Monday, April 30, 2007

கண்ணதாசனின் இருவேறு பாடல்கள் -2

பற்றைத் துறக்கச் சொன்னது பஜகோவிந்தம் - ஆதிசங்கரரின் அழுத்தமான எண்ணங்கள் அதி அற்புதமான உண்மையாக உலகுக்கு எடுத்துச் சொல்லப்பட்ட பாடல்கள். எத்தனையோ ஆன்மாக்களுக்கு இந்தப் பாடல் மிகப் பெரிய ஆதமபலம் கூட.

நம் கவியரசர் இந்தப் பாடல்களை  எத்தனை அருமையாக அனுபவித்து மொழிபெயர்த்து இருக்கிறார் தெரியுமா?

செல்வத்தைத் தர வேண்டி இலக்குமியை வேண்டிய அதே ஆதிசங்கரர் அந்த செல்வ போகத்தை துறக்க வேண்டி கெஞ்சுகிறார். (தேவாலயங்களின் அருகே உள்ள மரங்களின் கீழே மண் தரையில் படுக்கை எல்லா உடைகளையும் எல்லா போகங்களையும் துறப்பதை பெருமை படுத்துகிறார்) இதோ கவிஞர் இனிய தமிழில் பாடுகிறார்

" செல்வமென்ன போகமென்ன தேகமென்ன விசாரமென்ன -
சேர்ந்த இவை இன்பமில்லையே
சீர் பெருக்கி தேர்நடத்தி வாழ்வதிலும் சாவதிலும் -
சிந்தையில் அமைதியில்லையே
பூமியை வெறுத்தவருக்கு சாமி வந்து தோள் கொடுக்கும் -
பொங்கி வரும் இன்ப நலன்கள்
அல்லலுடன் பகல் முழுக்க ஆடி ஓடி தெண்டனிட்டு -
ஆர்ப்பரித்தல் என்ன பயனே
ஆவியென வான் வரிக்கும் தானுருவமாகி நின்ற
ஆதவனைப் பாடு மனமே "

ஆஹா... தமிழ் எத்தனை இனிக்குது.. ஆதிசங்கரரையும் மீறி....

அடுத்த ஆதிசங்கரரின் பாடல் ஒன்று பாருங்கள் (பொருளைப் பொருளாகக் கருதாமல் துன்பம் என்று எப்போதும் எண்ணுவாயாக.பொருளால் எந்தவித பயனும் இல்லை. பொருளை சேமிப்பவருக்கு தன் பிள்ளைகளிடம் கூட பயம் உண்டாகிறது) - சரி ... இதன் கண்ணதாசன் வரிகளைப் பார்ப்போமா?

"காசுசேர்த்த மனிதர் என்றும் கள்வர்க்கு அஞ்சவேண்டும் -
கண்ணை மூட முடிவதில்லையே
கட்டி வந்த மனைவி அஞ்சி, பெற்றெடுத்த பிள்ளை அஞ்சி
கண்டவர்க்கும் அஞ்சல் தொல்லையே
காசு என்ற வார்த்தை என்றும் குற்றமென்ற அர்த்தம் சொல்லும் -
காண வேண்டும் உனது நெஞ்சமே
காசினிக்கச் சேர்ந்தபின்பு காசினிக்கு நீ பகைவன் -
காலமுற்றும் தோன்றும் வஞ்சமே
மாசிலாத செல்வம் அந்த மாயவனின் குழலிருக்க் -
வரவு தேடி என்ன இன்பமே
வாள்முனைக்குளே இருந்து நூல் முனைக்கு வித்தெடுத்த -
மன்னன்தன்னை பாடு மனமே

என்ன இது.. ஒளியும் இருளும் போல, முதலில் செல்வத்தைக் கொடு கொடு என்ற ஆதிசங்கரர் பின்னர்  ஏன் இப்படி செல்வத்தை கண்டு மயங்காதே - என்று பேசவேண்டும்.

நெல்லிக்கனியை கனகமாக மாற்றும்போது பாடிய ஆதிசங்கரரின் வயது பால்ய வயது. ஏழைகளின் கண்ணீர் பொறுக்காத பிள்ளை உள்ளம். பவித்ரமான மனதோடு தனக்கு அந்த செல்வத்தைக் கோராமல் பிறர்க்காக அந்தக் கணத்தில் எழுந்த ஆதங்கத்தில் தோத்திரமாக கேட்ட பாடல் அது. தான் பிச்சை கேட்டு அந்தத் தாயால் பிச்சையிட முடியாது போயிற்றே என்ற கவலையில், அந்தக் கவலை தீர்க்கும் மருந்தாக பாடப்பட்ட பாடலாகத்தான் நாம் பார்க்கவேண்டும். இது அந்த வேளைக்கு ஆதிசங்கரர் என்ற மருத்துவரால் அச்சமயம் ஏற்பட்ட ஒரு குறையைத் தீர்க்க கொடுக்கப்பட்ட பாடலாகத்தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஆனால் பஜகோவிந்தம் மருந்து இல்லை. வாழ்க்கையின் யதார்த்தத்தை அப்படியே உள்ளது உள்ளபடி உணரவேண்டி ஆதி சங்கரரால் மனித குலத்துக்குக்கு எடுத்துச் சொல்லப்பட்ட பாடல்.

மஹாபாரதத்தில் ஒரு செய்தி நமக்கு சொல்லப்படுகின்றது. யட்ச தேவன் யுதிர்ஷ்டிரனைப் பார்த்து பல கேள்விகள் கேட்பான் , அதில் ஒரு கேள்வி 'உலகிலேயே ஆச்சரியமானது என்னவென்று? - தருமன் பதில் சொல்வான் , தான் இறக்கப்போவது நிச்சயம் என தெரிந்தும் உள்ள நிலையை உணராமல் இறந்த வேறு ஒருவனுக்காக வருத்தப்படுவதுதான் ஆச்சரியமானது - என்று பதில் சொல்வான்.

ஆதிசங்கரர் அந்த ஆச்சரியத்தை உடைக்க முயற்சி செய்ததுதான் பஜகோவிந்தம். இதனால்தானோ கண்ணதாசனை இந்தப் பாடல் இத்தனை கவர்ந்ததோ, தமிழின் இனிமையையும் சேர்த்து இத்தனைத் தாராளமாகத் தந்தோரோ..

கண்ணதாசன் நிச்சயம் சித்தனேதான்


Labels: