தெலுங்கு எழுத்துலகில் ஒரு தமிழர்
தெலுங்கு இலக்கிய உலகம் நம் தமிழ் இலக்கிய உலகம் போல சிறப்பானதுதான். தெலுங்கு மொழியில் முதல் முதலாக சிறுகதை இலக்கியம் படைத்தவர் குருஜாடா அப்பாராவ் எனும் வட ஆந்திரத்து மண்ணின் மைந்தர். மிகப் பெரிய கவிஞர் கூட. இவர் கவிதையை ஒரு படத்தில் (இந்துருடு-சந்துருடு) கமலஹாசன் கூட தெலுங்கில் உணர்ச்சி வேகத்தில் பேசுவதாக வரும் (மண் என்றால் அது வெறும் மண் இல்லையடா.. குருதியும் வியர்வையும் ஒன்றாய் கலந்த உயிர்).
குருஜாடா அப்பாராவ் 1910 இல் தெலுங்கில் சிறுகதையை முதன் முதலில் எழுதி ஆரம்பித்து வைத்தார். தெலுங்கு சிறுகதை இலக்கியமும் ஆரம்பித்து வைக்கப்பட்டு இப்போது நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. சமீபத்தில் தெலுங்கு சாகித்தியக் காரர்கள் கூட்டமைப்பு இந்த நூறு ஆண்டுகளில் சிறப்பாக எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒவ்வொரு ஆண்டுக்கு ஒன்றாகத் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாக பதிப்பித்து சமீபத்தில் ஆந்திரப் பல்கலக்கழகத்தில் விழா எடுத்து வெளியிட்டனர். அப்படி வெளிட்ட கதைகளில் 2006 ஆம் ஆண்டு சிறுகதையாக திரு. எல்.ஆர். ஸ்வாமி எழுதிய ‘ஷகிலா’ எனும் தெலுங்கு சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதில் ஒரு விசேஷம் உண்டு.
எல்.ஆர்.ஸ்வாமி ஒரு தமிழர். பிறப்பால் தமிழ், படிப்பால் மலையாளம், நாற்பது வருட ஆந்திர வாழ்க்கையால் தெலுங்கு, என மூன்று மொழிகளிலும் வல்லமை பெற்ற தமிழர். நம் நண்பர். விசாகப்பட்டினத்தில் தெலுங்கு மொழி வளர்ச்சிக்காக தெலுங்கு சாகித்தியவாதிகளுடன் இணைந்து பாடுபடுபவர். பல இலக்கிய மேடைகளில் நான் இவரைத் தலைமை பீடமாக சந்தித்ததுண்டு. இவர் தெலுங்குமொழித் திறமை, தெலுங்கு மொழியின் ஆளுமை, அந்த மொழியைக் கையாளும் லாவகம், பல சமயங்களில் என்னை ஆச்சரியப்படுத்தும்.
வாராவாரம் தெலுங்கு இலக்கிய மேடைகளைத் தொடர்ந்து நடத்தி வருபவர். இந்த இலக்கிய மேடைகளில் திரு சம்பத் அவர்களால், கம்பன், பாரதி, திருவள்ளுவர், கண்ணதாசன் போன்றோர் தெலுங்கருக்கு அறிமுகப்படுத்த முக்கிய காரணமானவர். தெலுங்கு இலக்கிய உலகில் என்னுடைய வம்சதாரா புத்தகம் பற்றிய அறிமுகமும் நடத்தியவர். இம்மாதக் கடைசியில் திருமலைத் திருடனைக் கூட அறிமுகம் செய்ய உள்ளார்.
சாகித்திய அகதமியின் மொழிபெயர்ப்பாளராக பல தெலுங்கு புத்தகங்களை மலையாளத்திலும், பல மலையாளப் புத்தகங்களைத் தெலுங்கிலும் அறிமுகப்படுத்தியவர். தமிழில் ஹிந்து நாளிதழில் பணியாற்றிய எழுத்தாளர் நடராஜன் அவர்களின் ‘வனநாயகம்’ எனும் புத்தகத்தை, தெலுங்கில் ‘அடவிக ராஜ்யம்’ என்று மொழிமாற்றம் செய்து, அந்தப் புத்தகத்திற்காக ‘நல்லி குப்புசாமி விருது’ பெற்றவர்.
