புகழ்பெற்ற சில்கூர் (ஹைதராபாத்) வேங்கடநாத பெருமாள் கோயிலின் பிரதான அர்ச்சகரும், ஆந்திரதேசத்திலே கோயில்கள் பாதுகாப்புக்காக சிறப்பாக பாடுபடுபவருமான ஸ்ரீமான் சௌந்தர்ராஜன் அவர்கள் சமீபத்தில் ஒருநாள் மதியம் திடீரென தொலைபேசியில் வந்தார். “நான் விசாகப்பட்டின மாவட்டத்தில் பஞ்சதாரா தலத்தில் உள்ள ஆலயத்தினைத் தற்சமயம் பார்த்துவிட்டு ஹைதராபாத் திரும்பிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒருமுறை அங்கு சென்று வாருங்கள். நிறைய பணிகள் செய்யவேண்டி இருக்கிறது. ஒரு பழமையான ஆலயம் இப்படிப்பட்ட நிலையில் இருக்கவிடலாமா.. நம்மால் முயன்றதைச் செய்வோம்..” என்றார். அத்தோடு பாகவதுல டிரஸ்ட் திரு பரமேஸ்வரராவ் அவர்களையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவலையும் வெளியிட்டார். அவரும் இந்தக் கோயில் திருப்பணியில் மும்முரமாக இருப்பதால் நாம் செய்யவேண்டிய வேலைகள் சுலபமாக செய்யமுடியும் என்று சொல்லிவிட்டு தன்னுடன் இருந்த திரு பரமேஸ்வரராவையும் பேசவைத்தார்.
சரி, விஷயத்துக்கு வருவோம். ஆந்திரத்தில் என்றல்ல, பொதுவாகவே நம் நாட்டில் பழைய கோவில்கள் பராமரிப்பு என்றாலே அரசாங்கமும் சரி, பொதுமக்களும் சரி, அக்கறை காட்டுவதில்லைதான். எத்தனையோ பழைய கோயில்கள், அங்குள்ள கலை நேர்த்தியான சிற்பங்கள் பாழடைந்து சீரடைந்து வந்தாலும் இந்தக் கோயில்களுக்கு புனர் உதவி இப்போதெல்லாம் கிடைப்பது அரிதாகிவிட்டது. வெளிநாட்டில் ஒரு நூற்றாண்டு பழசானால் போதும்.. அதை மிகப் பாதுகாப்பாக வைத்துக் ஏகப்பட்ட நிதிகள் ஒதுக்கி பாதுகாக்கிறார்கள். நம் நாட்டில் மிக மிக சிரமம் எடுத்துச் செய்தாலன்றி ஆயிரம் ஆண்டு அல்லது ஈராயிரம் ஆண்டு பழமைகள் சீண்டுவார் இன்றி ஆங்காங்கே சிதறிக் கிடப்பது சகஜம்தான் என்பதை நினைக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.
அழகான சின்ன மலைவரிசை சூழ்ந்த பஞ்சதாரா எனும் ஊரில் எந்தவிதக் கவலையுமின்றி இந்த மனிதன் தொந்தரவே வேண்டாமெனச் சொல்வது போல சிவனார், தர்மலிங்கமெனும் நாமம் கொண்டு தனக்கென ஒரு கோயில் கட்டிக் கொண்டு அருளாட்சி செய்து வருகிறார். அவ்வப்போது சுற்றுமுற்று கிராமத்து மக்கள் இந்த பஞ்சதாரா (ஐந்து அருவி என தமிழில் சொல்வதுண்டு) சுற்றுலா வருவது போல இந்த ஆலயத்துக்கும் வருகிறார்கள். வனாந்தரம் போலும் இல்லாமல் அதே சமயத்தில் பாதுகாப்பான இடமாகவும், உள்ளே செல்ல சாலை வசதியும் (உபயம்: திரு பரமேஸ்வரராவ், பாகவதுல சாரிடி டிரஸ்ட்) இருப்பதால் மக்களுக்கு வர சௌகரியமாக இருக்கிறது. ஆனால் இந்த அழகான பழைய கோயில் ஏன் சரிவர பராமரிக்கப் படாமலும், வெளியே தெரிய வராமலும் இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.
