Thursday, June 04, 2009



விஜயவாடா எங்கள் விஜயவாடா பகுதி 2
விஜயவாடா புஷ்கரமும் பாட்டியும்

கும்பகோணத்து மகாமகமும், கிருஷ்ணாநதி புஷ்கரமும் ஒரே வருடத்தில்தான் வரும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் போல இந்த கிருஷ்ணா நதி புஷ்கரமும் ரொம்பவே விசேஷம்தான், அதாவது விஜயவாடா நகரவாசிகளுக்குச் சொல்கிறேன்.

இந்த புஷ்கரத்தை ஒட்டி விஜயவாடா நகரம் பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை மிக அருமையான அழகுபடுத்தப்படும். சாலை வசதிகள், ரயில்வே ஸ்டேஷன் வசதிகள், விரிவாக்கங்கள், புதிய மண்டபங்கள், கோயில்களில் விரிவாக்கப் பணிகள் என்று பொது நன்மைகள் ஏராளமாக உருவாக்க ஒரு மிகப் பெரிய சந்தர்ப்பத்தை இந்த புஷ்கரம் அளிக்கின்றது. அது மட்டுமல்ல, நகரமக்கள் மிக விருப்பப்பட்டு இந்த புஷ்கரத்துக்காகவே ஏங்குவது போல இருப்பவர்களாதலால் பொதுமக்களும் உற்சாகமாக இந்த நகர விரிவாக்கத்தில் பங்கு கொண்டு மாபெரும் ஒத்துழைப்பைக் கொடுப்பார்கள்.

இப்படிப் பட்ட உற்சவங்களால், அது பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை வரும் என்றாலும், ஒரு நகரம் மிகப் பெரிய அளவில் மேன்மை அடைகிறது என்பது மிகப் பெரிய விஷயம்தானே. பொதுவாக்கில் எல்லா நகரங்களுக்குமே வளர்ச்சி விகிதம் சில சதவீதம் ஒவ்வொரு வருடமும் மெதுவாக ஏறும் என்றாலும், அதிவேக வளர்ச்சி என்பது கும்பமேளா, மகாமகம், புஷ்கரம் வரும் நகரங்களுக்கே அமையும். இந்த விஷயத்தில் விஜயவாடா அதிக அதிருஷ்டம் வாய்ந்தது என்பேன்.

நான் என் நண்பர்களோடு 1980 ஆண்டு புஷ்கரத்தில் அந்த 12 நாளும் முழுமையான உற்சாகத்தில் நகரமக்களோடு கலந்துகொண்டவன். அப்போதைய விஜயவாடாவுக்கும் இப்போதைய விஜயவாடாவுக்கும்தான் எத்தனை வித்தியாஸங்கள். அதி நவீன வசதிகளோடு கூடிய தங்குமிடங்கள், மிக விரிவான சாலைகள், நம் கோயம்பேடு பஸ் காம்ப்ளக்ஸ் போல மிகப் பெரிய பேருந்து வளாகம் இப்படி எல்லா வகையிலும் மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.. விஜயவாடா ரயில்வே ஸ்டேஷன் போல தென் இந்தியாவிலேயே அவ்வளவு வசதிகள் கொண்ட ரயில் நிலையம் ஏதும் இல்லை என்றே சொல்லலாம். சொகுசு எஸ்கலேட்டர்கள் ஒன்றாம் தளத்திலும், 6 மற்றும் 7 ஆம் தளத்திலும், மேலே போக, கீழே வர என, நிர்மாணித்துள்ளார்கள். இத்தனைக்கும் ஸ்டேஷனில் கிடைக்காத வஸ்துவே கிடையாது எனக் கூட சொல்லிவிடலாம். பகல்-இரவு எல்லா நேரத்திலும் சுடச் சுட இட்லி கிடைக்கும் ஒரே ஸ்டேஷன் விஜயவாடாதான். சாப்பாடும் சுவையாகவே இருக்கும்.

