ஆந்திரத்தில் ராமானுஜரின் வழித்தடங்கள்
“எழுபத்தி நான்கு சிம்ஹாசனாதிபதிகள், எழுநூறு யதிகள், ஒன்பதினாயிரம் முதலிகள், பன்னீராயிரம் பூணூல் சாத்தாத முதலிகள், இவர்கள் அத்தனை பேருக்கும் தலைவராய் ஒரு சமய உலகையே ஆள்கிறாராமே.. இந்த சமய உலகத்துக்கு எல்லைக் கோடுகள் கிடையாது, மொழிகள் கிடையாது, பேதங்கள் இல்லை.. இவரல்லவோ உண்மையான சக்கரவர்த்தி” என்று திருமலைத் திருடன் நாவலில் ராமானுஜரைப் பற்றி ஆச்சரியப்படுவதாக எழுதியிருப்பேன்.
பகவான் கண்ணன் கீதையில் சொன்ன சரணாகதித் தத்துவத்தை மேலும் விரிவுபடுத்தியும், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக் கருத்துக்களை உள்ளடிக்கி விசிஷ்டாத்துவைதம் எனும் கோட்பாட்டை உருவாக்கிய ஸ்ரீபாஷ்யகாரரான ராமானுஜர் பாரதத்தின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் விஸ்தாரமாக பயணம் செய்தவர் என்பது எல்லோரும் அறிந்ததே. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய ஆதிசங்கரர் பாரதத்தின் திசையெங்கும் தன் சிறிய வயதிலேயே சென்று பாரதத்தின் பழைய பெருமையையும், அத்துவைத சித்தாந்தத்தையும் நிலை பெறுமாறுச் செய்தார். அதே வகையில்தான் உடையவர் என்ற பெயரால் புகழ்பெற்ற ராமானுஜருடைய பயணமும் இருந்தது என்று சொல்லலாம்.
இருவரது தத்துவங்களையும் இங்கு நாம் அலசப் போவதில்லை. அதை அலசி அலசி ஆராய்ந்து ஆராய்ந்து மாய்ந்து மாய்ந்து எழுதி ஓய்ந்து போனவர்கள் வரிசையில் நாம் சேரப் போவது இல்லை. நாமெல்லாம் பகவான் இராமகிருஷ்ணர் கட்சி. அவர் ஆதிசங்கரரின் தத்துவமும் ராமானுஜரின் தத்துவமும் இரண்டுமே சரியானதுதான் என்று சொன்ன மகான். ஆனால் ராமானுஜர் ஆதிசங்கரரைக் காட்டிலும் அதிகமாகவே எதிர்ப்புகளை சந்திக்க நேரிட்டது. அதுவும் கீழைக் கடற்கரைப் பிரதேசத்தில் ராமானுஜரின் கொள்கைகளுக்கு எப்படியெல்லாம் எதிர்ப்புகள் ஏற்பட்டன, அந்த எதிர்ப்புகளையெல்லாம் சற்றும் மனம் கலங்காமல் உடையவர் எதிர்கொண்ட விதமும்தான் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும் விஷயங்கள்.
ராமானுஜர் கோயில் பூசை விஷயங்களில் ஒரு கொள்கையை வைத்திருந்தார். வைகானச ஆகம பூசை வழிமுறையை விட விஷ்ணு கோவில்களில் ‘பஞ்சாராத்ரா’ ஆகம முறை வழிபாடே சிறந்தது, அந்த முறையிலும் ஆழ்வார் பாடல்களால் பாடப்பெறுவதும்தான் சிறந்த வழிபாடுமுறை என்பதில் மிக உறுதியாக இருந்தவர் ராமானுஜர். உண்மையில் அவருடைய காலத்தில் அவர் சொல்தான் வேதம். அந்த வேதத்தில், ஆழ்வார் பாடல்களை சேர்த்ததின் மூலம் தமிழ் என்ற மொழிக்கு ஒரு உன்னத ஸ்தானத்தைத் தந்தவர் என்பதில் தமிழர்களாகிய நம் எல்லோருக்கும் ஒரு பெருமைதான்.
காசி திக்விஜயத்திற்குப் பின் தன் சீடர்களுடன் பூரி என இப்போது அழைக்கப்படும் ஜகன்னாதபுரியில் சிறிது காலம் வாசம் செய்தார் உடையவர். பூரி ஆலயம் அந்த சமயத்தில் சிறிய அளவிலான ஆலயம் என்றாலும் ஸ்ரீகிருஷ்ணர் கலியுகத்தில் உலக நாயகனாக இங்கு கோயில் கொண்டு இருப்பதால் அந்தக் கோயிலுக்கு பாரதமெங்கும் மிகப் பெரிய புகழ் கிடைத்திருந்தது. ஆதி சங்கரர் கூட இங்கு வந்திருந்து ஒரு மடம் ஸ்தாபித்திருந்தார். எம்பார் எனும் மடத்திலிருந்து ஜகன்னாதனை நாளும் தரிசித்து வந்தவர், கோயில் ஆச்சாரியார்களின் பூசை முறையை மாற்றவேண்டுமெனக் கூறியதுதான் அங்கு விவாதத்தைக் கிளப்பிவிட்டது. ஏனெனில் எந்த முறையிலும் இல்லாமல் தமக்குத் தோன்றிய வழிகளில் எல்லாம் பூசை செய்வதை மாற்றி ஒரே வழியில் முறைப்படுத்தவேண்டுமென்பதே உடையவரின் விருப்பம். ஆனால் அந்தக் கோயில் ஆச்சாரியர்கள் இதற்கு உடன்படவில்லை. உடன்படாமல் ராமானுஜரை ஊரை விட்டே வெளியேறுமாறு கடினமான முறையில் நிர்ப்பந்தம் செய்தனர். வேறு வழியில்லாமல் அவரை ஆந்திராவில் எல்லை வரை கொண்டு சென்று ஸ்ரீகூர்மம் எனும் தலத்தில் விட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
(ஸ்ரீகூர்மநாதர் ஆலயம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திர பிரதேசம்)
உடையவர் ஆந்திர எல்லை வந்ததை இரண்டு விதமாகக் கூறுவர். பூரியில் உள்ள கோயில் பூசையாளர்கள் ஜகன்னாதரிடம் ராமானுஜரைப் பற்றி முறையிட, ஜகன்னாதரே ராமானுஜரை ஸ்ரீகூர்மத்தில் தூக்கிப் போட்டதாக ராமகிருஷ்ணானந்தா (பகவான் ராமகிருஷ்ணரின் நேரடி சீடர்) எழுதிய ராமானுஜர் சரிதத்தில் சொல்லப்படுகின்றது. ஆசார்ய வைணவ மஞ்சரி, ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகு போன்றவைகள், ஸ்ரீகூர்மநாதரே ஒரே இரவில் ஜெகன்னாதபுரியிலிருந்து ஸ்ரீகூர்மத்திற்கு இவரைத் தருவித்துக் கொண்டதாக சொல்லப்படுகின்றது.
