரயம் அதிகம் ஆனாலும் நிறைவாக ஒரு காரியம் செய்வதால் ஏற்படும் திருப்தியே அலாதிதான். அந்த திருப்தி இப்புதினத்தை எழுதியதன் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது.

குலோத்துங்க அரசன் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு மேலும் சோழதேசத்தை மிகச் சிறப்பாக ஆண்டவன் என்பது சரித்திரம் படித்த அனைவருக்கும் தெரியும்தான். அந்த பதினொன்றாம் நூற்றாண்டில் பாரதத்தில் மிகப் பெரிய சாம்ராஜ்யமாக குலோத்துங்கனின் அரசு இருந்ததாக ஆங்கில பேராசிரியர்கள் வியந்து எழுதி இருக்கிறார்கள்.. இத்தனைக்கும் யுத்தங்கள் கூட ’அவ்வளவாக’ அடிக்கடி நடைபெறாத அமைதியான ஆட்சியாக இருந்ததாகவும் பாராட்டுகிறார்கள்.

’அம்ருதா’வைப் பற்றிய கருத்துரைகளையாகவும் அணிந்துரையாகவும் மனமுவந்து அளித்து புதினத்துக்குப் பெருமை சேர்த்த மலேயா தமிழ் எழுத்தாளர் திருமதி மீனா முத்து, மரபு ஆய்வாளர் திருமதி சுபாஷினி டிரெம்மல், மூத்த பெண் எழுத்தாளரான திருமதி சீதாலக்ஷ்மி, கணக்காயர் பர்வதவர்த்தினி இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஒரு சித்ராபௌர்ணமி நாளின் அடுத்த நாளிலிருந்து தொடங்கி அடுத்து வரும் பத்துநாட்களுக்குள் ஏற்படும் சம்பவங்களில் தொகுப்பாக இந்தக் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஆந்திராவின் கிருஷ்ணை நதியில் தொடங்கி சோழநாட்டில் இந்நிகழ்வுகள் முடிவடைவதால் ஆந்திரத்தின் பழைய தகவல்கள் பலவும் தரப்பட்டுள்ளன. சாதிகளின் கொடுமைகள் அந்தக் காலகட்டத்திலேயே மனித சமூகத்தின் சாபக்கேடாக இருந்ததையும், பெண்களை சூதக்காய்களாக எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டனர் என்பதையும் ஆனாலும் நல்லவர்களின் தன்னலமில்லாத சேவைகளும் தேசபக்தியும் எப்படியெல்லாம் ஒரு தேசத்தைக் காப்பாற்றுகின்றன என்பதையும் முக்கியமாக நம் தேசத்து சக்தி வழிபாட்டுச் செய்திகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புத்தகத்துக்கு இனிய நண்பர் கோவை ஜீவா அவர்கள் அட்டைப்பட ஓவியத்தை அருமையாக அமைத்துள்ளார்கள்.

புத்தகம் படிப்பது வாசகர்களுக்கு சிரமமாக இருக்கக்கூடாது என்பதில் சற்று எச்சரிக்கையாகவே இருந்திருக்கிறேன் என்பதை முன்னமேயே தெரிவித்து விடுகிறேன். என்னுடைய ஏனைய புத்தகங்களை வாசகர்கள் ஏற்றுக் கொண்டு வாழ்த்தியதைப் போல ‘அம்ருதா’வும் வாழ்த்தப்படுவாள் என்ற நம்பிக்கையோடு

திவாகர்.

(ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே.. .புத்தகத்தின் விலை ரூ.330/= (தான்).
கிடைக்குமிடம் - பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர் சாலை, சென்னை 600 014 (#044-28132863 // 43408000) மற்றும், மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு கிளைகளிலும் கிடைக்கும்).

