Monday, July 18, 2011

பத்மநாபா! பதில் சொல்வாயா?


வேதியர்கள் ‘பத்மநாபா’ எனும் நாமம் ஓதும்போது தங்கள் வலது கையை வயிற்றில் வைத்திருப்பார்கள். நாபிக் கமலத்திலிருந்து பிரும்மனைப் படைப்பித்து பிரும்மாவின் மூலம் உலகத்தை சிருஷ்டித்ததாக வேதங்கள் சொல்கின்றன. ‘பற்பநாபன் கையில் ஆழி போல மின்னி’ என ஆண்டாள் மழைப் பாடலுக்காக பத்மநாபனை வர்ணிப்பாள். நம்மாழ்வாரின் மனதுக்குப் பிடித்த மிகச் சில தலங்களில் ஒன்றான அனந்தபுரத்தில் கோயில் கொண்டவனான இவன் ஒருவிதத்தில் சுவாமி நம்மாழ்வாரின் சொந்த ஊர் நாயகன் கூட.. நம்மாழ்வாரின் தாய் பிறந்த ஊரில் அனந்த சேஷனின் மீது அழகாக சயனம் செய்து கொண்டு அருள் பாலிக்கும் பத்மநாபன்.
நேற்று முன் தினம் வரை இவன் சயனம் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அறியாமல் இருக்கவேண்டும் என்று விரும்பிக் கோலம் கொண்டவன்தான். ஆதியிலிருந்தே அப்படித்தான் தன்னைப் பழக்கிக்கொண்டவன் போல தன்னை உலகத்துக்குக் காண்பித்துக் கொண்டவன்.. அப்படிக் கிடந்தவன் கிடந்தபடி கிடந்தால் பிறகு இவன் செய்யும் மாயைக்கு மதிப்பேது என்று நினைத்தானோ என்னவோ.

இன்று அப்படி அங்கு கிடந்தபடியே திடீரென்று உலகத்தார் முழுதும் இவனைப் பற்றியே பேச வைத்துவிட்டான். மார்பிலேயே செல்வத்தின் மொத்த திருவுருவையும் விரும்பி வைத்துக் கொண்டவன், வெள்ளத்திலிருந்து ஒரு துளியை ஆகாயத்தில் விசிறுவது போல விசிறி ஒரு சிறு செல்வத்தைக் காட்டி அத்தனை மக்களின் தூக்கத்தையும் போக்கி விட்டான்.

திடீரென ஏனிந்த நாடகம் ஆடவேண்டும் இவன்?. நன்றாய் காலை நீட்டி, மெத்தென்ற பாம்புப் படுக்கையில் சுகமாய் படுத்து ஏதோ படைத்தோம் பிரம்மனை, அவன் பாடு, அவன் படைத்த மனிதர்கள் பாடு என்று இதுநாள் வரை கிடந்தது போல கிடந்திருக்கக்கூடாதா.. பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் கலியாளும் காலத்தில் ஏன் இப்படி திடீரென யார் மூலமோ ஒரு கேள்வியை எழுப்பி, யார் மூலமோ வக்காலத்து செய்து, யார் மூலமோ இப்படி ஒரு செல்வத்தைக் காட்டி ஏற்கனவே பாழடைந்த பணமாயையால் மலிந்து கிடக்கும் மக்களையெல்லாம் உசுப்பவேண்டும்?

நாடகம்தானா என்றால் பூடகமாக சிரிக்கும் பத்மநாபா.. விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடு. நல்லோர் கரைந்தேங்க, தீயோர் நீ காட்டிய செல்வத்தை எப்படியெல்லாம் அழிக்கலாம் என்று திட்டம் தீட்ட வைத்துவிட்டாய். இதுவரை இல்லாது இருந்த நிலை இனியும் அங்கு இல்லை என்று ஏனிந்த உலகுக்குத் தெரிவித்தாய்? உன்னிடம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவு என நினைத்து விட்டாயோ.. ஒருவேளை செல்வத்தைக் காண்பித்தால்தான் உன்னை தரிசிக்க வருவார்கள் என்ற நப்பாசையா.. ரட்சிப்பவனே நீதானே.. ஆனால் நீ காண்பித்த செல்வத்தை காப்பாற்ற இந்த மனிதர்கள் படும் அவஸ்தை உனக்கு விளையாட்டாக படுகிறதோ..

