Tuesday, October 05, 2010

நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தக வெளியீடு



சாதாரணமாகவே நேரத்தில் ஆரம்பித்துவிடும் திரிசக்தி குழுமத்தின் விழாக்கள் எந்திரன் எனும் இந்திரன் அன்றுதான் வந்திறங்கி இந்தியாவெங்கும் மந்திரம் போட்டு மாயம் செய்ததால், சிறிது தாமதமாகவே தொடங்கியது. அந்த எந்திரன் திரைப்பட ரிலீஸ் கூட்டம் செய்த போக்குவரத்து நெரிசலில் சத்யம் தியேட்டர் நடுவே அப்படிஅப்படியே பலர் அகப்பட்டுக்கொண்டனர். அதில் திரிசக்திக் குழுமத்தின் தலைவரும் ஒருவர். இருந்தும் ஏழு மணிக்கு முன்னதாகவே விழாவினை ஆரம்பித்துவிட்டார்கள்.

இசைக்கவி ரமணன் நமக்கு எப்போதும் தருவது போல இனிய தேனுடன் கலந்த தமிழமுதத்தை தாராளமாக அள்ளித்தர, அடியேன் எழுதிய புத்தகம் கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி கையால் வெளியிடப்பட்ட போது நமக்கும் மிகப் பெருமைதான். அண்ணாச்சி வாய் நிறைய வாழ்த்துகளாகச் சொன்னார்கள். அவர் உள்ளத்திலிருந்து வந்த வாழ்த்துகள் என் உள்ளத்தை அப்படியே நிறைத்தன என்பதை சொல்லவும் வேண்டுமோ..

நாவலாசிரியனிடமிருந்து ஒரு மாறுபட்ட புத்தகமா என்று நண்பர்கள் பலர் கேட்டனர். கருத்தில் மாறுபட்டாலும், கதை கட்டுரையாக மாறுபட்டாலும் எழுத்துமுறையில் மாறுதல் ஏதும் இல்லை என்பதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். மொத்தம் முப்பது அத்தியாயங்கள். 120 பக்கங்கள். நண்பர் ஜீவாவின் உயிரோவியங்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உண்டு. பிரசண்டேஷன் நல்ல முறையில் உள்ளது என்றுதான் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதி, என் முதல் பிரதியையும் பெற்றுக் கொண்ட திரு சம்பத் அவர்கள் பாராட்டினார்கள்.

புத்தகத்தில் என்னுரை என்பதிலிருந்து ஒரு பகுதி:
**********
முதலிலேயே ஒரு வார்த்தை சொல்லிவிடுவது நல்லது. இப்புத்தகத்தின் நோக்கம் சாதாரண மனிதரும், எம்மைப் போன்ற பாமரரும் நம்மாழ்வாரின் பாடலில் உள்ள இனிமையையும் பெருமையும் உணரவேண்டும் என்பது மட்டுமே. ஏனெனில் நம்மாழ்வார் சுவாமியின் திவ்வியபிரபந்தப் பாடல்களை வரிக்கு வரி பாராயணம் செய்து பெரியோர் பலர் பல ஆண்டுகளாக பாடல்களின் ஆழங்களை ஆராய்ந்து உணர்ந்து உள்வாங்கி அதன் சாரத்தை நமக்கு பலவிதங்களில் விளக்கமாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றனர். அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் வீற்று இருக்கும் இந்தப் பாடல்களை வெகு சாதாரண முறையில் எழுதப்படும்போது கொஞ்சம் அச்சம் கூட தோன்றுவதுண்டு. இருந்தாலும் ‘யாமிருக்க பயமேன்’ எனும் அபயக்கரம் நமக்குத் தென்படுவதால் இந்த முயற்சியில் இறங்கி உள்ளேன். என் எழுத்தில் காணப்படும் குற்றம் குறைகள் அனைத்தும் என்னைச் சார்ந்ததே. நன்மை உண்டென்று தோன்றினால் அது சுவாமி நம்மாழ்வாரின் கருணையே..

