காந்தியும் மஹாத்மாவும்
புல்தரையில்தான்
அமர்ந்திருந்தார். பார்வையில் கூர்மை அவர் போட்டிருந்த கண்ணாடி வழியே தெரிந்தாலும்,
அவரை உற்றுப் பார்க்கத் தோன்றவில்லை. கொஞ்சமாக சிரித்தார். அந்த சிரிப்பிலே ஒரு தோழமைத்
தனம் தெரிந்தது.
அவர் பெயர் பாபு
படேல். அகமாதாபாதில் எனக்குத் தெரிந்தவர் ஒருவரால் சபர்மதி காந்தி ஆசிரமம் செல்லவேண்டுமென்பதற்காக
உடனடி உதவிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு எனக்கு கைபேசி மூலம் அறிமுகப்படுத்தப் பட்டவர்.
அங்கு சென்ற பின்னர்தான் தெரிந்தது. இந்தப் பெரியவர், நண்பரின் சொந்தத் தந்தை, என்பது..
முதலில் அவருடன் சேர்ந்து உட்காரப் போனேன்.
“வேண்டாம்.. இங்கே
உட்கார்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்.. போய் அங்கே உள்ளே அமர்ந்து பாருங்கள்..” என்றவர்
தன் கையை நீட்டி அந்த அறைகளைக் காண்பித்தார். .பார்க்க அப்படி ஒன்றும் தொண்டுக் கிழவர்
போல இல்லைதான். கண்ணாடியும் சற்று குண்டான தோற்றமும் திடகாத்திர உடலும் ஏன் கையில்
வைத்துள்ள கைத்தடியும் கூட அவர் வயதைக் கணிக்க உதவவில்லை. இருந்தாலும் அவர் சொல்லுக்கு
உடனடியாக மதிப்புக் கொடுக்கவேண்டும் போல தோன்றியதால், அவர் கை காட்டிய இடத்துக்கு செல்வதாக
தலையசைத்துச் சென்றேன்.
சபர்மதி நதிக்
கரையில், நதியைப் பார்க்கும் திசையில் கட்டப்பட்டிருந்த அந்த சிறிய கட்டடம் எளிமைக்கு
மறு சின்னமாக மட்டுமல்லாமல் புனிதத்தின் மறு உருவமாகவும் காணப்பட்டதால் மனதில் மரியாதை
ஓங்க உள்ளே நுழைந்தேன்.
படுசுத்தமாக வைக்கப்பட்டிருந்த
அறைக்கு ’ஹ்ருதய குஞ்ஜ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இதயமாகத் திகழ்ந்த
மகாத்மா காந்தியும் அந்தத் தந்தையின் அன்பான மனைவியான கஸ்தூரிபாய் காந்தியும் ஏறத்தாழ
12 ஆண்டுகள் குடியிருந்த இல்லம். எளிமை என்றால் என்ன என்பதற்கு கண்கூடு சாட்சியாக அந்த
அறைகள் இருந்ததைக் கண்டதும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் கர்ப்பக்கிருகமாக
அந்த அறை இருந்ததும், நேரு, இராஜாஜி, படேல் போன்ற தலைவர்களின் வருகையால் பெருமை பெற்றதும்,
கடைசியாக அந்த அறையிலிருந்துதான் புகழ்பெற்ற தண்டியாத்திரைக்கு மகாத்மா பயணப்பட்டார்
என்பதெல்லாம் புரிந்ததால் புனிதம் அதிகமாக புலப்பட்டதுதான்.
பத்தடிக்குப் பத்தடியில்
இரண்டே அறைகள், அதே அளவில் ஒரு முற்றம், அந்த
முற்றத்தைச் சுற்றி உள்ள சிறிய ஆனால் நீள் வராண்டா பகுதியில்தான் பார்க்க வந்த தலைவர்கள்
தரையில் அமர்ந்திருப்பார்களோ என்னவோ, ரகுகுலத்தில் உதித்த அயோத்தி அரசனான இராமபிரானை
இந்த முற்றத்தில் குளித்தபடியே மகாத்மா பாடியிருப்பாரோ என்னவோ.. என் மனதுக்குள் பரவசமும்
கூடவே அந்த ’ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலும் கலந்து வலம் வந்தன. வலது பக்கப் பகுதி முழுவதும்
சமையல் அறையாக கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. எத்தனையோ தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும்
சோறுடைக்கும் அறையாக இருந்த இடமாயிற்றே. நினைத்தாலே மனம் பரவசத்தால் நிரம்பி வழிந்தது.
மறுபடியும் வெளியே
வந்து அந்தப் பெரியவரைச் சந்தித்தேன். இப்போது சந்தித்தபோது என் மனதுள் அவரைப் பற்றிய
பெருமை மேலும் உயர்ந்திருந்தது. பணிவோடு நின்று கொண்டேன்.. அவரே நல்ல ஆங்கிலத்தில்
ஆரம்பித்தார்.
”உள்ளே சென்றதும்
உனக்குள் என்ன நினைப்பு வந்தது”.?
“மகாத்மா வாழ்ந்த
அந்தக் காலத்தில் அவர்கள் எப்படியெல்லாம் இங்கு இருந்திருப்பார்கள் என்ற கற்பனைதான்
செய்து பார்த்தேன்”
படேல் சற்றே சிரித்தார்.
“ஏஸி, கட்டில், மெத்தை எல்லாம் இந்தக் காலத்தின் சொகுசு.. ஆனால் இந்த ஆற்றின் கரையோரம்
என்பதால் எப்போதும் காற்று வீசும். இப்போது இங்கே சற்று தூய்மையாக அந்த நதி பார்ப்பதற்கு
இருக்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் எல்லாம் அந்த நதிதான் இங்கே எல்லோருக்கும் எல்லாமும்.
அசுத்தமும் செய்வார்கள், சுத்தமாக இருப்பதற்கும் அந்த நீரை பயன்படுத்துவார்கள்.. ஆனால்
மகாத்மா விடமாட்டார்.. அசுத்தம் செய்பவர்களை தன்னுடைய பாணியில் திருத்துவார். உப்பு சத்தியாக்கிரகத்து சமயம் ஏராளமாக தொண்டர்கள்
அகமதாபாதில் வந்து குவிந்து விட்டார்களாம்.. அவர்கள் அனைவரும் காலைக் கடன்களை இந்த
நதிக்கரையிலேயே முடித்துவிட்டு அவைகளை அகற்றாமல் அப்படியே விட்டு விட்டார்களாம். மகாத்மாவுக்கு
வந்ததே கோபம்.. அவர் யாரையும் எதுவும் குறை சொல்லாமல் தானே கரைக்குப் போய் அந்த மலங்களை
சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். உடனே மற்றவர்கள் ஓடி வந்துவிட்டார்கள். அவர்களும்
பாடம் கற்று அந்த அசுத்தங்களை அகற்றினராம். என் தந்தையை மிகவும் கவர்ந்த இந்தழ்ச் செயலைச்
சொல்லிச் சொல்லி நானும் முடிந்தவரை என் பிள்ளைகளுக்கும் சொல்லி வருகிறேன். மகாத்மாவின்
மௌனமான இந்தப் பதில் நடவடிக்கையால் தொண்டர்கள் பயப்பட்டு ஒழுங்காக இருப்பார்கள்”.
“ஜி,, நீங்கள்
மகாத்மாவைப் பார்த்திருக்கிறீர்களா?”
”ஏன்.. நான் சொல்வதெல்லாம்
நம்பும்படியாக இல்லையா?”
“ஐய்யோ.. அப்படியெல்லாம்
இல்லை.. நான் சாதாரணமாகத்தான் கேட்டேன். நீங்கள் தொடருங்கள்..”
அவர் எழுந்தார்..
நதிக்கரையோரம் சென்றார்.. “இந்த நதி ரொம்ப அகலமானது. வெள்ளம் வரும்போது மகாத்மாவின்
குடில் அருகே தண்ணீர் வந்து போகும். ஆனால் இப்போதுதான் நன்றாக உள்ளே தள்ளிக் கட்டிவிட்டார்கள்..
இந்த சிமண்ட் படிக்கட்டெல்லாம் ஒருகாலத்தில் தண்ணீர் ஓடும் பிரதேசம்தான்.. பிறகுதான்
ஆற்றங்கரை.. ஆனால் இதெல்லாம் இப்போது இல்லை.. இரவு வந்து பார்.. வெளிச்சத்தில் நிறைய
பேர் நடைபயிற்சி செய்வார்கள்.”
