Sunday, July 01, 2012

ஏடு தந்தானடி இறைவன் - 5 (தில்லை மூவாயிரவரும் தேவார ஓலைகளும்மேற்கோள் காட்டப் புகுந்தோமானால், புலையராகிய நந்தனாரும் உருத்திர பசுபதியாராகிய வேதியரும் இங்கே ஒருநிகர் ஆவர். நெடுமாறபாண்டியரும், அதிபத்தரும் சமமானவர்கள். மங்கையர்க் கரசியாரும், இசைஞானியாரும் பெண்களின் பிரதிநிதிகள். அதி மேதையாகிய திருநாவுக்கரசரும், படிக்காத கண்ணப்பரும் சரிநிகர் சமானம்
(அருட்செல்வர் திரு நா. மகாலிங்கம் அவர்கள் திருமுறை அணிந்துரையிலிருந்து)

ஆம். சிவபக்தர் என வரும்போது சிவனுக்கு அனைவருமே சமானவர்தாம். இந்தக் கூற்றில் எந்தப் பெரியோருக்கும் விவாத பேதமே கிடையாது. வரவும் செய்யாது.

தில்லை மூவாயிரவர் பற்றி எழுதுமுன் தில்லையில் அந்த சிற்றம்பலத்தே தமிழ் எவ்வாறெல்லாம் சிறந்து விளங்குகிறது என ஒரு முறை மேலோட்டமாகப் பார்ப்போம்.

திருச்சிற்றம்பலத்தான் தானே சுயமாக கேட்டு எழுதி வாங்கிய திருவாசகமும் திருக்கோவையும் முழுவதுமாகக் கிடைக்கப்பட்ட தலம் இது. தீந்தமிழ் பாடி தெய்வத்தோடு மானிடரையும் குளிர்வித்த மாணிக்கவாசகர் இறைவனோடு ஒன்று கலந்த இடம் தில்லையம்பலம். தமிழன்னையின் கூந்தலில் வைரக் கிரீடமாக ஜொலிக்கும் பெரியபுராணம் அரங்கேற்றப்பட்ட இடம் தில்லையம்பலம். திருப்பல்லாண்டு பாடப்பட்ட சைவத்தலம் தில்லையம்பலம். சேரமான் பெருமான் பாடிய தமிழுக்கு ஒப்புதலாகவும் மீட்டும் இசையாகவும் சிலம்பொலி கேட்ட இடம் தில்லையம்பலம். பின்னாட்களில் வந்த முத்துத்தாண்டவர் பாடும் ஒவ்வொரு தமிழ்ப்பாடலுக்கும் இறைவன் கையால் பொற்காசு பெற்ற இடலம் தில்லையம்பலம். அதே முத்துதாண்டவர் தமிழ் பாடிய கையோடு அவனோடு கலந்த இடம் கூட இங்குதான். பெற்றான் சாம்பவன் எனும் தூய பக்தன் தன் முக்திக்காக இறைவனிடமிருந்து சிபாரிசு தமிழ் ஓலை பெற்ற இடமும் தில்லையம்பலம்தான். இப்படி தமிழோடு முற்றும் இணைந்து இன்பம் கொண்டாடும் இந்த தில்லையில் தேவார மூவர்களின் தொடர்பு எத்தகையது என்றால் சொல்லற்கரியதுதான்.


தேவாரமூவர் முதலிகள் தில்லையில் நடனமாடும் சிற்றம்பலத்தான் மீது மட்டுமே பதினொன்று பதிகங்கள், 110 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்கள். மொத்தப் பதிகங்கள் கைக்கு முறையாகக் கிடைத்தவற்றில் மிக அதிகமான அளவில் என்று சிதம்பரத்தான் மீதே பாடியுள்ளார்களோ என்னவோ.. அத்தனை தீந்தமிழ்ப் பதிகங்களும் மிக மிக புகழ்பெற்றவை கூட.. 'அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கும்' என அப்பர் சுவாமிகளின் பாடலை யார்தான் மறக்கமுடியும். இப்படியாக சிறந்த பல பதிகங்கள் பாடப்பெற்ற தில்லைப் பதியைக் கோயில் என்றே அழைக்கிறார்கள். சிவத் திருக்கோயில்களில் மிகவும் சிறப்பான அளவில் தலைமை இடமாகப் பெயர்பெற்றதற்குக் காரணம் தில்லைத் திருச்சிற்றம்பலத்தான் மட்டுமே என்றாலும் இதற்கான ஒரு தேவார நிகழ்வை சற்று அலசுவோம்.

