Friday, June 22, 2012

ஏடு தந்தானடி இறைவன் - 3


தேவார பாடல்களால் பல அதிசயங்கள் சாதாரண மக்கள் கண்ணெதிரே நிகழ்த்தப்பட்டன. மூவர் முதலிகளுமே இந்த அதிசயங்களை நிகழ்த்தியதில் நேரடியாக சம்பந்தப்படுகிறார்கள். அப்பர் பெருமானின் அதிசயம் ஒன்று ஒவ்வொரு முறையும் அவரைக் கொல்ல முயன்ற சமணர்களிடம் இருந்து மீண்டது என்றால் அவர் செய்த மிகப்பெரிய செயல் தன் அடியாரான அப்பூதி அடிகளின் மகனைத் தீண்டிய பாம்பின் விஷத்தை முறித்தது, திறக்கப்படாத மறைக்காட்டுக் கோயில் கதவுகளைத் திறப்பித்தது, திருஞானசம்பந்தரோடு சேர்ந்து பஞ்சகாலத்தில் இறைவனிடம் பொற்காசு கேட்டுப் பெற்று வறியோர் பசி தீர்த்தது முதலானவையாகும். இந்த அதிசயங்கள் யாவும் பொதுமக்களோடு சம்பந்தப்பட்டதாகும். அப்பர் சுவாமிகள்தாம் முறையாக கோயில் திருப்பணித்தொண்டு என்பதையும் பக்தர்களுக்காக ஆரம்பித்து வைத்தவர். (இது இப்போதும் பல இடங்களில் பல பெயர்களில் தொடந்து கொண்டே இருக்கிறது)



அரசியல் மேடைகளில் தமிழ்ப்பேச்சுகள் எல்லாம் விறுவிறுப்பாக இருக்கும். ’கறந்த பால் மடி புகாது.. கருகிய விறகுகள் பச்சை மரமாகாது’ என்பார்கள். ஆனால் திருஞான சம்பந்தர் மூன்று வயதிலேயே இறைவியின் ஞானப்பால் குடித்து வளர்ந்தவர். உதட்டில் வழியும் பாலைக் கண்டு, யார் உனக்கு பாலைக் கொடுத்தது எனக் கேட்கையில் வானைக் காட்டி ‘தோடுடைய செவியன்’ பாடி ஆடியவர். சம்பந்தர் மயிலையில் பூங்கோதையை எலும்புச்சாம்பலிலிருந்து உயிர் பிழைக்கவைத்து அதிசயம் நிகழ்த்தினார். சுந்தரர் இன்னும் ஒருபடி மேலே போய், அவினாசி சேத்திரத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு குளத்தில் முதலையின் வாய்ப்பட்டு இறந்து போன சிறுவனை மீட்டுக் கொடுத்தார். இவைகளையும் தவிர மந்திரசக்தியாக பாடல்களால் விளைவிக்கப்பட்ட ஏராளமான அதிசய விஷயங்கள் மூவர் பதிகங்களிலும் உள்ளது. ஞானசம்பந்தரால் எல்லோர் முன்னிலையிலும் பொற்தாளக்கட்டும், முத்து சிவிகையும் இறைவனால் அருளப்பட்டது, ஒரு வணிகன் தன் காதலியுடன் வந்த போது பாம்பு தீண்டி இறந்தசெய்தி கேட்டு, அந்த வணிகனின் பாம்பு விஷத்தை நீக்கியது, மருத்துவகுணம் கொண்ட திருநீற்றுப் பதிகங்கள், நீரிலும், நெருப்பிலும் இயற்கைக்கு எதிராக இறையருள் கண்ட திருப்பதிகங்கள் என ஞானசம்பந்தர் பாடல்களில் ஏராளமான் அதிசயங்களைக் காணலாம். சுந்தரர் ஒரு பதிகம் மூலம் வெள்ளமாக ஓடிய காவிரியை திருவையாற்றில் தனக்கு வழிகாட்ட வேண்டி நீரைப் பிளந்து கடக்கிறார். இவையெல்லாம் சாதாரண அதிசயங்கள் என்று புறம் தள்ள முடியாது. இறையருளால் மட்டுமே முடியும். அப்படி இறையருள் பெற்ற மூவர்களின் பாடல்களை கண்ணெதிரே பார்த்த சாதாரண மக்களால் எப்படி புறக்கணிக்கப்படமுடியும்.. தெய்வ சக்தி உளமாற உணரப்பட்டது. மக்கள் தாமாகவே முன்வந்து ஆதரித்தனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஆண்டு வந்த அரசர்களும் தேவாரப் பாடல் புகழ் பெற தங்களால் முடிந்ததைச் செய்தனர்.

