Monday, September 05, 2011

5.மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா, பின்னவரா



சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க


மாணிக்கவாசகரின் மேற்கண்ட பாடலைக் கவனித்தால் போதும். சித்தத்தால் எத்தனைதான் சிந்தித்தாலும் அந்த இறைவன் நமக்கு வரக்கிடைக்கமாட்டான். அதே சமயத்தில் சாதாரண எளியவகையில் பக்தி செலுத்தினால் போதும். அவனே, தானாக வந்து நாம் விரித்துள்ள பக்தி வலையில் சிக்கிக்கொண்டு நமக்கு எல்லா வகையிலும் துணை நிற்பான். அவன் ஒருவனே இறைவன்.

இதுதான் மாணிக்கவாசகரின் எளிமையான தெளிவான தெய்வக் கொள்கை. ‘அன்பினில் விளைந்த ஆரமுதை’ என இறைவனை அழைக்கும் இந்த மாமனிதரை அன்பெனும் வளையத்தில் மட்டுமே கட்டிப் போட்டுக் காண முடியும். இப்படிப்பட்ட மகானை எந்த மதத்திலும், எந்தப் பிரிவிலும் சிக்க வைக்க முடியாது.

மாணிக்கவாசகர் பக்தியோகத்தை மட்டுமே பரப்ப வந்த மகான். மாணிக்கவாசகர் ‘காளாமுக சைவப் பிரிவினர் என்பார் சிலர். காளாமுகச் சைவத்தின் ஒரு பிரிவின் மரபு ராஜராஜ சோழனாலும் அவன் மகனாலும் போற்றப்பட்டு வந்தது என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. காளாமுகச் சைவத்தின் ஆதி முகம் குஜராத்திலும் காசியிலும் காணப்பட்டுப் பின் பல நூற்றாண்டுகள் கர்நாடகத்தில் போற்றப்பட்டு வந்தது என்பது சரித்திரபூர்வமான தகவல்கள். குஜராத்தில் உள்ள லகுளீசர்கள் சைவத்தின் இந்தப் பிரிவில் ஆகமங்களை சீரமைத்தார்கள். ஆனாலும் இந்த அமைப்பு ஒரு சில விஷயங்களில் மட்டுமே தமிழ் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தது என்பதற்கு ராஜராஜசோழன் கல்வெட்டுகள், ராஜேந்திர சோழன் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். ராஜராஜ சோழன் ‘தெய்வமான’ சமாதி வழிவகைக்கு இந்த சமய ஆகமங்கள் உதவின என்பதையும் இந்தக் கல்வெட்டுச் செய்திகள் விவரிக்கின்றன. இன்று இன்னமும் காசியில் காளாமுகப்பிரிவினர் இறுதிச் சடங்குகளுக்கு மிகவும் உபயோகப்படுகின்றனர். விஷயம் தெரிந்த சைவச் சான்றோர்கள் இம்முறையை தம் இறுதிக் கால நிகழ்வுக்கு இன்னமும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் வாஸ்தவமே, ஆயினும் மாணிக்கவாசகரை இப்பிரிவில் சேர்க்க எந்த வகையிலும் அவர் பாடல்கள் மேற்கோள் காட்டவில்லை.

மாறாக வேதமதத்து கன்ம காண்டத்தை விமர்சிக்கும் வார்த்தைகள்தான் உள்ளன. போற்றித் திருவகலில் மாணிக்கவாசகர் மனிதர்களாகிய நாம் பிறந்து வளர்ந்து அப்படி வளரும்போது நமக்கென இயற்கையாக வரும் கஷ்டங்களையெல்லாம் தவிர்த்து முடிவில் தெய்வத்தைத் தொழும்போது நம்மை மதமென்னும் மாயாசக்திகள் எப்படியெல்லாம் நெருக்குகின்றன என்று சொல்வார்:

தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி
முனிவிலாததோர் பொருளது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின

விரதமே பரமாக வேதியருஞ்
சரதமாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதமென்னுஞ்
சண்டமாருதஞ் சுழித்தடித்தாஅர்

