Tuesday, June 16, 2009

விஜயவாடா எங்கள் விஜயவாடா பகுதி 5

ஒரு தமிழ்ப்பள்ளி சீரழிகிறதே..

திருவள்ளுவர் தமிழ்ப் பாடசாலை.. ஆகா.. பெயரே எவ்வளவு அழகாக இருக்கிறது.. விஜயவாடாவில்தான் இந்தத் தமிழ்ப் பாடசாலை இருக்கிறது.. அதுவும் ஆந்திராவிலேயே (சித்தூரைத் தவிர) ஒரே ஒரு தமிழ்ப் பாடசாலையாக்கும் என்ற பெருமை வேறு இந்தப் பள்ளிக்குண்டு.

ஆனால் இந்தப் பெருமை எல்லாம் இனி எத்தனை வருடங்கள், அல்லது மாதங்கள் என்று கேட்கும் நிலையில் திருவள்ளுவர் தமிழ்ப் பாடசாலை இன்று இருக்கிறது..

1957 இலோ அதற்கும் முன்போ, இந்தத் தமிழ்ப்பாடசாலை தர்ம மனம் கொண்ட இராமசாமி நாடார் (விஜயவாடா பருப்பு மில் முதலாளி) அவர்களால் இலவசமாக நிலமும் கட்டிடமும் வழங்கப்பட்டு அமர்க்களமாக தொடங்கப்பட்டது. இந்தத் தமிழ்ப் பள்ளிக்கு நடிகர் சிவாஜி கணேசன் அந்தக் காலத்தில் ரூ.10000 கொடையாக வழங்கினாராம்(!!). தமிழ்தான் ஆதாரப்பாடம். தமிழ் மூலமாகவே மற்ற பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஒரு சமயத்தில் அதாவது 1965,66 ஆம் வருட சமயத்தில் 800 மாணவர்கள் வரை இத் தமிழ்ப் பள்ளியில் சேர்ந்ததால், ஆசிரியர்கள் அதிகம் பேர் தேவைப்பட்டனர். அப்போது ஆந்திராவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் கூட மிகவும் ஆதரவாக இருந்ததுடன், ஆசிரிய ஆசிரியைகளை அரசாங்க உத்தியோகஸ்தராக நல்ல சம்பளம் கொடுத்து ஏற்றுக் கொண்டது. இதனால் இருபதிலிருந்து முப்பது தமிழர் ஆந்திரா அரசின் உத்தியோகஸ்தராக ஆனார்கள். (அப்படி ஆனவர்களெல்லாம் இப்போது ஓய்வு பெற்று ஓய்வூதியம் கூட பெறுகிறார்கள்,) அத்தோடு மட்டுமல்லாமல் பள்ளியைக் கட்டிக் கொடுத்த தர்மவான் இந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் ஒரு சிறிய பிள்ளையார் கோவிலோடு வீடுகளையும் கட்டிக் கொடுத்தார் (தங்குவதற்கு) என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..

பள்ளி இரண்டடுக்குப் பள்ளிதான். எதிரே உள்ள மைதான இடத்திலும் சிறார்கள் படிக்கும் சின்ன வகுப்புகள் கூட கட்டிக் கொடுத்தவர். திருவள்ளுவர் தமிழ்ப்பாடசாலையில் விளையாட மைதானம், நூலகம் என எல்லாவகையிலும் வசதிகளோடு பள்ளி இருந்ததால் ஊரில் இருந்த தமிழர்களில் அதிகம்பேர் தங்கள் பிள்ளைகளை இங்கு அனுப்பி பாடம் பயில வைத்தனர்.

