Monday, August 10, 2009

ரமணனின் ‘எந்த வானமும் உயரமில்லை’

கவிஞர் ரமணன் தான் சமீபத்தில் எழுதிய ‘Chips in; Chins Up’ முதன்முதலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே சமயத்தில் வெளியீடு செய்துள்ளார். வாழ்க்கையில் மிகவும் பயன் தரக்கூடிய சில அரிய விஷயங்களை எப்படி எடுத்துச் சொன்னால் குழந்தையிலிருந்து முதுவயதோர் வரை எளிய வகையில் புரிந்து கொள்ளமுடியும் என்பதே ஒரு கலை. அந்தக் கலையை கற்றறிந்தவர் ரமணன்.

‘எந்த வானமும் உயரமில்லை’ என்று தமிழ்ப் புத்தகத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார். இந்தப் பெயரைப் படித்த பிறகு சமீபத்தில் ஒரு பதிவில், எழுத்தாளர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் ஆழ்வார்களையும் அருளாளர்களையும் படித்தவருக்கு ‘சுவரேறினால் வானம்’ என்று எழுதியது நினைவுக்கு வந்தது. சத்குரு சிவானந்தமூர்த்தியாரின் அருளுரைகளும் அப்படித்தான். குருநாதர் சொல்வதைக் கேட்டுவிட்டு மதிலேறினால் ஆகாயம் கைக்கெட்டும் தூரம்தான். அருளாளரான சத்குரு சிவானந்தமூர்த்தியாரின் வழி நடக்கும் ரமணனுக்கு தன் குருநாதர் இத்தனை ஆண்டுகளாக தனக்குப் போதித்ததை நமக்குத் திருப்பித் தந்துள்ளார். ரமணன் ஏன் இப்படி பெயர் வைத்தார் என்பதை நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது. மேலும் அவரே புத்தகத்தில் ஆரம்பிக்கிறார்

‘இறைவன் கொடுத்த கொடையை என்ன செய்வது
அதை அவனுக்கே அர்ப்பணிப்பது சாலச் சிறந்தது..

ரமணனின் தமிழ், தெய்வம் அவருக்குக் கொடுத்த வரம். நான் எப்போதும் சொல்வதுண்டு.. கடந்த நூறாண்டுகளில், பாரதிக்குப் பிறகு கண்ணதாசன், கண்ணதாசனுக்குப் பிறகு ரமணன் என்றுதான். ரமணனின் நூல்கள் படித்திருப்பதால் இதைச் சொல்கிறேன்.

மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளுக்கு தருமராசன் பதில் சொல்லியே தீரவேண்டும். எல்லா உயிர்களையும் கவர்ந்து செல்லும் யமதர்மராசனின் மகன் என்று புகழ்பெற்ற யுதிர்ஷ்டிரனுக்கு அந்தச் சமயத்தில் தன் உயிர் தன் கையில் இல்லை என்று புரிகிறது. கீழே நான்கு தம்பியரும் மரணப்படுக்கையில், தானோ தனியாள்.. கேள்வி கேட்பவனோ, தங்கள் வீரத்தை விட சிறந்தவன், இல்லையென்றால் வீராதிவீரர்களை, தம் தம்பியரையே, மூர்ச்சை அடையச் செய்வானா.. தங்கள் ஞானத்தை விட சிறந்த ஞானத்தினைப் பெற்றவனாகத்தான் இருக்கவேண்டும்.. இல்லையென்றால் தன் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு நீரை அருந்து எனக் கட்டளை இடுவானா.. இருந்தும் நிலைமையை தைரியமாக எதிர்கொள்கிறான் தருமன். ஆனால் பிறகு நடந்தவை அனைத்தும் மிகப் பெரிய ஞான வேள்வி.. அத்தனை கேள்விகளுமே வேள்வியின் அக்கினிக் குழம்பாய் பெருக்கெடுத்து எரிக்கிறது என்றால் அதற்குண்டான பதில்கள் அத்தனையும் அந்த வேள்வியினால் பெறப்பட்ட பலன்கள். இதுதான் உலகத்தின் மொத்த வாழ்வியல் என்று அந்தக்கணமே புரிந்துவிடும்.

அப்படிக் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒரு பத்துக் கேள்விகளைத் தேர்ந்தெடுத்து அதற்கான தருமராசன் பதிலையும் தக்க விவரணைகளோடு எளிய முறையில் செந்தமிழில் நமக்குத் தந்துள்ளார் ரமணன். அத்தனை விவரணைகளும் நம் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டவை.

இந்த உலகில் அதிசயமானது எது எனும் யட்சனின் கேள்வியும், அதற்கான தருமனின் பதிலான, இறப்பது சத்தியம் எனத் தெரிந்தும் மற்றவர் இறப்பைக் கண்டு வருந்தும் மனிதன் நிலைதான் அதிசயமானது என்பதிலிருந்து ஆரம்பிக்கிறார்.

‘வாழ்க்கை என்பது வேறு, வாழுதல் என்பது வேறு என்று ஆரம்பிக்கும் ரமணன். ‘எது முதலிலிலேயே நமதிலையோ, அதன் மேல் சொந்தம் கொண்டாடியதே, அதனை இழந்தபோது ஏற்பட்ட காயத்துக்கும், வலிக்கும் காரணம்’ என்று ரமணன் சொல்லும்போது உண்மை சற்று ஆழமாக உரைக்கிறது. ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் மீது நமக்கு எந்த விதமான ஆளுகையும் கிடையாது.. அவற்றை ஏற்போமாக.. என்று சொல்லும் ரமணனின் தமிழ்த்தேன் மேலும் இனிக்கிறது பாருங்களேன்..

