மங்களாபுரியும் சாக்ஸபோன் இசையும்
அன்புள்ள தோழர் தனஞ்ஜயன் அவர்களுக்கு,
தத்தித் தத்தித் தமிழ் பேசினாலும் தித்திக்கும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு என்னுடைய பாராட்டுகள். தமிழ் தத்தினாலும், விடாப்பிடியாக அந்த மொழியிலேயே பேசுவேன் என்று பேசினீர்களே அந்த உங்கள் பிடிவாதம் எனக்குப் பிடித்திருக்கிறது.
மங்களூர் (மங்களாபுரி என்று இன்னமும் பெயரை மருவாமல் மலையாளவர் அழைக்கிறார்கள்) அருகே கதிரி மஞ்சுநாதர் ஆலயத்தில் எல்லாம்வல்ல மஞ்சுநாதனை ஆசைதீர தரிசித்தவுடன் உங்கள் அறிமுகம் கிடைத்தது ஆச்சரியம்தான். பொதுவாக எங்களைப் போன்ற தமிழருக்கு நாதஸ்வர கீதம் மிகப் பரிச்சயமான ஒரு நாதம். ஆனால் நீங்கள் வாசிக்கும் ‘சாக்ஸபோன்’ சமீப காலமாகத்தான் அதுவும் ஒரு சினிமா மூலம்தான் அதிகமாக அறிய வந்தோம் என்பதை சற்று வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன். ‘டூயட்’ படம் வராவிட்டால் இந்த வாத்தியம் பற்றி எங்கள் பொதுமக்களிடையே தெரியாமல் கூட போயிருக்கலாம்தான். அதைவிட ஆச்சரியம் இந்த சாக்ஸ்போன் மிகச் சிறிய அளவில் இருந்தது.. தமிழ்நாட்டின் நாதஸ்வரம் நீளமாக, கையில் தூக்கவே சிரமப்படும் வாத்தியமாகவும், ஆந்திராவில் ’சந்நாயி’ என்ற பெயரில் நாதசுரத்து நீளத்தில் முக்கால்வாசியாகவும் பார்த்திருக்கிறோம்.
அந்தப் படத்தில் சாக்ஸபோன் பின்னணியில் வாசித்த ‘கதிரி கோபால்நாத்’ அவர்கள் உங்கள் உறவினர் என்பது மட்டுமல்லாமல் உங்கள் குரு என்றீர்கள். கொடுத்து வைத்தவர்தான். அதனால்தான் புகழ்பெற்ற இந்த கதிரி மஞ்சுநாதர் ஆலயத்தில் வேளை தவறாமல் சுவாமிக்காக சாக்ஸ்போன் வாசிக்கிறீர்கள். மஞ்சுநாதர் அருளைத் தினந்தோறும் பெற்றுக் கொண்டே அந்த சுகமான இனிய நாதத்தையும் ரசித்துக் கொண்டே வாசிக்கும் உங்கள் புனிதமான பணி பூர்வஜன்ம புண்ணியம்தானே. எத்தனை இசைக் கலைஞருக்கு கிடைக்கும் இப்பேர்ப்பட்ட புனிதப்பணி என்று நினைத்துப் பார்த்து வியந்தேன் கூட. மஞ்சுநாதர் பக்கத்தே அமர்ந்திருக்கும் திரிலோகேசுவரர் இந்த மூன்று லோகத்தையும் ஆட்சி செய்தாலும் உங்கள் இசை என்று வரும்போது மயங்கத்தான் செய்வார் என்றுதான் நினைக்க விரும்புகிறேன்.
