Monday, April 28, 2008

டாக்டர் நா. கண்ணன் அவர்கள் திருமலைத் திருடன் நாவல் பற்றிய கேள்விகளுக்கு அடியேன் எழுதிய பதில்

கண்ணன்,

உங்களுக்கும், உங்கள் பாராட்டுதல்களுக்கும், மனம் திறந்த ஆழ்ந்த விமர்சனத்திற்கும் என் மனமார்ந்த நன்றி. திறந்த வெள்ளை உள்ளம் கொண்டவர் நீங்கள். இந்த ஒரு காரணத்தினாலேயே எனக்கு உங்களை மிகவும் பிடித்துப் போயிற்று.

திருமலைத் திருடன் எழுதிய கைகள் திவாகருடையது என்றாலும் எழுத்துவித்தவன் அவன்தான்.

இந் நாவலுக்கு முதலில் 'அவன் - அவன்தான்' என்று பெயர் வைத்திருந்தேன். பதிப்பகத்தார் - 'சார்..சரித்திர நாவல், இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பெயர் நினைவில் இருக்கும்படி வையுங்கள்' - என்று கேட்டுக் கொண்டதால் ' திருமலைத் திருடன்' என்று மாற்றி வைத்தேன்.

திருவேங்கடத்தான் யார் என்பதுதானே கதை? மற்றவர்களைப் போல எழுதிய எனக்கும் இந்தக்கேள்வி முதலில் எழுந்தது. வைணவ மற்றும் சைவ நோக்கில் சற்றுக் கூர்ந்து பார்க்கையில் குழப்பம் வரத்தான் வந்தது. ஆனால் சற்று நகர்ந்து போய் அவனை 'திருவேங்கடவனாக'ப் பார்த்தேன். குழப்பம் விலகிவிட்டது. தெளிவும் பிறந்தது. அவன் அவன்தான்' என்று அந்தக் கடைசி வரிகள் அந்தத் தெளிவில் பிறந்ததுதான்.

நான் சைவன் என்கிற பார்வையில் இந்த நாவலை எழுதியதாக உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. என்னுடைய சமீபத்து நாவல் விசித்திரசித்தன் அப்பட்டமான சைவம் என்ற நோக்கில் எழுதியுள்ளேன். ஆனால் சைவத்தில் தீவிர சைவத்தை எதிர்ப்பதாக தி.தி.யில் எழுதியுள்ளேன். காபாலிகம் ஏறத்தாழ இந்த நாகரீக உலகில் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று எனக் கூட குறிப்பு கொடுத்துள்ளேன். நமக்கெல்லாம் 'அன்பே சைவம்'தான்.

உங்களுக்கு ஒரு சில விஷயங்கள் சொல்கிறேன். நான் திருமங்கை மன்னனின் மண்ணைச் சேர்ந்தவன். ஆண்டாளின் தமிழில் அடியோடு சரணடந்தவன்.. முதலாழ்வார்களின் முத்தான பாட்டுகளில் மனதைப் பறிகொடுத்தவன்..தென்குருகூர் சடகோபன் அடியேனை தன்வயப் படுத்திக் கொண்டவர்.. என்னுடைய தினப்படி பூசையில் திருவாய்மொழிக்குப் பெரும் பங்கு உண்டு. 'சிற்றஞ்சிறு காலே' யுடன் பல்லாண்டு படிக்காமல் என் பூசை நிறைவு பெறாது. இந்தத் தகுதிகளெல்லாம் என் தனிப்பட்ட முறையில் மட்டுமே என்னை உயர்த்தும். என் தனிப்பட்ட சொத்தும் கூட. ஆனால் இதை வைத்து என்னை 'வைணவன்' என்று ஊர் அழைக்கும் என்று எதிர்பார்க்கலாமோ? அட, உடையவர்தான் தன் கடைசி அறிவுரையாக 'வாழ்க்கையில் ஒருமுறையாவது ஒரு வைணவனின் தரிசனம் பெற்றவனும் கூட வைணவன்தான்' என்று சொன்னாரே என யாராவது நடுநிலையாளர் சொல்லிவிடப்போகிறீர்கள்..இப்போதெல்லாம் வைணவனாக வேண்டுமென்றால் 'பிறப்பு' மட்டுமே குவாலிஃபிகேஷன்.

