தெலுங்கு - சுந்தர பாஷையை பாழாக்கலாமா?:
தெலுங்கு - இந்தப் பெயர் ஏன் வந்தது.....? திரிலிங்கம் (மூன்று லிங்கங்கள்) உள்ள வட ஆந்திர ஸ்ரீகாகுளம் அருகே உள்ள ஸ்ரீமுகலிங்கம், மத்திய ஆந்திரம் கோதாவரிக் கரை அருகே உள்ள பீமேஸ்வரலிங்கம், தென் ஆந்திர கிருஷ்ணை நதி அருகே உள்ள மல்லிகார்ஜுனலிங்கம், இந்த மூன்று பகுதி வாழ் மக்கள் பழங்காலத்தில் பேசும் பாஷைதான் திரிலிங்கம் எனப் பேசப்பட்டு அது காலத்தால் மருவி தெலுங்கு என அழைக்கப்படுவதாக ஆந்திரதேசத்து அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர்.. ஆந்திராவில் இந்த தெலுங்கு மேலும் தேய்ந்து தெலுகு (உபயம்:இங்கிலீஷ்காரர்கள்) என்றே இலக்கணப்(?) பெயரிட்டு ஆந்திர அரசாங்கத்தால் அழைக்கப்படுகிறது. இங்கே (ஆந்திராவில்) மக்களுக்கு உங்கள் பாஷையின் பெயர் தெலுங்கு என்றால் முறைப்பார்கள். 'தெலுகு என்று சரியாக உச்சரிக்கப் பழகு' என்று உபதேசமும் செய்வார்கள்.
தெலுங்கு மொழி ஒரு கால கட்டத்தில் தமிழகத்தின் மத்திய-மேற்குப் பகுதிகள், தஞ்சைப் பகுதி, ஆந்திரம், மற்றும் கர்நாடகத்தின் கிழக்குப் பகுதி முழுவதும் ஆட்சி மொழியாக இருநூறு ஆண்டுகாலம் (கி.பி.1450-1650) செங்கோல் ஓச்சி செழிப்பாக இருந்தது. (கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி நம்மை ஆண்ட நாயக்க மன்னர்கள் அனைவரும் தெலுங்கு மன்னர்களே) குறிப்பாக நம் சோழ மண்ணான தஞ்சை மற்றும் பாண்டிய மதுரையிலும் தெலுங்குப் புலவர்களுக்குத்தான் முதலிடம்.. (தியாகய்யாவின் கீர்த்தனைகள் பிறந்த இடமே திருவையாறுதானே)ஆனால் தெலுங்கு இப்போது ஆந்திரத்தில் மட்டுமே பெயருக்கு ஆட்சி மொழி.
முதன்முதலில் விஜயவாடாவில் (1977 மே-11) நான் கால் வைத்துபோது நமக்கு தெலுகு 'ராது'தான். 'ஏமி..எக்கட..எந்துகு...' என்ற மூன்று சொற்களை வைத்தே சில காலத்தை ஓட்டியவன். ஆனால் தெலுங்கு சினிமாக்களை நிறைய பார்க்க ஆரம்பித்ததில் நமக்கு பாஷை அதிகம் பரிச்சயமானது. பிடித்தும் போனது. அத்தோடு விஜயவாடாவே ஒரு சினிமா பைத்திய ஊர். தெலுங்கு சினிமா போஸ்டர்கள் மூலம் தெலுங்கு படிக்கக் கற்றுக் கொண்டு பிறகு சற்று எழுதவும் கற்றுக் கொண்டவன். (இப்போதெல்லாம் சினிமா போஸ்டர்களுக்கு எல்லா ஊர்களிலும் தடை உள்ளதால் தெலுங்கு கல்வி கற்கும் ஒரு சிறிய வாய்ப்பும் பறிபோய்விட்டது) உண்மையைச் சொல்லப்போனால் இந்த தெலுங்குப் பெருமக்களுக்கு தங்கள் பாஷையின் பெருமை கொஞ்சமும் புரியவில்லை.. அதைப் போற்றி வளர்க்கவும் தெரியவில்லை.
இவர்களுக்கேற்ப அரசாங்கமும் தங்கள் தாய்மொழியைப் பராமரிப்பதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் ஏன்ன ஆகும்...?