திரிலோகேஸ்வரர் எப்படிப்பட்ட அழகான ஐம்பொன் சிலையாக அந்தக் கோவிலில் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறார் என்று சொல்லவும் வேண்டுமோ. கலையழகும், லாவண்யமும், நேர்த்தியும் கைதேர்ந்த கலைஞன் ஒருவனால் வடிக்கப்பட்ட சிலையாக, அந்த சிலைக்கு உயிர்கொடுத்து அம்ர்ந்திருக்கிறார் என்பதையாவது சொல்லத்தான் வேண்டும். சரியாக 1048 வருடங்களுக்கு முன்பு வடிக்கப்பட்ட சிலை என்று அங்குள்ள சரித்திர குறிப்புகள் நமக்குத் தெளிவாகக் காண்பித்தாலும் (கி.பி.966) திரிலோகேஸ்வரன் மூன்று முகங்களுடன் எத்தனை வடிவழகனாக் இருக்கிறான் என்று அவனைப் பார்த்துக் கொண்டே அங்கேயே இருக்கலாம் என்று தோன்றியதை எப்படி விவரிக்கமுடியும்?.. இந்த இறையழகை வானிலிருந்து அப்படியே பூமிக்குக் கொண்டு வந்த அந்த அற்புதக் கலைஞன் யாரோ.. தேவனோ, ரிஷிபுத்திரனோ. கிங்கரனோ.. இல்லை இறைவனே இந்த பூவுலகில் இறங்க ஆசைப்பட்டு இப்படிப்பட்ட அற்புத ஐம்பொன் சிலையாய் கோலங்கொண்டு வந்தானோ.. இத்தனை கலையழகுடன் வடித்த அந்த சிற்பி யாரென்று தெரியாதுதான் இருந்தாலும் அவன் ஒப்பற்ற கலைஞன் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் உண்டோ.. இப்போதெல்லாம் ஓவியர்கள் தங்கள் வரையும் சித்திரத்தில் தங்கள் பெயரைக் கீழே கையெழுத்தாக வரைவார்கள். அப்படியெல்லாம் அந்தக் கால கலைஞர்களும் செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..
திரிலோகேஸ்வரர் எப்படிப்பட்ட அழகான ஐம்பொன் சிலையாக அந்தக் கோவிலில் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறார் என்று சொல்லவும் வேண்டுமோ. கலையழகும், லாவண்யமும், நேர்த்தியும் கைதேர்ந்த கலைஞன் ஒருவனால் வடிக்கப்பட்ட சிலையாக, அந்த சிலைக்கு உயிர்கொடுத்து அம்ர்ந்திருக்கிறார் என்பதையாவது சொல்லத்தான் வேண்டும். சரியாக 1048 வருடங்களுக்கு முன்பு வடிக்கப்பட்ட சிலை என்று அங்குள்ள சரித்திர குறிப்புகள் நமக்குத் தெளிவாகக் காண்பித்தாலும் (கி.பி.966) திரிலோகேஸ்வரன் மூன்று முகங்களுடன் எத்தனை வடிவழகனாக் இருக்கிறான் என்று அவனைப் பார்த்துக் கொண்டே அங்கேயே இருக்கலாம் என்று தோன்றியதை எப்படி விவரிக்கமுடியும்?.. இந்த இறையழகை வானிலிருந்து அப்படியே பூமிக்குக் கொண்டு வந்த அந்த அற்புதக் கலைஞன் யாரோ.. தேவனோ, ரிஷிபுத்திரனோ. கிங்கரனோ.. இல்லை இறைவனே இந்த பூவுலகில் இறங்க ஆசைப்பட்டு இப்படிப்பட்ட அற்புத ஐம்பொன் சிலையாய் கோலங்கொண்டு வந்தானோ.. இத்தனை கலையழகுடன் வடித்த அந்த சிற்பி யாரென்று தெரியாதுதான் இருந்தாலும் அவன் ஒப்பற்ற கலைஞன் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் உண்டோ.. இப்போதெல்லாம் ஓவியர்கள் தங்கள் வரையும் சித்திரத்தில் தங்கள் பெயரைக் கீழே கையெழுத்தாக வரைவார்கள். அப்படியெல்லாம் அந்தக் கால கலைஞர்களும் செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..