ஆந்திராவின் கடைக்கோடி நிலமான ஸ்ரீகாகுளத்தின் அருகே அமைந்த புண்ணியத் தலமான ஸ்ரீகூர்மத்தில் சிலகாலம் தங்கியிருந்தார் உடையவர். திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததை நினைவுபடுத்தும் தலம் பாரதத்தில் இது ஒன்றே ஆகும். ஆமை ஓட்டு வடிவம் என்றாலும் பெருமான் லிங்க ரூபமாகக் காட்சியளிப்பதால் ராமானுஜர் வந்த சமயத்தில் ஸ்ரீகூர்மம் சைவத் தலமாக பூசிக்கப்பட்டு வந்ததாகவும், உடையவர்தான் அந்த தலத்தின் மகிமையையும், விஷ்ணு தத்துவத்தையும் நிலைநாட்டி கூர்மநாத தலமாக மாற்றியதாகவும் இங்கும் ஒரு கதை உண்டு. (இந்தக் கோயில் மிகவும் புகழ் வாய்ந்த கோயில். கூர்மநாதர் இப்போதும் அப்படித்தான் லிங்க வடிவிலும் ஆமை ஓடு அளவிலும் காட்சி அளிக்கிறார்).
ஸ்ரீகூர்மத்தில் வைணவத்தை நிலைநாட்டியபின், தெற்கே அடுத்த தலமான சிம்மாசல மலையை அடைகிறார். விசாகப்பட்டினத்திற்கு பதினைந்து மைல் தூரத்தில் இருக்கும் மலைக் கோவில் இது. இங்கு கோயில் கொண்டிருப்பவர் வராஹநரசிம்மர். ஆலய வரலாறுப்படி ஹிரண்யகசிபு, தன் மகன் பிரகலாதனை மலையிலிருந்து கடலில் தள்ளிப் புதைத்துவிட்டு அங்கே ஒரு மலையையே ஸ்தாபிக்கும்படி ஆணையிட, அப்படி செய்யும்போது ஸ்ரீமன்நாராயணன் தான் முன்பு எடுத்த வராக அவதாரத்தில் வெளிப்பட்டு பிரகலாதனை ரட்சிக்கிறான். பின்னாளில் ஹிரண்யகசிபுவை வதைத்தபின் இங்கு பிரகலாதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறான். அந்த இடத்திலேயே பிரகலாதன் எழுப்பிய கோயிலாக சிறப்பிக்கப்பட்டு, பின் சோழர்கள் காலத்தில் பெரிய கோயிலாக விரிவடைந்த தலமாகும். இந்த இரண்டு தலங்களிலும் பஞ்சராத்ரா முறையில் பூசையும், ஆழ்வார் பாடல் முறைகளும் இப்போதும் உண்டு.
(விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாசலம் வராகநரசிம்மர் ஆலயம்)
ஆனால் இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் வராக நரசிம்மனின் உருவம் முழுவதும் சந்தனத்தால் மூடப்பட்டு, வருடத்தில் ஒருநாள் நிஜரூப தரிசனம் தரப்படுகிறது. இங்கும் கூட சைவ வைணவ சண்டை வந்ததாக கதை உண்டு.
முதலில் மூர்த்தி இங்கு லிங்க ரூபத்தில் வழிபடப்பட்டதாகவும், ராமானுஜர் ஸ்ரீகூர்மத்திலிருந்து இந்த மலைக்கு வந்தவுடன் நாராயணனின் தலம்தான் இது என்றும் இங்கு வராகநரசிம்மனின் அர்ச்சா ரூபம் நிறுவப்படவேண்டும் என்றும் வாதம் செய்ததாகவும், வாதமுடிவில், உள்ளே இருப்பவர் நாராயணனா இல்லை நமசிவாயமா என்பதைக் கண்டுகொள்ள லிங்கத்தின் கீழே துளசியும் விபூதியும் இரவில் வைக்கப்பட்டு, காலையில் எது ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, (துளசி, திருமாலுக்குடையது, விபூதி சிவனாருக்குகந்தது) அவரே அங்கே நாயகன் என்று முடிவு செய்யப்பட, அனைவரும் அப்படியே செய்கின்றனர். மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது துளசி மட்டுமே அங்கே கிடந்ததைக் கண்டு உடையவரின் கருத்தில் உடன்பாடு கொண்டு அனைவரும் லிங்கத்தை அகற்றிவிட்டு அங்கே ராமானுஜரின் கட்டளைப்படி வராகநரசிம்மனின் அர்ச்சாரூபத்தை செதுக்கினர். (இந்த துளசி, விபூதி நிகழ்ச்சியைத்தான் திருமலைத் திருடன் நாவலில் முடிவுகட்டத்தில் கையாண்டேன்) அப்படி வழிபடும்போது, அவர் (அர்ச்சாரூபத்தின்) உடலில் ரத்தம் வழிந்ததாகவும், ரத்தத்தை மறைக்க சந்தனத்தை உருவம் முழுவதும் சார்த்தி மூடிவிட்டதாகவும் சொல்வர்.
