திருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மாற வேண்டுமா - 3
பன்னிரு ஜோதிர்லிங்கங்கள்
அமைந்த கோயில்களில் கட்டுமானத்துறையில்
தென்னகத்தில் உள்ள ராமேஸ்வரம், ஸ்ரீசைலம் தவிர பாரதத்தின் ஏனைய தலங்களில் ஆகமங்கள்
கடைபிடிக்கப்படுவதில்லை. ஸ்ரீசைலம் கூட ஆதிகாலத்தில் அல்லது தேவாரம் பாடப்பட்ட
காலத்தில் தேவியும் (பருப்பதநாயகி) சிவலிங்கமும் (பருப்பதநாதரும்) ஒரே சன்னிதியில்
சிறு கோயிலாகத்தான் இருந்ததாக பல செய்திகள் இன்றளவும் உண்டு. இன்றைய
காலகட்ட்த்தில் ஆகமவிதிகளுக்குட்பட்டு கோயில் வளாகம் (சிவாஜி மகாராஜா காலத்தில்)
கட்டப்பட்டிருந்தாலும், இன்றும் கூட கோயில் ஆராதனைகள் ஆகமவழியில் இருந்தாலும்
பக்தர்கள் நேரடியாக சென்று சுயமாக பூஜை செய்வதற்கும் அனுமதி உண்டு.
ஆக சுயம்புவாக வந்தமர்ந்த
தெய்வங்கள் கொண்ட வரிசையில் திருமலை திருவேங்கடவனையும் சேர்க்கவேண்டும். அர்ச்சா
ரூபத்தில் வடவேங்கட மலையில் தாமே வந்து நின்ற திருவேங்கடத்தானை முதன் முதலில்
நமக்கு அறியத் தருவது தமிழ் இலக்கியம்தான். அதுவும் பெருங்காப்பியம் என்று
புகழப்பெற்ற சிலப்பதிகாரம்தான்.
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு |
|
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய |
|
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
|
(சிலம்பு, மதுரைக் காண்டம், காடுகாண்காதை 41-51)
குடமலை மாங்காட்டு மறையோன் கோவலனுக்கு சொலவதாக ஒரு மிகப்
பெரிய பொக்கிஷத்தை வரும் தலைமுறையினர் அறிய வேண்டி திருவேங்கடவனைப் பற்றிய அரிய
செய்தியாக இளங்கோவடிகள் எழுதினார்.
”நின்ற செங்கண்மாலான திருமால் அருவிகள் பாய்ந்து வரும்
உயரிய வேங்கடமலையில் சங்கு சக்கரத்தைக் கையிலேந்தி தன் இருபக்கத்திலும் சூரியனும் சந்திரனும்
(ஒளிபரப்ப) வானமே கூரையாக இருந்தவண்ணம் அருள்புரிவதாக
இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். ஆக அடிகள் காலத்தில் திருவேங்கடவனுக்கு கோயில் என்ற ஒன்று இல்லை..
சிலம்பின் காலம் ஏறத்தாழ ஒன்றிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு
வரை உள்ள காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தைக் குறிப்பிடலாம்தான்.
