Wednesday, February 18, 2009

கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள்
அன்பர்களின் கேள்விகளும் அதற்கான பதில்களும்:

எஸ் எம் எஸ். எம்டன் 22-09-1914 படித்து எத்தனையோ கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு நான் தனித் தனியே பதில்களையும் அனுப்பி வந்தாலும், சில கேள்விகள் பொதுப்படையான அளவில் எழுந்துள்ளதால் அவைகளுக்கு மட்டும் இப் பதிவின் மூலம் பதில்களை எழுதுகிறேன்.
---------------------------------------------------------------------------
கேள்வி : மாயவரம் சித்தர்காடு என்று ஒன்று உள்ளதா? நீங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகள், முக்கியமாக சித்தர்கள் சமாதியானது என்பது ஆதாரபூர்வமானவையா..

பதில்: ஆமாம். மாயவரம்-நன்னிலம் ரயில் பாதை மேம்பாலத்தில் இறங்கி கீழே வந்ததும் இடது பக்கம் செல்லும் வீதியில் சற்றுதூரம் சென்றாலே சித்தர்கோயில் வந்துவிடும். சிற்றம்பலநாடிகள் கோயில் என்றே பெயர். உள்ளே அமைதியான முறையில் தரிசனம் செய்யலாம். உள்ளத்தில் சொல்ல முடியாத ஒரு அமைதி உருவாகுவதும் உண்மை. சிற்றம்பல நாடிகள் பற்றிய சரித்திரத்தினை அங்கு ஒரு பலகையில் எழுதி மாட்டியுள்ளார்கள். சென்று பார்த்து அனுபவித்தால்தான் சுகம் தெரியும்.

ஆனால் முன்னைப் போல தற்சமயம் முள்காடுகள் அங்கு இல்லை. சிமெண்ட் தரைதான். அந்தக் கோயிலைச் சுற்றிலும் ஏகப்பட்ட சந்து வீதிகள் மற்றும் வீடுகள் வந்துவிட்டன. இது காலத்தால் ஏற்பட்ட மாற்றம். கதையில் நிகழ்வது போலவே எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம் கிடைக்கலாம்.

கேள்வி: சமாதி விஷயங்கள் மிக ஆச்சரியமான விதத்தில் இக்கதையில் எழுதப்பட்டுள்ளது.ராஜராஜசோழன் இங்கு குறிப்பிட்ட விதத்தில்தான் இறந்துபோனானா.. அவன் சமாதி பழையாறையில் இப்போது உள்ளதா.. இதைப் பற்றி ஆதாரமாக ஏதாவது கல்வெட்டு உள்ளதா?

பதில்: நம் தமிழ்நாட்டில் எத்தனையோ சாதனைகள், சாகஸங்கள், அற்புதங்கள் நிறைவேறியுள்ளன. நம் கண் முன்னே கூட நாம் அறியமுடியாத சில அதிசயங்கள் நடந்ததிருப்பதை நமக்குத் தெரிந்தவர்கள் சொல்வதை நாம் கேட்டுவருகிறோம். சமாதி விஷயங்களிலும் இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் உண்டு. வள்ளல்பிரான் ஜோதிராமலிங்க அடிகள், சுவாமி ராகவேந்திரர், ரமண மகரிஷி ஆகியோர் சமாதி அடைந்ததைப் பற்றி பலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். சமாதி அடைவது என்பது - தன் உடலிலிருந்து தன் ஆத்மாவைப் பிரித்துக் கொள்வது, அவ்வளவுதான். அதே சமயத்தில் ஒரு உயிர் பிரிவது என்பது சாமான்யமான விஷயம் இல்லை. இதைப் பற்றிக் கதையில் விவரமாக ஆங்காங்கே எழுதியிருப்பதைப் படிக்கவும். There is a difference between departed and expired. அதாவது உடல் காலாவதி ஆகி உயிர் பிரிவது என்பது பொதுவாக நடப்பது (இறந்துபோனார்). உடல் நன்றாக இருக்கும்போதே மனத்தில் இறைவனை நிறுத்தி தன் உயிரை அந்த உடலில் இருந்து பிரித்துக் கொள்வதே சமாதி நிலை. (தற்கொலைகளை, கொலைகளை இவ்வகையில் சேர்க்கக்கூடாது).

