6.மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா - பின்னவரா
வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
இது வள்ளாலார் திருவாசகத்தைப் பற்றி எழுதியது. வானுயர்ந்த வள்ளலே அப்படி எழுதும்போது மாணிக்கவாசகரின் தமிழைப் பற்றி நம்மால் என்ன எழுத இயலும்... திடீரென, வேண்டாத வேலையாக அவர் காலத்தைப் பற்றிப் பேசப் போக அந்த வேலை இதோ தேன் கலந்து, பால் கலந்து, பழம் கலந்து ஒரு நற்கரும்புச்சாற்றை அருந்துவதில் கொண்டு வந்துவிட்டது. இந்தச் சுவை மது மயக்கம் போலவும் இருப்பதால் நாம் இங்கு ஏற்றுக் கொண்ட நம் கடமையை உணர்ந்து மயங்காமல் இருக்கவேண்டிய கவலையும் கூடவே இருப்பதாலும், நமக்குத் தேவையானதைப் பற்றி மட்டும் எழுதுவோம்.
வாதவூரர் பாடிய திருவாசகத்தில் திருச்சிற்றம்பலக்கோவை எனும் நானூறு பாடல் கொண்ட துறைப்பாடலும் சேர்த்திதான். ஆனாலும் திருவாசகத்தின் ஏனைய பாடல்களுக்கும் திருக்கோவைக்கும் சில வித்தியாஸங்கள் உண்டு. திருக்கோவையைத் தவிர்த்து திருவாசகப் பாடல்கள் அத்தனையும் எளிமை வாய்ந்தது. உரையாசிரியர்களின் உதவி தேவைப்படாது. அந்தப் பாடல்களை இரண்டு மூன்று முறை படித்தாலே பாடலின் பொருள் புரிந்துவிடும். பக்தி இலக்கியங்களிலேயே மிக எளிதான தமிழ் கையாளப்பட்டது மாணிக்கவாசகரின் திருவாசகத்தில்தான். அந்த எளிமை ஒன்றே பாமரன் முதல் வெளிநாட்டினர் வரை அந்தத் தெய்வத் திரு வாசகங்களுங்கு அடி பணிந்து மனம் உருகி ஏங்க வைத்து என்னென்னவோ செய்தது.
ஆனால் திருக்கோவை அப்படி எளிமையானது அல்ல. நிச்சயமாக உரையும், கூடவே ஆழ்ந்த விளக்கம் அளிக்க தமிழறிஞரும் தேவை. தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் திருவாசகத்தின் ஒரு புத்தகத்துக்கு ஓர் அணிந்துரை அளித்திருக்கிறார். "மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்க நூற்களுள் ஒன்று அன்று, எனினும், அவற்றோடு ஒன்றாகவைத்து எண்ணும் பெருமை இதற்கே உண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூற்களில் பெரும் பயிற்சியுடையோர்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்." அதே போல இன்னொரு கட்டுரையில் சேக்கிழார் அடிப்பொடிகள் திரு தி.ந. ராமச்சந்திரனார் எழுதுகையில் ”கிளென் ஈ யோகும் என்ற அமெரிக்க அறிஞர் தமிழை நன்கு கற்றவர். இவர் "ஆடல் வல்ல சிவனுக்கான அருட்பாடல்கள்"23 என்ற ஓர் ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வரைந்திருக்கிறார்.இந்நூல் திருவாசகம் பற்றியது. திருவாசகத்தில் தோய்ந்து, அதன் பெருமைகளைப் பெரிய அளவில் உணர்ந்திருக்கும் இவர், திருக்கோவையார் ஒரு கடினமான நூலாதலால் அதைப்படித்துணரத் தமக்கு வாய்ப்பில்லாதது பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார்” என்று கூறுகிறார்.
திருவாசகம் எளியவர்க்கென்றால் திருக்கோவை புலவர்களுக்கு. மாணிக்கவாசகரின் மதிப்பு வெகுஜன மத்தியில் மட்டுமின்றி சான்றோர் மத்தியிலும் பரவ இறைவன் செய்த ஏற்பாடு. திருக்கோவையை அவனே கேட்டுப் பெற்றது ஏன் என்பது திருக்கோவையைப் படித்துப் பயன் பெற்றார் மட்டுமே அறியமுடியும்.
