Wednesday, February 18, 2009

கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள்
அன்பர்களின் கேள்விகளும் அதற்கான பதில்களும்:

எஸ் எம் எஸ். எம்டன் 22-09-1914 படித்து எத்தனையோ கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு நான் தனித் தனியே பதில்களையும் அனுப்பி வந்தாலும், சில கேள்விகள் பொதுப்படையான அளவில் எழுந்துள்ளதால் அவைகளுக்கு மட்டும் இப் பதிவின் மூலம் பதில்களை எழுதுகிறேன்.
---------------------------------------------------------------------------
கேள்வி : மாயவரம் சித்தர்காடு என்று ஒன்று உள்ளதா? நீங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகள், முக்கியமாக சித்தர்கள் சமாதியானது என்பது ஆதாரபூர்வமானவையா..

பதில்: ஆமாம். மாயவரம்-நன்னிலம் ரயில் பாதை மேம்பாலத்தில் இறங்கி கீழே வந்ததும் இடது பக்கம் செல்லும் வீதியில் சற்றுதூரம் சென்றாலே சித்தர்கோயில் வந்துவிடும். சிற்றம்பலநாடிகள் கோயில் என்றே பெயர். உள்ளே அமைதியான முறையில் தரிசனம் செய்யலாம். உள்ளத்தில் சொல்ல முடியாத ஒரு அமைதி உருவாகுவதும் உண்மை. சிற்றம்பல நாடிகள் பற்றிய சரித்திரத்தினை அங்கு ஒரு பலகையில் எழுதி மாட்டியுள்ளார்கள். சென்று பார்த்து அனுபவித்தால்தான் சுகம் தெரியும்.

ஆனால் முன்னைப் போல தற்சமயம் முள்காடுகள் அங்கு இல்லை. சிமெண்ட் தரைதான். அந்தக் கோயிலைச் சுற்றிலும் ஏகப்பட்ட சந்து வீதிகள் மற்றும் வீடுகள் வந்துவிட்டன. இது காலத்தால் ஏற்பட்ட மாற்றம். கதையில் நிகழ்வது போலவே எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம் கிடைக்கலாம்.

கேள்வி: சமாதி விஷயங்கள் மிக ஆச்சரியமான விதத்தில் இக்கதையில் எழுதப்பட்டுள்ளது.ராஜராஜசோழன் இங்கு குறிப்பிட்ட விதத்தில்தான் இறந்துபோனானா.. அவன் சமாதி பழையாறையில் இப்போது உள்ளதா.. இதைப் பற்றி ஆதாரமாக ஏதாவது கல்வெட்டு உள்ளதா?

பதில்: நம் தமிழ்நாட்டில் எத்தனையோ சாதனைகள், சாகஸங்கள், அற்புதங்கள் நிறைவேறியுள்ளன. நம் கண் முன்னே கூட நாம் அறியமுடியாத சில அதிசயங்கள் நடந்ததிருப்பதை நமக்குத் தெரிந்தவர்கள் சொல்வதை நாம் கேட்டுவருகிறோம். சமாதி விஷயங்களிலும் இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் உண்டு. வள்ளல்பிரான் ஜோதிராமலிங்க அடிகள், சுவாமி ராகவேந்திரர், ரமண மகரிஷி ஆகியோர் சமாதி அடைந்ததைப் பற்றி பலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். சமாதி அடைவது என்பது - தன் உடலிலிருந்து தன் ஆத்மாவைப் பிரித்துக் கொள்வது, அவ்வளவுதான். அதே சமயத்தில் ஒரு உயிர் பிரிவது என்பது சாமான்யமான விஷயம் இல்லை. இதைப் பற்றிக் கதையில் விவரமாக ஆங்காங்கே எழுதியிருப்பதைப் படிக்கவும். There is a difference between departed and expired. அதாவது உடல் காலாவதி ஆகி உயிர் பிரிவது என்பது பொதுவாக நடப்பது (இறந்துபோனார்). உடல் நன்றாக இருக்கும்போதே மனத்தில் இறைவனை நிறுத்தி தன் உயிரை அந்த உடலில் இருந்து பிரித்துக் கொள்வதே சமாதி நிலை. (தற்கொலைகளை, கொலைகளை இவ்வகையில் சேர்க்கக்கூடாது).

ராஜராஜன் சமாதி விஷயத்தில் என்னென்ன ஆதாரங்களை எடுத்துக் கொண்டேன் என்றால், முதலில் அவன் தனக்குக் கொடுத்த அத்தனை விருதுகளையும் தன் சொந்தப் பெயர்களையும், ராஜசுகத்தையும் உதறிவிட்டு தன் பெயரையும் ‘சிவபாதசேகரன்’ என மாற்றி இறை வழியில் கடைக்காலத்தைக் கழித்ததற்கு ஆதாரங்கள் உண்டு. உடையாளூர் கோவில் கல்வெட்டு ஒன்றில் ‘ராஜேந்திரசோழன் (ராஜராஜன் மகன்) சிவபாதசேகரன் உயிர் பிரிந்த மூன்றாம் நாளன்று தன் அரசுப் பட்டத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டான்’ என்ற முக்கியமான கல்வெட்டுச் செய்தி உள்ளது. இந்தச் செய்தி ஒரு மிகப் பெரிய விஷயத்தை நமக்குத் தெரிவிக்கிறது. அதாவது சிவபாதசேகரரின் கடைசிக்கட்டத்திலும் அவன் உயிர் பிரிந்த முதல் மூன்று நாட்களும் காரியம் அல்லது ஆராதனை பூசை செய்த அவன் மகன் ராஜேந்திர சோழன் அரசுப் பட்டத்தில் இல்லை என்பது. இது ஆகம விதிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

