Saturday, May 12, 2007

மதுரை - மாலை முதல் காலை வரை

காலம்தான் வெகு வேகமாக பறக்கிறது... ஏன்தான் இத்தனை அவசரமாக பகல் பொழுதை இந்த மதுரை மக்கள் கழிக்கிறார்களோ?

மங்கிய சூரியன் போனால் என்ன? மங்காத சுடர் விளக்குகள் இந்த மாநகரத்தையே மயக்கமாய் பார்க்க வைக்கிறதே... ஆஹா! தீப ஒளியில் மதுரையை வர்ணிக்க வார்த்தைகள் ஏது?

சாலைகளில் பொது ஜனக் கூட்டம் குறைந்து போய்விட்டது போல் காணப்பட்டாலும் குதிரைகளும் ரதங்களும் அதிகம் காணப்படுகிறதே.. ஓ! பெருந்தனக்காரர்கள் போலும்.. அதுதான் இப்படி காலாட்படை சூழ சாலைகளில் பவனி வருகிறார்களோ..அவர்கள் ஆடைகளும் அணிகலன்களும்தான் எப்படி பளபளக்கின்றன..அவர்கள் செல்வம் நன்றாகவே வெளியில் தெரிகிறதுதான்.. அது போகட்டும்.. ஏன் இப்படி அவ்வப்போது மார்பை நிமிர்த்தி வாட்களை தூக்கி காண்பிக்கிறார்கள்? அவர்கள் பார்வை ஏன் எப்போதும் மேலேயே இருக்கிறது?

ஓ! புரிந்து விட்டது... அதோ அந்த மாட மாளிகைகளின் உப்பரிகைகள் மீதுதான் இவர்கள் பார்வை.. உப்பரிகை மாடத்திலிருந்து பளிச்சென நிலவு போல காணப்படும் அந்தக் கண்வீச்சுக் காரிகைகள்தானா இவர்களின் வினோத வீரத்தனத்திற்கு காரணம்?

ஆஹா! என்ன வாசனைத் திரவியங்கள் பூசிக்கொள்கிறார்களோ..தெருவையே வாசனை அள்ளுதே.. அவர்கள் என்ன ஆகாயத்தேவதைகளோ.. அந்த மேனியழகு ஒன்றே போதாதோ..எதற்கு இத்தனை அணிகலன்களைப் போட்டு அந்த அழகு மேனியை வருத்தம் செய்விக்கிறார்களோ..

மேலே இருந்து கீழே பார்க்கும் அவர்கள் கண்கள்தான் எப்படி மின்மினுக்கின்றன..ஒவ்வொரு காரிகைக்கும் ஒரு காதலன் இருப்பானோ என்னவோ.. பெண் உள்ளத்தில் இருப்பது என்ன என்பது யாரும் கண்டுகொள்ளமுடியாதாம்.. யார் சொன்னதோ? ஆனால் இந்த மதுரை மங்கையர்களின் கண்கள் மூலமே அவர்கள் உள்ளம் பளிச்செனத் தெரிகிறதே..அந்தத் தேரில் செல்பவன் ஏன் வெகு வீரம் பெற்றவன் போல வெற்றுக் காற்றில் வாளை சுழற்றுகிறான்? ஓஹோ.. மேலே அவன் காதலி இவனை கண்டுகொள்ளவேண்டுமென்றா.. கண்டுகொண்டாளய்யா..கண்டுகொண்டாள்..தீப ஒளியில் அவள் நாணமும் தன் உள்ளங்கையை நெஞ்சு வரை உயர்த்தி இவனுக்கு கை காட்டும் பாங்கே அழகுதான் போங்கள்..அவள் கண்களில்தான் எத்தனை பரவசம்? ஏ..தேரில் செல்லும் அழகனே! பாவம்..அந்தப் பெண்ணைக் கண்கலங்கவிட்டுவிடாதே...ச்சேச்சே..ஏ.. ஆகாயத்தேவதையே..இதோ இந்தத் தேரில் செல்லும் எளியவனைக் கை விட்டுவிடாதே..

அவன் கடந்து போனதும் மேலே அந்த அழகியும் உள்ளே மறைந்து போகிறாளே..அதோ அந்த நிலவு கூடத்தான் மேகத்துள் ஒளிந்துகொள்கிறது...நாமும் நகர்வோம்..

ஓகோ..இதுதான் அரண்மனை வெளிப்பகுதியோ..இதனுள்தான் இந்தப் பெருந்தனக்காரர்கள் வாசம் போலும்...இந்த மதுரையில் இவர்களுக்கு என்ன குறை இருக்கமுடியும்?

