Monday, December 28, 2009



கலைஞரின் ஆர்வமும் சங்கங்களின் கோரிக்கையும்

சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் நிர்வாகிகள் சேர்ந்து சென்னை மாநகரத்தில் நம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முயற்சியின் பேரிலும், கல்கத்தா நகர தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகர் திரு ஞானசேகரன் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும் இந்த சந்திப்பு சென்னை அறிவாலயத்தில் ஏற்பாடாகி இருந்தது. முதலில் பத்து நிமிடம் என்கிற ஒப்புதலோடு ஆரம்பித்தது ஒருமணி பத்துநிமிடம் வரை நீடித்தது.

சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு (அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி) மற்ற பிற மாநிலங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் மீது எந்த அக்கறையும் காட்டியதில்லை என்பது வாஸ்தவம்தான். தில்லி, மும்பை மாநகரங்கள் தவிர, மற்ற மாநில நகரங்களில் உள்ள அமைப்புகள் பற்றி விவரம் அறியக் கூட எந்த அரசும் முனைந்ததில்லை. தில்லி மும்பையில் கூட, அங்குள்ள அமைப்புகளால்தான் அரசு சார்பில் செல்பவர்கள் மரியாதைப்படுத்தப்பட்டார்களே தவிர, அந்தச் சங்கங்களுக்கு எந்த வசதியும் மாநில அரசு செய்ததில்லை. இவை பொதுவாகவே தாயக தமிழக அரசு மீது உள்ள குற்றச்சாட்டு. தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் காப்பாளர்களாக செயல்படுபவர்கள் தமிழக அரசாங்கத்தைச் சார்ந்தவர்கள்தான். மேலும் தமிழர்கள் எந்த மாநிலத்தில் குடியேறி இருந்தாலும் அவர்கள் எண்ணத்தில் ஓங்கிநிற்பது கூட தமிழ்நாட்டு அரசியல்தான். எந்த நாட்டில் குடியேறினார்களோ அந்த நாட்டின் உள் விவகாரம் கூட தமிழகத்துக்கு அடுத்தபடியாகத்தான். ஓட்டுப் போடுவதற்காகவே பல தமிழர்கள் தாயகம வந்து செல்வதுண்டு.

இது நாள் வரை பிற மாநிலத் தமிழர்களின் நிலை எப்படி இருந்தாலும் இன்றும் இனி வரும் நாட்களிலும் இப்படியே இருக்கமுடியாது என்ற சூழ்நிலையில் அவர்கள் இருக்கும் கால கட்டமிது. ஆந்திராவில் சகோதரர்களுக்குள்ளேயே மோதலும் அடிதடியும் நடக்கும்போது, பக்கத்துவிட்டான் எப்படிப் போனால் என்ன என்ற மனோ நிலையில் உள்ள கால கட்டம் இது. என்னதான் தமிழக டி.வீக்கள் போட்டி போட்டுக் கொண்டு தமிழை உலகெங்கும் உள்ள தமிழர்களின் வரவேற்பறையிலும் படுக்கை அறையிலும் தங்கள் பாணியில் கொடுத்து (கெடுத்து) தமிழர்களை சொர்க்கபோகத்திலும், சோகத்திலும் பங்குபெறச் செய்தாலும், தமிழனுக்கு ஒரு பாதுகாவல் என வரும்போது அவைகளால் என்ன பாதுகாப்பைக் கொடுக்கமுடியும். கொஞ்சநஞ்சம் உள்ள பாதுகாப்பையும் டென்ஷனைக் கிளப்பி பயமுறுத்தி அழிக்கத்தான் செய்யும். இங்குதான் தமிழ்ச்சங்கத்தின் முக்கிய கட்டம் வருகின்றது. சங்கம் வைத்து தம் குடும்பத்தையும் உடைமையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் வருகின்றது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்ச்சங்கங்களின் நிர்வாகிகள் தமிழக முதல்வரை அவர்தம் இருப்பிடத்திலேயே சந்தித்திருக்கிறோம்.

எல்லா தமிழ்ச்சங்கங்களுமே தங்களுக்கென உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். சங்கங்களுக்கு நிலம் வாங்கிக் கொடுப்பதிலிருந்து கட்டடம் கட்ட நிதி உதவியும் கேட்டிருக்கிறார்கள். முதன்முதலாக கலைஞர் ஆவன செய்வதாக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களுக்கும் வாக்குறுதி அளித்துள்ளார்.