மகுடாகம காரியபாதத்தில் ருத்திரன் கேள்வி கேட்க பரம்பொருளான பரமசிவன் பதில் சொல்வதாக வரும். ஒருவன் செய்த பாவத்தையும் அவன் செய்த புண்ணியத்தையும் போக்கிக்கொள்ள சாம்பவ விரதமான ஆகம விதி வகை செய்துள்ளதாகவும் எவன் ஒருவன் அப்படி சாம்பவ விரதம் இருந்து அவன் மகன் மூலம் சரியான வழியில் உயிரைப் பிரித்துக் கொள்கிறானோ அவனுக்கு மறுபிறப்பு கிடையாது எனவும் வருகிறது. தந்தை-மகன் உறவு எப்படி இருக்கவேண்டும் என்றும் ஆகம விதி சொல்கிறது. ஒரு மிகப் பெரிய அரசன், ராஜாதிராஜன், அகண்ட சாம்ராஜ்யத்தை நிறுவியவன், அதற்கும் மேலாக உலகமே காலாகாலத்துக்கும் போற்றக்கூடிய அளவில் மாபெரும் கோயில் எழுப்பியவன், கடைக்காலத்தில் எல்லாப் புகழையும் உதறி - இந்த உலகம் இவ்வளவுதான் - என்ற தெளிந்த நிலையில் சிவனைச் சரணடைந்து சிவபாதசேகரனாகியவனுக்கு ஒரு நல்ல வகையில் மரணம் கிடைப்பது என்பது சாத்தியம்தானே, இந்த நோக்கில்தான் ராஜராஜன் மரணம் எழுதப்பட்டுள்ளது.

கேள்வி: சாம்பவ விரதம், தெய்வத் தியானம் எல்லாம் நாம் செய்த பாவங்களைத் தான் போக்கும். புண்ணியம் வேண்டுமானால் பெருகும். அப்படி புண்ணியங்கள் செய்தபோது நற்பிறப்பு மறுபடி அமையாதா.. பாவமும் புண்ணியமும் கழிந்தால்தானே பிறவி இல்லாமல் போகும்? இது இந்த இடத்தில் ராஜராஜனின் பிறவாமை கோரிக்கைக்கு எப்படிப் பொருந்தும்?

பதில்: இந்தக் கேள்விகேட்ட திரு உதயன் நடராஜன் அவர்களுக்கு என் பாராட்டு. சரியான கேள்விதான். சரி.. நல்ல தவநிலையினாலும், சாம்பவ விரத பலன்களாலும் பாவங்கள் போய்விட்டன. புண்ணியம் எப்படிப் போகும்?..

அந்தப் புண்ணியமும் போகவேண்டியதற்குத்தான் பாசம் அதிகமுள்ள சொந்த மகனைக் காரணம் காட்டப்பட்டுள்ளது. அவன் பாச நிலைகளும் பல வகைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. அந்த மகன் கண் முன்னே தான் மிக அதிகமாக நேசிக்கும் தந்தையின் உயிர் பறிக்கப்படுவது அந்த மகனுக்கு எத்தனைத் துன்பத்தை விளைவிக்கும்?. தந்தை தன் சுயவிருப்பத்துக்குக்காக செய்யப்பட்ட சாம்பவவிரதம் கூட மகனுக்கு மனத்துயர் ஏற்படுத்தும். இப்படி செய்வதால், அதுவும் தன் மகனையே துன்பத்திற்கு உள்ளாக்கும்போது தந்தைக்கு பாவம் சேர்க்கும் அல்லவா.. இது ஒரு பாவ புண்ணிய வங்கிக் கணக்குப் போலவே தோன்றும். நல்லது செய்ய செய்ய நல்லது சேரும். தீயது செய்ய செய்ய தீயபலன் சேரும். (கண்ணன் கீதையில் மனத் துயர் விளைவிப்பதைக் கூட பாவத்தின் கணக்கில் சேர்க்கிறான்). அந்தக் கணக்கில் ஒப்பு நோக்கப்பட்டதுதான். இந்த சாம்பவ விரத பலன் கூட. இந்தக் கணக்கில்தான் பிறவா மகிமையை ஒப்பு நோக்கப்பட்டது.

கேள்வி: ரேடியோ எனும் வானொலி சென்ற நூற்றாண்டுக்கும் முன்பே வந்தது அல்லவா.. கப்பல்களில் (எம்டன் பயண காலத்தில்) அது பயன்படுத்தவில்லையா?

பதில்: இல்லை. 20ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் ரேடியோ கப்பல்களில் பயன்படுத்தப்பட்டதாக தகவல். அதற்கு முன்பெல்லாம் அலைவரிசை மூலம் வரும் தந்தித் சொற்கள்தான் (கேபிள்). கனடாவுக்கும் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் கடல் மூலம் கம்பி வழி செய்யப்பட்டு செய்திகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.