தெலுங்கு வெறும் வாய்மொழியாகவே இருக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்துப்பள்ளிகளில் கூட ஆங்கிலம் வேண்டும் என்று அரசாங்கமும் மக்களும் ஒருசேர இணைந்து தெலுங்கு மொழிக் கல்வியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர். பெயரில் தெலுங்கை வைத்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியோ, ஆளும் கட்சியோ அல்லது அடுத்து வருவதாக சொல்லப்படுகின்ற சினிமா நடிகர் கட்சியோ(?) தெலுங்கு மொழி வளர்ச்சியில் சற்றும் அக்கறை காட்டாமல் இருப்பது பரிதாபமான விஷயம்தான்.
தமிழ்நாடு சட்டசபையில் ஒரு தெலுங்கு எம்.எல்.ஏ சமீபத்தில் அழுதாராம். செய்தி பத்திரிகையில் வந்தது. ஆந்திர-தமிழக எல்லைப் பகுதியில் அமைந்த தன் தமிழ்நாட்டுத் தொகுதியில் தெலுங்கு மொழி பாடதிட்டமாக வைக்கும்படி கெஞ்சினாராம்.தமிழ்நாடு அரசாங்கம் அந்த எம்.எல்.ஏ கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.
இதோ அவர்கள் சொந்த மண்ணில், ஆந்திராவில் இருக்கும் அரசாங்கப் பள்ளிகளில் ஏற்கனவே இருக்கும் தெலுங்கு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருப்பது தமிழக தெலுங்கு எம்.எல்.ஏ வுக்கு தெரியுமோ தெரியாதோ.
ஆனால் தாய்மொழியை அழியவிடக்கூடாது. அது தெலுங்கானாலும் சரி மலையாளம் ஆனாலும் சரி... ஆனால் என் கண்ணெதிரியே "சுந்தரத் தெலுங்கு" என நம் பாரதியால் சிறப்பிக்கப்பட்ட மொழி அழிந்து போகிறதே...
இந்த லட்சணத்தில் தெலுங்கு மொழிக்கு "செம்மொழி" அந்தஸ்து வேண்டும் என சிலர் இங்கு பேசிவருகிறார்கள். அப்படிக் கேட்பதில் தவறில்லைதான்.
ஆனால் இருக்கும் மொழியைக் காப்பாற்ற இவர்கள் முன்வர வேண்டும்..தெலுங்கில் பல நல்ல நூல்களை இயற்ற வேண்டும்..வெளி மொழிகளிலிருந்து பல நூல்களை மொழி பெயர்க்க வேண்டும். அன்னமய்யா, ராமதாஸர் போன்ற தெய்வீகப் புலவர்கள் பாடியதான சுத்தமான தெலுங்குப் பாடல்களை பிரபலப்படுத்த வேண்டும். பள்ளியில் தெலுங்கு வழிக் கல்வியை பலப்படுத்த வேண்டும்.. எந்த மொழியும் கலக்காத வகையில் தெலுங்கை பேச வைக்க வேண்டும். மக்கள் புழக்கங்களில் உள்ள பொருள்களுக்கு (காய்கறிகள், உணவுப்பண்டங்கள், நாற்காலிகள், ஊர்திகள், ஓட்டுனர், நடத்துனர் இன்னும் எத்தனையோ..) சுத்தமான தெலுங்கு மொழியில் பெயர்களை வைத்து அதனைப் பொதுமக்கள் சர்வசாதாரணமாகப் பேசும் வகையில் பிரபலப் படுத்தவேண்டும். கணினி வழி மூலம் தெலுங்கு கற்றுக் கொடுக்க வசதி செய்யவேண்டும். புதிதாக வரும் பொருட்கள் (கணினி, தொலைபேசி, தொலைக்காட்சி, கைபேசி போன்றவைகள்) எழுதப் படும்போது தெலுங்கு மொழியில்தான் இருக்கவேண்டும்.
