Monday, December 20, 2010

விஜயவாடா-6
பெண்மை வாழ்க எனக் கூத்திடுவோமடா


விஜயவாடா பெண்கள் என்றாலே மிகவும் அத்தாரிடி செய்பவர்கள் என்று ஒரு பேச்சு ஆந்திரம் முழுவதும் உண்டு. ஆண்களை அடக்கி விடுவார்கள் என்ற பேச்சும் (பயமும்) கேட்டிருக்கிறேன். ஏனைய ஊர்களில் கூட பள்ளி, கல்லூரிகளில் விஜயவாடா பெண் என்றாலே கொஞ்சம் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள் என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஏன் இவர்கள் மட்டும் இந்த மாநிலத்தில் ‘வல்லவர்கள்’ என இப்படி பெயர் பெற்றார்கள் என்று மட்டும் அடிக்கடி யோசிப்பதுண்டு.

விஜயவாடாவே ஒரு சக்தி நிலையம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லைதான். இந்திரகிலாத்திரி மலையில் புன்னகையும் கம்பீரமுமாகக் காட்சி அளிக்கும் கனகதுர்க்காவை தரிசனம் செய்தவர்களுக்கு இந்த சக்தி ரகசியம் எளிதில் விளங்கி விடும்தான். திரிபுர அசுரர்களை சிவபெருமான் ஒரு சிறு மென்னகையால் மட்டுமே எரித்ததாக மூவர் தேவாரம் சொல்லும். ஆனால் இங்கே தேவி அகன்ற புன்னகையுடன் அனைவரையும் காத்து வல்லமையோடு அருள் பாலிப்பதால் அவள் ஆட்சியில் உள்ள இந்தப் பிராந்தியப் பெண்களுக்குதான் இப்படி ஒரு பெயர் இருப்பதில் என்ன தவறு எனக்கூட தோன்றும்தான்.

விஜயவாடா ஊருக்கே பெண்கள்தான் எப்போதும் ராணியோ எனக்கூட அவ்வப்போது ஒரு எண்ணம் தோன்றும். 80களில் ‘சென்னுப்பாடி வித்யா’ எனும் பிராமணக்குடும்ப பெண்மணி இருமுறை பாராளுமனற உறுப்பினராக இங்கே தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும் என்றாலும் யாரும் எளிதில் அணுகி இவரிடம் உதவி பெறலாம். அதைப்போலவே இப்போதெல்லாம் விஜயவாடா மேயர் பதவி என்பது பெண்ணுக்காக மட்டுமே என்று அரசாங்கமே ஒதுக்கிக் கொடுத்துவிட்டது. சாவித்திரி எனும் மிகச் சிறந்த நடிகையை தென்னகத்துக்குக் கொடுத்தது விஜயவாடாதான். இன்றுள்ள மிகப்பெரிய நாட்டியமணிகளில் பலர் விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள்தான்.