(சிம்மாசலநாதர் சந்தனக் காப்போடு, சந்தனத்தின் உள்ளே வராகநரசிம்மரின் sketch)
ஒவ்வொரு வருடமும் தமிழ் சித்திரைக்கும் வைகாசிக்கும் நடுவில் வரும் அமாவாசையின் அடுத்த மூன்றாம் நாள் (அட்சயதிரிதியை) இந்த சந்தனம் முழுவதும் அகற்றப்பட்டு, புதிய சந்தனம் பூசப்படும். அன்று பகல் முழுவதும் சுவாமியின் உண்மையான சொரூபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். நிஜரூபத்தில் பார்க்கும்போது சுவாமியின் கால்களுக்குக் கீழே பாதம் இல்லை. கைகள் நீண்டு இருந்தாலும் உள்ளங்கைகளும் விரல்களும் தெரியாது. முகத்தில் வராக ரூபமும் பின்னால் வால் ரூபமும் கூட இப்போதெல்லாம் சரியாகத் தெரிவதில்லை, அர்ச்சா மூர்த்தியை இன்ன ரூபம் என்று சொல்வது சற்று கஷ்டம்தான் என்று கோயிலை உள்ளது உள்ளபடி ஆராய்ச்சி செய்து ‘சிம்மாசலம்’ என்ற ஒரு பெரிய புத்தகத்தை எழுதிய ஆந்திரப் பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியர் கே.சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி எப்படி இருந்தாலும், இங்கும் ராமானுஜர் சம்பந்தப்பட்ட ஒரு அழகான கதை உண்டு. காந்தா கிருஷ்ணாமாச்சாரி தினமும் வராகருக்கு பூசை செய்வதோடு அருமையான கருத்துகள் கொண்ட பாடல்களும் பாடுவார். அந்தப் பாடலை தினமும் இரவில் கர்ப்பகிருகக் கதவைச் சார்த்திக் கொண்டு, கிருஷ்ணமாச்சாரி பாட அந்தப் பாட்டின் பொருளில் மயங்கி வராகநரசிம்மனும் ஆனந்த நடனம் ஆடுவாராம். ஆண்டவனே ஆடும் ஆட்டம் கண்டு பாடகரும் சொக்கிப்போய் மனம் மகிழ்வாராம். இது நாளும் நடக்கும் கதை. அந்த சமயத்தில் ராமானுஜர் தன் சீடர் குழாத்தோடு கோயிலில் தங்கி முக்திக்கு ஒரே மந்திரம் ஸ்ரீமன்நாராயணமந்திரம்தான் என்றும் அதையும் குருவழி அடைந்தால் மட்டுமே சாத்தியம் என்றும் எல்லோரிடமும் உபதேசம் செய்கிறார். நம் கிருஷ்ணமாச்சாரிக்கு அந்த நாராயணனே தினப்படி நண்பன் ஆனதால் கோயிலின் வெளிவாசலில் அமர்ந்திருக்கும் ராமானுஜரை லட்சியம் செய்வதில்லை. ஒருநாள் இரவு இவர் பாட, அவர் ஆட, இந்த கூத்தெல்லாம் ஓய்ந்த பிறகு, மெல்ல கிருஷ்ணமாச்சாரி இறைவனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். ‘தான் பாடி நீ ஆடியது போதும்.. இந்தப் பிறவிக் கடலிலிருந்து மீட்டு எனக்கு முக்தி கொடு இறைவா..’ என்கிறார்.
“அடடே.. முக்தி விஷயமெல்லாம் பெரிய விஷயம்.. அதை அங்கே வெளியே ராமானுஜரிடம் பேசினால் கிடைக்க வழி உண்டு. உனக்கு ஏன் அந்தக் கவலை..” என்று ஆறுதல் சொன்ன கையோடு முக்திக்கான கையையும் விரித்து விடுகிறார் வராக நரசிம்மர். கிருஷ்ணமாச்சாரிக்கு கோபம் வருகிறது. “அப்படியானால் நான் பாட நீ ஆட இதெல்லாம் வெறும் நாடகம்தானா” என்று கேட்கிறார். இறைவனோ, ‘ஏன் அப்படி நினைக்கிறாய்.. ஒருவருக்கொருவர் ஆனந்தம் கொண்ட நிகழ்ச்சியாக எடுத்துக் கொள்.. நீ அருமையாகப் பாடினாய்.. நான் மயங்கி ஆடினேன்.. என் ஆட்டம் உனக்கு மயக்கத்தைக் கொடுத்தது.. சொக்கிப் போய் நின்றாய்” என்று பதில் தந்து விடுகிறார். கோபக்கார கிருஷ்ணமாச்சாரிக்கு என்ன பதில் பேசுவது என்று புரியாமல் சுவாமியின் மீதே ‘உன் கோவில் சாம்பலாகக் கடவது’ என்று சாபமிடுகிறார். இதற்கும் சுவாமி பதில் சொல்லும் முறையில் ‘இவ்வளவு அழகான பாடல்கள் பாடினாய் அல்லவா.. அந்தப் பாடல்கள் காலகட்டத்தில் அழிந்துவிடும்’ என்று சொல்கிறார். (இருவருக்குமே இந்த சாபம் பலித்ததாகச் சொல்வர். இன்றைக்கு சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முஸ்லீம் படையெடுப்பில் கோவிலை எரித்த சம்பவம் நடந்ததாக திரு கே. சுந்தரம் எழுதுகிறார். அது போல கிருஷ்ணமாச்சாரியாரின் பாடல்கள் பல அழிந்துவிட்டன என்பதும் வாஸ்தவம்தான்)
இந்தச் செய்தியைப் பற்றி பல குறிப்புகள் இந்தப் பிராந்தியத்தில் உள்ளன, கிராமீயக் கதைகளாக சொல்லப்படுவது கூட (ஆந்திர ஞானபதகேய சாகித்யமு, எழுதியவர் பி.ராமராஜு) உண்டு. கிருஷ்ணமாச்சாரியாரின் சில பாடல்களே இப்போது உள்ளன என்பது ஒருபக்கம் இருந்தாலும் அந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் மணி மணியானவை என்று டாக்டர் பிரேமா நந்தகுமார் குறிப்பு எழுதியிருக்கிறார். கிருஷ்ணமாச்சாரியைப் பற்றியும் தாலபாக்க அன்னமய்யாவின் திருவேங்கடவன் பாடல்களில் குறிப்பு கூட இருப்பதாக கே.சுந்தரம் தெரிவித்திருக்கிறார்.
ஆந்திரத்தில் ராமானுஜமுனியை மிகவும் கவர்ந்த இடம் அகோபிலமாக இருக்கவேண்டுமென நான் நினைப்பதுண்டு. எந்த விதமான எதிர்ப்புமின்றி நாராயணனை நரசிம்மனாக அவர் தரிசித்த இடம் அது. கிருமி கண்ட சோழன் மீது உள்ள பகையால் காடுகள் நிறைந்த அகோபிலத்தில் பல வருடங்கள் உடையவர் இருந்ததாக சொல்கிறார்கள். அகோபிலத்தில் சிலகாலம் தங்கியிருந்து உடையவர் அங்கே மடம் ஸ்தாபித்தது வாஸ்தவம்தான் என்றாலும் கோயில் ஒழுகு சிறிய காலகட்ட அளவைக் காட்டுகிறது என்பதால் இதுவும் விவாதத்துக்குரியதே ஆகும்.
ராமானுஜரின் ஆளுகை மிகப் பிரபலமானது திருப்பதியில்தான் என்பது எல்லோருக்குமே தெரியும். ‘வைணவர்களின் ரட்சை திருமலை’ என்றே எழுதிவைத்தது கூட உண்டு.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட மிகச் சிறப்பான செயல் ஒன்று ஆந்திரத்தில் இவர் பெயரால் செய்யப்பட்டு வருகிறது. சாதிகளை ஒன்றாக்கியவர் உடையவர். இப்போதும் இவர் பெயரால் ஊரெங்கும் மடங்கள் ஏற்படுத்தப்பட்டு அவைகளை ராமானுஜ கூடம் என்றே அழைக்கின்றனர். அங்கே திருவாய்மொழிக்கும், திருப்பாவைக்கும்தான் முதலிடம். இந்த கூடங்களை நிர்வாகம் செய்து மிகச் சீரிய முறையில் சேவை செய்து வருவோர் ஒரு குறிப்பிட்ட தெலுங்கு வர்க்கத்தினர்.. தங்களுக்கு சாதி என்பதே கிடையாது என்றும் சொல்பவர்கள் இவர்கள். இந்த மக்களைப் பார்க்கும்போதெல்லாம் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனமாய் ஏற்படுத்தப்பட்ட உடையவரின் இந்த மாபெரும் சாதியில்லா சமுதாய நோக்கம் நம் மனதில் தோன்றி அவர் மீதுள்ள மரியாதையை மிகப் பெரிய அளவில் உயர்த்துகிறது.
திவாகர்
(பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை சிறப்பிதழுக்காக எழுதப்பட்டது)
Labels: Andhrapradesh, Ramanuja, Srivaishnavism
20 Comments:
வைணவத்தின் ரட்சை திருமலையோ,திருவரங்கமோ அல்ல. உடையவர் பெருங்கருணையோடு, சாதி பேதமற்ற, பாகவதர்களைத் தொழும் குலமாக ஆக்கிவைத்ததே உண்மையான ரட்சையும், ஆன்மநேயமுமாகும். கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.
உண்மைதான், எல்லோரையும் பெருமாளின் உடமை ஆக்கியவர் நம் உடையவர். வெகு அழகாகச் சித்தரித்திருக்கிறீர்கள்.
உங்கள் புத்தகங்கள் எந்தப் பதிப்பகத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கேட்கலாமா.
கிடைத்தால் வாங்கிக் கொள்ளச் சௌகர்யமாயிருக்கும். நன்றிம்மா.
sithihalukku nandri. Avarhal ingu vandadinalthane neengal ramanujar vazhippathail sendreerhal. Engalukku oru arumaiyana katturai kidaithadhu.
nandri
Gowtham
பதிவு மிக அழகாக வந்துள்ளது திவாகர் சார்! வாழ்த்துக்கள்! ஆங்காங்கே திருமலைத் திருடன் நாவலுடன் ஒப்புநோக்கா? :))
துளசி, திருநீறு என்பது சிம்மாசலத்தில் மட்டுமே!
