Thursday, October 15, 2009

டாக்டரும் நோய்களும்

இடம்: பரமசிவம் வீடு
பாத்திரங்கள்: டாக்டர், கீதா, கண்ணன், வரதமாமா..

கண்ணன்: நல்லகாலம் மாமா.. நான் ஒடிவந்து சரியான டைம்ல டாக்டரைக் கூட்டிட்டு வந்துட்டேன். தோ.. டாக்டர் உள்ளே கவனிக்கிறார். கீதாவுக்கு ஒண்ணும் ஆகாதே மாமா?

வரதமாமா: நீ இப்படி கவலைப்படறத நான் ஒத்தன் தான் புரிஞ்சிட்டிருக்கேன்.. வேற யாருமே புரிஞ்சுக்கலைங்கிறதையும் ஞாபகம் வெச்சுக்கோ.. ரொம்ப வொர்ரி பண்ணாதேடா. எல்லாம் கீதாவுக்கு சரியாகிடும். மாடிப்படிலேருந்து விழுந்துட்டா.. அவ்வளவுதானே.. இதோ டாக்டரே வெளியே வந்துட்டார். இரு நானே விசாரிக்கிறேன்.. (டாக்டர் கொஞ்சம் களைப்பாக வருகிறார்) என்ன டாக்டர்.. ரொம்ப சோர்ந்து போய் வர்ரீங்க.. உங்களுக்கும் உடம்பு கிடம்பு சரியில்லையா..

டாக்டர்: அத்த ஏன் கேக்கறிங்க.. சுகர் கொஞ்சம் ஜாஸ்தி.. B.பியும் கூடவே ஜாஸ்தி.. நடந்தா கீழ் வயித்துல அப்படிய்ய்யே ஒரு வலி இழுக்கும் பாருங்க..ஹைய்யோ..

வரத மாமா: என்ன டாக்டர் இந்த வியாதியெல்லாம் உங்களுக்கு இருக்கா?

டாக்டர்: இன்னும் கூட சொல்லிண்டே போகலாம்.. மூட்டு வலி கொஞ்சம் ஜாஸ்தி, அப்படியே கஷ்டப்பட்டு நடந்துட்டோம்னாலும், படபட னு நெஞ்சு கொஞ்சம் வேகமா அடிச்சுக்கும் பாருங்க.. ச்சே! என்னடா வாழ்க்கைன்னு மனசுல படும்.. மூச்சு வேற ரொம்ப வேகமா விடறேனா.. ரொம்ப டயர்டாயிடுவேன்.. ம்..

கண்ணன்: அதுதான் டாக்டர் ரொம்ப மெள்ளமா நடந்து வர்ரீங்களோ..

வரதமாமா: டேய் கண்ணா!. அறிவு ஜாஸ்தி உள்ளவங்களை எப்படி ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ ன்னு சொல்றோமோ, நம்ம டாக்டரை ‘நடமாடும் நோய்க்கழகம்’ னு சொல்லிடலாம்.. (டாக்டர் அருகே வந்து சற்று கத்தி) என்ன டாக்டர்.. நான் சொன்னது சரிதானா?

டாக்டர் (பயந்து போய்): யோவ்! ஏன்யா அப்படிக் கத்தறே.. ஏற்கனவே வீக் ஹார்ட்.. நீ கத்தற கத்தல்ல என் உசிரு டொபுக்கு’னு போயிடப்போறுது..

கண்ணன்: மாமா! கொஞ்சம், சும்மா இருங்க.. இப்படியா கத்தறது.. பாவம் டாக்டர்.. நெஞ்சுல கையை வெச்சுண்டு எப்படி ஆடிப் போயிட்டாரு பாருங்க.. டாக்டர் கொஞ்சம் தண்ணி வேணுமா.. கொஞ்சம் நிதானப்படுத்திண்டு மெதுவா சொல்லுங்க.. கீதாவுக்கு எப்படி இருக்கு?.