பொதுவாகவே பெண்கள் இங்கே குடும்பத்தைப் பேணிப் பாதுகாப்பவர்கள் என்ற உண்மை எல்லோருமே அறிந்ததுதான். பொறுப்பு என்று வரும்போது அதைத் தைரியமாக ஏற்றுக் கொள்ளும் பெண்கள் இங்கே அதிகம். நான் அதிகம் பழகிய பூர்ணானந்தம்பேட்டை, காந்திநகர், ஒண் டவுன் ஏரியா இந்தப் பகுதிகளில் நடுத்தரமக்கள் அதிகம் வசிப்பவர்கள் என்றாலும் பணவசதி அதிகம் உள்ளவர்கள்தான். இந்தப் பணம் என்னும் பதம் எல்லோரையுமேப் பாடாய் படுத்தும் என்றாலும், பணத்துக்காக மட்டுமே அல்லாமல் தன் குடும்பங்கள் செழிப்பாகவும் இருப்பதற்கு பாடுபடும் பலகுடும்பங்களை அறிந்தவனாதலால் இந்தப் பெண்களின் கடும் முயற்சிகள் என்னை அவ்வப்போது ஆச்சரியப்படுத்தும். பணத்தைப் பல்மடங்காக ஆக்கும் வித்தையை நன்றாக கற்றவர்கள் ஆண்களை விட விஜயவாடாப் பெண்கள்தான். (ஆண்கள் சீட்டாட்டத்தில் வல்லவர்களாக இருக்கும் அதே நேரத்தில் இவர்கள் வீட்டுப் பெண்கள் சிட்பண்ட் சீட்டு விஷயத்தில் மும்முரமாக ஈடுபட்டு நியாயமான முறையில் பணம் சேர்த்து குடும்பத்தைக் காத்து வரும் பல குடும்பப் பெண்மணிகள் உண்டு) நாங்களே இவர்களை நம்பிப் பணம் போடுவதுகூட உண்டு. இவை மட்டுமல்ல, குடிசைத் தொழில் எனக் கருதப்படும் ஊறுகாய் போட்டு விற்பது என்பது பழைய காலத்தில் இருந்து பெண்கள் ஈடுபட்டு வருவதும் இதைக் கண்கூடாகக் கண்ட திரு ராமோஜி ராவ் இவர்களிடம் இந்த ஊறுகாய்களைப் பெற்று ‘பிரியா பிக்கிள்ஸ்’ ஏற்றுமதி ஆரம்பித்ததும் நாடறிந்த ரகசியமே..
(இதுதான் ராமோஜிராவின் முதல் பிஸினஸ், பின்னர்தான் சிட்பண்ட், ஈநாடு தினப்பத்திரிகை, சினிமா, ஸ்டூடியோ இவை எல்லாமே – இவை எல்லாவற்றையும் திறம்பட நிர்வகிப்பதுகூட இவர் வீட்டுப் பெண்களே). இந்த விஷயம் விஜயவாடாப் பெண்டிரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக மட்டுமே இங்கு பேசப்படுகிறது. இப்போதும் ஆந்திரா முழுவதும் மிக அதிகமாக ‘பிஸினஸ்’ ஆகின்ற ‘ஹோம் ஃபுட்ஸ்’ எனப்படும் தின்பண்டங்கள் இந்த ஊர் பெண்களால்தான் நிர்வகிக்கப் படுகின்றன

நல்ல உழைப்பாளிகள் இந்தப் பெண்கள். செய்யும் காரியம் எப்படிப்பட்டது என்பதெல்லாம் பார்ப்பதில்லை. கார்ப்பொரேஷன் சாலைக் குப்பைகளை அகற்றி அதை அனாயசமாக ஒரு மூன்று சக்கரவண்டியில் ஏற்றி ஓட்டிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியை சாலையில் போட்டோ எடுத்து விவரம் கேட்டபோது, ‘இதுல என்ன சார் இருக்கு.. வேலைன்னா எல்லாம் வேலைதான்.. புருஷன் சரியிருந்தா நான் இப்படி எல்லாம் செய்வேனா, அல்லது அப்படி சரியில்லைன்னு வேலை செய்கிறேனா ந்னு பார்க்கறதில்லே.. நாகரீகமான எந்த உத்தியோகத்தையும் பெண்கள் செய்யறதுல என்ன தப்பு, குடும்பத்துல நம்ம பங்கும் இருக்கும் இல்லே..’ எனக் கேட்டாள் அந்தப் பெண். நியாயம்தான்.

இந்தக் ’குடும்பத்துலே’ என்கிற வார்த்தைதான் இங்கே முக்கியம். குடும்பம் நிதிநிலை என்று இல்லை.. குடும்பத்தாரின் நலம் கூட இவர்களுக்கு முக்கியம்தான். தங்கள் குடும்ப நலத்துக்காக விஜயவாடா கனகதுர்க்காவின் மலைப்படிகளுக்கு இவர்கள் மஞ்சள் குங்குமம் வைத்து ஏராளமான அளவில் தினம் கூடும் பக்தைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். முதுகு வளைந்து ஒவ்வொரு படியாகக் குனிந்து மஞ்சளையும் குங்குமத்தையும் வைத்துக் கொண்டே செல்லும் இவர்கள் சொல்லும் காரணமும் குடும்பம் நன்றாக இருக்க ’வேண்டி’க்கொண்டு செய்கிறோமே.. இதில் என்ன சிரமம் இருக்கிறது’ என்று அநாயசமாக சிரித்துக் கொண்டே சொல்வார்கள். எல்லா ஊர்களிலுமே பெண்கள் இப்படி செய்கிறார்களே எனச் சிலர் கேட்கலாம். இருந்தாலும் விஜயவாடாவைச் சேர்ந்த இவர்களின் இந்தப் பிரத்தியேகக் குடும்ப அக்கறை மற்ற ஊர் பெண்களுக்கு நிச்சயம் ஊக்கம் அளிக்கவேண்டும்.
(முட்டிக்கால் போட்டு கனகதுர்க்கம்மா மலைப்படி ஏறிவரும் பெண்மணி.. கூடவே அவர்தம் பெண். - இப்போதே கற்றுக்கொள்)