அடுத்து வந்த காலம் ஆழ்வார்களின் காலம். கி.பி. ஆறாம்
நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை கொள்ளலாம். ஆழ்வார்களிலேயே மூத்தோர் எனச் சொல்லப்படுவோர் முதல் மூன்று
ஆழ்வார்களான பேய், பொய்கை, பூதத்தாழ்வார்தான். இவர்கள் மூவருமே திருப்பதி திருமலை
சார்ந்த பூமியான தொண்டை மண்டலத்தில் தோன்றியவர்கள் என்பதால் திருமலையை அனுபவித்துப்
பாடியதையும் நாம் அவர்கள் பாடல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். முதல் மூவரான இவர்கள் பாடிய
அந்தாதிப்பாடல்களில் திருமலையையும் அதன் சுற்றுப்புறங்கள் பற்றியும் வழிபடுவோர்
பற்றியும் அதிக விவரங்களை அள்ளித் தெளித்திருக்கின்றனர். அதே போல திருமலையில் நின்ற நெடுமாலான
திருவேங்கடத்தான் பற்றிய போற்றிப் பாடல்கள் பாடினார்களே தவிர அவன் கோயில் பற்றிய
தகவல்கள் ஏதும் தரவில்லைதான். அத்துடன் அவனை வழிபட்டோரில் மலைக்குறவர்கள் அதிகம்
என்பதை முதல் மூவர் மட்டுமல்லாது மற்ற ஆழ்வார்களும் தெரிவிக்கின்றனர்தாம். திருமங்கைமன்னரின்
ஒருபாடல் அங்குள்ள மக்கள் பற்றிய தகவலைத் தருகிறது.
’குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி
மருளிசை பாடும் வேங்கடத்து அறவநாயகற்கு’
பேயாழ்வார் யானைகள் வந்து தரிசித்ததைப் பற்றித் தகவல்
தருகிறார். யாளி என்கிற யானைமுகம், சிங்க உடல் மிருகம் உலாவிய மலையாகவும்
பெருங்காடாகவும் திருமலைச் சுற்றுவட்டாரத்தைப் பற்றி பேயாழ்வார் பாடியுள்ளார்
என்பது உபரித்தகவல். ஆண்டாள் கூட இந்தப் பகுதியைக் காடாக வர்ணித்துள்ளாள். (காட்டில் வேங்கடம் கண்ணபுரம் நகர் – அதாவது
காடுகளில் வேங்கடத்திலும் நகரங்களில் திருக்கண்ணபுரத்திலும் கொலுவிருக்கும் திருமால்). மலை
அருவிகள், பொழில்கள், மலையில் பளபளக்கும் கற்கள் என ஆழ்வார்கள் அனைவருமே திருவேங்கடத்தைப்
பற்றி வர்ணித்துள்ளதில் இருந்து திருவேங்கடவன் அங்கே கோயிலோடு இருந்தானா அல்லது
தனியாகவே சிலம்பில் போற்றப்படும் நிலையிலே நின்றானா என்பது தெரியாது. இந்தக்
கேள்விகளைப் பலப்படுத்தும் வகையில் ஆண்டாள் பாடலொன்று
”விண்ணில் மேலாப்பூ விரித்தாற்போல மேகங்காள்
தெண்ணீர்பாய்வேங்கடத்து என் திருமாலும் போந்தானே”
(பரந்து விரிந்துள்ள ஆகாயம் முழுமைக்கும் நீல நிறமானப் போர்வையினை விரித்து வைத்துள்ளது போல்
தோன்றும் மேகக்கூட்டங்களே! தெளிந்த அருவிகள் இடைவிடாமல் பாய்ந்துகொண்டிருக்கிற
திருமலையில் அந்தத் திருமாலாகிய எம்பெருமாளும் உங்களோடு உள்ளானோ.. (மேகத்தோடு
மேகமாக நின்றவண்ணம்)
ஒருவேளை ஆண்டாள் காலத்திலும் திருவேங்கடவனுக்குக் கோயில்
இல்லாமல் பரந்த வெளியில் அவன் நின்றிருக்கலாம்தான். அப்படி இருந்திருந்தால் இந்தப்
பாடல்வரிகள் அதிகம் பொருந்தி வருவதையும்
பார்க்கலாம்தான்.
ஆனால் கடையாழ்வார்களில் ஒருவரான குலசேகரப்பெருமான் ஆழ்வார்
திருவேங்கடவனுக்குக் கோயில் உண்டு என்பதை தம் பாசுரம் ஒன்றின் மூலம்
தெரிவிக்கிறார்.