இதோ உங்களுக்காக ஒரு அத்தியாயம் அப்படியே தருகிறேன்..
************
27. அவன் எப்படி இருப்பான்?


“அவன்.. அவன்.. என்று பொழுது முழுக்க, நாள் முழுக்க அவனையே நினைத்துப் பேசுகின்றாயே.. அந்த அவன் யார்.. எப்படி இருப்பான்.. என்ன சொரூபமடி? ஆண்மகனா.. அழகனா, வலிமையானவனா.. தினவெடுத்த தோள்கள் பொருந்திய வீரனா?”

“இல்லையடி இல்லை.. அவன் ஆணல்லன்”

“ஓஹோ.. அப்படியானால் அழகான பெண்ணாக வடிவெடுத்து சீவி சிங்காரித்து அன்ன நடையிட்டு, நாணத்தோடு காதலையும் பரிசாகத் தருகின்றானோ.. விட்டால் அவன் பெண்தான் என்று கூட சொல்வாய் போலுள்ளதே”

“இல்லை.. அப்படி நான் சொல்லமாட்டேன்.. அவன் பெண்ணில்லை..”

“விசித்திரமாக இருக்கிறதடி!.. வீரம் செறிந்த ஆணுமல்லன், அழகான மென்மையான பெண்ணுமல்லன்.. ஓஹோஹோ.. புரிந்து விட்டதடி.. இரண்டுமல்லாத அலியாக வருகிறானோ..”

“இல்லையில்லை.. அவன் அப்படியுமல்லன்..”

“பின் எப்படியாம்.. மனிதப் பிறவியே இல்லை என்பது போலப் பேசுகிறாயே.. அவனை எப்போதாவது பார்த்திருக்கிறாயா.. எனக்கு காண்பிப்பாயா..”

“ஊம்ஹூம்.. அவனைப் பார்க்கமுடியாதுதான்..”

“ஆனால் நீ அவனை அடிக்கடிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.. அப்படித்தானே?”

“ஆமாம்.. இதிலென்ன உனக்கு சந்தேகம்.. நிச்சயமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்..”

“ஓ.. புரிந்து விட்டதடி.. நீ பைத்தியமாகிவிட்டாய்.. உன் மனது குழப்பமாகி ஏதேதோ உளறத் தொடங்கிவிட்டாய்.. எங்குமே இல்லாத ஒருவனை, அவன் யார் என்று தெரியாமலே உன் மனதில் உள்வாங்கிக் கொண்டு சதா சர்வ காலமும் சிந்தித்ததால் பித்து பிடித்து என்னன்னவோ பேசுகின்றாய்..”

“ஆமாம்.. அவன் இல்லாத ஒருவன் தான்”

“ஆஹா.. இப்போதுதான் கொஞ்சம் உனக்குத் தெளிவு பிறக்கிறது..”

“இல்லாத ஒருவன் என்று நான் சொன்னது, உன்னைப் போல நம்பாதவர் கண்களுக்கு”

“என்னடி.. மறுபடியும் முருங்கைமரம் ஏறிவிட்டாய்.. விளக்கிச் சொல்லடி”

“அவனை யார் என்று எப்படி உனக்கு விளக்கிச் சொல்லமுடியும்.. அவன் அண்ட சராசரங்களிலும் வியாபித்து என்னுள், உன்னுள் என எங்கேயும் ஒளிந்திருப்பவன். அவனை மனதுள் நினைந்து, உணர்ந்து, நான் அவனை என் காதலனாக மனதுள் வரும்படி கேட்டுக் கொண்டேன். அவனை வரித்த நாளிலிருந்தே, நான் கேட்டுக்கொண்டபடி என் காதலனாகவே எனக்குக் காட்சி கொடுத்து என் மனத்தையும் பறித்துக் கொண்டு என்னையும் அவன் பாத கமலங்களில் சேர்த்துக் கொண்டவன்.. நீயும் அவன் பக்தையாக மாறி அவனை இந்த விதமாக வருகவென கேட்டிருந்தால் அவன் நீ கேட்டவிதமாகவே, அது எந்த விதமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அப்படியே வருபவனடி!. நீ அவனை நினைக்கக் கூட இல்லை.. ஆகையினால் அவன் அனுபவம் உனக்குக் கிடைக்கவில்லை தோழி! அவன் என் மனதுள்ளும் என் கண்ணெதிரேயும் இருந்த போதும் அவனை, அவன் ஆளுமையை எப்படியெல்லாம் ரசித்தேன், என்று எப்படி என்னால் விவரிக்கமுடியும்.. உன்னிடம் இவைகளெல்லாமே விளக்கிச் சொல்ல முடியாத விஷயங்களடி.. அந்த இன்பத்தை அனுபவித்தால் மட்டுமே இந்த உணர்ச்சிகள் எல்லாமும் உனக்கும் புரியும்..”