இப்படி இருக்கலாமோ.. கோயிலுக்காக மாதம் பத்து லட்சம் அரசாங்கத்திடம் நிதி ஏந்தி நிற்கும் பக்தர்களைக் காக்க இப்படி ஒரு நாடகம் ஆடினாயோ.. பத்து லட்சம் முடியாது, வேண்டுமானால் ஒரு லட்சம் தரலாம் என அரசாங்கம் கைவிரித்ததை ஏளனம் செய்வதற்காக, இப்போது நீ காட்டிய செல்வத்தைக் காக்க மாதம் 100 லட்சம் வரை செலவு செய்ய முன் வந்திருக்கும் அதே அரசாங்கத்தைப் பார்த்து கைகொட்டி சிரிப்பதற்காக இப்படி ஒரு நாடகம் நடத்தினாயோ..
நீ கடவுள்தானா, இருக்கிறாயோ எனக் கேள்வி கேட்பவர் எல்லாம் நகைக்காகவும் செல்வத்துக்காகவும் அங்கே போராடுவது வேடிக்கையாக இருக்கிறதோ.. ஒருவேளை இனி வரும் பக்தர் கூட்டத்தால் உன்னை நம்பி வாழும் வணிகர்களெல்லாம் பயன்படுவார்கள் என்று அவர்களுக்கும் உதவி புரிய முன் வந்தாயோ..

எது எப்படியோ.. ஊரார் கண்படாமல் ஓர் மூலையில் இருந்த உன் கோயில் இன்று உலகத்திலேயே மிகப் பணக்காரக் கோயில் என்ற புகழைப் பெற்றுத் தந்துவிட்டாய்..

என்னிடமிருந்து இன்னும் ஒரே ஒரு கேள்விதான்.. நீ காட்டிய ஒரு துளியை வேண்டுமானால் மதிப்பிடலாம். ஆனால் உன் அருளுக்கு மதிப்புண்டோ.. உறங்காமல் உறங்கி உலகைக் காத்து வரும் பெருமானே.. இதற்காவது பதில் சொல்லேன்..

அண்ணலை அச்சுதனை
அனந்தனை அனந்தன் தன்மேல்,
நண்ணிநன்கு உறைகின் றானை
ஞாலமுண்டுமிழ்ந்த மாலை,
எண்ணுமாறறிய மாட்டேன்,
யாவையும் யவரும் தானே. 3.4.9 (திருவாய்மொழி)

18 Comments:

At 5:17 AM, Blogger geethasmbsvm6 said...

பத்து லட்சம் முடியாது, வேண்டுமானால் ஒரு லட்சம் தரலாம் என அரசாங்கம் கைவிரித்ததை ஏளனம் செய்வதற்காக, இப்போது நீ காட்டிய செல்வத்தைக் காக்க மாதம் 100 லட்சம் வரை செலவு செய்ய முன் வந்திருக்கும் அதே அரசாங்கத்தைப் பார்த்து கைகொட்டி சிரிப்பதற்காக இப்படி ஒரு நாடகம் நடத்தினாயோ..//

இது தானே உண்மையும் கூட.

 
At 5:18 AM, Blogger geethasmbsvm6 said...

தொடர

 
At 8:34 AM, Blogger Parvadha Vardhini said...

//பத்து லட்சம் முடியாது, வேண்டுமானால் ஒரு லட்சம் தரலாம் என அரசாங்கம் கைவிரித்ததை ஏளனம் செய்வதற்காக, இப்போது நீ காட்டிய செல்வத்தைக் காக்க மாதம் 100 லட்சம் வரை செலவு செய்ய முன் வந்திருக்கும் அதே அரசாங்கத்தைப் பார்த்து கைகொட்டி சிரிப்பதற்காக இப்படி ஒரு நாடகம் நடத்தினாயோ..//

ஆஹா எல்லாம் அவன் ​செயல்!!!

 
At 9:42 AM, Blogger Innamburan said...

ஷ்தல சயனப்பெருமாள்: Cosmic sleep.

 
At 9:43 AM, Blogger Innamburan said...

ஸ்தலசயனப்பெருமாள்:cosmic sleep.

 
At 9:44 AM, Blogger Ashvinji said...

இதுவும் பதுமநாபரின் திருவிளையாடல் என்று சொல்லலாம்.
பதிவுக்கு நன்றி.

