Thursday, September 02, 2010

பீமிலி’ யிலிருந்து ஞான ஒளி பரப்பும் கலங்கரை விளக்கு



குரு என்ற வார்த்தைக்கு ஜீவன் கொடுத்தது பாரதம்தான். இந்த பாரதத்தில்தான் மனிதப் பிறப்பு என்பதே அந்தப் பிறவியின் மூலம் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே என்ற கோட்பாடும் காலம் காலமாக உண்டுதான். முனிவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் படித்தாலே தெரியும். எதையும் வரமாக அளிக்கும் சக்தி வாய்ந்த ரிஷிகள் அந்த சக்தியை ஒருநாளும் தமக்கென பயன்படுத்திக் கொண்டதில்லை. வசிஷ்டரிடம் நந்தினி என்றொரு பசு வளர்ந்து வந்ததையும், அந்தப் பசு விசுவாமித்திரருடன் கூட வந்த பல்லாயிரம் வீரர்களுக்கு பசியாறச் செய்ததையும் படித்திருக்கிறோம். ஆனால் ஒருநாளும் அந்தப் பசுவிடம் தனக்காக அவர் வேண்டியதில்லை. காட்டிலே வாழ்ந்து எளிய முறையைக் கடைபிடித்து சுகதுக்கங்க்ள் தம்மைத் தாக்காதவாறு வாழ்ந்து காட்டிய புண்ணிய புருஷர்கள் அவர்கள்.

ஆனால் மனிதப் பிறவியையே ஒரு வரமாகப் பெற்ற மனிதன் சுக துக்கங்களில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தவிக்கிறான். அப்படித் தவிக்கும்போது அவனைக் கரையேற்றுபவர் குரு ஒருவர்தான் என்பதும் கூட பாரதம் உலகுக்குக் கற்றுக் கொடுத்த பாடம். உண்மையான தேடலில் உள்ள ஒருவனுக்கு உடனடியாகத் தேவைப் படுவது ஒரு நல்ல குரு என்று எந்தப் பெரியவரும் உடனடியாக சொல்லி விடுவார்கள். குரு என்கிற வார்த்தையே புனிதமானது என்றுதான் நம் இதிகாசங்களும், திருமந்திரமும் சொல்கின்றன..

குரு எப்படி வருவார் என்று அவ்வப்போது கேள்விகள் என்னுள் வரும். குரு என்பவர் ‘இதோ பார், இன்று முதல் நான் உனக்கு குருவாக அப்பாயிண்ட்மெண்ட் ஆகியிருக்கேன், அதனால் நான் சொல்படி எல்லாம் கேட்பாயாக’ என்று சொல்லிக்கொண்டே திடீரென வானத்தில் இருந்து வருவாரா எனவெல்லாம் கூட என் எண்ணங்கள் போகும். ஆனால் உண்மையில் குரு என்பவர் எப்போது தேவைப்படுகிறாரோ அப்போது நிச்சயமாக நம்மைத் தேடியாவது நேரடியாக வந்துவிடுவார் என்பதுதான் என்னுடைய முடிவான எண்ணம். எவ்வெப்போதெல்லாம் எவரெவர் நமக்கு நல்வழி காட்டுகிறார்களோ அவர்கள் எல்லோரையுமே நம் குரு என்றே கொள்ளவேண்டும்.. தனிப்பட்ட முறையில் வேண்டாது தனக்கேயல்லாமல் இந்த உலகமே உயர்வாக அமையவேண்டும் என்று பாடுபடும் பெரியவர்கள் அனைவருமே நம் குரு. அப்படிப்பட்ட உயர்வான பெரியவரைப் பற்றிதான் இந்தப் பதிவு.


ஆந்திரத்தில் தற்சமயம் குருஜி என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படுபவர், ஏன் குருஜி என்றாலே அது விசாகப்பட்டினம் அருகே பீமிலியில் அருளாட்சி செய்துவரும் சத்குரு சிவானந்த மூர்த்தி அவர்களைத்தான் குறிக்கும். உலக நன்மை,- லோக க்‌ஷேமம் என்ற உயர்ந்த குறிக்கோள் உடைய உத்தமத் தலைவர் அவர், அவருடைய காலத்தில் அவரைப் பார்த்துக் கொண்டே நாமும் வாழ்கிறோம் என்பதே ஒரு மகா பாக்கியம் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன். அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்கள் இங்கே.. ஆனால் குருஜி அதை விரும்புவது மட்டுமல்ல, அதற்கான செயல்களையும் ஒழிவில்லாமல் செய்துவரும் மகான்.