திருமலையில் மான்/மழு மற்றும் திருவாழி/திருச்சங்கு!
//எழுபத்தி நான்கு சிம்ஹாசனாதிபதிகள்,
எழுநூறு யதிகள்,
ஒன்பதினாயிரம் முதலிகள்,
பன்னீராயிரம் பூணூல் சாத்தாத முதலிகள்,
இவர்கள் அத்தனை பேருக்கும் தலைவராய் ஒரு சமய உலகையே ஆள்கிறாராமே//
ஹா ஹா ஹா!
இவர்களை மட்டுமல்லாது பலப்பல எளியவர்களையும்,அடியார்களையும், தொண்டர்களையும்,பின் வந்த ஆச்சார்யர்களையும்,தமிழ் ஆர்வலர்களையும்,ஆலயச் சீர்திருத்தச் செம்மல்களையும்....
இன்று பல பதிவர்களையும் அல்லவா உடையவர் ஆள்கிறார்! :)
//கிருஷ்ணமூர்த்தி said...
வைணவத்தின் ரட்சை திருமலையோ,திருவரங்கமோ அல்ல. உடையவர் பெருங்கருணையோடு, சாதி பேதமற்ற, பாகவதர்களைத் தொழும் குலமாக ஆக்கிவைத்ததே உண்மையான ரட்சையும்//
வரிக்கு வரி வழிமொழிகிறேன்! :)
வைணவத்தின் ரட்சை அடியார்களே!
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ-ன்னு
அடியார்களே முதலில்! அப்பறம் தான் அரங்க நகர்!
//வைகானச ஆகம பூசை வழிமுறையை விட விஷ்ணு கோவில்களில் ‘பஞ்சாராத்ரா’ ஆகம முறை வழிபாடே சிறந்தது//
அதற்காக கண்டபடிக்கு மாற்றிவிட வில்லை! திருமலை வைகானசமே! (கீழ்த்)திருப்பதி பாஞ்சராத்ரம்! திருவரங்கம் பாஞ்சராத்ரம்!
பாஞ்சராத்ரத்தில் சாதி வழி அர்ச்சக உரிமை கிடையாது! மேலும் வைகானசம் போல் கடுமை அதிகம் இல்லாமல், மக்கள் இயல்பான வாழ்வில் ஒன்ற வல்லது! அதான் உடையவருக்குப் பாஞ்சராத்ரத்தில் சற்று பிடிப்பு அதிகம்! மேலும் பாஞ்சராத்ரம், வைகானசத்துக்கும் காலத்தால் முந்தையது!
//ஆனால் அந்தக் கோயில் ஆச்சாரியர்கள் இதற்கு உடன்படவில்லை. உடன்படாமல் ராமானுஜரை ஊரை விட்டே வெளியேறுமாறு கடினமான முறையில் நிர்ப்பந்தம் செய்தனர்//
பூரியில் அடித்து விரட்டாத குறை! :)
எம்பெருமானே காப்பாற்றி ஸ்ரீகூர்மத்தில் சேர்ப்பித்தார்!
//ஆமை ஓட்டு வடிவம் என்றாலும் பெருமான் லிங்க ரூபமாகக் காட்சியளிப்பதால் ராமானுஜர் வந்த சமயத்தில் ஸ்ரீகூர்மம் சைவத் தலமாக பூசிக்கப்பட்டு வந்ததாகவும், உடையவர்தான் அந்த தலத்தின் மகிமையையும், விஷ்ணு தத்துவத்தையும் நிலைநாட்டி கூர்மநாத தலமாக மாற்றியதாகவும் இங்கும் ஒரு கதை உண்டு//
ஹிஹி! இதுவும் வெறுங் "கதை" தான்! :)
இன்றும் ஸ்ரீகூர்மம் சென்றால் இறைவனை அண்மையில் காணலாம்! லிங்க உருவமாக, கூம்பாக, ஆவுடையார் எல்லாம் இருக்காது!
தரையில் தட்டையாக ஆமை ஓட்டு வடிவில், சாளக்கிராமமாக இருக்கும்!
இதோ படம்!
ஆமை பின்புறமும் பார்ப்பதால் இங்கு முன்னும் பின்னும் இரண்டு கொடிமரங்கள் உண்டு!
பின்னாளில் மத்வாச்சார்யரின் சீடர்கள் ஏற்றுக் கைங்கர்யம் செய்தார்கள்!
//அர்ச்சா மூர்த்தியை இன்ன ரூபம் என்று சொல்வது சற்று கஷ்டம்தான் என்று கோயிலை உள்ளது உள்ளபடி ஆராய்ச்சி செய்து ‘சிம்மாசலம்’ என்ற ஒரு பெரிய புத்தகத்தை எழுதிய ஆந்திரப் பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியர் கே.சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்//
உண்மை தான்! சிம்மாச்சலத்தில் சற்றுக் கடினம் தான்!
சந்தனக் காப்பை நீக்கினால் லிங்கம் போல் கூம்பிய உருவம் நீங்கி, கால்-கைகள் உள்ள அர்ச்சை தெரியும்! ஆனால் சங்கு சக்கரங்கள் இருக்காது! அப்படிப் பார்த்தால் பாம்பணையில் பள்ளி கொண்ட திருவரங்கத்திலேயே சங்கு சக்கரம் இல்லை! :)
எனினும் சிவபெருமானை மூலக் கருவறையில் லிங்கமாகவே வழிபட வேணும் என்று இருப்பதால், இந்த அர்ச்சை ஈசனுக்குப் பிரியமான பெருமாளே என்பதும் சிம்மாச்சலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது!
