அவ்வுலகம் சென்றுவந்தேன் அமுதம் குடித்து வந்தேன்:
சென்றவாரம் ஒரு இனிய மாலைப் பொழுதில் ஒரு இனிய சந்திப்பு. அதுவும் அந்த இனிமையையே தன் பெயரில் கொண்ட மதுரையில்தான். மாலை 6 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு செய்துகொண்டாலும் ரொம்பவும் சிரமம் கொடுக்காமல் கிட்டத்தட்ட அந்த சமயத்தில் நான் ஆஜராகிவிட்டேன்.
காழியூரர்ஜியை மறுபடியும் இத்தனை விரைவில் சந்திக்க ஒரு வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் ஏற்கனவே கிடைத்திருந்த முதல் சந்திப்பின் இனிமை அப்படியே மனதில் இருந்து கொண்டே இருக்கும் வேளையில் அந்த இனிமை கூடி மேலும் அப்படியே நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பது ஆண்டவன் சித்தமோ என்னவோ, அந்த இனிமையான வாய்ப்பு அத்தனை அருமையாக வாய்த்தது.
மாலை ஆறிலிருந்து ஏழு மணி வரை ஜி யுடன் சந்திப்பு, பிறகு அங்கிருந்து கிளம்பி மதுரை சந்திப்பில் இரவு 7.50க்கு ரயில் பிடித்து திருச்சி செல்லவேண்டுமெனவும், ஆகா.. அருமையான இந்த இனிய வாய்ப்பு ஒரு மணிநேரமாவது கிடைக்க நேர்ந்ததே என்று என்னுடைய ஏற்பாட்டினை நானே மெச்சிக் கொண்டுதான் அங்கு சென்றிருந்தேன்.
ஜி யுடன் எப்போதும் கூடவே பிரியாமல் இருக்கும் புன்சிரிப்போடு சத்சங்கம் ஆரம்பித்தது. அங்கிருந்த மற்ற இறையன்பர்கள் அடியேனை விட அதிக ஞானம் உடையவர்கள் என்பதை நான் பார்த்தவுடனே நன்கு உணர்ந்தே இருந்தாலும் அவர்கள் அதிகம் பேசாமல் என்னையேப் பேசவைத்தது எனக்கு சற்றுக் கூச்சத்தை வரவழைத்ததுதான்.
ஜி எல்லாவற்றிற்கும் அமைதியோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். புன்சிரிப்பும் மாறவில்லை.. பேச்சில் நகைச்சுவையும் குறையவில்லை. குட்டிக்கதைகள், சில நிகழ்ச்சிகள், கோயில்கள், மதங்கள் காட்டும் வழிகள், பெரியவர்களின் வழிகாட்டுதல்கள், அவர்களுடைய ஆசிகள் என எள்ளளவும் தொய்வில்லாமல், இனிமைக்குக் குறைவில்லாமல் ஜி அவர்களின் பேச்சு சென்று கொண்டே இருந்தது. நடுவில் இரண்டு முறை அருமையான காபி உபசரிப்பு.. சட்டென நேரம் பார்த்ததில் மணி ஏற்கனவே 7.50 தாண்டிவிட்டது. என் மகிழ்ச்சியை நன்றாகவே தெரிவித்தேன்.. இந்த ரயில் இல்லையென்றால் இன்னொன்று.. கடைசியில் மறுபடியும் மணி பார்த்ததில் இரவு 9.50 ஆகியிருந்தது. மனமில்லாமல் எழுந்தேன்.
மனச் சலனங்கள் போகும் வழிமுறைகளைக் கோடி காட்டினார் ஜி. இறைவன் நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் ஒரே வழி.. இந்த வழியை விடாமல் கடைப் பிடிப்போருக்கு நிச்சயம் இறைவன் திருவருளால் குருவழி கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பலமாக்கினார். மனிதர்கள் தனக்குத் தேவைப்படும்போது மட்டுமே கடவுளை நினைப்பதை விட்டு எப்போதும் நினைப்பதில் உள்ள இன்பத்தை அடைய அவர்கள் முயற்சி செய்யவேண்டுமென தெளிவாக்கினார். எண்ணத்தில் தெளிவு வேண்டுமென்பதற்கும், கூடா நட்பும், தெய்வம் தெளியாதோர் அறிவுரைகளையும் முடிந்தவரை களைய முயலவேண்டும் என்பதற்கான காழியூரர்ஜி சொன்ன ஒரு குட்டிக் கதை:
வர்த்தகர் ஒருவர் ஒரு இக்கட்டிலிருந்து தன்னை விடுவிக்க இறைவனை வேண்டினார். இக்கட்டு தீர்ந்துபோகும் பட்சத்தில் 501 தேங்காய் உடைப்பதாகவும் வேண்டிக்கொண்டார்.
அந்த வர்த்தகர் கேட்டபடியே இறைவன் அவரை இக்கட்டிலிருந்து தப்புவித்தான். உடனே சந்தோஷமாக தேங்காய் வாங்க கடைக்குச் செல்லும்போது வழியே தெரிந்தவன் ஒருவன் எதிரே தென்பட்டான். இவர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனே சிரித்தான். ‘இந்த இக்கட்டு உனக்கு ஏற்பட்டதும் இயற்கை.. அந்த இக்கட்டிலிருந்து வெளிவந்ததும் இயற்கை.. இதுக்கெல்லாம் போய் 501 தேங்காய் உடைக்கலாமா.. இந்தக் காலத்துல தேங்காய் விக்கற விலையில இப்படி போய் வேஸ்ட் பண்ணுவியா.. பேசாம வேலையைப் பாருய்யா..’ என்ற அறிவுரை வேறு ஃப்ரீயாகக் கொடுத்துவிட்டுப் போய்விட்டதும் வர்த்தகர் மனதில் ஒரு சலனம்.