“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்காற்பேணும் உருவாகும் அல்லனுமாய்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே..”

இந்த உலகத்தில் காணப்படுகின்ற ஆண்களைப் போலும், பெண்களைப் போலும் இருவருமல்லாத அலியைப் போலும் பகவான் இருப்பவன் அல்லன். நம் ஊனக் கண்களுக்குக் காணப்படாதவன். அன்போடு அவனை நினைப்போருக்கு அவன் இருக்கிறான்.. அவன் மேல் அன்பில்லாதோருக்கு அவன் இல்லைதான். அன்புடையோர் அவனை வேண்டும்போதெல்லாம் அவன் வருவான்.. வேண்டாத மற்றவருக்கு அவன் அரியனுமாவான். ஈசன் என்னை அனுபவித்த விதத்தை கூறுதல் என்பது அவ்வளவு எளிதல்ல..
**********

புத்தகத்தின் விலை: ரூ.100
புத்தகப் பதிப்பாளர்கள்: திரிசக்தி பதிப்பகம்,
கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ், கிரிகுஜா என்க்ளேவ்,
58/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர்,
அடையாறு, சென்னை 600 020
தொலைபேசி 044 42970800

Labels:

7 Comments:

At 7:16 AM, Blogger meenamuthu said...

விழா இனிதே நடந்ததறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

படிக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்!ம்ம்..

 
At 7:48 PM, Blogger Vijay said...

வாழ்த்துக்கள், அடுத்து என்ன? சரித்திர புதினமா? அல்லது காதல் கதையா ? திகில் கதையா ? அல்லது அனைத்தும் கலந்த கலவையா ?

 
At 8:15 PM, Blogger manoharan said...

புத்தகத்தை படித்துவிட்டு பின் எழுதுகிறென்

 
At 8:00 AM, Blogger Kavinaya said...

அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்.

மீண்டும் வாழ்த்துகள்!

 
At 1:30 AM, Blogger geethasmbsvm6 said...

உன்னிடம் இவைகளெல்லாமே விளக்கிச் சொல்ல முடியாத விஷயங்களடி.. அந்த இன்பத்தை அனுபவித்தால் மட்டுமே இந்த உணர்ச்சிகள் எல்லாமும் உனக்கும் புரியும்..”//

அருமையா இருக்கு, உண்மையே, இறைவனின் இருப்பை அநுபவிப்பவர்களுக்கே அதன் ஆழமும், மன மகிழ்வும் உண்டாகும். அவ்வளவு எளிதும் அல்லவே அதை உணர்வதும். புத்தகம் படிக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.
விழா நன்கு நடந்தது குறித்து மகிழ்ச்சி!

 
At 9:48 AM, Blogger Aniruddh said...

dear sir,
my name is aniruddh; i was reading up on the sms emden for my own personal research and found out that you have written a novel on the same. It would be nice if you could send me your email id, it would be very helpful. i would also like to read your novel but sadly i cannot read tamil. thank you.
Aniruddh

 
At 8:57 AM, Blogger V. Dhivakar said...

Anirudh
Kindly send me your e mail id and your doubts. I will try my best to clear

 

Post a Comment

<< Home