சரி, இந்தப் பிரச்னையை விட்டு விடுவோம். கதைக்கு வருவோம்.

அது என்ன? தமிழர்களுக்கிடையே சைவ-வைணவ பேதம் இருந்ததே இல்லையா..பழியை சாளுக்கிய குரு மேல் சாமர்த்தியமாகப் போட்டு தப்பிவிட்டாரே ஆசிரியர்.. சோழ மன்னர்கள்தான் சைவர்களாயிற்றே.. அவர்கள் மேல் ஏன் ஆழமாக குற்றம் சாட்டப்படவில்லை.. எழுத்தாளர் இன்னமும் ஆழ ஆராய்ந்திருக்கவேண்டாமா,, ராமானுஜரைப் பற்றி அறிய ஸ்ரீரங்கம் போய் மேலும் தீவிரமாக ஆராய்ந்து ராமாநுச நூற்றந்தாதி, மற்றும் ஆச்சாரியர்களின் நூல்கள் இவற்றைப் படித்திருக்கவேண்டாமா...

இந்தக் கேள்விக்குப் பதில் என்னுடைய புத்தக முன்னுரையும் திரு சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் அணிந்துரையும் இன்னொரு முறை படிக்கவேண்டியதுதான்.

நீங்கள் சொல்வது போல, பதினோராம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் திருவேங்கடத்துக்கு ஒரு வெளி இடத்து ஆளுமை ஏற்பட்டது. உடையவர் தான் திருமலை சீர்திருத்த சேவையை ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கியவர். ஆனால் அதற்கு முன்பாகவே 9ஆம் நூற்றாண்டிலிருந்து சாலவை (தற்போதைய தி.தி.தேவஸ்தானம் போல) சபை கோயிலில் சகல கைங்கரியங்களையும், வைகானச முறையில் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக 'திருப்பதி' சரித்திரம் எழுதிய டி.கே.வி.சாரி, மற்றும் பல புத்தகங்கள் (வடவேங்கடமும் திருவேங்கடமும், திருவேங்கடவன் மாலை போன்றவை) நமக்குத் தெரிவிக்கின்றன.

திருமலைத் திருடனில் நான் எழுதிய சங்கு சக்கரம் மாயை, உடையவர் அங்கு வருகை, திருமலையை 'வைணவர்களின் ரட்சை' என உறுதிப் படுத்தியது, காஞ்சி சபையில் ஏற்பட்ட சைவ-வைணவ பேதம், தில்லையில் துவங்கிய எரிச்சல், மாருதி ஆண்டானுக்கும் சோழர்க்கும் உள்ள நல்லுறவு அனைத்துக்கும் ஆதாரமாக நான் எடுத்துக் கொண்டது ஸ்ரீரங்கம் கோயில் பாதுகாப்பில் உள்ள 'கோயில் ஒழுகு' என்ற சரித்திரப் பெட்டகம். ஸ்ரீவைஷ்ணவர்களால் காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் 'கோயில்' சரித்திரக் களஞ்சியம். அடுத்து நாலூரான் கட்சி மாறுதல் இது கூட 'ஆச்சாரிய வைபவ மஞ்சரி..' போன்றவற்றில் உள்ள செய்திகளின் ஆதாரத்தின் பேரில்தான் இம்மியளவும் மாற்றாமல் எழுதப்பட்டுள்ளது.

அடுத்து - சோழர்கள் சைவர்களா? - சைவர்கள் எனில் அவர்கள் வைணவர்களின் எதிரிகளா என்றெல்லாம் ஆராய்வது மூடத்தனம் என்று சரித்திர ஆய்வாளர்களே சொல்வார்கள். தமிழகத்தை முழுவதும் (கி.பி.960 இலிருந்து 1260 வரை - ராஜராஜசோழன்/குலோத்துங்கன் வம்சம்) ஆண்ட சோழ அரசர்கள் அனைவருக்கும் குலதெய்வம் காளி, விஷ்ணுவும், சிவனும் இரு கண்கள். அத்தனை சோழ அரசர்களும் விஷ்ணுவின் திருநாமத்தை தங்கள் பெயருக்கு முன்வைத்துக் கொண்டதை அவர்களின் மெய்க்கீர்த்திகளே சாட்சி சொல்லும். சோழமன்னர்களின் முக்கிய அமைச்சர்கள் பலர் ஸ்ரீவைஷ்ணவர்கள். உடையவர் ராமானுஜர் இருந்த 120 ஆண்டு காலக்கட்டத்திலும் ஆண்டுக்கு ஒரு கல்வெட்டாவது ஸ்ரீரங்கத்தின் பெயரில் வெட்டப்பட்டிருக்கும்.