அது சரி தனஞ்சயன் அவர்களே! பரசுராமர் கேட்டுக் கொண்டதற்காக இங்கே தானாக வந்து கோயில் கொண்ட மஞ்சுநாதருக்கு இடப்பக்க வராண்டாவில் இருக்கும் ஐம்பொன் விக்கிரகங்களான விஷ்ணு சிலையும் புத்தர் சிலையும் ஏன் எப்படி வந்தது என்று ஒரு சரித்திரமும் இல்லையே.. ஏன்?.. எத்தனைதான் புத்தர்சிலையை நீங்கள் வியாசபகவான் என்று பெயர் எழுதி வைத்திருந்தாலும் அந்த ஐம்பொன் சிலையின் தலைப்பகுதி புத்தருக்கே உரியது என்று ஏனைய சரித்திர ஆய்வாளர்கள் சொல்வதையும் நாம் கேட்டுக் கொள்ளவேண்டும் இல்லையா.. அது சரி, இதையெல்லாம் நாம் ஏன் பிரச்சினையாக ஆக்கவேண்டும் என்கிறீர்களா?.. உண்மை.. நானும் உங்கள் கட்சிதான்.. பிரச்சினை ஆக்கவில்லை.. மனதுள் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்திக்கவே கேட்டேன்.
ஆனாலும் ஒன்றை நிச்சயமாகக் கவனித்தேன்.. மனிதனுக்குதான் மதமே தவிர ஆண்டவனுக்கு ஏது மதம்.. சதா சண்டைக்கு ஏங்கும் மனிதனுக்கு மதம் ஒரு பொழுதுபோக்கு.. ஆனால் எங்கும் நிறைந்த இறைவன் மதத்தை மதிப்பதில்லை. அதனால் நம் சிவன் கோயிலில் விஷ்ணுவும் புத்தரும் துர்காதேவியும் வணங்கப்படுவது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லைதான்.
இன்னொன்று என்னை மிகவும் கவர்ந்தது கோயிலுக்கு மேற்புறம் உள்ள அந்த ஏழு குளங்கள்தான். கதிரி ஊர் பூராவுமே மலைப்பகுதியின் தாழ்வில்தான் அமையப்பெற்றதைக் கண்டேன்.. ஆனாலும் கோயிலுக்கும் மேலே குளம் (குளங்கள்) அமைந்திருக்கும் அழகே அழகு.. ஒரு ஊற்றிலிருந்து வந்த தண்ணீர் ஏழு குளங்களுக்குப் பிரிகிற அந்த இயற்கைக் காட்சியும் கண்கொள்ளாததுதான். கங்கைநதியின் நீர்தான் அந்த ஊற்றுத் தண்ணீராக வருகிறது என்பதாக நம்பப்படுகிறது என்று சொன்னீர்கள்.
நான் நம்புகிறேன் தோழரே! சிவபெருமானின் தலையில் ஜம்’மென அமர்ந்திருக்கும் கங்கை, சிவனிருக்குமிடமெல்லாம் நிறைந்திருப்பது வாஸ்தவம்தானே.. அதுவும் இயற்கையெழில் சூழும் கதிரி’யைப் பார்த்த பின்னும் சும்மாவேனும் உட்கார்ந்திருப்பாளா.. அங்கே அவளும் எட்டிப்பார்க்கத்தானே செய்வாள்.
கோயிலுக்கு வெளியே எங்கள் உமை, துர்கா பரமேசுவரியாக கொலுவிருந்தாலும் அவள் சாந்தம் எல்லோரையும் கவர்கின்றதை எப்படி வர்ணிக்கமுடியும்.. கணபதிக்கும் ஐயப்பனுக்கும் தனிச் சன்னதி அமைத்த முன்னோர்கள் முருகனுக்கும் ஒரு சன்னிதி அமைத்திருக்கலாம்.. ஆனால் நாகவடிவில் சுப்பிரமணியத்தை இந்தப் பகுதிகளில் வணங்குகிறீர்கள் என்பதும் தெரியும்.
