அருளே வடிவான ஆனந்தக் கூத்தனே!
ஏன் இந்தக் கூத்து?
நான் உன்னைக் காண எப்போது சபையேறி வந்தாலும் பாடுவது திருவாசகமும் தேவாரமும்தானே! உன் ஒளிமிகுந்த முகம் பார்த்து நான் மெல்லமாய் உதடசைத்து பாடும்போதெல்லாம் எனக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி.. அதை நீ கேட்கும்போது உன் கருணை முகத்தில் எனக்கு மட்டுமே தெரியும் உற்சாகம், 'வாதவூரான் சொல்ல சிற்றம்பலத்தான் எழுதியது' என்று உன்னால் அம்பல மேடையிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட தமிழ்ச் செல்வங்களை மனதுக்கினிய பக்தர்களால் பாடப்படும்போது உனக்கு ஏற்படும் உற்சாகத்தை அந்த பக்தர்களுக்கு எப்படியோ உணர்த்திவிடுவாய்..ஒவ்வொரு கால பூசைக்கும் தேவாரத்தைக் கணீரெனப் பாடும்போது ஏற்படும் பக்தி பரவசம் அனவரையும் அள்ளிக்கொள்ளும்படி செய்வதிலும் நீ வல்லவன்தான்! நிற்க!
(நீதான் எப்போதுமே கால்கடுக்க, அதுவும் ஒரு காலில் முயலகன் மீது நிற்கிறாயே.. நான் 'நிற்க' என்று எழுதியது பழைமையான கடிதம் எழுதும் வழக்குமுறையில்...)
பழைமை என்றதும் நினைவுக்கு வருகிறது. வேதம் பழைமையானதுதானே.. வேத மொழி எனக்கு வேறுபட்டாலும் பழைமையான வேதத்தில் உள்ள பெருமையும், அதன் பொருளும், அதன் உள்ளார்ந்த கருத்துகளும் மிக உயர்ந்தவை என்றே எடுத்துக்கொள்கிறேன். அப்படித்தான் எங்கள் முன்னோர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிவாசகர், நம்மாழ்வார், மற்றும் பெரியோர்கள் பலரும் சொல்லிச் சென்றார்கள். தேவாரம் முழுதுமே வேதத்தின் சாரம் என்று சைவர்களும், நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ் வேதம் என்றும் பலர் எழுதியுள்ளார்கள். எழுதியும் வருகிறார்கள். ஆகையினால் பழைமை போற்றப்படவேண்டும் என்பது கூட அவர்கள் வாய்மூலம் நீ சொல்வது போலத்தான். ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.
அம்பலத்துள்ளே நின்று உலகையே ஆட்டிப் படைப்பவனே! ஒரு கேள்வி!
என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வேதபாஷை புரிவதில்லை என்றுதானே முனிவர்கள் மூலம் தெய்வத் தமிழையும் எங்களுக்குப் பரிசாக அளித்தாய்... முத்தமிழின் முதல்சங்கத்தின் முதல்வனாய் இருந்து 'இறையனார்' என்று பெயர் கொண்டு முதற்கவிதை படித்தவனும் நீதானே..தமிழுக்கு சொல் கொடுத்தவனே.. ஏன் இந்தக் கூத்து? இன்றைய கூத்து?
யோசிக்க வைக்கிறாய்.. புரிகின்றது கொஞ்சம். 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என நம்பிகளை வைத்து பாடவைத்தது நீதான்!. உமாபதி சிவம் தன் ஆச்சாரியனைப் பின் பற்றி நட்ட நடுப் பகலில் கோயிலை விட்டு ஓடியபோது அவருக்குப் பக்கபலம் போல அவர்கூடவே ஓடிப்போய், அதே தில்லைவாழ் அந்தணர்தம் பூசையையும் மறுத்தவன்தான் நீ! உமாபதி சிவனார் பூசித்த சின்ன ஆனந்த நடராசனுக்குத்தான் முதல் மரியாதை என்று கோயில் கொடிக்கம்பம் மூலம் அந்தணர்களுக்குப் புரியவைத்தவனும் நீதான்!.