இந்த வேறுபாட்டினை எந்த தெய்வப்புலவரும் நமக்குத் தந்ததில்லை. தமிழை நமக்குத் தந்த மதுரையில் பிறந்த தமிழனான வாதவூர் நாயகர் மக்கள் உய்வுற எளிய தமிழில் திருவாசகத்தையும் இறைவன் செய்கையால் சான்றோர்க்கென திருக்கோவையும் எழுதியது என்பது சாதாரணமான செயல் அல்ல.
மாணிக்கவாசகர் தமிழில் பல வடமொழிக் கலப்பு இருந்தாலும், கி.மு.க்கு முன்பு பாடப்பட்ட சங்கத் தமிழ் பாடல்களிலும் ஐம்பெரும் காப்பியங்களிலும் கூட வடமொழிக் கலப்பும் வடபுலத்தார் புராணக்கதைகளும் ஏராளமாகவே காணக்கிடைப்பது நாம் நன்கு அறிந்ததாகும். அதே சமயத்தில் தமிழில் வடமொழிக் கலப்பு என்பது தெய்வ இலக்கியங்களில் மேலும் தமிழுக்கு வனப்பும் எளிமையும், ஆழ்ந்த பொருள்களையும் அள்ளித் தருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். ஆகையினால் வடமொழி கலப்பு இருக்கும் தமிழைக் கொண்டு நாம் காலத்தை கணக்கிடமுடியாது.
தமிழ் தேனினும் இனிய மொழி. இந்த மொழியில் இலக்கண வகையறாக்கள் எந்தக் காலத்திலுமே மாறுவதில்லை. யாப்பும், எதுகை மோனையும் எந்தக் காலத்திலும் கவிதை இலக்கணத்துக்கு ஒன்றுதான். ஆனால் வார்த்தைகள், சொற்கள் புழங்கப்படுவது காலத்துக்கு ஏற்ப மாறுதல் அடைந்துகொண்டே வருகின்றது. இது மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது. பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் இருக்கத்தான் செய்கிறது. சங்ககாலப் பாடல்கள் பலவற்றைப் புரிந்து கொள்வது கஷ்டம். தொல்காப்பியத்துக்கு சிறந்த உரை இருந்தாலன்றி அது விளங்காது, ஆனால் சிலம்பும், மணிமேகலையும், பிற்காலச் சங்கப்பாடல்கள் (நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னப் பவளக்கூர்வாய் செங்கால் நாராய் – பிற்காலச் சங்கப்பாடல்) இவை அனைத்தும் இரண்டு மூன்று முறைப் படித்துப் பார்த்தால் விளங்கும். பிறகு உரையுடன் படித்தால் இன்னமும் அதிகமாகப் புரியும். தேவாரப் பாடல்களிலேயே காரைக்கால் பேயம்மை, ஷேத்திர திருவெண்பா போன்ற பாடல்கள் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் அளவுக்கு மூவரின் பாடல்களில் அவர்கள் பயன்படுத்திய சில பல சொற்கள் சாதாரணமாகப் புரியாது. முதலாழ்வார்களான பூதத்தாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் பாடல்கள் மிக மிக எளிமை. அவை புரிந்த அளவு நம்மாழ்வார் பாடலையோ திருமங்கை மன்னர் பாடல்களையோ சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாது.
