திருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு மாறவேண்டுமா?
அகிலமும் காக்கும் வேங்கடவனின் தரிசனம் இம்முறை சென்றபோது கொஞ்சம்
தாமதமாகத்தான் கிடைத்தது. எல்லோருக்கும் பொதுவாகவே திருப்பதியில் நிகழும் தாமதத்தை
ஏதோ மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு நான் பெரிதுபடுத்துவதாக நினைக்கவேண்டாம், ஏனெனில் எனக்கெனப்
பார்க்கும்போது இந்த தாமதத்தை வைத்து பல விஷயங்களை திருவேங்கடவன் எனக்கு உணர்த்தியுள்ளதாகத்தான் பட்டது. ஏது செய்கினும் காரண காரியம் இல்லாமல் அவன் செய்யமாட்டான் என்பதில் எனக்குத்
தனிப்பட்ட வகையில் அவனோடு பல அனுபவங்கள் உண்டு.
நான் திருவேங்கடவன் மலைக்கு எத்தனையாவது முறையாகச் சென்றேன் என்று கணக்கு
வழக்குக் கிடையாது.. கணக்கிலும் அடங்காது. மாதாமாதம் விஜயவாடாவிலிருந்து பௌர்ணமி
நாளன்று இரவு கோயிலைப் பார்க்கவேண்டுமென்று சென்ற மாதங்கள் எத்தனையோ.. இங்கிருந்து
நானும் சென்னையிலிருந்து என் சித்தப்பாவும் திட்டம் போட்டுக் கொண்டு திருமலை சென்று சுப்ரபாத
சேவைக்காக அவனைக் கண்ட காட்சிகள் எத்தனையோ.. ஒருமுறை (1980 களில்) மிக மிக
ஏகாந்தமாக திருவேங்கடவன் இருக்க, திருமலையிலும் பக்தர் நடமாட்டம் கைவிரல்
எண்ணிக்கையில் இருக்க, ஒரே நாளில் பதினான்கு முறை பொது வழிமூலமே ஓடோடி வந்து தரிசித்து மகிழ்ந்த காட்சிகள் அதன் மூலம் கிடைத்த பிரசாத லட்டுகள் (சிறிய அளவில்) பதினான்கும் மனதில் வலம் வருகின்றன.
சமீப வருடத்தில் ஒரு மகாசிவராத்திரியில் ஏறத்தாழ ஒரு மணிநேரம் அவன் சன்னிதிக்குள்
என்னை இருக்கவைத்து அவன் வேடிக்கைப் பார்த்த நிகழ்ச்சியும் கண் முன்னே வலம்
வருகிறது. சென்ற 2004 ஆம் ஆண்டில் புத்தகம் எழுதவேண்டும் என்பதற்காக அன்றைய தேவஸ்தான
செயல் அதிகாரி சன்னிதிக்குள் இருக்க பத்து
நிமிடம் அனுமதித்தும், மக்கள் தொடர்பு அலுவலர் அனுமதிக்காத நிலையில் அவரிடம்
கோபித்துக் கொண்டு அந்த அனுமதியை உதறி ரூ 50 டிக்கெட்டில் அரைமணி நேரத்தில் உள்ளே சென்றதோடு
மட்டுமல்லாமல் அந்தக் குறிப்பிட்ட சமயம் சன்னிதிக்குள் நைவேத்திய சமயமாக அன்று
சற்று தாமதமாகிவிடவே என்னுடன் ஒரு சிலரோடு சந்நிதிக்குள்ளேயே இருபது நிமிடத்துக்கும் மேலாக நிற்கவைத்து
எனக்கு அவன் புரிந்த கருணையும் அப்படியே மனக் காட்சியில் வலம் வருகிறது. புத்தகத்தில்
எழுத சன்னிதி உள் அறை காணவேண்டுமென்பதற்காக பத்து நிமிடங்கள்தான் கேட்டேன். ஆனால் மற்றவர்கள்
மறுத்தவுடன் அவனை நான் நேரடியாக நாடியபோது இரண்டு மடங்காகக் கொடுத்த வள்ளலைப்
பற்றி எவ்வளவு புகழ்பாடினாலும் தகும். அவனோடுதான் எத்தனை அனுபவங்கள்.. அவனுக்கும்
எனக்கும் உள்ள பந்தம் எத்தனை யுகங்கள் கடந்ததோ என் நினைக்க வைக்கும் பாங்கு அவன்
ஒருவனிட்த்தில் மட்டும்தான் உண்டு. நான் என்றில்லை அவன் பக்தர் எல்லோருக்குமே
அவனிடம் ஏதாவது ஒருவகையில் ஏதாவது ஒரு அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பதை
அவர்கள் அனைவருமே உணர்ந்திருப்பர். நான் மட்டுமே அவனுக்கு சிறப்பில்லை,..தன்னை நாடி வரும் அனைவருக்குமே கண் கண்ட தெய்வம் அவன். அதனால் அவன் பக்தர் ஒவ்வொருவருக்குமே அவன் சிறப்பானவன்.. அவர்களும்
அவனுக்கு மிக நெருங்கியவர்கள்தான்.