கேள்வி: எம்டன் பற்றிய செய்திகளில் டாக்டர் செண்பகராமன் பிள்ளை பலமாகப் பேசப்படுகிறது. ‘தி ஹிண்டு’ பேப்பரில் முத்தையா அவர்கள் கூட செண்பகராமன் பிள்ளை எம்டன் கப்பல் சென்னை மீது குண்டு வீசும்போது இருந்ததாக எழுதியிருக்கிறார். ஆனால் உங்கள் முன்னுரையில் அப்படி இல்லை என்று சொல்கிறீர்கள். விவரம் வேண்டும். அத்தோடு பெண்மணி ஒருவர் போர்க்கப்பலில் பயணம் மேற்கொள்வது வழக்கம் உண்டா?

பதில்: செம்பகராமன் பிள்ளை என்பவர் எம்டனில் முதலில் வேலை செய்திருக்கலாம். எம்டன் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் போர்ப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட பிறகே வங்கக் கடலில் புகுந்து சென்னை நகரம் மீது குண்டு போட்டது. ஆனால் குண்டு போடும் சமயத்திலோ, எம்டன் அடுத்த ஐம்பது நாட்களில் அழிக்கப்படும்போதோ அந்தக் கப்பலில் செம்பகராமன் பயணம் செய்யவில்லை என்பதை எம்டனில் பயணம் செய்த மொத்த பெயர்ப் பட்டியல் மூலம் தெரியவருகிறது.. அடுத்து எம்டனில் பயணம் செய்யும் பெண்மணி பற்றிய தகவல் ஒன்று உபதலைவன் முக்கே எழுதியுள்ள சுயசரிதக் கட்டுரையில் இருக்கிறது. முக்கே (மிக்கே) ‘எம்டனில்’ ஒரு பெண்மணி நடுவில் (வழியில் உள்ள தீவில்) ஏற்றப்பட்டதாகவும், அந்தப் பெண்மணி கப்பலில் உள்ள அனைவருக்கும் சாக்லேட் போன்றவை தந்ததாகவும் குறிப்புக் கொடுத்துள்ளார். அதே போல கப்பலில் பயணம் செய்யும் ஒரு ‘ஹிண்டூ’ பேர்வழி மூலம் பிரிட்டிஷ் இந்தியாவில் எம்டனுக்கு உள்ள பயத்தைப் பற்றித் தெரிந்துகொண்டதாகவும் எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையில் இரண்டு ஜெர்மன் டாக்டர் பெயர்களும் தரப்பட்டுள்ளன.

கேள்வி: எம்டன் உபதலைவனை (மிக்கே) ‘அம்போ’ வென கடைசியில் விட்டுவிட்டீர்களே.. அவன் என்ன ஆனான்?

பதில்: அடியேன் அப்படி விடவில்லை. எம்டன் கப்பலில் அந்த ஐம்பது நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளை ஏறத்தாழ கதையிலும் அப்படியே தரப்பட்டுள்ளன. எம்டன் தலைவனே அப்படி (தன் உபதலைவனை)'அம்போ'வென விட்டுவிட்டதால்தான் மிக்கேவும், அவரோடு ஐம்பது பேரும் தப்பிக்கமுடிந்தது. எம்டன் அழிந்த நாளிலேயே, அவர்கள் அந்தத் தீவிலிருந்த இன்னோர் பெரிய படகு ஒன்றில் தப்பி ஆப்பிரிக்கா கரையோரம் வந்து பிறகு எப்படியோ ஆறு மாதங்களுக்குப் பின் ஜெர்மனி சென்றுவிட்டதாக ஒரு தகவல். இன்னொரு தகவல் மிக்கே அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டது கூட பத்திரிகையில் செய்தியாக வந்தது.

கேள்வி: பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியைப் பற்றி தெளிவாக தந்திருந்தாலும் மிக சுருக்கமாக தந்தது போல இருந்தது. இன்னும் நிறைய எழுதியிருக்கலாமே.. நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா..

பதில்: இந்தக் கேள்வியை வேறுவிதமாகக் கேட்டுக் கருத்துத் தெரிவித்தவர் எழுத்தாளர் திரு ஸ்ரீரங்கம் மோஹனரங்கன் அவர்கள். நான் இன்னமும் ஆங்கிலேயரைப் பற்றி நிறைய எழுதியிருக்கவேண்டும் என்றும், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு நல்ல ஆட்சி என்ற அடிப்படையிலும் அப்படியும் அது அவலநிலையைத் தந்ததற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றியும் மேலும் நன்கு ஆராய்ந்து அதிகப் பக்கங்களில் எழுதியிருக்கவேண்டும் என்றும் அறிவுரை கொடுத்தவர் ரங்கனார்.

ஆனால் அடியேன் எடுத்துக் கொண்ட பின்னணி வேறு.. இங்கு எழுதப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியும் எம்டன் கப்பலும் நாம் பயணம் மேற்கொண்டதற்கான ஒரு தளம்தான். பயணம் சேருமிடம்தான் நமது லட்சியம், என்ற அடிப்படையில் பார்க்கும்போது இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும். முடிந்தவரை பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றிய தகவல் தரப்பட்டுள்ளன. நம் கதைக்குத் தேவை அவ்வளவுதான் என்று தோன்றியது.

