Wednesday, September 16, 2009

பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?

நேற்றிரவு முக்கியமான வேலையாக்கிக் கொண்டு ஒரு ஆங்கிலப்படம் ஒன்று பார்த்தேன். அந்தப் படத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவு என்றாலும் அதற்கான அடிப்படை தாக்கத்தைக் கொஞ்சம் விளக்கியே ஆகவேண்டும்

திருவிளையாடல் படத்தைப் பார்த்தவர்களால் நாகேஷின் தருமி வேஷத்தையும் சிவனாக நடித்த சிவாஜியின் வசனங்களையும், நக்கீரராக நடித்த ஏ.பி.என், சிவனிடமே வாதாடுவதையும் மறக்கவே முடியாது.

தமிழும் வசனமும், நடிப்பும் நம்மை வெகுவாக கவர்ந்த அளவுக்கு இந்தக் காட்சியின் அடிப்படை கேள்வியைப் பற்றி எத்தனை பேர் தீர்க்கமாக ஆலோசித்தார்கள் அல்லது ஆராய்ந்திருப்பார்கள்? அந்த அடிப்படைக் கேள்வி நம்மை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்ற உண்மையையும் ஒப்புக் கொள்ளவேண்டும்.

சரி.. அடிப்படைக் கேள்விதான் என்ன? ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா.. இல்லையா’?

இதுதானே ஆதியில் எழுந்த கேள்வி? அந்தப்புரத்தில் ராணியுடன் உல்லாசமாக ஜலக்கிரீடையில் இருந்த பாண்டியராஜாவுக்குத் திடீரென இப்படி ஒரு அனுமானம் வரலாமா.. அதுவும் சாதாரண சந்தேகமா.. (பிரச்னைகளே இல்லாத வாழ்வில் இவை போன்றவைதான் பெரிய விஷயமோ என்னவோ).. இருந்தாலும் ராஜாவுக்கு சந்தேகம் வந்துவிட்டதே.. கற்றோரும் சங்கப் புலவோரும் நிறைந்த சபைக்கு விவாதம் வருகிறது. விஷயம் தமிழ்ச்சங்கத்துக்கு அதுவும் நக்கீரரின் தலைமையில் இயங்கும் தமிழ்ச் சபைக்கு சற்றுக் கேவலமாகப் படுகிறது.

பெண்களின் கூந்தலிலிருந்து இயற்கையான வாசம் வருமா.. ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதகுலத்தில் ஆண்களும் பெண்களும் சற்று உருவத்திலும் இயற்கையான மாறுபாடுகளாலும் வித்தியாஸப்படுகிறார்களே தவிர மனிதகுலம் என வரும்போது இதில் என்ன இயற்கையிலேயே வாசம்? எல்லாம் செயற்கை கலப்பதால்தானே மாற்றம் தெரியும்.. இதெல்லாம் பெரிய சந்தேகம்.. அதற்கு படித்த சான்றோர்களான நாங்கள் பதில் சொல்லவேண்டுமா.. கேவலம்..

சங்கத்தில் அங்கம் வகிக்கும் கற்றறிந்த புலவர் யாருமே இதைப் பெரிதாகவே கண்டுகொள்ளவில்லை என்பதைப் பொறுக்கமுடியாத அந்த செண்பகபாண்டியன் இதை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறான். தமிழுக்கே தலைமையான தமிழ்ச்சங்கத்தையும் மீறி அரசனே தண்டோரா மூலம் தன்னுடைய சீரிய, சிறந்த, மிக மிக முக்கியமான ‘சந்தேகத்துக்கு’ பொது மக்களிடம் விடை கேட்கிறான். யார் ‘திருப்திகரமான’ விடை தருகிறார்களோ அவருக்கு மிகப் பெரிய பரிசு வேறு கொடுப்பதாக ‘ஆசை’ காட்டுகிறான். எப்பேர்ப்பட்ட சந்தேகம் இது. இந்த சந்தேகத்தை தீர்க்காமல் அதை விட என்ன பெரிய வேலை இந்த தமிழ்ச் சங்ககத்துக்கு.. இருக்கட்டும்.. இருக்கட்டும், இவர்களுக்கும் பாடம் புகட்டவேண்டும், நமக்கும் நம் மிக முக்கியமான சந்தேகம் தீர்ந்தாகவேண்டும்!

