Thursday, July 09, 2009

குதிரை முட்டையும் சண்முக ராஜாவும்

என்ன இது.. குதிரை முட்டை யானை முட்டை என்று யாராவது கேள்வி கேட்பதற்கு முன்னாலேயே பதில் சொல்லி விடுகிறேன். இது ஒரு நாடகத்தின் பெயர்.

உலகத்திலேயே மிகப் பெரிய முட்டாளான பரமார்த்த குரு குதிரை வளர்க்க ஆசைப்பட்டு, தன் சீடர்கள் இருவரைக் கூப்பிட்டு ஒரு நல்ல பெரிய குதிரை முட்டையாக வாங்கிவரச் சொல்லி அவர்கள் கையில் பொன்மூட்டையுடன் அனுப்புகிறார். அந்த சீடர்களின் முட்டாள்தனத்தைப் பயன்படுத்தி ஒரு தோட்டத்துக் காரன் அவர்கள் தலையில் தன் தோட்டத்துப் பரங்கிக்காயை இதுதான் ‘குதிரை முட்டை’ என்று அதிக விலையில் கட்டி விட, அந்த முட்டாள் சீடர்கள் அந்தப் பெரிய 'முட்டையை' அதிசயமாகப் பார்த்துக்கொண்டு, விளையாடிக்கொண்டே எடுத்துச் செல்கிறார்கள். அந்தப் பரங்கிக்காயை வாங்கிக் கொண்டு போகும் வழியில் அதுவும் ஒரு புதர் அருகே கைதவறி உடைத்துவிட, அதே சமயத்தில் புதரிலிருந்த முயல் குட்டி ஒன்று பயந்து போய் கிடு கிடுவென்று துள்ளிக் குதித்து ஓட, அதைப் பிடிக்கமுடியாமல் சீடர்கள் அவஸ்தைப்பட்டு, கடைசியில் தன் குருவிடம் ஓ வென அழுது, தாங்கள் உடைத்துவிட்டதால் அந்த குதிரைமுட்டையிலிருந்து குதிரைக் குட்டி வெளிவந்து ஓடிப்போய்விட்ட சோகத்தை முறையிட்டதும் அந்த முட்டாள் குருவும் தனக்கு குதிரை வளர்க்கும் அதிர்ஷ்டம் இந்த ஜன்மத்தில் இல்லை என்பதாக தன்னையும் தன் சீடர்களையும் தேற்றுகிறார்.

வீரமாமுனிவரின் இப்படிப்பட்ட சில பழைய கதைகளை வைத்து ஒரு மிகச் சிறந்த நாடகத்தை நமக்கு வழங்கியிருக்கிறார் திரு சண்முக ராஜா.

நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா நடத்திய நாடக விழாவில், மதுரையைச் சேர்ந்த ‘நிகழ்’ தியேட்டர் சார்பில் சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்ட இந்த தமிழ் நாடகத்திற்கு என்னை அழைத்தபோது, வேலைப் பளு அதிகம் இருந்ததாலும் வார நாளானதாலும் என் இயலாமையை முதலில் தெரிவித்தேன். ஆனாலும், தமிழர் நாடகத்துக்கு, ஒரு தமிழ் நாடகக்காரனான நாமே போகவில்லையென்றால் எப்படி என்று ஒரு சில நண்பர்களுக்கும் (YGM குழுவில் நடிக்கும் மனோகரனையும் சேர்த்து)மற்றும் பல தமிழ்க் குடும்பங்களுக்கும் போன் மூலம் அழைப்புக் கொடுத்துவிட்டுச் சென்றேன். எல்லா நாடகங்களையும் நேரத்துக்கு வேறு ஆரம்பித்துவிடுவோம் என்று பயமுறுத்தி, அந்த பயமுறுத்தலையும் அவர்களின் நேரம் தவறாமையயும் ஹிந்து நாளிதழ் அன்றுதான் தனியாக ‘காலம் கட்டி’ வேறு பாராட்டியிருந்தார்கள் என்பதால் ஒரு பத்து நிமிஷம்தான் (?) லேட் செய்து சண்முகராஜாவையும் பார்த்து ஒரு அட்டெண்டென்ஸ் கொடுத்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டேன். நாடகம் ஆரம்பித்ததும்தான் தெரிந்தது. எத்தனை அருமையாக திட்டமிட்டு, கடின உழைப்போடு, சிரத்தை மிகக் கொண்டு இந்த நாடகத்தை செய்திருக்கிறார்கள் என்று.

சின்னச் சின்ன முட்டாள்தனமான செயல்கள்.. வேடிக்கையான முறையில் பார்வையாளர்கள் பாராட்டும் விதத்தில் நடித்துக் காட்டினார்கள். கடைசியில் முட்டாள் குருவின் சீடர்களும் ஒவ்வொருவராக தாங்களும் ஒரு முட்டாள் குருவாக மாறி அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில் மடம் ஏற்படுத்தி முட்டாள்தனத்தை ஊரெங்கும் முடிந்தவரைக்கும் பரப்புவதாக கதை முடிகிறது.