இப்படித்தான் சமீபத்தில் விஜயவாடாவுக்கு நண்பர்களுடன் சென்றபோது இந்த வகையில் வேறு ஒரு விசித்திரமான அனுபவம். முத்துவை (முத்தரசி) நாங்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக அறிவோம். அக்கா, தங்கை, அண்ணன் தம்பி என உறவுமுறை அழகாக அமைய நடுவில் பிறந்தவள் இவள். எங்கள் நண்பர் குழாமுக்கு பள்ளிப்பருவம் முதல் அன்பான சகோதரியாக வளர்ந்து வந்தவள். நடுவில் ஒரு இசுலாம் சமுதாயத்தைச் சேர்ந்தவரை மணம் முடித்து அன்பான வாழ்க்கை நடத்தினாலும், பிறந்த வீட்டுக் கஷ்டங்களையும் தன் தலை மேல் சுமந்து கொண்டு தீர்த்து வருபவள். பிறந்து வளர்ந்தது விஜயவாடா என்றாலும் இதற்காக இவள் பெரும் போராட்டத்தையே சந்திக்கவேண்டி வந்தது. இருப்பினும் தனி ஒரு ஆளாக சாதித்துக் கொண்டிருப்பவள். பெற்ற தாயையும் இன்னமும் பார்த்துக் கொண்டு, அண்ணன், தம்பி இவர்களின் கஷ்டங்களையும் சுமையாக எண்ணாமல் தன் மேல் சுமந்து கொண்டிருப்பவள். தன் அண்ணனின் பெண்ணுக்கு ஒரு அநீதி நிகழ்வதைப் பொறுக்கமுடியாமல் சமீபத்தில் அந்தத் தகறாரைத் தீர்ப்பதற்கு சொந்த ஊர் (தமிழ்நாடு) காவல் நிலையம் வரை செல்லவேண்டி வந்தது என்றாலும் தைரியமாக சென்று, ’என் பக்கத்து நியாயங்களைப் பேசித் தீர்த்துக் கொண்டு வந்தேன் அண்ணா’ என அவள் சொல்லும்போது அவள் தைரியம் எங்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அந்தப் பெண்ணுக்கும் ஆதரவு கொடுத்துக் கையோடுக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டாள். ‘இருந்தாலும் தமிழ்நாட்டுக் காவல் நிலையங்களுக்கு இனி துணையுடன் செல்க’ என அறிவுரை வழங்கினாலும், ‘தைரியமே சாகஸ லக்‌ஷணா’ எனும் தெலுங்கு பழமொழிக்கு இலக்கணமாக இருப்பவளை வாழ்த்தாமல் வரமுடியவில்லை.. என்ன இருந்தாலும் ‘நீ விஜயவாடாவில் பிறந்த பெண்மணியன்றோ’ என்று ஒரு சபாஷ் கூடப் போட்டு வைத்தோம்.

ஆனாலும் இவளின் இந்த உழைப்புக்கு ஆதாரம் ‘குடும்பம்’ நன்றாக இருக்கவேண்டுமே என்ற ஒரு நிலைப்பாடுதானே, என்பதையும் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

(சகோதரர்களுடன் முத்து)

நாகரீகம் மிக மிக வேகமாக முன்னேறிவிட்டது. மேலை நாகரீகங்களில் குடும்பத்தில் பெண்களின் பொறுப்பு என்பது ஒரு அளவுதான். அதற்கேற்றாற்போல குடும்பத்துக்கென தன்னால் ஒரு அளவுதான் உழைக்கமுடியும் என்ற ஒரு சூழ்நிலை இந்திய நகரத்துப் பெண்களின் மத்தியில் நிலை கொண்டு விட்டது. தாராளமாகக் கிடைக்கும் கல்வியும், கல்விக்கேற்ற வேலையும் பெண்களுக்கு ஏராளமான பொருளாதார சுகங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை இப்போது. குடும்பம் பொறுப்பாக இருக்கவேண்டுமென்றால் ஆண்களும் அதற்கேற்றவாறு பங்குபெறவேண்டும் என்ற கேள்வி பலகுடும்பப் பெண்களிடமிருந்து மிகப்பலமாக கேட்கின்ற காலகட்டமிது. பெண்கள் குடும்பத்துக்காக தியாகசீலிகளாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்ற உரிமைப் போராட்டங்கள் கூட தற்சமயம் எங்கும் மலிந்துவிட்டதுதான். பெண்களின் தற்போதைய இந்த நிலை நல்லதா, அவை வருங்காலத்துக்கு நல்ல வகையில் உதவுமா என்றெல்லாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

