கல்யாணமாம் கல்யாணம் - ஒரியநாட்டுக் கல்யாணம்
கல்யாண விழாக்கள் என்றாலே இந்தியாவில் ஒரு குதூகலம் வந்துவிடும்தான். தமிழ்நாட்டில் ஒரு கால கட்டத்தில் மூன்று நாட்களாக கொண்டாடப்படும் இந்த விழாக்கள் இப்போதெல்லாம் ஒரு வேளைப்பொழுது என்றாகிவிட்டது. வசதி உள்ளவர்கள் கூட கல்யாணத்தை இரு பிரிவாக இப்போது பிரித்துவிடுகிறார்கள். ஒன்று வழக்கமாக தாலி கட்டும்போது நடக்கும் திருவிழா.. இது காலை மதிய உணவுகளோடு முடிக்கப்பட்டுவிடும். இன்னொன்று ரிசப்ஷன் எனப்படும் வரவேற்பு விழா, இது அவரவர்களுக்கு வசதிப்பட்ட நாளில் இரவுநேர விழாவாக வைத்துவிடுகிறார்கள். இவை எல்லோருக்குமே பொதுவானவை என்ற பட்சத்தில் இது பற்றி மேலும் எழுத வார்த்தை இல்லைதான். ஆனால் நான் சமீபத்தில் கலந்துகொண்ட இந்த ஒரியநாட்டுக் கல்யாண விழா ஒரு வித்தியாசமாகவே உணரப்படும் என்றுதான் நினைக்கிறேன்.
சுமார் நான்கு கிலோமீட்டர் வரை நடைப்பயணமாக ஊர்வலம். ஊர்வலத்தில் பலதரப்பட்ட மேளவகைகள், திரை இசைப் பாடல் குழுவினர் ஒருபுறம், கிராமத்து நடனக் கலைஞர்களின் மண்வாசனைப் பாடல்கள் ஒருபுறம், நடுவில் மிக அட்டகாசமாக அலங்கரிக்கப்பட்ட ஒரே ஒரு கார்.. அந்தக் காரில் மணமகன், அவருக்குத் துணையாக ஒரு சிறுவன்.. அந்த மணமகன் வாகனத்துக்கு முன்னேயும் பின்னேயும் ஏராளமான மக்கள்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இளம்பெண்கள், இளைஞர்கள் அனைத்துத் தரப்பட்ட வர்க்கத்தினரும் சமமாக பாவித்து ஆடிப் பாடி வயது வித்தியாஸமில்லாமல் குதித்துக் கொண்டாடினர்..
இதனை 'பாராக்' என்று அழைக்கின்றனர். ஒரிய நாட்டு ஜான்வாசம் (மாப்பிள்ளை அழைப்பு. கட்டாக் நகரத்தில் காலை ஒருமுறையும் கல்யாணம் செய்யப்போகும் பூரி நகரத்தில் மாலை ஒரு முறையும் இந்த பாராக் விழாவை நடத்தி இரண்டு ஊர்களையும் ஒரு கலக்கு கலக்கி விட்டனர் மகிமானந்தா மிஸ்ரா குடும்பத்தினர். ஒரிஸ்ஸாவில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான மிஸ்ராவின் இரண்டாவது மகனுக்குத்தான் கல்யாணம். ஏறத்தாழ நான்கு மணிநேரமே கட்டாக் நகர மக்கள் அந்தக் காலை வேளையில் எந்த இடைஞ்சலுமே இல்லையே என்ற அளவில் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மிகப் பெரிய அளவில் அத்தனை பெரிய ஊர்வலத்தை நகரத்தில் யாருமே கண்டதில்லை என்று நகரத்தார் சிலர் சொன்னபோதுதான் மகிமானந்தா மிஸ்ராவின் மகிமை எனக்குத் தெரிந்தது
முதல் கட்டமாக கட்டாக்கில் முடிந்தவுடன் அனைவரும் கார்களில் பூரி பயணப்பட்டோம். ஏறத்தாழ 1500 கார் அல்லது வாகனங்கள். 65 கி.மீ தூரம்தான் என்றாலும் நடுவில் அத்தனை பேருக்கும் மதிய உணவு - வாழைத் தோட்டங்களில் மிக அமரிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர்த்தி. பூரி சேர்ந்தவுடன் மறுபடியும் ஒரு மூன்று கிலோமீட்டர் 'பாராக்'. மறுபடியும் நடை.. (நான் கொஞ்சம் சோர்ந்துபோனது வாஸ்தவம்தான்).
ஆனால் இந்த 'பாராக்' மனதுக்கு இனித்தது. எல்லோருமே பாரபட்சமின்றி நடந்துவந்ததும், மிஸ்ராவின் 'கார்பொரேட்' கல்சர் ஆஃபீஸர்கள் அனைவரும் நடுச் சாலையில் பேதமின்றி மேளத்துக்குத் தகுந்தவாறு நடனமாடியதையும் கண்டு ரசிக்கமுடிந்தது. கல்லூரியில் படிக்கும் அல்லது படித்த இளம்பெண்கள் கூட நடுச் சாலையில் நடனமாடியது சற்று வித்தியாஸமாக இருந்தது. ஏன், கடைசியில் ஒரிய கிராமீய இசைக்குழுவினர் தங்கள் தாரை தப்பட்டையோடு எந்த வித்தியாஸமும் பாராமல் மிஸ்ராவையும் வட்டத்துக்குள் இழுத்து அந்த நட்ட நடுச் சாலையில் நடனமாட வைத்துவிட்டனர். ஒரே ஒரு குறை - படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் அதுவும் ஒரியா இளைஞர்கள் அனைவருமே 'பான்பராக்' மென்றுகொண்டும் துப்பிக் கொண்டும் இருந்ததுதான் ('பாராக்'கில் ஏராளமான பான் பராக்). அப்படித்தான் அங்கே பார்த்தேன்.
கட்டாக்கில் காலை நான்கு மணிநேரம், பூரியில் மாலையில் மூன்று மணிநேரம், நடையாய் நடை நடந்து நன்றாகவே இந்த ஒரியநாட்டுக் கல்யாணத்தை அனுபவித்தேன் போங்கள்!
இத்தனைக்கும் கல்யாணம் என்னவோ ஒரு அரை மணிநேரத்தில் சடசடவென ஒரிய பண்டிட்டுகள் முடித்துவிட்டனர். சடங்குகளும் அதிகம் இல்லை. ரொம்ப சிம்பிள் என்றே சொல்லிவிடலாம்தான். கல்யாணம் நடந்த நீலாஞ்சல் ஓட்டல் மிகப் பெரியது். ஆனால் வந்த கூட்டத்தை சமாளிக்கமுடியாமல் ஓட்டல்காரர்கள் திணறியது கூட என்னவோ வாஸ்தவம்தான்.
சந்தடிசாக்கில் பூரியில் ஜகன்னாதரையும் (நடுவில் புகுந்த பாண்டாக்களையும் மீறித்தான் - இவர்களைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையே பதிவுசெய்யலாம்), புவனேஸ்வரத்தில் லிங்கராஜாவையும் தரிசித்துவிட்டேன்.
இதே அனுபவம் எனக்கு ஒரிஸ்ஸாவில் இரண்டாவது முறை. இரண்டு முறையும் மிஸ்ரா வீட்டுத் திருமண விழாதான். ஒரியர்களின் கொண்டாட்டமே தனிதான்.
திவாகர்
Labels: ஒரிய நாட்டுக் கல்யாணம்
0 Comments:
Post a Comment
<< Home