இப்படி உண்மையை உணர்ந்தவன் எதற்காக இதையெல்லாம் பெரிதாக பீற்றிக் கொள்கிறாய்
என்று கேட்கலாம். இத்தனை சிறப்புகள் செய்தவன் இம்முறை வேறு சில விஷயங்களையும்
உணர்த்தியுள்ளான். இத்தனைக்கும் 300 ரூபாய் டிக்கெட் எடுத்து ஏற்கனவே சில முறைகள்
சென்றவன்.. ஒரு மணிநேரத்துக்குள் தரிசனத்தை முடித்துக்கொண்டவன் கூட.. அப்படித்தான்
இம்முறையும் இருக்கும் என்று நினைத்தவன்தான். ஆனால் ஏறத்தாழ நான்கரை மணி நேரம் காலத்தை
நகர்த்தி பல காட்சிகளைக் காண வைத்தான். இத்தனைக்கும் நான் சென்ற நாள் வாராந்தர
சாதாரண நாள்.. அதுவும் புதன்கிழமை மதியம்.. பொதுவாக பண்டிகைக் காலம் தவிர ஏனைய
காலகட்டத்தில் ஞாயிறன்று மதியம் முதல் கும்பல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்து
வார மத்ய நாட்களில் வெகுவாகக் குறைந்து மறுபடியும் வெள்ளி இரவு முதல் அதிகப்பட
ஆரம்பிக்கும். ஆகையினால் புதனன்று மதியம் கூட்டமில்லா நாளில் ரூ 300 டிக்கெட்டில்
நான் சென்றதென்பது ஒரு அரைமணி அல்லது ஒரு மணி நேரத்தில் தரிசனம் முடியவேண்டும். ஆனால்
அன்று வேறுவிதமாக்க் கண்டேன். அதாவது அப்படி ‘அவன்’ எனக்குக் காண்பித்தான்.
வரிசை அல்லது க்யூ என்பது எப்படியெல்லாம் தாறுமாறாகப் பயன்படுத்தப்படுகிறது
என்பதையும் அங்கே காண்பித்தவன் அந்த வரிசையில் பக்தர் படும் அவதிகளையும்
தெளியவைத்தான். இந்த முறை 300 ரூபாய் டிக்கெட்டுக்காரர்களும் 50 ரூபாய் டிக்கெட்காரர்களும்
ஒன்றாக கலக்கப்பட்டார்கள். யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள் யாருக்குமே காரணம்
சொல்லத் தெரியவில்லை. ஏனெனில் அந்த இடங்களில் வேலை செய்வோர் பொதுவாகவே இறைவனுக்காக
வேண்டி ஆந்திராவின் பல இடங்களிலிருந்தும் தாமாக வந்து இலவச சேவை செய்பவர்கள்.
அவர்களை ஆட்டுவிப்போர் அங்கே வேலை செய்யும் தேவஸ்தான ஊழியர்கள். ஆகையினால் இந்த
சேவகர்களைக் குற்றம் சொல்லமுடியாதுதான். ஆனால் அவர்களுக்கு ஊழியர்களின் கட்டளை அந்த
ஊழியர்களின் இஷ்டத்துக்குத் தகுந்த மாதிரி வருகிறது என்பதையும் அங்கு நிலவி இருந்த குழப்ப நிலை தெளிவாகவே தெரிவித்தது.. ஊழியர்களுக்கு பக்தர்களைப் பற்றிய எந்தவிதக் கவனமும் தேவையற்றது என்ற மனோபாவத்தையும் காணச்செய்ததுதான்
ரூ 300 டிக்கெட் வாங்குமுன்னே பாதுகாப்பு முறைகள் அமல்படுத்தப்படுகிறதுதான்.
அதன்பிறகுதான் டிக்கெட்டையே வழங்குகிறார்கள். முன்னூறு ரூபாய்க்காரர்களை முதலில் வைகுண்டம்
காம்ப்ளெக்ஸில் நான்கு அகலமான அறையில் எல்லோரையும் சிறை பிடிப்பது போல அடைத்து
வைத்து வெளியே கேட்டையும் மூடி பெரிய திண்டுக்கல் பித்தளை பூட்டையும்
பூட்டினார்கள். ஒரு மணி நேரம் சென்றதும் ஒரு அறை திறக்கப்பட்டது. முன்பக்கம்தான்
செல்வார்கள் என்று எதிர்பார்த்தால் அப்படி அல்லாமல் ‘ஓடுங்க’ என யாரோ தெலுங்கில் கூக்குரலிட எல்லோரும் எங்கேயென்று தெரியாமல் பின்பக்கமாக
ஓட மறுபடியும் வைகுண்டம் காம்ப்ளெக்ஸ் வாசல் வரை வந்து பின் திருப்பப்பட்டு, சில
படிகள் ஏறி, சில படிகள் இறங்கி, ஒரு சில சந்துகளில் நுழைந்து ஆங்காங்கே மறுபடியும்
செக்யூரிடி பரிசோதனைகளில் சிக்கி, அரை மணி நேரம் நிற்கவைத்து, மறுபடியும் மெல்ல
ஊர்ந்து நெருக்கி நகர்ந்து மெல்ல மெல்ல முன்னேறி வெளிகோபுர வாசலில் இன்னொரு முறை செக்யூரிடி
பரிசோதனை செய்தபின்னர் கோபுர வாசல் வழியாக நுழைந்து பிறகு உள்ளே ஒரு சுற்று
சுற்றும்போது அது அப்படியே நிறுத்தப்பட, பின் மறுபடியும் திரும்பி வெளிக்கோயில்
வாசல் வந்து பின் நேராக இரண்டாம் கோபுர வாசலுக்கு முட்டி முந்தி தள்ளுதலோடு
தள்ளப்பட்டு பிறகு கூட்டமாக முந்திக் கொண்டு திருவேங்கடவன் சன்னிதிக்குள்
நுழைந்து உடனடியாக அவன் தரிசனத்தைப் பார்த்து பிறகு சன்னிதி வெளியே சுதந்திரமாகத்
தள்ளப்பட்ட சூழ்நிலையை எப்படி விவரிப்பது..
என்ன வேடிக்கையென்றால் அவன் சன்னிதி வரை கூட்டமாகத் தள்ளப்பட்டு முண்டியடித்து
வரும் கூட்டம் அவனைக் கண்டு சன்னிதியை விட்டு வெளியே வரும்போது அதற்குக்
கட்டுப்பாடில்லை.. சாதாரணமாக ஒரு கோயிலுக்குள் சென்றால் எப்படி இருக்கிறோமோ
அப்படியே கட்டுப்பாடில்லாமல் அத்தனை பேரும் உலாவுகின்றனர். பிரகாரம் சுற்றுகின்றனர். பின்னால் சென்று அவனுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரமும் செய்யலாம். பிரசாதம் வாங்குகின்றனர். அங்கேயே சாப்பிட்டு குழாயில் தண்ணீரும்
குடித்து நிதானமாக வெளியே வருகின்றனர். வரும்போது இருந்த கட்டுப்பாடுடன்
முண்டியடித்துத் தள்ளப்பட்ட கூட்டம் இப்போது பரவலாக்கப்பட்டதும் எவ்வித
கவலையுமில்லாமல் ஒழுங்காக செல்ல முடிகின்றதே.. பரபரப்போ, தொல்லைகளோ இல்லாமல் சாதாரணமாக செல்லும் கூட்டத்தை யாரும் கட்டுப்படுத்துவதில்லையே.. இந்த சூட்சுமத்தை இந்த அதிகாரிகள்
இத்தனை காலமாகப் பார்த்தும் ஏன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை..
கேள்விகள்..கேள்விகள்.
இதை விட கோரம் என்னவென்றால் இந்த க்யூ காம்ப்ளெக்ஸ் என்பது ஏறத்தாழ ஒரு பெரிய சிறைக்கூடம்தான்.
இந்த க்யூ (வரிசை) செல்ல இவர்கள் கட்டிவைத்த வழிகளைப் பார்க்கவேண்டும்.. பல்லி கூட வெளியே
வரமுடியாதபடியான இரும்புச் சட்டங்களைப் பொருத்திய பாதாளப்பாதை வழிகள் பார்க்கவேண்டுமே.. கூட்டம்
அந்த வழியே செல்லும்போது அங்குள்ள பக்தர்களைப் பார்க்கவேண்டும். இறைவனைக் காணவேண்டுமே
என்கிற ஏக்கத்தில் எந்த வித கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் முட்டிக்கொண்டே
முன்னேறிச் செல்லும் கூட்டம். எத்தனைவிதமாக குறுக்குச் சந்துகள் ஏணிப்படிகள்,
இறங்குப் படிகள் இருந்தாலும் ஒரு குறையும் சொல்லாமல் ‘கோவிந்தா’ எனும் நாமத்தை மட்டுமே உரக்கக் கத்திக் கொண்டே
செல்லும் கள்ளம் கபடமில்லா பக்தர்களின் கூட்டத்தை இப்படியா சிறைக் கைதிகளைப் போல நடத்துவது!. சிறார்கள் பெண்கள், முதியோர்கள் இவர்கள் எல்லோருமே கூட்டத்தோடு கூட்டமாக முண்டியடித்துச் செல்வதைக் காணும்போது ஏன் இந்த தேவஸ்தான அதிகாரிகளுக்கு பரிதாபம் வருவதில்லை..
ஆண்டவனை தரிசிக்க நம்பிக்கையோடு வரும் பக்தர்கள் மீது கோயிலை ஆளும் மேன்மையானவர்களுக்கு சிறிதும் நம்பிக்கையில்லைதான். அந்த க்யூ வரிசைப் பாதையைச் சுற்றி வேலி போல இப்படித்தான் இரும்புக்கம்பிகளால் ஈ எறும்பு கூட நுழையாத அளவில் கட்டவேண்டுமா.. பக்தர்கள் என்ன அவ்வளவு கேவலமானவர்களா? க்யூவில் வருபவர்கள் அனைவரும் கட்டுக்கடங்கமாட்டார்களா.. சொன்னால் ஒழுங்கான முறையில் செல்லமாட்டார்களா.. அவர்கள் தப்பிக்க வழியில்லாத அளவில் இந்த வரிசைத் தளத்தையும், வழியையும் கட்ட வேண்டிய அவசியமென்ன.. தளத்தை ஆட்டு மந்தை போல பக்தர்களால் நிரப்பி ஏன் வெளியே கதவை மூடி பூட்டு பூட்ட வேண்டும்? திருவேங்கடவன் பக்தர்கள் என்ன திருடர்களா.. ஏன் இவர்களைப் பார்த்து பயமா? இல்லை இவர்கள் மனிதர்களாக இந்த மேன்மையாளர் கண்ணுக்குத் தென்படுவது இல்லையா? அல்லது அடிமைகளா.. இப்படித்தான் இவர்கள் நடத்தப்படவேண்டுமா.. இந்த ஆயிரமாயிரம் ஏழை எளிய பக்தருக்காக அவர்களின் சந்தோஷத்துக்காக, அவர்கள் பூவுலகில் படும் கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக திருவேங்கடத்தான் கால் வலித்தாலும் வலிக்காவிட்டாலும் சதா நின்ற திருக்கோலத்தில் இங்கே காத்திருக்கிறான் என்பது இந்த மேன்மையாளர் உணர்வார்களா? இந்த எளியவர்கள் இல்லத்தில் பூசித்து கோரிக்கையாக முடித்து வைத்திருந்த காணிக்கையால் திருமலைக் கோவில் உண்டியும் நிரம்பி வழிவதன் உண்மை புரியுமா? திருமலை திருவேங்கடவன் மனதுக்கருகில் எப்போதும் இருக்கும் இந்த எளியவர்களை காலம் கடத்தாமல் சேர்ப்பிக்கும் கலையைக் கற்கவேண்டும் என்ற உந்துதல் இவர்களிடம் இருக்கிறதா.. லட்டு விற்பதற்கென மிகப் பெரிய பலமாடிக் கட்டடத்தை கோயில் அருகேயே கட்டியவர்களுக்கு பக்தர்களுக்கென நல்ல பாதை அமைத்து அழைத்துச் செல்லத் தெரியாதா..
நிச்சயமாக இந்த நவீனகாலகட்டத்தில் வசதிகள் ஏராளமாக இருக்கின்றன. எத்தனையோ நவீன கட்டுமான இயந்திரங்கள் தற்சமயம் குறைந்த கால அளவில் வேலை செய்யத் தோதாக வந்து விட்டன. எத்தனையோ எந்திர வசதிகள் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் இந்தியாவிலேயே கிடைக்கின்றன. இவைகளைக் கொண்டுஒரு சாலை மேம்பாலமே ஒரு குறுகிய கால கட்டத்தில் கட்டி முடிக்கப்படமுடியும்.
ஆண்டவனை தரிசிக்க நம்பிக்கையோடு வரும் பக்தர்கள் மீது கோயிலை ஆளும் மேன்மையானவர்களுக்கு சிறிதும் நம்பிக்கையில்லைதான். அந்த க்யூ வரிசைப் பாதையைச் சுற்றி வேலி போல இப்படித்தான் இரும்புக்கம்பிகளால் ஈ எறும்பு கூட நுழையாத அளவில் கட்டவேண்டுமா.. பக்தர்கள் என்ன அவ்வளவு கேவலமானவர்களா? க்யூவில் வருபவர்கள் அனைவரும் கட்டுக்கடங்கமாட்டார்களா.. சொன்னால் ஒழுங்கான முறையில் செல்லமாட்டார்களா.. அவர்கள் தப்பிக்க வழியில்லாத அளவில் இந்த வரிசைத் தளத்தையும், வழியையும் கட்ட வேண்டிய அவசியமென்ன.. தளத்தை ஆட்டு மந்தை போல பக்தர்களால் நிரப்பி ஏன் வெளியே கதவை மூடி பூட்டு பூட்ட வேண்டும்? திருவேங்கடவன் பக்தர்கள் என்ன திருடர்களா.. ஏன் இவர்களைப் பார்த்து பயமா? இல்லை இவர்கள் மனிதர்களாக இந்த மேன்மையாளர் கண்ணுக்குத் தென்படுவது இல்லையா? அல்லது அடிமைகளா.. இப்படித்தான் இவர்கள் நடத்தப்படவேண்டுமா.. இந்த ஆயிரமாயிரம் ஏழை எளிய பக்தருக்காக அவர்களின் சந்தோஷத்துக்காக, அவர்கள் பூவுலகில் படும் கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக திருவேங்கடத்தான் கால் வலித்தாலும் வலிக்காவிட்டாலும்
நிச்சயமாக இந்த நவீனகாலகட்டத்தில் வசதிகள் ஏராளமாக இருக்கின்றன. எத்தனையோ நவீன கட்டுமான இயந்திரங்கள் தற்சமயம் குறைந்த கால அளவில் வேலை செய்யத் தோதாக வந்து விட்டன. எத்தனையோ எந்திர வசதிகள் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் இந்தியாவிலேயே கிடைக்கின்றன. இவைகளைக் கொண்டுஒரு சாலை மேம்பாலமே ஒரு குறுகிய கால கட்டத்தில் கட்டி முடிக்கப்படமுடியும்.
ஆனால் சாத்திரங்களை மீறி ஒன்றும் செயல்படமுடியாது என்று சொல்வார்களோ என்று
பார்த்தாலும் அதற்கும் பதில் உண்டு. இதை அடுத்த பகுதியில் விளக்க முயல்கிறேன்.
தொடரும்...
(வம்சதாராவில் இது என்னுடைய நூறாவது பதிவு எனும்போது அதுவும் கோவிந்தனைப் பற்றிய பதிவு எனும்போதும் நெஞ்சம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. இத்தனைக்கும் காரணமான அந்த இறைவனுக்கும் வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.. ஓம் நமோ வெங்கடேசாய)