அட.. கடைத்தெரு வந்துவிட்டதே..ஆஹா..கலவென சத்தத்துடன் என்னமாய் கூட்டம் அலை மோதுகிறது..செல்வம் கொழிக்கிறதே..முத்துக்கள் அப்படியே கொட்டி வைத்துள்ளார்களே..அதோ பவழங்கள்..,தங்க நகை கடைகள்.. பொற்கொல்லர்கள்..ஆடை அலங்காரக்கடைகள்..சரிதான்..மதுரை மாநகரல்லவா..அத்தனை பொருட்களும் இங்கு கிடைக்காமல் வேறு எங்கு கிடைக்குமாம்....அதனால்தான் மதுரை வணிகருக்கு உலகமெங்கும் நல்ல பெயரோ..ஒ..இது கடைத்தெருவின் கடைப்பகுதியோ..இங்கு கூட்டம் சற்றுக் குறைவாக உள்ளதே..நள்ளிரவு நேரம் என்பதாலோ?

பழங்கால அமைப்பு வீடுகள் போல் தெரிகிறது..ஆஹா..இதென்ன அற்புதமான முல்லை மலர் வாசனை.. என்ன இது.. இப்படி திருட்டுத்தனம் செய்வது போல தலையைக் குனிந்துகொண்டே உள்ளே செல்கிறார்கள் இவர்கள்..ஒ..இது 'அந்த இடமா?' அட.. வீட்டுக்குள் இருந்து பல இனிய கானங்கள் கேட்கின்றனவே..சல் சல் என சலங்கை ஒலிகள் வேறு..நடனமும் உண்டோ? ஆஹா.. பாட்டும் கூத்தும் கொண்டாட்டமும்..அடாடாடா.. மதுரை பெயருக்கேற்றவாறு இனிமைதான். நள்ளிரவு ஆயிற்று.. இன்னமும் கலகலப்பு குறையவே குறையாதோ..

இல்லை.. நள்ளிரவுக்கு மேல் அங்கே ஆட்டம் பாட்டம் தொனி குறைந்து விட்டது போலத்தான் தெரிகிறது..என்ன இருந்தாலும் இவர்களும் மனிதர்கள்தானே..நள்ளிரவை தாண்டியும் அதிகாலை வரைக்கும் கொண்டாட்ட இன்பத்தில் நீந்த மதுரை என்ன இந்திர சபையா? சற்று திரும்பி வந்த வழியே நடப்போமே..

ஆனால் கள்ளர்களுக்கு எல்லா நகரங்களிலும் இதுதான் சரியான நேரம் போலும்.. பாருங்களேன்..எத்தனை சுறுசுறுப்பாக அந்தக் கள்ளர்கள் அந்த மாளிகையின் மேல் உப்பரிகைக்கு கயிற்று முடிச்சு போட்டு சரசரவென குரங்கு தாவி ஏறுவதைப் போல ஏறுகிறார்கள்?
அட.. அதற்குள் காவல் வீரர்கள் இவர்களைப் பார்த்துவிட்டார்களே.. பலே..கள்ளர்கள் வசமாக மாட்டிக்கொண்டார்கள்..சதா சர்வ காலமும் மதுரை மாநகரம் இந்தக் காவலர் பாதுகாப்பில் நன்றாகவே காக்கப்படுகிறதே..இந்தக் காவலர்களுக்கு தூக்கம் என்ற உணர்வே இல்லை போலும்..
இவர்கள் தூங்காமல் இருக்கட்டும்.. இனியாவது மதுரை தூங்குமோ?

நன்றாக காது வைத்து கேளுங்கள்.. அதிகாலை நேரம் வந்துவிட்டதன் அறிகுறியாய் கோழியும் காக்கையும் சேர்ந்து கூவுவதைக் கேளுங்கள்..அட..கிறீச் சென சத்தத்துடன் திறக்கப்படும் இல்லத்து கதவுகள்.. கைவளையோசை குலுங்க கால் சலங்கை கலகலவென ஒலிக்க என்ன அழகாக வாசற்புறத்தை மண்வாசனை முகர்ந்துகொண்டே சுத்தம் செய்யும் பெண்கள்.. அதோ.. வைகையை நோக்கி குழுமம் குழுமமாக செல்லும் நீராடச் செல்லும் பெண்டிற்கூட்டம்.. அட செவிக்கு இனிமையாக ஒலிக்கத்துவங்கும் வேதப் பாட்டுகள்..அதோ அந்தக் கள்ளுக்கடைகளின் வாசல்களில் சோம்பல் முறித்து எழுந்து தன் சொந்த இல்லத்து நினைவு வந்ததால் அடித்துப் பிடித்து ஓடும் குடிமக்கள்.. பார்த்துகொண்டே இருக்கவேண்டிய நகரம்தான்..

அட.. ஏழு மணியாகிவிட்டதே..காலைச் சூரியன் சுறுசுறுப்பாகத்தான் மேலே வருகிறான்.. ஆனால் மதுரையின் சுறுசுறுப்புக்கு ஈடாகுமோ...
-----------------------------------------------------------------------------
திவாகர்.

Labels: