விஜயவாடா – 7
மூன்று ரூபாயில் தரமான தேநீர்
ஒரு சில சமயங்களில் இந்த ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதற்கு முன்பாகவே ரயில்நிலையத்துக்கு வந்துவிடும். அதுவும் நான் ஏறின அந்த ரயிலின் ஓட்டுநர் அந்த நாள் பார்த்து நாற்பது நிமிடங்கள் முன்னதாக, விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் கொண்டுவந்துவிட்டு கொஞ்சம் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். காரணம் நான் சரியான நேரத்துக்கு வரும் பட்சத்தில் அடுத்த அரைமணிநேரத்தில் என் நண்பர்கள் எதிர்த்திசை வண்டியில் வருவதால், நான் காத்திருந்து அவர்களுடன் சேர்ந்து ஊருக்குள் செல்ல ஏற்கனவே திட்டம் போட்டு வைத்திருந்தோம். ஆனாலும் என்ன, அந்த ஸ்டேஷன், அதுவும் இருட்டு வெளியே இன்னமும் போகாத நேரத்தில், ஒளிவெளிச்சம் கண்ணைக் கவர அதி சுந்தரமாகக் கண்களுக்கு காட்சி அளிக்கவே எத்தனை நேரமானால் என்ன என்பது போல அந்த ஸ்டேஷனை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
விஜயவாடா ஸ்டேஷனைப் போல ஒரு ரயில்வே ஸ்டேஷனை பாரதத்தில் எங்கணுமே காணமுடியாது என்று எனக்கு சொல்ல மிக மிக ஆசை. தெற்கு நோக்கி வரும் ரயில்களாகட்டும், வடக்கு நோக்கிப் போகும் ரயில்களாகட்டும் விஜயவாடாவைத் தொட்டுதான் செல்லவேண்டும். தெற்கையும் வடக்கையும் உண்மையாக இணைக்கும் பாலம் இந்த விஜயவாடா ரயில் சந்திப்புதான். சென்னை, தென் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து கல்கத்தாவோ புது டில்லியோ செல்லவேண்டுமென்றால் விஜயவாடாதான் முக்கிய சந்திப்பு. விஜயவாடாவிலிருந்து எல்லா திசைகளுக்கும் ரயில் பிரிந்து செல்லும் மார்க்கத்தையும் காணலாம். வடக்கு திசையில் ஹைதராபாத், டில்லி ஒரு வழி என்றால் வடகிழக்கே கல்கத்தா இன்னொரு பாதை. கிழக்கிலோ பீமாவரம், மசூலிப்பட்டணம் ஒரு பாதை என்றால் அதன் நேர் மாறாய் மேற்காய் குண்டூரும், ஹூப்ளி, கோவா செல்ல இன்னொரு பாதை. இதனிடையே சென்னைக்கும் தெற்கு மூலைக்கும் செல்ல இன்னொரு பாதை..
புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானோதயம் என்றால், இந்த விஜயவாடா ஸ்டேஷனும் ஏறத்தாழ போதி மரத்தடி போல ஞானத்தை அள்ளித்தரும் இடம்தான். நான் முதன் முதலில் சென்றபோதே அந்த ஸ்டேஷன் என்னைக் கவர்ந்துவிட்டது. காரணம் ’ஒலிபெருக்கி’. அந்தப் பெரிய ஸ்டேஷனின் எந்த மூலையில் இருந்தாலும் மிக ஸ்பஷ்டமாக ஒலிக்கும் அறிவிப்பும், அது மிக துல்லியமாகக் காதில் விழுவதும்தான். சென்னை ஸ்டேஷனின் அந்த இரைச்சலில் யார் என்ன சொல்கிறார் என்பது யாருக்கும் தெளிவாகக் கேட்காது!. ஆனால் அப்போதைய (1970-80 களில்) விஜயவாடாவில் ஆறு பிளாட்பாரங்கள் கொண்ட காலத்தில், எப்போதும் ஏதாவது ஒரு பெரிய வண்டி வந்து போய்க் கொண்டே இருக்கும் வேளையிலும், எத்தனைதான் சப்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தாலும் இந்த அறிவிப்புகள் மட்டும் எவ்விதத் தடையுமின்றி ஒலி பெருக்கி மூலம் நன்றாகவே கேட்கும். விஜயவாடாவில் இந்த வசதி அன்றிலிருந்து இன்று வரை அதே தரத்தில்தான் வைத்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் நண்பர்கள் அனைவருமே இந்த ஸ்டேஷனுடன் ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டவராக