1978-80 களில் நான் இங்கு வந்த சமயத்தில் மாணவர்கள் எண்ணிக்கை பழைய அளவுக்கு இல்லையென்றாலும் என்னுடைய நண்பர்களின் தம்பி தங்கைகள் அதிகம் பேர் படித்து வந்தார்கள். அவர்களைப் பற்றி வரும் சில குறைகளைக் கேட்க அந்த தம்பி தங்கையர் சார்பாக நானும் நண்பர்கள் கூட செல்வதுண்டு. அப்படித்தான் பழக்கம் அந்தப் பள்ளியோடு ஆரம்பித்தது. நம் செயல் சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருத்தல் நம் சுபாவத்தில் இல்லை என்பதால் நல்லதோர் பள்ளியில் அதன் மேடைகளில் பாரதி விழா, பட்டி மன்றம் போன்றவை ஏற்பாடு செய்தால் நல்லதுதானே என்று ஆரம்பித்தோம். முதலில் பள்ளி நிருவாகத்தினர் (அந்த காலகட்டத்தில் இருந்தவர்கள்) எங்களோடு ஒத்துழைக்க மறுத்தனர். ஆனால் எங்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் முதன் முதலாக பாரதி விழாவை அரங்கேற்றினர் (1979). பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, மாறுவேஷப் போட்டி எனப் பலவகைகளில் போட்டிகளை உருவாக்கி மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துப் பொதுமக்களையும் (நாங்களே பொதுதானே) இந்த விழாவில் பங்கேற்கவைத்தோம். மிகப் பெரிய அளவில் விழா வெற்றியைத் தந்தது பள்ளியாளர்களுக்கே ஒரு ஆச்சரியத்தைத் தந்தது. மேலும் மூன்று நான்கு முறை (பட்டிமன்றங்கள், திருவள்ளுவர், பாரதி ஆண்டுவிழா) தமிழ் நிகழ்ச்சிகள் அங்கேயே செய்து காட்டினோம். மிக நல்ல முறையில் தமிழ்மக்கள் ஆர்வமாக வந்திருந்து ஒத்துழைப்புக் கொடுத்தனர். தமிழ்ப் பள்ளி நல்ல பெயரை அனைவரிடமும் பெற்றது. ஆனாலும் இளைஞர்களான எங்களால் அந்தப் பள்ளிப் பொறுப்பாளர்களிடம் நல்ல பெயர் வாங்கமுடியவில்லை. காரணமும் அவர்களேதான். இந்த மாதிரியான பொது நிகழ்ச்சிகளை மேலும் நடத்த மறுத்ததுதான்.

இப்படி ஒரு அருமையான மேடையையும் மாணவர்கள் அவர்தம் குடும்பங்கள் என்ற அளவில் ஏராளமான பார்வையாளர்களையும் கையிலேயே வைத்துக் கொண்டு, ஏன் இப்படி இத்தனை வருடம் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே.. தமிழை மிக நல்ல முறையில் வளர்ப்பதற்கு வெறும் பள்ளி மட்டுமே போதாது.. மாணவர்களையும் தமிழர் குடும்பத்தையும் வசப்படுத்தவேண்டும் என்றால் நல்ல நல்ல தமிழ் நிகழ்ச்சிகளையும் தரவேண்டும், உங்கள் வசம் தமிழர்களை ஈர்க்கவேண்டும், உச்சத்தில் ஒருகாலத்தில் 800 மாணவர்கள் வரை படித்த பள்ளியில் மாணவர்கள் அப்போது 400 அளவில் குறைந்துவிட்டதே.. உங்களிடம் மேலும் உழைப்பு வேண்டாமா.. என்று நாங்கள் போர்க் கொடி பிடித்ததுதான்.

ஆனால் அவர்கள் அந்த காலகட்டத்தில் எங்கள் வாதங்களை லட்சியம் செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான். இன்னொரு காரணம் தமிழ்க்குடும்பங்கள் மெல்ல மெல்ல மாறி தமிழ்ப் போதனையிலிருந்து ஆங்கில போதனைக்கு செல்லத் தொடங்கியது. சமீபத்தில் இந்தத் தமிழ்ப் பள்ளியும் ஆங்கில போதனைக்கு தன்னை தயார்படுத்திகொண்டாலும், காலம் கடந்த செயலாக மாறிவிட்டது.