இந்த வார்த்தைகள் மாறும் விந்தையை நம் வாழ்நாளிலேயே காண்கின்றோம். நம் பாட்டன் பயன் படுத்திய பல சொற்களை நம் சந்ததியினருக்கு சொல்லித்தருவதில்லை. சில சொற்கள் சென்ற நூற்றாண்டுக்குப் பொருந்தியது. ஆனால் இந்த நூற்றாண்டில் பொருந்துவதில்லை. நாற்றம் என்று நல்வாசனைக்குப் பொருள் கொண்டோம் ஒரு காலத்தில். இப்போது நாற்றம் என்பதே அவப் பெயராகிவிட்டது. காலப்போக்கில் பல வார்த்தைகள் தடம்புரள்வதும், மறைந்து காணாமல் போவதும், சகஜம்தான். எழுத்தாளர் சுஜாதா முதலாழ்வார் பாடிய வெண்பா பாடல் ஒன்றில் ‘ஓர்’ என முடியும் சொல் இப்போது மலையாளத்தில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்கிறார். பகவத் கீதை என்னும் சொல்லை தமிழில் ஆழ்வார்கள் அப்படியே எழுதியதில்லை. நம்மாழ்வார் ‘வார்த்தை’ என்றாலே போதுமென்பார் (’வார்த்தை’யறிபவர் மாயவற்கன்றி யாவரோ). ஆண்டாள் கீதைக்கு புதுவிதமான தமிழ்ப்பெயர் கொடுத்தாள். மெய்ம்மைப்பெருவார்த்தை என்று சொன்னாள். (மெய்ம்மைப்பெருவார்த்தை விட்டுச் சித்தர் கேட்டிருப்பர்). அவர்கள் காலங்களில் அப்படித்தான் பகவத் கீதை அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.. ஆகையினால் அந்த ‘வார்த்தை’களைப் பயன்படுத்தினர். வாசலில் இப்போது கோலமிடப்பயன்படும் கோலமாவுக்கு ஆண்டாள் காலத்தில் ‘வெள்ளை நுண்மணல்’ என்று பொருள் (வெள்ளை நுண்மணற்கொண்டு தெருவணிந்து - நாச்சியார் திருமொழி). இப்படிக் காலத்துக்குக் காலம் மாறுபடும் சொற்களில் தேடுதலுக்காகவும் ஆராய்வதற்காகவும் மாணிக்கவாசகரின் பாடல்களிலிருந்து தேடி எடுத்துக் கீழே கொடுத்துள்ளேன். இவைகளில் சில தனித்தமிழாய் இன்றும் பொலிந்திருக்கலாம். ஆனால் நம் கண்ணில் சிக்காமல் போனதால்தான் இங்கே போடப்படுகிறது என்பதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கது.
பொன்னம் பலத்தாடுந்
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே
>நரிப்பாய் என்றால் இகழ்வான என்ற பொருள்.
தூவண மேனி காட்டிய தொன்மையும்
>தூவணம் என்றால் பொன்
அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்
>கழுக்கடை என்றால் சூலப்படை
நடப்பன நடாஅய்க் கிடப்பன
நிற்பன நிறீஇச் (திருவண்டப்பகுதி 109,110)
முறையுளி ஒற்றி முயன்றவர் (திருவண்டப்பகுதி)
முறையினால் என்பது முறையுளி – இதில் உளி என்பது மூன்றாம் வேற்றுமையில் வந்த இடைச்சொல். திருக்குறளில் “இயல்புளிக் கோலோச்சு மன்னவனாட்ட
பெயலும் விளயுளும் தொக்கு” என்ற ,குறளில் இயல்பு-உளி என பரிமேலழகர் உரை உளியை இடைச்சொல் என்கிறது. திருமுருகாற்றுப்படையில் ”மந்திர விதியின் மரபுளி வழாஅ” இதில் கூட மரபு-உளி இடைச் சொல்லாக உரையாசிரியர் உ.வே.சா குறிப்பு.
“ஒளிக்கும் சோரனைக் கண்டனம்.”
சோரன் என்பது கள்ளன் எனப் பொருள் தருகிறது. உயிருக்குள்ளே ஒளிந்திருக்கும் கள்ளனான இறைவனைக் கண்டோம். இதே சோரன் அல்லது சோரம் என்பது தற்காலத்தில் வேறு பொருளாகப் பாவிக்கப்படுவது அறிக..சோரம்போதல்>>
மேலும் ‘பிணையல்’ (கால்களுக்கிடையே போடப்படும் சங்கிலி), ’கோற்றேன்’ – கோல்தேன் அதாவது கொம்புத்தேன். ’நள்ளுநீர்’ நடுக்கடல் நீர், (முழுமதி நிலவில் நடுக்கடலில் பொங்கும் நீர்)
அலைகடல் மீமிசை நடந்தாய் (போ.திருவகவல்)
அலைகின்ற கடலின் மேல் மேற்பட நின்று நடந்தாய்
பாவகம் பல பல காட்டி
பாவகம் என்பது முகபாவத்தைத்தான் என்றாலும் நாடகத்தையே பாவகம் என மாணிக்கவாசகர் எழுதினார் என்கிறார் உரையாசிரியர். நாட்டியத்துக்கும் நாடகத்துக்கும் பொதுப்பெயராக பாவகம் இருந்திருக்கவேண்டும்.