இவருடைய ‘கோதாவரி ஸ்டேஷன்’ எனும் தெலுங்குக் கதையைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தெலுங்கு எழுத்துலகத்தில் மிகவும் பாராட்டப்பட்ட கதை இது. ஸ்வாமி நாற்பது வருடங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் வேலைக்கென வந்து இங்கேயே நிரந்தரமாக நின்று விட்டவர். பொதுவாக அன்னிய மொழியில் மீதுள்ள பிரியம் இவரை தெலுங்கு மொழி பக்கம் திருப்பிவிட்டது. 1988 இல் இவர் எழுதிய முதல் தெலுங்கு சிறுகதை ‘ஜவாபுலேனி ப்ரச்ன” (பதிலில்லாத கேள்வி), ஆந்திர ஜோதி வாரப்பத்திரிகையில் யுகாதி சிறப்பு சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இவர் முதல் வரவே வெற்றியுடன் துவங்க அதற்குப் பிறகு 220 சிறுகதைகள் இன்று வரை எழுதியுள்ளார். கடந்த நூறாண்டுகளில் குறிப்பிடப்பட்ட நூறு எழுத்தாளர்களில் ஒருவராக இவர் இன்று தெலுங்கு இலக்கிய உலகில் பாராட்டப்படுவது என்பது இவரின் அபரிமிதமான உழைப்புக்கும், எழுத்துத் திறனுக்கும் கிடைத்த பரிசுதான்.
"அதென்ன சார் அந்த கதைக்கு ‘ஷகிலா’ என்று பெயர் வைத்தீர்கள்," என்று கேட்டேன் ஸ்வாமியிடம்.
“கதையின் முக்கிய பாத்திரம் ஷகிலா. பிறப்பால் யாரும் எந்த மதத்தையும் சாரமுடியாது, வளர்ப்பும் சூழ்நிலையும் மட்டுமே ஒருவரின் மனநிலையை எந்த மதத்துக்கும் உண்மையாக மாற்றும்” என்று சொன்னார்.
“இண்டெரெஸ்டிங் சப்ஜக்ட்தான்”
“ஆமாம். ஷகிலா எனும் ஏழை முஸ்லிம் பெண் சிறு வயதிலேயே பிராம்மணக் குடுமபத்தாரால் ஆதரிக்கப்பட்டு வளர்ந்து பெரியவளாகிறாள். அந்தக் குடும்ப பழக்கவழக்கங்கள் அவளை அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக மாற்றிவிட்டன. ஒருசமயம் ரம்சான் பண்டிகைக்காக அவள் பிறந்த இடம் செல்ல நேரிடும்போது அவள் மனம் தான் பிறந்த குடும்பத்தோடும், அவர்கள் பழக்கவழக்கங்களோடும் ஒத்துழைக்க மறுக்கிறது. அவள் உடனடியாக திரும்பி விடுகிறாள். அவளுக்கு கபீர் என்ற கணவன் (கபீர் என்ற பெயரே அவன் குணத்தையும் காட்டும் என்பதற்காக வைக்கப்பட்டது) அமையும்போது, அவள் கணவன் இவள் நிலையை பரிபூரணமாக உணர்வதாகவும், அவளோடு இயைந்து செல்ல சிலநாட்கள் அவகாசம் கேட்பதாகவும் கதை முடிகிறது.”
ஸ்வாமி மிக மிக எளிமையான மனிதர். கோவையில் பிறந்து, பாலக்காட்டில் படித்து, விசாகப்பட்டினத்தில் தற்சமயம் வசித்துவரும் இந்தத் தமிழரை தெலுங்கு இலக்கிய உலகம் மறவாமல் அவர் சேவைகளை தத்து எடுத்துக் கொள்வது மனதுக்கு நிச்சயம் ஆறுதல்தான்.