சரி.. இந்தப் பள்ளியின் தற்போதைய நிலை என்ன.. மிகவும் சிரம திசையில் உள்ளதாக அறிந்தபோது மனம் வருத்தப்படத்தான் செய்கிறது. ஆரம்பப் பள்ளியில் (ஒன்றிலிருந்து ஐந்து வரை) சுமார் 100 பேர்களும், உயர்நிலைப்பள்ளியில் 54 மாணவர்களுமே இருக்கின்றார்கள். இந்தப் பள்ளியை தற்போது நடத்திவரும் கமிட்டி அங்கத்தினர் சிலர் நமக்கு இன்னமும் நண்பர்கள்தான். அவர்களும் முதலில் தமிழ்க் குடும்பத்தினர் பரவலாக இருக்கும் இடத்திற்கு சென்று தமிழ்ப் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்குமாறு வற்புறுத்தத்தான் செய்கிறார்கள். குறைந்த செலவில் பஸ் கட்டணம் வசூல் செய்து சற்று தூரத்தில் உள்ள தமிழ்க் குடும்பத்தினரை வரச் சொல்லி வற்புறுத்தினர். ஆனாலும் ஆதியிலேயே அசட்டையாக இருந்துவிட்டதால், முயலாமை இப்போது இயலாமையாக மாறி விட்டது என்பதை எல்லோருக்குமே தெரியும் என்றாலும் வெளியே சொல்ல முடியவில்லை. அரசாங்கம் வேறு அடிக்கடி பயமுறுத்திவருகிறது. அங்கிருந்து வரும் ‘எய்டட் ஸ்கூல்’ அந்தஸ்து பரிபோகும் நிலையில் உள்ளதும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தாலும் என்ன செய்தால் இந்தப் பிரச்னை தீரும் என்று முழிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சம் வெளிப்படையான விமர்சனம்தான். இருந்தாலும் பள்ளி நடத்துவோர் மிகவும் தீவிரமாக செயல்படவேண்டிய நிலையில் உள்ளார்கள் என்று உணர்த்தும் நல்ல நோக்கமே இப்படிப்பட்ட விமர்சனம்.

இதற்கு மாற்றுவழிகள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தோடு தெலுங்கையும் பயிற்றுமொழியாகக் கொண்டுவந்தால் பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள எத்தனையோ ஏழைக்குடும்பங்கள் பயன்பெறும். ஆனால் நாளுக்கு நாள் தேயும் தமிழ்மொழி ஆதரவு மேலும் தேய்ந்தால் ‘மைனாரிடி’ அந்தஸ்து போய் அங்கு தெலுங்கு பள்ளி அந்தஸ்து கூடுதலாகிவிடலாம் என்ற பயம் உண்டோ என்னவோ. (இது தவிர்க்கப்படவேண்டிய அச்சம்) ஆரம்பப் பள்ளியின் சேர்ப்பை அதிகப்படுத்த கடுமையாக உழைக்கவேண்டும். ஆரம்பப்பள்ளியின் பிள்ளைகள் அதிகமாக அதிகமாக மேல்நிலையில் வருடா வருடம் கூடும். ஏறத்தாழ ஒரு கார்பொரேட் பள்ளி செயல்படுவதைப் போல (நிதி விஷயங்களைத் தவிர) செயல்பட்டு ஆரம்பப்பள்ளியை மிக நல்ல நிலையில் உயர்த்தவேண்டும். முக்கியமாக ஆசிரியப் பெருமக்கள் (தற்சமயம் இருப்பதே மிகக்குறைவுதான்) மிக நல்ல முறையில் கல்வியின் தரத்தை உயர்த்தப் பாடுபடவேண்டும். கல்வியின் தரம் உயர்ந்ததாக கருதப்படும் எந்தப் பள்ளியும் சோடை போனதில்லை என்ற வரலாற்று உண்மையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

முக்கியமான ஒன்று. அடிக்கடி கலைநிகழ்ச்சிகளும், தமிழ்நிகழ்ச்சிகளும் பள்ளியில் நடத்தவேண்டும். நிகழ்ச்சிகளுக்கு பல தமிழ்க் குடும்பங்களையும் அழைக்கவேண்டும். காலத்துக்கு ஏற்றவாறு பள்ளி நிர்வாகம் செயல்படவேண்டும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மிக மிகத் தேவையான ஒன்று. பள்ளியின் புகழை பலவிதங்களில் பரப்பும் வகையில் நிர்வாகமும் ஆசிரியர்களும் முயன்றால் குறைந்தபட்சம் நான் 1978-80 இல் பார்த்த அந்தப் பழைய பள்ளியின் களையாவது வர வாய்ப்புண்டு.