திருவாசகத்தில் இப்படி ஏராளமான காலத்தால் மாறுபட்ட சொற்கள் உள்ளன. அது போல திருக்கோவையிலும் ஏராளமாக உள்ளன. திருக்கோவையாருக்கு 1800களில் ஆறுமுகநாவலர் முதன் முதலாக ‘பேராசிரியர்’ என்பவரைக் கொண்டு உரை எழுதி வெளியிட்டார். திரு தி.வே கோபாலய்யர், திரு தி.ந.ராமச்சந்திரன் இருவருமே இந்தப் பேராசிரியர் உரையைப் போற்றுகின்றனர். அவர்கள் கட்டுரைப்படி கீழ்க்கண்ட சொற்பிரயோகங்கள் வித்தியாசமாக திருக்கோவையில் இருப்பதைக் காணலாம்.
பொன்னங்கழல் 131 - பொன்னை ஒக்குங் கழல் என உவமத் தொகை,
முத்தமணல் 273 - முத்துப்போன்றமணலையுடைய இடம்
எற்றும்திரை 134 என்பது சினையாகிய தன்
சந்தமால் அவர்மேவிய சாந்தமே - 44-1
ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் - 101 – 11
மூரி - எருது - மலையாளச்சொல் - 17-4
அண்ணா - தந்தையே - திசைச்சொல் - 55-5
பொக்கு - பொய் - திசைச்சொல் - 61-10
கனகமூக்கு - பொன்மூக்குமின் - 35-8
முகை - காய்அரும்பு 2-4
மொட்டு - முற்றிய அரும்பு - 2-4
பிஞ்ஞகன் - மயிற்பீலியை அணிந்தவனாகிய சிவபெருமான் - 5-6
கோட்டகம் - வயலின் புறத்தே நீர் தேங்கியருக்கும் இடம் - 6-2
கட்டங்கம் - யோகதண்டம் - 9-4
முரறுதல் - மூக்கினால் ஒலித்தல் - 14-4
தொகுத்தல் - பலவாய்க் கிடப்பவனவற்றை ஒருமுகப் படுத்திச் சேர்த்தல் - 23-6
சாலம் - ஆலமரம் - 32-4
மாதுற்ற மேனி 174 - என்பது ஆகுபெயராய் மேனியை உடையான் மேல் நின்றதெனினும்
முத்தம் திங்களின் வாய்ந்து அளிவளர் வல்லி அன்னாய் 16
235ஆம் பாடலில்`நலச்சேட்டைக் குலக்கொடியே'
தேம்பல் நுண்ணிடையாள் - 2-11
இப்படி காலத்துக்கேற்ற வகையில் உள்ள தமிழ்ச்சொற்கள் ஏராளமாக இருக்கும்போது இவை எந்தக் காலத்தில் அதிகமாக சான்றோர்களால் பழக்கத்தில் இருந்தது என்பதை மேலும் சில பக்தி இலக்கிய நூல்கள் மூலம் ஆராயவேண்டும். செந்தமிழில் வல்லமையற்ற நான் மேலே கொடுத்திருப்பது வெறும் உதிரிப்பூக்களான செய்திகள் மட்டுமே.. அதைத் தொகுக்கும்போது, பல்வேறு காலகட்டத்து நூல்கள் மூலம் ஆராயவேண்டிய நிலையில் உள்ளோம். இது தமிழறிஞர்கள் கையில் இருக்கிறது. அது சங்கத் தமிழ் நூல்களானாலும் சரி, அல்லது பிற்காலத்து கம்பராமாயணமாக இருந்தாலும் சரி, இந்த சொற்கள் காலநேரத்துக்கு ஏற்றாற்போல சங்கமிக்கும்போது நிச்சயமாக விடை கிடைக்கும்.