குருஜி என்றால் காவி உடை என்பதெல்லாம் கிடையாது. எளிய சாதாரண வேட்டியும் சட்டைதான். மிக மிக எளியவர். யாரிடமும் எந்தப் பேதமும் காணாத மகான். இவருக்கும் மாபெரும் கூட்டம் உண்டு. ஆனால் படாடோபத்தையே விரும்பாதவர். ஒரு சில பத்திரிகைகளில் குருஜியை சாட்சாத் சிவபிரானின் அம்சம் என்று கூட எழுதுகிறார்கள். ஆனால் எந்தப் புகழ்ச்சியுமே இவர் செவிகளில் ஏறுவதில்லை. தான் சொல்லும் நல்ல விஷயங்களைக் கேட்பவர்கள் அதை மேலும் பலருக்கு எடுத்துச் சொல்வார்கள் இல்லையா.. இப்படி சத்விஷயங்கள் பரவினாலே போதாதோ, என்று சொல்வார். ஏன், தன்னை மற்றவர்கள் குரு என்று சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குவார்.

எனக்கு எப்போதும் ஒரு வகையில் அதிருஷ்டம் அமையும். நான் குருஜியைக் காண பீமிலி செல்லும்போதெல்லாம், ஒரு மணி கால நேரத்துக்கும் அதிகமாக பிரத்யேகமாக அவருடைய உரைகளை கேட்க சந்தர்ப்பங்கள் அதுவாக அமையும். என் பணி கேள்விகள் கேட்பதே.. அவர் கோபம் கொள்ளாமல் விளக்கங்கள் சொல்லும்போதெல்லாம், எத்தகைய ஞான விளக்கின் ஒளியில் நாம் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம் என்றுதான் தோன்றும்.
இவரிடம் ஞானௌபதேசம் பெறுவதாகவே ஒரு உணர்ச்சி கூட வரும். எத்தனையோ முறை ஹிமாலயப் பிரதேசங்களுக்கு குழுக்களாக அழைத்துச் சென்று பனிமலையின் பெருமைகளை பலருக்கு உணரச் செய்திருக்கிறார். அவருடன் சென்ற போதெல்லாம் ஞானத்தின் உச்சியை தரிசித்ததாகவே பலரும் என்னிடம் சொல்வார்கள். ‘என்னை எனக்கே அறிமுகப்படுத்தியவர்’ என இசைக்கவி ரமணன் எழுதுகிறார்.

சனாதன தர்மம் உயர்ந்தது என்று அடிக்கடி சொல்வதை விட அந்த தர்மத்தை சாதாரணமாகக் கடைபிடித்தாலே போதும் எனச் சொல்வார். சனாதன தர்மம் என்றல்ல, நம் பாரதம் தந்த சரித்திரத்தின் பாடங்களையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பார்.

’குருஜி! சாதி விஷயம் சனாதன தர்மத்தைப் பற்றிய ஒரு கேவலமான எண்ணத்தை இந்த சமுதாயத்திடம் ஏற்படுத்திவிட்டதோ’, என்று ஒருமுறை கேட்டேன். சனாதன் தர்மத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று திருப்பிக் கேட்டார். வசதிக்காகவும், ஒரு மனிதனைப் பற்றி அவன் தொழிலால் ஒருவருக்கொருவர் அறியப்படுவதற்காகவும் ஏற்பட்டதுதானே சாதிமுறை, என்பார்.