விஜயவாடாவில் ஒரு தமிழ்ப்பள்ளி எப்போதோ இருந்ததாக ஞாபகம் என்று மற்றவர் சொல்வதைக் காட்டிலும், விஜயவாடா தமிழ்ப் பள்ளியா.. மிக நல்ல, மிகத் தரமான முறையில் செயல்படுகிறதே.. என்று மிகப் பெருமையாக சொல்லப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன். நான் மட்டுமல்ல எல்லோருமே விரும்புவார்கள்..

திவாகர்

Labels:

19 Comments:

At 7:03 AM, Blogger கிருஷ்ண மூர்த்தி S said...

கேட்பதற்கே மிகச் சங்கடமாக இருக்கிறது. இங்கே கல்வி என்பது முழு அளவு வியாபாரமாக மாறிப் போய் விட்ட நிலையில், பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்வியே அடிபட்டுப் போகிறதே! ஆதங்கத்தோடு, நீங்களே பல உருப்படியான திட்டங்களை முன் வைத்திருக்கிறீர்கள். அதைச் செயல் வடிவத்திற்கு கொண்டுவர, உங்கள் நண்பர்களோடு இணைந்து, உள்ளூர்த் தமிழ்மக்களிடையே ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதும், காலத்திற்கேற்ற மாறுதல்களைச் செய்யவும் முனையலாமே!

சமீபத்தில் நான் படித்த பதிவுகளில், என்னை மிகவும் பாதித்த பதிவு இது. கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாள், சென்னை ஐ ஐ டி இல படித்த மாணவர் ஒருவர், தன்னை உருவாக்கிய கல்வி நிறுவனத்திற்குத் தனது நன்றிக் காணிக்கையாக, பெரும்பணம் கொடுத்து, அடிப்படைக் கட்டமைப்பிற்கு உதவினார் என்று அறிந்திருக்கிறேன். அதே மாதிரி, தன்னை உருவாகிய பள்ளி, என்று நினைத்துப் பார்க்க வைக்கும் ஆசிரியர்கள் இல்லாமல் போனதே, இந்த மாதிரி அவலத்திற்குக் காரணம் என்று தோன்றுகிறது.

 
At 9:10 AM, Blogger V. Dhivakar said...

Thanks Sri Krishnamurthi for prompt response. The following letter to my private mail sent Sri Rishi Raveendran
விஜயவாடாவிற்கு அருகேயுள்ள Nuzvid என்ற கிராமத்தில் 80 களின் இறுதியில் ஆந்திரா பல்கலைக்கழக மாணவனாய் மேல்நிலை பெளதிகம் பயின்றபொழுது திருவள்ளுவர் தமிழ் பாடசாலையைக் கடந்து செல்லும்பொழுதெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்களாகிய எங்களுக்கெல்லாம் உச்சியிலிருந்து உள்ளங்கால்கள்வரை சொல்லொணா ஒரு உணர்ச்சி பாய்ந்தோடிக்கொண்டிருந்தது நிஜம். வருங்காலத்தில் விஜயவாடாவில் வாழ நேர்ந்தால் நம் குழந்தைகளை இந்த பாடசாலையில்தான் சேர்க்கவேண்டும் என நாங்கள் நினைத்ததுண்டு. பாடசாலையின் தற்பொழுதைய நிலையை இப்பொழுது செவியுறவே வேதனையாக இருக்கின்றது.

அனைத்து தமிழர்களும் தங்களது குழந்தைகளை இந்த பாடசாலையில் சேர்ப்பது மிகவும் நல்லது. தமிழ்வழிக் கல்வி வாழ்க்கையில் உயர மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.

and another one by Sri Dev Rjan

திவாகர் அவர்களுக்கு,

வணக்கம். இந்த இணைப்பில் காணப்படும் தகவல்கள் பயனுள்ளனவாக இருக்கும் என நினைக்கிறேன்.

http://ncmei.gov.in/writereaddata/filelinks/c296efcb_Guidelines.pdf

அங்கு வாழும் தமிழர்களைப் பற்றிய தகவல்கள்,அவர்களுக்குத் தாய்மொழி வழிக்கல்வியில் இருக்கும் ஈடுபாடு,
மாணவர்களின் எண்ணிக்கை இவற்றைப் பற்றியும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

பிற மாநிலங்களில் தமிழ்க் கல்வி வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்றே நம்புகிறேன்.