குரு பகவான் கன்யாராசியில் நுழையும்போது கிருஷ்ணா புஷ்கரம் ஆரம்பமாகின்றது என்று சொல்வர். பாரதத்தின் பன்னிரெண்டு புண்ணிய நதிகளுல் ஒன்றான கிருஷ்ணை அல்லது கிருஷ்ணவேணி முதலில் மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தை நன்றாக செழிப்பாக்கிவிட்டுத் தான் ஆந்திரமாநிலத்தில் நுழைகிறாள். ஆனால் மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் உள்ள மலைகளில் துள்ளித் துள்ளி ஆடி வருவதால் களைப்பாகி விடுகிறாளோ என்னவோ, சமநிலமான ஆந்திரா வந்தவுடன் பரமநிதானமாக நடந்து வருவாள். மற்ற இரண்டு மாநிலங்களுக்கும் உள்ள நன்மையை விட, கூடுதல் நன்மைகளான வண்டல் மண்வளத்தை ஆந்திரத்தில் வாரி வாரி வழங்குவதால், கிருஷ்ணையால் விவசாயம் அமோகம் இங்கே. மற்ற மாநிலங்களில் எப்படியோ, இங்கே விஜயவாடா மக்களுக்கு கிருஷ்ணவேணி தேவதையாகத் தென்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் அந்த நதியின் நீர் விஜயவாடா நகரத்தின் நடுவே மூன்று திசைகளிலும் எப்போதோ வெட்டப்பட்ட வாய்க்கால் வழியாக வழிந்தோடுவதை மக்கள் தினமும் பார்த்துக் கொண்டே இருந்தாலும் கூட அது போதாமல் அவளுக்கு 1980 ஆம் ஆண்டு புஷ்கர சமயத்தில், அவள் கரையிலேயே அழகான சிலையெடுத்து வணங்கத் தொடங்கினார்கள் இந்த ஊர் மக்கள். கிருஷ்ணைநதியின் நீரின் சுவையைச் சொல்லி மாளாது. மிக மிகச் சுவையான நீரை அள்ளித் தருவாள் அவள்.

புஷ்கரசமயத்தில் கிருஷ்ணையின் கரையிலிருந்து சற்று உயரத்தில் உள்ள இந்திரகிலாத்திரி மலையில் குடி கொண்டவளான தேவி கனகதுர்கா கோயில் சிறப்புத் திருவிழாவில் திளைக்கும். பக்தர்கள் காலையில் நதியில் குளித்துவிட்டு உடனேயே தேவியைப் பார்க்க மலைப் படிகளில் காத்திருப்பர். எங்கு நோக்கினும் பக்தர் கூட்டம்தான் இந்த பன்னிரெண்டு நாட்களும். நகரமெங்கும் கொண்டாடும் பக்தர்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் வந்தவர்கள். எல்லோருமே கொண்டாடும் மிகப் பெரிய விழாதான் இந்த புஷ்கரம்..

இந்தப் புஷ்கர சமயத்துக்கு மூன்று நான்கு மாதம் முன்புதான் வேறு ஒரு வீட்டுக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை எனக்கு உருவானது. அதாவது பூர்ணானந்தம்பேட்டையிலிருந்து, காந்தி நகர் பகுதியில் (சுமார் ஒரு ஃபர்லாங்கு தூரம்தான்) எங்களுக்குத் தோதான ஒரு இடம் மாடியில் கிடைத்தது. ஆனால் ஒரு கண்டிஷன். பிரம்மச்சாரி பையனுக்கு இடம் இல்லை என்று வீட்டுச் சொந்தக்காரர்கள் சொல்லியதாலும், அந்த நல்ல இடத்தை எங்கள் நண்பர்கள் கூட்டம் விட்டுவிட மனமில்லாததாலும், வேறு வழியில்லாமல் அவர்கள் கண்டிஷனுக்கு சம்மதித்தோம். ஆனால் பிரம்மச்சாரி பையன் திடீரென துணைக்குப் பெண் தேட எங்கே போவான்..(சினிமாவில் வேண்டுமானால் அவனுக்காகவே சட்டென்று ஒரு ஹீரோயின் கிடைப்பாள்.. கொஞ்சநாள் நாடகமாட ஒத்துக் கொண்டு கடைசியில் அவனையே கல்யாணமும் செய்து கொள்வாள்..(??) ஆனால் இது நிஜ வாழ்க்கை!) ஆனாலும் எப்படியாவது வீட்டுக்காரர்களை சமாதானப் படுத்தியே தீருவது என்றும் முடிவெடுத்தோம்.