இந்த அரசர்களின் காலத்தில்தான் தஞ்சை மாவட்டத்தில் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் கோயில்கள் எழுப்பப்பட்டதாகவோ, அல்லது பழைய கோவில்கள் சீரமைக்கப்பட்டதாகவோ கல்வெட்டுகள் அல்லது கோயில் சுவர்களிலோ எழுதப்பட்டிருக்கும். ஏன்.. ஜைன புத்த மதங்களையும் இவர்கள் வெறுக்கவில்லை. வைணவ குருபரம்பரையில் வந்த யாமுனாச்சாரியார் என்ற ஆளவந்தார் சுவாமிகள் தன் குழந்தைப் பருவத்தில் சோழராஜ்ஜியத்தின் பாதிப் பகுதியையே தன் வாதத்தின் பெருமையால் வென்றதாக வரும். ராஜராஜசோழன் புத்தவிஹாரம் கட்டினான் என்றால் அவன் மகள் குந்தவி, திருமலைப் பகுதியில் ஒரு ஜைன மடம் கட்டிக் கொடுத்ததாக கல்வெட்டுகள் உண்டு. ராமானுஜரின் 'பீக் பீரியட்' எனச் சொல்லப்படும் காலக் கட்டத்தில் வீரரரஜேந்திரசோழனின் நண்பர், பெயர் புத்த மித்திரர், பெளத்தர், அந்த ராஜா மீது 'வீரசோழியம்' எனும் பாடல் தொகுப்பு புகழ்ந்து பாடினார். இவருக்குப் பின் வந்த குலோத்துங்கன் தன்னுடைய இரண்டாவது குலதெய்வமாக நரசிம்மரைப் போற்றி வணங்கியதாக கல்வெட்டுகள் உண்டு. இவன் தளபதியும் முதன் மந்திரியுமான கருணாகரத் தொண்டைமான் ஒரு பரம வைணவர். இவர் எங்கள் சிம்மாசலக் கோயிலுக்கு பல்வேறு காணிக்கைகளை செலுத்தியதற்காக கல்வெட்டுக்கள் உண்டு. கலிங்கத்துப் பரணியில் குலோத்துங்கனை விஷ்ணுவுடன் ஒப்பிட்டு மகிழ்கிறார் ஜயம்கொண்டார்.

வேறு வழி இல்லாமல் சோழர் கால ஆட்சியை ஆழ்ந்து படிக்க வேண்டிய நிலையில் உள்ள நான், பல்வேறு புத்தகங்களையும், கல்வெட்டு - மெய்கீர்த்தி மற்று கோயில் குறிப்புகள் எனப் பார்த்ததினால் மிக உறுதியாக மார்பு நிமிர்த்தி பெருமையாகக் கூட சொல்லமுடியும் - நம்மை ஆண்ட அந்த சோழ மன்னர்கள் சமதர்மவாதிகள் என்று.

மன்னன் எப்படியோ - மக்களும் அப்படித்தானே, என்ற ஆன்றோர் வாக்கின் விதிப்படி பார்க்கையில் சாதாரண மக்களும் அது விஷ்ணு கோயிலாக இருந்தாலும் சரி, சிவன் கோயிலாக இருந்தாலும் சரி.. பயபக்தியுடனும் மரியாதை மிகக் கொண்டும்தானே இருந்திருக்கவேண்டும். அப்படியானால் இந்த சமயபேதங்கள் யாரால் கிளப்பமுடியும்? சரித்திரத்தைக் கூர்ந்து கவனிப்பவர் யாருமே எளிதாக சொல்லிவிடுவார்கள் - சமய பேதங்களைப் புகுத்தி மக்களிடையேயும் அரசுகளிடையேயும் பேதத்தை உண்டுபண்ணுவதில் எதிரிநாட்டினருக்கு அதிகம் பங்கு உண்டு என்று.