மேலதிகத் தகவல்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்,
தேவ்

I am sure the people will wake-up for the good cause and do the needful. (sorry for English as no facility for Tamil at present)

Dhivakar
Dhivakar

 
At 9:32 AM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

திவாகர் சார்
புலம் பெயர்ந்த தமிழர்கள் படும் அதே பிரச்சனையின் வேறொரு முகம் இது!

பல தீர்வுகளை நீங்களே முன் வைத்துள்ளீர்கள்! ஆனால் தீர்வுகள், மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் போது தான் தீர்வுகள் ஆகின்றன! தீர்வு சொல்லும் பொறுப்பைப் பயனாளிகளிடமும் கொடுத்துப் பாருங்களேன்!
ஏன் தமிழக் குடும்பங்கள் இப்போது தயங்குகிறார்கள் என்று பள்ளி நிர்வாகத்தை ஒரு சின்ன கருத்துக் கணிப்பு எடுக்கச் சொல்லுங்களேன்! பல பிரச்சனைகள் என்ன-ன்னு வெளியில் தெரிய வரும்.

பள்ளியில் தமிழ்க் கல்விக்கு முழுமையாக எத்தனை தமிழ்க் குடும்பங்கள் துணிவார்கள் என்று தெரியாது! ஆனால் வீட்டை விட்டு இருக்கும் ஒரு வீட்டில், தாய் வீட்டின் விஷயங்களைத் தேடத் துணியும் மக்கள்! அவர்களுக்கு என்ன வேணும், எதைத் தேடுகிறார்கள் என்று பார்த்து, அதை முதலில் கொடுத்தாலே, அடுத்தடுத்து வரத் துவங்குவர்!

வார இறுதி வகுப்புகள், நடனம், நாடகம், திரைப்படம், ஆன்மீகம், சமையல், போட்டிகள்-ன்னு ஈடுபாடும் சுவாரஸ்யமும் ஒரு புறத் தேவை! ஆனால் அடிப்படை என்பது கல்வித் தரம் தான்! அந்த நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்!

TTD போன்ற நிறுவனங்கள் நடத்தும் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்குதாரராகச் சேர்ந்து கொண்டால், பள்ளியின் சிறகு இன்னும் விரியும்! பல பேருக்கும் தெரியும்!

 
At 9:36 AM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆரம்பப் பள்ளியில் அதிக கவனம் செலுத்தலாம்!
குழந்தைக் காப்பகமாகக் கூட, கூடவே செயல்படலாம்!

தெலுங்குக் கல்விப் பாடத்தையும் சேர்த்துக் கொள்வது, தமிழை மறைத்து விடுமோ என்ற கவலை தேவையில்லை! எப்படியும் ஆந்திரத் தமிழர்களுக்கு, தெலுங்கு அறிவு தேவை தானே! அதனால் முதன்மையா வைக்காது, இரண்டாம் மொழியாக வைக்கலாம்!

கல்வி மட்டுமே அல்லாது, விளையாட்டு மற்றும் இதர போட்டிகளில், இப்போது இருக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி வெற்றிப் பெறச் செய்வது, பெரிய ஊடக விளம்பரமாகவும் அமையும்!

 
At 9:37 AM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அனைவரிடமும் பெற்றது. ஆனாலும் இளைஞர்களான எங்களால் அந்தப் பள்ளிப் பொறுப்பாளர்களிடம் நல்ல பெயர் வாங்கமுடியவில்லை. //

ஹா ஹா ஹா!
அப்போதும் அப்படித் தானா? :)

 
At 11:13 PM, Blogger V. Dhivakar said...

அனைத்தும் உண்மை கேஆரெஸ்!. எல்லாவற்றிர்கும் பெரும் உழைப்பு வேண்டும். உழைப்புக்கு ஆட்கள் வேண்டும். இங்கு இதுதான் பிரச்னையோ என்னவோ.. எதற்கும் பொதுவில் போட்டுள்ளேன் அல்லவா.. பார்ப்போம்..