பின்னாட்களில் இந்த தண்டோராவைக் கேட்டு பரிசுக்காக ஆசைப்பட்டு இறைவனிடம் பாடல் பெற்று சந்தேகத்தை நிவர்த்திய தருமியைப் பாராட்டும்போது நம் ஏ.பி, நாகராஜன் வசனத்தில் இந்த ராஜா தமிழ்ச்சங்கத்தை கிண்டல் செய்வது போல பேசி (தமிழ்ச் சங்கம் தீர்க்க முடியாததை தனியொரு புலவனாக வந்து தீர்த்து வைத்த தருமியே.. நீவிர் வாழ்க) தன் மனத்துக்கு ஒரு திருப்தியைக் கூடத் தருவித்துக் கொள்வான்.

இந்த தருமி இறைவனிடம் பாடல் கேட்பது, அவர் கொடுப்பது, பிறகு ராஜா அந்தப் பதிலில் மகிழ்ந்து பரிசு கொடுக்க வரும்போது பெரும்புலவர் நக்கீரர் குறுக்கே வந்து பாட்டில் குறை உள்ளது என்று தடுப்பது, பிறகு இறையனாரே நேரில் வந்து பாட்டில் என்ன குற்றம் கண்டாய் என்பது, பெண்களுக்கு, வாசனை முதலிய திரவிய பதார்த்தங்கள் கலப்பதாலேயே வாசம் கூந்தலுக்கு வருமே தவிர இயற்கையிலேயே கூந்தலில் மணம் எப்படி வருமென இகழ்ச்சியாக கேட்பது, எழுதிய பாட்டு கற்பனையான பாட்டு என ஏளனம் செய்யும்போது இறைவன் தன் பாடலையும் அதன் பொருளையும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாக புரியும்படி கூறுகிறார்.

(பொருள்) “மலர்களின் மணத்தினை ஆராய்ந்து அவற்றின் மகரந்தத் துகள்களை உண்ணுகின்ற வாழ்க்கையினையும், அழகிய சிறகுகளையும் உடைய தும்பியே! என் பொருட்டு பொய் கூறாமல், உண்மையாக கண்டு உணர்ந்ததையே கூறுக! நீ இதுவரை ஆராய்ந்து அறிந்து உணர்ந்த எத்தனையோ பல்வேறு வகையான மலர்களில், எழுமையும் என்னுடன் தொடர்ந்து பழகுதல் பொருந்திய நட்பினையும் மயில் போன்ற சாயலையும், நெருங்கிய வரிசையான பற்களையும் உடைய, இந்தப் பெண்ணின் கூந்தலைப் போல நறுமணம் உடைய பூக்களும் உள்ளனவோ. கூறுக!”

அதாவது எந்த மலரிலும் இந்த மணம் இல்லை.. இத் தலைவியின் கூந்தல் கற்பு நலத்தால் இயற்கையாகவே நறுமணம் உடையது (நன்றி! முனைவர் ந.ரா.முருகவேள்)

ஆனால் நக்கீரர் மறுக்கிறார். வாதமும் வலுக்கிறது.

உத்தம ஜாதிகொண்ட பெண்களின் கூந்தலில் மணம் இல்லையென்கிறாயா.. உன் நாவில் வந்து பேசும் சரஸ்வதியில் கூந்தலுக்குக் கூட உன் பதில் இதுதானா.. எனக் கோபமாகக் கேட்கிறார் இறையனார்.. நக்கீரரோ, சரஸ்வதி என்ன, நான் நாளும் பூசிக்கும் சிவனாரின் இடப்பக்கம் அமர்ந்துள்ள உமையாளுக்கும் இதே பதில்தான்.. என்று ஒரே போடு போட்டு இறைவனின் கோபத்துக்கு ஆளாகிறார்.

சரி.. விஷயத்துக்கு வருவோம். அதாவது முதலில் சொன்னேனே.. அந்த ஆங்கிலப்பட விஷயத்துக்கு வருவோம்.