குழந்தையிலிருந்து என்னை வளர்த்துவந்த என் பாட்டிக்கு இந்தக் கிருஷ்ணா நதியில் எப்படியாவது வாழ்நாளில் ஒருமுறை முழுக்கு போட்டுவிடவேண்டும் என்ற தணியாத ஆசை உண்டு. பாட்டியிடம் புஷ்கரம் வரப்போவதாகச் சொன்னதில் அவள் பரவசம் மிக்கவளாகி எப்படியாவது அந்தச் சமயத்தில் தன்னை அங்கே தருவித்துக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னாள். ‘அவ்வளோ நாளெல்லாம் வேணாம்.. வரணும்னா இப்பவே வா.. மூணு நாலு மாசம் அங்கேயே இருந்திட்டு புஷ்கரம் முடிஞ்சதும் திரும்பி வந்துடலாம்’ னு நான் சொன்னதும் ஓடி வந்துவிட்டாள். எங்கள் வீட்டுச் சொந்தக்காரருக்கும் பரம திருப்தி. பாட்டி விஜயவாடா வந்ததும் நண்பர்களுக்கும் பரமகுஷி.. எப்போதும் ஏதாவது தின்பண்டம் (அது பிறப்பிலேயே வந்த வழக்கம்) செய்து கொடுத்துக் கொண்டே இருக்கும் பாட்டியை அனைவருக்கும் பிடித்துவிட்டது. கிருஷ்ணையில் ஸ்நாநம் செய்ய இஷ்டப் பட்ட போதெல்லாம் துணையுடன் அனுப்புவேன். புஷ்கரம் வந்தபோதும் இருட்டு போகும் முன்னேயே எழுந்து ஒரு ரிக்ஷா பிடித்து குளித்துவிட்டு இன்னொரு ரிக்ஷாவில் போன கையோடு வீட்டுக்கு இறங்கிவிடுவாள். எப்படித்தான் விலாஸம் அந்த ரிக்ஷாக் காரரிடம் சொல்வாளோ, அவள் காரியாம் நிறைவேறிவிடும். ஆனாலும் இந்தத் தெலுங்கு மொழிதான் பாட்டிக்கு வரவில்லை. தெலுங்குமொழியில் தான் சின்னவயதில் கற்று வல்லமையே பெற்றதாக பக்கத்துவிட்டாரிடம் தமிழில் சொல்லுவாள். அவர்களும் எவ்வளவோ முயன்றும் பாட்டிக்கு தெலுங்கு வருவதாக இல்லை. கடைசியில் பக்கத்து விட்டுக்காரர்களுக்குத் தமிழ் மொழி ஞானம் பாட்டியால் கிடைக்க, உடைந்த தமிழில் பாட்டியின் அருமை பெருமைகளைக் கேட்டு ஆனந்தித்தார்கள்(?). புஷ்கரம் சமயத்தில் சரியாக வந்த என்னுடைய மாமா, தான் திரும்பிப் போகும்போது பாட்டியையும் திரும்பி அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

இந்த நான்கு மாத காலங்களில் வேண்டுமென்றே ஒரு நல்ல பெயரை எங்கள் வீட்டுக்காரக் குடும்பத்தினரிடம் நானும் என் நண்பர்களும் தக்கவைத்துக் கொண்டோம். ‘எங்க வீட்டு மாடியில் தமிழ்காரப் பசங்க எத்தனையோ பேரு வருவாங்க.. எல்லோரும் தங்கம் தெரியுமா’ என்று அவர்கள் பேசும் அளவுக்குக் காத்திருந்த நாங்கள் பாட்டி சென்றதுமே அந்த வீட்டில் நிரந்தரமாகிவிட்டோம். எப்போதாவது அவர்கள் கண்ணில் தென்பட்டால் பாட்டியம்மா எப்படி இருக்காங்க’ன்னு கேட்பார்கள். அது தவிர எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. கீழேயிருந்து மாடிப் பக்கம் ஏறும்வரை இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பது போலத் தலையைக் குனிந்து (வீட்டுக்காரர் வீட்டில் வயசுப் பெண்ணுங்க இருந்தாலும் கூட) படியேறும் நாங்கள் மாடிக்கு வந்துவிட்டால் பூனை புலியாக மாறி செய்யும் அட்டகாசம் அவர்களுக்குத் தெரியாது. நாடக ஒத்திகையிலிருந்து, சினிமாக் கச்சேரி வரை மேள தாளங்களோடு நண்பர்கள் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது. நான் கடைசியில் அந்த வீட்டைக் காலி செய்யும்போது அந்த வீட்டுக்கார அம்மாள் மெய்யாகவே வருந்தினார்.. ‘உங்களையெல்லாம் பெற்றவள் வயிறு எப்பவும் குளுமையாக இருக்கவேண்டும்’ என்று தெலுங்கில் வாழ்த்தவும் செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

(இன்னும் வரும்)

திவாகர்
(மேலே உள்ள படங்கள் - என்னுடன் முதலில் நண்பன் ரமேஷ், அடுத்து பாபு்)
(கனகதுர்கா கோயில் மலைப்படியிலிருந்து கீழே கிருஷ்ணாநதி ஸ்நானகட்டத்துடன் அகண்ட நதி)