நாய்...... நல்ல நாய்...
நாய்.. நன்றியுள்ள பிராணி...'மனிதனுக்குத் தோழனடி பாப்பா' என்ற பாரதியின் பாடலுக்கு அழகான உருவகம்.
நாயை உயிருக்கு உயிராக நேசிக்கும் மனிதர்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம்.. பார்த்திருக்கிறோம்...
மகாபாரதக் கதை முடிவில் தருமனோடு கடைசி வரை அவன் நாய் மட்டுமே கூடவே இருந்து கைலாயத்தின் முழுயாத்திரையில் பங்கு பெற்றதாக அறிகிறோம்...பல எழுத்தாளர்களின் கதைகளில் வரும் பாத்திரங்களில் நாயும் ஒரு அங்கம் வகிக்கும். தேவன் எழுதிய 'மிஸ் ஜானகி'யில் வரும் ஆந்திரக்காரரின் நாய் அந்த நாவலில் விசேஷமாகப் பேசப்படும். கால பைரவரின் வாகனம் நாய். முகமூடி படக்கதை நாயகனை நாய் இல்லாமல் நம்மால் கற்பனை கூட
செய்ய முடியாது. இன்னமும் கூட காவல்துறையில் காசு பெறாமல், லஞ்சமும் வாங்காமல் 'சேவை' என்ற வார்த்தையின் முழு முதற்பொருளாக விளங்குவதும் அந்த நாய்தான்..மோப்பம் பிடித்து குற்றவாளி எங்கிருந்தாலும் கொண்டு வந்து பிடித்துக் கொடுக்கும் சாமர்த்தியசாலி நாய்... வீட்டுக்கு காவல் வேண்டும் என்றால் நமக்கு நாய் கட்டாயம் வேண்டும்.
நாய்களில் கூட ஜாதிகள் அதிகம் உண்டு (அதையும் ஜாதி எனும் பெயரில் மனிதன் தான் பிரித்து வைத்தான்) அல்சேஷன் ஜாதி நான் சின்னக் குழந்தையாக இருக்கும்போதே பிரபலம். ராஜபாளையம் வகையும் பழைய காலத்திலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.. இப்போதெல்லாம் புதுப் புதுப் பேரோடு பல ஜாதி நாய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.
ஆனாலும் இப்படிப்பட்ட நாயை நாம் இழிபிறவியாகத்தான் பார்க்கிறோம்.. தமிழ்ப்பாடல்கள் பல நாயை இழி பிறவியாகத்தான் காண்பிக்கின்றன. 'நாயேனை தன்னடிகள் பாடுவித்த நாயகனை' என்று தன்னை நாயாக பாவித்து இறைவனை உயர்த்திப் பாடுவார் மாணிக்கவாசகர்.
கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ஒரு வரி வரும். அனுமன் தன்னை 'நாயினும் இழிந்த பிறவி' என்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் தன் தோளில் ஏறி ராவணனுடன் போர் செய்க' என்று ராமனை அடிபணிவான்.
ஏன்..திருமூலர் திருமந்திரத்தில் 'குருவை ஏசிப்பேசுவோர்க்கு அடுத்த பிறவி நாய்தான் என்றும் 'குருவை துன்புறுத்துவோர்க்கு பல பிறவிகள் வீதியில் திரியும் வெறிநாய்களாக பிறப்பார்' என்று கூறுவார்...
கோபம் வந்தால் 'நாயே' என்று திட்டுபவர்கள் தமிழர்கள் மத்தியில் படு சகஜம்.சந்திரமுகி படத்தில் சந்திரமுகிப் பேயாக நடித்த ஜோதிகா 'ஒரே குக்க '[நாயே] என்று 'டப்பிங்' குரலில் கத்தும்போது நமக்கு கதி கலங்கி நாய் ஜன்மத்தின் இழிந்த தன்மையும் விளங்கும். செல்லமாகக் கூட நண்பர்கள் மத்தியில் ஒவ்வொரு சமயம் நண்பன் பெயரோடு நாயையும் சேர்த்து சொல்லி 'அந்த நாய் வந்தால் உடனே நாயர் டீக்கடையாண்ட அனுப்பி வை' என்று சொல்லப்படுவதுண்டு.
முதலில் இவ்வளவு உயர்த்தியாகப் புகழப்பட்ட நாய் ஜன்மம் ஏன் அதற்கு எதிர்ப்பதமாகச் இழிந்த ஜன்மம் என்று பெயர் எடுத்தது என்பதை நான் யோசிப்பதுண்டு.
இதற்கும் கம்பரே பதில் சொல்வார். அதாவது நாய் என்ற ஒரு பிறவி மட்டுமே தான் சாப்பிட்டதை வாந்தி எடுத்து பிறகு அதை ருசித்து நாக்கால் நக்கி சாப்பிடுமாம்... நினைத்துப் பார்த்தால் இது ஒரு கொடுமையான தண்டனை போலத் தெரிகிறது.
என் வழிகாட்டி சொல்வார்.. 'மனிதன் துரோகம் செய்யக்கூடாது..துரோகம் என்பது மனிதத்தன்மைக்கு மாறுபட்ட தர்மம்..துரோகம் செய்பவனுக்குக் கிடைக்கும் மறு பிறவிதான் நாய்.. துரோகம் யாருக்கு செய்தானோ அவன் மறு பிறவி எடுக்கும்போது நாயாக சேவை செய்கிறான்' என்பார்..