‘எதுவும் நமதில்லை என்று புரிந்துவிட்டால்
எல்லாம் நமதன்றோ! எதுவும் நாமேயன்றோ..
எதுவும் நிற்பதில்லை என்று நினைவு கூர்ந்தால்
என்னதுயர்? ஏது குறை? எங்கு திரை? எதுவும் திசை?

ரமணனின் எப்போதும் சிரிக்கும் முகத்துக்கு இப்போது காரணத்தைத் தெரிவித்துவிட்டார்.

அறம் வாழ்க!
ஆசைகளில்லாத சித்தம்
அதிலென்றும் காயங்கள் நேராது
மாசேதும் இல்லாத புத்தி
மற்றோரைக் காயப்படுத்தாது
நேசத்திலே செய்த நெஞ்சம்
நீதிக்கு மேலேதும் அறியாது
ஓசைகள் தீர்ந்திடும் மாலையில்
ஒளிமேவும் அழகுக்கு நிகரேது

ரமணனின் தமிழ் வழக்கம்போல சொக்கவைத்து, தாலாட்டி தூங்கவைத்து, பின்பு மனதில் அசைபோடும்போது உண்மையை நிதானமாக நிதர்சனமாக்குகிறது பாருங்கள்..

புல்லினும் அற்பமான கவலையைப் பற்றியும், கணவனின் சிறந்த தோழர் மனைவியை விட யார் இருக்கமுடியும் என்பதிலும், குழந்தைகள்தான் மனிதனின் ஆன்மா என்பதையும், நோயற்ற வாழ்வே வாழ்வில் மிகப் பெரிய வரம் என்பதையும் ரமணன் விளக்கத்தோடு சொல்லும் அழகே அழகு.

சொந்தக் கால் உந்தும்போது எந்த வானமும் உயரமில்லைதான்.(இது ரமணன்)

சரியானதுதான், அப்படி அந்த வானம் உயரமே இல்லை என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு நம்மால் சொல்லமுடியும்.. அந்த தைரியத்தை இந்தப் புத்தகம் நமக்குத் தருகிறது.

திவாகர்

புத்தகம் கிடைக்குமிடம்
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி,
கோவை 641 001, Phone: 0422-2394614.

8 Comments:

At 7:31 AM, Blogger R.DEVARAJAN said...

//அருளாளரான சத்குரு சிவானந்தமூர்த்தியாரின் வழி நடக்கும் ரமணனுக்கு தன் குருநாதர் இத்தனை ஆண்டுகளாக தனக்குப் போதித்ததை நமக்குத் திருப்பித் தந்துள்ளார்.//

சான்றோர்கள் இன்றும் நம்மிடையே
இருக்கின்றனர்; அறநூல்களின் இருப்புக்கு ஒரு பொருள் ஏற்படுகிறது.


தேவ்

 
At 8:19 AM, Blogger விழியன் said...

ஆஹா அறிமுகமே ஆனந்தமாக இருக்கு.

நாளை மறுநாள் சென்னையில் நடக்கும் விழாவிற்கு காத்துக்கொண்டு இருக்கின்றேன்.

 
At 8:13 PM, Blogger  வல்லிசிம்ஹன் said...

அன்பு திவாகர்,
ஸ்ரீரமணன் பெயருக்கு ஏற்ற ஞானத்தையும் தமிழில் தருகிறார். படிக்கும் போதே நிம்மதி வருகிறது. தினமும் படிக்கும்படி
இதைப் படியெடுத்து வைக்கிறேன்.
மிக மிக நன்றி. புத்தகவிழா எங்கே நடக்கிறது.

 
At 8:34 PM, Blogger Vijay said...

அருமையான பதிவு. எதை கொண்டுவந்தோம் எடுத்துச்செல்ல

விஜய்

 
At 1:19 AM, Blogger manjoorraja said...

நண்பர் ரமணரை மிகவும் விசாரித்ததாக சொல்லவும்.

 
At 10:30 AM, Blogger கிருஷ்ண மூர்த்தி S said...

யக்ஷப் ப்ரச்னத்தில் இருந்து நல்ல கேள்விகள் எனத் தேர்ந்தேடுப்பதற்கே தெள்ளிய ஞானம் வேண்டும். அப்படி ஞானம் உள்ள ஒருவரை அறிமுகம் செய்து வைத்த புண்ணியத்தைத் தேடியிருக்கிறீர்கள்.

புத்தக விமரிசனமாக மட்டும் இல்லாமல், தேட வேண்டும் என்கிற வேட்கையையும் இந்தப் பதிவில் காண முடிகிறது.
நன்றி!

 
At 10:20 PM, Blogger V. Dhivakar said...

திரு தேவ், திரு விழியன்,வல்லியம்மா,விஜய்,மஞ்சூர் ராஜா மற்றும் திரு கிருஷ்ணமுர்த்தி அவர்கள் வருகைகளுக்கு என் நன்றி!

திவாகர்

 
At 11:42 AM, Blogger JesusJoseph said...

very good post, keep writings.
Very informative

Thanks
Joseph
http://www.ezdrivingtest.com (Free driving written test questions for all 50 states - ***FREE***)

 

Post a Comment

<< Home