எங்கு பார்த்தாலும் லிங்கங்கள் சிதறிக்கிடக்கின்றன போல ஒரு தோற்றம். கோயில் வெளியே கால் வைப்பதற்கே சிரமப்படுகிறோம். எந்தக் கல் சாதாரணக் கல் அல்லது லிங்கம் பூமியில் பதிந்த நிலையில் இருக்கிறதா என்பது தெரியாத நிலை.இந்தக் கோயில் சாதாரணமாக வெளிப்பார்வைக்கு புனரமைக்கப்பட்டு இருந்தாலும் சரியாக பழமையும் பெருமையும் பாதுகாக்கப்படவில்லை என்பது அங்கே சென்று பார்த்தால்தான் தெரியும். முதலில் எங்கும் நெருடும் லிங்கங்கள். பாழடைந்த நிலையில் சிறு சிறு அரங்கங்கள். அரங்கத்தின் தூண்களில் சிற்பங்கள் அனைத்தும் பாழடைந்துவிட்டது போல இருக்கும் நிலையில் புண்ணியவான்கள் சுண்ணாம்பை அப்படியே நிரவிவிட்டார்கள். ஒரு தூணில் சிற்பம் சோழ சக்கரவர்த்தி ராஜேந்திர காலத்து (1012-1044) அரச முத்திரையை அப்படியே செதுக்கப்பட்டிருப்பது கூர்ந்து கவனிக்கும் பட்சத்தில் தெரிய வருகிறது. இன்னொரு தூணில் யாழி சிற்பம் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. பாறைக்கல்லின் ஒவ்வொரு வளைவையும் சிற்பி எத்தனை நாட்கள் அங்கே உட்கார்ந்துகொண்டு செதுக்கினானோ, அத்தனையும் மிக மிக நேர்த்தியான அளவில் அழகாக செதுக்கியிருக்கிறான். அது சின்ன அரங்கம் என்று தெரிகின்றது. அக்காலத்து நடன நிகழ்ச்சி அல்லது சொற்பொழிவுக்காக நிர்மாணித்திருக்கலாம். ஆனாலும் ஆயிரம் ஆண்டு பழமை இடிந்துகொண்டே போகின்றதே..
கோயிலில் தர்மலிங்கஸ்வாமியாக எழுந்தருளியிருக்கும் பெருமான் ஆதியில் மகிஷாசுரமர்த்தனியோடு மட்டுமே அங்கு இருந்ததற்கான அடையாளத்துக்காக இன்னமும் எட்டு கைகளோடு கூடிய தேவியின் மகிஷாசுர மர்த்தனி அவதாரம் சுவாமியின் அருகிலேயே அருளாட்சி புரிந்தாலும், இவர்கள் இருவர் மத்தியில் சாந்த சொரூபியாக உமாதேவியை வைத்து பூசை செய்து வருகிறார்கள். கோயில் பிரஹாரத்திலேயே கோயில் புதுப்பிக்கப்பட்டதற்கான பழைய நிவந்தன கல்வெட்டு ஒன்று உள்ளது. இதைத் தவிர கோவில் வெளியே உள்ள நுழைவாயில் சுவரில் இரண்டு நூற்றாண்டுகள் முற்பட்ட தெலுங்கு எழுத்துடன் கூடிய ஒரு கல்வெட்டும் உள்ளது. எல்லாமே கோயில் புதுப்பிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டும் கல்வெட்டுகள்தான்.
பாகவதுல சாரிடி டிரஸ்ட் பரமேஸ்வர ராவ் இக்கோயிலுக்காக பெரு முயற்சி எடுத்துவருகிறார். ஏதோ ஒரு அளவுக்கு இன்று அந்தக் கோயில் வழிபாடுகளுடன் செயல்பட்டு வருகின்றது. இது போதாது. கோயில் கருவறை மேற்பரப்பு வெறும் சுண்ணத்தால் ஒவ்வொரு வருடமும் ஏதோ பூசி மெழுகப்பட்டாலும் அது நிரந்தர வழியல்ல. மழை நாட்களில் நிச்சயமாக கஷ்டம்தான். ஆனாலும் இப்படியே ஒவ்வொரு வருடமும் காலம் போய்க் கொண்டே இருப்பதால், போகும் வரை போகட்டும் என இருந்து விடலாமோ.
ஆதியில் கோயில் கட்டும்போதே அந்த அரசர்கள் நீண்டகால நிர்ணயம் செய்துகொண்டுதான் கட்டுகிறார்கள். ஒரு நூறு ஆண்டுகள் இடைவெளியில் தேவைப்பட்ட கட்டுமானப் பணிகள் செய்து புதுப்பித்துக்கொண்டே வந்தார்கள். பழைய கோயில்கள் நாடெங்கும் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் இப்படி புதிப்பிக்கப்படத் தேவைப்பட்ட நேரத்தில் தேவைப்பட்ட கட்டுமானப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதால்தான். ஆனால் இன்றைய நவீன கால கட்டத்தில் மக்கள், இந்த மக்களை ஆளும் ’மக்கள்’ பழமையின் பொக்கிஷத்தை மறந்து போகிறார்கள். மாயமந்திரமும், அதிசயங்களும் நடத்தினால்தான் அது கடவுள், அங்கு இருக்கும் கோயில்களில்தான் கடவுள் வசிப்பார்கள் என்ற மூட நம்பிக்கை இன்றுள்ள நிலையில் மக்கள் மனதில் பரவிக் கிடக்கும் இன்றைய சூழ்நிலையில் இப்படிப்பட்ட பழமையான கோயில்கள் அவர்கள் கண்ணில் படாதுதான்.
(மலையருவியிலிருந்து வரும் தண்ணீரை ஒரு பெரிய குழாய் மூலம் வரவழைக்கிறார்கள் - இதைப் போல மொத்தம் ஐந்து அருவிகள் குழாய்கள் பொருத்தப்பட்ட நிலையில் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த ஊருக்கு பஞ்சதாரா என்று பெயர் ஏற்பட்டது)