தேவாரம் தோன்றிய காலம் பல்லவ அரசர்கள் புகழ்பெற்றிருந்த காலம் என்பதை அனைவரும் அறிவோம். மகேந்திர பல்லவன் முதல் இரண்டாம் நரசிம்மன் எனப் பெயர்கொண்ட ராஜசிம்ம பல்லவன் காலம் வரை தேவாரப் பாடல்கள் காலமாக வரலாற்று ஆசிரியர்கள் வரையறுத்துள்ளனர். பாரதத்தின் பண்பாட்டு வேராகக் கணிக்கப்பட்ட சநாதன தர்மம் தென்னகத்தில் மிகப் பிரதானமாகப் போற்றப்பட்டு வளர்க்கப்பட்டது கூட பல்லவர்களான இவர்கள் காலத்திலிருந்துதான். வட இந்தியாவில் காசி க்ஷேத்திரமும் தென்னிந்தியாவில் காஞ்சி மகாநகரமும் அந்த கால கட்டத்தில் சனாதன தர்மத்தின் கோட்டைகளாக இருந்ததை திரு எஸ்.என். தாஸ் குப்தா தன் ‘’ஹிஸ்டரி ஆஃப் இண்டியன் பிலாஸபி’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஏழாம் நூற்றாண்டு காலம் வரை கோவில்களிலோ நடைமுறையிலோ அவ்வளவு அதிகமாகக் காணப்படாத ஆகம விதானங்கள் அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டதை அவர் விவரிக்கின்றார். கி.பி, 7ஆம் நூற்றாண்டிலிருந்து அதிக அளவில் ஆகம விதிகளின் படி தென்னகத்தில் அதுவும் தமிழகத்தில் நூற்றுக்கணக்கில் கோயில்கள் எழுப்பப்பட்டதையும் வழிபாட்டு முறையிலும் பூசை விதானத்திலும். வடமொழி வேதாகம விதிகளோடு தமிழும் சேர்க்கப்பட்டதையும் விவரிப்பது ஒரு முக்கியமான விஷயம். இங்கு தமிழ் என்பது நிச்சயம் தேவார பாடகள்தான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

(By 600 A.D. several hundred temples, dedicated to Siva and Vishnu had come into existence in Tamilnadu, which were built according to prescribed texts and where the rituals were conducted as per codified manuals, the agamas. This body of literature, both in Tamil and Sanskrit should have assimilated each other’s tradition Das Gupta, S.N., A history of Indian Philosophy,)

ஏழாம் நூற்றாண்டில் அப்பர் சுவாமிகள் காலத்தில் மிகப் பெரிய சிவன்  கோயில்களாக 78 பெருங்கோயில்கள் இருந்ததை தம் பதிகம் ஒன்றில் பாடுகிறார்.

”பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
  பெருங்கோயில் எழுபதினோ டெட்டுமற்றும்” - (06-71-5)

எட்டாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவ காலத்தில் அவன் கட்டிய கோயில்களும், மற்ற அரசர்கள் கட்டிய கோயில்களும் பிற்காலத்தில் மிகப் புகழ்பெற்றவையாகும். இவற்றில் பூசை விதானங்கள் வேதாகமத்தில் விதித்தபடியே வடமொழியில் இருந்தாலும் தேவாரப்பாடல்களும் சேர்ப்பது என்பது மிகப் பெரிய கௌரவமான பூசைமுறையாக எடுத்துக் கொள்ளப்பட்டது,

சரித்திர மூதறிஞர் டாக்டர் நாகசாமி இந்தக் கூற்றை முழுமையாக ஒப்புக்கொள்கிறார். அத்துடன் கூட இல்லாமல் இசைப் பயிற்சியுடன் தேவாரப்பாடல்கள் கோயில்கள் தோறும் பாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையும் அவர் தன் ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

(The earliest epigraphical reference to the recitation of Thiruppadiyam, occurs in the middle of the 9th century, in the reign of the Pallava ruler Nandivarman III circa 845 A.D. found in the Siva emple of Thiruvallam. It records the gift of a village for maintaining several services in the temple by a certain Vikramaditya Mabali Vanarayan. It includes provisions for food offerings, the Sivabhramanas performing worship, Sribali (drummers), for makers of flower garlands, and singers of Thiruppadiyam.)