Friday, May 30, 2014

வயோதிகமும் வானப்பிரஸ்தமும்


மிகவும் வயதானவர் நோய்வாய்ப்பட்டுவிட்டார்..  கட்டிலில் படுத்துக்கொண்டு காலன் வருகைக்காகக் காத்திருக்கும் கடைசிக்கட்டம்.. மனதில் பல நினைவுகள் தோன்றித் தோன்றி மறைந்தாலும் எதையும் வாய்விட்டுப் பேசமுடியவில்லை. வார்த்தை புரளுகிறது. கட்டிலைச் சுற்றி உள்ள உற்றார் உறவினர்கள் ஏதோ கேட்கிறார்கள். பாதி புரிகின்றது.. மீதி புரியவில்லை.. அந்தக் கடைசி கட்டத்திலும் கேள்வியின் சாரம் புரிகின்றது. தெரிந்தவர்களிடம் யார் யாரிடம் எத்தனை காசுகள் கொடுத்து வைத்துள்ளாய், விவரம் சொல்என்கிறார்கள். இன்னும் வேறென்ன ஒளித்து எந்தந்த இடத்தில் வைத்திருக்கிறாய், மேலே போவதற்குள் வாய்திறந்து சொல்லிவிடு என்கிறார்கள். ஒரு மகன் ஒரு குறிப்பிட்ட நிலத்தை தனக்குதான் எழுதிவைக்க மன்றாடுகிறான். இன்னொருவன் வேறு ஏதோ சொத்துக்காக கையில் பத்திரம் வைத்துக்கொண்டு கையெழுத்தைப் போடு என்கிறான்.. கட்டிலில் படுத்தவர்க்கோ இத்தனை கேள்விகளிலும் ஓர் ஆனந்தம்.. தான் கடைசியில் கட்டையில் போவதற்கு முன் இத்தனை உறவினர்களையும் ஒரு சேரப் பார்த்துவிடுகிறோமே என்று.. ஒவ்வொருவருக்கும் முறையே அவர்கள் தேவைக்கான பதிலைச் சொல்ல வாய் திறந்தாலும் நாவிலிருந்து சொல் ஏதும் வரவில்லை.
இந்தக் கட்டத்தைதான் பல்லாண்டுகளுக்கு முன்பு (ஏழாம் - எட்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்த பெரியாழ்வார் ஒரு பாடலில் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். அதாவது இப்படி ஒரு கட்டம் வயதான காலத்தில் எல்லோருக்கும் வருவது சகஜம் என்றாலும் ஆண்டவனை முன்னமேயே முறையாக நினைத்துப் பழகியவருக்கு இந்தக் கடைசி கால கட்டங்களை எளிதில் சமாளிக்கலாமென்பார்

சோர்வினால்பொருள்வைத்த துண்டாகில் 
சொல்லுசொல்லென்று சுற்றுமிருந்து 
ஆர் வினவிலும் வாய்திறவாதே 
அந்த காலம்அடைவதன் முன்னம் 
மார்வமென்பதோர் கோயிலமைத்து 
மாதவனென்னும் தெய்வத்தைநாட்டி 
ஆர்வமென்பதோர் பூவிடவல்லார்க்கு 
அரவதண்டத்தில்உய்யலுமாமே

சமீபத்தில் விசாகப்பட்டினம் அருகே வானப்பிரஸ்தம்என்ற ஒரு இடம் சென்றிருந்தோம். அங்கு சென்று வந்த பிறகு மேற்கண்ட பாடல் 
அடிக்கடி என் நாவில் வருகிறது. அதைப் பற்றிய பதிவுதான் இது. 
                                                 
வேதகாலத்தில் அதன் பின்னர் வந்த காலங்களிலும் வானப்பிரஸ்தம் (வாநப்ரஸ்த)  என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கைப் பயணத்தில் இன்றியமையாத ஒன்று என்று சொல்லப்படுகின்றது. மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை நான்கு வகையாகப் பிரிப்பர். பிரம்மச்சரியம், கிருஹாச்ரமம், வாநப்ரஸ்தம், ஸன்யாசம் என்பர். அதாவது ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்துக் கடமைகளை சரிவர முடித்தபின் வானப்பிரஸ்த முறையில் காடு செல்லவேண்டும். காட்டிலேயே எளிமையான வாழ்க்கையை கடைபிடித்து காலத்தைக் கழிக்கவேண்டும். இது ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானது. கணவன் மனைவியாகவே கடைசிகாலத்தை வானப்ரஸ்தத்தில் கழிப்பர். வானப்பிரஸ்தம் என்றால் காடேகுதல் அல்லது காடு புகுதல் என்றும் சொல்லலாம்..
பழைய புராணக் கதைகளில் இப்படிப்பட்ட வானப்பிரஸ்தக் கதைகளைப் படித்திருக்கிறோம். வேதகால மன்னர்கள் அனைவருமே தம் கடைக் காலத்தை இப்படிக் கழித்ததாக புராணம் சொல்லுகிறது. மகாபாரதக் கதையில் இளவயதிலேயே தன் அண்ணன் திருதராஷ்டிரனை மன்னனாக்கிவிட்டு பாண்டு மன்னன் மனைவியரோடு வானப்பிரஸ்தம் ஏகினான் (அதன் பின் அங்கே அந்த வாழ்வில் பிள்ளைகளைப் பெற்ற கதைகளுக்கெல்லாம் நான் போகப்போவதில்லை). தமிழ்ப் பெருங்காவியமான சீவக சிந்தாமணியில் கூட சீவகன் எல்லா மனைவியரோடும் நீண்டகாலம் சுகமாக இருந்து ஜீவித்து, அரசாண்டு, கடைசியில் வானப்பிரஸ்தம் ஏகுவதைப் படித்ததும் நினைவுக்கு வருகிறது.
அதாவது வயதான காலத்தில் இந்த இகபரசுக உலகின் எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்டு, சொந்தபந்தங்களை ஒதுக்கி விட்டு கண்காணா இடத்துக்குச் சென்று விடுவதுதான் வானப்பிரஸ்தம் என்று பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நாங்கள் அப்படியாகப்பட்ட ஒரு வானப்பிரஸ்தத்தை இந்தக் காலக் கண்கொண்டு பார்த்தோம். அங்கே உள்ளவர்களின் கதை ஏறத்தாழ பழைய வேதகாலக் கதைபோலத்தான் என எடுத்துக் கொண்டாலும் ஒரு சில வேறுபாடுகள் (அவை நல்லவையோ அல்லவையோ) கண்டோம்.
                                               
