Wednesday, June 10, 2009

விஜயவாடா எங்கள் விஜயவாடா பகுதி 4

காரமும் இனிப்பும் 'கடவுளின் சொந்த நகரமும்'

விஜயவாடாவைப் பற்றி எழுதுகிறேன் என்று தெரிந்ததும் நிறைய பழைய நண்பர்கள் படித்து மகிழ்ந்தனர் என்று வரும் தொலைபேசிச் செய்திகள் மனதுக்கு இனிக்கின்றன. ஒரு நல்ல ஊரைப் பற்றிய நினைவுகள் உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வது என்பது எனக்கு ‘கரும்புச் சாறு குடிக்க ஒரு கூலி வேண்டுமோ’ எனக் கேட்பது போல!!

விஜயவாடாவில் வெய்யிலும் சூடும் எப்படி அதிகமோ மழையும் பனியும் சற்றுக் கூடுதல்தான். உணவில் காரச் சுவை அதிகம்தான் என்றாலும் விஜயவாடாவுக்கே உரித்தான பந்தர் லட்டு என்று சொல்லப்படும் இனிப்பு கூட மிகவும் சுவையானதுதான். விஜயவாடாவின் மேற்குப்பகுதி (ரயில்வே ஸ்டேஷனை நகரத்தின் நடுப்பகுதி என்று வைத்துக் கொள்வோம்) மிகப் பழமையை இன்னமும் வீடுகள் மூலமாகவும், கடை மற்றும் கோயில் பகுதிகள் மூலமாகவும் அப்படியே தக்க வைத்துக் கொள்கிறது என்றால் நகரத்தின் கிழக்குப் பகுதியோ புதுமையின் நேர்த்திக்கு எப்போதோ மாறிவிட்டது. அந்த நகரத்தில் ஒரிரண்டு நாள் சுற்றிப் பார்த்தவர்களுக்கு இது புரியும். ஓல்ட் டவுன் என்றே இன்னமும் அந்த மேற்குப் பகுதி அழைக்கப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தனைதான் பழையது என்றாலும் ஆந்திராவின் மொத்த ‘டப்பு’ இங்கேதான் இருக்கிறதோ என்பதைப் போல நம்மை எண்ணவைக்கும் அளவுக்கு வியாபாரச் சந்துகள். ஒவ்வோர் கடையிலும் உள்ள பிஸினஸ் மிகப் பிஸியாக நடப்பதைப் பார்த்தால் உண்மையாக நமக்கு ஆச்சரியமாக இருக்கும். வங்கிகளும் இவர்கள் தேவைகளுக்கேற்ப இங்கேயே தங்கள் மெயின் கிளைகளை அமைத்துள்ளன. அதே சமயத்தில் இந்தப் பணத்தின் மகிமை பூராவும் கிழக்குப் பகுதி நகரத்தில்தான் தெரியும். பழைய டவுன், சந்துகள் மண்டிக்கிடக்கும் சந்தைக் கடை என்றால் கிழக்கு நகரம் பூராவும் லேடஸ்ட் நாகரீகத்து உச்சத்தில் இருப்பது போலத் தோன்றும்.

இப்படி எதிரும் புதிருமாகக் காணப்படும் இந்த விஜயவாடாவில் ஆத்திகமும் நாத்திகமும் கூட சரிசமமான அளவில் உண்டோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இன்றைய கனகதுர்கா ஆலயத்துக்கு சபரிமலை விரதம் போல விரதம் இருந்து செவ்வாடை பூண்டு பவானி என்று பெயர் வைத்துக்கொண்டு லட்சக்கணக்கில் பக்தர் கூட்டம் வருகிறது. ஒரு காலத்தில் கம்யூனிசத்தின் கோட்டையாக திகழ்ந்த நகரம் இது. இன்றும் கம்யூனிஸ்டுகளுக்கு மக்களிடையே ஆதரவு அதிகம். கம்யூனிஸ்ட்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நாத்திகர்கள்.  அது மட்டுமல்ல, ஆன்மீகப் பேச்சாளர்கள் அத்தனைபேருமே விஜயவாடா வர விரும்புவார்கள், காரணம், ஏராளமான அளவில் அவர்கள் பேச்சை விரும்பிக் கேட்கும் பொது ஜனங்கள்தான்.