ஒவ்வொரு சமயம் இது அப்படித்தான் என்று தோன்றும் . யார் வீட்டிலாவது நாயைப் பார்த்தால் 'ஐயோ பாவம்..இந்த நாய் இந்த சொந்தக்காரர்க்கு என்ன துரோகம் சென்ற பிறவியில் செய்ததோ என்று தோன்றும்..'
ஆனால் எனக்கு சென்ற பிறவிகளில் யாரும் துரோகம் செய்யவில்லை போலும்..ஏனெனில் இதுவரை ஒரு நாயும் என்னிடம் வாலாட்டி அன்பு பாராட்டியதே இல்லை..மாறாக நண்பர்கள் வீட்டில் அந்த நாய்கள் சற்று உர்ரென்று (யார் நீ ?..) முனகும்போது உள்ளுக்குள் பயம் வந்தாலும் சமாளித்து விடுவது கூட உண்டு. ஒரு சின்ன அனுபவம் கூட உண்டு.
என் பக்கத்து வீட்டுக்காரரின் நாய் என்னைச் சீண்டவே சீண்டாது. நானே எப்போதாவது போய் "ஹாய் ஜூலி" என்று கூப்பிட்டாலும் அது முகத்தைத் திருப்பிக்கொள்ளும் [உனக்கெல்லாம் குட்மார்னிங் எதற்கு].
அப்படிப்பட்ட நாய் ஒரு நாள் அதுவாகவே என்னிடம் ஓடிவந்தது..வாலை ஆட்டியது.. நாக்கை வெளியே சற்று அதிகமாகவே நீட்டி ருர்..ருர்..' என்று மெதுவாக முனகியது. எனக்குப் பரம சந்தோஷம். இதுவரை என் நட்பை ஒதுக்கி வைத்த இந்த ஜூலி இன்று பச்சை கொடி காட்டி தோழியாகி விட்டது..இனி இந்த நாய் நமக்கும் சேவை செய்யும்..நம்மைப் பார்த்தும் தினம் வாலை ஆட்டும்..ஒருவேளை போன ஜன்மத்தில் ஏதாவது சிறிய துரோகம் எனக்கு செய்திருக்கலாம்..அதற்கு நன்றிக் கடன் செய்கிறதோ என்னவோ...
ஆனால் அந்த நாயின் நட்பெல்லாம் அரை மணிநேரம் கூட நீடிக்கவில்லை. விஷயம் இதுதான். அவர்கள் வீட்டில் யாரோ விருந்தினர்கள் தங்கள் குட்டி நாய்களுடன் விஜயம் செய்திருக்கின்றனர். நம் ஜூலிக்கு அந்த குட்டி நாய்களின் சிநேகம் துளியும் பிடிக்காமல் எங்கள் வீட்டில் நுழைந்து என்னுடன் அவர்களைப் பற்றி ஏதோ குறை சொல்லி முனகியது போலும்...நான்தான் புரிந்து கொள்ளவில்லை.. (நாய் பாஷை நமக்கு எப்படி புரியும்),
அந்த விருந்தினரின் குட்டி நாய்கள் வீட்டை விட்டு அகன்றதும்தான் இந்த நாய்க்கு உயிர் வந்தது போலும்.. கடகடவென தன் வீட்டுக்குள் ஓடி 'லொள் லொள்' என மெதுவாக குரைத்து தன் குறைகளை அவர்களிடம் ஒருவழியாக கொட்டிவிட்டு வாலை சுருட்டிப்படுத்துக்கொண்டது.
இதற்கு பிறகு நமக்கு அந்த நாயின் சிநேகிதம் பழைய கதைதான்...என்னைப் பார்த்தாலே அன்னியன் போல தலையைத் திருப்பிக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் வாலைக் கூட 'டப்' என நிப்பாட்டி விடும்.. அவ்வளவு பிரியம் நம்மேலே..பின்னாட்களில் இந்த அறிவாளி நாய், ’க்யூட்’ எனும் என் சிறுகதைக்குத் துணையானது வேறு விஷயம்.
ஆனால் நாயை விட சிறந்த நண்பனை மனிதன் கண்டதில்லைதான்.அது சென்ற ஜன்மத்து துரோகமோ இந்த ஜன்மத்து நன்றிக் கடனோ.. நாய் இறைவனின் அரிய படைப்புதான். ஏனெனில் நாயாகப் பிறந்தபின் அது மனிதனைப் போல துரோகம் செய்வதில்லை.. ஒருவன்..- அவன் மகாபாவியாக இருந்தாலும் அவன் வீட்டுப் பண்டத்தைத் தின்று
விட்டால் அது அவனுக்கு தன் காலம் முழுவதும் அடிமைதான்.. ஒரு உண்மையான் நன்றிக்கடன்.
அதெல்லாம் சரி.. இந்த நாய்க்கும் தபால்காரருக்கும் ஏன் எப்போதுமே ஒத்துப் போவதில்லை என்று யாராவது கண்டுபிடித்து சொல்லுங்களேன்..
திவாகர்.
Labels: நாய்.. நல்ல நாய்