//அடடே.. முக்தி விஷயமெல்லாம் பெரிய விஷயம்.. அதை அங்கே வெளியே ராமானுஜரிடம் பேசினால் கிடைக்க வழி உண்டு. உனக்கு ஏன் அந்தக் கவலை..” என்று ஆறுதல் சொன்ன கையோடு முக்திக்கான கையையும் விரித்து விடுகிறார் வராக நரசிம்மர். கிருஷ்ணமாச்சாரிக்கு கோபம் வருகிறது. “அப்படியானால் நான் பாட நீ ஆட இதெல்லாம் வெறும் நாடகம்தானா” என்று கேட்கிறார்//
ஹிஹி!
திருக்கச்சி நம்பியிடம் நீ வீசியதற்கு நான் பேசியது சரியாப் போச்சி என்பார்!
அதே போல் பாடியதுக்கு ஆடியது
சரியாப் போச்சி! :)
அகோபிலம், திருமலை, திருப்பதி என்று விரிந்ததும் இயற்கையானதே! கிட்டத்தட்ட உடையவர் பல ஆலயச் சவால்களைச் சந்தித்தது ஆந்திரத்தில் தான் இருக்கும் போல! :)
பின்னர் இவையெல்லாம் சரியாகி, கீழ்த் திருப்பதியில் தில்லை கோவிந்தராசரை நிறுவியது வரை வந்து நின்றது!
வெளியேற்றப்பட்ட கோவிந்தராசரைத் தில்லையிலேயே மீள் நிறுவ வேண்டும் என்று வீம்பு காட்டாமல், மக்கள் சுமூகமான சூழலைக் கருதி, கீழ்த் திருப்பதியில் தனியாக இதம் பார்த்துக் கொண்டதும் உடையவரின் மேன்மையே!
தில்லையில் பின்னாளில் நிலைமை சரியாகி, பெருமாள் எழுந்தருளினாலும், உற்சவர் மட்டும் இன்றளவும் இராமானுசர் அமைத்துக் கொடுத்தபடி, திருப்பதியில் தான் அமைந்து அருள்கிறார்!
கிருஷ்ணமூர்த்தி சார்! நன்றி..
>>>சாதி பேதமற்ற, பாகவதர்களைத் தொழும் குலமாக ஆக்கிவைத்ததே உண்மையான ரட்சையும், ஆன்மநேயமுமாகும்<<<.
ராமானுஜரின் உண்மையான தொண்டருக்கு பாதம் பணிகிறேன்..
திவாகர்
நன்றி வல்லிம்மா!
உங்களுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன். இந்த வலைப் பகுதியிலேயே தேடினால் கூட உங்களுக்குத் தகவல்கள் கிடைக்கும்.
தி
கௌதம்,
இந்தக் கட்டுரையின் பாதிப் பகுதி ஏற்கனவே ஆங்கிலத்தில் கட்டுரையாக எழுதி இந்த வலைப்பகுதியிலே பதிவு செய்துள்ளேன். சித்திகள் வந்தது தெய்வச் செயல், மறுபடியும் செல்ல ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது.
நன்றி!
தி
கே ஆர் எஸ், பிடியுங்கள் என் பரிசினை. அற்புதமான அறிவு.. அபாரமான சிந்தனை. வாழ்க.. வளர்க..
1.>>>துளசி, திருநீறு என்பது சிம்மாசலத்தில் மட்டுமே!
திருமலையில் மான்/மழு மற்றும் திருவாழி/திருச்சங்கு<<<
சிம்மாசலத்தில் இத்தகைய நிகழ்வே நிகழ்ந்திராது என்பதுதான் எங்கள் கணிப்பு. இந்தக் கதையில் நான் ஒன்றை வேண்டுமென்றே விட்டுவிட்டேன். அதாவது நட்டு நடு இரவில் ராமானுஜர் பாம்பாக மாறி கர்ப்பக்கிருகம் உள்ளே சென்று விபூதியை எடுத்துவிட்டு, துளசியை மட்டும் மாற்றினார் என்று கதை முடியும். அதாவது உடையவர் சேஷ அவதாரம் என்பதால் இது சாத்தியமானது என்பர்.
ஆக ஸ்ரீகூர்மம் மற்றும் சிம்மாசலம் இவை அனைத்தும் விறுவிறுப்பு ஊட்டும் கதைகளே!. இந்த ஷேத்திர மகிமையை யாராவது சித்தபுருஷர் வந்து தெரிவித்தால் ஒழிய சாதாரணமக்களுக்கு விவரணை தெரியாது.
2. திருமலையில் வழிபாட்டு முறை பற்றி பல புத்தகங்கள் பலவிதமாக சொல்லுகின்றன.
அ.ராமானுரின் ஆளுமையை விட அவருக்குப் பின் தோன்றிய தேசிகரின் ஆளுமை திருமலையில் அதிகம். தேசிகரின் கருத்துக்கள் நீங்கள் அறிந்ததே.. அதே போலத்தான் அவருக்குப் பின் வந்த மணவாள மாமுனிகள்..
ஆ. பின்னாளில் வந்த ராயர்கள் அவர்கள் குருநாதர்கள் வைகானச முறையை வெகுவாக ஆதரித்தார்கள் என்ற செய்தி உண்டு.