ராஜராஜன் சமாதி விஷயத்தில் என்னென்ன ஆதாரங்களை எடுத்துக் கொண்டேன் என்றால், முதலில் அவன் தனக்குக் கொடுத்த அத்தனை விருதுகளையும் தன் சொந்தப் பெயர்களையும், ராஜசுகத்தையும் உதறிவிட்டு தன் பெயரையும் ‘சிவபாதசேகரன்’ என மாற்றி இறை வழியில் கடைக்காலத்தைக் கழித்ததற்கு ஆதாரங்கள் உண்டு. உடையாளூர் கோவில் கல்வெட்டு ஒன்றில் ‘ராஜேந்திரசோழன் (ராஜராஜன் மகன்) சிவபாதசேகரன் உயிர் பிரிந்த மூன்றாம் நாளன்று தன் அரசுப் பட்டத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டான்’ என்ற முக்கியமான கல்வெட்டுச் செய்தி உள்ளது. இந்தச் செய்தி ஒரு மிகப் பெரிய விஷயத்தை நமக்குத் தெரிவிக்கிறது. அதாவது சிவபாதசேகரரின் கடைசிக்கட்டத்திலும் அவன் உயிர் பிரிந்த முதல் மூன்று நாட்களும் காரியம் அல்லது ஆராதனை பூசை செய்த அவன் மகன் ராஜேந்திர சோழன் அரசுப் பட்டத்தில் இல்லை என்பது. இது ஆகம விதிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

மகுடாகம காரியபாதத்தில் ருத்திரன் கேள்வி கேட்க பரம்பொருளான பரமசிவன் பதில் சொல்வதாக வரும். ஒருவன் செய்த பாவத்தையும் அவன் செய்த புண்ணியத்தையும் போக்கிக்கொள்ள சாம்பவ விரதமான ஆகம விதி வகை செய்துள்ளதாகவும் எவன் ஒருவன் அப்படி சாம்பவ விரதம் இருந்து அவன் மகன் மூலம் சரியான வழியில் உயிரைப் பிரித்துக் கொள்கிறானோ அவனுக்கு மறுபிறப்பு கிடையாது எனவும் வருகிறது. தந்தை-மகன் உறவு எப்படி இருக்கவேண்டும் என்றும் ஆகம விதி சொல்கிறது. ஒரு மிகப் பெரிய அரசன், ராஜாதிராஜன், அகண்ட சாம்ராஜ்யத்தை நிறுவியவன், அதற்கும் மேலாக உலகமே காலாகாலத்துக்கும் போற்றக்கூடிய அளவில் மாபெரும் கோயில் எழுப்பியவன், கடைக்காலத்தில் எல்லாப் புகழையும் உதறி - இந்த உலகம் இவ்வளவுதான் - என்ற தெளிந்த நிலையில் சிவனைச் சரணடைந்து சிவபாதசேகரனாகியவனுக்கு ஒரு நல்ல வகையில் மரணம் கிடைப்பது என்பது சாத்தியம்தானே, இந்த நோக்கில்தான் ராஜராஜன் மரணம் எழுதப்பட்டுள்ளது.

கேள்வி: சாம்பவ விரதம், தெய்வத் தியானம் எல்லாம் நாம் செய்த பாவங்களைத் தான் போக்கும். புண்ணியம் வேண்டுமானால் பெருகும். அப்படி புண்ணியங்கள் செய்தபோது நற்பிறப்பு மறுபடி அமையாதா.. பாவமும் புண்ணியமும் கழிந்தால்தானே பிறவி இல்லாமல் போகும்? இது இந்த இடத்தில் ராஜராஜனின் பிறவாமை கோரிக்கைக்கு எப்படிப் பொருந்தும்?

பதில்: இந்தக் கேள்விகேட்ட திரு உதயன் நடராஜன் அவர்களுக்கு என் பாராட்டு. சரியான கேள்விதான். சரி.. நல்ல தவநிலையினாலும், சாம்பவ விரத பலன்களாலும் பாவங்கள் போய்விட்டன. புண்ணியம் எப்படிப் போகும்?..

அந்தப் புண்ணியமும் போகவேண்டியதற்குத்தான் பாசம் அதிகமுள்ள சொந்த மகனைக் காரணம் காட்டப்பட்டுள்ளது. அவன் பாச நிலைகளும் பல வகைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. அந்த மகன் கண் முன்னே தான் மிக அதிகமாக நேசிக்கும் தந்தையின் உயிர் பறிக்கப்படுவது அந்த மகனுக்கு எத்தனைத் துன்பத்தை விளைவிக்கும்?. தந்தை தன் சுயவிருப்பத்துக்குக்காக செய்யப்பட்ட சாம்பவவிரதம் கூட மகனுக்கு மனத்துயர் ஏற்படுத்தும். இப்படி செய்வதால், அதுவும் தன் மகனையே துன்பத்திற்கு உள்ளாக்கும்போது தந்தைக்கு பாவம் சேர்க்கும் அல்லவா.. இது ஒரு பாவ புண்ணிய வங்கிக் கணக்குப் போலவே தோன்றும். நல்லது செய்ய செய்ய நல்லது சேரும். தீயது செய்ய செய்ய தீயபலன் சேரும். (கண்ணன் கீதையில் மனத் துயர் விளைவிப்பதைக் கூட பாவத்தின் கணக்கில் சேர்க்கிறான்). அந்தக் கணக்கில் ஒப்பு நோக்கப்பட்டதுதான். இந்த சாம்பவ விரத பலன் கூட. இந்தக் கணக்கில்தான் பிறவா மகிமையை ஒப்பு நோக்கப்பட்டது.

கேள்வி: ரேடியோ எனும் வானொலி சென்ற நூற்றாண்டுக்கும் முன்பே வந்தது அல்லவா.. கப்பல்களில் (எம்டன் பயண காலத்தில்) அது பயன்படுத்தவில்லையா?

பதில்: இல்லை. 20ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் ரேடியோ கப்பல்களில் பயன்படுத்தப்பட்டதாக தகவல். அதற்கு முன்பெல்லாம் அலைவரிசை மூலம் வரும் தந்தித் சொற்கள்தான் (கேபிள்). கனடாவுக்கும் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் கடல் மூலம் கம்பி வழி செய்யப்பட்டு செய்திகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.

கேள்வி: எம்டன் பற்றிய செய்திகளில் டாக்டர் செண்பகராமன் பிள்ளை பலமாகப் பேசப்படுகிறது. ‘தி ஹிண்டு’ பேப்பரில் முத்தையா அவர்கள் கூட செண்பகராமன் பிள்ளை எம்டன் கப்பல் சென்னை மீது குண்டு வீசும்போது இருந்ததாக எழுதியிருக்கிறார். ஆனால் உங்கள் முன்னுரையில் அப்படி இல்லை என்று சொல்கிறீர்கள். விவரம் வேண்டும். அத்தோடு பெண்மணி ஒருவர் போர்க்கப்பலில் பயணம் மேற்கொள்வது வழக்கம் உண்டா?

