Friday, June 08, 2007

துப்பறியும் சாம்பு (தேவனுக்கு அஞ்சலி-முடிவுரை)

1950-60 களில் துப்பறியும் சாம்புவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது என நினைக்கிறேன். அவ்வளவு பாப்புலர். தேவனின் சித்திரக்கதைகளாக வெளிவந்த 'துப்பறியும் சாம்பு வை 'மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் நாகேஷ் தத்ரூபமாக நமக்கு காட்டினார். அதன்பின் ஏராளமான நாடகங்களில் சாம்புவின் கதை மேடையேறியது. காத்தாடி ராமமூர்த்தி தொலைக்காட்சி தொடர் மூலம் சிறிது காலத்திற்கு சாம்புவின் புகழை தமிழுலகத்திற்கு பரப்பினார். தலைசிறந்த நகைச்சுவைக் கதையின் நாயகனான 'துப்பறியும் சாம்புவுக்கு தெரியாத கலை ஒன்று உண்டு என்றால் அது 'துப்பறிவதுதான்'.
தேவன் துப்பறியும் சாம்புவை எப்படி அறிமுகம் செய்கிறார் - சற்று படியுங்களேன்.
-------------------------------------------------------------------------------------
'நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்' என்று யாரோ -முட்டாள்தனமாக அல்ல- சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் 'முட்டாள்' என்றார்கள்.

'விளாம்பழம்' பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரி காதுகள்... கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிகொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை.. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளை சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சிமாகிவிட்டான்.."
-------------------------------------------------------------------------------------
தேவன் இப்படித்தான் ஒரு கதாநாயகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.. பின்னாளில் ரொம்ப ஃபேமஸாகி தன் ஆடை அலங்காரங்களை சற்று மாடர்னாக சாம்பு மாற்றிகொண்டாலும் அவன் முட்டாள்தனம் மட்டும் அவனோடு அப்படியே ஒட்டிகொண்டுவிட்டதை தேவன் அழகாக விவரிப்பார் கதை முழுதும்.

எல்லாமே சின்ன சின்னக் கதைகள். எல்லாமே படிக்கத் தெவிட்டாத தேன் துளிகளைக் கொண்ட கதைகள். ஒவ்வொரு கேஸிலும் சாம்புவுக்கு அதிருஷ்ட தேவதை எப்படியோ சமயத்தில் வந்து உதவுவது நம்பும்படியாகவே அமைத்திருப்பார் தேவன். இது எழுத்தாளரின் சாமர்த்தியம். அந்த சாமர்த்தியத்தை எல்லாக் கதைகளிலும் காண்பித்திருக்கிறார் தேவன்.

'முந்திரிப் பருப்பு - பருப்புத் தேங்காய்' என்றொரு கதை. இதை கல்யாணத்தில் சீர் பட்சணமாக வைப்பது வழக்கம் உண்டு. இந்தப் பட்சணம் என்றால் சாம்புவுக்கு உயிர். ராவ்சாகிப் நடராஜய்யர் வீட்டுக் கல்யாணத்தில் ஒரு தற்காப்புக்காகவும் திருட்டு ஏதும் நடக்காமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கென்றே சாம்பு வரவழைக்கப்படுகிறான் (சாம்பு உள்ள இடத்தில் திருடன் வரமாட்டானே!) ஆனால் அப்படியும் ஒரு இரட்டை வடம் கடிகாரச் சங்கிலி தவறிவிட்டது. இது சாம்புவுக்கும் அறிவிக்கப்பட்டு விட்டதால் கல்யாண வீட்டார் சற்று நிம்மதியோடு இருக்கிறார்கள்.

ஆனால் சாம்புவுக்கு இந்தத் திருட்டுப் போன பண்டத்தை விட அந்தப் பட்சணத்தின் மீதே ஒரு கண். எப்படியாவது யாருக்கும் தெரியாமல் அந்த முந்திரிப் பருப்புத் தேங்காயை சாப்பிட்டுவிடவேண்டும் என துடியாய் துடிக்கிறான். அதற்கும் சமயம் வாய்த்தது. எல்லோரும் நள்ளிரவு நேரத்தில் சற்று கண் அயர்ந்த சமயத்தில் சாமான் அறையில் வைக்கப்பட்டுள்ள அந்த பட்சணத்திற்காக திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து அந்த பட்சணத்தையும் கையில் தொட்டபோதுதான் கல்யாண வீட்டின் ஒரு தூரத்து உறவுக்காரியான தர்மாம்பாள் அவன் கையை பற்றித் தடுக்கிறாள். சாம்புவுக்கு பயம் உண்டாகிற்து.