”நெடியானே வேங்கடவா நின் கோயில்வாசல்,
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய்க் காண்பேனே”
என்ற பாசுரம் மூலம்
குலசேகரப் பெருமான் ஒரு செய்தியைத் தெரிவிக்கிறார். தற்சமயம் வேங்கடவன் நின்ற
கருவறையின் அவனுக்கு சமீபமாக உள்ள முதல் வாயிற்படிக்கு குலசேகரப்படி என்று பெயர். குலசேகர ஆழ்வார்
திருமலை விஜயத்தை மிக ஆழமாகத் தமிழில் பதிந்துள்ளார் என்பதை ஒப்புக்கொள்ளும்போது
அவர் காலத்தில் திருமலையாண்டவன் கோவில் ஒரு சிறு சன்னிதியோடு அல்லது
கருவறையுடன் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்றும் தெரிகிறது. பொதுவாக
குலசேகரப் பெருமானின் காலகட்டம் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் என்பார்கள்.
ஆழ்வார்கள் மொத்தம் பாடிய சுமார் நான்காயிரம் பாடல்களில் 202
பாடல்கள் திருமலை திருவேங்கடத்தானைப் போற்றிப் பாடியவைகள். இவைகளில் மேற்கண்ட
ஒருபாடல் தவிர வேறு எந்தப் பாடலும் திருவேங்கடத்தான் ’கோயில்’ பற்றிய குறிப்பு
தரவில்லை என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். ஆக ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து
கோயில் அங்கு அமைந்துள்ளது என்பதை நாம் ஒரு தகவலாக ஆழ்வார்கள் மூலமாகத்
தெரிந்துகொள்கிறோம். சரி, இது இப்படியே இருக்கட்டும்.
திருமலை திருப்பதி வரலாறு எழுதியவர்கள் புராண காலத்தில்
இந்தமலையில் நின்ற திருமாலுக்கு ரங்கதாசன் எனும் பக்தன் ஒரு சிறு அரண் போல
சுற்றுச்சுவர் எழுப்பியதாகவும், குளம் வெட்டியதாகவும், அதன் பின்னர் வேங்கடவனை
வணங்கவந்த (வானவர்கள் விரும்பும், வணங்கும் தெய்வமாக திருவங்கடவனை ஆழ்வார்கள் பலரும்
பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்) கந்தர்வ ஸ்திரீயின் மீது அவன் மையல் வசப்பட்டதால்
திருவேங்கடவன் சேவையை மறந்ததாகவும், அதன் பின்னர் அடுத்த பிறவியில் தொண்டைமானாகப்
பிறந்து அவருக்கு சிறு கோவில் கட்டியதாகவும் செய்தி உள்ளது. இது எந்தக் காலம்
என்பது வரையறுக்கப்படவில்லை.
திருமலை திருப்பதி பிராந்தியம் முழுவதும் காடுகள்தான்
என்பதை சங்கத் தமிழ்ப் பாடல்கள் முதல் ஆழ்வார் பாடல்கள் வரை உறுதி செய்கின்றன.
திருமலை திருப்பதியில் முதல் கல்வெட்டு என்பது ஒன்பதாம் நூற்றாண்டில் சாலவை எனும்
பல்லவ இளவரசியின் சேவை பற்றிய செய்தியாகும். ஆறாம் நூற்றாண்டு முதல் திருமலை
செல்வோர் சற்று அதிகமாகி இருக்கவேண்டும். சிலைகளை ஆராதிப்பது என்பது கி.மு.நான்காம்
நூற்றாண்டிலிருந்தே பௌத்த சமண சமயத்தினர் பாரதத்தில் தோற்றுவித்தனர்தாம்.
அப்படிப் பார்க்கையில் திருமலை திருப்பதியில் திருவேங்கடவன் சிலை கோயிலில்லாமல் வெட்டவெளியில் சிலையாக நின்றவனை
ஆராதனை செய்யப்படுவதென்பது பன்னெடுங்காலமாக பின்பற்றிருக்கவேண்டும்.