சபர்மதி நதியின்
இரண்டு கரைகளையும் அடக்கிக் கட்டியிருந்தார்கள். சிமெண்ட் நடை பாதை ஏதோ அகலமான சாலை
போல அழகாக இருந்ததுதான். அதன் நடுநடுவே விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. நீளமாகத்தான்
போய்க்கொண்டிருந்தது அந்த சிமெண்ட் பாதை துப்புரவுப்
பணிகள் வெகு சீராக நடப்பதால் தூய்மையாகக் காணப்பட்டன. ஆனாலும் அந்தப் பட்டப்பகலில்
சூரிய வெளிச்சம் அதிகமுள்ள அந்த நேரத்தில் மகாத்மாவின் குடில் அமைந்த பிரதேசம் தவிர
அந்த நதிக்கரையோரம் மரங்களே தென்படவில்லை. இயற்கையான ஆற்றங்கரையும், பச்சைப் பசேலென்ற
மரங்களும், புல்வெளியும் இல்லாத சபர்மதி ஆற்றின் அழகை ரசிக்க முடியவில்லை. அவரிடம்
நேரடியாகவே சொல்லிவிட்டேன்.
“எங்கள் ஊர் நதிகளில்
தண்ணீர் ஓடாதே தவிர புல்வெளி ஆற்றங்கரைகளும், மரங்களும் பார்ப்பதற்கு ஒரு அழகைத் தரும்.
சபர்மதி ஆற்றையும் அதன் கரையோரங்களும் சுத்தமாகத்தான் இருக்கின்றன.. ஆனால் இயற்கை அழகை
இழந்து காணப்படுவது என்னவோ போல இருக்கிறது”..
நான் சொல்லக் கேட்ட
பாபு படேல்ஜி சற்று நேரம் ஏதும் சொல்லாமல் ஆசிரமத்துக்குள் நுழைந்தார். பிறகு ஆசிரமத்தில்
முக்கியமான பகுதியான காந்தி அருங்காட்சியகத்துள் நுழைந்தார். பல சரித்திரக் குறிப்புகள்
புகைப்படத்துடன் கூடியவை நன்றாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சிலவற்றை படேல்ஜி
விவரித்தார். உப்பு சத்தியாகிரகத்தின் புகைப்படங்கள் அந்தக் கால கட்டத்துக்கே நம்மை
அழைத்துச் சென்றன. திரு பாபு படேலிடமிருந்து நிறைய விளக்கங்கள் கிடைத்தன. சில ஏற்கனவே படித்தவை, சில தெரியாதவை..
ஆனால் அவர் சொல்லும்போது எல்லாமே நேரில் பார்ப்பது போல இருந்தது.
“மகாத்மா மிகப்
பெரிய பிடிவாதக்காரர் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அவர் பிடிவாதமெல்லாமே நன்மையில்தான்
முடிந்தது. (தண்டி’யில் உப்புக் கிளறும் ஒரு புகைப்படத்தைக் காண்பித்து – இந்தப் படத்தில்
ஒரு தமிழ்ப் பிராம்மணர் கூட குடுமியுடன் இருந்தார்) இதோ இங்கே பார்.. இந்த உப்பை எடுப்பதில்
எத்தனை பேர் ஒன்றாய் இருக்கிறார்கள் பார், இந்து முஸ்லீம், கிருத்துவர் என்கிற பேதம்
கிடையாது. அப்போதெல்லாம் ஜாதி வித்தியாசம் மிகவும் அதிகம். ஹரிஜன்கள் மிகக் கேவலமாக
நடத்தப் பட்டார்கள். ஆனால் மகாத்மாவின் இருப்பிடத்தில் ஹரிஜன் மிகக் கௌரவமாக நடத்தப்படுவர்.
இந்தப் புகைப்படத்தை பார்த்தால் அனைத்து ஜாதியினரும் எப்படி சிரித்துக் கொண்டே பணி
செய்தனர் என்பது புரியும். ஹரிஜன் மரியாதை மூலம் மிகப் பெரிய புரட்சியை இந்த நாட்டில்
அப்போதே செய்து காட்டினார் மகாத்மா..”
“ஆனால் இப்போது
ஜாதி அரசியல்தானே நாட்டை ஆள்கிறது?” என்னுடைய கேள்வி அவருக்கு சிரிப்பைக் கொடுத்தது.
“அரசியல் கிடக்கட்டும்,
இன்று ஹரிஜனர்கள் எத்தனை மேலிடத்தில் இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமே.. மகாத்மா மட்டும் அன்று ஹரிஜன் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்து இந்தியத் தலைவர்களிடம் புரட்சி
செய்திராவிட்டால் இன்றைக்கு நாடு சுதந்திரம் அடைந்திருக்கலாம்தான். ஆனால் அடிமை வாழ்வு
என்பது வேறு விதமாக அப்படியே தொடர்ந்திருக்கும்”.