ஒரு இளைஞன். வசீகரமான முகத்தோடு இருப்பவனுக்கும் ஒரு சிறிய விவரம் கிடைக்கிறது. அது என்னவென்றால் பத்து உயர்ந்த குலத்து அழகிய கன்னியர்கள் தலைமுடியிலிருந்து கடினமான முறையில் கசக்கப்பட்டு கிடைக்கும் சில சொட்டு திரவங்களின் வாசனை மூலம் உலகத்தையே ஆளலாம் என புரிந்துகொள்கிறான். இவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தற்போது உள்ள இடம் பிரெஞ்சு தேசத்தவரால் ஆளப்படும் வேறு ஒரு சிறிய நாட்டில் இருக்கிறான். அந்த சிறிய தேசத்தில் நாளும் ஒரு அழகான கன்னிப் பெண் கொல்லப்படுகிறாள்.. ஆனால் கொல்லப்பட்ட யுவதி தன் அழகிய தலைமுடியையெல்லாம் இழக்கப்பட்டு சவமாகக் கிடப்பது என்பது அந்த தேசத்துக்கு பயத்தையும் ஆச்சரியத்தையும் ஒருசேர அளிப்பதால் அப்படிக் கொடூரமாகக் கொன்றவனை எப்படியாவது பிடித்து தூக்கு மேடைக்கு அனுப்பத் துடிக்கிறார்கள் அனைவரும். இப்படி நாட்டில் இருக்கும் கொஞ்ச அழகியரும் கொலை செய்யப்படுவதால் நாட்டின் தலைவனுக்கு தன் நாட்டுப் பாதுகாவலை விட அவன் ஒரே மகளின் பாதுகாவல் மிக முக்கியம் எனப் படுகிறது. எஞ்சியிருப்பவள் இவள் ஒருத்திதான். அது கூட கொள்ளை அழகுள்ள பெண். கொலைகாரன் எப்படியும் விடமாட்டான் என்று தெரிந்துகொண்ட தேசத் தலைவன் அவளை ரகசியமாக நட்டநடு நிசியில் பிரான்ஸ் தேசத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து அப்படியே நள்ளிரவில் பயணம் செய்யப் போகும்போது நம் கொலைகார ஆராய்ச்சியாளனுக்கு எப்படியோ விஷயம் கசிய அவனும் அவர்களைப் பின் தொடந்து செல்கிறான். வழியில் ஒரு கோட்டை. அங்கே ஓய்வெடுக்க முடிவுசெய்து பாதுகாவலையும் பலப்படுத்தி அவளையும் ஒரு அறைக்குள் பூட்டிவைத்து நிம்மதியாக உறங்கும் நேரத்தில் இங்கே எல்லாமே முடிந்துவிடுகிறது. அதாவது அந்தக் கடைசி உன்னத அழகியும் அழகான கூந்தல் உரியப்பட்டு, வெறும் சவமாகக் கிடப்பதைக் காண நேரும்போது தலைவன் தன் முழுப் படைப் பலத்தையும் உபயோகித்து அந்தக் கொலைகார ஆராய்ச்சிக்கார இளைஞன் அந்தத் தலைமுடிச் சொட்டு மருந்தைத் தயாரித்து முடிக்கும் வேளையில் பிடித்து விடுகிறான். அவனை மறுபடியும் ஊருக்கு திருப்பி அழைத்துச் செல்கிறார்கள்.

தூக்குமேடைக்கு அழைத்துவரப்பட்டவனை மிக ஆத்திரத்தோடும் ஆங்காரத்தோடும் தூற்றுகிறார்கள் பொதுமக்கள். தூக்கில் போடு உடனே எனக் கூச்சல் எங்கும் எழ, தலைவன் ‘சபையோரின்’ சம்மதத்தோடு அவனுக்கு என்ன தண்டனை என்பதை தெரிவிக்க வாய் திறக்கும்போதுதான் அந்த அதிசயம் நிகழ்கிறது.