ஆனால், எத்தனைதான் நாகரீகம் நம்மைக் கவர்ந்து கொண்டாலும், எத்தனைதான் பெண்களுக்குத் தேவையான உரிமைகளைக் காலம் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், குடும்பம் என்பது ஒரு கோயில், அதைப் போற்றிப் பாதுகாக்க பெண்கள் இன்னமும் பெரும் பொறுப்போடுதான் செயல் படுகிறார்கள் என்று நேரில் பார்க்கும்போதெல்லாம் நமக்கு தனியொரு மகிழ்ச்சி தோன்றுகிறது. அந்த விதத்தில் விஜயவாடா பெண்களுக்குப் பொதுவாக மிகப் பெரிய ‘ஷொட்டு’.

பெண்மை வாழ்க எனக் கூத்திடுவோமடா..

18 Comments:

At 1:13 AM, Blogger Sivakamasundari said...

Namma Madurai pengal madhirinnu solreenga!

 
At 2:09 AM, Blogger ramkumar said...

vijayawada illa.....vijaya"WADI"!

 
At 3:12 AM, Blogger எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

தைர்யலக்ஷ்மியின் அருளோடு தன் குடும்பத்தைப் பேணும் முத்து என்ற முத்தரசிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! இன்றைய தலைமுறைப்பெண்கள், விஜயவாடாவை சேர்ந்தவர்கள் மட்டும் தான் என்றில்லை, பிரச்சினையை மிக தைரியமாக எதிர்கொள்வதை நிறையப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆம்பிளைப்பசங்களுக்கு அவ்வளவு சமத்துப் போதாதோ என்று கூட எண்ண வைக்கும் அளவுக்கு, இன்றைய இளம்பெண்கள் அவ்வளவு அழகாக, தைரியமாக, ச்போர்டிவாகப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்! எனக்கு மகன்முரையாக வேண்டும், அவன் காதலித்தது ஒரு பஞ்சாபிப் பெண்ணை! காதலைப் பெற்றவர்களிடம் சொல்லப் பையனுக்குத்தைரியமில்லை! ஆனால் அந்தப் பெண்ணோ, தன்னுடைய பெற்றோர்கள், உறவினர்கள் எதிர்ப்பையும் மீறி, திருமணம் செய்து கொண்டாள். பெற்றவர்கள் தன்னுடைய கணவனை அங்கீகரிக்க அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அளவுக்கு, பையன் தன்தரப்பில் மனைவி,அவளுடைய உறவுமுறைகளை ஏற்றுக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை! அவ்வளவுதான் "பசங்க" சமத்து!

பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா என்று குதியாட்டத்தில் கலந்து கொண்டு....வாழ்த்துக்களுடன்!

 
At 4:31 AM, Blogger manoharan said...

பெண்கள் அரசாளும் இடங்களான மதுரையிலும், விஜயவாடாவிலும், வீட்டில் கூட அவர்கள் தலைமை தாங்குவது ஆச்சரியமில்லை. சகோதரி முத்தரசிக்கு வாழ்த்துக்கள்.

ஒரு சிறு சந்தேகம். திட்டாதே. வீட்டு ஆண்கள் அப்படி இருப்பதால் பெண்கள் இப்படி இருக்கிறார்களா, இல்லை பெண்கள் அப்படி இருப்பதால் ஆண்கள் இப்படி இருக்கிறார்களா?

 
At 7:31 AM, Blogger vizagtamil said...

Mahakavi Bharathi would have well appreciated and felt very very happy your write up Shri Vam- Dhi.

 
At 7:32 AM, Blogger vizagtamil said...

Mahakavi Bharathi would have well appreciated and felt very very happy about your write up Shri Vam- Dhi.

 
At 11:57 PM, Blogger Ashvinji said...

Great post. I loved it. Like Madurai in TamilNadu, Bangalooru in Karnataka, Vijayawada (Bejavada) in AP. Kudos.