“உண்மைதான் ஜி!.
ஆனால்..
”என்ன ஆனால்..
நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது காந்தி என்று சொல்வார்கள்.. ஆனால் நான்
அப்படிச் சொல்லமாட்டேன்.. விடுதலை வாங்கித் தந்ததில் எல்லோருடைய பங்கும் சரிசமமாகத்தான்
இருந்தது. இதில் மகாத்மாவின் பங்கு அதிகம் என்று கூட சொல்ல விரும்பவில்லை.. ஆனால் அவர்
போராடியது இந்திய சமூகத்துக்காகத்தான். ஜாதி மத வேறுபாட்டைக் களைய விரும்பிய மிகப்
பெரிய தலைவர் அவர். ஹரிஜன் என்ற பத்திரிகை ஒன்று துவங்கி அவர்களுக்காக மகாத்மா போராடத்
துவங்கியது ஒரு மிகப் பெரிய தாக்கமாக இந்திய சமூகத்தின் மீது விழுந்தது..”
படேல்ஜி பேசிக் கொண்டே
போனார். அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று தெரிந்துதான் இருந்தது.
”ஜி!.. நீங்கள்
மகாத்மாவைப் பார்த்துப் பேசியிருக்கிறீர்களா? எப்படிப் பழக்கம்?”
”நான் சிறு வயதுப்
பையன். என் தந்தை இங்கு ஒரு காலத்தில் கௌரவ உத்யோகம் பார்த்தவர்.. அவர் கூட இருப்பதால்
அவர் நிறைய சொல்வார்.. நாங்கள் கேட்டுக் கொள்வோம். நான் மகாத்மாவிடம் பேசியதில்லை..
ஒருமுறை சிறுவயதில் தில்லி சென்றபோது இவனை ஏன் கூட்டி வந்தாய்? என்று என் தந்தையை கோபத்துடன்
கேட்டார் மகாத்மா. நான் ஏதாவது பதில் பேசினேனா என்பது நினைவில் இல்லை. தந்தையுடன் ஒட்டிக்
கொண்டு மகாத்மாவை ஆவலுடன் பார்த்தது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. அது கூட ஒரு
சிலமுறைகள்தான். ஏனெனில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிறைய நாட்கள் மகாத்மா சிறையிலே
கழித்தது ஒரு காரணம்.. இன்னொன்று அவருக்கும் கஸ்தூரிபாய்க்கும் உடல் நலம் குன்றியதும்தான்.
அவர்களை அடிக்கடி சபர்மதி வரவிடாமல் செய்துவிட்டது. உண்மையில் மகாத்மாவின் உடல்நிலை
மிகவும் மோசமாகிவிட்டதால்தான் அவருக்கு அந்த போர்க்காலத்தில் விடுதலையே கிடைத்தது”..
“காந்தி வெகு வேகமாக
வயதான காலத்தில் நடந்து போவதை படங்களில் பார்த்துள்ளேனே..”
“இல்லையில்லை..
அது ஒவ்வொருசமயம்தான்.. மற்றபடி அவருடைய பேத்திகள் துணையுடன் அவர்களைப் பிடித்தபடித்தான்
செல்வார்.
1924 களில் ஒருமுறை
மகாத்மா எரவாடா சிறையிலிருந்து உடல்நலம் குன்றியதற்காக விடுதலை செய்திருந்ததை ஒரு புகைப்பட
விவரம் சுட்டிக் காட்டியது. அதையும் அவரிடம் காட்டினேன்..
“ஆமாம்.. நிறைய
நடப்பார். நிறையப் படிப்பார். எல்லோருடையக் கடிதங்களையும் ஒன்று விடாமல்படித்துப் பதிலும்
எழுதுவார். (ஒரு கடிதத்தில் கவர் பகுதியில் ‘மகாத்மா காந்தி, தி கிங் ஆஃப் இந்தியா, – என விலாஸம் எழுதப்பட்டிருந்தது) அதிகம் சாப்பிட மாட்டார். தினமும் அலுவல்கள்
அதிகம். நிறைய தலைவர்கள்.. நிறைய பேச்சு, மக்கள் கூட்டங்கள், ஒலிபெருக்கி அதிகம் இல்லாத
காலத்தில் கத்திப் பேசவேண்டிய கட்டாயங்கள். தூக்கமின்மை.. இதையெல்லாம் நினைத்துப் பார்.