குற்றவாளியாக மேடையில் ஏற்றப்பட்டவன் தான் அந்த அழகியர் கூந்தலிலிருந்து தயாரித்து வைத்திருந்த சொட்டு மருந்தின் ஒரு சிறிய பகுதியை தன் மேல் துணியின் தேய்த்து அந்த துணியை தன் தலைக்கு மேலாக ஒரு சுற்று சுற்றுகிறான் பாருங்கள்!. அவ்வளவுதான் அந்த சுகவாசம் என்ன மாயம் செய்ததோ.. என்ன மயக்கத்தைத் தந்ததோ.. அப்படியே.. அப்படியே கூடியிருந்த அனைவரையும் ஒரு தள்ளு தள்ளியது. சபையோரும், மக்களும் ஆனந்தமாக அந்த சுவாசத்தை நீட்டி சுவாசித்தனர்.. இப்போது இவர்கள் போக்கே மாறியது. இவன் குற்றவாளியே இல்லை.. நிரபராதி என்று அத்தனை பேரும் ஏகமனதாக அவனை விடுதலை செய்ய, அவன் தன் நாட்டுக்கு அதாவது பாரிஸ் நகரத்துக்கு அந்த உயரிய உன்னத தலைமுடி சுகந்த சொட்டு மருந்தை எடுத்துச் செல்கிறான்.

ஆனால் விதி வலியது. பாரிஸில் திடீரென ஏற்பட்ட ஒரு விபத்தினால் அவன் சென்றவுடனே அவன் மண்ணோடு மண்ணாக நசுக்கப்படுகிறான். அவனோடு அவன் கையில் கொண்டு சென்றிருந்த சொட்டு மருந்து சீசாவும் மண்ணுக்குள் போய் கலந்துவிட்டாலும் ஒரே ஒரு சொட்டு மட்டும் ஒரு இலையில் பரவுவதாக கதை முடிகிறது. உலகப் புகழ் பெறப் போகின்ற பாரிஸ் வாசனை திரவியத்துக்கு இந்த ஒரு சொட்டுதான் ஆதி ஆதாரம் போலும்.

திரைப்படத்தின் பெயர்: PERFUME: The Story of the Murderer (12 பரிசுகள் கிடைத்த படம். He lived to find beauty. He killed to possess it என முடியும் படம்)
வெளிவந்த ஆண்டு: 2007.

சில கேள்விகள்:
1.நம் இந்திய அல்லது தமிழ் திரைப்படப் பெருமக்கள் எப்போது இப்படி வித்தியாஸமாக உருப்படியாக சிந்திப்பார்கள்?
2.இந்தப் படத்தை ஒருவேளை நக்கீரர் பார்த்திருந்தால் என்னென்ன கேள்விகள் கேட்பாரோ..
3.இந்தக் கதையின் ஆதாரம் தமிழ்ச் சங்க காலப் பாட்டு என்பது படத்தை எடுத்த அந்த ஆங்கிலேயர்களுக்குத் தெரியுமா..
4.இப்படியே தமிழ்ச்சங்கப் பாடல்கள் மூலம் இன்னும் நிறைய ‘பிளாட்’ கிடைக்கும் என இனியாவது நம்மவர்கள் தேடுவார்களா (?)

கேள்விகள் இப்படியே தொடரும்தான்..

பின்குறிப்பு: இந்தக் கூந்தலின் வாசம் பற்றி நம்மாழ்வாரும் ஒரு பாடலை எழுதியுள்ளார். “வண்டுகளே, எத்தனையோ பூக்கள் (நீர்ப்பூ, நிலப்பூ, மரத்தில் ஒண்பூ) மீது சென்று வாசமுள்ள தேனைப் பருகியுள்ள நீவிர், புழுதி பறக்க பூமியைத் தோண்டிய வராகமூர்த்தியின் பாதத்துக்கு ஒப்பான எங்கள் தலைவியின் கூந்தல் மணத்துக்கு ஒப்பாக ஒரு பூவையாவது சொல்லமுடியுமோ..” என திருவிருத்தத்தில் தலைவி மூலம் பாடல் அமைத்து கேட்கிறார். (வண்டுகளோ.. வம்மின்..)

ஆக நம் முன்னோருக்கு எத்தனையோ தெரிந்திருக்கிறது. அது இன்று வரை நமக்குப் புரியவில்லை. மேற்கத்தியவர்கள் எப்படியோ புரிந்துகொள்கிறார்கள். அவார்ட்' களாக அள்ளிக் குவிக்கிறார்கள்.

திவாகர்

22 Comments:

At 11:00 AM, Blogger கவிநயா said...