ஈகோ என்ற உணர்ச்சி மனிதனை ஆட்டிப் படைக்கும் போதெல்லாம் மனிதன் அதற்கு அடிமை ஆகிறான். ஒரு கம்பெனி இருக்கிறது.முதலாளி இருக்கிறார், அவருடைய வேலைக்காக ஒரு பொது மேலாளர் இருக்கிறார். அவருக்கு கீழே நிர்வாகி வருகிறார். நிர்வாகிக்கு கீழே குமாஸ்தாக்கள் வருகிறார்கள்.. குமாஸ்தாக்குக் கீழே பியூன்கள் எனச் சொல்லப்படும் பணியாள் வருகிறார். இப்போது இங்கே யார் உயர்ந்தவர். இதுதான் ஜாதியின் ஆரம்பகட்டம். ஆனால் அலுவலக வேலை முடிந்தவுடன் அந்த உயர்ந்த பதவிக்காரருக்கும் கீழேயுள்ள பணியாட்களுக்கும் என்ன வித்தியாஸம் இருக்கும்.. சில அரசாங்க அலுவலகங்களில் பியூன்கள் வேலை முடிந்தவுடன் யாரையுமே கண்டுகொள்ளக் கூட மாட்டார்கள். ஆனால் ஜாதியின் ஆரம்பகட்டத்தில் இருந்த இந்த அலுவலக நிலை காலாகாலத்தில் ரத்தத்தில் ஊறுவதுபோல பிறப்பு வழியாக வந்தது போல நிலையாக நின்றுவிட்டது. இந்த நிலையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் ஜாதிவித்தியாசம் எல்லாம் பார்க்கமாட்டார்கள்., என்பார். அலுவலகங்களிலாவது முயற்சியை தீவிரப்படுத்தினால் பதவி உயர்வு வந்து பியூன், ஒரு பொது மேலாளர் வரை செல்ல முடியும். ஆனால் காலமும் மனிதர்களும் இந்த சாதி வழக்கைத் திசை மாற்றிவிட்டார்கள் என்பதுதான் உண்மை, என்பார்.

குருஜி தமிழில் பேசுவார், சிறிது எழுதவும் செய்வார். என்னுடையை புத்தகங்களை அவரிடம் கொடுத்து ஆசிகள் கோருவது உண்டு. ‘இத்தனை பக்கங்களை எப்படித்தான் எழுதுகிறாயோ’ என்று சிரித்துக் கொண்டே கேட்பார். சரி, இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, படிப்பதற்கு ராகவேந்திரன் (குருஜியுடனேயே இருப்பவர், பேராசிரியர்) இருக்கிறார், அவர் படித்தபின் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்’ என்பார். அழகான மகாலட்சுமி கோயில் ஒன்றினைக் கட்டியுள்ளார். ஏன் மகாலட்சுமி கோயில் எனக் கேட்டதற்கு, இந்தப் பிராந்தியமே சுபிட்சமாக மாற வேண்டாமா, அதற்கென வைத்துக் கொள்ளுங்களேன், என்றார்.

சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் இருண்டு கிடந்த காலத்தை ‘இருண்ட காலம்’ என்று சரித்திர ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். அந்த இருண்ட காலம் மகேந்திரபல்லவன் மூலம் ஒளிமயமானதை புதினமாக ‘விசித்திரசித்தன்’ மூலம் எழுதினேன். எனக்குப் பல விஷயதானங்களை அந்தக் கால கட்டத்தில் செய்தவர் குருஜி. இன்னமும் நிறைய விஷய்ங்கள் சரித்திரத்தில் நோண்டலாம் என்பார். சில உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்பார். ஆராயுங்கள்.. தேடுங்கள், நிறைய கிடைக்கும் ஆந்திரத்திலேயே, என்பார்.

குருஜியைப் பற்றிய நிறைய புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். கட்டுரைகள் ஏராளம். அவரே நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.