பதில்: செம்பகராமன் பிள்ளை என்பவர் எம்டனில் முதலில் வேலை செய்திருக்கலாம். எம்டன் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் போர்ப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட பிறகே வங்கக் கடலில் புகுந்து சென்னை நகரம் மீது குண்டு போட்டது. ஆனால் குண்டு போடும் சமயத்திலோ, எம்டன் அடுத்த ஐம்பது நாட்களில் அழிக்கப்படும்போதோ அந்தக் கப்பலில் செம்பகராமன் பயணம் செய்யவில்லை என்பதை எம்டனில் பயணம் செய்த மொத்த பெயர்ப் பட்டியல் மூலம் தெரியவருகிறது.. அடுத்து எம்டனில் பயணம் செய்யும் பெண்மணி பற்றிய தகவல் ஒன்று உபதலைவன் முக்கே எழுதியுள்ள சுயசரிதக் கட்டுரையில் இருக்கிறது. முக்கே (மிக்கே) ‘எம்டனில்’ ஒரு பெண்மணி நடுவில் (வழியில் உள்ள தீவில்) ஏற்றப்பட்டதாகவும், அந்தப் பெண்மணி கப்பலில் உள்ள அனைவருக்கும் சாக்லேட் போன்றவை தந்ததாகவும் குறிப்புக் கொடுத்துள்ளார். அதே போல கப்பலில் பயணம் செய்யும் ஒரு ‘ஹிண்டூ’ பேர்வழி மூலம் பிரிட்டிஷ் இந்தியாவில் எம்டனுக்கு உள்ள பயத்தைப் பற்றித் தெரிந்துகொண்டதாகவும் எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையில் இரண்டு ஜெர்மன் டாக்டர் பெயர்களும் தரப்பட்டுள்ளன.

கேள்வி: எம்டன் உபதலைவனை (மிக்கே) ‘அம்போ’ வென கடைசியில் விட்டுவிட்டீர்களே.. அவன் என்ன ஆனான்?

பதில்: அடியேன் அப்படி விடவில்லை. எம்டன் கப்பலில் அந்த ஐம்பது நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளை ஏறத்தாழ கதையிலும் அப்படியே தரப்பட்டுள்ளன. எம்டன் தலைவனே அப்படி (தன் உபதலைவனை)'அம்போ'வென விட்டுவிட்டதால்தான் மிக்கேவும், அவரோடு ஐம்பது பேரும் தப்பிக்கமுடிந்தது. எம்டன் அழிந்த நாளிலேயே, அவர்கள் அந்தத் தீவிலிருந்த இன்னோர் பெரிய படகு ஒன்றில் தப்பி ஆப்பிரிக்கா கரையோரம் வந்து பிறகு எப்படியோ ஆறு மாதங்களுக்குப் பின் ஜெர்மனி சென்றுவிட்டதாக ஒரு தகவல். இன்னொரு தகவல் மிக்கே அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டது கூட பத்திரிகையில் செய்தியாக வந்தது.

கேள்வி: பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியைப் பற்றி தெளிவாக தந்திருந்தாலும் மிக சுருக்கமாக தந்தது போல இருந்தது. இன்னும் நிறைய எழுதியிருக்கலாமே.. நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா..

பதில்: இந்தக் கேள்வியை வேறுவிதமாகக் கேட்டுக் கருத்துத் தெரிவித்தவர் எழுத்தாளர் திரு ஸ்ரீரங்கம் மோஹனரங்கன் அவர்கள். நான் இன்னமும் ஆங்கிலேயரைப் பற்றி நிறைய எழுதியிருக்கவேண்டும் என்றும், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு நல்ல ஆட்சி என்ற அடிப்படையிலும் அப்படியும் அது அவலநிலையைத் தந்ததற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றியும் மேலும் நன்கு ஆராய்ந்து அதிகப் பக்கங்களில் எழுதியிருக்கவேண்டும் என்றும் அறிவுரை கொடுத்தவர் ரங்கனார்.