முதலில் குழந்தைகளை தெலுங்கில் நாலு வார்த்தை சுத்தமாகப் பேச வைக்க முயலவேண்டும்...அப்போதுதான் தெலுங்கு வளரும். மொழி செம்மையாக வளர்க்கப்பட்டு அதற்கு உரிமை கோரி (அல்லது போராடி) செம்மொழி அந்தஸ்து பெற்றால் ஏன் கொடுக்கமாட்டார்களாம்..
அது சரி, இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுவதால் என்ன பயன்..என யாராவது கேட்கலாம். காரணங்கள் இரண்டு. ஒன்று, நம் தமிழகத்தில், சென்னை மாநகரத்தில் நிறைய அளவில் தெலுங்கு பேசுவோர் உண்டு. இவர்களும் யோசித்து மொழிக்கு நல்ல சேவையைச் செய்யலாம். (என்னால் முடிந்தவரை இங்குள்ள இலக்கியக் கூட்டங்களில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் 'ஊதற சங்கை ஊதி விடுவதுண்டு.
இரண்டாவது காரணம் - மிக முக்கியமான காரணம், தவறியும் இந்த நிலை தமிழகத்தில் தொற்றிக்கொள்ள விடக்கூடாது. தமிழ் செம்மொழி, மிகச்சிறந்த மொழி, காலாகாலத்துக்கும் இருக்கவேண்டிய மொழி.. அப்படிப்பட்ட மொழி, ராட்சஸ வேகத்தில் பெருகும் மேலை நாகரீக வெள்ளத்தில் அடித்துப் போக விடக்கூடாது..
திவாகர்
5 Comments:
திவாகர் சார் உங்களுக்குத் தெலுகு மஞ்சி தெலுசுன்னாவா? அப்படியென்றால் நீங்கள் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்யலாம். தெலுகு காவியம் ஒன்றை எடுத்துக்கொண்டு மொழிபெயர்க்கத் தொடங்குங்கள். முன்கூட்டியே நன்றியைத் தெரிவித்துவிடுகிறேன்.
ரங்கன், இது அநியாயம்.
சாக்கிரதையாக விளையாடு என்று ஆதரவாக சொன்ன ரசிகனையே ஆடவிட்டால் எப்படி ஆடுவானோ, அந்த ரசிகனின் நிலையில் நான்.
நமக்கெல்லாம் தெலுங்கு பழகுநடைதான். சரியாக ஆழ்ந்து படித்தவன் அல்லன்.
திவாக
அன்புடையீர்,
தெலுகு மொழி, காலப் பின்னோக்கில்சென்றால், தமிழி என்ற சொல் தம்மை வெளிப்படுத்துதல் என்ற பொருளில் இயல்பாக அமைந்ததது போலவே, தெரிவிக்க, தெரிக, தெலிக+உ=தெலுகு எனப் பல வகையாலும் வழக்கில் மாறுபாடு கொண்டு இப்போதுள்ள தெலுகு என்ற சொல் நிலையை அடைந்திருக்கக் கூடும். மக்கள் வழக்கை அறிந்த மனம் திறந்த, மத வெறியற்ற, மொழி வெறியற்ற மாந்தர் எண்ணிப்பார்க்கவும், ஆய்வு செய்யய்யவும் தேவை உள்ளது. தெலிசினா என்ற சொல் செப்பும் பொருளும், தெலுகு என்ற சொல்லுக்கும் தொடர்பு இருக்க வேண்டுமல்லவா.
RR
Houston
June 4, 2008
அன்புள்ள ஆர் ஆர்,
நீங்கள் சொல்வது போல இருக்கவும் வாய்ப்புள்ளது. பொதுவாக மொழி வந்த விதமோ உருவான விதமோ இப்படித்தான் என வரையறுத்துக் கூறமுடியாது. ஆனால் இப்படி இருக்கலாம் என ஊகித்துச் சொல்பவர் உண்டு. அந்த வகையில்தான் இங்குள்ள சில ஆன்றோர்கள் சொன்னதையே நானும் எழுதியிருக்கிறேன்.
நன்றி
திவாகர்
Nanri thozhare. Tharpodhu vada thamizhnaattin sila pagudhigalil telungu ezhuthukkalai karka thodangi ullom. Viraivil Telungu matrum Tamil mozhigalukku idaiyilana uravu balappadum endru ennugiren.
Nanriyudan,
Purushothaman P
Post a Comment
<< Home