இ. செல்லப்பன் (நரசிம்மா) என்றொரு அரசர், சந்திரகிரியை தலைமை இடமாகக் கொண்டு ஆளும் காலத்தில் (1490-1509)திருப்பதியில் பல சீர்திருத்தங்கள் செய்ததாக சரித்திரக் குறிப்புகள் உண்டு. இந்த செல்லப்பர் ஒரு பிராம்மணர். இவருடைய குருவின் பெயர் கந்தாடையார். இவரே ஸ்ரீவில்லி ஆண்டாள் கோயிலை கட்டுவித்ததாகக் கூட தகவல். இவருக்கு ஆண்டாள் காட்சி கொடுத்ததாகவும் தன் பாழடைந்த கோயிலைக் கட்டுமாறு ஆணையிட்டதாக கூட Burton Stein's Vijayanagara புத்தகம் சொல்லுகிறது.
ஈ. திருக்கச்சி நம்பி கதையைக் கொடுத்தமைக்கு நன்றி! பொதுவாக இது போலக் கதைகள் குருவின் மகிமையைப் பற்றித் தெளிவுறக் கூறுவதற்காக 'படைக்க'ப்பட்டது. குருவருள் கிட்டினால் அது ஆண்டவன் கருணை.. ஆண்டவனே கிட்டினால் அது கருணை வெள்ளம்.
திவாகர்
பல சுவாரசியமான தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள் திவாகர். மிக்க நன்றி.
அகோபிலம் மடம் ஸ்ரீராமானுஜர் நிறுவியதல்ல, அவர் அங்கு வருகை புரிந்ததற்கு வரலாற்று ஆதாரமும் ஏதும் இல்லை. அந்த மடத்தை நிறுவியர் பின்னாளில் வந்த ஆசாரியர் ஆதிவண் சடகோப மகாதேசிகர். மகாஞானியாகவும், பக்தராகவும், செயல்வீரராகவும், சமூகத் தலைவராகவும் விளங்கியவர் அவர். அவர் காலத்திலேயே அகோபிலம் யாரும் செல்ல முடியாத காடாகவே இருந்தது. இது பற்றி விரிவாக ஜெயமோகன் தன் பயணக் குறிப்புகளிலும் எழுதியிருக்கிறார் - http://jeyamohan.in/?p=645
பூரி தவிர இன்னும் சில தலங்களிலும் ராமானுஜர் பூஜை முறையை மாற்ற முயற்சி செய்தார், ஆனால் அது நடைபெறவில்லை என்று சொல்லப் படுகிறது - குறிப்பாக திருவனந்தபுரம்.
பூரியின் பூஜை, வழிபாட்டு மரபுகள் சிக்கலானவை.சில ஒரிஸ்ஸாவின் அப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்களின் ஐதிகங்கள் எப்படி ஒன்று திரண்டு வைஷ்ணவத்தில் இணைந்தன என்று புரிந்து கொள்வதற்கு இன்றும் ஒரு வாழும் உதாரணமாக அது விளங்குகிறது, இல்லையா? குறிப்பாக சில விழாக்களின் போது கர்ப்பகிரகத்துக்கு உள்சென்று சில சடங்குகளைச் செய்யும் உரிமைகள் குறிப்பிட்ட இன பழங்குடி மக்களுக்கு மட்டுமே உள்ளன. இன்றுவரை இது சிரத்தையுடன் கடைப்பிடிக்கப் படுகிறது. ஒரு வேளை இதற்காகவே ஜகன்னாதர் அவைகள் ராமானுஜரால் மாற்றப் படாமல் இருக்க அருள்புரிந்தாரோ? இருக்கலாம் !
Adi Deo Arya Devata (Studies in Tribal Hindu confluence) - By Sandhya Jain. இந்த நூலில் பூரி ஜகன்னாதர் வழிபாடு மற்றும் பழங்குடிகள் தொடர்பான அருமையான ஆய்வுகள் உள்ளன. வரலாற்று ஆர்வலரான உங்களுக்குப் பிடிக்கலாம்.
// பாஞ்சராத்ரத்தில் சாதி வழி அர்ச்சக உரிமை கிடையாது! //
இன்றைய நிலை எப்படி? பட்டாசாரியார்கள் என்கிற ஒரு அந்தண சமூகத்தினர் தானே பெருமாள் கோவில்களில் பூஜை செய்கிறார்கள்?
ஸ்ரீ ராமானுஜர் அவராகவே ஒரு தனித்துவமான பூஜை முறையை உருவாக்கினார். அதில் பாஞ்சராத்ரம் என்ற புராதன வைணவ மரபின் கூறுகள் முக்கியமானதாக இருந்தன என்பது தான் சரியாக இருக்கும், அதுவே பாஞ்சராத்திரம் அல்ல.
பட்டர்பிரான் எனப்பட்ட பெரியாழ்வார் “எந்தை தந்தை தந்தை.. .வழிவழி ஆட்செய்கின்றோம்” என்று கூறியிருப்பதால் வழிவழியாக அர்ச்சகர்கள் வைணவத்திலும் இருந்தது புலனாகும்.
ஆனால் ஸ்ரீராமானுஜர் உருவாக்கிய பூஜை முறையே புதியது என்பதால் அதற்குக் குடி உரிமையை வலியுறுத்துவது என்பது *அக்காலத்தில்* முக்கியமானதாகக் கருதப் படாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் நிறுவனப் படுத்தப் பட்டபோது மற்றெல்லாவற்றையும் போல இந்த அர்ச்சக மரபும் குடிமை வழியிலான சமூகக் கட்டுமானத்தில் வந்துவிட்டது. அல்லவா?
/நிறுவனப் படுத்தப் பட்டபோது மற்றெல்லாவற்றையும் போல இந்த அர்ச்சக மரபும் குடிமை வழியிலான சமூகக் கட்டுமானத்தில் வந்துவிட்டது. அல்லவா?/
முழுக்க முழுக்க உண்மை. எந்த ஒரு நல்ல எண்ணமும், கோட்பாடும், நிறுவனப் படுத்தப் படும் போது, அங்கே ஒரு இயந்திரத்தன்மை அல்லது குறுக்குவழி என்ற ஒன்று அடிப்படை நோக்கத்திற்கே எதிராகப் போய்விடுவது ஒன்றும் புதிதோ, தவறோ இல்லை, இயல்புதான்.