சினிமாவில் வேண்டுமானால் கனவுக் காட்சியை மிகப் பிரமாண்டமாக அமைக்கமுடியும். ஆனால் ஒரு நாடகத்தில், அதுவும் ஆரம்ப காட்சியிலேயே அமைக்கமுடியுமா.. சண்முக ராஜா நாடகத்தில் இதை அற்புதமாகக் காண்பித்துள்ளார்.

பரமார்த்த குருவுக்கு கனவு வருவது போலவும், அவர் காட்டில் உள்ளபோது அவரை ஒநாய்கள் தின்று குதறி, தான் செத்து விடுவது போலவும், அவரைப் பாடை வைத்து நான்கு பேர் தூக்கிச் செல்லும் காட்சியையும் அவரே கனவு காண, அந்தக் கனவைத் தாங்கமுடியாமல் திடீரென ஓ வென அலற, அந்த மடத்துக் கிழவி இந்தக் கனவு நல்ல கனவுதான், உங்களுக்கு இனிமேல் தகுந்த சீடர்கள் கிடைப்பார்கள் எனச் சொல்லி அவரை ஆறுதல் சொல்வதில் ஆரம்பிக்கிறார். கனவுக் காட்சியை கற்பனை செய்து அதைத் திறம்பட செய்திருக்கும் சண்முகராஜாவுக்கு பாராட்டு என்றால் அந்தக் காட்சியை ஏற்று மிக அருமையாக நடித்து காட்சியை நம் கண் முன்னே நிஜமாக்கிய அந்த நடிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு. (இந்தக் கனவுக் காட்சி வீரமாமுனிவர் கதைகளில் வராது.. சண்முகராஜாவின் சொந்தக் கற்பனை - என்று அவரே சொன்னார்)

ஏகப்பட்ட விஷயங்களை நாடகத்திற்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கிராமிய இசை, பாட்டு, அதற்கேற்ற நடனம், பொம்மலாட்டம், லைட்டிங், இவை எல்லாமே வெகு திட்டமிட்டு செய்திருக்கிறார்கள். பரமார்த்த குருவாக நடித்த நவயல் கிருஷ்ணன் முதன் முறையாக இந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் என்பதை நம்பமுடியவில்லை. பரமார்த்தகுருவுக்கு ஏற்றபடியான உடல்வாகு, வேடிக்கையான வகையில் அந்த குண்டு உடலையும் அசைத்து அசைத்து நடனமாடி, அந்த பாத்திரத்துக்கு உயிரூட்டிய விதம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. எல்லா நடிகர்களுமே மிகக் கடுமையாக உழைத்து நடித்திருக்கிறார்கள். சண்முக ராஜாவே (விருமாண்டி உட்பட) பல திரைப்படங்களில் நடிப்பதாக அறிந்தேன்.

சண்முகராஜாவை மேடையில் பாராட்டிப் பேசியபோது அவர் எங்களுக்கு நன்றி சொன்னார். அட.. நாமல்லவா இந்தக் கலைஞனுக்கு நன்றியைச் சொல்லவேண்டும்.. எத்தனை சேனல்கள் வந்தாலென்ன, எத்தனை இலவச தொலைக்காட்சிகள் கிடைத்தால் என்ன, இப்படிப் பட்ட நாடகங்கள் மேடையேறினால் யாராலும் தமிழ் நாடகத்தை அழிக்கவே முடியாது.

இந்த நாடகத்தின் மூலம் சண்முகராஜா மிகப் பெரிய தைரியத்தையும், நம்பிக்கையையும் எதிர்கால தமிழ் நாடக இளைஞர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

திவாகர்

Labels:

7 Comments:

At 7:32 AM, Blogger கிருஷ்ண மூர்த்தி S said...

தலைப்பைப்பார்த்தவுடனேயே பரமார்த்த குருவும் சீடர்களும் கதைகளில் வருகிற ஒரு கதை நினைவுக்கு வந்து விட்டது. பதிவுக்குள் சென்று பார்த்த போது தான், ஒரு நல்ல நாடக விமரிசனம் என்பது தெரிய வந்தது.
//எத்தனை சேனல்கள் வந்தாலென்ன, எத்தனை இலவச தொலைக்காட்சிகள் கிடைத்தால் என்ன, இப்படிப் பட்ட நாடகங்கள் மேடையேறினால் யாராலும் தமிழ் நாடகத்தை அழிக்கவே முடியாது.
இந்த நாடகத்தின் மூலம் சண்முகராஜா மிகப் பெரிய தைரியத்தையும், நம்பிக்கையையும் எதிர்கால தமிழ் நாடக இளைஞர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.//
படிக்கிற நாட்களில், நாடகங்களில் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. தொழிற்சங்க நாட்களில், கோமல் போன்றவர்கள்,கூத்துப் பட்டறை போன்ற கூட்டு முயற்சிகளில், நாடக மேடையில் புதிய உத்திகளைக் கையாண்டு, பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு வைத்த விதம் கண்டு வியந்திருக்கிறேன்.
உங்கள் விமரிசனம், மறுபடி, நல்ல நாடகம் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி விட்டிருக்கிறது.
கலைவடிவங்களில், புதுமையைக் கலந்து தான், அழிவதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!