சமீபத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது, அவரது அந்தரங்கம் கூட அவரே வெளிப்படுத்தினார். ஆந்திரக் காவல் துறையில் பணிபுரிந்து, திடீரென ஒருநாள் ’நாளையில் இருந்து வேலைக்கு வருவதில்லை’ என எழுதிக் கொடுத்து விட்டார். ’ஏன் இப்படி செய்கிறீர்கள், உங்களுக்கு ஏதேனும் குறை வைத்துவிட்டோமா’ என்று பலரும் கேட்டனராம். ’இல்லை, என் மனைவிக்கு சிலகாலம் ஆறுதலாக அவள் அருகே இருக்கவேண்டும்.. போதும் இத்தனை வருஷம் இங்கே சேவை செய்தது’ என்று அரசாங்க ஜீப், வேலையாட்கள் இவைகள் அனைத்தையும் அன்றே அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். மனைவியாருக்கு உடல்நலம் சரியில்லாத வேளை அது, அவர் நினைத்தது போலவே மனைவியார் தேறி வந்ததும் வாஸ்தவம். சிலகாலம் மகிழ்ச்சியுடன் இருந்து அதன் பிறகே மனைவியார் இந்த உலகை விட்டு மறைந்தார். ”இவையெல்லாமே வாழ்க்கையில் கடந்து போகும் கட்டங்கள். இன்பம் துன்பம் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்துப் பார்க்கப் பழகவேண்டும்.. வாழ்க்கையில் முடிந்தவரை மற்றவரை சந்தோஷமாக வைத்துப் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும். முக்கியமாக மற்றவர்களுக்கு நாம் ஒரு ஆதர்சமாக இருக்கவேண்டும். நம்மிடையே உள்ள நல்ல கருத்துகள் மட்டும் அவர்களிடம் சென்றால் போதும். நம் தேசம் நமக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம். நம் தேசத்தில் உள்ள செல்வங்கள் போல வேறு எங்கேயுமே கிடையாது. நம் தேசத்தை நேசிக்கவேண்டும்.. தேசத்தைப் பற்றிய நல்லவைகளை எடுத்துச் சொல்லுங்கள்.. மிகப் பெரிய ஆன்மீகச் சொத்தாக உங்கள் தேசத்தைப் பாருங்கள்.. குடும்ப வாழ்வை நிலைப்படுத்துங்கள்.. குடும்பம் ஒரு கோயிலாக மாற வழி செய்யுங்கள்.. பாரத சனாதன தர்மம் தானே செழிக்கும்..”

பகவான் பக்தருக்கு எளியவன் என்று நம்மாழ்வார் சொல்கிறார். எளிமையே உருவாகக்கொண்ட குருஜியின் வார்த்தைகளில் உள்ள தெய்வீகத்துக்கு ஈடு இணை ஏது?

பீமிலி கடற்கரையோரம் இருக்கும் குடிலிலிருந்து ஒரு கலங்கரை விளக்கு கடல் பக்கம் ஒளியைப் பாய்ச்சாமல் சற்று திரும்பி நிலத்துப்பக்கமாகப் பார்த்து் தன் ஒளியைப் பாய்ச்சுகிறது.

குருஜி ஆந்திரத்தின் ஆன்மீக விளக்கா.. என்று கேட்டால். பாரதத் தாய் தன் மக்களுக்காக அனுப்பி வைத்திருக்கும் ஞான விளக்கு.. என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. குருஜியைப் பற்றி இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. எல்லோருக்கும் ந்ன்மை பயக்கும் விஷயங்கள்தான் அவை. காலம் வரும்போது தமிழில் புத்தகமாகவும் வெளியிட ஆசைதான்.. காலம் கருணை புரிந்து கனியட்டும்..

14 Comments:

At 1:17 AM, Blogger எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

அவரவர் மனப்பாக்குவம், தேடலில் உள்ள தீவீரம் இவைகளுக்குத் தகுந்த மாதிரிக் குருமார்களும், ஒவ்வொரு படிநிலைக்கும் தகுந்த மாதிரி, சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போனதை என் வாழ்விலேயே அனுபவித்திருக்கிறேன்.

இடதுசாரிச் சிந்தனைகளோடு, நாத்திகனாக வாழ்ந்த சில வருடங்களும் உண்டு.அது முடிந்து மறுபடி என்னை மீட்டெடுக்கும் காலமும் வந்தது. நண்பர் ஒருவர் எளிய முறை குண்டலினி யோகம் சொல்லிக் கொடுக்கும் ஒருவரிடம் அழைத்துப் போனார். கேள்விகள் நிறைய இருந்தன என்னிடத்தில்! கேள்விகள் எதற்கும் அவர் பதில் சொல்லத் தயாராக இல்லை.தன்னிடம் கேள்வி கேட்காமல் பின்பற்றுகிற சீடன் இருந்தால் போதும் என்றே ஒரு தரம் சொன்னார். வெறும் பஞ்சு மிட்டாயைக் கண்ணில் காண்பித்து விட்டு, இது தித்திப்பாக இருக்கும் என்று மட்டுமே அவரது வழிமுறைகள் இருந்தன, பஞ்சுமிட்டாயைக் கூடக் கொடுக்கவில்லை என்ற குறை எனக்கு!