ஆனால் அடியேன் எடுத்துக் கொண்ட பின்னணி வேறு.. இங்கு எழுதப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியும் எம்டன் கப்பலும் நாம் பயணம் மேற்கொண்டதற்கான ஒரு தளம்தான். பயணம் சேருமிடம்தான் நமது லட்சியம், என்ற அடிப்படையில் பார்க்கும்போது இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும். முடிந்தவரை பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றிய தகவல் தரப்பட்டுள்ளன. நம் கதைக்குத் தேவை அவ்வளவுதான் என்று தோன்றியது.

இந்தக் கேள்வியை மறுபடி ஒருமுறை படித்தேன். நல்லகாலம், வளவளவென எழுதாமல் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது என்றவரையில் ஒரு திருப்தி.

அத்துடன் ஒரு எழுத்தாளனாகப் பார்க்கும்போது கரையில் நடக்கும் நிகழ்ச்சிகளும் கடலில் நடக்கும் நிகழ்ச்சிகளும் வாசகர் மறக்காமல் இருக்கவேண்டுமென்றால் உடனடியாக இருவேறு தளங்களுக்கு தாவவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

கேள்வி: ஐம்பது கஜதூரம் தாண்டுவது சாத்தியமா? சமீபத்தில் ஜெயா டி.வியில் மஹரிஷி மகேஷ்யோகியின் சீடர்கள் நியூயார்க் நகரத்தில் சாலையின் எதிர்க் கட்டடத்திற்கு தாவிக் காண்பித்ததை வீடியோவாக காண்பித்தார்கள். ஆனாலும் ஏதோ கண்கட்டு வித்தை போல அல்லவா தெரிகிறது.?

பதில்: என்ன சொல்ல?. பாதி பதில் உங்கள் கேள்வியிலேயே உள்ளது. அந்தக் காட்சியை டி.வி.யில் நான் பார்க்கவில்லை. பார்த்த நண்பர்கள் சிலர் சொன்னார்கள். ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் எதுவுமே அதிசயம் இல்லைதான். ஏனெனில் ஒவ்வொரு அதிசயமும் உன்னிப்பாகக் கவனித்தோமானால் அது சுயலாபத்திற்காகவோ, சுய விளம்பரத்திற்காகவோ நடக்கவில்லை. லோககல்யாணம் அதாவது எல்லோர் நன்மைக்காகவும் வேண்டப்படும்போது அதை இறைவன் அருள்வதாகவே ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆனாலும் யோகப் பயிற்சியால் இவை போன்றவை சாத்தியமே.

தமிழ்ப் பெரியார் திரு.வி.க இதைப் போன்ற நிகழ்ச்சி ஒன்றினை தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாக பெரியவர் எழுத்தாளர் நரசய்யா அவர்கள் கூறினார்கள். அப்படி தாண்டிய பெண்மணிக்கு சென்னை பெசண்ட் நகரில் கோயில் எழுப்பப்பட்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.

கேள்வி: எம்டன் 1, எம்டன் 2, எம்டன்3 என்று ஜெர்மன் போர்க்கப்பல்கள் வெளிவந்ததைப் போல எஸ்.எம்.எஸ் எம்டன் 22-09-1914 உம், 1, 2, 3 தொகுதிகளாக வரவேண்டும், தொடரவேண்டும் என்று விரும்புகிறோம். அப்படி ஏதாவது திட்டம் உண்டா?

பதில்: எதையுமே ‘அவன்’ ஆட்டுவிக்க நாம் ஆடுகிறோம். அடுத்த ஆட்டம் என்ன என்பதை ‘அவன்’ முடிவு செய்யவேண்டும். கூடியவிரைவில் தெரியவரும்.
-----------------------------------------------------------------------------------------------------------

கடிதம் எழுதிய அனைவருக்கும் நன்றி. எம்டன் எம்டன் என்ற பாடல் படித்து முடித்தபோதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்ற கடிதங்கள் ஒரு எழுத்தாளருக்கு உண்மையில் இதத்தைக் கொடுக்கும் ஆனால் எனக்கு பயத்தைக் கொடுக்கிறது. இந்தப் பயம் கூட நல்லதற்குத்தான். அடுத்த கதை எழுதும்போதும் இந்தப் பயம் கூடவே இருக்கவேண்டும் என ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

திவாகர்

Labels: ,

5 Comments:

At 8:53 PM, Blogger R.DEVARAJAN said...