ராசராசசோழன் மூவர் பதிகங்களைக் கேட்டபோது, அந்த மூவர் வந்தால் மட்டுமே பெறக்கூடியது அவை என்ற அந்தணர்களுக்குப் புரியும் விதத்தில் அந்த அரசன் மூலம் மூவர் விக்கிரகங்களை செய்வித்து, பிராணாதிஷ்டையும் செய்வித்து, அவர்களையும் தெய்வமாக்கியதோடு, தமிழ்ச் செல்வங்களையும் கொடுத்து அருளினாய்! பின்னால் அச்சுதராயன் காலத்தில் சில அந்தணர்கள் கோயில் கோபுரம் ஏறி உயிர்த்தியாகம் செய்தபோது, காக்க வேண்டிய நீயோ அலட்சியம் செய்தாய்.. 'பிடிவாதம் பிடிப்போர்க்கு தெய்வம் துணை போகாது' என்று நீ சொல்வது போலத்தான் பட்டது.
ஆனால் அதே சமயத்தில் அந்த பழைமை மாறாத அந்தணர் குடும்பங்களை இதுநாள் வரை (ஏன், இனியும்!) ஆதரித்து, அரவணைத்து அவர்களின் ஒழுங்கான, இதுவரை தவறாத, ஆறுகால பூசையையும் ஏற்று வருகின்றாய். அவர்களின் அன்புக்கு என்றென்றும் கட்டுப்படுவது போல நடந்து வருகின்றாய்..
மேலும் யோசித்தேன்! அந்தணர்கள் உன் மீது கொண்ட அன்பு அலாதியானது. தன் வீட்டுச் செல்லக் குழந்தையாக, வாராது வந்த மாமணி போல, அவர்கள் உன்னை பாவிக்கிறார்கள். தன் அன்புக் குழந்தையை ஊட்டி வளர்ப்பது போல உன்னைப் பேணி பாதுகாக்கிறார்கள். பழைமையும் தொன்மையுமான வடமொழியில் பூசிப்பது உனக்கு பிடிக்கிறதா என்பதை விட அன்பாக அவர்கள் உன்னை ஆராதிப்பது உனக்கு மிகவும் பிடிக்கிறதாக எனக்குப் படுகிறது. கண்ணனுக்கு கோபியர்கள் போல உனக்கு தில்லைவாழ் அந்தணர்கள் போலும்.. அவர்கள் உரிமை எடுப்பது நியாயம் எனக் கூட உணர்த்தத் தயங்கமாட்டாயோ என்னவோ.. அவர்கள் பூசிக்கும் வேத மொழி கூட நீ தந்ததுதானே..'தென்னாடுடைய சிவனே , எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று வாதவூரார் சொல்ல நீ எழுத, அவர் கையாலேயே தமிழும் வடமொழியுமானாய் என்று கூட எழுத வைத்தவனும் நீதான்.
சரி.. போகட்டும்! எதற்காக இதையெல்லாம் நினைவுபடுத்துகிறாய்? நீ எதைக் கேட்கவேண்டுமோ அதைக் கேட்டுவிட்டுப் போயேன்.. என்று நீ சொல்வது போல படுவதால், என் சிந்தையில் உன் மூலம் வந்த கோரிக்கையை உன்னிடமே கேட்டுவிடுகிறேன்.
எனக்கு, எனக்கென்றில்லை, எல்லோருக்கும் உன் அருள் வேண்டும்..
உன் புகழை உனக்கும் எனக்கும் புரியும் விதத்தில் உன் எதிரே பாடும் அருள் வேண்டும்
உன் திருக்கோயிலின் பழைமையான புனிதம் என்றுமே காக்கப்பட வேண்டும்
உன் பக்தர்களிடத்தே, அவர்கள் அந்தணர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் போக்கினை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் சரி, ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் வேண்டும்
பழமை பாதுகாக்கப்படவேண்டும்
செந்தமிழ் சிறந்து ஓங்க வேண்டும்
உனக்குப் பிடித்த 'சிவபோகசாகரம்' பாடலிலிருந்து ஒரு வெண்பா பாடல்
'ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தில்
மோசம் வந்ததென்று மொழியலாம் - ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தானானால்
நோக்குவெதென் யாம்பிறரை நொந்து'
ஆக்கி அழித்து அருளும் ஆண்டவனே.. இப்போது அரங்கேறும் கூத்துக்கும் விடை வேண்டும்
அதுவும் அனைவருக்கும் பயனுற வேண்டும்!!!
உன் பக்தன்
திவாகர்
Labels: தில்லையில் ஏன் இந்தக் கூத்து?
1 Comments:
eyn intha koothu ellam un seyal eraivai
arputham
kadantha 3 mathamaga naey yarpaduthi konda thanimai siraiyil
ungal eluthukkal padikka padikka anandham tharugiruthu.
pala pudiya seidhigal thangalukku viraivil nool vadivathil keidaikkum
Post a Comment
<< Home