நாத்திகம் என்று சொல்லும்போது, புகழ்பெற்ற நாத்திகவாதி கோபராஜு (Gobaraju) ராமச்சந்திரராஜுதான் நினைவுக்கு வருகிறார். பிராம்மணராகப் பிறந்த இந்த விஜயவாடாக்காரர் காந்தியின் தீவிர சீடரும் ஆவார் (காந்தி நாத்திகராக மாறவேண்டும் என்று பகிரங்கமாகப் பேசியவர் கூட). பின்னாளில் காங்கிரஸைக் கடுமையாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். தன் பெயரையும் கோரா GORA (வைகோ போல) என்று மாற்றிக்கொண்டு ஆத்திகர்களையும் அவர்தம் பழக்கவழக்கங்களையும் மிகப் பெரிய அளவில் கூட்டம் சேர்த்துக் கொண்டு எதிர்த்தவர். ஒருமுறை நானும் என் நண்பர் Press Information Bureau கோவிந்தராசனும் (கோவி) இவர் ஏற்படுத்தியிருந்த அமைப்பு நடத்திய ஆத்திக எதிர்ப்பு மாநாட்டுக்குச் சென்றோம். தீ மிதிப்பது, கண்ணைக் கட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டுவது என்பதெல்லாம் செய்து காட்டினார்கள். ஆத்திகக்காரர்கள் எப்படியெல்லாம் மாயம் செய்து ஊரை ஏமாற்றுகிறார்கள் என்று ஒவ்வொருவரும் மேடையில் மேஜிக் நிகழ்ச்சிகள் அதாவது வாயிலிருந்து லிங்கம் வரவழைப்பது போன்றவை செய்து மக்களிடையே ‘விழிப்புணர்வு’ வேண்டும் என்று பேசினர். எல்லாவற்றையும் கேட்கும் கூட்டம் இங்கும் அதிகமாகத்தான் காணப்பட்டது. என் நண்பர் கோவிக்கு பரமசந்தோஷம். மக்கள் மாறி வருகிறார்கள் என்று என்னிடம் சொல்லிச் சொல்லி திருப்திப்பட்டுக் கொண்டார். (தற்சமயம் கோவி சென்னையில் உள்ள பெரிய நாத்திகவாதிகளுள் ஒருவர், திராவிடக்கழக ஆதரவாளராகவும், அவர் மனையாள் ‘மணியம்மை தமிழ்ப் பள்ளி’ ஒன்றும் நடத்தினார். (எல்லாமே தம் சொந்தச் செலவில்)

அந்தக் கூட்டத்தின்போதுதான் அங்கு கோரா வின் இரு மகன்களை சந்தித்தோம். ஒருவர் பெயர் லவணம், இன்னொருவர் பெயர் சமரம். விசித்திரமாக இருக்கிறது இல்லையா.. லவணம் என்றால் உப்பு. அதாவது உப்பு சத்தியாக்கிரகத்தின்போது பிறந்தவராம். சமரம் என்றால் சண்டை. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிறந்ததால் அப்படி பெயர் வைத்தாராம். இன்னொரு தம்பியின் பெயர் விஜயன். இரண்டாம் உலகப்போர் வெற்றியுடன் முடிந்த சமயத்தில் பிறந்த தம்பி அவர். 'கோரா' வை ஆந்திராவின் பெரியார் என்று அழைப்பார்கள். ஆனால் இவரது மகள் வித்யா (சென்னுப்பாடி வித்யா) நான் இருந்த சமயத்தில் விஜயவாடாவின் காங்கிரஸ் எம்.பி. கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஒருவேளை தான் புகுந்த வீடும், புகுந்த கட்சியும் மகளை மாற்றி இருக்கலாம்.

அதே போல விஜயவாடாவில்தான் பாரதி பாடிய ‘சுந்தரத் தெலுங்கை’ அதிகமாகக் கேட்கலாம். தெலுங்கினைப் பேசுவோர் பேசும்போதும் அது மிக இனிமையான செவிக்குள் பாயும்போதும் அதன் அருமை தெரியும். அதே சமயத்தில் விஜயவாடாவில்தான் உலகத்தில் உள்ள அத்தனை கெட்டவார்த்தைகளையும் தெலுங்குப்படுத்திப் பேசுகிறார்கள். இந்த வார்த்தைகளை நாகரீக மகளிர் கூட பேசும்போது மனசு கொஞ்சம் வருத்தப்படும். பொருள் தெரிந்துதான் பேசுகிறார்களா.. அல்லது சர்வசாதாரணமாக வாரிசுத்துவமாக தாமாக வந்து விழுந்த வார்த்தைகளா என்று சற்றுக் குழம்பிப் போவதும் உண்டு.

எத்தனைதான் எதிரும் புதிருமாகத் தெரிந்தாலும் எத்தனைதான் இரண்டு வெவ்வேறு கோணங்களில் வாழ்க்கைப் பாதையை நடத்திச் சென்றாலும் பொதுவாக ஊருக்கு என ஏதாவது தீங்கு வரும்போதும், அதே சமயத்தில் மற்றவருக்கு தக்க சமயத்தில் உதவிகள் தேவைப்படும்போதும், நகரமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அதே போல ஆந்திராவில் உள்ள மற்ற நகரங்களில் விஜயவாடாக்காரர்கள் இருந்தால் மிகவும் ஒற்றுமையாக தங்கள் தனித்துவத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். இதனால் ஆந்திராவின் மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்களைக் கண்டால் சற்றுப் பொறாமைப்படுவதும் உண்டுதான்.

இப்படி இரண்டுவிதமான நேரெதிர் நிலையைக் கேரளாவில் பார்த்திருக்கிறேன். அந்த மாநிலத்துக்கே 'கடவுளின் சொந்த இருப்பிடம்' என்றொரு செல்லப்பெயர் உண்டு. இருந்தும் இல்லாமையும் உருவும் அருவும் கடவுள் நமக்குத் தந்த எடுத்துக்காட்டுதானே.. அப்படிப்பார்க்கையில் விஜயவாடாவையும் கடவுளின் சொந்த நகரம் என்று அழைக்கலாமோ என்னவோ..

திவாகர்