Saturday, May 10, 2008

திருவேங்கடவனைத் தொடலாமா?

திருமலைத் திருடன் பற்றிய தன்னுடைய விமர்சனத்தில் கொரியாவைச் சேர்ந்த டாக்டர் நாராயணன் கண்ணன் 'திருமலைக் கோவில் கர்ப்பக் கிருகத்தில் உள்ள திருவேங்கடவன் சிலையினை கதையின் நாயகநாயகியர் இருவரும் தொடுவதாக எழுதிய விதம் ஒரு பாபகரமான செயல்' என் ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டு சரியா என்பதற்கு நான் அவசியம் பதில் எழுதியே தீரவேண்டும் என்று என்று சில நன்பர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.

என் விஜயவாடா நண்பனோ மிகக் கோபத்துடன் ஒரு கடிதம் எனக்கு எழுதி இருந்தான். அதில் கோவில் என்ன ஒரு வர்க்கத்தினரின் சொந்தச் சொத்தா? என்று கேள்வியும் எழுப்பி இருந்தான். தானே டாக்டர் கண்ணனுக்குப் பதில் எழுதுவதாக என்னிடம் அனுமதி கேட்டான். நான் மறுத்துவிட்டேன்.(அது அவர் சொந்தக் கருத்து).

காரணம், விமர்சனம் என்று வரும்போது அதை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் நல்லது என்று அவனுக்கு பதில் போட்டுவிட்டேன். ஆனால் ஏன் அப்படி 'அதாவது திருவேங்டவன் சந்நிதியில் கருவரையில் அவன் சிலையையே தொட்டுப் பேசுவதாக காட்சி எழுதப்பட்டது, ஏன் ராமானுஜர் திருவேங்கடவனைப் பல தெய்வங்களின் உருவாகக் கடைசியில் பார்ப்பதாக முடிக்கப்பட்டது என்பதற்கு என் பதில் தேவைதான்.

முதல் கேள்விக்குப் பதில்:

ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட கோயில்களில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் (பிராம்மணர்கள், அல்லது ஆச்சாரியர்கள் அல்லது பிராமாணர் அல்லாத பூசாரிகள்) மட்டுமே சிலைகளைத் தொடவோ அலங்காரம் செய்யவோ அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படி அனுமதி கொடுத்தாது யார்? அல்லது எந்த ஆகமத்தில் இப்படி எழுதப்பட்டுள்ளது' என்பதெல்லாம் நமக்குத் தெரியாதுதான். ஒருவேளை அத்தகைய அனுமதி பெறாதவர் சிலையைத் தொட்டுவிட்டால் பாவம் பற்றிக் கொள்ளும் என்பதெல்லாம் நம்மை (என்னை) பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளமுடியாததுதான். கடவுள் எல்லோருக்கும் பொது. அதுவும் திருமலைத் தெய்வம் தன்னந்தனியனாகவே பற்பல நூற்றாண்டுகள் அதே மலையில் கோயிலோ சுற்றுச் சுவர்களோ இல்லாமல் 'நின்ற நெடுமால்' என்று சிலப்பதிகாரத்திலே இளங்கோவால் போற்றப்படுபவன். அவன் தனியனாக நின்றபோது இந்த ஆகமச் சாத்திரங்கள் எங்கே போனது என்றும் நமக்குத் தெரியாது. மலைவாசிகளின் வழிபடுதலை முதலாழ்வார்கள் போற்றிப் பாடும்போதும் சரி, அதற்கும் முன்பு தொண்டைமான் பரம்பரைகளின் பூசைகளையோ அந்த திருமலைவாசிகளின் பூசைகளையோ ஆகம சாத்திரங்கள் தடுக்கவில்லை - ஒருவேளை அந்தச் சமயம் ஆகமங்கள்படி கோவில் அமைக்கப்படவில்லை என சிலர் வாதிக்கவும் செய்யலாம். இவைகளில் நாம் கலந்து கொள்ள வேண்டாம்.

கடவுள் சிலைகளை தங்கள் இல்லத்துள் வைத்து வழிபடும்போது அதை மற்றவர்கள் வந்து தொட்டு வணங்கினால் 'அதைத் தொடாதே' என்று சொல்ல அந்த இல்லத்தாருக்கு உரிமை உண்டு. ஆனால் பொதுவில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் ஆதாரமாகவும் மனத் திருப்தி தரும் தெய்வச் சிலைகளை அவ்வாறு 'தொடாதே'' என்று சொல்வது குறிப்பாக தென்னகக் கோயில்களில் மட்டுமே வழக்கத்தில் உள்ளன.

வட மாநிலங்களில் உள்ள சிவலிங்கங்களையோ, சுவாமி சிலைகளையோ தொட்டு வணங்குவது சாதாரணமான விஷயம்தான்.

சரி.. நான் ஏன் கதையின் முடிவில் கதாநாயகி திருவேங்கடவனைத் தொடுவதாக எழுதினேன் என்பது அல்லவா கேள்வி?. எனக்கு இதற்கும் தெய்வத் திருவாய்மொழி எழுதிய 'நம்மாழ்வார்' சுவாமி தான் உதவி செய்ய முன்வந்தார். 'பற்றுடை அடியர்க்கு எளியன்' என்று இறைவனைப் புகழ்வதும் அந்த எளியன் என்பவன் என் நாயக நாயகியருக்கும் படு எளியனாக இருப்பதுவும்தான் காரணம். 'பற்றுடை அடியருக்கு எளியன், மற்ற பிறர்க்கு அரியன்' என்று நம்மாழ்வார் சொல்லும் அந்த அரிய பொருளை மனதில் வைத்துப் படித்தால், படித்தவர் வீர வைணவராக இருந்தாலும் அதை அப்படியே ஏற்று கொள்வர்.

அதிலும் கதாநாயகியில் நிலை அந்தக் கட்டத்தில் மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. தான் செய்த பாவத்துக்காக மனம் வருந்தி அந்தத் தவற்றைத் தான் ஒருத்தி மட்டுமே திருத்தினால்தான் தனக்குத் திருப்தியாக இருக்கும் என்று பிடிவாதமாக ஒரு பிராயச்சித்த்த்தில் அவள் கோயில் கர்ப்பகிருகத்தில் வருவதாக எழுதப் பட்டுள்ளது. இங்கே 'பகவத் கீதை' சொல்லும் 'எவன் தான் செய்த பாவத்தை நினைத்து மெய்யுருக வருந்தி மன்னிக்க வேண்டுகிறானோ அவனுக்கு உடனடியாக அந்தப் பாவத்தின் கொடிய வினைப்பலனிலிருந்து விலக்கு அளிக்கப்படும்' என்ற மெய்ம்மைப் பெருவார்த்தையும் கையாளப்பட்டுள்ளது.

இன்னும் ஒன்றை அந்தக் கதையில் கவனிக்கவேண்டும். அந்தக் கதாநாயகி கோவிந்தனுடன்
பேசுகிறாள். முதலில் அவள் வார்த்தைகளில் பச்சதாபமும் பரிவும் தான் செய்த பாவங்களின்
கொடுமையையும் தவறு என்பதாக திருவேங்கடவனிடம் சொல்வதாக வரும். அந்த வேங்கடவன் அதற்கெல்லாம் அசையமாட்டான். அவளுக்கு எந்த உதவியும் கிடைக்காதுதான். ஆனால் கடைசியில் அவள் அந்தத் திருவேங்கடவனின் வலது கை அவன் பாதம் காண்பிப்பதையும் அவன் திருவடிகளின் சரணாகதி தத்துவத்தையும், அங்கு கிடந்த
துளசி மற்றும் விபூதி சம்படத்தையும் காட்டுவதாக உணரும்போதுதான், அவள் பரிபூரண சரணகதியுடன் அவன் பாதம் சேவித்து அவன் காட்டிய வழியில் சங்கு சக்கரம் பொருத்துவதாக கதை அமைகிறது.

இது பலருக்குப் பிடித்துள்ளது என்பதை நான் அறிவேன். ஏனெனில் இறைவனின் ஏகத் தத்துவத்தினை அனைவரும் உணரவேண்டும்.. உணர்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பல வைணவப் பெரியவர்கள் இந்த முடிவுக்கு ஆதரவாக ஆசிகள் வழங்கியுள்ளார்கள். 'தி ஹிந்து' விமர்சனத்தில் கூட மிகப் பெருமையாக இது பேசப்பட்டது.
'வைஷ்ணவ ஜனதோ' பாடலின் வரிகளுக்கான அர்த்தம் இந்தக் கதையின் முடிவில் சொல்லப்பட்டது என்று கூட எழுதினார்கள்.