மலையின் மேல் சிறிய கோயிலாக ஒன்பதாம் நூற்றாண்டில்
குலசேகரப் பெருமானால் தரிசிக்கப்பெற்ற திருவேங்கடம் கோயில் மலைவாழ் மக்களின்
பேராதரவுடன் அந்த மலைக்குரிய சூழ்நிலைக்கேற்ப அந்தக் காலகட்டத்தில்
காடுகளுக்கிடையே உள்ள ஒரு மலைக்கோயில் எழுப்புவது அத்தனை எளிதல்ல என்று
கருத்துக்கேற்ப, வேதம் வகுத்த ஆகமமுறைகள் அறியப்படாமல் கட்டப்பட்டதுதான் திருமலைக்
கோயில். தமிழகப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் துர்க்கை, காளி, அம்மன் கோயிலுக்கேற்ப மதில்களில்அமைக்கப்படும் சிங்க
உருவச் சிலைகள், திருமலைக் கோயிலின் சின்னங்களாக கோவில் சுவர்களில் எழுப்பப்பட்டது
கூட அது காடு என்ற கருத்திலும், விலங்குகள் அதிகமாக நடமாடும் இடம் என்றும் திருவேங்கடத்தான்
ஆதிவாசிகளின் குலதெய்வமாகவும் இருப்பவன் என்பதைக் கருத்தில் கொண்டும்தான்
இப்படி நிறுவப்பட்டிருக்கவேண்டும். இதில் ஆகம விதிமுறைகளை
கடைபிடிக்கமுடியாது. திருமலைக் கோயில் கருவறையின் நீண்ட பிரகாரங்கள் கூட
படிப்படியாகத்தான் பக்தர்களின் வசதிக்கேற்ப நீட்டப்பட்டுக்
கட்டப்பட்டிருக்கவேண்டும். திருவேங்கடத்தான் சன்னிதியைச் சுற்றிக்
கட்டப்பட்டிருக்கும் நரசிம்மர், உடையவர், வரதராஜர் சன்னிதிகள் அனைத்தும் பிற்காலச்
சேர்க்கையே. (15 அல்லது 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கும்).
உடையவர் ராமானுஜரின் காலம் 11 ஆம் நூற்றாண்டு. (கிபி 1017
முதல் 1137 வரை). வைணவ சரிதத்தில் உடையவர் திருமலையில் ஆராதனை செய்யும்
திருப்பணிக்கு வேண்டியே தன் மாமாவை திருவரங்கத்திலிருந்து அனுப்பி வைத்தார் என்ற
செய்தி உண்டு. 11 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பல்வேறு கல்வெட்டுகள் கோயிலைப்
பற்றிய செய்திகளாக இருந்தாலும் பொதுவாக கோயில் கட்டுமான பணிகளைப் பற்றிய செய்தி
ஏதும் கிடையாது. சோழமாமன்னன் ராஜேந்திரன் காலத்தில் கோயில் நிர்வாகிகள் செய்த ஒரு
சிறு தவறு வெளிப்பட்டபோது அவன் சோழநாட்டிலிருந்து ஒரு விசாரணைக் குழுவை அனுப்பி, விவரம் அங்கேயே
விசாரிக்கப்பட்டு தீர்வையும் கொடுத்ததாகக் கல்வெட்டுத் தகவல்கள் உள்ளன.பதின்மூன்றாம்
நூற்றாண்டில் (1230 ஆம் ஆண்டு) ஒரே ஒரு கல்வெட்டு அன்ன ஊஞ்சல் (ஹம்ஸ ஊஞ்சல்) திருநாளை விமரிசையாகக் கோண்டாடியதாக பெயரில்லாத ஒரு கல்வெட்டு இன்றைய மடைப்பள்ளியின் தெற்கு வாசல் சுவரில் பதிக்கப்பட்டிருந்தது. அதே நூற்றாண்டில் 1250 ஆம் ஆண்டில் வந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் கோயில் கருவறைக் கோபுரத்துக்கு முதன்முதலாக பொன் வேய்ந்த விஷயத்தையும் கோயில் பிரகாரச் சுவரில் மிகப் பெரிதாகப் பொறித்துள்ளான். (பின்னர் பதினாறாம்
நூற்றாண்டில் ஸ்ரீகிருஷ்ண தேவராயரும் தம் ஆட்சிக் காலத்தில் கருவறைக் கோபுரத்துக்குப் பொன் வேய்ந்துள்ளார்)
திருமலைக் கோயிலின் பொற்காலம் என்பது கிபி 1460 லிருந்து ஆரம்பித்து அடுத்த
நூறாண்டுகள் வரை இருந்திருக்கவேண்டும் என்பதுதான் கல்வெட்டுகளிலிருந்து
தெரிகின்றது. பல கட்டுமானப் பணிகள் மேற்கொண்ட காலமும் இந்தச்
சமயத்தில்தான். இவைகளில் ஒன்றுதான் சமீபத்தில் இடிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபமும் கூட.