இதே கண்ணோட்டம் நீங்கள் எழுதிய சமணர்களும் கழுவேற்றக் கற்பிதங்களும் கட்டுரைகளில் காணோமே, ஜடாயு!
நம்முடைய வரலாற்றை , வந்தவர்கள் போனவர்கள் மட்டும் சிதைத்துப் போகவில்லை, நாமும்கூட, அப்படித் தான் செய்துகொண்டிருக்கிறோம்.
ஜடாயு சார்!
>>>>அகோபிலம் மடம் ஸ்ரீராமானுஜர் நிறுவியதல்ல, அவர் அங்கு வருகை புரிந்ததற்கு வரலாற்று ஆதாரமும் ஏதும் இல்லை. அந்த மடத்தை நிறுவியர் பின்னாளில் வந்த ஆசாரியர் ஆதிவண் சடகோப மகாதேசிகர். யாரும் செல்ல முடியாத காடாகவே இருந்தது. இது பற்றி விரிவாக ஜெயமோகன் தன் பயணக் குறிப்புகளிலும் எழுதியிருக்கிறார் <<<
இதுவும் விவாதத்துக்குரியதே அல்லது மேலும் ஆராயப்படவேண்டியதே.. அஹோபிலம் இப்போதும் காடுகள் மண்டிய இடம்தான்.
திருமங்கை பாடல் பெற்ற தலம் என்பதால் ராமானுஜர் அங்கு சென்றிருக்க வாய்ப்பு உண்டு. கோயிலொழுகு மற்றும் ஆசார்யவைபவமஞ்சரி போன்றவை ராமானுஜர் அகோபிலம் சென்றதையும் அவர் அங்கு வசித்ததையும் தெளிவாக குறிப்பிடுகின்றன. ராமானுஜர் காலத்தில் எழுதப்பட்ட திவ்ய்சூரிசரித்திரம் வடமொழிக் காவியத்தில் அஹோபிலத்தில் ராமானுஜர் இருந்ததாக குறிப்பு இருக்கிறது.
சந்தியா ஜெயின் புத்தகத்தை மேலோட்டமாக படித்துள்ளேன். மேலும் பூரியைப் பற்றிய தங்கள் கருத்துக்கள் மிக மிக உண்மையானவை.
கருவரையில் நிம்மதியாக கண்ணனை வழிபடவிடாமல் பாண்டாக்கள் பல சமயங்களில் நம்மை எரிச்சல் படுத்தினாலும், அவர்கள் இறைத்தொண்டர்கள் என்பதை மனதில் கொண்டால் எரிச்சல் போய் நிம்மதி வந்துவிடும்.
பி.ஹனமந்தராவ் என்பவர் இந்த மலைச் சமூகத்தினர் எப்படி வேத மந்திரம் கற்று பிராம்மணர்களுக்கு சமமான அந்தஸ்து பெற்றார்கள் என்று ஆராய்ந்து எழுதியுள்ளார்.பலவிஷயங்கள் புரிபட்டன.
பாஞ்சராத்ரா பழமையான ஆகமம் என்பதில் சந்தேகமில்லை. அதில் ஆழ்வார்பாடல்களும் கலந்து கொடுத்து பெருமாளுக்கு பூரண ஆராதனை செய்யும்போது வழிபடும் பக்தருக்கும் ஆண்டவனுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று ராமானுஜர் கருதி இருக்கலாம்.
மிக்க நன்றி சார்.. உங்கள் பதிவுகளில் பல வியக்கத்தக்க செய்திகள் பார்ப்பதுண்டு..
திவாகர்
/நிறுவனப் படுத்தப் பட்டபோது மற்றெல்லாவற்றையும் போல இந்த அர்ச்சக மரபும் குடிமை வழியிலான சமூகக் கட்டுமானத்தில் வந்துவிட்டது. அல்லவா?/
உண்மை!.. எந்த முறையும் நிறுவனப்படுத்தும்போது அதற்கு ஒரு முடிவும் உண்டு. இதனை மூதறிஞர் இராஜாஜியே ஒருமுறை ஸ்ரீபிரபுபாதரிடம் (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா)எடுத்துக் கூறியதாகவே என்னுடைய வழிகாட்டி சொல்லியிருக்கிறார். நம் சநாதான தர்மம் எப்போதோ ஆதி தெரியாமல் உருவாகி(?) அந்தமும் இல்லாமல் காலப் போக்கில் செல்வதற்கு இந்த தர்மம் 'நிறுவனப்படுத்தாதது' என்பதே.
மற்றபடி நிறுவனங்கள் அனைத்தும் காலப்போக்கில் மறையும் வாய்ப்புகளே அதிகம்.
நன்றி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஜடாயு சார்!!
திவாகர்
Divakar sir,
I have gone thro. Very informative..Nandri,, nandri.
Gowtham
அன்பு இருக்கிறது; அலசல் இருக்கிறது. ஆய்வு இருக்கிறது. ஆன்மிகம் இருக்கிறது. என்னிடமிருந்து லேசில் புகழுரை கிடைக்காது. உடையவரின் வழித்தோன்றலே திரு.திவாகர், ஒரு சிற்றெறும்பு ஆயினும் என்றால் அது மிகையல்ல. இனி, இடை விடாமல் படிப்பேன்.
Post a Comment
<< Home