”தெய்வம் என்ற சித்தம் மனதில் தோன்றியவுடன், அது என்ன என்பதற்காக நம் மனதை ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறு பாதையில் இழுத்துச் செல்லத் தொடங்கினர். வேதத்தில் உள்ள கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட விரதங்களும், யாகங்களுமே பரமானது, முடிவானது என்று வேதியர்கள் சாத்திரங்களாகக் காட்டுவர். ஒவ்வொரு சமயவாதிகளும் தாம் கொண்ட சமயமே உண்மையான சமயம் என்பதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி அரற்றுவர். மிகுதியான மாயாவாதம் என்கிற வாதங்களால் பெரும் சூறாவளிபோல சுழன்று நம் அறிவை ஆக்கிரமிப்பார்கள்” (சுருக்க விளக்கம்).

பார்த்தீர்களா!. இது இன்றளவும் உண்மைதானே.. எந்த மதமும் தன்னை உயர்த்திக் கொள்ள விரும்புவது எந்தக் கால கட்டத்திலும் இருப்பதுதான் என்பது மேற்கண்ட மாணிக்கவாசகரின் மாணிக்கவரிகளே சாட்சி.

சாக்கியம், சமணம், வேத மதங்களில் உள்ள வேறு வேறு பிரிவுகள் (மீமாம்சை, நாத்திகம், உலகாயுதம்) பாரதம் முழுவதும் மிக அதிகமான அளவில் தங்களுக்குள் சண்டையிட்ட காலங்கள் கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரைதான். பாரதம் என வரும்போது இங்கு தமிழகத்தைச் சேர்த்தே பேசுகின்றோம் என்பதை நினைவில் கொள்க.

நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர்;

உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாபே தத்த கடுவிட மெய்தி

(நாத்திகம் என்பது தமிழகத்தில் வேரூன்றிய ஒரு கொள்கையாகும். சமணர்களை நாத்திகர் என வேதியர் அழைத்தனர். பிராம்மணர்களைக் கண்டாலே ‘விப்ரக்‌ஷயம்’ (பிராம்மணர்கள் அழிக) என்று அக்காலத்தில் சமணர்கள் சொல்லி வந்தார்கள். உலோகயதம் என்பது நாம் கண்களால் பார்க்கும் சம்பவங்களை மட்டும் நம்பி அதனோடு உலாவுவது, அதையே உலகம் என்று நம்புவதும் அதன்படி கண்டமேனிக்கு நம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்வதும் ஆகு, இதை, ஒரு கொடிய நாகத்தின் விஷத்துக்கு ஒப்பாகும் என்கிறார் வாதவூரர். ஏழாம் நூற்றாண்டு மகேந்திர பல்லவனின் நாடகமான மத்த விலாசம் படித்தால் அப்போதைய தமிழகக் காலகட்டத்தை ஓரளவு உணர்ந்துகொள்ளமுடியும் – பௌத்தம் வேத மார்க்கத்திலிருந்து திருடப்பட்டது என்பான் அவன்.)

கி.மு ஐந்தாம்-நான்காம் நூற்றாண்டுகளில் பாரதத்தில் வடபகுதியைஆண்ட நவ நந்தர்கள் ஆட்சிக்காலத்திலேயே சமயங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிவிட்டன. வேதமதம் கூட பல பிரிவுகளைத் தன்னகத்தே கொண்ட சூழ்நிலையும், ஒவ்வொரு பிரிவும் தம் தம் பிரிவுதான் உயர்ந்தது என்ற கொள்கையை மற்றவர் மேல் சுமத்திக் கொண்டு வாழ்ந்த காலகட்டங்கள் அவை. பின் வந்த சாணக்கியர் எனும் அந்தணரால் மௌரிய வம்சம் ஸ்தாபிக்கப்பட்டாலும் மன்னர்கள் அனைவருமே தத்தமக்குப் பிடித்த மதத்தைக் காப்பாற்றுவதிலேயே சித்தமாக இருந்தனர். மௌரிய அரசன் அசோகன் புத்த மதத்தை கலிங்கப்போரின் முடிவில் தழுவியதாலும், கலிங்கத்தை ஆண்டு வந்த சமணமத அரசனையும், மக்களையும் கொன்றதாலும் இதுவும் ஒரு காரணமாக பௌத்த சமண வாதிகளிடையே பெரும் பிளவை ஏற்படுத்தின. போர்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்தன. ஒரு போரின் முடிவை உதயகிரியின் சமணர்கள் கல்வெட்டு (முதலாம் நூற்றாண்டு) இப்படிக் குறிக்கிறது “எதிரிகள் முடிவாக வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்டனர்” . இங்கு எதிரிகள் எனக் குறிப்பிடப்படுவது பௌத்தர்களையாகும்.