இருந்ததாலும், ஸ்டேஷனுக்கு அருகேயே முதலில் என் வீடு (நண்பர்கள் அன்புடன் ’மடம்’ என்றும் அழைப்பார்கள்) அமைந்ததாலும் இந்த ஸ்டேஷனுக்கும் நமக்கும் தினசரி தொடர்பு இருக்கத்தான் செய்தது. அதுவும் பலசமயங்களில் நண்பர்கள் வெளியூர் செல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்காக ரிசர்வேஷன் வசதிக்காகவும் (ஓஸி சேவை, காரணம் நம் நெருங்கிய நண்பர் அந்த ஸ்டேஷனில் டிக்கெட் பரிசோதகர்களின் தலைவர்) அடிக்கடி செலவதால் ஒரு கால கட்டத்தில் விஜயவாடா ஸ்டேஷனின் ஒவ்வொரு முன்னேற்றமும் நமக்கு அத்துப்படியாகவே போய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இங்கே பலதரப்பினரை சந்தித்துள்ளோம். பயணங்களின் மத்தியிலே சென்னை செல்வதற்கு ஏதுவாக ரயில் பிடிக்கும் பல நடிக நடிகையர்களுடன் கலந்து பேசி, கிண்டலடித்து, தோழமையாகப் பேசியுள்ளோம். சிரிப்பு நடிகர் சுருளிராஜன் ஒருமுறை எங்கள் நண்பர்களிடையே மிகத் தோழமையாக, வாடா போடா (இருபக்கமும்) என்ற அளவில் பழகியது கூட நினைவுக்கு வருகிறது. பல காதல்கதைகள் அரங்கேறும் இடம் கூட இதுதான். இந்த ஸ்டேஷன் அருகாமையில் உள்ள ரயில்வே இன்ஸ்டிடியூட்டில்தான் என்னுடைய முதல் நாடகமான ’சாமியாருக்குக் கல்யாணமு’ம், அடுத்த நாடகமான ‘ஓடாதே நில்’ இரண்டும் அரங்கேறியது.
எந்த பெரிய வண்டியானாலும் இங்கு முடிந்தவரை ஓட்டுநர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட நேரத்தை விட சற்று தாமதித்துதான் வண்டியை எடுப்பார்கள். அவ்வளவு சுலபத்தில் இந்த ஸ்டேஷன் அவர்களை நகர வைக்காது. ஒவ்வொரு சமயத்தில் ஒலிபெருக்கி மூலம் அந்த ஓட்டுநருக்கு செல்லமாக திட்டுகள் கூட விழும் ‘சீக்கிரம் பிளாட்பாரத்தை காலி செய்யுங்க.. பின்னாடி வண்டி நிக்குது இல்லே.. அட, உங்க வண்டியை நகத்துங்கப்பா..’ என எச்சரிக்கைகள் வந்தாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல் மெல்லமாகத்தான் எடுப்பார்கள். அத்தனை காந்தம் உள்ள இடம் இந்த ஸ்டேஷன்.
எந்த அரசாங்கம் வந்தாலும் மிக முக்கியத்துவம் தரப்பட்ட ரயில் நிலையங்களில் ஒன்றாக விஜயவாடா இருக்கின்றது என்றே சொல்லலாம் மாடர்னிசேஷன் என்று இந்தியாவிலேயே முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் விஜயவாடா மட்டுமே. 1980 இல் கிருஷ்ணா புஷ்கரம் வந்தபோது மிகப் பெரிய அளவில் புதுமையைப் புகுத்தி பயணிகளுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.
இப்போது விஜயவாடா ஸ்டேஷன் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது. எஸ்கலேட்டர்கள் மாடிப்படிகளுக்குப் பதிலாக வந்து விட்டன. தூய்மை முன்பை விட சற்று அதிகமாகவே இருக்கிறது முன்பெல்லாம் ஒரு புத்தகக் கடை (ஹிக்கின்ஸ் பாதம்) மட்டுமே தனியார் கடை. இப்போது ஏகப்பட்ட தனியார் கடைகள், ஒவ்வொன்றிலும் தேவையான பொருள்கள் எந்நேரமும் கிடைக்க ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்டேஷனில்தான் எதுவும் எந்நேரமும் கிடைக்கும் என்பது தெரிந்தே இருந்தாலும் அந்த அதிகாலை நேரத்தில் காபி அதுவும் பில்டர் காபி சாப்பிடாமல் எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்த ஆறாம் நம்பர் பிளாட்பாரத்து ஜன்-ஆஹார் ஸ்டால்காரர், ரயில்வே உத்தியோகி, கூப்பிட்டார்.
”என்ன சார் பாக்கறீங்க? டீ சாப்பிடுங்க சார்.. நல்லா இருக்கும்..”
“இல்லே.. எனக்கு பில்டர் காபி வேணும்.. அதான் பாக்கறேன்..”
“அதோ.. அந்த பக்கத்துலே போங்க.. மெஷின் இருக்கு.. கிடைக்குமே..”
நான் மறுத்தேன்.. “இல்லே.. எனக்கு மெஷின் பவுடர் பால் பிடிக்காது.. எருமைப் பாலைக் காய்ச்சி இங்கேயே டிகாக்ஷன் போட்டு ஒருகாலத்துல இந்த ஸ்டேஷன்ல கொடுத்திருந்தாங்க.. அது இப்போ இல்லையே”
அந்த ஸ்டால்காரர் சிரித்தார். “அது நாங்க (வி.ஆர்.ஆர்) அப்போ பண்ணிண்டு இருந்தோம் சார்.. இப்போ எல்லாம் மாடர்ன்’ அப்படின்னு பேரு சொல்லி பிரைவேட்காரங்க கிட்ட போயிடுச்சு.. அதனாலதான் எருமைப்பால் காய்ச்சிறது போய் பவுடர் பாலா ஈசியா மாறிடுச்சு.. இருந்தாலும் சார், இந்த டீயைச் சாப்பிட்டுப் பாருங்க.. உங்க டேஸ்ட்டுக்கு ஏத்தா மாதிரி எருமைப் பால் டேஸ்ட்தான்..”
ஆஹா, என்று சொல்லி வாங்கிக்கொண்டேன்.. மிகச் சுவையாக இருந்தது.. எவ்வளவு என்று கேட்டேன்.. மூன்று ரூபாய் என்றார். ஆச்சரியத்தோடு கொடுத்துவிட்டு மனதார ஒரு வாழ்த்தையும் சொல்லிவிட்டுதான் நகர்ந்தேன். மூன்று ரூபாய்க்கு இந்த விஜயவாடாவில்தான் அதுவும் அதிகாலை நேரத்தில் கிடைக்கும் என்று மனதுக்குள் ஒரு பெருமை வேறு.
ஒருகாலகட்டத்தில் இதே ரயில்வேயின் வி.ஆர்.ஆர் (வெஜிடேரியன் ரெஃப்ரெஷ்மெண்ட் ரெஸ்டாரெண்ட்) சூடு சூடாக எந்த நேரமும் இட்லி தயாரித்துக் கொடுப்பதையும் மிகச் சுவையான முறையில் பயணிகளுக்கு சாப்பாடு கொடுத்திருப்பதைப் பார்த்தவன். அந்த நாளிலேயே ஒருநாளுக்கு 2000 சாப்பாடுகள் ரயிலுக்கு மட்டும் தினம் செல்லுமாம். இப்போது பத்தாயிரத்துக்கும் மேல் மீல்ஸ் பேக் செலவாணி ஆகிறதென்றாலும் வி.ஆர்.ஆர் எதுவும் செய்வதில்லை. ஏதோ ரிடையர் ஆகும் நிலையில் உள்ளவர்களுக்கு வேலை கொடுத்தாகவேண்டுமே என்று சின்னச் சின்ன ஸ்டால்களை மட்டுமே பராமரித்து வருகின்றது போலும்!. பெரிய வியாபாரங்களை பல தனியார் கடைகள் பங்கு போட்டுக் கொண்டு லாபத்தை சாப்பிடுகின்றன. பிளாட்பாரங்களின் மத்தியில் மாடர்ன் ஹோட்டல்கள் வந்துவிட்டன. மிக அதிக விலைதான். ஆனால் அந்த பழையகால வி ஆர் ஆர் ருசி கிடைக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்று தோன்றுகிறது.
முதலில் ஆறு பிளாட்பாரமாக இருந்த ஸ்டேஷன் இன்று பத்துக்கும் மேல் விரிந்து போய் அதுவும் போதாமல் திணறுவது இன்றைய நிலைதான். பத்து நிமிடத்துக்கு ஒரு பெரிய வண்டி வருவதும் போவதும் மிகவும் பரபரப்பான முறையில் பிளாட்பாரங்கள் மாறிப்போவதும் விஜயவாடா ஸ்டேஷனில் சர்வ சகஜம்.