//அப்படி புண்ணியங்கள் செய்தபோது நற்பிறப்பு மறுபடி அமையாதா.. பாவமும் புண்ணியமும் கழிந்தால்தானே பிறவி இல்லாமல் போகும்?//


பாவ புண்ணியங்கள் முற்றிலும் கழிந்து Zero Point ஏற்படுவது முற்றிலும் நடக்காது. ஆசைகள் அறுபட்ட நிலையே முக்தி. முக்தியடைந்தோரின் புண்ணியங்கள் அவர்களைப் போற்றுவோருக்கும், பாவங்கள் அவர்களைத் தூற்றூவோருக்கும் சேரும் என்பதே வேத நெறி.மேலோரைப் பழிக்கக் கூடாது என்று வற்புறுத்தப் படுகிறது.

தேவ்

 
At 2:28 AM, Blogger DHIVAKAR said...

விளக்கத்திற்கு நன்றி தேவ்!
இந்தக் கதைக்கான முக்தி விஷயங்கள் பாசுபத மதத்து சம்பிரதாய வகையில் சேர்ந்தது. இந்த வகையில்தான் கதைப் போக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய குறிப்புகள் - கடைசிப் பக்கத்தில் உள்ளன (ref.பகுதியில்)

இந்த zero point பற்றி சுவாமி சின்மயானந்தா நூல் ஒன்று எழுதியுள்ளார். இறைவன் ஒரு வைரக் கல்லை, நன்றாக பட்டை தீட்டி மனிதனாகப் பிறப்பெடுக்க வைப்பதாகவும், அந்தக் கல் மறுபடியும் அவனிடம் சேரவேண்டுமென்றால் எப்படி அவன் அனுப்பிவைத்தானோ அதே ரீதியில் செல்லவேண்டுமெனவும், அந்த வைரக் கல் மேலும் பட்டை தீட்டப் படுவதும், அல்லது அழுக்கு சேர்த்துக் கொண்டு இருக்கும் ஒளியை மறைப்பதும், அந்தப் பிறவியின் சிந்தனைச் செயல்பாடுகளில் உள்ளதாகவும் எழுதியிருக்கிறார். அந்த வைரக்கல் தான் அனுப்பிவைத்த வகையில் வரும்வரை அதற்குப் பிறவி தப்பாது என்வும் எழுதியுள்ளார்.

இந்த எண்ணங்கள் ஒரு பகிர்தலுக்காக மட்டுமே..

திவாகர்

 
At 9:52 PM, Blogger Sivaram Kannan said...

Thanks for the Q and A's sir. Lot of questions answered. But one question again, do you think German's would have treated anyone let alone an Indian the way they treat Chidambram?

 
At 9:15 AM, Blogger DHIVAKAR said...

Siva!
In general German warriors were treating their enemies in cruel way (during those two world wars). but we will have to see their need at times in particular point and circumstances made them to be soft against their enemies also. The Captain of Emden was having 'Gentleman' tag with him all through his journey. His treatment of his enemies were appreciated all over world which we came to know through the news clips. One Calcutta English Club was ready to honour the Captain of Emden by offering a honorary membership which, in fact, were offered to only royal people.

Here in the story too Chidambaram was the need of time.

Thanks for the question

Dhivakar

 
At 12:59 AM, Blogger geethasmbsvm6 said...

//அப்படி தாண்டிய பெண்மணிக்கு சென்னை பெசண்ட் நகரில் கோயில் எழுப்பப்பட்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.//

சக்கரத்தம்மா??? திருவான்மியூரில் எனக் கேள்விப்பட்டிருக்கேன்.

 

Post a Comment

<< Home