அன்னையின் கூந்தலுக்கு மணம் இருக்கா இல்லையான்னு சிவனாருக்கு தானே நல்லா தெரியும்? தெரியாத விஷயத்தில் 'மூக்கை' நுழைச்சிட்டார், நக்கீரர் :)

படம் பற்றி படிக்க சுவாரஸ்யமா இருந்தது, ஆனா பார்ப்பேனான்னு தெரியல. ஒரே கொலையா இருக்கே :( நமக்கு முன்னாடி நம்ம விஷயங்களை தட்டிப் போய் பயன்படுத்தறதில் மேலை நாட்டுக்காரங்க கெட்டிதான்!

 
At 1:28 PM, Blogger Hitech Padmanabham said...

Dhiva, Now I can understand your memory power by the way you narrated the story of Tiruvilaiyadal, Tarumi, Sivan & Nakkiran episode.

Let's the world knows about the French Perfume....so u too helped them ( Paris Perfume )
-Padmanabham

 
At 7:08 PM, Blogger Sivakamasundari said...

Some thoughts connected to this subject: Many poems talk of women's beauty; why, even many shlokas in praise of Gods talk of the beauty of the Goddess, describing the parts very elaborately. Adi Shankara to Kumara Gurupara write about the breasts! Are there such literary works on men? If not, is it because the authors were always men and hardly any woman? Even those few women, never bothered to describe how handsome the hero is - except to talk about the general good look, muscle power etc.? In case of women, I think there is some literary work or other which elaborates every part of a female body!! Why is that??

 
At 8:29 PM, Blogger சேதுக்கரசி said...

வலைப்பூக்கள் பக்கம் தடுக்கிவிழுந்தே ரொம்ப நாளாச்சுன்னாலும்.. இன்னிக்கு இந்தப் பதிவை விட்டுவைக்க முடியல :-) சுவாரசியம் தாங்காம ஓடோடி வந்துட்டேன் படிக்க!! சூப்பரா எழுதியிருக்கீங்க.. சரித்திரக் கதைகளை உங்க நடையில படிச்சு ரொம்ப நாளாகுது.. அந்த வகையில நொறுக்குத்தீனி கொடுத்ததுக்கு நன்றி!!

 
At 11:07 PM, Blogger DHIVAKAR said...

கவிநயா, படத்தைப் பார்க்கலாம்.. ஆனாலும் நம்ம பழைய கதையாச்சே..

திவாகர்

 
At 11:21 PM, Blogger DHIVAKAR said...

Many poems talk of women's beauty; why, even many shlokas in praise of Gods talk of the beauty of the Goddess, describing the parts very elaborately >>>

சிவகாமசுந்தரி!

சரியானதுதான்.
ஆனால் திவ்யபிரபந்தம், தேவாரம் அனைத்துப் பாடல்களுமே ஆண் எனும் வகையில் 'அவனை' வர்ணித்துதான் பாடப்பட்டன்.

ஆனால் ஈ'க்கு கொல்லைப்பட்டறையில் என்ன வேலை இருக்கும். புலவர்களின் கற்பனைக்கு இயற்கையும், பெண்ணும்தான் மிகப் பெரிய தீனி.

தி

 
At 11:23 PM, Blogger DHIVAKAR said...

பத்தா!

ம்! உனக்கு மிகவும் பிடித்த காட்சி என்பது எனக்குத் தெரியும்!

தி

 
At 11:25 PM, Blogger DHIVAKAR said...

அரசியாரே!

ஆளைக் காணோம் என்று பார்த்தேன். மகாராணி கதையென்றதும் தலையைக் காண்பிக்கிறீர்களோ (:-

நொறுக்குத் தீனியாக ரசித்ததற்கு நன்றி!
தி

 
At 11:27 PM, Blogger DHIVAKAR said...

>>அன்னையின் கூந்தலுக்கு மணம் இருக்கா இல்லையான்னு சிவனாருக்கு தானே நல்லா தெரியும்<<<

நல்ல ரசனை கவிநயா!

தி

 
At 12:18 AM, Blogger Vijay said...

nice one sir. Pheromones and its relationship with testosterone. hmmm

 
At 1:32 AM, Blogger DHIVAKAR said...

Vijay
It is whether chemical substance or some harmone generated. But a thought about this, or importance on the subject was not given here, whereas western people cleverly handle this for their benefits.

D

 
At 2:23 AM, Blogger இரா. சதீஷ் குமார் said...

அற்புதம் சார்!!!
சங்கப் பாடல்களில் இல்லாதது என்ன? அதை இரசிக்கவும் அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும்.