எந்த திடகாத்திரத்துக்கும் உடல் நொந்துபோகும்தான்.. மகாத்மாவுக்குத் தன்னைப் பற்றிய
எந்தக் கவலையும் கிடையாது.. அதனால் ஓய்வு என்பதே தெரியாமல் பழகிவிட்டார். அவருக்கு
ஓய்வு கொடுத்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள்தான். என்ன பார்க்கிறாய்.. அடிக்கடி சிறையில்
போட்டால் அவருக்கு ஓய்வுதானே..ஆனால் அங்கும் தூங்கவில்லை. நிறைய எழுதினார். அவருடைய
ஜீவன சரித்திரம் கூட சிறையில்தான் எழுதினார்.”
தலையாட்டினேன்.
எளிமையின் மறு உருவம், உண்மையின் பிரதிபலிப்பு என்றெல்லாம் புகழப்பட்ட மகாத்மாவுக்கு
ஓய்வு என்பது ஏது?..
”சரி, ஒன்றை மட்டும்
கேட்கிறேன்.. வெளிப்படையாக தெரிந்ததைச் சொல்லுங்கள். காந்தியை ஏன் கொன்றார்கள்? அதுவும்
நம்மவர்களே..”
”மகாத்மாவை ஏன்
கொன்றார்கள்.. மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள். மிகப் பெரிய கொடுமை அது. ஆனாலும்
அப்படிக் கொல்லாவிட்டாலும் கூட அவர் சீக்கிரமாகவே போய்ச் சேர்ந்திருப்பார் என்றுதான்
தொன்றியது.”
நான் அவரை ஆச்சரியமாகப்
பார்த்தேன்..
”மகாத்மா இறந்தபோது
என் தந்தை கதறி அழுதது இன்னமும் கண்ணில் நிற்கிறது.. அந்தநேரத்தில் எனக்கு அது மிகப்
பெரிய கவலையைக் கொடுக்கவில்லை.. ஏனெனில் அதைவிட மிகப் பெரிய கொடுமை இந்தியாவில் அந்த
கால கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது.. அதுதான் பாகிஸ்தான் பிரிவினையும், இந்து முஸ்லீம்
அடிதடியும், ஏகப்பட்ட கொலைகளும்தான். எந்த நேரத்தில் என்ன நேருமோ என்ற பயம்தான் அப்போது இருந்தது.
ஆனால் நிறைய வருஷமாக நினைத்துப் பார்த்ததில் மகாத்மா சுதந்திர இந்தியாவில் சீக்கிரமாகவே
இறந்தது கூட நல்லதுக்குதான் எனப்பட்டது. பிரிட்டிஷ்காரர்கள் காந்தியைக் கண்டு பயப்பட்டார்கள்..
ஆனால் இந்தியர்கள் பயப்படவில்லை.. மரியாதை மட்டுமே காண்பித்து ஒதுங்கிக் கொண்டார்கள்..
இதுதான் உண்மை.. மகாத்மா தனது சத்தியாக்கிரஹ சக்தியை, எளிமையை, சத்தியத்தை ஊர் உலகம்
பூராவும் காண்பித்து விட்டார். ஆனால்.சுதந்திர இந்தியாவில் அதே கொள்கை எடுபடாதோ என்ற
சந்தேகம் எனக்கு இப்போதும் உண்டு. இந்த விதத்தில் சர்தார் படேல் நல்ல உத்தியைக் கையாண்டார்.
கத்திக்குக் கத்தி, சண்டைக்குச் சண்டை என்றுதானே அவர் இந்தியாவை ஒன்று சேர்த்தார்..
மகாத்மா இறந்த கால கட்டத்தில் நமக்குத் தேவையாக இருந்தது தேச ஒற்றுமை.. இது மகாத்மாவின்
கடைசி கால கட்டத்தில் அவரால் முயன்றும் முடியாமல் போய்விட்டது.. இதுதான் உண்மை..”