'விடு அதை' தர்மாம்பாள் அதட்டுகிறாள்.

'நீதான் விடு' இது சாம்பு.

இப்படி சண்டை நடப்பதற்குள் பலரும் அங்கு வந்துவிட, அவர்களுள் ஒருவர் அந்த முந்திரிப் பருப்பு தேங்காய் பட்சணத்தில் விரிசல் இருப்பதையும் அதற்குள் அந்த இரட்டை வடம் சங்கிலி பளபளப்பதையும் பார்த்து விட்டு ' ஆஹா! சாம்பு திருட்டுப் பொருளைக் கண்டுபிடுத்துவிட்டார்.. இதோ இந்த தர்மாம்பாள்தான் திருடி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்' என்றும் கூவுகிறார்.

அதை தர்மாம்பாளும் அழுதபடி ஒப்புக்கொண்டாள். 'நான் யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில்தான் நகையைத் திருடி இந்த பட்சணத்தில் வைத்தேன். இந்த சாம்பு அதை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து பிடித்துவிட்டார்.. அவர் மந்திரவாதியோ..இட்சிணியோ.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. இந்த சாம்பு முகத்தில் விழிக்காமல் கொண்டு போங்கள்' ....
-------------------------------------------------------------------------------------

நான் முதன் முதலில் தேவன் எழுத்துக்களைப் பற்றி இங்கே எழுதும்போது 'கோபம் வருகிறது' என்ற கட்டுரையில் ஆரம்பித்தேன்.. இனியும் யாருக்காக கோபம் வந்தால் உடனே தேவனின் 'துப்பறியும் சாம்பு' படியுங்கள்.. கோபமெல்லாம் பறந்துவிடும்.

இத்துடன் தேவன் அஞ்சலியை தற்சமயம் முடித்துகொள்கிறேன்.
நீங்களும் கொஞ்சம் 'அப்பாடா' என்று கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ளுங்களேன்.

6 Comments:

At 7:36 AM, Blogger  வல்லிசிம்ஹன் said...

நன்றி. சாம்புவும் கோபுலு கைவண்ணத்தில் உயிர் கொடுக்கப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் அவர் பெயர் கோபால் என்று நினைக்கிறேன்.

 
At 4:52 AM, Blogger V. Dhivakar said...

நன்றி வல்லிசிம்ஹன்.
ஆம். அவர் பெயர் இன்ஸ்பெக்டர் கோபால்தான்.
திவாகர்.

 
At 6:35 PM, Blogger Geetha Sambasivam said...

நம்பிக்கை குழுமத்தில் பார்த்தேன் இந்தக்கட்டுரைகளை. தேவன் பற்றிய கட்டுரைகளைச் சொல்கிறேன். கண்ணபிரான் பதிவில் இருந்து வருகிறேன். நன்றிகள்

 
At 3:07 AM, Blogger மெளலி (மதுரையம்பதி) said...

ஆம், நானும் கண்ணபிரான் பதிவிலிருந்துதான் வந்தேன், ஆனால் வந்தவுடன் 3-4 பத்வுகளை உடனே படித்துவிட்டேன்......அருமை....
தேவனில் அப்பள கச்சேரி பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?

 
At 2:25 AM, Blogger V. Dhivakar said...

அடடே..பெரிய பெரிய விருந்தாளிகள் வந்துள்ளார்கள் என்ற விவரமே அறியாமல் கணிப்பொறியைக் கையாள்கிறேன்.
தாமதமாக வரவேற்பதற்கு என்னை மன்னிக்கவும்.
திவாகர்.

 
At 3:54 AM, Blogger Nagarajan Seshadri said...

Does anyone have a copy of the original cartoon serial of Thuppariyum Sambu which was published in Ananda Vikatan? I would like very much to hear from someone who has a copy. I would like to see it for old times sake. I read it during my younger days and I still recall the beautiful pictures by Gopulu. Can anyone reply to this pleas?
SN

 

Post a Comment

<< Home