வேறொரு தருணத்தில், வேறொரு நண்பரிடம் இதைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டபோது, நெற்றியில் அறைகிற மாதிரி ஒரு வார்த்தை சொன்னார்:

"அவரை என் குறை சொல்லவேண்டும்? நம்முடைய தேடல், யோக்கியதை என்னவோ அதற்குத் தகுந்த மாதிரித் தான் நல்ல குருவோ, போலிக் குருவோ வந்தமைகிரார்கள்! வெளியே தேடுவதை முதலில் நிறுத்து!"

இந்த நேரத்தில்தான் நீண்ட நாட்களுக்கு முன்னால் அறிமுகமாகி இருந்த போதிலும், நான் அறவே மறந்திருந்த ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தைப் பற்றிய தொடர் கட்டுரைகள் அமுதசுரபியில் திரு.கர்மயோகி என்பவரால் எழுதப்பட்டு, நானும் படிக்கும் வாய்ப்பு வந்தது. மறைந்திருந்த தேடல் மறுபடியும் உள்ளுக்குள்ளேயே ஆரம்பித்தது.

ஒரு உள்முகமான மாற்றத்தை நான் படிப்படியாக அனுபவிக்கும் தருணமாக அது மாறிப் போனது. என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் விடை தானே வெளிப்படுவதை அனுபவிக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு,கொஞ்ச நாள் ஒரு சித்தர் பின்னால் அலைந்து கொண்டிருந்தேன்.

இப்போது எவரையும் தேடிப் போவதில்லை, சடங்குகள், பழைய பிடிமானங்கள் என்று எதுவும் இல்லை. எது எந்த நேரத்தில் அமைய வேண்டுமோ, அதை அவனே அருள்வான் என்ற ஒற்றைத் தீர்மானத்தில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த இடைக்காலத்தில் என்னையும் ஒரு பொருட்டாக நயந்து, எனக்கு நல்லதை அருளிச் செய்த மகான்கள் சத்குரு சாதுராம் சுவாமிகளும், சேந்தமங்கலம் தத்தாச்ரமம் ஸ்ரீ கிருஷ்னானந்தரும் என்னுடைய வழிகாட்டும் துணையாக இப்போதும் இருக்கிறார்கள்.

குருவை நாம் தேடிப் போவது என்பதை விட, குரு தானே சீடனைக் கண்டடைகிற அற்புதம் இந்த மண்ணுக்கு மட்டுமே உண்டான ஒரு அற்புதம்!

குரு அருளே திருவருள்!

 
At 2:21 AM, Blogger manoharan said...

என் அன்பார்ந்த குருவை பற்றிய குறிப்பை படித்து மகிழ்ந்தேன். அத்தகைய ஒரு மகான் ஆண்டுவரும் இந்த விசாகையில், அவர் காலடியில் நானும் வசிக்கிரேன் என்பது நான் செய்த புண்ணியமே!

 
At 3:22 AM, Blogger Innamburan said...

தெளிவு. அதற்கு கிருஷ்ணமூர்த்தியின் கருத்து மெருகு கூட்டுவது. 'சனாதன் தர்மத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று திருப்பிக் கேட்டார்' என்ற வாக்கியமே குறுகிய மனப்பான்மையை உடைக்கிறது. ந்ன்றி, திவாகர்.
இன்னம்பூரான்

 
At 3:32 AM, Blogger Mukhilvannan said...

அன்புசார் திவாகர்,
குருஜி ஸ்ரீ சச்சிதானந்தமூர்த்தியைப் பற்றிய தங்கள் பதிவு படிக்கப்படிக்க ஒரு வித தெய்வானுபவத்தைக் கொடுக்கிறது. சென்னைவாழ் தெலுங்கு மகளிர்மட்டுமே நடத்தும் சர்வாணி சங்கீத சபாவின் ஆதரவில் சென்னை மியூசிக் அகாடெமியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரீ சச்சிதானந்த மூர்த்தி கலந்துகொண்டு பேசியது நினைவுக்கு வருகிறது.
அவரைப் பார்க்கும்போதே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும் என்பதுபோன்ற அவரது தோற்றமும், பொலிவும் என் கண்முன்னாலேயே இருக்கிறது.
வழிப்போக்கன்

 
At 3:46 AM, Blogger geethasmbsvm6 said...