ஆகம விவகாரம் என்று பார்க்கையில் திருமலையில் கோயில் பூசை,
உற்சவங்கள் இவைகள் முதன் முதலாக நமக்குத் தெரியவருவதே அந்த பதினைந்தாம்
நூற்றாண்டின் பின்பாதியில்தான்.
முக்கியமான விஷயம் ஒன்றை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
அதாவது 1460 லிருந்து விஜயநகரசாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த சாளுவ நரசிம்ம மகராஜா
என்பவரைப் பற்றியும் அறியவேண்டும். இவரின் இயற்பெயர் செல்லப்பர் எனும்
தமிழ்ப்பெயராகும். புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் பர்டன் ஸ்டீய்ன் இவரை தமிழ்பிராம்மணர்
என்கிறார். இவர்தாம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை சீரமைத்து பெரிய
கோபுரத்தையும் கட்டியது. இவரின் தலைநகரம் திருப்பதியின் தென்னடிவாரப் பகுதியான
சந்திரகிரியாகும். இப்போதும் அங்கே பாழடைந்த கோட்டையை (திருப்பதி-பங்களூரு
நெடுஞ்சாலையில்) பார்க்கலாம். பத்து லட்சம் காலாட்படை கொண்ட இவரது பெரும்படைக்கு
அஞ்சி பல தென்னிந்திய சிற்றரசர்கள் தாமாகவே இவர் அடி பணிந்ததாக பர்டன் ஸ்டீய்ன் எழுதுகிறார்.
இன்றைய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தின் தென்பகுதி, ஆந்திரத்தில் மூன்றில் இரண்டு
பகுதி, தெற்கு ஒரிஸ்ஸா போன்றவை இவர் ஆதிக்கத்தில் இருந்தன. இவருடைய குருவின் பெயர்
கந்தாடை மணவாள ஐயங்கார், வைணவ உலகில் மிகவும் போற்றப்படும் ஆச்சாரியார். இன்னொரு
நண்பர் அன்னமய்யா கீர்த்தனைகள் எனும் புகழ்பெற்ற திருவேங்கடவன் தெலுங்குப்
பாடல்களைப் பாடிய அன்னமாச்சாரியார். சாளுவ நரசிம்மா திருமலைக் கோயிலுக்கு என
எழுதிவைத்த கல்வெட்டுகள் எல்லா அரசர்களையும் விட அதிகம். இவர் சீடரான
ஸ்ரீகிருஷ்ணதேவராயரை விட திருமலைக்கு அதிக சேவைகள் இவர் செய்துள்ளார். இதற்கு
மேற்குறிப்பிட்ட இரண்டு ஆச்சாரியர்களுமே காரணம்.