எத்தனை சத்தியமான
வார்த்தைகள். சுதந்திரம் வராத காலத்தில், அந்த சுதந்திரத்துக்காகப் பிடிவாதமாகப் போராடியதற்காக
மரியாதை கொடுத்து மிகப் பெரிய உயரத்தில் துக்கி வைக்கப்பட்டிருந்த வயதான காந்திஜியை
சுதந்திர இந்திய மக்கள் அதே உயரத்தில் வைத்திருப்பார்களா.. இல்லை சுற்றியுள்ள தலைவர்கள்
காந்திஜி பேசும் அஹிம்சையயும் சத்தியத்தையும் இன்னமும் சகித்துக் கொண்டு அவர் சொல்படி
கேட்டிருப்பார்களா.. ஆறே மாத சுதந்தர இந்தியாவையே அவரால் கண்ணீர் விட்டுக் கொண்டே பார்க்கமுடிந்ததே
தவிர கம்பீரமாகப் பார்க்கவைக்கவில்லை என்பதுதானே உண்மை..
படேல்ஜிக்குத்
தலை வணங்கினேன்..
“ஜி! நாம் பேசிக்
கொண்டதை எழுத எனக்கு அனுமதி உண்டா..”
தாராளமாக எழுதேன்..என்
பெயரை என் படத்தையெல்லாம் போடாதே.. என் மகனே திட்டினாலும் திட்டுவான் (ர்).. காந்தியம்
பெயருக்குதான் இந்த நாட்டில் வாழ்கிறது.. உண்மையான காந்தியம் பேசி வாழ்ந்து காட்டுபவர்கள்
மிக மிகக் குறைவு.. அதிகம் பேசினால் தற்போதைய கால கட்டத்தில் பைத்தியக் காரன் என்றாலும்
சொல்வார்கள்”.
சிரித்தார் படேல்ஜி.
மகாத்மா காந்திக்கு
மகாத்மா என்ற மரியாதை கொடுத்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த மகாத்மாவின்
குடிசைக்குள் செல்லும் பேறு கிடைத்தது. ஆனால் அந்தப் பாக்கியத்தை விட மகாத்மாவின் அனுபவங்கள்
பற்றிய படேல்ஜியின் கருத்துகள் எத்தனையோ ஆழமான உணர்வாக உள்ளத்தில் பதிந்துவிட்டதுதான்.
அவரின் பேச்சில் கடைசிவரை காந்தி எனும் வார்த்தை சொல்வதற்குக் கூட அவர் மறுத்து விட்டதும்,
மகாத்மா என்றே கூற என்னையும் கடைசியில் பிரியும்போது வற்புறுத்தியதும் நினைவில் கூடவே பதிந்துவிட்டது.
மகாத்மாவின் புகழ்
இவரைப் போன்றவர்களால்தான் வளர்ந்து கொண்டே இருக்கிறது.. இன்னொருமுறை அகமதாபாத் சென்றால்
மகாத்மாவைப் பற்றி இன்னும் நிறையக் கேட்கவேண்டும் இவரிடம்..
*****************************
பின்குறிப்பு:
மேலே உள்ள புகைப்படங்கள் என் ஐ-பேட் மூலம் மகாத்மாவின் அருங்காட்சியகத்துப் புகைப்படங்களை அப்படியே உள்ளடக்கி எடுத்தது.
8 Comments:
புனிதமான இடத்திற்கு சென்று, புண்ணீயம தேடிக் கொண்டாய் நண்பா. நல்ல கட்டுரை. திடீறென்று எங்கே அகமதாபாத் சென்றாய்? தொடரட்டும் உனது பயணம்.
நன்று.
நன்று.
EXTREME EXPERIENCE. I REALLY SHARED WITH YOUR FEELINGS. I PERSONALLY FEEL THAT I GONE TO SABARMADHI .
M N MOHAN
கொடுத்து வைத்தவர் ஐயா தாங்கள்
புனிதமான இடத்தினைக் கண்ணால் கண்டு
இன்புற்றிருக்கிறீர்களே மகிழ்ந்தேன் ஐயா
ஒட்டுமொத்த குஜராத்தியர்களின் எண்ணங்களை எல்லாம் அந்தப் பெரியவர் பிரதிபலித்துவிட்டார். நல்ல பதிவு. நாங்க சபர்மதி போனப்போ அந்த ரோடெல்லாம் இல்லை. இயற்கையான சூழலே இருந்தது.
ஆஹா! நானே தங்களுடனிருந்து அவருடைய உரையாடலைக் கேட்டதுபோலே உணர்கிறேன். அருமையான அனுபவப் பதிவு...
நன்றி!
Manoharan, V Srinivasan, MN Mohan, Karandhai Jeyakumar, Geetaamma and R. Sathish Kumar
I sincerely thank you all for responses.
Anbudan
Dhivakar
Post a Comment
<< Home