திவாகர்

 
At 11:13 PM, Blogger V. Dhivakar said...

அனைத்தும் உண்மை கேஆரெஸ்!. எல்லாவற்றிர்கும் பெரும் உழைப்பு வேண்டும். உழைப்புக்கு ஆட்கள் வேண்டும். இங்கு இதுதான் பிரச்னையோ என்னவோ.. எதற்கும் பொதுவில் போட்டுள்ளேன் அல்லவா.. பார்ப்போம்..

திவாகர்

 
At 7:08 AM, Anonymous Anonymous said...

Dear Friends,
Come on fix a date to discuss. And put your plans and proposals before the management.

Let us see revival of the school in your hands. The entire Tamils in Vijayawada will definitely welcome it.
Act fast, and involve in action.
Best Regards,
An. Muthu palaniappan.

 
At 9:53 PM, Blogger V. Dhivakar said...

வணக்கம் முத்து பழனியப்பன் அவர்களே!

சில ஆலோசனகள் இந்தப் பகுதியிலேயே வந்துள்ளன. உங்கள் தனிப்பட்ட முயற்சி பாராட்டுதற்குரியது. இருந்தாலும் பள்ளி முன்னேற்றம் என்பது எல்லோர் கையிலும் உள்ளதால் எல்லோரும் சேர்ந்து பாடுபடவேண்டும்.

இந்தப் பதிவில் ஏதாவது தவறான செய்திகள் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்.

திவாகர்

 
At 3:00 AM, Blogger Unknown said...

ஐயா, தெலுங்கு மொழி கல்வியை இணைப்பது, மற்றும் பல நிறுவனங்கள் கல்வி பொருட்டு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது, பல கலை நிகழ்சிகளை அங்கு நடத்துவது நல்ல யோசனையாக படுகிறது.

நீங்கள் கூறுவது போல், அங்குள்ள தமிழ் குடும்பங்களை இதில் பங்கு பெற செய்வதும் அவசியம்.

 
At 3:43 AM, Blogger திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்...
மாறுதல்தான் வாழ்க்கையில் மறுக்க முடியாத விஷயங்கள். இப்படிப்பட்ட பாடசாலைகளை பராமரிப்பது எதிர்நீச்சல்தான். சந்தேகமில்லை. வேத பாடசாலை துவக்கி இருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன்.
இந்த கால மக்களுக்கு பணம்தான் பிரதானமாக வேண்டி இருக்கிறது. அதற்காக அப்போது இருக்கும் வேலை சந்தைதான் கண்ணுக்குப்படுகிறது. மொழி பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. இதை மனதில் வைத்துக்கொண்டு புதிய பயிற்சி திட்டத்தை வகுக்கப்பார்க்கலாம்.

இது தவிர, பகவானை வேண்டுவது தவிர வேறு வழி ஒன்றும் எனக்கு தோன்றவில்லை.

 
At 2:12 PM, Blogger Dr.K.Subashini said...

இங்கு வாழ்கின்ற தமிழர்களுக்கே முதலில் இந்தப் பள்ளியின் தேவைப் பற்றி ஒரு உணர்வும் ஆதங்கமும் இருக்க வேண்டும். பொதுவாகவே இது தமிழ் முக்கிய மொழியாக இல்லாத மாநிலங்களில் அல்லது நாடுகளில் இவ்வகை பிரச்சனைகள் எழுவதைப் பார்க்க முடிகின்றது. இதனைப் போக்க கலை நிகழ்ச்சிகள் போட்டி நிகழ்ச்சிகள் என்று செய்வது ஒரு புறமிருக்க இலவச கணினி வகுப்புக்கள், தமிழ் கணினி பயிற்சிகள், மாணவர்களின் அறிவித்திறமையை வளர்க்கும் முயற்சிகளை, வார இறுதி கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுப் பயிற்சிகள் போன்ற விஷயங்களையும் ஆரம்பிக்க திட்டமிடலாம். குழந்தைகளின் பொது அறிவு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகின்ற போது பெற்றோர்களிடையே கொஞ்சம் நம்பிக்கை தோன்றவும் வாய்ப்பு இருக்கின்றது.

 
At 9:05 PM, Blogger V. Dhivakar said...