இந்த வானப்பிரஸ்தத்தில் வந்து தங்கும் முதியோர் பெருமக்கள் ஏழைகள் அல்ல. காட்டில் அலைந்து திரிந்து கண்டதை உண்டு கடவுளை நினைத்துக் கொண்டு எஞ்சிய வாழ்வைக் கழிக்கும் கூட்டமும் அல்ல. இத்தனைக்கும் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் மாதாந்திர வருமானம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இருக்கும் இடமும் சோலைகள் சூழ்ந்த இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடம்தான். வேளா வேளைக்கு நல்ல சுகாதாரமிக்க ஆகாரங்கள், பொதுவான ஒரு அறையில் ரசித்துக் கொண்டே காணவேண்டி ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, கம்ப்யூட்டர், நெட், தியான அறை என்று சொகுசாக வாழ்க்கைப்பயணம் செல்வதற்கான எல்லா வசதிகளும் கொண்டதுதான் இந்த வானப்பிரஸ்தம் என்று நேராகப் பார்த்துத் தெரிய வந்ததுதான். இது முதியோர் இல்லம் அல்ல, முதியோர் விருந்தினர் மாளிகை என்ற முடிவுக்குக் கூட யாராலும் வரமுடியும்.

ஒவ்வொருவரையும் நலம் விசாரித்தோம்.. வானப்பிரஸ்தத்தில் வசதிகளுக்கு ஒரு குறையும் இல்லை என்றுதான் அவர்கள் நா சொல்கிறது. ஆனால் அவர்களோடுப் பேசப்பேச அங்குள்ளோர் உள்ளங்களில் தேங்கிக்கிடக்கும் ஏக்கங்களும், எத்தனைதான் அத்தனைத் தேவைகளும் அவ்வப்போது பூர்த்தி செய்யப்பட்டாலும், தனிமை என்றொரு கொடுமை அவர்களை எப்படியெல்லாம் வாட்டுகின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். வேதகால மக்கள் வயதான காலத்தில் கடமையை முடித்த கையோடு உள்ளத்தில் உவகையோடு வானப்பிரஸ்தம் சென்றார்கள். ஆனால் இங்கிருக்கும் மக்கள் அப்படி அல்ல என்றும் புரிந்த்து. ஆனாலும் இவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கை இது என்பதால் வெளியே புன்சிரிப்பும் உள்ளே வேதனையும் கலந்த இந்த வாழ்க்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி வருகிறார்கள் என்றுதான் தோன்றியது.

இவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளைப் பிரிந்திருந்தாலும் அவர்களைக் குறை சொல்லவில்லை என்பது முக்கியம். தாம் பெற்ற செல்வங்களின் தற்காலத்து நிலைமை அவ்வாறு தம்மைப் பிரித்திருக்கிறது என்கிறார்கள். அதே சமயம் அப்படிப் பிரிந்து வந்ததில் ஏராளமான வருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்த வானப்பிரஸ்த வாழ்வில் எத்தனைதான் அமைதியான சூழ்நிலையில் அரவணைப்பில் ஆதரவாக இங்கு இருந்து வந்தாலும் சொந்தங்களின் அமர்க்களத்துக்காகத்தான் அவர்கள் மனம் ஏங்குகிறது. சண்டையோ சச்சரவோ எதுவானாலும் குறையில்லாமல் அவர்களுடனேயே அனுசரித்துப் போவதைத்தான் அந்த மனங்கள் விரும்புகின்றன. அத்தான் அம்மான் உறவிலிருந்து அம்மா அத்தை உறவு வரை அத்தனை உறவுக்கூட்டத்தையும் கிட்டவைத்துப்பார்க்க வேண்டும், மகன், மருமகள், மகள், மாப்பிள்ளை, பேரன் பேத்திகள் சுற்றம் இவை சூழ்ந்த நிலையைத்தான் மனம் வெகுவாக விரும்புகிறது.
                        