இந்தக் கேள்வியை மறுபடி ஒருமுறை படித்தேன். நல்லகாலம், வளவளவென எழுதாமல் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது என்றவரையில் ஒரு திருப்தி.

அத்துடன் ஒரு எழுத்தாளனாகப் பார்க்கும்போது கரையில் நடக்கும் நிகழ்ச்சிகளும் கடலில் நடக்கும் நிகழ்ச்சிகளும் வாசகர் மறக்காமல் இருக்கவேண்டுமென்றால் உடனடியாக இருவேறு தளங்களுக்கு தாவவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

கேள்வி: ஐம்பது கஜதூரம் தாண்டுவது சாத்தியமா? சமீபத்தில் ஜெயா டி.வியில் மஹரிஷி மகேஷ்யோகியின் சீடர்கள் நியூயார்க் நகரத்தில் சாலையின் எதிர்க் கட்டடத்திற்கு தாவிக் காண்பித்ததை வீடியோவாக காண்பித்தார்கள். ஆனாலும் ஏதோ கண்கட்டு வித்தை போல அல்லவா தெரிகிறது.?

பதில்: என்ன சொல்ல?. பாதி பதில் உங்கள் கேள்வியிலேயே உள்ளது. அந்தக் காட்சியை டி.வி.யில் நான் பார்க்கவில்லை. பார்த்த நண்பர்கள் சிலர் சொன்னார்கள். ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் எதுவுமே அதிசயம் இல்லைதான். ஏனெனில் ஒவ்வொரு அதிசயமும் உன்னிப்பாகக் கவனித்தோமானால் அது சுயலாபத்திற்காகவோ, சுய விளம்பரத்திற்காகவோ நடக்கவில்லை. லோககல்யாணம் அதாவது எல்லோர் நன்மைக்காகவும் வேண்டப்படும்போது அதை இறைவன் அருள்வதாகவே ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆனாலும் யோகப் பயிற்சியால் இவை போன்றவை சாத்தியமே.

தமிழ்ப் பெரியார் திரு.வி.க இதைப் போன்ற நிகழ்ச்சி ஒன்றினை தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாக பெரியவர் எழுத்தாளர் நரசய்யா அவர்கள் கூறினார்கள். அப்படி தாண்டிய பெண்மணிக்கு சென்னை பெசண்ட் நகரில் கோயில் எழுப்பப்பட்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.

கேள்வி: எம்டன் 1, எம்டன் 2, எம்டன்3 என்று ஜெர்மன் போர்க்கப்பல்கள் வெளிவந்ததைப் போல எஸ்.எம்.எஸ் எம்டன் 22-09-1914 உம், 1, 2, 3 தொகுதிகளாக வரவேண்டும், தொடரவேண்டும் என்று விரும்புகிறோம். அப்படி ஏதாவது திட்டம் உண்டா?

பதில்: எதையுமே ‘அவன்’ ஆட்டுவிக்க நாம் ஆடுகிறோம். அடுத்த ஆட்டம் என்ன என்பதை ‘அவன்’ முடிவு செய்யவேண்டும். கூடியவிரைவில் தெரியவரும்.
-----------------------------------------------------------------------------------------------------------

கடிதம் எழுதிய அனைவருக்கும் நன்றி. எம்டன் எம்டன் என்ற பாடல் படித்து முடித்தபோதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்ற கடிதங்கள் ஒரு எழுத்தாளருக்கு உண்மையில் இதத்தைக் கொடுக்கும் ஆனால் எனக்கு பயத்தைக் கொடுக்கிறது. இந்தப் பயம் கூட நல்லதற்குத்தான். அடுத்த கதை எழுதும்போதும் இந்தப் பயம் கூடவே இருக்கவேண்டும் என ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

திவாகர்

Labels: ,

Wednesday, February 11, 2009

விசாகப்பட்டினத்தில் நடந்த 'எஸ்.எம்.எஸ் எம்டன் 22-09-1914' புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் திரு ஆர். ராகவேந்திரன், (மேல்நாள் தலைமைப் பேராசிரியர் - வாரங்கல் ரெஜினல் இஞ்சினீரிங்க் கல்லூரி, தற்சமயம் உறுப்பினர், மைய நீர் ஆய்வு கமிஷன்.) பேசியதில் ஒரு பகுதி:
-----------------------------------------------------------------------------------------------------------------

அப்துல் கபூரூக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் என்ன சொல்லமுடியும்?. ஆனால் அப்படிப்பட்ட சம்பந்தத்தை ஆதாரங்களோடு கொண்டு காண்பித்தால் நமக்கு ஆச்சரியம் வராதா.. எஸ் எம் எஸ் எம்டன் போர்க்கப்பல் எங்கே.. கதைக்கான கருவான சிவயோகம் எங்கே? இரண்டும் இணையமுடியும் என்பதை இந்தப் புத்தகத்தில்தான் ஆச்சரியமாகப் பார்த்தேன்.

ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால் அதன் முதல் ஐந்து ஆறு பக்கங்களிலேயே இது எங்கு போகிறது, இந்தக் கதை நன்றாக இருக்குமா.. எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கண்டு கொள்ளும் விதத்தில் இந்தக் கதையில் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான விஷயம். தாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதில் மிகத் தெளிவாக இருக்கவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் ஆசிரியர். கதை மிகவும் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.