அஷ்வின்ஜி.

 
At 12:20 PM, Blogger Sharada Chandrasekar(Madhira) said...

நம்முள் இருக்கும் பல நடை பிணங்களை (பணம் என்றவுடன் 70mm ஆக வாய் திறந்திட்ட அறிவிலிகளை) சுட்டிக்காட்டவே அவன் இவ்வாறு செய்திருக்கவேண்டும்!
வை.ச.

 
At 5:40 PM, Blogger Sachithananthan_Maravanpulavu said...

என்ன பார்வை உங்கள் பார்வை,
எங்கே செல்வம், அருளிலா, பொருளிலா எனக் கேட்டீர்கள், எழுதுங்கள், நன்றி

 
At 9:16 PM, Blogger manoharan said...

" திடீரென ஏனிந்த நாடகம் ஆடவேண்டும் இவன்?. நன்றாய் காலை நீட்டி, மெத்தென்ற பாம்புப் படுக்கையில் சுகமாய் படுத்து ஏதோ படைத்தோம் பிரம்மனை, அவன் பாடு, அவன் படைத்த மனிதர்கள் பாடு என்று இதுநாள் வரை கிடந்தது போல கிடந்திருக்கக்கூடாதா? "

அருமையான கேள்வி. நல்ல பதிவு. நீ மேற்கேட்ட கேள்வியை அநேகமாக இப்பொழுது அவன் தன்னைத் தானே கேட்டுக்கொண்டிருப்பான். பாவம். அவனுக்கு பிரம்மன் படைத்த மனிதர்களைத் தான் தெரியும். நாம் படைத்த அரசியல்வாதிகளைப் பற்றி தெரிந்திருக்கவில்லல.

இந்த பதிவிற்க்கு நான் ஷயாமிலிக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். அவள் காரணமாகத் தானே TVM சென்றாய்!!!

 
At 11:42 PM, Blogger Vijay said...

The last vault and one smaller still remain unopened...what a thriller

 
At 3:30 AM, Blogger திவா said...

திறக்கனும்ன்னு கேஸ் போட்டவர் போய் சேந்துட்டாராமே?
என்ன என்ன திருவிளையாடலோ இவனோடது!

 
At 9:14 AM, Blogger DHIVAKAR said...

திறக்கனும்ன்னு கேஸ் போட்டவர் போய் சேந்துட்டாராமே?

டாக்டர்.. அவர் காலம் முடிந்து போய்விட்டார், அவ்வளவுதான்.. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

 
At 9:20 AM, Blogger DHIVAKAR said...

Vijay!
Some prominent people says the 6th chamber has been put under 'nagabhandhan'. Another theory says that this chamber leads to basic platform for the swamy. If they disturb violently the secret chamber there the structure at Garbhagruham also get disturbed, they claim. We do not the fact, yet everything has to be taken into account, before coming to decision of opening. That is what Supreme Court also says. Let us hope for good.

 
At 9:23 AM, Blogger DHIVAKAR said...

Geethaamma, Vardhini, Innamburan Sir,Sachi Aiyya, Sharadha Vai.Cha, Ashwinji, Mano : Thanks every one for the comments.
Let good sense prevail!!

 
At 3:13 PM, Blogger Hitech Padmanabham said...

EVERYBODY NOW ASK WHY PADMANABHAN DID NOW? ONLY ONE THING I WOULD LIKE TO SAY. TIME MUST COME FOR EVERYTHING, THAT TIMES NOW, THAT'S ALL = PADMANABHAN, VIJAYAWADA

 
At 10:34 PM, Blogger DHIVAKAR said...

அனந்தபுரத்தானிடமிருந்து பதில் கேட்டால் விஜயவாடாக்காரனிடமிருந்து இப்படி பதில் வருகிறது. ஆனாலும் இந்தப் பதில் நமது மனதுக்கு இதம் அளிப்பதாலும், கருத்துக்கு ஒத்துப் போவதாலும் மகிழ்ச்சிதான்

 
At 8:57 AM, Blogger கவிநயா said...

அவனுக்கு பொழுது போகலை போல, அதான் :)

 
At 9:28 AM, Blogger DHIVAKAR said...

கவிநயா,
அவனுக்கு பொழுது போகலை போல, அதான் :)

அதே அதே

 

Post a Comment

<< Home