‘ஆமா.. இப்ப இருக்கற விலையிலே 501 தேங்காய் எவ்வளவோ ஜாஸ்திதான். வேண்டிக்கிட்டபோதே இத நாம யோசிக்காம போயிட்டேமோ.. , வேண்டுமானால் நாம வேண்டிக்கிட்டதுக்கோசரமாவது ஒரு 101 இல்ல 10 காய் வேண்டாம் ஒரு காயாவது உடைக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டே கடைக்காரனிடம் போனார் அந்த வர்த்தகர். அந்தக் கடைக்காரன் சொன்ன விலை கொஞ்சம் அதிகம் எனப் பட்டது. (இவரே வர்த்தகர் ஆயிற்றே!) டிஸ்கௌண்ட் கேட்டார். அந்தக் கடைக்காரன் இன்னொரு பெரியகடைக்கு அவரை அனுப்பி அங்கு வாங்கினால் இவர் கேட்ட விலையில் காய் கிடைக்கும் என்றும் சொன்னான். இவரும் அங்கு போய் விசாரித்து அவன் சொன்ன விலையில் மேலும் குறைக்கமுடியுமா என்று கேட்டுப் பார்த்தார். அவன் அதற்கு தான் தேங்காய் மொத்தமாக கொள்முதல் செய்யும் தோப்பின் விலாஸம் கொடுத்து அங்கு போனால் இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றதால் ஆசையை விடாமல் தோப்புக்குச் சென்றார். தோப்பில் உள்ளவன் சொன்ன விலை எல்லோர் விலையை விடவும் குறைவு என்று தெரிந்தே இருந்தாலும் நப்பாசை விடவில்லை. அங்கும் சற்றுக் குறைத்துக் கேட்டார்.
தோட்டக்காரன் ஏற இறங்கப் பார்த்தான். ‘சாமி! நான் மேல ஏறிப் பறிக்கறதுக்குத்தான் கூலி கேட்டேன். வேணுமின்னா ஒண்ணு செய்யு! நீயே மேலே ஏறி உனக்கு தோதான காயா பறிச்சுட்டு ஆளை வுடு!’ ன்னு போயிட்டான். வர்த்தகருக்குப் பரம சந்தோஷம். எந்தவித செலவும் இல்லாமல் காரியம் கைகூடுகிறது என்று வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டே மளமளவென அந்த உயரமான தென்னைமரத்தில் ஏறிவிட்டார். நல்ல வாகான காய் சற்று மறுபக்கத்தில் இருந்ததால் அதை எப்படியும் இழுத்துப் பறித்துவிட வேண்டுமென்ற ஆவலோடு இரண்டு கைகளாலும் அந்தக் காயைப் பற்ற, கால்கள் மரத்திலிருந்து நழுவிப்போய் அந்தரத்தில் தொங்க ஆரம்பித்தார். தேங்காயைப் பற்றிய கைகளோடு தொங்கிக்கொண்டே கீழே பார்த்தவருக்கு மரணபயம் வந்துவிட்டது. கத்த ஆரம்பித்து விட்டார்.
‘ஐயோ சாமி.. கடவுளே! என்னைக் காப்பாத்து! பத்திரமாகக் கீழே இறக்கிவிடு.. நான் உனக்கு ஆயிரத்தோரு தேங்காய் உடைக்கிறேன்..”
இந்தக் கதையை எழுத்திலே படிப்பதை விட காழியூரர்ஜி சொல்லக் கேட்கவேண்டும். இனிமையாக காதுக்குள் தேன் பாயும்.
இந்தக் கட்டுரையில் ஏகப்பட்ட இனிமைகள் வந்திருப்பதைக் காணலாம். ஆனால் அத்தனை இனிமைகளிலும் கடைசியில் அந்த இடத்தைவிட்டுப் பிரியவேண்டுமே என்ற பெரிய துன்பம் எனக்கு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் - இதுதான் வாழ்க்கை போலும்!!
திவாகர்
Labels: 501 இலிருந்து ஆயிரத்தொன்று
5 Comments:
நல்ல அனுபவம் தான். கதையும் அருமை, சொன்னவரும் பெரியவர், கிடைச்சதும் அற்புதமான தத்துவம், கொடுத்து வச்சிருக்கீங்க, மதுரைக்குப் போய்க் கதை கேட்க. வாழ்த்துகள். ம்ம்ம்ம்ம் காழியூரர் அதுக்குள்ளே மதுரைக்குப் போயிட்டாரா? அப்போ ???????? சரிதான்!
அருமையான அனுபவம்.
ஆமாம், நீ உன் அண்ணன் மகன் திருமணத்திற்கு செல்கிறேன் என்றல்லவா சொன்னாய்?
இனிமேல் தேங்காய்யை பார்க்கும் போதெல்லாம் இந்த அருமையான கதையும் நீயும் மனக்கண் முன் நிற்பீர்கள்.
A very good story. manithanin salanuthukku alave illai enbadhai miha nandraga kattuhiardhu. adhai sonna periavarukkum, adhai pahirndu kondamaikku thangalukkum nandri.
திவாகர் சார்,
மதுரமான மதுரைக்கு போனதோட இல்லாம, உங்களோட அனுபவத்த அதுவும் ஒரு பெரியவரோட ஆசீர்வாதத்தை நீங்க மட்டும் வச்சிக்காம எங்க கூட பகிர்ந்துகிட்டீங்களே இது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நன்றி.
இப்பதான் பார்த்தேன். மிக அழகாக தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
Post a Comment
<< Home