பல்லவநந்திவர்மனைப் பற்றிப் பேசுகையில் நந்திவர்மனை மிகச் சிறந்த சிவபக்தனாக ‘நந்திக்கலம்பகம்’ (`சிவனை முழுதும் மறவாத சிந்தையன்') அழைக்கிறது. அவன் கொடுத்த வேலூர் செப்புத் தகடுகளில் அவனை திருநீறு போற்றிய மன்னன் என அடையாளம் தருகின்றன. நந்திக்கலம்பகமே அவனால்தால் இயற்றப்பட்டது என்பர் சிலர். தமிழின் மிகச் சிறந்த இலக்கிய பெட்டகத்துக்குச் சொந்தக்காரனான நந்திவர்மன் தேவார பாடல்களை மிகவும் மதித்துப் போற்றியதும், கோயில்களில் பாடம் நிவந்தம் அளித்ததும் ஆச்சரியமில்லைதான்.

டாக்டர் நாகசாமியின் இன்னொரு விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

(Thus it is seen that the recitation of Tevaram hymns in Siva temples have become an established offering by the middle of 9th century A.D. It may be noted that the ajnapti, the royal officer who approves the grant was one Kadupatti, Tamil Peraraiyan, who was a minister to the Pallava ruler Nandi, and later to his son Nrpatunga. The tenor of the inscription is clear enough that it is a royal order. The direct patronage of the Pallavas, to the recitations of Thiruppadiyam of the Saiva saints is brought to light by this epigraph.)

ஒன்பதாம் நூற்றாண்டில் நிருபதுங்கவர்மனுக்குப் பிறகு பல்லவர்கள் வீழ்ச்சியடைந்தனர். சோழர்கள் ஆட்சிக்காலம் ஆரம்பித்தது. தேவாரத்தைப் பொறுத்தவரை இனிமேல் இவை பொற்காலம்தான். விஜயாலயன் ஸ்தாபித்த சோழர்களின் ஆதிக்கத்தை அவன் மகன் ஆதித்த சோழன் நிலைப்படுத்தினான். இவன் காலத்தில்தான் மேலும் கோயில்கள் பெருகின. காவிரிக்கரையோரம் இருபக்கங்களிலும் அதிகமான கோயிலை எடுப்பித்ததில் ஆதித்த சோழனுக்கு பெரும்பங்குண்டு. கோயில்கள் புதிதாக எழுந்தனவென்றால், அதுவும் சிவன் கோயில்கள் என்றால் அங்கும் தேவாரம் ஒலிக்கத்தானே வேண்டும். ஆதித்த சோழன் காலத்தில் கல்வெட்டுகள் தேவாரத்தைப் பற்றி அவ்வளவாக இல்லையென்றாலும் இவனுக்குப் பின் வந்த இவன் மகன் பராந்தக சோழன் ஆட்சிக்காலத்தில் தேவார மூவர்களின் புகழ் மிக வேகமாகப் பரவியதற்கு கல்வெட்டு சாட்சியங்கள் உண்டு. பராந்தகன் தில்லைக் கோயிலுக்குப் பொன் வேய்ந்ததோடு மட்டுமல்லாமல் தேவாரத்துக்கு மிகப் பெருமை சேர்த்த பெரும் மன்னனாவான். இவன் ஆட்சிக் காலம் கி.பி.906 இல் ஆரம்பமானது. மிகச் சிறிய வயதிலேயே இவன் ஆட்சிக்கு வந்தாலும், ஆலயங்களுக்கு இவன் செய்த சேவை மகத்தானது. இவனுக்குப் பின்னர் ஏறத்தாழ எண்பது வருடங்கள் கழித்துதான் ராஜ ராஜ சோழன் ஆட்சிக்கு வந்தான் என்பதை நினைவில் கொள்க. தில்லைக்குப் பொன் வேய்ந்த பராந்தகனின் கல்வெட்டுச் செய்திகள் சில பார்ப்போம்.

EI no. 358/1903 : காலம் பராந்தகனின் பதினான்காம் வருடம் –(கி.பி.920) ஆண்டாநல்லூரில் ஒரு புதிய கற்றளி செம்பியன் இருக்குவேள் என்பவனால் சிவனுக்கு எழுப்பப்படுகிறது. அரசன் ஜலசம்ப்ரோக்‌ஷணம் (கும்பாபிஷேகம்) செய்ததோடு நிலங்கள் நிவந்தம் செய்கிறான். எட்டு எப்போதும் எரியும் விளக்குகள், சந்தனம், பூ, நைவேத்தியத்துக்கான செலவுகள், திருப்பதியம் பாட ஒரு ஆள் (கந்தர்வன்), தாளம் தட்ட ஒரு ஆள் என.. இக்கல்வெட்டு சொல்கிறது.