நீங்கள் ஆங்கில படம் பார்த்ததனால் இப்படி ஒரு விருந்து கிடைத்து விட்டது எங்களுக்கு, ஆகவே நிறைய ஆங்கில படங்கள் பாருங்கள் ஆனால் நல்ல படமாக பாருங்கள் ;-)

 
At 10:40 PM, Blogger DHIVAKAR said...

Satheesh!

I would like you to sympathise with readers of this blog too (:-

D

 
At 12:33 AM, Blogger கீதா சாம்பசிவம் said...

//சில கேள்விகள்:
1.நம் இந்திய அல்லது தமிழ் திரைப்படப் பெருமக்கள் எப்போது இப்படி வித்தியாஸமாக உருப்படியாக சிந்திப்பார்கள்?//

எங்கே! பெருமூச்சுடன்......... முதல்லே நல்ல படம்னா என்னனு புரிஞ்சுக்கணும் நம்ம தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும். எல்லாருக்கும் கதாநாயகர்கள் காலைப் பிடிக்கிறதிலேயும், தனி மனிதத் துதிக்குமே நேரம் பத்தலை!

கொலைப்படம், அதுவும் முடியை உரித்து??? கொஞ்சம் யோசனையா இருக்கு,பார்க்க! :))))))))

 
At 2:06 AM, Blogger DHIVAKAR said...

என்ன கீதாம்மா.. கதையோட டைப் அப்படி.. ஆனா படத்துல ரொம்ப கவலைப்படறா மாதிரியெல்லாம் பயம் ஒண்ணுமே இல்லை. ரொம்ப கிண்டலா எடுத்துட்டுப் போயிருக்காங்க.. அப்பப்ப பாதிரிமார்களை வேற கிண்டல் பண்ணுவாங்க.. ஒரு த்ரில் படம்கிறதை விட நையாண்டி படம்னு வேணுமின்னா சொல்லலாம்.

தி

 
At 10:14 AM, Blogger manoharan said...

எங்கே இருந்து வருகிறது இப்படியெல்லாம்.

அருமையான ஒப்பீடு. ஆனால் தமிழ் திரையுலகம் பற்றி தெரிந்தும், எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை.

ஆனால் உன் கூந்தலில் முடியே இல்லாததற்கு காரணம் புரிந்துவிட்டது.

மூளை அதிகம், முடி கம்மி(இல்லை)

 
At 3:55 AM, Blogger கிருஷ்ணமூர்த்தி said...

முந்தாநாள், ஸ்டார் மூவீஸில் இந்தப் படத்தை போட்டார்கள்.இரண்டாவது, பாதிக்கு மேல் தான் பார்த்தேன்

நறுமணங்களைப் பற்றிய ஞானம், உலகின் பல பகுதிகளிலுமே தொன்மையாக வே இருந்து வருபவை தான். அரேபியர்கள், நறுமணங்களைக் கொண்டு வேறு வேலைகளையும் செய்ய முடியும் என்பதை இன்னமும் விரிவாக அறிந்திருந்தார்கள்.

A P நாகராஜனிடமிருந்து சுட்டார்கள் என்பது சுவாரசியமான தமாஷ்! அவரே நிறைய இடங்களில் இருந்து சுட்டுப் படம் எடுத்தவர்தானே:-))

 
At 8:19 AM, Blogger DHIVAKAR said...

கிருஷ்ணமூர்த்தி சார்..
ஏ.பி.என் எப்போதுமே 'திரைக்கதை' வசனம் டைரக்ஷன்தான்.

கதை என்று போட்டால்தானே வம்பு?

அந்த ஆங்கிலப்படத்தில் கூட same technic.

திவாகர்

 
At 8:45 AM, Blogger Basant said...

I wish I could leave my comments here....

 
At 5:55 AM, Blogger Tamil Home Recipes said...

நல்ல சிந்தனை. நல்ல எழுத்து.

 
At 10:39 PM, Blogger geethasmbsvm6 said...

என்ன மீள் பதிவா? மீள் சிந்தனையா? :)))))

 
At 3:25 AM, Blogger V. Dhivakar said...

புதியவர்களுக்காக ஒரு மீள் பார்வை, குறிப்பாக ஃபேஸ் புக் வாசகர்களுக்காக..

 

Post a Comment

<< Home