காலத்தின் தேவைக்கேற்றவாறு விஜயவாடா ஸ்டேஷன் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது என்றாலும் இந்த மாற்றம் தேவைதான் என்று மனசு விரும்பினாலும் ஏதோ ஒரு நெருடல் தெரியத்தான் செய்கிறது. என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் மல்டி-காம்பெளெக்ஸ் போல பள பளவென பல கடைகள், வெளிச்சத்தால் அசத்தும் விளம்பரப் பலகைகள், படி ஏறாமலே செல்ல பல வசதிகள், முன்னை விட தாராளமாக கிடைக்கும் முன்வசதி இருக்கைகள், ஏராளமான ரயில்கள் எத்தனைதான் இருந்தாலும், எல்லோருமே ஏதோ பரபரப்பில் காணப்பட்டாலும், அந்த பரபரப்பில் எல்லோருமே கரைந்து போனாலும் அந்தக் குறை மனசுக்குள் தோன்றத்தான் செய்கிறது.
என்ன குறை? ஒருவேளை அந்தக் கால வி.ஆர்.ஆர் கொடுப்பது போல நல்ல பில்டர் காபி கிடைத்து சாப்பிட்டிருந்தால் கொஞ்சம் நிம்மதியாகப் போயிருப்பேனோ.. அல்லது அந்த மூன்று ரூபாயில் கிடைத்த நல்ல தரமான தேனீர் விஜயவாடா ஸ்டேஷனில் உள்ள ஏனைய ஆடம்பரமான தனியார் ஹோட்டல்களில் அதிக விலை கொடுத்தாலும் கிடைத்திருக்குமா என்ற சந்தேகம் வந்ததால் ஏற்பட்ட குறையாகக் கூட இருக்குமோ..
இதோ இன்னொரு விரைவு வண்டி, நண்பர்கள் வந்துவிட்டார்கள்..
22 Comments:
முழ நீளம் கமெண்ட் கொடுத்தேன். போகலை. :(( இதுவானும் போறதா பார்க்கிறேன்.
ம்ம்ம்ம்>> இது போயிருக்கே?
முழ நீளம் இருந்தாப் போகாதோ?>//
//ஆனால் அந்த பழையகால வி ஆர் ஆர் ருசி கிடைக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்று தோன்றுகிறது.//
இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களின் இன்றைய நிலை இதுதான்.அதுவும் மம்தா பானர்ஜி வந்ததும், தரம் என்பது அந்தரமாகவே போய்விட்டது.
தரம் நிரந்தரம் இல்லை என்பதோடு பலவேறுவிதமான நாகரீக அமைப்புக்களாலும், முன்னேற்றம் என்று சொல்லும் பலவிதமான நவீனங்களாலும் வயசானவங்க ஓவரா மேக்கப் போட்டுக்கொண்டாப்போல் ஆகி இருக்கிறது.
எங்க ஊரைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றுவது இதுதான். தாய் முகம் தாய் முகமாகவே இருந்தால் நல்லா இருக்கும். ஓவரா மேக்கப் போட்டுக்கொண்டு வந்தால் அம்மா என்றா தோன்றும்?? யாரோனு நினைப்போம்! ஒரு இடைவெளி வந்திருக்கும் இல்லையா?? இதை ஜெனரேஷன் காப் எனச் சொல்ல முடியாது.
பாரம்பரிய இழப்பு எனலாமா? :((((((
Railway meals pidikkathu...what they serve from the intrain one...but platoformla suda suda podara poori maasaaal...thevamrutham
நிஜமாகவே மூனு ரூபாய்க்கு ருசியான டீ கிடைக்குதா? அதுவும் இந்திய ரயில்வே ஸ்டேஷனிலா? ஆச்சரியம் தான்.
கூடவே ஒலிபரப்பு தெளிவாக கேட்கிறதா? என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் போல் இருக்கிறது.
ம்ம்ம்... என்னுடைய மாணவப் பருவ நினைவலைகளைக் கிளர்ந்தெழச் செய்கின்றன. 1987- 89 அங்கே Nuzvidல் இருக்கும் Andhra University PG Centreல் முதுநிலை பெளதிகம் பயிலும் பொழுது தமிழ்நாட்டிலிருந்து இங்கேதான் விஜயவாடாவில் இறங்கவேண்டும்.... அந்த நாளைய ஞாபகங்களை அப்படியே கண்முன்னால் நிறுத்திவிட்டீர்களே.... வாழ்த்துகள் திவாகர்...
நானும் சிதம்பரத்தில் படிக்கும் போது ரயில்வே ஸ்டேஷன் ஒட்டித்தான்
எங்கள் மாணவப்பருவம் கழிந்தது
அது 1968 க்கு முன் அந்த நாளைய காப்பியையும் ,இட்லியின் சுவையும்
மீண்டும் உங்கள் வர்ணனை நினைவுக்குக் கொண்டு வநது விட்டது .