(this inscription shows that even as the temples were built, the singers of Thiruppadiyans were employed (Balasubrahmaniam S.R. Early Chola temples P.16).


கி.பி. 943இல் திருத்தவத்துறையாகிய லால்குடியில் உள்ள மகாதேவர் திருமுன் நாள்தோறும் மூன்று சந்திகளிலும் இருவர் திருப்பதியம் விண்ணப்பம் செய்தனர். அதற்காகச் சிவகோசரி பிடாரன் தேசவிடங்கன் என்பார் நிலத்தானம் செய்தார் என்று முதற்பராந்தகனின் 37-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இன்றும் காட்டுகின்றது.

இந்நிவந்தம் போதாமையால், 16 ஆண்டுகள் சென்ற கி.பி. 959இல் மேலும் சில நிலங்களை அவனே அறக்கொடையாக நல்கினான். நிலத்தினின்றும் பெறும் எள்ளுக்கு உரிய எண்ணெயில் குடிவாரப் பகுதி கோயிலுக்கும், நிலத்துக்குரிய செவ்வாரப் பகுதி திருப்பதியம் விண்ணப்பம் செய்வார்க்கும் தரப் பெறல் வேண்டும் என்று கல்வெட்டு மெய்ப்பிக்கிறது. சிவகோசரியார் என்பதால் முப்போதும் திருமேனி தீண்டுவார் என்பதும், பிடாரன் என்பதால் இவரே தேவாரம் பாடுவார் என்பதும் அறியலாம். (தேவாரக் கல்வெட்டுகள் கட்டுரை – தேவாரம் தளம்)

டாக்டர் நாகசாமி இன்னொரு அரிய தகவலையும் நமக்குத் தருகிறார். ராஜ ராஜ சோழன் காலத்துக்கே முன்பே தேவார மூவர்களின் உருவச்சிலை வழிபாடு பற்றிய செய்திதான் அது. பராந்தக சோழன் ஏற்பாட்டின் பேரின் அவனுடைய 38 ஆவது ஆண்டில் திருவிடைமருதூரில் தேவார மூவருக்கும் சிலைகள் செய்யப்பட்டு பூஜித்து வரப்படுகின்றது.

(in about 945 A.D. we come across a reference to the metal images of the Tevaram Trios-Thirunavukkarasu devar, Sambandar and Nambi Aruranar (Sundarar) in the temple of Thiruvidaimaruddur. The inscription is dated in the reign of Chola ruler Parantaka I in his 38th year – Dr. R.Nagasami)

EI no. 99/1928/29: பராந்தக சோழனின் 37ஆம் ஆண்டுக் காலம் (கி.பி, 944) லால்குடியில் உள்ள சப்தரிஷேஸ்வரர் கோயிலில் திருப்பதியம் பாட நிலம் நிவந்தம் அளிக்கப்படுகிறது. ஆகையினால் ராஜராஜ சோழனின் பல தேவாரச் சேவைகளுக்கு ஆதிகாரணமாக பராந்தகசோழன் விளங்குகிறான்.

ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் காலத்திலும் தேவாரம் பரவ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. (129/1914)திருவெறும்பூர் கோயில் திருப்பதியம் பாடுவோர் பற்றிய செய்திகள் உள்ளன. ராஜராஜசோழனுக்கு முன்பு ஆண்ட உத்தமசோழன் கூட தேவாரத்துக்காக கல்வெட்டு எடுத்திருக்கிறான் (காலம் கி.பி 974 (SII. XIX 69) திருவாவடுதுறை கோயிலில் திருப்பதியம் பாடுவோர் நியமிக்க உத்தரவாக இந்தக் கல்வெட்டு செய்தி சொல்கிறது. இதே அரசன் அடுத்த பத்தாண்டுகளில் இன்னொரு கல்வெட்டு திருவெறும்பூரில் திருப்பதியம் பாடுவோருக்கு நிவந்தமாக காணி நிலம் ஒதுக்கப்பட்டதாக கல்வெட்டு சொல்கிறது.