சமணம் தென்னகத்தில் கர்நாடக மலைகளில் மிகப் பலமாக பிம்பிசாரர் மூலமாக கி.மு. நான்காம் நூற்றாண்டில் அடித்தளம் போடப்பட்டு பின்னர் வலுப்பெற்றதாக சமண சரித்திரம் சொல்கிறது. அதே போல கிருஷ்ணை நதிக்கரையில் தென்பக்கத்தை ஆண்ட சாதவாகன அரசர்கள் (கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வரை) பௌத்த மதத்தை முழுமையாகத் தழுவி மிக வேகமாகப் பரப்பியது என்பதும் சரித்திர பூர்வமான ஆதாரமான செய்திகள்தான். நாகார்ஜுனர் எனும் அந்தணர் பௌத்தத்துக்கு மாறி மற்றவர்களையும் மாற்றி பௌத்தத்துக்குப் புது பொலிவு தந்தார். கி.பி.ஒன்றாம் நூற்றாண்டில் சிறியதாக சிலிர்த்து எழுந்த பல்லவபரம்பரை வேத மதத்தை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்ததையும் அவர்கள் துரோணரின் மகனான அசுவத்தாமரை தம் ஆதி பிதா என்றும் அதனால் அவர்கள் வம்சமே பிராம்மண-க்ஷத்திரிய வம்சம் என்றும் சொல்லிக்கொண்டது. அதே சமயத்தில் கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கொடி கட்டிப் பறந்த குப்த வம்சம் மிகப் பலமாக இருந்து பாரதத்தில் வேத மதத்தை ஒரு தூக்கு தூக்கி எட்டாத உயரத்தில் வைத்துப் போற்றியது.

மேற்கண்ட சரித்திர ஆதாரநோக்கில்தாம் நாம் மாணிக்கவாசகரின் ’போற்றித் திருவகவல்’ குறிப்பிட்ட மேற்கண்ட வரிகளை நோக்கவேண்டும். பௌத்தம் வட தமிழகத்தில் மட்டுமல்லாது சிங்களத்தீவினில் மிக அதிகமான அளவில் பரவியதும், சமணம் காஞ்சி, மதுரை போன்ற இடங்களில் மெல்ல மெல்லப் பரவி சான்றோர்களைத் தோற்றுவித்து அவர்கள் மூலம் படிப்படியாக தமிழகத்தில் வளர்ந்து வந்த காலத்தையும் நாம் நோக்கவேண்டும். கர்நாடகப்பகுதிகளில் சமணமும், தென் ஆந்திரப்பகுதியிலும், கீழைக் கடற்கரைப்பகுதிகளில் பௌத்தமும் நன்றாகப் பரவின என்பதற்கு இன்றளவும் பௌத்தச் சிலைகளும், இடிந்த பள்ளிகளும் கீழக் கரையோர மாநிலங்களில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன (இன்று ஆந்திர மாநில சுற்றுலாக் கொள்கையில் பௌத்த சுற்றுலா மூலம் வெளிநாட்டினரை இழுக்கும் திட்டம் என்ற ஒன்று இருக்கிறது).