நீங்கள் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் இந்தக் கடிதத்தில் எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெரியும்.. இதோ அந்த விஷயத்துக்கு வருகிறேன். கர்நாடகா மாநிலத்தில் தர்மஸ்தலா எனுமிடத்தில் அமைந்துள்ள ‘மஞ்சுநாதர்’ ஆல்ய வளாகத்தில் எந்நேரமும் அணையா அடுப்பு இருந்து ஆயிரக்கணக்கில் அன்னதானம் வழங்கப்படுவதைப் போல இங்கே கதிரி மஞ்சுநாதர் ஆலயத்திலும் உண்டு என்பதையும் சொன்னீர்கள். நான் மாலைநேரத்தில் வந்ததால் அன்னபிரசாதம் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் இருந்ததை நீங்கள் நன்கு உணர்ந்ததால் கதிரி மஞ்சுநாதர் ஆலயத்தில் தினமும் மதியம் மூன்று வரை வார நாட்களில் ஆயிரம் பேருக்கு மேலும் சனிக்கிழமையும் திங்கட்கிழமையும் மட்டுமாக சுமார் மூவாயிரம் பேருக்கு மேலும் அன்னதான பிரசாதம் கிடைக்க வழி செய்திருப்பதாக தெரிவித்தீர்கள்.
’அன்னம் பரப்ரம்ஹ ஸ்வரூபம்’ என்பதற்கேற்ப, அன்னை துர்கா பரமேசுவரியின் சந்நிதி அருகேயே கட்டப்பட்டிருந்த அந்த பிரும்மாண்டமான அன்னதானக் கூடம்’ பார்த்தேன். ‘இல்லி அடிகே ஏனு ஆகுதிரி’ (இங்கே என்ன் சமையல் செய்வீர்கள்) என்று எனக்குத் தெரிந்த கன்னடத்தில் வேடிக்கையாக கேட்டதற்கு நீங்கள் சீரியஸாக தமிழில் சொன்னது நிறைவாக இருந்தது. தினமும் ஒரு பொரியல், ஊறுகாய், சாம்பார், சாதம் இவை சாதாரண வாரநாட்களிலும் சிறப்புப் பிரசாதமாக அன்ன வகையறாக்களுடன் பாயசமும் சனி, திங்களன்று வழங்கப்படுவதாகவும் தெரிவித்தீர்கள். அடுத்தமுறை வரும்போது அன்னதானபிரசாதம் வழங்கப்படும் நேரம் பார்த்து வாருங்கள் என்று நீங்கள் அழைத்தது அந்த மஞ்சுநாதனே அழைத்தது போலத்தான் பட்டது.
உங்களை சந்தித்ததின் மகிழ்வாக இங்கே உங்கள் புகைப்படத்தையும் பதிவுசெய்துள்ளேன். அடுத்தமுறை வரும்போது உங்கள் சாக்ஸபோன் இசையையும் ரசித்து, அன்னப் பிரசாதத்தையும் ருசித்துப் பார்த்து விட்டு அதற்குப் பின் மஞ்சுநாதனைத் தரிசித்தால் என்ன என்றும் தோன்றியது.
மங்களாபுரி கதிரி'வாழ் துர்கா பரமேசுவரி சமேத மஞ்சுநாத சுவாமி எல்லோருக்கும் அருள் புரிய வேண்டுகிறேன். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, மகிழ்ச்சியுடன் அன்பும் சேர்த்து
உங்கள்
திவாகர்
திவாகர்
பி.கு. : முதல்படமும் கடைசிபடமும் அடியேன் எடுத்தவை
ஏனைய படங்களுக்கு (picture courtesy) Thanks to OurKarnataka.com.
8 Comments:
அளவு குறைந்த நாதசுரம் - சந்நாயி - ஷெனாய் :))
கதிரி கோபால்நாத் 'டூயட்' படம் வரும்முன்பே தமிழகத்தில் பிரபலமானவர்.
