Monday, March 30, 2009



திட்டக்குடி பெரியவரும் அறிஞர் அண்ணாவும்

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு வருடமான இந்த இனிய வருடத்தில் இந்தக் கட்டுரையின் நாயகன் என்னவோ அறிஞர் அண்ணா மாத்திரம் அல்ல என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்.

திட்டக்குடி தெரியுமா.. சென்னை-திருச்சி வழியில் இருப்பதாக நினைவு. அந்த திட்டக்குடி என்கிற ஊரைச் சார்ந்த 86 வயது திரு கந்தசாமி முதலியார் என்கிற இளையவர்தான் நம் கட்டுரை நாயகன். அந்த இளைஞரை நேற்று சந்திக்கும் அவகாசமும் அவர் மகன் மூலம் கிடைக்கப்பெற்றேன். அவரது பிறந்தநாளை அவர் மகன் கமாண்டர் சின்னையாவும் மருமகள் டாக்டர் ஜெயந்தியும் விமரிசையாகக் கொண்டாடினர். இதற்காகவே அவரை திட்டக்குடியிலிருந்து மகன் தற்சமயம் வசிக்கும் விசாகப்பட்டினம் வரை அழைத்துவந்திருந்தார்.

சின்னமுகம்தான். ஆனால் கூரிய பார்வை. அவரிடம் நாம் ஏதாவது பேசினால் ஊர் பூராகக் கேட்குமாறு கத்திப் பேசவேண்டும். அதே சமயம் காது கேட்காததால் மற்றவர்கள் முகங்களைப் பார்த்தே அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை ஓரளவு ஊகிக்கும் கிரகிப்புத்தன்மை.. பார்வையில் கண்ணியமும் கட்டுப்பாடும் சற்று அதிகமாகவே எனக்குத் தென்பட்டது போல ஒரு பிரமை..

முதலில் ஏதும் பேசவில்லை. ஒரு சிறு சிரிப்புடன் அமர்ந்திருந்தவரை சற்று பழைய ஞாபகத்துக்கு அழைத்துச் சென்றாலென்ன என்று தோன்றியது. மகன் மூலமாகக் கேட்டு வைத்தேன். அவ்வளவுதான்.. ஆரம்பித்துவிட்டார். (அவர் குரல் 86 வயதுக்காரராகவே இல்லை. 26 வயதுக் கம்பீரமான குரல்)

“நான் அஞ்சாம்கிளாஸ் வரைக்கும் அப்படி இப்படின்னு எப்படியோ படிச்சுட்டேன்.. ஆறாங்கிளாஸிலிருந்து படிப்பு சுத்தமா ஏறலே. படிக்க இஷ்டப்படாமே திரிஞ்சிண்டிருந்தவனை எங்க ஊரு விளையாட்டுக் கிளப் மேனேஜர் கூப்பிட்டார். என்ன இப்படியெல்லாம் இருக்கலாமா.. இதோ பார்.. நீ பள்ளிக்குப் போய் படிக்காட்டா பரவாயில்லே. இந்தப் புத்தகத்துலே இந்த எழுத்தையாவது அப்பப்ப படிச்சுடு.. என்ன?..’ அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டு ‘தசாவதாரம்’னு ஒரு கதையை என் முன்னாடி போட்டார். அதுல ஒரு வாழ்த்துச் செய்தி..”

உடனே நான் கேட்டேன். தசாவதாரம்' ன்னா கடவுள் அவதாரம் பத்தியா? எந்த வருடம் னு சொல்லுங்க..

முதலியார் உடனேயே சொன்னார். “சரியா 1945ஆம் வருஷம். அந்த தசாவதாரம் ன்கிறது சி.என்.ஏ என்கிற பேரறிஞர் அண்ணா எழுதினது. அதுல முதல் பகுதி படிச்சேன். அவ்வளவுதான்.. அதுல ஒரு பொங்கல் வாழ்த்து வரும். அதை இப்படி எழுதுவார்" (என்று திட்டக்குடியார் கடகடவென பேரறிஞர் அண்ணா பேசுவது போலவே அந்த அடுக்கு மொழியில் ஒரு ஐந்து நிமிடங்கள் தங்கத் தமிழில் பேசி கலக்கு கலக்கி விட்டார் போங்கள்!). அசந்துபோய்விட்டோம் என்றுதான் சொல்லவேண்டும்.