பார்வை கூர்மைதான் .
எழுத்தும் அருமைதான்
அன்புடன்
சுகுமாரன்
அருமையான தொடர்வண்டி பயணம்.
எத்தனை நீளமானாலும் வருமே!? ஏன் வரவில்லை?
>> ஓவரா மேக்கப் போட்டுக்கொண்டு வந்தால் அம்மா என்றா தோன்றும்?? யாரோனு நினைப்போம்! <<
ஆஹா..
கீதாம்மா
பாரம்பரிய இழப்பு என்பது தற்காலத்தில் பரப்பிரம்மம் போல. எங்கும் பரவி இருக்கிறது!!
ரயில்வே சாப்பாடு உவ்வே..தான். ஆனால் வெகுதூர பிரயாணிகளுக்கு பசிக்கு உணவு. அந்த விஷயத்தில் கொஞ்சம் தரமாக இருந்தாலே நல்லது.
ஆனால் பிரைவேட் ஆன பிறகு பிரியாணி பொட்டலம்தான் அதிகம் போகிறதாம்.
ராஜசங்கர், ஒருமுறை விஜயவாடாவுக்கு விஜயம் செய்யுங்கள்.. ரயில் மூலமாக
ரிஷி!
என்ன இருந்தாலும் ’நம்ம’ விஜயவாடா இல்லையா.. எழுதும்போது கொஞ்சம் பாசம் அதிகமாக வெளிப்பட்டிருக்கலாம்..
சிதம்பரம் கூட நமக்கு ஏறத்தாழ சொந்த ஊர் மாதிரிதான் திரு சுகுமாரன்..
நன்றி ஜோ!!
நமஸ்தே திவாகர்ஜி. ஸ்டேஷனுக்கு மிகப் பக்கத்தில் இருக்கும் சிறிய குன்று பற்றி தெளிவாய் எழுதுங்களேன். விஜயவாடாவில் பணி நிமித்தமாக தங்கி இருந்த போது ஒரு முறை நான் அந்த குன்றின் மேலேறி பார்த்திருக்கேன். காந்தி சிலை ஒன்று இருந்தது. இப்பவும் இருக்கிறதா?
அந்தக் குன்றின் பெயர் ’காந்தி கொண்ட’ என்றே பெயர், மஹாத்மா வந்து சென்ற அடையாளத்தில் அந்தப் பெயர் வைத்தார்கள். அங்கே ஒரு சிறிய மியூசியம் உள்ளது, மேலேயிருந்து ஊரைப் பார்க்கவேண்டுமென அப்போதே ஒரு சிறிஅய் வட்ட வடிவ ரயில் பாதை அமைத்திருந்தார்கள். இப்போது அந்த மலைக்கு அத்தனை விருப்பம் காண்பிப்பதில்லை நம் ஜனங்கள். சினிமா காட்டினால் கஷ்டப்பட்டாவது ஏறிப் பார்த்து விடுவார்கள். நான்கு முழ வேட்டி காந்தியிடம் என்ன இருக்கிறது..
இப்போதும் அந்த பெயரில் இருப்பதும், பராமரிப்பில் இருப்பதும் மகிழ்ச்சியான செய்தியே. நன்றி திவாகர்ஜி.
வாயசாயி போயிந்தி! என்னமோ அந்த காலம் இந்த காலம்ன்னு பேசறீங்களே!
பரப்ரம்மம் உதாரணம் அருமை! :-)))
ஒற்றைப் பிளாட்பாரம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஒரு காந்தக் கவர்ச்சி உண்டு.
பயணங்கள் போகும்போது
நான் மிகவும் ரசித்த இடம் திருச்சி ஜங்க்ஷன்.
நாடு இரவிலும் விழித்திருக்கும் .தூங்கும் போர்ட்டர்கள். பிளாட்பார்மில் உறங்கும் துணி மூட்டைகள். என்று அது ஒரு தனி உலகம். பி.வி.ஆர் எழுதிய'' சென்ட்ரல்'' நாவல் தான் நினைவுக்கு வருகிறது.
வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை ரயில் நிலையம் நம் மனத்தில் பதிகிறது.
உங்கள் விஜயவாடா வும் அப்படித்தானோ.
எஸ்கலேட்டர் உண்டு என்பதை இப்போதுதான் அறிகிறேன்.
அங்கு வந்து மட்டப் பள்ளி,மந்திராலயம் என்று சுற்றிய நாட்களும் உண்டு.
அருமையான நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.
3 rubayela baiku vijayawada varalaru arumai nanry.itbtansari
Post a Comment
<< Home