இவருடைய தமிழிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட நூலை தமிழ் மன்றம் தனது நூற்றாண்டு விழாவின் போது நகர மேயர் மூலம் வெளியிடப்பட்டு, நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொள்ளும் வகையில் நடத்திப் பெருமை கொண்டது.
தெலுங்கு இலக்கிய உலகத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றுள்ள 65 வயது இளைஞரான திரு ஸ்வாமி மென்மேலும் பல சேவை செய்து அதன் மூலம் தமிழர்பெருமைக்கு மேலும் புகழ் பெற்றுத் தரவேண்டும். இது நமது கோரிக்கையும் கூட.
Labels: LR SWAMY TELUGU WRITER
6 Comments:
ஒரு புதிய விஷயத்தை அறியத் தந்திருக்கிறீர்கள்.
சிறுகதை இலக்கியம் ஆரம்பித்த நூறாவது ஆண்டைக் கொண்டாடவேண்டும், ஆண்டுக்கு ஒன்றாக சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடவேண்டும் என்கிற எண்ணம், இங்கே இல்லாவிட்டாலும், அடுத்த வீட்டிலாவது இருக்கிறதே என்பதை நினைத்தாவது சந்தோஷப் பட்டுக் கொள்ளவேண்டியது தான்!
ஆசிரியர் தெரிந்தவர் என்பதால், அவரிடம் அனுமதி பெற்று, அந்த சிறுகதையைத் தமிழில் உங்களுடைய வலைப் பக்கங்களிலேயே வெளியிடலாமே!
தெலுங்கு சிறுகதை பற்றிய நல்லதொரு செய்தி...
தமிழ்க் காரர் தெலுங்கு எழுத்தாளர் ஆனது போல், தெலுங்குக் காரர் திரு. கிரிதாரி பிரசாத் எழுதிய பகவத்கீதைக்கான தமிழ் உரையை சில வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன், ஆஹா, என்ன அற்புதமாக எழுதியிருந்தார்!
தாய்மொழிக்காரர்களை விட மற்ற மொழிக்காரர்கள் பிற மொழிகளை கற்றுத் தேர்ந்து அதில் படைக்கும் படைப்புகள் மிகச் சிறந்ததாக இருக்கும் போலும்!
நன்றி திவாகர் சார்...
அருமையான மனிதர். நல்ல நண்பர். அவர் தெலுங்கு மொழிக்கு
ஆற்றி வரும் தொண்டு, நம் தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை.
நண்பர் கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருப்பது போல், ஸ்வாமி அவர்கள்
கதைகளை தமிழில் நீ மொழிபெயர்த்தால் நாங்களும் படித்து மகிழ்வோம்"
>>ஆசிரியர் தெரிந்தவர் என்பதால், அவரிடம் அனுமதி பெற்று, அந்த சிறுகதையைத் தமிழில் உங்களுடைய வலைப் பக்கங்களிலேயே வெளியிடலாமே!<<
@கிருஷ்ணமூர்த்தி சார், மனோகரன்,:
ஸ்வாமியையே எழுதச் சொன்னால் போயிற்று. கேட்கிறேன்.
சதீஷ்!
தெலுங்கர்களின் தமிழ்த் தொண்டு என எடுத்துக் கொண்டால் அது பெரீஈய லிஸ்ட்டாக நீளும். கிரிதாரிபிரசாத் அடியேனும் படித்துள்ளேன். அருமை.
ஆனால் தமிழர்கள் பிற மொழிக்கு ஆற்றிய செல்வங்கள் அனைத்தும் வெளிக் கொணரப்படவேண்டும் என்பது கூட என் ஆசை..
நன்றி!
முற்றிலும் புதிய செய்தி. பகிர்ந்ததுக்கு நன்றி. அனைவரும் வேண்டிக்கொண்டதையே நானும் முன்மொழிகிறேன்.
Post a Comment
<< Home