எங்கள் முகங்களில் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்தவர் மறுபடியும் தொடர்ந்தார்.

"அந்தப் புத்தகம்தான் நான் ஒழுங்கா படிச்ச முதல் புத்தகம். அதுக்கப்புறம் சி,என்.ஏ வின் எழுத்து எங்கே இருந்தாலும் தேடிப் போய் படிக்க ஆரம்பிச்சுடுவேன். சி.என்.ஏ பேச்சுன்னா போதும்.. விழுந்துப் பிடிச்சு எப்படியாவது போயிடறதுதான். சி. என். ஏ தான் எனக்கு எல்லாம். அப்படி இருந்தது அவர் பேச்சும் எழுத்தும். அந்தக் காலத்துலே. பாருங்க.. ஒரு தடவை காரைக்குடி அழகப்பா செட்டியார் சென்னையில் ஒரு பெரிய நகைக் காரரிடம் சொல்லி திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஒரு வைரமுடி செய்யச் சொல்லி அந்த வைர முடியையும் நகைக் கடை வாசலிலே பாதுகாப்பா எல்லார் பார்வைக்கும் கொஞ்ச நாள் இருக்கட்டும்மே’ ன்னு வைக்கச் சொல்லி அதுக்கு விளம்பரமும் பேப்பரிலே கொடுத்தார். பாக்கணுமே கூட்டத்தை.. திருப்பதிலே கூட அவ்வளோ கூட்டம் கிடையாது. சி.என்.ஏ க்கு கோபம் வந்துட்டுது. எல்லோரையும் ஒரு வாங்கு வாங்கி விட்டார். இந்தப் பணம் இவ்வளவு போட்டுச் செய்யவேண்டும் என்று அங்கே ஆண்டவன் கேட்டானா.. இதற்கான பணம் எல்லாம் நல்ல வழியில் சம்பாதிக்கப்பட்டதா.. புண்ணிய வழியா இது.. இல்லை.. பாபத்தைக் கழிக்கும் வழியா..’ அப்படின்னு அவர் அடுக்கு மொழியிலே ஒரு கட்டுரை எழுதினார் பாருங்க.. இப்படி இல்ல கேள்வி கேக்கணும்.. அப்படின்னு அப்பவே நான் நினைச்சுதுண்டு.’ (அண்ணாவின் அடுக்கு மொழியில் அப்படியே எங்களுக்கு அதைத் திருப்பித் தந்தார்)

"இதைவிட இன்னொரு சம்பவம் அப்ப நடந்துடுச்சு.. நிக்கோலஸ்தீர்ப்பு ன்னு ஒரு கட்டுரை.. சி.என்.ஏ ரொம்ப புத்திசாலித்தனமா அதுல நாட்டு நிலவரம் பத்தி எழுதினாரு.

நிக்கோலஸ் னு ஒரு இங்கிலீஷ் பத்திரிகைக்காரன் இந்தியா பூரா சுத்திப் பார்த்துட்டு போகிற போக்கிலே ‘இந்தியாவுல இந்தியனே இல்லை’ னு ஒரு கமெண்ட் குடுத்துட்டுப் போயிட்டான். இங்கே இருந்த இந்தியாக் காரங்களுக்கு அது பிடிக்காமப் போய் நிக்கோலஸ் இப்படி சொல்லலாமா? இந்தியாவுல இந்தியன் இல்லாமல் இங்கிலாந்துக்காரனா நிறைய இருக்கான்’ னு வாங்கு வாங்குன்னு பத்திரிகைல திட்டி எழுதினாங்க. சி.என்.ஏ பார்த்தார்.

‘கோயமுத்தூரிலே கௌண்டரும், திருநெல்வேலியிலே பிள்ளைமாரும், மதுரையிலே நாட்டாரும், ரெட்டி, கம்மா, நாயுடு என ஆந்திரத்திலும் கர்நாடகாவில் கௌடாவும், பாலக்காட்டில் நாயரும், இன்ன பிற வட மாநிலங்களில் இத்தனை இத்தனை ஜாதிகளுமாய் இந்த தேசத்தில் பரவி இருக்கிறார்களே ஒழிய இந்தியன் என்பவன் இங்கு இல்லை என்பதில் என்ன தவறு? நிக்கோலஸ் தீர்ப்பு சரிதானே..”

என்று எழுதியதையும் அவர் சொன்னதை இங்கே நான் சுமாராகத்தான் எழுதினேன். ஆனால் அண்ணாவின் அடுக்கு மொழியில் நம் கந்தசாமியார் அதை சொன்னபோது சற்றுப் சுடத்தான் செய்தது. தமிழும் சரி.. அண்ணா சொன்ன அந்த உண்மையும் சரி..

பேரறிஞர் அண்ணாவின் லட்சியம், இளைஞர்களை கவர்ந்திழுக்க அந்தக் கால அவலங்களை அண்ணா சாடிய முறை, அண்ணா இயக்கத்தை வளர்க்கப் பட்ட கஷ்டங்கள்.. அவர் தமிழ்.. எல்லாமும் புரிந்தது

இந்தச் சந்திப்பின் போது இன்னொரு விஷயமும் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அந்தக் காலத்து இளைஞர்களை தன்வசம் இழக்க அண்ணாவின் தலைமை எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது. அந்தக் கவர்ச்சி ஒவ்வொரு சமயம் தற்சமயம் இருக்கும் சினிமாக் கவர்ச்சியை விட மிக மிக அதிகமான அளவில் செல்வாக்கோடு இருந்திருக்கவேண்டும்.. தீந்தமிழையும் சுயமரியாதை என்ற மாபெரும் உணர்ச்சியையும் எப்படியெல்லாம் தமிழர்கள் மனதில் கலந்து விதைத்தார்கள் என்றும் புரிந்தது. அன்று அண்ணா விதைத்த அந்த விதைதான் மாபெரும் தோட்டமாக இப்போது விரிந்து அந்தப் பலன்களையெல்லாம் கழகத்தார் அனுபவித்துக் கொண்டிருப்பதும் புரிந்தது.

ஆனால் மற்ற கழகத்தார் போலவோ, அல்லது அண்ணாவின் அடியார்களைப் போலவோ நம் திட்டக்குடி கந்தசாமி முதலியார் ஏன் அரசியல்வாதியாக கடைசிவரை மாறவே இல்லை. ஏன் இன்னமும் சி.என்.ஏ வின் புகழ் பாடி அந்தக் காலத்துப் பேச்சுகளை மறக்காமல் நினைத்து நினைத்துப் பேசுகிறார்.. ஒருவேளை அண்ணாவின் மற்ற அடியார்களைப் போலவே இவரும் ஒரு அரசியல்வாதியாக மாறியிருந்தால் இந்த 86 வயதில் எத்தனைவிதமான பதவிகளையெல்லாம் அனுபவித்திருக்கலாம்.. ஏன் அவரை அந்த நிலைக்கு மாற்றிக்கொள்ளாமல் ஒரு ரசிகனாகவே மட்டும் இருக்கிறார்..

அவர் மகனிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டேன். அவர் சொன்னதை அப்படியே தருகிறேன்.

“சார்.. எங்கப்பா இதைவிட பக்தியை அருட்பெருஞ்சோதி ராமலிங்க அடிகளிடம் வெச்சிருந்தார் சார். இப்ப வரைக்கும் அவர் மகிழ்ச்சியாகவே இருக்கார். இது இல்லே மனுஷனுக்குக் கடைசிலே வேணும்.. பாருங்க அவர் எளிமையை..”

மகன் சுருக்கமாகத்தான் சொன்னார். ஆனாலும் பல விஷயங்கள் தெளிவடைந்தன.

திவாகர்








17 Comments:

At 6:12 AM, Blogger s gowtham said...

Thank u sir. I felt guilty that i could not attend a rere oppurtunity given by commander. By rading yr katturai, i got everything about that elderly great man's life.

If he is there on 14th y not v request him to come to mandram.

Gowtham

 
At 6:36 AM, Blogger yrum said...

Nice post sir. Anna book ethavathu padikanum pola iruku!

 
At 9:53 AM, Blogger vizagtamil said...

Dear Sir,

I feel honoured for two reasons:
i) You were here with us yesterday when we celebrated my father's birthday
ii) You have posted a fantastic essay in your blog touching upon the event, history of my father , his craving for CNA's works and about his speech.

I admire you have captured the entire discussion covering each and every point and presented with a fine flow. You have not missed out any thing..

Fantastic memory..

By any chance have you secretly recorded all the discussion in a tiny recording device..