டாக்டர்: யப்பா.. கண்ணா.. உங்க கீதாவுக்கு எல்லாம் நார்மல்.. இந்த டாக்டர் வந்து தொட்டுப் பார்த்தா நார்மல் ஆயிடாதா.. ஷி இஸ் நார்மல்.. அவளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவையோ இல்லையோ.. எனக்கு நிறைய ரெஸ்ட் வேணும்..

வரதமாமா: ஆமாமா.. உங்களுக்குத்தான் ரெஸ்ட் வேணும்.. ஹாஹ்ஹாஹா..

வரத மாமாவில் சிரிப்பில் டாக்டர் பயப்படுகிறார்.

டாக்டர்: கண்ணா, இவரை நான் வெளியே போறவரைக்கும் கொஞ்சம் நிறுத்தி வைப்பா.. இன்னும் கொஞ்ச நேரம் நான் இருந்தா.. என்னை சிரிச்சே க்ளோஸ் பண்ணிடுவார் போல..

கீதா தலையில் கட்டோடு உள்ளே வருகிறாள்.
---------------------------------------------------------------------------

கீதா வருவது இருக்கட்டும், இந்த நாடகம் இந்த இரண்டு நாட்களாக என் நினைவில் வந்து கொண்டே இருந்தது. அதுவும் இந்த நாடகக் காட்சியையும் என்னால் மறக்கவே முடியவில்லை. ‘மாப்பிள்ளையே உன் விலை என்ன?’ என்ற நாடகம் 1990 களில் நான் எழுதியது. ஒரு நான்கு வருடம் முன்பு கூட இங்கே மறுபடியும் மேடையேற்றப்பட்டது. வக்கீல் வரத மாமாவாக மனோகரும் கண்ணனாக ஆனந்த் (முதலில் சதீஷ்)உம் நடித்தது. இந்தக் காட்சியில் டாக்டர் பாத்திரம்தான் விசேஷம். டாக்டராக வந்து கலக்கவேண்டும் என்பதால், தூத்துக்குடித் தமிழ் பேசும் வாஸ் அவர்களை அந்தப் பாத்திரத்தில் நடிக்கவைத்தோம். வாஸ் இதே பாத்திரத்தில் ஏற்கனவே இரண்டு முறை நடித்துவிட்டதால் ஜாலியாக செய்தார். அவரது உடல் பாவனையும் சற்றே குனிந்தமுறையில் நடந்து நெஞ்சில் கைவைத்துக் கொண்டே பேசும் வசனங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. எனக்கு இன்னமும் அப்படியே நினைவில் உள்ளது.

வாஸ் கொச்சியில் உள்ள ஜியோலஜிகல் சர்வே ஆஃப் இண்டியாவில் டைரக்டராக பிரமோஷன் கிடைத்ததும் இங்கேயிருந்து (வைசாக்) போய்விட்டார். இங்கே பணிபுரியும்போது கூட அடிக்கடி கடலில் சர்வே பணி நிமித்தம் பல மாதங்கள் செலவிடுவது அவர் வழக்கம். முதன் முதலில் சேது சமுத்திரம் கால்வாய் ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் மத்திய அரசு இருந்த போது, அந்தக் கால்வாய் வேண்டுமா, அப்படி கட்டப்பட்டால் என்ன பயன், என்ன தீங்கு, என்று அரசாங்கம் இவர் குழுவிடம்தான் கேட்டது. நிர்ப்பயமாக சேது சமுத்திரத் திட்டத்தில் உள்ள குறைகளைக் காட்டி, அது கடல் ஜீவராசிகளுக்கு ஒரு அழிவுப் பாதை என்று அறிக்கைக் கொடுத்தவர் இவர். ஆனால் மத்திய அரசாங்கம் இவைகளையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இருந்தால்தானே.. நானும் இவரும் இதைப் பற்றிப் பேசும்போதெல்லாம், இதனைத் தெளிவுப் படுத்தி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று ஆசை வரும். ஆனால் அவரது அலுவலகப் பணிகளில் அவருக்குத் தடை ஏற்பட நாம் காரணமாக இருக்கக்கூடாது என்பதும், அதே சமயத்தில் பல அறிஞர்களும் (நம் மதிப்புக்குரிய நரசையா உட்பட) இந்தத் திட்டத்தை அடியோடு எதிர்த்து வேண்டிய அளவுக்குப் பத்திரிகைகளில் எழுதியாயிற்று என்ற நிலையிலும் நான் எங்கள் பத்திரிகையில் எழுதவில்லை.