ஆனால் ஜாதியின் ஆரம்பகட்டத்தில் இருந்த இந்த அலுவலக நிலை காலாகாலத்தில் ரத்தத்தில் ஊறுவதுபோல பிறப்பு வழியாக வந்தது போல நிலையாக நின்றுவிட்டது. இந்த நிலையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் ஜாதிவித்தியாசம் எல்லாம் பார்க்கமாட்டார்கள்., என்பார். //

அருமையான கருத்து. முற்றிலும் அறியாத, தெரியாத ஒருவரைப் பற்றிய தகவல்கள், பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி. இப்படிப் பட்ட ஒரு குரு கிடைச்சதுக்கு நீங்க அதிர்ஷ்டம் பண்ணி இருக்கீங்க. குருவருளே திருவருள். ஆசிரியர் தினத்துக்கான சிறப்புச் செய்தியாகவும் அமைந்துவிட்டது.

 
At 3:46 AM, Blogger geethasmbsvm6 said...

to continue

 
At 5:02 AM, Blogger ஜெய. சந்திரசேகரன் said...

நல்லது. என் கண்ணோட்டமெல்லாம், அத்தகைய குரு சொன்னால் ‘எள் என்றால் எண்ணையாய் நிற்கும் கூட்டம் முன் சிதிலமடைந்த கோயில்கள் பற்றிச் சொல்லி ஒரு சீரமைக்கும் குழு நாம் ஏற்படுத்தலாமே?’ என்பதுதான். திவாகர் சார் குருஜியின் ஆணைக்காகக் காத்திருக்கும்,
சந்திரா

 
At 6:24 AM, Blogger எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

ஆஹா! சமயம் பார்த்து ரீச் பௌண்டேஷன் பற்றிய செய்தியும் reach ஆகவேண்டுமென்று சந்திரா கமென்ட் (கல்)எறிந்திருக்கிறார்!

மாங்காய் விழுந்தால் சரி!

 
At 9:20 AM, Blogger DHIVAKAR said...

கிருஷ்ணமூர்த்தி சார்! நன்றிகள் பல.

நீங்கள் சொல்வது சரி, கேள்விகளை நமக்குள்ளேயே கேட்கவேண்டும்..

அரவிந்த மகரிஷி பக்தருக்கு குருவருளுக்கு குறையேது..

திவாகர்

 
At 9:22 AM, Blogger DHIVAKAR said...

மனோகர்!

கலங்கரை விளக்கத்தின் பூரண ஒளியில் ஆழ்ந்துகிடப்பவனல்லவா.. மகிழ்ச்சி பொங்கி வழிவது நியாயம்தான், சதீஷை இங்கே குறிப்பிட மறந்துவிட்டேன். இந்தப் பதிவுக்கு ஆதி காரணமே சதீஷ்தானே..

 
At 9:25 AM, Blogger DHIVAKAR said...

இனியவரே! இன்னம்பூராரே!

ஒரு நல்ல பாயிண்ட் ஐ டக்கென பிடிப்பதில் வல்லவரே.. இன்ன்ம்பூராருக்கும் இஷ்டமான பதிவு என்பதில் எனக்கும் இன்பம்..

 
At 9:28 AM, Blogger DHIVAKAR said...

கீதாம்மா!
‘அடுத்த வீட்டில்’ ஏதோ பிரச்னை என்று ’அடுத்தவீட்டில்’ குறிப்பிட்டு இருந்ததை இப்போதுதான் பார்த்தேன். இந்த வீட்டில் அப்படி ஏதேனும் பிரச்சினை இல்லையே.. இங்கேயும் உண்டென்றால் கூகிளார் கோர்ட்டுக்குத்தான் போய் நீதி கேட்கவேண்டும்

 
At 9:30 AM, Blogger DHIVAKAR said...

நினைவெல்லாம் நித்யா என்பது போல சந்திராவுக்கு நினைவெல்லாம் பழைய சிதிலமடைந்த கோயில்தான். உத்திரமேரூர் ஆனது போல அனைத்தையும் செய்துவிடலாம்.. கவலை நீங்குக

 
At 9:33 AM, Blogger DHIVAKAR said...

முகில்வண்ணன் சார்!
நீங்கள் சென்னையில் பார்த்து பரவசப்பட்டவர் பீமிலி குருஜிதான். ஆனால் பெயர் மாறிவிட்டது.

குருஜி சிவானந்த மூர்த்தி அவர்களுக்கு இசையில் நாட்டம் அதிகம். ‘ஆந்திர ம்யூசிக அகடெமி’ யின் நிறுவனர்.

 

Post a Comment

<< Home