In the process you have subtly infused your views about " Kazhakam" ...

Great .....

I thank God, He has introduced me to a great historian and a great writer, named " V Dhivakar" whom I can call proudly as a 'Friend, philosopher and Guide"



Shortly I will post about my Father, his politics & spirituality

Cdr K Chinnaiya

Indian Navy ( Retd)

Presently with L & T

 
At 10:24 AM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எத்தனைவிதமான பதவிகளையெல்லாம் அனுபவித்திருக்கலாம்.. ஏன் அவரை அந்த நிலைக்கு மாற்றிக்கொள்ளாமல் ஒரு ரசிகனாகவே மட்டும் இருக்கிறார்//

ஹா ஹா ஹா
பதிலை நீங்களே சொல்லிட்டீங்களே திவாகர் சார்!
அவர் "ரசித்தார்" - ரசிப்புக்குப் பாரம் இல்லை!
"அனுபவித்தால்" - பாரம் உண்டு!

வித்தியாசமான பேரறிஞர் அண்ணா நினைவுகள்! :)

 
At 10:23 PM, Blogger V. Dhivakar said...

கௌதம், நிச்சயமாக அழைப்போம் //

வைரம்: அண்ணா'வின் பல புத்தகங்கள் வெளியே கிடைக்கின்றன. அண்ணாவைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள கண்ணதாசன் புத்தகங்களையும் நீங்கள் படிக்கவேண்டும். நடுநிலையான கருத்துகள் அவை.

கமாண்டர் சின்னையா சார்!
நல்ல தந்தையை யார் அடைந்தாலும் அவர்கள் கொடுத்துவைத்தவர்தாம். நீங்களும் அப்படியே.

அன்று நினைவில் வைத்ததைதான் எழுதினேன். இப்படி ஒரு தமிழமுதம் கிடைக்கும் என முன் கூட்டியே என்று தெரிந்திருந்தால் ரிக்கார்ட் செய்திருக்கலாம். இப்படிப்பட்ட விருந்துக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி!

கே.ஆர்.எஸ்,
"ரசித்தார்" - ரசிப்புக்குப் பாரம் இல்லை!
"அனுபவித்தால்" - பாரம் உண்டு!

வழக்கம்போல உங்கள் ஸ்பெஷல் பஞ்ச்' இது. உண்மைதான்.


திவாகர்

 
At 11:19 PM, Blogger manoharan said...

அன்பு திவாகர்,

அந்த பெரிய மனிதரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. ஆனால் வேறு அலுவல் காரணமாக நான் நீ வருவதற்கு முன்பே கிளம்பி விட்டேன்.
என்ன எளிமை, சிரிப்பு, வார்த்தை, பேச்சு என்ன குரல்.
கந்தசாமி முதலியாரை காண இந்த ஆசாமிக்கு வழி அமைத்து தந்த அவர் மகனுக்கு என் நன்றி

மனோகர்

 
At 11:40 PM, Blogger V. Dhivakar said...

மனோகர்,

அவர் பேசும்போது நீ இருந்திருக்கவேண்டும் என்று அப்போது நானும் நினைத்ததுண்டு

திவாகர்

 
At 6:59 PM, Blogger Vijay said...

"எளிமை" - consciously contended. Not many reach this state and life is a constant search, for the select few who have reached this state, its constant bliss.

Nice post sir. the tamil flow was very different and eye opening for someone who has heard the name of Anna only in political party's names.

rgds
vj

 
At 9:59 PM, Blogger V. Dhivakar said...

Thanks Vijay.
I like CNA in many counts including his politics - and his poetic and timely adjustments at times.

Dhivakar

 
At 4:38 AM, Blogger geethasmbsvm6 said...

தந்தையைப் பற்றி மகன் சொன்ன கடைசிவார்த்தைகள் மனதைத் தொட்டன. நல்ல அருமையான பேட்டி. முடிஞ்சால் இவரைப் பற்றி ஒரு புத்தகமே போட்டுடுங்க. இப்படி ஒரு மனிதர் இருக்கிறதே இதுவரை தெரியாது. நன்றி.

 
At 2:49 AM, Blogger V. Dhivakar said...

கீதாம்மா!

(((((((((:-
))))))))):-
இப்படி ஏதாவது குறியீடு போடுவீங்களே.. அப்படிப் போடலாமான்னு பார்க்கிறேன்.