மாணிக்கவாசகர் காலத்தில் மேலும் சிலர் பாடல்கள் இயற்றியிருப்பதை அவர் பாடல் வரிகளே சொல்கிறது.
92-11. அருந்தமிழ்மாலைகள் பாடியாடக் கெடும் அருவினையே
இந்த அருந்தமிழ் மாலைகள் எந்தப் பாடல்கள்? பேயம்மை பாடல்களா, பேயாழ்வார் பாடல்களா, சிலப்பதிகாரப்பாடல்களா அல்லது தேவாரப் பாடல்களா, ஆண்டாள்-பெரியாழ்வார் பாடல்களா என்பதையும் ஆராயவேண்டும். பாவைப் பாடல்களை ஆண்டாளும், மாணிக்கவாசகரும் பாடியுள்ளார்கள். ஆண்டாள் காலம் கி.பி. 8 அல்ல்து 9ஆம் நூற்றாண்டு என்பர். இருவர் பாடல் வகைகளையும் சற்று மேலோட்டமாக கண்ணோட்டமிடுவோம்.
பாவைப் பாடல்கள் என்பது சங்க காலம் தொட்டு இளங்கன்னியரால் மணலில் பாவை எனும் பொம்மை செய்யப்பட்டு பின் நீர் விளையாடுதல் எனவாக வருகிறது. ஆப்படி நீராடும்போது பாடும் பாடல்களே பாவைப்பாடல்களாகும். இந்தப் பாவை விளையாட்டோடு கூடிய இளங்கன்னியர் நீராடல் சமயச் சார்பு பெற்று வளர்ந்ததை அகநானூறு 181 ஆம் பாடலில் ,
‘நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழின்மனை மகளிர்
கைசெய் பாவை துறைக்கண் இறுக்கும்
(நன்றி! ஓம்சக்தி மாத இதழ்)
பாவை பாடல்கள் ஆண்டாள் பாடியதும் மாணிக்கவாசகர் பாடியதும் ஏறத்தாழ ஒரே வகையில் இருப்பதைப் போலத் தோன்றும்.. அடிப்படை ஒன்றுதான். பாட்டுடைத் தலைவன் ஆண்டவனே ஆனாலும் பாடல் வரிகளைப் படைப்பதிலும், பொருளிலும், சொற்பிரயோகத்திலும் அதிக வித்தியாஸங்களைக் காணலாம்.
திருப்பாவை: பாவை நீராடல் (அல்லது மார்கழி நீராடல்) என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டு, கண்ணன் பறை ஒன்று தருவதாக வாக்களித்துள்ளான் என்பதற்காக பாவை நோன்பு செய்வதற்கு, விரதமிருந்து அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக் கூட்டிபோய், பிறகு கண்ணன் அரண்மனைக்குச் சென்று அங்கு ஒவ்வொருவரையும் எழுப்பி கடைசியில் கண்ணனையும் எழுப்பி தம்மோடு அழைத்துச்சென்று தம் நோன்பினையும் முடித்து கண்ணனுக்குக் காலாகாலமும் சேவை செய்வதே வரமாக அவனிடம் கேட்டுப் பெறுவதாகும். ஆனால் இங்கே அதிகப்படியாக பாவை நோன்பு என நோற்கப்பட்டு சங்க கால பாவை வழக்கத்திலிருந்து மேலும் விரிவு பெற்றதாக அமைகிறது.
திருவெம்பாவை: காலையில் ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக்கொண்டு இறைவன் லீலாவிநோதங்களைப் பாடிக்கொண்டு, அவன் புகழையும் அம்மையின் புகழையும் பாடிக்கொண்டே நீர் விளையாடுதல். முடிவில் இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது. திருவெம்பாவையில் பாவைப்பாடல்கள் பிற்காலத்து சங்ககால வழக்கத்திலிருந்து மாறுபடவில்லை.