மாணிக்கவாசகர் புத்தபிக்குகளுடன் வாதம் செய்த நிகழ்ச்சி அவர் திருச்சாழல் பாடல்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இலங்கை அரசன் ஒருவன் தன் புத்த பிக்குகளுடன் பெருமளவில் தில்லை வந்து, வாதத்தில் ஈடுபட்டான். வாதத்தின் முடிவில் புத்த பிக்குகளின் கேள்விகளுக்கு, அவர்களின் மன்னரோடு வந்திருந்த மன்னரின் சிறு மகள் அதுவும் ஊமை, அவள் மூலம் பாடல்களாக பதில் கொடுத்ததே திருச்சாழல் பாடல்கள். மாணிக்கவாசகர் ஊமையைப் பாடவைத்தது அந்த மன்னனுக்கு சந்தோஷத்தை அளித்ததோடு மட்டுமல்லாமல் இறைவனின் புகழுக்கு முன் மதங்களின் கோட்பாடுகள் எடுபடாது என்பதையும் எடுத்துக் காட்டிய பாடல்களாக அமைந்தது. புத்த பிக்குகளின் கேள்வியும், அதற்கான பதிலும் இவ்வாறு அந்த ஊமைப் பெண்ணிடமிருந்தே வரும். இருபது பாடல்களில் ஒரு பாடலை மட்டும் போடுகிறேன் (மாதிரிக்காக).

கோயில் சுடுகாடு
கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங்
கற்பொடிகாண் சாழலோ.


(சுடுகாட்டைக் கோயிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்டான். அன்றியும் அவனுக்குத் தாய் தந்தை யரும் இல்லை; இத்தன்மையனோ உங்கள் கடவுள்? என்று புத்தன் வினாவ, எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தையர் இல்லாவிடினும், அவன் சினந்தால் உலகம் முழுவதும் கற்பொடியாய் விடும் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்) நன்றி தேவாரம் தளம்.

இந்த வாதம் நடந்த காலத்தை நோக்குகையில் மதங்களுக்கிடையே மிக அதிகமான அளவில் வாதங்கள் நிகழ்ந்த காலமாகத்தான் தெரிகிறது. அதே சமயம் தில்லையில் இந்த வாதம் நடந்துள்ள நிலையில் தமிழ் அரசாங்கம் எந்த நிலையில் அந்தப் பகுதியில் அன்று இருந்தது, யார் ஆண்டனர்.. சிங்களர்கள் தங்கள் மதகுருவை மீறி எதுவும் செய்யமுடியாத நிலை (மகாவம்சம் மூலம்) அன்றும் இன்றுமிருக்க, இந்த அரசன் ஏகப்பட்டவர்களோடு பிக்குகளுடனும், தன் ஊமை மகளோடும் (காவல் படை வீரரும் இருந்திருப்பர்) எப்படி தமிழகம் வந்தான் எனக் கேள்வி எழும்பும். மகாவம்சம் எனப்படுவது சிங்கள நாட்டு சரித்திரம் என்பதை விட புத்த புக்குகள் அவர்களைச் சார்ந்த மன்னவர்கள் கட்டிய விஹாரங்கள் வரலாறாக இருப்பதால் மதத்துக்கெதிரான செய்திகள் (http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/) அங்கு கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க, தமிழக வரலாற்று இலக்கியங்கள் இந்த சிங்கள மன்னர்களின் தமிழக வருகை பற்றி ஏதேனும் சொல்கின்றதா என்று பார்க்கலாம்.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ, தன் அண்ணனான சேரன் செங்குட்டுவன் பத்தினித்தெய்வத்துக்குக் கோயில் எழுப்பியபோது கயவாகு எனும் மன்னன் அங்கு சோழ பாண்டியரோடு வந்ததாக எழுதியிருக்கிறார் (சிலம்பு 23; 134--7.). சிலம்பில் சொல்லப்படுகின்ற கயவாகு இலங்கை திரும்பிச் செல்லும்போது சக்தி வழிபாட்டையும் இலங்கைக்கு எடுத்துச் சென்றதாக சிலம்பில் மட்டுமல்லாமல் சில சிங்களக் குறிப்புகள் கூட உள்ளன. (http://vattappalaikannaki.com/history1.php) இரண்டு இலங்கைக் கயவாகு மன்னர்கள் பற்றி இலங்கைக் குறிப்புகள் உள்ளன. ஒரு கயவாகு முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்பதும், இரண்டாம் கயவாகு 12ஆம் நூற்றாண்டு என்பதும் தெரிய வருகிறது. (http://www.varalaaru.com/Default.asp?articleid=573).