தி

 
At 1:08 AM, Blogger கிருஷ்ண மூர்த்தி S said...

1965 ஆம் ஆண்டுகளில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், இளம் மாணவனாக விவரம் அறியாப் பருவம், இந்த மாதிரி பேச்சாளர்களை நம்பி ஏமாந்த சொந்த அனுபவமே என்னைப் போன்றவர்களுக்கு இருக்கிறது.

அ'னாவை அடுத்து அ'னா, க'னாவை அடுத்து க'னா என்ற ரீதியில் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு விதமான எதுகை மோனையுடன், கண்டிப்பாக மூக்கினால் பேசுவது போலக் கரகரத்த குரலில் தான் பேச வேண்டும் என்கிற மாதிரியான விசித்திரமான பேச்சாளர்கள், மக்களுக்கு இலவசமாகக் கிடைத்த பொழுதுபோக்காக அன்றைக்கு ஆகிப் போனார்கள். விவரம் தெரியாதவர்கள்இவர்கள் பின்னால் போனார்கள்.

Pied Piper கதை தான் நினைவுக்கு வருகிறது. அதில் வரும் குழலூதுபவன் பின்னால் சிறுவர்கள் போய்த்திரும்பி வராமல் போன மாதிரி, இரண்டு தலைமுறைகளையே தமிழ்நாடு இழந்திருக்கிறது!

 
At 1:10 AM, Blogger geethasmbsvm6 said...

//இரண்டு தலைமுறைகளையே தமிழ்நாடு இழந்திருக்கிறது!//

வரும் தலைமுறைகள்???? கண் கெடும் முன்னே சூரிய நமஸ்காரம் செய்ய வைக்கலாமே! வாழ்த்துகள்.

 
At 1:52 AM, Blogger V. Dhivakar said...

கிருஷ்ணமூர்த்தி அவர்களே! உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதே சமயத்தில் சில 'பாஸிடிவ்' விஷயங்கள் : நல்ல தமிழ் - அது மேடைப்பேச்சாக இருந்தாலும் எழுத்தாக இருந்தாலும் மக்களிடம் ஈர்க்கும் வகையில் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பு நோக்குகையில் வளர்ச்சி விஷயத்தில் தமிழ்நாடு சற்று பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

திவாகர்

 
At 3:21 AM, Blogger C.Rajendiran, Founder ,www.voiceofvalluvar.org said...

எழுத்து, எழுத்தின் நாயகன், நாயகனினின் நாயகன்... அனைத்துமே அருமை... பெரியவரையும், பேரறிஞர் அண்ணாவையும் வணங்குகிறேன் எழுதியவரையும்வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்

 
At 5:52 AM, Blogger குமார் said...

இரண்டு தலைமுறைகளாக‌ தமிழகம் எதையும் இழக்கவில்லை.தி.மு.க.ஆட்சி ஆரம்பித்த காலத்தில் காங்கிரஸ் பணக்காரர்கள் மற்றும் ஜமீன்தார்களின் கட்சியாய் இருந்தது.பணக்காரர்கள் மற்றும் ஜமுன்கள்‌மட்டுமே எம்.எல்.ஏ.,எம்.பி.ஆக முடியும்.்அவர்கள் வைத்துதான் சட்டம்..அவர்கள் சொல்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.தஞ்சை மாவட்டத்தில் குத்தகை அவர்களும்,விவசாயக் கூலிகளும் அடிமைகள் போல் நடத்தப்பட்டனர்.இதையெல்லாம் மாற்றியமைத்தது தி.மு.க

 
At 6:29 AM, Blogger Selvaraj said...

I am P.Selvaraj, a close friend of Mr.Chinnaiah and I hail from a village called Labbaikudikadu, which is 8km from Titagudi. I met father of Mr. Chinnaiah, when we were 18 years old. In the first meeting which took place in Mr.Chinnaiah's house, his father showed me a photo of his friend, who was a Muslim from my native place. His friendship transcended religion and I could sense the influence of Mr.C.N.Annadurai on him. He was young at his heart in seventies as well, and he learnt to drive TVS 50, and happily commuting from his house to his shop. He had a s0trong sense of humor and concern for the people around him, and I enjoyed his company. Thank you Mr.Diwakar.

 

Post a Comment

<< Home