சிவயோகமான சமாதி நிலையை நம் முன்னோர்கள் கடைபிடித்த விதத்தையும் எப்படி அடையலாம் என்பதனையும் எளிமையான வார்த்தைகளால் ஆசிரியர் எழுதியுள்ளார்.
இந்த மனித பிறவியிலே நாம் எப்படியெல்லாம் வாழ்ந்து சாதனை செய்கிறோம் என்பதை விட நாம் பிறவி எடுத்துள்ள இப்பிறப்பை எப்படி உபயோகப்படுத்தினால், அந்தப் பிறவி எடுத்ததன் பயன் கிடைக்கும் என்பதை தெளிவாக்கியுள்ளார் திவாகர்.

மனிதனுக்கு எப்போதுமே தானே எல்லாம் செய்வதாக நினைத்துக் கொள்ளும் நிலை வருவது சகஜம். எத்தனையோ சாதனைகள், அதனால் ஏற்படும் பயன்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என்று மனிதன் தான் செய்ததாகவும் செய்து விட்டதாகவும் பீற்றிக் கொள்வான். இதிலிருந்து மாறுபட்ட கருத்தும் உண்டு. அது எல்லாமே இறைவன் விதிப்படி நடப்பதுதான். இறைவன் செயலால் மட்டுமே ஒரு காரியத்தையோ அல்லது புதிய கண்டுபிடிப்பையோ மனிதனால் நிகழ்த்தமுடியும். அவன் அருளின்றி ஓரணுவும் அசையமுடியாது. அவன் அருள் வைத்தால் அணுவும் மிகப் பெரிய சக்தி பெறும் என்பது ஒரு கருத்து. ஆசிரியர் இந்த இரண்டாவது கருத்தை மையமாகக் கொண்டு கதைக் களத்தில் காய்களை நகர்த்துகிறார். இதுவும் மிகவும் போற்றுதலுக்குரிய விஷயம்.

பாரதநாடு பழம்பெரும் நாடு. எத்தனையோ முனிவர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள், எத்தனையோ மதங்கள், நல்வழி காட்டுவதற்கு எத்தனையோ வழிகள் எல்லாம் கொண்ட இந்த நாட்டில் மனித சாதனைகள் மட்டுமே தற்சமயம் போற்றப்படுகின்றது.

மனிதன் சாதனை மட்டுமே அவன் முன்னேற்றத்திற்கான முத்திரை என்று அரசாங்கங்களே ஏற்றுக் கொண்ட ஒரு விசித்திரமான காலகட்டத்தில் எம்டன் கப்பல் சென்னை நகரத்து துறைமுகத்தில் நடத்திய தாக்குதல் தொடங்கி, அந்தக் கப்பல் செய்த சாதனைகளுக்குப் பயந்து, ஆங்கிலேய அரசாங்கம் விசித்திரமாக நடந்து கொண்ட முறைகளும் நடுவில் கதையின் நாயகனுக்குக் கப்பலில் கிடைக்கும் அனுபவங்களும், நாயகன் கப்பலில் கடல் நடுவே இருக்க நாயகி இங்கே நிலத்தில் ஆங்கிலேய போலிசாரின் கோபத்துக்கு ஆளாகி நாயகன் நல்லவன் என்பதை நிரூபிக்க அவள் மேற்கொண்ட நடவடிக்கைகள்.. ராஜாக்கள் எத்தனை உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்து காட்டினார்கள். தனக்குக் கிடைத்த மனிதப் பிறவியை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதையெல்லாம் தனக்கே உரிய பாணியில் எளிமையான தமிழில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தில் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. எல்லா விஷயங்களுமே எல்லோரும் விரும்பும்விதத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டவிதம் அருமை. எம்டன் கப்பலோடு நாம் செல்லுகின்ற அதே நேரத்தில் நிலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறதோ என்ற அச்சமும் நமக்கு உருவாவதும் உண்மை. நிலத்தில் நடக்கும் சிவயோகத்துக்கான ஆன்மீகமும் அரசியலும் ஒன்று சேர்ந்து. நீரில் நடக்கும் சாகசங்களும் போராட்டங்களுடன் கடைசியில் ஐக்கியமாகும்போது அது ஒரு மாபெரும் பலனைத் தருகிறது. அந்தப் பலன் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன்தான் அனுபவபூர்வமாக மட்டுமே உணரமுடியும்.

அதுதான் பண்டைய பாரதத்தின் மகிமை என்றால் அது மிகையல்ல.
----------------------------------------------------------------------------



(பேராசிரியர் ராகவேந்திரனும் திரு நல்லி குப்புசாமி செட்டியாரும் - சென்ற வருடம் நடந்த விசித்திரசித்தன் புத்தக வெளியீட்டு விழாவின் போது எடுத்த படம் (file photo). இப்போது உதவுகிறது)

----------------------------------------------------------------------------------------------------------

Labels: ,

Sunday, January 11, 2009




அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

இந்தத் தைத் திங்களில் ஒரு புதிய முயற்சியை உருவாக்க எனக்கு ஆண்டவன் அவகாசம் அளித்துள்ளான்.