இன்னொரு தமிழ்க்குறிப்பொன்று கயவாகு மன்னர் (http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_neyttanam.htm திருநெய்த்தானம் எனும் தலத்தில் (திருவையாறு அருகே) ஈசனைக் குலதெய்வமாகக் கொண்டார் எனவும் தெரிவிக்கிறது. இதற்குப் பழைய கல்வெட்டு ஆதாரமாக் உள்ளத் எனத் தெரிவித்தாலும் அந்தக் கல்வெட்டு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மாணிக்கவாசகர் இந்த கயவாகு மன்னர் கூட்டத்தினருடன் வாதிட்டாரா என்பது ஆராயத்தக்கதுதான். கயவாகுப் பற்றிய மற்றொரு இலங்கைக் குறிப்பில், தழகத்தில் நடந்த ஒரு போரில் 12000 சிங்களர்களைத் தமிழகத்திலிருந்து விடுவித்து அதற்குப் பதில் 12000 தமிழர்களை இலங்கைக்கு அடிமைகளாக அழைத்துச் சென்றார் என்ற செய்தி (நன்றி: வரலாறு.காம்) ’ராஜவளியா’ என்ற இலங்கை வம்சாவளி நூல் தெரிவிக்கிறது. சிங்களர்கள் தம் வரலாற்றினை கதைகளாக, தமக்குச் சரிப்படத்தக்கவாறு வேண்டிய விதத்தில் எழுதிக் கொண்டதாகவே இருந்தாலும் இதன் ’மூலம்’ உண்மையானது என்ற பேராசிரியர் எஸ். கணேசன் அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆக பெரும் குழுவாக அவர்கள் அரசனுடன் வந்திருக்கலாம், ஆனால் அது மனிதர்களைப் பிடிப்பதற்காகவோ, கொண்டு செல்வதற்காகவோ இருந்திருக்கும் என எப்படி சொல்லமுடியும். மகாவம்சத்திலும் ராஜவளியா விலும் சம்பவங்களை திரித்து எழுதுவது என்பது வழக்கம்தான் என்பதை பல சரித்திர ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அந்த கடல்சூழ் இலங்கை மன்னன் (அப்படித்தான் இளங்கோ குறிப்பிடுகிறார்) கயவாகுவின் காலகட்டம் செங்குட்டுவன் ஆட்சி செய்த காலகட்டம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மயிலை நூ த லோக சுந்தரம் அவர்களின் கருத்துப்படி சாரிபுத்தன் எனும் பெயருடைய சிங்கள மன்னன் மாணிக்கவாசகரோடு வாதிட வந்ததாக கடலூர் அருகே உள்ள திருச்சோபுரக் கோயிலில் பழைய கல்வெட்டு சொல்வதாக எழுதியிருந்தார். இதுபற்றிய செய்தியையும் புறந்தள்ளாமல் கல்வெட்டுகளை சற்றுத் தேடிப்பார்த்ததில் எந்த செய்தியும் கிடைக்கவில்லை. மாணிக்கவாசகர் பற்றிய சரித்திரபூர்வ ஆதாரமே சமீபத்தில் மாயவரத்துக்கு அருகே, திரு இந்தளூரில் கழுகண்ணிமுட்டம் எனும் இடத்தில் கைலாசநாதர் கோயிலின் அருகே தோண்டும்போது பத்தடி ஆழத்திலிருந்து கிடைத்த சிலைகளுடன் இருந்த மாணிக்கவாசகரின் திருவுருவச்சிலை ஒன்றுதான். இது கூட சென்ற வருடம் (2010) மே மாதம் 20ஆந்தேதி கண்டெடுக்கப்பட்டது.

சரி, அடுத்த கட்டமாக மாணிக்கவாசகரின் தெய்வத் தமிழ் பற்றியும் பார்ப்போம்.

அதை அடுத்து கடைசிகட்ட பரிசீலனையும் செய்வோம்.

திவாகர்

Labels: ,