சரி.. இரண்டாவது கேள்வி: ராமானுஜர் திருவேங்கடவனை ஏன் பலதெய்வங்களின் சேர்க்கையாகப் பார்த்ததாக நான் முடிக்கவேண்டும்? இந்தப் பதில் சொல்வதற்கு முன் நான் ஒன்றை இங்கே குறிப்பிடவேண்டும். கதையில் வரும் அத்தனை பாத்திரங்களின் மனம் மூலாமாக கதாசிரியர் பேசியிருக்கிறார் - ஆனால் உடையவர் ராமானுஜர் மனம் மூலம் மட்டும் பேசவில்லை - ஏன்? உடையவர் ஒரு காரணப் பிறவி.. மாகாத்மா.. அந்த ஆத்மா என்ன நினைக்கிறது என்பதை ஆசிரியர் எப்படி அறிவார் - என்ற நோக்கிலேயே 'உடையவர் இப்படி நினைக்கிறார் என்பதாகக் கூட கதையின் எந்தப் பகுதியிலும் நான் சொல்லவில்லை.

ராமானுஜர் தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் நம்மாழ்வார் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். நம்மாழ்வார் ஒரு மாபெரும் சமதர்மப் பெரியார். சிவனும் விஷ்ணுவும் அவர் கண்களுக்கு ஒன்றுதான். அதை எத்தனையோ பாடல்களில் இந்த அரிய ஞான விளக்கத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்.அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.

"ஒளி மணிவண்ணன் என்கோ .. ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ.. நான்முகன் என்கோ.."

இந்த நம்மாழ்வார் பாடலை அந்தச் சமயத்தில் உடையவர் ஏன் பாடுகிறார் என்று அங்கு உடையவருடன் இருந்த அவரது நண்பர் சைவ ஆசிரியர் தன் மனதுக்குள் கேள்வியாக கேட்டுக்கொண்டாலும் ' திருவேங்கடவன் அவன் அவன்தான்" என்று ஆசிரியர் உணர்வதாக கதை முடிகின்றது.

இன்னும் ஒன்று. ராமானுஜர் எப்படி தைரியமாக ஆண்டவனிடமே 'இவன் சிவனா அல்லது திருமாலா' என்று விடமுடியும்? அவரால் விடமுடியும் - ஏனெனில் அவரால் 100% கடவுளை நம்பமுடியும். சாதாரணமனிதன் அப்படி விடமாட்டான். தான் ஏதாவது செய்தால் மட்டுமே ஆண்டவன் இருப்பதை மற்றவருக்கு உணர்த்தமுடியும்' என தன் மீது பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஆண்டவனை முழுதும் நம்பாமல்அவஸ்தைப் படுகிறான். ஆண்டவன் இருக்கிறானா இல்லையா என்பதை நிரூபிப்பது அந்த ஆண்டவன் கடமை என்பதில் உடையவர் தெளிவாக இருக்கிறார். இதுகூட நம்மாழ்வாரின் பாடல் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டதுதான்

(ஆணல்லன்.. பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன்..காணலும் ஆகான்... உளனல்லன்.. இல்லையல்லன்..பேணுங்காற் பேணும் .. உருவாகும்.. அல்லனுமாம்.- 2.5.10)மூதறிஞர் ராஜாஜி கூட இப்படித்தான் எழுதி இருக்கிறார். (முன்னுரை)

ஆகையினால் ஒவ்வொருவர் அவரவர் பார்வையில் விமர்சனங்கள் எழுதுவதற்கு உரிமை உள்ளது. பெரியாரின் சீடரும் நண்பருமான திருநின்றவூர் கோவி (Ex-P.I.B - இவரது மனைவி ஹேமாவும் பெரியாரின் சிஷ்யை.. இவர் 'மணியம்மை பெரியார் பெயரில் திருநின்றவூரில் பள்ளிக்கூடம் நடத்தி இலவச சேவை செய்கிறார்') இந்தப் புத்தகத்தை ஏழுமுறை படித்ததாகவும் என் மேல் ஏன் வழக்குப் பதிவு செய்யக் கூடாது எனக் கேட்டிருந்தார். (ஏழு முறை அவரைப் படிக்க வைத்ததற்காக அல்ல - நாத்திகவாதம் கதையில் ஒடுக்கப்பட்டதை கண்டித்து).ஆனாலும் உண்மை எப்போதாவது ஒருநாள் அதுவும் நிதானமாக ஆராயப்படும்போதும், ஒருநோக்கு பாராமல் நடுநிலை வைத்து நோக்கும்போதும்
நிச்சயமாக புரிபடும்.

திருவேங்கடவன் திருத்தாள் போற்றி.

திவாகர்