என்னுடைய சமீபத்து வெளியீடான SMS எம்டன் 22-09-1914 புத்தகம், சென்னை புத்தகக் கண்காட்சி விழாவில் பழனியப்பா பிரதர்ஸ் - 138 எண் ஸ்டாலில் வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் சில அன்பர்கள் புத்தகத்தை வாங்கி உடனடியாகப் படித்து மிகப் பெரிய ஆதரவுக் கடிதங்களையும் ஈ மெயில் மூலமாக அனுப்பி வைத்தது நெஞ்சுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.

சென்ற நூற்றாண்டில் முதல் இருபது ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிக சிறப்பான ஆண்டுகள் எனக் கொள்ளவேண்டும். காரணம் பாரதி, வ.வு.சி., போன்றோர் தலைமையில் சுதந்திரப் போராட்டம் நடந்த காலமது. முதல் உலகப்போர் ஆரம்பித்து முடிந்த காலகட்டல் கூட அதுதான். நாட்டில் சுதந்திர வேட்கை அப்போதுதான் செழித்துத் துளிர்விட ஆரம்பித்த நேரத்தில் முதல் உலகப் போர் அந்த சுதந்திரவேட்கையை சற்று மட்டுப் படுத்திய காலம் கூட அதுதான். இந்தியாவில் தலைமை கவர்னர் ஜெனரல் மற்றும் மெட்ராஸ் மாகாண கவர்னர் இருவருக்குமே நல்ல பெயர் கிடைத்த நேரம் கூட இந்தக் கால கட்டம்தான். அந்த நல்லநேரத்தை சீரழித்து ஆங்கிலேயருக்கு ஒரு நீண்ட கெட்ட கனவினை கொடுத்து இந்தியாவை ஆளுவோருக்கு ஒரு பாடத்தை ஏற்படுத்திச் சென்ற கப்பல்தான் 'எஸ்.எம்.எஸ் எம்டன் 22-09-1914'.

ஆம். இந்த 22-09-1914 ஆம் நாள் இரவு 9.20க்கு அந்தப் பொல்லாத எம்டன் கப்பல் தன்னந்தனியே சென்னை கடற்கரையில் எல்லோரும் நின்று பார்க்கும் தூரத்தில் நங்கூரமிட்டு சென்னை மாநகர் மீது பட படவென குண்டு மழை பொழிந்தது. இத்தனைக்கும் சென்னை துறைமுகத்தின் அருகேயே அப்போது பிரிட்டிஷ் கப்பல் படைத்தளம் நல்ல பாதுகாப்பான பலமான நிலையில் இருந்த சமயம். ஏறத்தாழ 60 ஆங்கில போர்க்கப்பல்கள் கீழைக்கடல் முழுதும் ரோந்துப் பணியில் இருந்த காலகட்டத்தில் அநாயசமாக நுழைந்து, பலம் மிகுந்த சென்னை மாநகரத்தின் மீது குண்டு வீசி மிக சுலபமாக தப்பிவிட்ட அந்தக் கப்பல் ஆங்கிலேயரின் ஆணவத்துக்கு சவாலாக அமைந்தது என்னவோ உண்மைதானே..

எஸ்.எம்.எஸ். எம்டன் கதையைப்பற்றியும் பிரிட்டிஷ் அடைந்த துன்பங்களைப் பற்றியும் இதன் ஊடே நம் பாரத மணித்திருநாடு எத்தனையோ வகைகளில் சிறப்புற்றதைப் பற்றியும் இந்தப் புதினத்தில் விவரித்துள்ளேன். மிகவும் வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட நூலாக இக்கதை அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

நண்பர் விஜய், நண்பர் திரு, நண்பர் சதீஷ் மற்றும் நண்பர் ஸ்ரீதர் இவர்களின் சீரிய முயற்சியால் இந்தப் புதினத்தைப் பற்றி தகவல் தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு தளத்தை நிறுவியுள்ளார்கள். இந்த தளத்தில் சென்று இந்த புதினத்தைப் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பினாலே போதும், உங்களுக்கு மாதிரி புத்தகப் பகுதிகள் அனுப்பிவைக்கப்படும். இந்த தளத்தை ஏற்படுத்தித் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நமது நன்றி!!

இந்தப் புதினம் உங்கள் அனைவருக்கும் பலவிஷயங்களில் மகிழ்ச்சியைத் தரும் என்றே நம்புகிறேன்.

மீண்டும் வணக்கங்கள் பல.

அன்பன்
திவாகர்

Labels: ,

Friday, December 26, 2008


எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914

அடியேன் எழுதிய தமிழ் நாவல் எஸ். எம். எஸ். எம்டன் நமது பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. புத்தக வெளியீட்டு விழா பின்னர் வைத்துக் கொள்வதாக திட்டம் உள்ளது.