உங்களோடு சேர்ந்து, இந்த நாடகத்தில் நடித்த கலைஞர்களை வாழ்த்துகிறேன்.

 
At 9:27 AM, Blogger manoharan said...

எல்லோரும் வங்கால மற்றும் மராட்டிய நாடகங்களை மட்டும் மிக உயர்வாக பேசும்பொழுது, தமிழ் நாடகங்களும் எந்த வகையிலும் குறைவில்லை என்று எடுத்துக்காட்டிய நாடகம் "குதிரை முட்டை". சண்முகராஜா மற்றும் அவரது குழுவினருக்கு எத்துணை பாராட்டுக்கள் புகழ்ந்தழும் தகும்

 
At 12:14 PM, Blogger VSK said...

மிகச் சிறந்த நாடகக் கலைஞரான ஷண்முகராஜாவைப் பற்றிய இந்தப் பதிவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைச் சொல்லிக் கொள்கிறேன். கற்பனை வளம் மட்டும் இருந்துவிட்டால், எந்த ஒரு கருவிலிருந்தும் அற்புதங்களைப் படைக்க முடியும் என்பதற்குச் சாட்சியாக நிற்கும் இந்த நாடகத்தையும், அதில் பங்கு பெற்றவர்களையும் பாராட்டி வணங்குகிறேன். இதனை அறியச் செய்த உங்களுக்கு என் நன்றியும், வணக்கமும்.

 
At 12:56 AM, Blogger geethasmbsvm6 said...

நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள். நாடகக் கலை நசித்து வரும் நாட்களில் இம்மாதிரியான ஒரு முயற்சி பாராட்டப் படவேண்டியதே!

 
At 3:09 AM, Blogger V. Dhivakar said...

>>கலைவடிவங்களில், புதுமையைக் கலந்து தான், அழிவதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!<<

மிக உண்மையான வார்த்தை கிருஷ்ணமூர்த்தி சார். பழமையும் புதுமையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுக்கும்போதுதான் காலம் அதை வரவேற்கிறது.


>>>எல்லோரும் வங்கால மற்றும் மராட்டிய நாடகங்களை மட்டும் மிக உயர்வாக பேசும்பொழுது, தமிழ் நாடகங்களும் எந்த வகையிலும் குறைவில்லை<<<

மனோகர்.. அனுபவப்பட்டவன் பேசுகிறாய்.. உன்னுடையா ஆதங்கத்தில் என் பங்கும் உண்டு

>>>கற்பனை வளம் மட்டும் இருந்துவிட்டால், எந்த ஒரு கருவிலிருந்தும் அற்புதங்களைப் படைக்க முடியும் <<<

திரு வி.எஸ்.கே, சத்தியமான வார்த்தைகள். நம் பாரத தேசத்தில் அழியாத கருச் செல்வங்கள் எத்தனையோ உள்ளன. இவைகளெல்லாம் நல்ல வழியில் எடுத்துச் சொல்லவேண்டும், சண்முகராஜா போன்றோர் செய்வார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

>>>நாடகக் கலை நசித்து வரும் நாட்களில் இம்மாதிரியான ஒரு முயற்சி பாராட்டப் படவேண்டியதே!<<<

கீதாம்மா!

நாடகக் கலை நசியாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது எவ்வளவு அவசியம் என்பது மக்களுக்கு இன்னமும் புரியவில்லையோ என்னவோ..

தி

 
At 4:59 AM, Blogger V. Dhivakar said...

அன்பின் திவாகர்,
நீண்ட இடைவெளிக்குப்பிறகு நாடகக்கலை பற்றிய ஆத்மார்த்தமான
நிங்ஙளின் பார்வை மனசுக்கு ஆறுதலாக உள்ளது.
மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.
இப்படி நாலுபேர் இருந்தால் போதுமே.
கலைஞனுக்கு இதைவிட வேறென்ன மகைழ்வு
கமலம்

திவாகர்,
வலைப்பதிவில் மறக்காமல் இதைப்பதிவு செய்யுங்கள்.

 
At 5:02 AM, Blogger V. Dhivakar said...

கமலம்

பதிவும் செய்தாகிவிட்டது. உங்களுக்கு கூத்துப்பட்டறை நினைவு வந்துவிட்டது என நினைக்கிறேன்..
சரிதானே..

நன்றி..

திவாகர்

 

Post a Comment

<< Home