தசாவதாரங்களில் புத்தரும் ஒருவர் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது என்பதால், அந்தச் சிலை புத்தராகவே இருக்கட்டுமே!
அடுத்த முறை பார்க்க வேண்டிய கோவில் லிஸ்ட்டில் இதையும் சேர்த்து விட்டேன்.
வணக்கம்.
கதிரி ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தங்கள் பதிவு அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டது. கர்நாடகாவில் கிளாரிநெட்டை தான் நாதஸ்வரத்துக்கு பதிலாக வாசிப்பது வழக்கம். கதிரியில் சாக்ஸபோன் என்பதுவும் புகழ் பெற்ற கோபால்நாத்தின் பிறந்த ஊர் என்பது மகிழ்ச்சியூட்டும் செய்தி. அடுத்த முறை மங்களாபுரி சென்றால் கதிரிக்கும் ஒரு விசிட் அடித்து விடுகிறேன். பகிர்வுக்கு நன்றி.
நான் சொல்ல நினைத்ததை திரு.வி.எஸ்.கே அண்ணா சொல்லிவிட்டார். ஒரு மேலதிகத்தகவல்.. நவக்கிரகங்கள் ஒவ்வொன்றின் அம்சமாகவே தசாவதாரங்கள் நிகழ்ந்ததாகவும் ஒரு கூற்று உண்டு. புதபகவானின் அம்சமாகவே புத்தர் கருதப்படுகின்றார்.
நானும் இந்தக் கோயில் இன்னமும் பார்த்ததில்லை. ஒரு வார இறுதியில் போக நினைக்கிறேன்.. அருமையான படங்களோடு நிறையத் தகவல்கள்.. பதிவுக்கு மிக்க நன்றி!!
நான் போயிருக்கிறேன் இந்த கோயிலுக்கு , அமைதியான அழகான கோயில்.மறுமுறை சென்றது போல் உள்ளது உங்கள் பதிவை படித்தது. மங்களாம்பிகை கோயில் சென்றீர்களா ?
நாங்கள் அங்கு போய் திரு ஹெக்டே அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் பார்த்தோம் .காலையில் அவர் பல பேர்களை சந்தித்து பிரச்சனைகள் தீர வழியும் சொல்லி தேவையான நிதியும் கொடுத்து உதவுகிறார். சிலர் திருமண பத்திரிக்கையை அவர் கையில் கொடுத்து ஆசிகள் வாங்க அவர்களுக்கும் அன்பளிப்பாக கணிசமான தொகை தருகிறார், நான் போயிருந்த போது ஒருவருக்கு திருமாங்கல்யம் கொடுத்து உதவியதைப்பார்த்தேன் .ஆனால் அவர் இப்படிச்செய்வது அவரது வலது கைக்குக்கு கூட தெரியாது என்கிற வகையில் அவரது தன்னடக்கம் என்னை மிகவும் கவர்ந்தது .தவிர அங்கு நடக்கும் அன்னதானம் சொல்ல வார்த்தைகள் இல்லை . தவிர திருட்டுபயமில்லாமல் செப்பல்களை கழற்றி வைக்கலாம் .நானும் அந்த புத்தர் போன்ற சிலையைப்பார்த்தேன் .எத்தனை தடவை இந்தக்கோயிலுக்குப்போனாலும் திரும்பவும் பார்க்கத்தோன்றுகிறது
கோவில் ஏற்கெனவே பார்த்துட்டேன். ஆனால் கடைசியில் போனதால் முழுசும் பார்க்க முடியலை என்பது வருத்தமே. நல்லதொரு பகிர்வு. இங்கேயானும் கோயிலில் அடியார்கள் சாக்ஸஃபோன், ஷெஹனாய் வாசிக்கிறார்களே, மின் வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தவில்லையே என சந்தோஷம் ஏற்படுகிறது.
தொடர
பதிவில் பதில் தந்து சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி!
Post a Comment
<< Home