எஸ். எம். எஸ். எம்டன் நாவலுக்கு அணிந்துரை அருளியவர் பெரியவர் திரு நரசய்யா அவர்கள். அந்த அணிந்துரையை இதோ உங்கள் பார்வைக்கு:
------------------------------------------------
S M S எம்டன் 22-09-1914
சரித்திர புதினம் - எழுதியவர் - திவாகர்
பதிப்பாளர்: பழனியப்பா பிரதர்ஸ்,
25, ராயப்பேட்டை நெடுஞ்சாலை
சென்னை - 600 014
------------------------------------------------

அணிந்துரை: நரசய்யா (கடலோடி, மதராசப்பட்டினம் ஆசிரியர்)

திவாகரின் சரித்திரத் தேடல்:

சரித்தரப் புதினங்களில் ஆசிரியர்கள், சான்றாக, ஒரு சிறு சரித்திர இழையைப் பிடித்துக் கொண்டு, முடிந்தமட்டில் பெரும் வடங்களைத் தயாரித்து விடுகிறார்கள். சரித்திரப் பின்னணி, காலத்தால் பின் செல்லச் செல்ல, ஆசிரியர்களுக்குச் சாதகமாகவேப் புனையும் முயற்சி அமைந்துவிடுகிறது. எந்த சரித்திரப் புதின ஆசிரியரும் இம்முறைக்கு விதிவிலக்கல்ல; அவரவர்கள் திறமைக்கேற்ப அவரவர் தமது கதைகளைப் புனைகின்றனர். அவ்வாறு பிறந்த கதைகளின் வெற்றியோ தோல்வியோ ஆசிரியர்களின் கைவண்ணத்தால் மட்டுமே அல்லாது சரித்திரத்தின் திருப்புமுனைகளால் அல்ல.

திவாகர், சரித்திரத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அதே மாத்திரத்தில் சரித்திரத்தினின்றும் சிறிதும் பிரியாது, உண்மையே மையமாகக் கொண்டு சிறந்த புதினங்களை ஏற்கனவே படைத்து வெற்றியும் கண்டவர். அவ்வாறு அவர் படைத்த புதினங்களில் எழுதுகையில் தாம் கண்ட சில அரிய விஷயங்களை அப்போதே வைப்பு நிதி போல வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு தக்க சமயம் வரும்போதில் அவற்றைப் பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்கலாம்.

சோழ மாமன்னனும், எஸ். எம். எஸ். எம்டனும் அவ்வாறு கலக்கக்கூடிய வாய்ப்பு எப்போதோ அவருள் துளிர்த்திருக்கவேண்டும். காலத்தால் இந்நிகழ்வுகள் 900 ஆண்டுகள் பிரிந்திருப்பவை; இந்நிகழ்வுகளை மிகவும் ஜாக்கிரதையாக அவர் சேர்க்க எடுத்திருக்கும் துணிவும் முயற்சியும் சாதாரணமானவையல்ல; தெரிந்தே புதைமணலில் இறங்குவது போன்றது.

சரித்திரத்தின் சுவைநலம் நிறைந்த அழகுணர்ச்சியும், அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் குறைத்திடாமல் ஒரு புதினத்தைப் புனைகையில் இரண்டு விரிவாக்கங்கள் ஆசிரியரால் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒன்று - சரித்திரப் பின்னணிக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்வுகளை அடக்கியாள்வது; இது 19ஆம் நூற்றாண்டின் ஆங்கில ஆசிரியர்களான டிக்கன்ஸ் போன்றவர்கள் கையாண்ட முறை. அடுத்த முறை - சரித்திரம் அளிக்கும் வாய்ப்புகளைக் கொண்டு, அந்தந்த மொழிக்கேற்ப, சமுதாய விதிகளின்படி தமது திறமையை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விருந்து படைப்பது. தமிழில் மிக சாமர்த்தியமாக இம்முறையைக் கையாண்டு அமோக வெற்றியைக் கண்ட கல்கி, பல சரித்திர ஆசிரியர்களுக்கு முன்னோடியாக அமைந்துவிட்டார்.

கல்கியில் தளத்தைப் பின்பற்றி சோழர்கள் சரித்திரப் பின்னணியில் தாமிருக்கும் இடமான கலிங்கத்து அருகாமை தமக்குக் கைகொடுத்திட ‘வம்சதாரா’ என்ற புதினத்தை எழுதியபோதே தனக்கென்று ஒரு பாணியையும் வகுத்துக் கொண்டுவிட்டார் திவாகர்.

‘திருமலைத் திருடனும்’ ‘விசித்திர சித்தனும்’ வெளிவந்தபோது சரித்திரம் அவர் கைகளில் மெருகுடன் கலையுரு பெற்றன.

ஆனால், எஸ். எம். எஸ். எம்டன் கதை முற்றிலும் வித்தியாசப்பட்டது. அதன் முக்கிய காரணம், இரண்டு வெவ்வேறு காலத்து சரித்திரங்கள் பிற்காலத்து மாந்தர்களின் கதையால் பிணைக்கப்பட்டுள்ளன. பின்னணிகள் முற்றிலும் துருவங்களால் பிரிக்கப்பட்டவை. இருப்பினும் அவற்றில் பக்திப் பின்னணியுடன் ஓர் ஒருமையைப் புகுத்தி, அதையும் உயிரோடவிட்டிருக்கும் பெருமை திவாகரையே சாரும். ஆங்கிலத்தில் ‘க்ளோக் அண்ட் டேகர் மிஸ்டரி’ என்ற வகையாக, படிப்பவரை நாற்காலியில் விளிம்பில் அமர்த்திவிடும் தன்மை கொண்டதாக கதை உள்ளது. கதையைப் படித்துத்த்தான் அதன் வலிமையை தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் அதன் பரிமாணத்தை விட்டகன்று, நான் அதிசயப்பட்ட பின்னணியை மட்டும் பற்றிக் கூற விரும்புகிறேன்.