சாளுவநரசிம்மரின் விருப்பப்படி பண்டிதர்களின் உதவியோடு திருவேங்கடத்தான்
புராணமான ’திருவேங்கடமகாத்யம்’ 1491 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இன்றைய
திருவேங்கடத்தான் கோயில் புராணக் கதையான பத்மாவதி கல்யாணம், குபேரனுக்குக் கடன்
பட்டது போன்றவையும் இந்த ‘திருவேங்கடமகாத்யத்தில்’ சொல்லப்பட்டதுதான். இந்தப் புராணக் கருத்துக்களையும்
மக்களிடையே பரவலாக்க உத்தரவிட்டதற்கான ஒரு கல்வெட்டும் இருக்கிறது. இவருக்குப்
பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் தேவராயர் (துளுவவம்சம், கிருஷ்ணதேவராயரின் தந்தை)
சாளுவ நரசிம்மரின் இந்த ஏற்பாட்டை மிக விரிவாகச் செய்ததற்கும் கல்வெட்டுகள் மலைக்
கோவிலிலேயே உள்ளன.
இந்தப் புராணக் கதை வெளியான பிறகுதான் முறையான ஆகமவிதிகளை உற்சவங்களிலும்
அன்றாட பூஜைகளிலும் திருமலைக் கோயிலில் பின்பற்ற ஆரம்பித்தார்கள் என்று கூட
சொல்லலாம். ஆகம விதிகளின்படி முறையான வழிபாடுகளும் ஆரம்பித்தன. முதலில் ஸ்ரீனிவாஸ
ஸகர்ஸநாமம் எழுதப்பட்டு ஓதப்பட்டு அர்ச்சனையை ஆரம்பித்ததும் 1491 ஆம் வருடம்தான்
என்றொரு கல்வெட்டு சொல்கிறது. இந்த அர்ச்சனையைப் பற்றிய இன்னொரு கல்வெட்டு
ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்தில் அதாவது 1517 ஆம் ஆண்டும் ஒரு கல்வெட்டு சொல்கிறது.
ஆண்டு: 1517,
காலம்: ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் 8ஆம் ஆண்டு.
விஷயம்: ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாம அர்ச்சனைக்குப் பிறகு
பிரசாதமாக நான்கு நாழி நெய், அரிசி, பச்சைப் பருப்பு, உப்பு, மிளகு, தயிர் போன்றவை
முறையே பயன்படுத்திக் கொள்ள 5000 குழி நிலங்கள் நிவந்தனமாக திருமலையானுக்கு
சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த விளைநிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை சூர்யனும்
சந்திரனும் உள்ளவரை ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாமம் பூஜைக்குப் பிறகு பிரசாத
செலவுகளுக்காக பயன்படுத்தவேண்டும்.
ஆகமத்தைப் பற்றித்தானே இந்தக் கட்டுரை. நம் தமிழ்நாட்டுக் கோயில்களின்
ஆகமவிதிப்படி கோயில்களின் கருவரைக்குள்ளே சென்று பூசை செய்யவோ திருமஞ்சனம் செய்யவோ
எத்தனையோ விதிகள் உள்ளன. ஆனால் திருமலையின் கோயில் உள்ளே செல்லவும் திருவேங்கடவனைத்
தொட்டுப் பார்க்கவும் எந்த விதியும் கிடையாது. ஆகமங்கள் இங்கே குறுக்கிடுவதில்லை
(16 ஆம் நூற்றாண்டு வரைக்கும்) அரசர்கள் நேரடியாகச் சென்று பூசனை
செய்திருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் தம்பி துளுவ அச்சுதராயர் 1529 ஆம்
ஆண்டு ஆட்சிக்கு வந்தார். அச்சுதராயர், ஆங்கிலக் கணக்குப்படி, ஜனவரி மாதம் 31
ஆம்தேதி. 1533 ஆம் ஆண்டில் அர்ச்சகர்கள் 1008 முறை ஸ்ரீநிவாஸ ஸகர்ஸநாமங்கள் சொல்ல அரசன் தன் கையாலேயே
பூசித்து அலங்காரம் செய்ததாக, அச்சுத ராயரின் கல்வெட்டு (தென்னிந்திய கல்வெட்டுகள்
நான்காம் பகுதி, பதினாறாம் குறிப்பு) ஒன்று சொல்கிறது.
