Sunday, June 01, 2008

என்னுடைய சரித்திர நாவல்களைப் படித்தவர்களானாலும் சரி, வேறு ஒருவர் எழுதும் சரித்திர நாவல் படித்தாலும் சரி, சரித்திர நாவல் என்றாலே அவர்களில் பலர் கல்கியைத்தான் முதலில் நினைத்துக் கொள்வார்கள். இதைப் பெரும்பாலோர் என்னிடமே சொல்லி இருக்கிறார்கள்.

அமரர் கல்கி தமிழ் எழுத்துலகில் ஒரு மாபெரும் சாதனையாளர். 20ஆம் நூற்றாண்டில் கவிதைக்கு பாரதியார் என்றால், உரைநடைக்கு கல்கியை தாராளமாக உவமை காட்டலாம். பொன்னியின் செல்வன் என்னும் பெயரில் யாஹூ குழுமம் (1500 அங்கத்தினருக்கும் மேல்)ஒன்று அவர் பெயரை இன்னமும் அதுவும் இந்த 'கணினியின் அதிவேக காலகட்டத்திலும்' புகழ் பாடி பெருமை சேர்க்கின்றது என்றால் கல்கியின் எழுத்துகள் என்னென்ன மாயங்கள் செய்திருக்க வேண்டுமோ..


திரைஉலகில் சிவாஜி எப்படியோ நாவல் உலகில் கல்கி அவர்கள். சிவாஜியின் நடிப்புச் சாயல் இல்லாத நடிகர்கள் யாரும் இல்லை என்று சொல்லி விடலாம் .அதே போல கல்கி. ஆனால் கல்கிக்கு மிகப் பெரிய சிறப்பு ஒன்று உண்டு. அவர் எழுத்தாளர் மட்டுமல்ல,அரசியலில் செல்வாக்கு பெற்றவர், பத்திரிகை ஆசிரியர் மற்றும் உரிமையாளர். சினிமா கதைஆசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் [காற்றினிலே வரும் கீதத்தை மறக்க முடியுமா?] இசை விமரிசகர்,எழுத்தாளர் சங்கத் தலைவர்...இன்னும் இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்தனை வேலைகளை அவர் கவனித்தாலும் அவரின் தெய்வீக எழுத்து மற்றவர்களை அவர் பக்கம் சுண்டி இழுத்தது என்னவோ வாஸ்தவம்தானே.

சரித்திரமா, சமூகமா அரசியலா இல்லை நகைச்சுவையா...எந்தச் சுவையும் குறைவில்லாமல் வாசகரை அப்படியே சுண்டி இழுக்கும் கலை அவருக்கு தெய்வம் கொடுத்த வரம்தான். ஒவ்வொரு சமயம் அவரின் மற்ற வேலைகளைப் பற்றிப் படிக்கும்போதெல்லாம் இவரால் எப்படி பொன்னியின் செல்வனையும், அலை ஓசையையும் வாரம்தோறும் ஓய்வில்லாமல் இத்தனை அருமையாக எழுத முடிகிறது.. அவர் பேனாவில் இருப்பது மையா.. மந்திரமா என்றெல்லாம் தோன்றும்..

கல்கியின் சுற்றுச்சூழல் பற்றி கவனம் செலுத்தினால் தெரியும்..சதா பக்கத்திலேயே இருக்கும் சதாசிவம்-எம்.எஸ்.தம்பதியினர், இவர் கேட்கும்போதெல்லாம் ஆலோசனைத் தர தயார் நிலையில் இருப்பது போல மூதறிஞர் ராஜாஜி, அரசியல் பேச காங்கிரஸ் தலைவர்கள், அக்கம்பக்கம் போகக்கூட துணையாய் இருக்கும் விந்தன் போன்ற எழுத்தார்கள், பிரிண்டிங் பிரஸ் தொழிலாளர்கள், தனக்கென பெரிய குடும்பம்....ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏறத்தாழ இருபத்துநான்கு மணி நேரமும்..

அப்படியும் அவரால் நூற்றுக் கணக்கான சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், விமர்சனங்கள் இவ்வளவையும் மீறி காலத்தால் வெல்ல முடியாத புதினங்கள்... பொன்னியின் செல்வன் என்ன சாதாரண சரித்திர நாவலா... காலா காலத்துக்கும் பேசிக் கொண்டிருக்க வேண்டிய காவியம்..உரைநடைக் காவியம்..