திருமலைத் திருடனில் வரும் இந்த பில்வணன் யார்? சோழர்களின் பரம எதிரியான மேற்கு சாளுக்கியர்களின் குரு. இவர் சமுஸ்கிருதத்தில் 'விக்கிரமங்க சரிதம்'' எனும் சிருங்கார ரஸ காவியத்தில் ஆங்காங்கே சாளுக்கிய விக்கிலனைப் பற்றியும், சோழர்களின் தீமைகளைப் பற்றி அள்ளித் தெளித்திருக்கிறார். இந்த வடமொழிக் காவியத்தின் நகல் தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ளது. மூலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு சமணமடத்தில் உள்ளது. இந்த நூல் ஒரு சிற்றின்ப காவியம். சாளுக்கிய அரசனுக்கு வெண்சாமரம் வீசும் ஒரு மங்கையைக் காதலித்த கதை இது. இந்த நூல் அதுவும் சிருங்கார ரஸ நூல், சமணமடத்தில் தொளாயிரம் ஆண்டுகளாக ஏன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு, எல்லாச் சமணர்களின் நூல்களும் அங்கு அழிவிலிருந்து மிகப் பழங்காலந்தொட்டு பாதுகாத்து வருவதாக செய்தி கிடைத்தது.

மேலும் ஆராய்ந்து பார்த்ததில் பில்வணா ஒரு நாத்திகவாதி என்றும் தகவல் கிடைத்தது. அந்தக் காலக் கட்டத்தில் சோழ எதிரிகளின் குருவாக இருந்த பில்வணா ஒரு எதிரி என்னென்ன செய்வானோ அதைத்தான் சோழநாட்டுக்கு செய்ததாக எழுதியுள்ளேன்.

பில்வணாவின் காலகட்டம் மிகவும் சுவாரசியமானது. சோழநாட்டில் ராஜேந்திர சோழனும், அவர் மூன்று மகன்களும் ஒருவர் பின் ஒருவராக தங்களுக்குள் சண்டை சச்சரவில்லாமல். மிக மிகச் சீரிய முறையில் ஆண்ட காலத்தில் எதிரி நாடான மேலை சாளுக்கியமோ தந்தை - பெரியமகன் - சிறியமகன் சண்டையில் தத்தளித்தது. சிறியமகனான விக்கிலனை முன்னிறுத்தி சோழருடன் திருமணசம்பந்தம் மூலம் பில்வணா எனும் நரி நல்லதோர் வீட்டுக்குள் நுழைந்ததற்கு சரித்திர ஆதாரங்கள் உண்டு. அரசியல் - பகையையும், உறவையும் தடம் மாற்றிப் போட்டுவிட்ட காலம்.

இந்தக் காலகட்டத்தில் சோழநாட்டில் (தொண்டை மண்டலத்தில்) அவதரித்த உடையவர் இவர்களின் அரசியலுக்குத் துணை போகாமல்தானே மேற்கு நாட்டிற்குச் சென்றார்? கர்நாடகத்திலும் குறிப்பாக மேலைக் கர்நாடகத்திலும், மத்திய ஆந்திராவிலும் உள்ள சைவர்கள், தமிழையும் தமிழரையும் ஆதரிக்காத வீர சைவர்கள் தங்கள் நாட்டு பில்வணனுக்குத் துணை சென்றார்கள் என்பது சரித்திரத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இன்றும் கூட வீர சைவர்கள் இந்தப் பகுதியில் மிகுதி. இன்றும் கூட இவர்களின் வாக்கு வங்கிகள்தான் கர்நாடக அரசியலையே நிர்ணயிக்கின்றன.