கி.பி, 985 ஆம் ஆண்டில் இத்தகைய நிலைமையில் தேவாரம் எல்லா சிவன் கோயில்களிலும் பாடப்படுகின்ற நிலையில்தான் ராஜராஜசோழன் ஆட்சிக் கட்டில் ஏறுகிறான். பராந்தகனின் கொள்ளுப்பேரனான ராஜராஜ சோழன் தன் முப்பாட்டனாரை அப்படியே பின்பற்றுகிறான். (தேவாரம் பரப்புதலில் மட்டுமல்ல - பராந்தகன் எல்லாவற்றையும் வெளிப்படையாக (மனைவியர் கூட பதினோரு பேருக்கும் மேலே) செய்து கல்வெட்டும் போட்டவன். பாட்டனைப் போலவே பேரனும் செய்கிறான். (மனைவி விஷயத்திலும் கூட என்பது இரண்டாவது விஷயம், இங்கே நாம் தேவாரத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறோம்).

ஆனால் அதே வேளையில் இவன் காலத்தில் இந்த தேவார ஓலை மீட்டெடுப்பு என்பதாக சொல்லப்படுகிற நிகழ்ச்சி என்பது என்ன என்பதையும் சற்று விவரமாகப் பார்ப்போம்.

(படங்கள் - 1. மூவர், 2. சம்பந்தரிடம் பால் கொடுத்தது யார் என கேட்பது, 3. அப்பர் சுவாமிகள் சம்பந்தரின் பல்லக்கைத் தூக்கி வரும் சிற்பம். - (படங்களுக்கு நன்றி கூகிளார் மற்றும் தி ஹிண்டு)

தொடரும் மூவர் முதலிகள்..

4 Comments:

At 2:53 AM, Blogger geethasmbsvm6 said...

//ஆனால் அதே வேளையில் இவன் காலத்தில் இந்த தேவார ஓலை மீட்டெடுப்பு என்பதாக சொல்லப்படுகிற நிகழ்ச்சி என்பது என்ன என்பதையும் சற்று விவரமாகப் பார்ப்போம்.//

காத்திருக்கேன்.

 
At 6:21 AM, Blogger VSK said...

இவ்வளவு ஆதாரங்களை நீங்களே தந்திருக்கையில், 300 ஆண்டுகள் மறைந்திருந்தன என ஒரு வினாவை முதல் பதிவில் எழுப்பியது ஏனெனப் புரியவில்லை. தேவாரம் இக்காலகட்டத்தில் மறைந்திருக்கவில்லை எனத்தானே இந்த சான்றுகள் காட்டுகின்றன?

//அப்படி இருக்கையில் முன்னூறு ஆண்டுகள் ஏன் மறைந்திருக்கவேண்டும்.. ஏன் மறைத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும் – இப்படியெல்லாம் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா..?//

ஒரு சில தட்டச்சுப் பிழைகளைக் கவனிக்கவும்.

காசி க்‌ஷேத்திரமும்..... க்ஷேத்ரமும்
தேவாரப்பாடகள்தான்..... பாடல்கள்தான்
மட்டுமெ.... மட்டுமே

 
At 8:24 AM, Blogger V. Dhivakar said...

டாக்டர்.. முதல் பகுதியில் நான் குறிப்பிட்டது கீழே:

"அதில் பல பாடல்களால் அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டவை.. அப்படி இருக்கையில் முன்னூறு ஆண்டுகள் ஏன் மறைந்திருக்கவேண்டும்.. ஏன் மறைத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும் – இப்படியெல்லாம் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா..

ஆனால் மூவர் பாடிய பாடல்களுக்கு என்றுமே, அது இடைப்பட்ட காலமாக இருந்திருந்தாலும், அழிவில்லைதான். அவர்களின் பாடல்கள் ராஜராஜ சோழன் காலத்துக்கு முன்பேயே கோவில்கள்தோறும் பாடப்பட்டு வந்தன."

கேள்வி பொதுவாக மக்கள் மத்தியிலே இருக்கிறது. முதலிலேயே பதிலைக் கொடுத்து அதற்கான காரணங்களையும் பிற்பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். மேலும் வரும்..

தட்டச்சுப் பிழைகளைத் திருத்தி விடுகிறேன். நன்றி - தொடர்ந்து படித்துக் கருத்து சொல்வதற்கு.

 
At 6:53 AM, Blogger Koaval Jayaraman said...

A superb tracing of the Tirumurai's patronage by Pallava and Chola rulers.
Keep it up!

 

Post a Comment

<< Home