சந்தடி சாக்கில் விசாகப்பட்டின தமிழ்ச்சங்கத்துக்கு சொந்தக் கட்டடம் உள்ளது என்று சபையில் சற்று பீற்றிக் கொண்டவன் நான். ஆனால், அந்தக் கட்டடம்தாம் சொந்தமே தவிர தாங்கும் நிலம் சொந்தமில்லை. முப்பது வருடங்களுக்குப் பிறகு கட்டடத்தை ஆந்திர அரசாங்கம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது நில உரிமத்தை சற்று நீட்டிக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் நிலத்து விலைவாசிப் படி பார்க்கையில் எங்களால் நிலத்தை பணம் கொடுத்து வாங்கமுடியாது. தமிழக அரசு உதவி புரிந்து ஆந்திர அரசாங்கத்திடம் நிலத்தை இலவச பட்டா முறையில் வழங்க சிபாரிசு செய்யவேண்டும் என கேட்டுள்ளோம். மனு கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆனாலும் மனதுக்கு இந்த சந்திப்பு ஒரு மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது என்று சொல்லவேண்டும். முதன்முறையாக தாயக அரசாங்கம் தாய்த்தமிழ்ச் சங்கங்கள் மீது தயை காண்பிக்க ஆரம்பித்துள்ளது. நல்லதையே நினைப்போம்..



இன்னொரு மகிழ்ச்சி தனிப்பட்ட வகையில் கலைஞர் தந்த இனிப்பு. அதாவது என்னுடைய நாவலான எஸ்.எம்.எஸ். எம்டன் 22-09-1914 அவரிடம் வழங்கியபோது அந்தப் புத்தகத்தைத் தொட்டுக் காண்பித்து ‘பார்த்திருக்கிறேன்.. படித்தேன்.. ராஜ ராஜ சோழன் வருவாரே’ என்று விட்டு விட்டு சொல்லியதை என்னால் மறக்கமுடியவில்லை.இந்த நாவல் அவருக்குப் பிடிக்குமா.. பிடிக்காதா என்ற நோக்கத்தில் அலசாமல், அதி உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, 86 வயதிலும், புத்தகப் படிப்பும், அதை மறக்காமல் சொல்லும் பண்பும் என்னை ஏதும் அவரிடம் பேச வைக்காமல் கட்டிப்போட்டன என்றே சொல்லவேண்டும், கை கூப்பி நன்றி கூறுவதைத் தவிர.

Labels: , ,

6 Comments:

At 4:41 AM, Blogger R.DEVARAJAN said...

செய்திகள் நிறைவை அளிக்கின்றன;

தேவ்

 
At 10:18 AM, Blogger இரா. சதீஷ் குமார் said...

வாழ்த்துக்கள் திவாகர் சார்,

எம்டன் எந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்கிறார் என்று அறிந்துகொள்ள இந்த தமிழ்ச் சங்க சந்திப்பு ஒரு சாதனமாகியிருக்கிறது!

இந்தியாவிற்குள்ளேயே தமிழகத்தை தாயகம் என்று சொல்ல வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்...???!!!

 
At 8:04 PM, Blogger manoharan said...

உனது தமிழ் தொண்டு தொடரட்டும். வாழ்த்துக்கள்.

மனோகர்

 
At 9:34 PM, Blogger V. Dhivakar said...

சதீஷ்! நீங்கள் சுட்டுக் காட்டியது புரிந்தது. தாயகம் என்றால் இந்தியா தான் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையவே கிடையாது. ஆனால் இது மற்ற மாநிலங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்களைப் பற்றிய கட்டுரை. அவர்களுக்கு தாய் போல இருந்து காக்கவேண்டியவர்கள் தமிழக அரசாங்கம்தான். மத்திய அரசாங்கம் இல்லை. அதனால்தான் தாயக அரசு என்ற விதத்தில் குறிப்பிட்டேன்.

எம்டன் பற்றிய மகிழ்ச்சிக்கு நன்றி சதீஷ்!

திவாகர்

 
At 9:35 PM, Blogger V. Dhivakar said...

செய்திகள் செயல்படும்போது மேலும் பல மன நிறைவை பல தமிழருக்கு அளிக்கும் என நம்புகிறேன் தேவ் அன்னய்யா! நன்றி!

 
At 9:36 PM, Blogger V. Dhivakar said...

மனோகர் எனக்கு ஒரு லைவ் வைர் போல.. நன்றியெல்லாம் கிடையாது.

 

Post a Comment

<< Home