திவாகர்,
தமிழ் வளர்க்க நாமொன்றும் துரும்பைக்கூட எடுத்துப் போடப் போவதில்லை, என்பதுதான் நிதர்சனமா?
மிகுந்த வருத்தமாக இருக்கிறது , அதுவும் தமிழ்ப்பள்ளிக்காக கூட புத்தாக்க கருத்துக்கள் யாருக்குமே தோன்றவில்லையா?
ஏன்? ஒன்று செய்யலாமே? நிங்ஙளின் ஆலோசனை போல் கலை நிகழ்வுகள் மூலம் பொது மக்களை ஈர்க்கலாமே?
அதுவும் முடியாவிட்டால், அரசுக்கு ஒரு பொறுப்பன பதவிலிருப்பவரின் மூலம் கடிதம் அனுப்பி உதவி கேட்க்க்கூடாதா?
மிகுந்த வருத்தத்துடன்
கமலம்,
http://www.kamalagaanam.blogspot.com

 
At 9:37 PM, Blogger V. Dhivakar said...

அன்புள்ள் ஜெ!
தாங்களின் யோசனை ஒரு நல்ல யோசனை. முயன்றால் முடியாதது இல்லை.

அன்புள்ள டாக்டர் திவா!
மாறுதலை முதலிலிருந்தே ஏற்றிருந்தால் இந்த நிலைக்கு வரமுடியுமா என்பது ஒரு கேள்வி..
தாங்கள் சொல்வது போல பகவானைத்தான் நாடவேண்டும். பக்கத்திலேயே ஒரு விநாயகர் அழகாக கோவில் கொண்டுள்ளார். இந்த விநாயகர் கோயிலுக்கு அந்தக் காலத்தில் சீர்காழி கோவிந்தராஜன் வந்திருந்த போது பாடச் சொன்னோம். 'விநாயகனே.. வினை தீர்ப்பவனே' என தன் புகழ்பெற்ற பாடலைப் பாடி விநாயகனையும் எங்களையும் மகிழ்வித்தது ஞாபகம் வருகிறது.

சுபா!

அருமையான யோசனை. செயல்படுத்தவேண்டும். கல்வியோடு தவிர மற்ற விஷயங்களிலும் மிக அதிகமான முறையில் கவனம் செலுத்துவது என்பது தற்போதைக்கு மிக மிகத் தேவை!

கமலம்!
உங்களுக்கேற்பட்ட வருத்தம் அடியேனுக்கும் ஏற்பட்டதனால்தான் இந்தப் பதிவே..

தற்சமயம் இருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு ஒரு நல்ல குழு. பார்ப்போம். நல்ல யோசனைகளை செயல்படுத்துவார்கள் என்று நம்புவோம்.

திவாகர்

 
At 7:51 AM, Blogger Geetha Sambasivam said...

கேட்க வருத்தமாய் இருக்கிறது இந்தப் பள்ளியின் பழைய மாணவர்களில் இப்போது செல்வாக்குடன் இருக்கும் சிலரின் உதவியைப் பெறலாம். வெளிநாடு வாழ் ஆந்திரத் தமிழர்கள் உதவலாம். ஓர் அறக்கட்டளை போல் அமைத்துப் பள்ளியின் செலவுகள், ஆசிரியர்களின் செலவுகள் போன்றவற்றிற்கு அரசின் உதவியை எதிர்பாராமல் கொடுக்கலாம். அல்லது மத்திய அரசின் உதவியை நாடலாம். தெலுங்கைத் தமிழ் மாணவர்கள் இரண்டாம் மொழியாகவும், தமிழைத் தெலுங்கு மாணவர்கள் இரண்டாம் மொழியாகவும் கற்கும்படி பாடத் திட்டத்தை மாற்றலாம். எல்லாவற்றையும் விட சுலபமானதாய்த் தோன்றுவது மத்திய அரசின் உதவியை நாடுவதே. நவோதயா பள்ளியோடு சேர்க்க முயலலாம். அந்தப் பாடத்திட்டத்தையே கொண்டு வந்து அக்கம்பக்கம் இருக்கும் ஏழை மக்களும் பயன்பெறும்படி உயர்தரக் கல்வியை உயர்தர ஆசிரியப் பெருமக்களை வைத்து முயலவேண்டும். உழைப்புத் தேவை. இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

 
At 5:13 AM, Blogger deva said...