அந்த பொன்னியின் செல்வனுக்காக எத்தனை புத்தகங்களை இவர் படித்திருக்கவேண்டுமோ எத்தனை கல்வெட்டுகளை ஆராய்ந்தாரோ, சோழர்கள்,பாண்டியர்கள் மற்றும் சிங்களவர் காலம் பற்றி அடியோடு புரட்டிப் போட்டு அலசி ஆராய்ந்து அதற்குப் பிறகுதான் அவர் எழுதி இருப்பார்..அதுவும் எத்தனை - ஐந்து பாகங்கள்.. நிச்சயம் இமயமலையைப் போலத்தான்.

இப்போதும் 'பொன்னியின் செல்வன்' குழுமத்தில் புதிதாக சேருபவர்கள் வந்தவுடன் கேட்கும் முதல் கேள்வி "யார் சார் ஆதித்த கரிகாலனைக் கொன்றது" என்பதுதான். - பாவம் குழும மாடரேட்டர்கள்.. பொறுமையை சற்றும் கைவிடாமல் ஒவ்வொருமுறையும் இந்த ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லும் அழகே தனிதான்..!!

கல்கி உரைநடையில் நாடகம் ஒன்றுதான் எழுத வில்லை என்று நினைக்கிறேன். ஆனால் விமர்சக உலகில் சுப்புடுவுக்கு முன்னோடி. புதுமைப்பித்தன், மீ.ப.சோமு, சோமாஸ் போன்ற எழுத்தாளர்களை மிகப்பெரிதும் ஊக்குவித்தவர்..வெறும் பாடல் ஆசிரியர் மட்டுமல்ல..இசைஞானி..ஒருவேளை சினிமாவில் நடித்திருந்தால் கூட புகழ் பெற்றிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை... எத்தனைக்கெத்தனை எழுத்துலகத்தில் நண்பர்கள் பலமோ அத்தனைக்கத்தனை எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டவர்...மணிக்கொடி வா.ரா., சுவாமிநாதன் சர்மா இவர்களெல்லோருமே கல்கிக்கு எதிரணி. ஆனால் எதிர்ப்பையும் தன் வாழ்வில் ஒரு பகுதியாக எதிர்கொண்டார்..எத்தனை பரபரப்பான வாழ்க்கை கல்கியோடையது?...

அவ்வப்போது நினைப்பதுண்டு.ஒரு வேளை இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் கல்கி இருந்திராவிட்டால் 54 வயதென்ன.. இன்னும் ஒரு இருபது வருடங்களாவது அதிகம் அவர் உயிர் வாழ்ந்திருக்கலாம். தமிழ்நாட்டு சரித்திரத்து விடிவெள்ளிகளான மகேந்திர பல்லவனையும் ராஜராஜசோழனையும் தமிழ் வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவர், இவர்களுக்குப் பிறகு வந்த இன்னொரு விடிவெள்ளியான கிருஷ்ணதேவராயனைப் பற்றியும் ஒரு மெகாத் தொடர் நிச்சயம் எழுதி முன்னிலைப் படுத்தி இருப்பார். அது பொன்னியின் செல்வனை விட மிகப் பெரிதாகப் பேசப்பட்டிருக்கலாம். 39 வயதுக்குள் முடிந்துவிட்ட பாரதியின் வரலாற்றில் அவனுக்கு காவியம் ஒன்று படைக்கவில்லையே என்ற வருத்தம் இருந்திருக்கலாம்.. அதைப் போலவே ஐம்பத்து நான்கு வயதில் காலமான கல்கிக்கும் தமிழக பிற்கால சரித்திர முழு வரலாற்றையும் கதை மூலமாக தமிழர்களுக்குச் சொல்ல முடிய வில்லையே என்ற வருத்தமும் இருந்திருக்கலாம்தான்.

போகிற போக்கில் ஒன்றைச் சொல்லிவிட்டுப் போகிறேன்..என்னுடைய ஆதர்ஸ எழுத்தாளர் யார் தெரியுமோ..'தேவன்' அவர்கள்தான். இவர் சரித்திரக் கதை மட்டுமே எழுதவில்லை. மற்ற வகையில் இமயமலையின் தென்பகுதி கல்கி என்றால் வட பகுதி தேவன்.
தேவனைப் பற்றி சொல்ல வேண்டுமன்றால்

http://vamsadhara.blogspot.com/2007/06/5-1957.html

திவாகர்

Labels: ,