மேலை நாடுகளில் இத்தகைய ‘இண்டிவிஜுவல்வாழ்க்கை வெகுகாலமாக இருந்து வருகின்றன. இளமைக் காலம் முதலே அவர்கள் அதற்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள். இன்னும் சற்று விளக்கிச் சொல்ல வேண்டுமென்றால் தனிமை வாழ்வை விரும்பி ஏற்றுக் கொள்பவர்கள் மேலைநாடுகளில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தனிமையையும், தனிமையின் இன்பத்தையும், இன்பத்தில் கிடைக்கும் சுதந்திரத்தையும் வெகுவாக ரசிப்பவர்கள்.

ஆனால் பாரதம் ஆரம்பத்திலிருந்தே மேலைக் கலாசாரத்தோடு வேறுபட்டே இருக்கின்றது. உணர்ச்சிகளுக்கும், பந்தபாசத்துக்கும் இங்கே அதிகம் பங்குண்டு. இதுவரை இப்படித்தான்.. இனியும் இப்படித்தானோ என்பது நிச்சயம் கேள்விக்குறிதான்.. இந்தக் கேள்விக்குப் பதில்சொல்வது போலத்தான் நம் நாடெங்கும் ஏராளமான வசதியான வானப்பிரஸ்தங்கள் ஏற்கனவே வந்துவிட்டன.

சரி, மேலே பெரியாழ்வார் பாடலுக்கு வருவோம். கடைசிகாலக்கட்ட்த்து மனிதனுக்குத் தெய்வத்தின் அருள் வேண்டும் என்பதற்காகப் பாடிய பாடல் இது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் பெரியாழ்வார் பாடலின் நாயகனுக்கு அத்தனைக் கஷ்டத்திலும் ஒரு சுகம் உண்டு. அந்தக் கடைசி கட்டத்திலும் அவனைச் சுற்றி உற்றாரும் சுற்றாரும் இருக்கின்றனர்.
அப்போதெல்லாம் கூட்டுக் குடும்பம்தான்.. மக்கட்செல்வமும் உறவினரும் எந்நேரமும் கூடவே இருப்பர். வயோதிகம் என்பது எல்லோருமே கடந்து செல்லும் பாதைதான் என்பதை இப்போதைய மனிதரை விட நன்றாக உணர்ந்தவர்கள். ஆகையினால் வயோதிகர் ஒரு சுமை அல்ல அவர்களுக்கு. எத்தனைதான் செல்வம் சேர்த்து அதைச் சரிவரப் பங்கிடமுடியாமல் வாய்பேச முடியாமல் அந்த வயோதிகர் வானுலகம் சென்றாலும் தான் போகும்போது அத்தனை சுற்றத்தையும் ஒரு சேர பார்த்துவிட்டோமே என்ற மனத் திருப்தி மட்டும் நிச்சயம் இருந்திருக்கும். மண்ணில் பிறந்து வாழ்ந்து அதே மண்ணில் புதையுண்டு போகும்போது மற்றவர்களும் அந்தத் திருப்தியைத் தந்தனர்.

ஆனால் இப்போது வயதான காலத்தில், நோய் வந்து காலன் நெருங்கும்போது மனிதன் இப்படியெல்லாம் இருக்க நேரிடுமா?.. உதிரம் கொடுத்துப் பெற்றெடுத்த பிள்ளைகளும் அந்த நேரத்தில் உற்றார் உறவினர்களும் சுற்றும் இருப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கமுடியுமா.. பணமோ செல்வமோ பாசத்தை அள்ளித் தரமுடியுமா, வயோதிகர்களின் தனிமைத் துயரத்தைப் போக்கும் வழிதான் என்ன.. இவர்களின் ஏக்கப் பார்வைக்கு என்ன பதில்..

நீண்டதொரு பதில் ஏக்கம்தான் நமக்கும் அவர்களிடமிருந்து தொற்றிக்கொள்கிறது….

(படங்கள் அனுமதி பெறப்பட்டது)