எனது நூலான ‘மதராசபட்டின’த்தில் (பக்கம் 120) - ‘மதராசபட்டினத்தில் குண்டு வீசிய எம்டன் கப்பலில் ஒரு இந்தியரும் பணியாற்றியிருக்கிறார், அவர் டாக்டர் சம்பகராமன்பிள்ளை என்பவர், இந்தியாவிலிருந்து மருத்துவப் படிப்புக்கு ஜெர்மனி சென்ற இந்த மனிதர் அதில் சேவை புரிந்ததாகத் தெரிகிறது’ என்று எழுதியுள்ளேன். இந்த விவரம் சரியானதா இல்லையா என்று தெரிந்துகொள்ள எவ்வளவோ முயன்றும் என்னால் இயலவில்லை. ஆனால் எம்டன் ‘க்ரூ மேனிஃபெஸ்ட்’டில் அவ்வாறு ஒரு பெயரும் இருக்கவில்லை என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். ஆனால் அவ்வாறு அளிக்கப்பட்ட பட்டியல் எவ்வளவு தூரத்திற்கு நம்பத்தகுந்தது என்று என்னால் கூற இயலவில்லை. ஆகையால் இக்கதை எவ்வாறு உண்டானது என்பதை என்னால் ஆராய்ந்து கூறவும் முடியவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது சென்னை வந்திருந்த எம்டனைப் பற்றி ஆராய்ந்த ஜெர்மானியரும் (ஜோஷிம் பாட்ஸ்) இந்தியர் பெயர் ஒன்றும் பட்டியலில் இருக்கவில்லை என்றுதான் சொன்னார்.

ஆகையால் நாம் அறிந்துகொள்ளக்கூடியவை:

1. எம்டன் மதராசை 1914 செப்டெம்பர் மாதம் 22ஆம் நாள் இரவு தாக்கியது
2. சுலபமாக மதராசை அது அழித்திருக்கமுடியும். ஆனாலும் அவ்வாறு செய்யாது ஏதோ ஒரு காரணத்தால், 130 குண்டுகளை மட்டும் துறைமுகத்து எண்ணெய் டேங்குகள் மீது வீசிவிட்டு, உடனே திரும்பிவிட்டது
3. இந்தப் பின்வாங்கலுக்கு சரியான காரணம் ஏதும் கூறப்படவில்லை
4. சம்பகராமன் பிள்ளை என்ற ஒரு டாக்டர் அக்கப்பலில் இருந்ததாகக் கூறப்பட்டாலும் அம்மாதிரி பெயர் ஒன்றும் பட்டியலில் காணப்படவில்லை.

இந்த முக்கிய நான்கு விவரங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் திவாகர்.

பின்வாங்கலுக்குக் காரணம் ஒரு இந்தியராக இருக்கலாமோ என்ற ஒரு ஐயத்தை உண்டாக்குகையில் நாமும் அதை நம்புமாறு ஒரு பிரமையும் உண்டாக்கிவிடுகிறார். அவர் வார்த்தைகளில் கூறவில்லை என்றாலும், ஒரு போர்க்கப்பலில் மற்றொரு தேசத்தினர் இருப்பதை தஸ்தாவேஜுகளில் காப்டன் காண்பிக்காமலிருக்கலாம் என்று நம்மை நம்ப வைத்துவிடுகிறார். இது இந்தப் புதினத்திற்கு ஒரு மிக்க வலிமையான பின்புலத்தை அளித்துவிடுகிறது

ஆங்கிலப் போர்க்கப்பல் ‘யார்மவுத்’ போல நான்காவது புகைப்போக்கியை வைத்துக் கொண்டு ஏமாற்றி இந்துமகா சமுத்திரத்தில் வலம் வந்த போதும் கோகோ தீவுகள் அருகே எம்டன் ஆஸ்திரேலியக் கப்பல் ‘சிட்னி’யால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு, தரை தட்டி நின்றதும் 131 மரணங்களும் 65 வீரர்கள் காயமடைந்து இருந்ததும் சரித்திர உண்மைகள். திவாகரின் கதை இவற்றில் சற்றும் பிறழாது முன்செல்கிறது.

சரித்திரப் பின்னணி தவிர இந்து ஆகம விதிமுறைகளும் சிவாச்சாரியார்களின் ராஜபக்தியும், படிப்பவரை ஆச்சரியத்தில் திளைக்க வைக்கின்றன. மகுடாகமத்தினைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ளுமாறு எழுதியுள்ளார். புதினத்தில் வரும் பாத்திரங்களான சிவபக்தர்கள், ராதை, சிதம்பரம், துரைமார்கள், நோபிள், கப்பல் காப்டன் மூல்லர் மற்றும் மிக்கே முதலானோர், நூலைப் படித்து முடித்த பின்னரும் நம் மனத்தை விட்டு அகல மறுக்கிறார்கள்.

இதுதான் திவாகரின் வெற்றி!

நரசய்யா
சென்னை-20
narasiah@yahoo.com

--------------------------------------------------------------------------

Labels: