Friday, November 13, 2009

அழகான ஆற்றங்கரையில் ஆ(யா)ரும் அறியாமல் அமரேஸ்வரர்

சில கோயில்களில் நாம் நுழைந்தவுடனே ஏதோ இனம் புரியாத நிம்மதியும், எப்போதிலிருந்தோ தேடிக்கொண்டிருந்த அருநிதி ஒன்று கண்டுவிட்ட உணர்ச்சியும் ஏற்படும். எத்தனையோ மனிதர்கள் இந்த வெளியே சொல்லி விவரிக்க முடியாத உணர்ச்சியை தனிப்பட்ட விதத்தில் உணர்ந்தே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு உணர்ச்சி சமீபத்தில் அமரேஸ்வரர் கோவிலில் கிடைத்தது.

சென்ற ஞாயிறன்று அதிகாலை நம் ரீச் ஃபௌண்டேஷன் சந்திராவிடமிருந்து போன், இரவுதான் வைசாக் வந்ததாகவும் அதிகாலை விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு செல்லப்போவதாகவும், அந்த ஊர்க் கோயில் மிகப் பழமையான கோயில், அந்தக் கோயில் பற்றி விவரம் சேகரிக்கவேண்டும், ஆகையினால் என்னையும் கட்டாயம் வரச் சொன்னார். புதுவை நண்பர் சுகுமாரன் அவர்களும் வந்திருப்பதாகச் சொன்னதும் ரெட்டிப்பு மகிழ்ச்சிதான். தம்முடன் வருமாறு அழைத்தவரை போகச் சொல்லிவிட்டு, பின்னால் வருகிறேன். ஊர் பெயரை மட்டும் சொல்லுங்கள் என்றேன். அவரும், அவரை அழைத்துச் சென்றவர்களும் அந்த கிராமத்தில் காத்திருப்பதாகச் சொன்னார்கள். கிராமத்தைச் சேர்ந்த பெரியமனிதர்கள் வருவதாகவும், அங்கு பழைய கல்வெட்டுகள் கோயிலில் பதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அது சிவன் கோவில் என்று சொன்னதும், அடுத்த இரண்டு மணிநேரத்தில் நாம் அங்கு ஆஜர்

ரீச் ஃபௌண்டேஷன் பழைய பாழடைந்த கோயில்களின் புராதனக் கலைகளைப் பாதுகாக்கவும், அந்தக் கோயில்களின் பழைய நல்ல நிலைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பதைப் பற்றி கிராமங்களில் உள்ள மக்களுக்கு எடுத்துச் சொல்லிப் பயிற்றுவிப்பதும் தலையாய பணியாகக் கொண்டுள்ள ஒரு அமைப்பு.

விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 38 கி.மீ. தூரத்தில் உள்ள (B)போனி என்ற கிராமம். இந்த கிராமத்தின் பெயரை அதிகாலை தூக்கமயக்கத்தில் கேட்டதால் போகும் வழியில் உச்சரிப்பு மறந்து போய் சற்று திண்டாடினோம். தேசிய நெடுஞ்சாலயிலிருந்து ஆனந்தபுரம் சந்திப்பில் சற்று திரும்பவேண்டும். அந்த திருப்பத்தில் வண்டியை நிறுத்தி அங்குள்ள மார்க்கெட் காவலரை ‘பூந்தி’ எத்தனை தூரம் என்று கேட்டேன். அவர் சிரித்து ‘பூந்தி’ இல்லை சார் அது போனி.. இங்கிருந்து நேராக 12/13 கி.மீ போகவேண்டும் என்றார். என் மகள் கூட வந்தவள் ‘பெயரை சரியாக ஞாபகம் வெச்சுக்கோப்பா - வேண்டுமானால் காய்கறி ‘போணி’ பண்ணுங்க’ன்னு சொல்றாங்க.. அதை ஞாபகம் வெச்சுக்கோ’ என இலவச உபதேசம் செய்தாள். அப்படியே பேசிக் கொண்டே போகையில் மறுபடி யாரையாவது கேட்கலாம் என்று தோன்ற, வழியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்தவரை ‘இந்த ‘தோனிக்கு’ இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும்? என்று கேட்டவுடன், என் மகள் சிரித்துவிட்டாள். அப்பா.. அது தோனி இல்லே.. போணி.. என்றாள். அந்தக் கிராமத்துக்காரரோ ‘ஓ.. போனி’யா.. இதோ இன்னும் இரண்டு கிலோமீட்டர்தான். இந்தப் பக்கமாகப் போங்கள்’, என்றார். ‘சரி.. இந்தப் பெயர்க் குழப்பத்துக்கு ஒரு முடிவுகட்டுவோம்.. உனக்கு ஸ்ரீதேவி தெரியுமில்லையா.. அவர் கணவர் பெயர் போனிகபூர்.. இந்த போனியை ஞாபகம் வைத்துக் கொள்வது எளிது’ என நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தபோதே அந்த கிராமமும் வந்துவிட்டது.

சிறிய கோவில். கிராமத்துக்கே உரித்தான சூழ்நிலையில் சுகமாக வெளியே இருந்து கண்களுக்குக் காட்சியளித்தது. சின்னக் கோபுரம், ஒரியக் கலை அமைப்புடன் கட்டப்பட்டது. சற்று தள்ளி ‘கோஸ்தானி’ எனும் நதி குறைந்த தண்ணீருடன் அமைந்திருக்க, நதிக் கரையில், அந்தக் காலத்தில் கட்டப்பட்டது என கண்டவுடனேயே புரிந்தது. கோயில் உள்ளே சென்றோம். நாங்கள் கர்ப்பக்கிருகம் செல்வதற்கும் சந்திரா குழுவினர் பூஜையை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்ததது. நாங்களும் கலந்துகொண்டோம். தினப்படி பூஜை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றும் தெரிந்துகொண்டோம்.

இறைவன் பெயர் அமரேசுவரர். லிங்கப் பிரதிஷ்டையின் மூலம் கிடைத்த அபூர்வமான அதிர்வு நம்மை மெய்மறக்கவைக்கிறது. கிராமத்துப் பெரியவர் ஒருவர் இது தேவர்களால் கட்டப்பட்டது என்றார். அதனால் அமரேசுவரர் என்று பெயர் வந்திருக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார். கோயில் பிரகாரத்தை (அமரலிங்கேசுவரை சுற்றியுள்ள சுவரில், முதலில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும் தெற்கு நோக்கி செதுக்கப்பட்டிருக்கிறார்கள். பின்பக்கச் சுவரில் விஷ்ணுமூர்த்தியும், வடக்குப்பக்கத்தில் முதலில் பிரம்மனும், அடுத்து துர்க்கையும் செதுக்கப்பட்டிருந்தார்கள். துர்க்கை விஷ்ணு துர்க்கையாவார். சங்கும் சக்கரமும் கையேந்தி கம்பீரமாக இருக்கும் துர்க்கையின் வடிவம் சற்று சிதைந்து காணப்பட்டாலும், துர்க்கையின் எழில் முகம் களையாகத் தெரிகின்றதைப் போல ஒரு தோற்றம். ஆனால் எல்லாச் சிலைகளையுமே வெள்ளைச் சுண்ணாம்பினால் கெட்டியாக அப்பி அடித்துவிட்டிருக்கிறார்கள் கிராமத்தார்கள். காரை படிந்து ஆங்காங்கே உடைப்பு வேறு காணப்பட்டது.

அவர்களுக்கு விளக்கினோம். விநாயகர் முதல் துர்க்கை வரை ஆராதிக்கப்பட வேண்டிய தெய்வங்களை இப்படி வெள்ளைச் சுண்ணத்தை அப்பி அடித்து அழகான முகங்களை மறைத்துவிட்டதை சொல்லி விளக்கினோம். ஒவ்வொரு சிலையின் மேலும் உள்ள சுண்ணத்தை எடுக்கவேண்டிய கட்டாயத்தினையும், பிறகு அவர்களுக்கும் செய்யவேண்டிய பூசை விதானத்தையும் விளக்கிச் சொன்னோம். உள்ளே கோவிலில் மேற்பாகக் கல்லில் கல்வெட்டுகள் தெலுங்கில் பதிவாகி உள்ளன. தெலுங்கு ஏறத்தாழ படிக்கும் வகையில் இருந்தாலும் சரியாக படியெடுக்கமுடியவில்லை. தெரிந்தவரை தெலுங்கு மலை ராஜாக்களான (B)போயர்களின் தலைவன் பெயர் ஒன்று (த்ருபால போயராஜா) காணப்படுகின்றது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (B)போயர்கள் இங்குள்ள மலைப்பகுதிகளில் நேர்த்தியாக ஆண்டுகொண்டிருந்ததை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே எழுதி இருக்கிறார்கள். போயர்கள் வேதசாத்திரம் பயின்றவர்கள் என்பதும், இந்த காலகட்டத்தில் அவர்கள் ஆங்காங்கே கோயில்கள் கட்டியதும், அவைகள் கல்வெட்டில் பதிவாகி உள்ளது. அத்துடன் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டின மாவட்டங்களில் கோவில்களுக்கு போயராஜாக்கள் நிவேதனம் அளித்தவை (முக்கால்வாசி, ஆடுகள் அளித்தவைதான்) பதினோராம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் காணப்பட்டு ஏ.எஸ்.ஐ பதிவு செய்துள்ளது (South Indian Inscription series IV,735,765,766,780,781, series V,156,172,188, series VI, 96, 905,910,921,etc.)

எப்படி இருந்தாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கோவில் இங்கே இருந்திருக்கவேண்டும். அதுவும், ஆற்றங்கரையில் கோயில் ஆகமவிதிகளுக்கேற்ப கட்டப்பட்ட கோயில். உள்ளே ஆவுடையாருடன் அமரேஸ்வரர் கோயில் கொண்டிருந்ததால் அம்பாளுக்குத் தனிக் கோயில் ஆதி காலத்தில் கட்டப்படுவதில்லை.

வெளியே இரண்டு கற்சிலைகளை எங்கள் பார்வைக்காக நிமிர்த்தி எடுத்துவைத்திருந்தனர். சிலைகளைப் பார்த்ததும் நிஜமாகவே அதிர்ந்து போனோம். அற்புதமான கலைப் பொக்கிஷங்கள். யாரும் அறியாமல் கேட்பாரற்றுக் கிடக்கிறது. ஒன்று லக்ஷ்மி நாராயணர், இன்னொருவர் பிட்சாடணர்.



அகலகில்லேன் இறையுமென சொல்லும் அலர்மேல் மங்கையான மகாலக்ஷ்மி நாராயணனுடன் ஒட்டி அமர்ந்திருக்க, சங்கு சக்கரதாரியான நாராயணனின் தாமரைப் பாதங்களின் அடிக்கீழ் அவனைப் பணிந்திருக்கும் ஒரு ராஜாவும் அவன் இரு மனைவியரும் செதுக்கப் பட்டிருக்கிறார்கள். கலிங்கப் பெண்கள் பாணியில் அந்த ராணிகள் முடியை ஒரு பக்கத்தில் முடிந்திருக்கும் பாங்கையும் மிக அழகாக செதுக்கியுள்ளான் சிற்பி. அதே போல பிட்சாண்டவர்.

சிவன் தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தைப் போக்க பிட்சாண்டவராக வந்த கதை எல்லோருக்குமே தெரியும். நண்பர் விஜய் அவர்களின் வலைப்பகுதியில் (http://www.poetryinstone.in/lang/ta/2008/09/page/2) ஒரு சிறப்புப் பதிவு கூட செய்யும் வாய்ப்பும் பாக்கியமும் கிடைத்தது. இங்குள்ள பிட்சாண்டவர் நம் தமிழ்நாட்டுக் கோயில் சிற்பம் போலவே இருப்பதுதான் சிறப்பு. அதிலும் தாருகாவனத்து முனிவர்கள் யாகம் வளர்த்து சிவன் மேல் விஷக் கொம்புடைய மானை ஏவிவிட, அந்த மான் சிவனைப் பற்றுவது (காலடியின் பக்கம்) போல சிலையை வடித்திருக்கும் பாங்கு மிகவும் கவர்ந்தது.

கிராமத்து மக்களுக்கு ஒரு கவலை. ‘இப்படித்தான் சார் திடீரென சிலபேர் வருவார்கள். ஆஹா.. ஓஹோ எனப் புகழ்வார்கள்.. பிறகு மறைந்துவிடுவார்கள், என்றார்கள்.’ எனக்கு அவர்கள் கவலை புரிந்தது. முதலில் கோயிலை துப்புறப்படுத்தச் சொன்னோம். கோயில் சிலைகளையும் சரியான முறையில் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்றோம்.

தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் அமரேஸ்வரர் கவர்ந்துகொண்டார் என்றே சொல்வேன். நண்பர்களிடமும் சொல்லியிருக்கிறேன். விரைவில் இன்னொரு பயணம் உண்டு என்றும் தோன்றுகிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

Labels: , ,