திடீரென முந்தாநாள்தான் செய்தி வந்தது. வாஸ் சட்டென வந்த ஒரு மாரடைப்பில் இறந்துபோய்விட்டார் என்று. என்னால் நம்பமுடியவில்லை. நான் நாடகத்தில் குறிப்பிட்ட எந்த ஒரு வியாதியும் உண்மையில் அவருக்கு இல்லை. ஆனால் இவர் எப்படி சாகமுடியும் என்ற கேள்வி என்னுள் எழும்பத் தொடங்கியது.

மனிதர் மிக மிக பண்பான மனிதர், பண்போடு அன்பும் சற்று கூடுதல் உண்டு. இவர் தன் வாழ்க்கையில் இதுவரை யாரையாவது எதிர்த்துப் பேசியிருப்பாரோ என்று கூட அவ்வப்போது நினைப்பது உண்டு. ஜெண்டில்மேன் என்று எனக்குத் தெரிந்த நூறு பேரைத் தேர்ந்தெடுத்து என் முன்னால் வைத்து அவர்களில் ஒருவரை உடனடியாக தேர்வுசெய்யவும் என்றால் என் கால்கள் என்னை அறியாமலே வாஸ் உள்ள இடத்துக்குச் செல்லுமே. அப்படிப்பட்டவர் எப்படி இறக்கமுடியும்? அதுவும் சடக்கென வந்த ஒரு மாரடைப்பில் விசுக்கென ஒரு நிமிஷத்தில் எப்படி அவர் போய்விடமுடியும்..

நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.. இதற்கெல்லாம் யாரால் பதில் சொல்லமுடியும்?

Labels:

8 Comments:

At 5:19 AM, Blogger meenamuthu said...

உண்மையில் சில கேள்விகளுக்கு நமக்கு விடை கி்டைப்பதில்லை

உடல் நிலை சரியில்லாத என் தோழிக்கு உதவும் பொருட்டு அவளின் மூத்த சகோதரியும் ஓய்வு பெற்ற அவரின் கணவரும் தோழியின் வீட்டில் தங்கி கவனித்துக் கொண்டார்கள்.வந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் இரவு மிகவும் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டிருந்து விட்டு(தோழிக்கு துணையாக மனைவி கீழே படுத்துக்கொள்ள)மேலே படுக்க சென்ற கணவர் காலையில் எழுந்திருக்கவேயில்லை தூக்கத்திலேயே(அட்டாக்)இறந்து விட்டார்!எப்போதும் கல கலவென்று கோபமே வராது ஆரோக்கியமாக இருப்பவர் எப்படி எப்படி ஏன் அவர் இப்படி இறந்தார்? தெரியவில்லை.
ஒருவேளை என் தாயார் சொல்வதுபோல் கடவுளுக்கு பிடித்தமானவர்களை அவர் சீக்கிரமே தன்னிடம் கூட்டிகொண்டுவிடுவாரோ?

 
At 8:52 AM, Blogger கிருஷ்ண மூர்த்தி S said...

/ meenamuthu said...

உண்மையில் சில கேள்விகளுக்கு நமக்கு விடை கி்டைப்பதில்லை/

உண்மைதான்!கிடைக்கிற விடை கூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இன்னொரு கேள்வியைக் கிளப்புவதாக மட்டுமே.....

நண்பரை நினைந்து நெக்குருகும் வார்த்தைகளுக்கு விடையேது?

 
At 9:21 AM, Blogger இரா. சதீஷ் குமார் said...

நெஞ்சில் நீங்காத நினைவுகள்...
நமக்குப் பிடித்த ஒருவர் நம் எண்ண அலைகளில் வாழ்ந்துகொண்டு நம்முடனேதான் இருப்பர். இருப்பினும், உலகத்தில் அவர் இல்லை என்று தெரிய வரும்பொழுது, என்னதான் எண்ணங்களில் அவர் குடியிருந்தாலும் உள்ளத்தில் ஒரு வெறுமை உருவாவதை தவிர்க்க இயலாது.