 
At 10:38 PM, Blogger DHIVAKAR said...

உமா!
மதுரைன்னா மீனாட்சிதானே.. ஒரு சில இடங்கள் இப்படி தாமாகவே அமையும் என்பார்கள். தனிமடலில் நண்பர் ஒருவர் மைசூரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. இந்தப் பதிவு மைசூருக்கும் பொருந்தும் என்கிறார்.

 
At 10:39 PM, Blogger DHIVAKAR said...

கிருஷ்ணமூர்த்தி சார் போன்ற பெரியவரின் வாழ்த்துக்கும் சந்தோஷத்துக்கும் இந்தப் பதிவு காரணமாகிறது என்பதே மகிழ்ச்சிதான்

 
At 10:42 PM, Blogger DHIVAKAR said...

>> வீட்டு ஆண்கள் அப்படி இருப்பதால் பெண்கள் இப்படி இருக்கிறார்களா, இல்லை பெண்கள் அப்படி இருப்பதால் ஆண்கள் இப்படி இருக்கிறார்களா<<

இது ஒரு இக்கட்டான கேள்வி! ஆனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருந்துகிறது போல இருக்கும் கேள்வி. புத்திசாலியான ஆண் தன் வீட்டுப் பெண் வல்லமையாக இருப்பதையே விரும்புவான். அதற்காக அவன் சற்று தாழ்ந்து போனாலும் பரவாயில்லைதானே..

 
At 10:43 PM, Blogger DHIVAKAR said...

கமாண்டர் சின்னையா.. உங்கள் பதில் என் மீதுள்ள அன்பினால் எழுதப்பட்டது என்றாலும் நன்றி..

 
At 10:44 PM, Blogger DHIVAKAR said...

அஸ்வின் ஜி!

ரசித்துப்படித்ததற்கு நன்றி!

 
At 4:12 AM, Blogger கீதா சாம்பசிவம் said...

மதுரைக்காரி ஒருத்தி இருக்கேனே, மதுரை மட்டுமில்லை, பாண்டியநாட்டுப் பெண்களுக்கே தைரியம் ஜாஸ்தினு சொல்வாங்க. நல்ல இடுகை. முத்தரசிக்கு வாழ்த்துகள்.

 
At 4:13 AM, Blogger கீதா சாம்பசிவம் said...

பொதுவாகவே பெண்களுக்குக் குடும்பம் தான் முன்னுரிமை. ஆண்களுக்கு அப்படி இல்லை. அவங்க உலகம் பரந்து விரிந்தது. அதிலே ஒரு சின்ன இடம் தான் குடும்பத்துக்கு. அதனாலும் பெண்கள் குடும்பத்தைத் தாங்குவது முக்கியத்துவம் பெறுகிறது.

 
At 4:15 AM, Blogger கீதா சாம்பசிவம் said...

அஷ்டாவதானியாக,, சதாவதானியாக ஒரே நேரத்தில் சமையல், குழந்தைகள் படிப்பு, வேலைக்காரப் பெண்ணுக்குக் கட்டளை இடுதல்,கணவனைக் கவனிப்பதுனு எல்லாத்தையும் பெண்களால் செய்ய முடியும். அந்தப் பெண்ணே படுத்துட்டால், ஒரு காப்பி போடக் கூட ஆண் திணறுவான். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலை அம்மாவிடம் கேளுனுஅனுப்புவாங்க. :))))))))))

 
At 11:11 PM, Blogger DHIVAKAR said...

கீதாம்மா!
மிக இயல்பான ஆனால் அழுத்தமான உண்மை.

விஜயவாடா என்று எழுதியதற்கு அந்த ஊர் ஒரு காரணகாரியம்தான். எல்லா இடங்களிலுமே இப்படித்தான் என்று தெரியும்.

தலைவி’ ந்னு சும்மாவா பேர் கொடுத்திருக்காங்க உங்களுக்கு.. மிகப் பொருத்தம்தான் ))))))

 
At 11:13 PM, Blogger DHIVAKAR said...

vijayawada illa.....vijaya"WADI"!

பிரியா!
அப்படியே மாத்திடலாமா.. ஒரு மனு போடுங்க.. நாளைக்கு ஆந்திராவின் தலைநகரமாகவும் இருக்க வாய்ப்புகள் இருக்கு.

 
At 6:02 AM, Blogger Tamil Home Recipes said...

மிகவும் அருமை.

 

Post a Comment

<< Home