KADALUKKU; AMAIHTI THEVAI,'

RIVARUKKU ;'WATER FLOWNESUM ,CALMNESSUM THEVAI,

ORU NIRVAGAM NANDRAGA NATAKKA VEDUM ENDRAL AVAN NALLAVANAGA OR VEERANAGA IRRUKAVENDUM ENBATHU THEVAI ILLAI ,THIRAIMAISALIYAGA IRRUNTHAL POTHUM ,
''MR COPMAIAR,' SOLLI IRRUKIRAR.ATHARKKU EVALAU PANAM SELAVAZITHIRUKIRAI ENBATHALLA.?/ENNA PALAN KANDATHU NIRVAGAM ENBATHU THAN VENDUM?.

 
At 5:43 AM, Blogger deva said...

NALLATHU SOLLUMPOTHU ATHAI KETU PAYAN PETRAL ATHU UONAKKU NALLATHU, ATHAI ALLAMAL SONNAVAMAI VANDHU SEI ENDRAL,

ENNAL MUDIYAHTU ENDRUTHANE TRUE'

AVAN; ENDA UNAKKU KALYANAM THANE

MAPILLAI;AMMAM

AVAN; VASAPDIYALA VAZAMARAM KATAVENDIYATHU THANE,

MAPP; SONNA EPPADI, NEENGALE KATAVENDIYATHUTHANE .,

AVAN;SARRI,SEYAREN ,DEI PATU VETI PATTU SATAI KATTANUM

MAPP; ADA SONNA EPPADI, NEENGA KATTI VIDUNGA,

AVAN; NASAMA POCHI ,MAPPILAI NEE SEYAVENDIYATHA ELLAM ENNA SEIYA SONNA EPPADI/?

KETTI MELLAM,' KETTI MELAM ' DEI MAPPILAI THALIYA KATTUDA,;

MANA PENN ; ENGA IVALAVU NERAMA NANNUM PATHUUKITTUTNAN IRRUNTHEN MAPPILAI SEIYAVEDIYA VELLAYELLAM NEENGALE SENGIKITTE IRUNTHINGA, 'WHY? THALIYUM NEENGALE KATTI VIDUNGO ,ORU WORK CORREKTA FINISH AUDUM .

MAPP; A..D..A NANUM ATHAITNAN NENICHEN , NAMA RENDUPERODA, MANASU ONNA IRUKKUTHU PATHIYA,? THIRU PALAM NEE APPARUKKU ITHU THAN PATHIL. O.K BAI DIVA UN ATHANGATHIL ARTHAM OUNDU ATHAI PURINTHU KOLLA MUDIYATHVAR MANDU UNAKKU NAN THARUVEN POONCHENDU,VAZTHIDUVAR PALLAR UON BLOG KANDU ,THODARUM'[DEVA]

 
At 1:10 AM, Blogger V. Dhivakar said...

முதலில் தமிழர்களுக்குள் ஒற்றுமை உணர்வு தேவை. ஒற்றுமை உண்டால் அனவருக்கும் வாழ்வு, ஒற்றுமை இல்லையேல் அனைவருக்கும் தாழ்வே..
எல்லோரும் கூடி ஒருமனதோடு உழைக்கத் துவங்கினால், ஒரு நல்ல தமிழ்ப்பள்ளியைக் கட்டிக் காத்த பெருமை உங்களுக்குச் சேரும். தயை செய்து ஒற்றுமையோடு செயல்பட்டு இங்கு ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களை மனதில் கொண்டு, நிர்வாகக்குழுவில் தெரிவித்து ஆவன் செயல்படவேண்டுமாறு பணிவன்புடன் விஜயவாடா தமிழ் நிர்வாக மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

செயல்படவேண்டிய சிந்தனைக் கருத்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
திவாகர்

 
At 8:27 AM, Blogger Unknown said...

இந்த பள்ளியில் நான் 72ஆம் நான் பயின்றேன் என்பதை பெறுமையுடன்
கூறுகிறேன் தமிழ் வாழ்க
வாழ்க தமிழ்

 

Post a Comment

<< Home