திருவேங்கடவன் தனிப்பட்டோர் தெய்வமென்பதால் வேதாகமத்து எந்த
விதியும் அவனைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதற்கு இந்தக் கல்வெட்டு ஒரு சிறந்த
உதாரணம்.
இப்போது சொல்லுங்கள் ஆகமரீதியாகவா திருவேங்கடத்தான் கோயில்
செயல்பட்டுள்ளது? ’சிந்தாமணிகள் பகர்
அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே’ என நம்மாழ்வார் அன்றொரு
கால கட்டத்தில் மலைகள் முழுதும் சிறந்த மாணிக்கங்கள் (சிந்தாமணிக்கு பொருள் வேறு
என்றாலும்) நிறைந்து ஒளிவீசுவதாகச் சொல்லப்பட்ட திருமலையில் இன்று அந்த புனிதமலைதோறும்
கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. காடு, மலைக் குறவர்களால் ஒரு காலத்தில்
சூழப்பட்டிருந்த திருவேங்கடத்தான் இன்று நேர்விரோதமாக நகரத்து சூழ்நிலையில்
நாகரீகத்தின் உச்சியில் இருந்து அனுபவிப்பவர்களால் சூழப்பட்டுள்ளான். யாளிகளும் யானைகளும்
சூழ்ந்த பாதை இன்று வாகனங்கள் வேகமாக போக ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. மலையெங்கும்
சிமெண்ட மயமாக்கப்பட்டு விட்டது.
இப்படி நாகரீகம் முற்றிய நிலையில் வசதிகள் பெருக்கப்பட்ட
நிலையில் விஞ்ஞானத்தின் முற்றிய பலன்களை ஒருசேர அனுபவிக்கும் காலகட்டத்தில்
திருமலை உள்ளது. இப்படி எல்லாமே மாறினாலும் சிலப்பதிகார காலத்தில் வர்ணிக்கப்பட்ட
திருவேங்கடத்தானும், அவனையே நம்பி, அவனுக்காக வேண்டி, விரதமிருந்து வரும்
பக்தர்களின் மனங்களும் என்றுமே மாறாததன்மையை நாம் உணர்ந்திருக்கிறோமா எனத்
தெரியவில்லை.
அப்படிப்பட்ட பக்தர்களை தம்மால் முடிந்தவரைப் பாதுகாத்து
அவர்களுக்கு சேவைகள் எனச் செய்யும்போதுமட்டுமே திருவேங்கடவனை
உண்மையில் நாம் போற்றிப் பூசித்ததாகக் கருதவேண்டும். அவன் பக்தர்களை
மகிழ்ச்சிப்படுத்துவதே அவனுக்கு நாம் செய்யும் சேவை. இன்னமும் சொல்லப்போனால்
ஆண்டாண்டு காலம் அடிமையாக மட்டுமே திருவேங்கடத்தானுக்கு சேவை செய்யவேண்டுமெனச் சொல்கிறார்
நம்மாழ்வார்.
ஒழிவிலா காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்
தெழிகுரல் அருவி திருவேங்கடத்து
எழில்கொள்சோதி எந்தை தந்தை தந்தைக்கே!!
ஓம் நமோ வெங்கடேசாய நம:
7 Comments:
ஐயா, உங்களின் ஆய்வுக் கட்டுரை அகிலமெல்லாம் சென்றடைய வாழ்த்துகிறேன். தங்களின் ஆன்மீக சேவை தொடரட்டும். நன்றி.
வணக்கம்
அற்புதம். வார்த்தைகள் இல்லை வருணிக்க
அன்புடன்
நந்திதா
அடியேன் பெற்ற பேரானந்தத்திற்குக் காரணம் நீங்களே! வணக்கத்துடன் நன்றி!
its a good historical research.
its a good historical research.
It is a good historical research
வாழ்த்துகள் அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
அன்புடன்
திவாகர்
Post a Comment
<< Home