ஒரு காலத்தில் நாம் விரும்பும் தெய்வங்களை நம்முடைய தனிப்பட்ட முறையில் வணங்கிக் கொண்டு நன்றாக இருந்த நாம் எவ்வாறு மாலிக்காபூர் போன்றவர்களால் சீரழிக்கப்பட்டோம் என்பதை வரலாறு சொல்லும். நமக்கு நாமே சண்டையிட்டுக் கொண்டும், ஈகோவினால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும்தான் நாம் நம் பெருமையை இன்று இழந்து நிற்கிறோம். (ஒரு பாண்டியமன்னன் தனக்கு ஆட்சி கிடைக்கவில்லையே என்ற கோபத்தினால் டில்லி சுல்தான் கில்ஜி அரண்மனையில் நான்கு ஆண்டுகள் காத்திருந்து மாலிக்காபூரை அழைத்து வந்ததை சரித்திரம் சொல்கிறது)

நமக்குள் மதவிகல்பங்கள் வந்தது - யார் பரம்பொருள் என்பதினால் அல்ல..(நம்மாழ்வாரை அருமையாக உதாரணம் காட்டியுள்ளீர்கள்) நம் அறியாமையால். இது தொடரக்கூடாது என்பதன் நோக்கத்தில்தான் ராமருக்கு அணில் செய்வதைப் போல படைக்கப்பட்டது திருமலைத் திருடன் மற்றும் விசித்திரசித்தன்.

பரம்பொருள் சிவனா - திருமாலா (அந்தக் கால கட்டத்தில்)என்பதில் நமக்குத் தானே தவிர தெய்வங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நாம் நம் ஒரே நோக்குச் சிந்தனையின் தாக்கத்திலிருந்து சற்றே நகர்ந்து சிந்தித்துப் பார்த்தால் நமக்கே சில விஷயங்கள் புரிபட ஆரம்பிக்கும். அதனால்தான் குறிப்பிட்ட நம்மாழ்வார் பாடலுடன் திருமலைத் திருடன் கதையையும் முடித்துள்ளேன்.

முடிவு உண்மையில் நடந்ததுவா எனக் கேட்டுள்ளீர்கள். சில சரித்திர ஆதாரங்களின் மீதும் ஆச்சாரிய வைபவ மஞ்சரியில் உள்ள சில குறிப்புகளோடு, ஆந்திர மாநிலத்தில் அச்சமயம் ஏற்கனவே ஏற்பட்டிருந்த சில நிகழ்ச்சிகளைக் கொண்டும்தான் உடையவர் இந்த முடிவை எடுப்பதாக எழுதியுள்ளேன். ராமானுஜரைப் படித்தவர்களுக்குத் தெரியும். அவர் வாழும்போது கண்ட, நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நம்மாழ்வாரின் ஏதாவது ஒரு பாடலுக்கு ஒப்பிட்டுப் பேசுவதாக எத்தனையோ செய்திகள் உள்ளன. உங்களைப் போன்றவர் இதே கேள்வியைக் கேட்டபோது அதற்கான பதிலை இங்கு பதிவு செய்துள்ளேன். (பல விவரங்கள் உள்ளன)

http://vamsadhara.blogspot.com/2005_12_01_archive.html

இந்த முடிவு தவத்திரு ஸ்ரீபெரும்பூதூர் ஜீயர் சுவாமி முதல், நியூயார்க் சடகோபன் (ஆசிரியர் - ஸ்ரீவைஷ்ணவம், தலைவர் - வைணவக் குழுமங்கள் சில), மற்றும் திருமலைக்கோவில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி காலஞ்சென்ற மாடப்பாக்கம் சுவாமி வரை வரவேற்கப்பட்டுள்ளது என்பதிலும், சென்றமுறை திருமலை சென்றபோது இப் புத்தகம் திருவேங்கடவனுக்கும் சேரவேண்டுமே என்று முயன்றபோது அங்கிருந்த பெரிய பட்டாச்சாரியார் கேசவாச்சாரியார் பக்கத்திலேயே உள்ள உடையவர் சந்நிதியில் வைத்து ஆசீர்வாதம் செய்து எடுத்துக் கொண்டபோதும் ஒரு மாபெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

'சமய பேதங்கள் நமக்குள் வெகு சீக்கிரம் மறைந்துவிடும்.'

நன்றி
திவாகர்

Labels:

0 Comments:

Post a Comment

<< Home