இருவர் பாடிய பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை ஒரு பாடலில் வெளிப்படையாகத் தெரியும் – எல்லே இளங்கிளியே என்னும் திருப்பாவையும் (15), ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ என்ற திருவெம்பாவை (4) பாடலும் ஒரே பொருளைக் குறிக்கும் பாடலாகும். ஆனால் இந்த ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு இரண்டு தொகுதிகளையும் நாம் ஒப்புவமை செய்திடமுடியாது. ஏனெனில் இறைவனைத் தோழமையாய்ப் பார்த்து அவனுக்கே சேவை செய்யவேண்டிக் கேட்பது திருப்பாவையின் முடிவு. திருவெம்பாவை இறைவன், இறைவி, அடியார்கள் பெருமை பேசி முடிவில் அந்த பரம்பொருளின் பாதங்களைப் போற்றுவதில் முடியும்.
திருவாசகத்தில் பாமரமக்களுக்கான பாடல்களில் திருவெம்பாவையும் ஒன்றாகும். அது மட்டுமல்ல. தன்னைக் காதலியாக பாவனை செய்துகொண்டு கன்னியர்கள் ஒருவருக்கொருவர் பாடிக்கொள்ளும் சுண்ணம் கொட்டுவது, அம்மானை பாடுவது, பூ கொய்வது இவைகளெல்லாம் எளிய நாட்டுப்புறப்பாடல்களைப்போல பாமர மக்களுக்காகவே வடிக்கப்பட்டதோ என்ற வகையில் அங்கே பாட்டுடைத்தலைவனாக் இறைவனையும் வைத்துவிட்டு மக்களிடையே தெய்வபக்தியை தம் எளிய தமிழால் பரப்பிய வாதவூரடிகளை என்ன சொல்லிப் புகழ்வது. அவர் எழுதிய திருவாசகத்தின் பொருள் கேட்கும்போது கடைசியில் அதன் பொருளே அந்த தில்லையம்பலத்தான் என்பதாக அவனைச் சுட்டிக் காட்டி அவனுள் மறைந்த அந்த அருட்செயலை எப்படிப் போற்றுவது.
தமிழை இன்னமும் நாம் தாய்க்கு சமானமாகத்தான் பார்க்கிறோம். ஆனால் மாணிக்கவாசகரோ தாயினும் பல மடங்கு இனிய இறைவனுக்கே சமானமாக தம் தமிழை வைத்துப் போற்றி இருக்கிறார்.
பால்நினைத்தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
அடடே, குழந்தைக்குப் பசி நேரம் வந்துவிட்டதோ என்னவோ என்று நினைத்து உருகிப்போய் கருணையோடு பாலூட்டும் அன்னையை விட பலமடங்கு பக்தர்கள் மேல் பரிந்து வரும் இறைவனாகிய நீ எம்மை உருக்கி, உள்ளத்துள் ஒளியைக்கூட்டி, தூய்மையான இனிய ஆனந்தத்தேனையும் அளித்து....இப்படிப்பட்ட என் செல்வமே, சிவபெருமானே நான் உன்னையே தொடர்ந்து ‘சிக்’கெனப் பிடித்துக்கொண்டேன்..
அடுத்தப் பதிவில் முடித்து விடுவோம்.
அன்புடன்
திவாகர்
3 Comments:
கருத்தாழம் மிக்க சுவையான கட்டுரை.
நம்மாழ்வாரின் பனுவல்களிலேயே
திருவாய்மொழிக்கும் திருவாசிரியத்துக்கும்
நடையில் வேறுபாடு உண்டு. காலக்கணிப்பில் செய்யுள் நடையின் அடிப்படையில் முடிவு செய்வது எத்தனை தூரம் நம்பகமானது என்று தெரியவில்லை.
திருப்பெருந்துறை ஊரின் தொன்மையை ஆராய்வதும் மாணிக்க வாசகர் கால
ஆராய்ச்சிக்கு உதவும்
தேவ்
பாதிக்கும் மேல் ஆய்வை நடத்திவிட்டீர்கள். அருமையான கருத்துக்கள் கொண்ட கட்டுரை. திருப்பெருந்துறையும் தொன்மையானதுதானா??? அது குறித்தும் ஆய்வு செய்திருக்கீறீர்களா??
ஐயா, தொடர்ந்து இந்தத் தொடரைப் படித்து வருகிறேன்
Post a Comment
<< Home