தேவன் நாவல்களில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்குமே ஒரு முக்கியத்துவம் கிடைக்கும். சிறிய கதாபாத்திரம் ஒவ்வொன்றிலும் கூட தேவனின் கைவண்ணத்தை ஆங்காங்கே காணலாம். இதோ 'கல்யாணி' புதினத்தில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தைப் பற்றி தேவன் சொல்வதைப் பார்ப்போம்:
-------------------------------------------------------------------------------------
'கும்பகோணத்தில் மடத்தெருவில் இருந்தது டாக்டட் பி.ஜி. கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் 'டிஸ்பென்ஸர்ய்' என்று வைத்துக் கொண்டிருந்தார் டாக்டர். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிக மிக செங்குத்தாக இருக்குமாகையால், அதில் ஏறி பழக்கப்பட்ட பேர் அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது முப்பத்திரண்டு படிகள் என்பது 'நெட்டுருப்' பாடம்.
மாடியில் டாக்டரின் அறைக்கு உள்ளே, டாக்டர் உட்காருவதற்காக ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறைய புஸ்தகங்களாகவே அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோரு இரும்பு நாஃற்காலியும் ஒரு ஒற்றை பெஞ்சும் போட்டிருக்கும். இரும்பு நாற்காலியில் உட்கார உரிமை பெற்றவர் ஒன்று, டாக்டரின் அத்யந்த நண்பராக இருப்பர் அல்லது யாராவது பெரிய உத்யோகஸ்தராக இருப்பார்.
ஒற்றை பெஞ்சு நிறைய வியாதிஸ்தர்கள் கூடி, ஹாலின் பல இடங்களிலும் நின்று, மாடிப்படியிலும் கூட விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் படிக்கு ஒன்றாகப் பதுமைகள் நின்றன போல் சிலர் நிற்கத் தொடங்கிய பிறகுதான் டாக்டர் பி.ஜி.கிருஷ்ணன அதிவேகமாக 'டிஸ்பென்ஸரிக்குள்' பிரவேசிப்பார். டாக்டர் வந்தவுடன் யாரையும் கவனிக்காமலே 'டக் டக்' கென்று தன் அறைக்குள் சென்று விடுவார். காத்திருப்பவர் கண்களெல்லாம் அதன்பின் அறைகதவை நோக்கியிருக்கும். இரும்பு நாற்காலியில் 'விருதா' கால்ட்சேபம் செய்ய வந்திருக்கும் 'லோட்டா ஆசாமியைப் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.
'சுக்காம்பாளையத் தெருவிலே ஒரு கேஸ். மூணு நாளாக 105,106 டிகிரி. என்னிடம் சொல்லல்லை. விடியக் கார்த்தாலை வந்து என்னைக் கூப்பிடறான், கேளுங்க ஸார்! நாம் கை வெச்ச உடனே ஆளு 'க்ளோஸ்' ஆகும் - நமக்கு கெட்ட பேரு! இருந்தாலும் மனசு கேழ்க்கிறதா? போய் ஒரு இஞ்செக்ஷன் பண்ணிவிட்டு ஒடி வருகிறேன். இப்படித்தான் பாருங்கோ.. நம்ம ஆலந்தூர் 'கோண்டு'! உங்களுக்குத் தெரியுமே ஸார்! சினிமாவெல்லாம் 'ஆக்ட்' பண்ணியிருக்கானே; அவனுக்கு ஸீரியஸாயிடுத்து போனமாசம்...வேற ஒருத்தர் ட்ரீட்மெண்ட்.. ரேழிக்கே கொண்டுவந்துட்டா. நான் அந்தப் பக்கம் அகஸ்மாத்தாப் போனேன். அவன் தாயாதி பங்காளிகள் படீர் படீர்னு நெஞ்சிலே அடிச்சுக்கறா! மெல்லக் 'கோண்டு' மார்பிலே கை வெச்சேன்.. ரொம்ப லைட்டா 'பீட்டிங்' -அம்மாமார்களே! இங்கே இவருக்கு அடிச்சுக்கிற மட்டும் நீங்க அங்கே அடிச்சுக்கவேண்டாம்.. சித்தெ பொறுத்துக்குங்கோ!இன்னேன். ஒரு 'கிளிஸரைன்' இனிமாவைக் கொடுத்து உள்ளே கொண்டுபோகச் சொன்னேன். மறுநாளைக்கு மறுநாள் 'கோண்டு' வந்து சாஸ்திரிகள் ஓட்டல்லே ரைஸ்-இட்லி கிடைக்குமா?ன்னு கேழ்க்கிறான்' என்பார்.
எதிரில் உட்கார்ந்திருக்கும் 'லோட்டா' ஆசாமி பரவசமாகிவிடுவார். இப்படி இன்னும் கதைகளை உதறி விசிறி விட்டு டாக்டர் ஆரம்பிப்பார்.
ஒரு சீக்காளி மருந்து வாங்கிகொண்டு வெளியே போனவுடன் இதரர்களுக்கு அவனுடைய கதையை ஹாஸ்யரஸத்துடன் சொல்வார் டாக்டர். மற்றவர்கள் தங்களைப் பற்றியும் இப்படி ஒரு பேச்சு நடக்கும்' என்ற நினைவே இல்லாமல் கேட்டு ஆனந்திப்பார்கள்!
எல்லோரிடமும் என்ன உடம்பு என்று சொல்லிவிடும் சுபாவம் அவருக்கில்லை. 'ஒன்றுமில்லை! பயப்படாதே! நீ தெரிந்து கொண்டு என்ன லாபம்? நான்தானே தெரிந்துகொண்டு மருந்து கொடுக்கவேண்டும் உனக்கு! சாப்பிடு..பார்க்கலாம்..போ' என்பார். அந்த ஆசாமி போன உடனே, 'ஆச்சு, இவன் இந்த சீசா முழுக்கச் சாப்பிட இருக்கமாட்டானே.. காலப்பிங் டி.பி..- நான் என்ன செய்யறது.. ஏன்? யார்தான் என்ன செய்யமுடியும்?" என்பார். அவர் பேச்சில் நிஜகலப்பு இருந்தால் என்ன.. இல்லாவிட்டால் என்ன? சதா தமாஷாக இருக்கும்!
-------------------------------------------------------------------------------------
தேவன் இந்த டாக்டரைப் பற்றி கதையில் முன்கூட்டியே கதாநாயகன் நண்பன் மூலமாக நமக்கு அறிமுகம் செய்கிறார் - எப்படி என்று படியுங்களேன்:
-------------------------------------------------------------------------------------
'பி.ஜி.கிருஷ்ணன் வைத்தியம் என்றால் உனக்கு தெரியாதோ? ஆள் க்ளோஸ்! தம்பி.. பேஷண்ட் ஃபட்..ஆஸாமி ஃபினிஷ்! கிருஷ்ணன் வந்துட்டுப் போனாலே பின்னாலே அழுகுரல்; அதைத் தொடர்ந்து சிவசாம்ப சாஸ்திரிகள் மந்திரம் எல்லாம் கணீரென்று கேட்கும்'
------------------------------------------------------------------------
தேவனின் இன்னொரு புதின கதாபாத்திரத்தின் மூலம் மறுபடியும் சந்திப்போம்.
Labels: தேவன் கதாபாத்திரங்கள்
1 Comments:
மிகவும் ரசித்துப் படித்தேன். கோபுலுவின் கைவண்ணத்துடன் தேவனின் கதைகளைப் படிப்பது சுகமான அநுபவம்.
மிக்க நன்றி
தேவ்
Post a Comment
<< Home