உங்களுக்குள் உருவான கேள்வி ஒவ்வொரு மனிதனிடமும் ஏதாவது ஒரு சமயத்தில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன செய்வது, கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்...

தெரிந்த ஞானிகள் சொல்வதெல்லாம் தேடிப்பார் கிடைக்கும் பதில் என்றுதான், ஆனால் தேடி ”விடை” கண்ட பின் அவரும் ஞானியாகிவிட்டால்?

மீண்டும் அதே பதில் தான்...

 
At 9:28 AM, Blogger manoharan said...

வாஸ்.

அவரது முழுப் பெயர் கெய்தன் வாஸ்.

முதன்முதலாக நான் வாஸை பார்த்தது எனது மூத்த மகன் LKG அட்மீஸன் போது. அவரும் அவரது மகனுக்காக வந்திருந்தார். நல்ல நண்பர்கள் ஆனோம்.

விசாகை தமிழ் கலை மன்ற உறுப்பினறாக சேர்ந்தார். முதலில் நாடகங்களில் நடிக்க அழைத்தபோது பயந்தவர், பிறகு மிக அருமையாக நடித்தார்.

மிக நல்ல மனிதர். மிகுந்த தேச பக்தர். அவரது தேச பக்திக்கு உதாரணம், அவரது மகன் பெயர் சுவதேஷ்.

மீனாமுத்து அவர்கள் சொல்வது போல் ஆண்டவன் சோதனையோ? எதாயினும் சரி, அவர் ஆத்மா சாந்தி டைய ஆண்டவனை பிரார்திக்கின்ரேன்.

 
At 7:47 PM, Blogger Vijay said...

when the call comes you got to go. so be ready anytime, live life to the fullest, so that when the call does come, you have no regrets

 
At 11:26 PM, Blogger s gowtham said...

Iam very sorry to know the sudden demise of our ex member. I don't know Late. Mr.Vaas. But i realise from yr comments that i was unfortunate i didn't see such a person.

In oneway he was very lucky that he had a sudden call when he was healthy. May his sole be kept in heavenly abode.

 
At 11:50 PM, Blogger  வல்லிசிம்ஹன் said...

எதிர்பாராத மரணம்,அதிர்ச்சிதான். என் தங்கை(கசின்)யின்

புக்ககத்தில் ஒருவர்,தன் மகனை''பாலப்ரும்மம'' நிகழ்ச்சிக்குக் கூட்ட்டிச் செல்லும் வழியில்,(அவன் மிருதங்கத்தில் தேர்ச்சி பெற்றவன், 16 வயதே ஆன குழந்தை)
அடையாரில் ஒரு மரத்தின் கீழே போகும் போது அது அப்படியே சரிந்து ஆட்டோ மேல் விழுந்து, உட்கார்ந்திருந்தவரின் தலையையும் பிளந்துவிட்டது.
பையன் வெளியே குதித்துவிட்டான். தந்தை பகவான் திருவடி போய்ச் சேர்ந்தார்.

என்ன சொல்வது!!!

 
At 2:45 AM, Blogger V. Dhivakar said...

சென்றுவிட்ட புண்ணிய ஆத்மாவுக்காக துயருற்ற அத்தனை பேருக்கும் நன்றி!

சதீஷ்!
விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர் மற்றும் ஞானி விஷயத்திலும் ஒரு ஞானி போலவே எழுதி இருக்கிறீர்கள்.

கண்ணதாசன் பாடல் நினைவு வருகிறது. 'வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான், சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்..

இறப்பு பற்றியெல்லாம் கவலை இல்லை இங்கே.. ஆனாலும் இப்படி நிகழ்கிறதே என்னும் வியப்பு, அந்த வியப்பினால் ஏற்படும் கோபம்..

கிருஷ்ணமூர்த்தி சார்..

இதற்காகத்தான் மகரிஷி அரவிந்தரின் 'சாவித்திரி' படிக்கவேண்டும் போலிருக்கிறது.

தி

 

Post a Comment

<< Home