இடம், திருவாரூர் தலம். தேவார முதலிகள் மூவருமே அதிக முக்கியத்துவத்தை (மற்ற தலங்களை விட) கொடுத்துப் பாடிய தலம் இது. அவர்களில் சுந்தரருக்கு மிக அதிக முக்கியத்துவம் இங்குள்ளது. இங்கு குடிகொண்ட தியாகேசர் தன் செல்லப்பிள்ளை சுந்தரர் அதட்டிக் கேட்ட அத்தனையும் செய்து கொடுத்தவர், சுந்தரர் நேசித்த பரவை நாச்சியாருக்குக் காதல் தூது சென்றது முதற்கொண்டு, திருவாரூர் குளத்தில் பொன்மூட்டை வரவழைத்துக்கொடுத்தது வரை எல்லாமே தியாகேசன் தான் அவருக்கு. இப்படிப்பட்ட தியாகேசன் கோயிலில் அடியவர்கள் அதிகம் என்பதைப் பார்த்து சுந்தரருக்குப் பெருமை அதிகமாகிறது. (அப்பர் பாடல்களில் ஒரு இடத்தில் திருவாரூர் திருவாதிரைப் பெருநாள் பண்டிகையை அடியார் சொல்வதாக ஆனந்தம் கொண்டு பதிகம் பாடிய நிகழ்வு உண்டு). சுந்தரர் கதைக்கு வருவோம். நம்பியாரூரான சுந்தரரின் அடியவர் அன்பு கண்ட அந்த தியாகேசன் சுந்தரரை திருத்தொண்டத்தொகை அந்த அன்பு அடியவர்கள் மத்தியில் பாடுமாறு கோருகிறான். . அவன் கோரிக்கை அமுதாக இனித்தாலும், என்ன பாடுவது, அப்படிப் பாடுவது என சுந்தரர் திகைத்து நிற்கிறார்.

நம்பியாரூரர், ``அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்`` என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் ``தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்`` என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார் (சுந்தரர் வரலாறு,)

இறைவனே சுந்தரருக்கு அடியெடுத்துக் கொடுக்கிறான். அவன் கொடுத்த முதல்வரியை வைத்து அவர் தேவாரத்தில் திருத்தொண்டத்தொகையைப் பாடி முடிக்கிறார். இந்தப் பாடல் பின்னாட்களில் நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட, அவை அப்படியே மூலமாக திருத்தொண்டர்புராணமாக சேக்கிழார் மூலமாக உலகமெங்கும் மேலும் திருப்பதிகங்களையும் தேவார முதலிகளையும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதோ சேக்கிழாருக்கும் நம்பியாரூரைப் போலவே தில்லையில் ஒரு நிகழ்வு நடக்கின்றது. சுந்தரமூர்த்தியாருக்கு எப்படி முதல்வரி எடுத்துக்கொடுத்தாரோ அதே இறைவன் தில்லையில் வந்து ‘உலகெலாம்’ எனும் முதல்வார்த்தை எடுத்துக்கொடுக்கிறான். சேக்கிழார் உலகெலாம் உணர்ந்ததோற்கு அரியவனைப் பாடிவிட்டு அடுத்து அவன் திருவாரூரில் சுந்தரருக்கு எடுத்துக் கொடுத்த ‘தில்லை வாழ் அந்தணர் பெருமையையும் பாடுகிறார்.

செம்மையால் தணிந்த சிந்தைத்
தெய்வ வேதியர்க ளானார்
மும்மை ஆயிரவர் தாங்கள்
போற்றிட முதல்வ னாரை
இம்மையே பெற்று வாழ்வார்
இனிப்பெறும் பேறொன் றில்லார்
தம்மையே தமக்கொப் பான
நிலைமையால் தலைமை சார்ந்தார்.

(சிவனான செம்பொருளைச் சிந்தித்திருதலாகிய செம்மை யால், யாவரிடத்தும் பணிவு மிக்க பண்புள்ளம் கொண்டவர்கள். அவர்கள் மூவாயிரவர் ஆவர். தாங்கள் இம்மையிலேயே போற்றி வாழுதற்கு ஏதுவாகக் கூத்தப்பிரானை எளிவந்த அருட்கருணையாள ராகப் பெற்று வாழ்பவர்கள். இப்பெரும் பேற்றினைப் பெற்றிருப் பதால் இதற்கு மேலாயதொரு பேற்றினைப் பெற வேண்டாதவர்கள்; இவ் வகையில் தமக்குத் தாமே ஒப்பாம் நிலைமையில் தலைமை பெற்றவர்கள் தில்லைவாழந்தணர்கள் ஆவர்).
 
அப்படிப்பட்ட பெருமை மிக்க தில்லை வாழ் அந்தணர்களால் மூவர் முதலிகள் பாடிய பாடல்களை மறைத்திருக்க முடியுமா.. அல்லது மன்னன் வந்து கேட்கும்போது மூவர் முதலிகள் வந்தால்தான் அந்தத் தேவார ஓலைகள் உள்ள அறையைத் திறக்கமுடியும் என்று பிடிவாதம் பிடிக்கமுடியுமா.. அந்த அரசன் என்பார் யார்? சாதாரணமானவனா? ராஜராஜசோழன் எனும் மாபெரும் புகழ்பெற்ற பேரரசன். சிவநேசச்செல்வன். அவன் வந்த நோக்கம் பொது நோக்கம். உலகம் உய்ய தேவார ஓலைகளைத் தேடி வந்தவன். அவனுடன் கூட அப்போதே தெய்வப் புகழ்பெற்ற நம்பியாண்டார் நம்பி. அவர்கள் வந்ததே பொள்ளாப் பிள்ளையார் சொல்லி அங்கு வந்தார்கள். பொது மக்கள் அனைவரும் இந்த அதிசய நிகழ்வைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கையில்அவனை அத்த்னை சுலபமாக ’மூவர்கள் வரட்டும், அறையை திறப்போம்’ எனச் சொல்லி ஒதுக்கி விடமுடியாது. எத்தனைதான் அவர்கள் இறைக்கு அடியார் எனப் பெயர் பெற்றாலும், எத்தனைதான் தில்லைச் சிற்றம்பலத்தான் கோயிலில் முதற்சேவகர்கள் என்ற பெயரை ஆதியிலிருந்தே பெற்றவர்களாயினும் ஒரு பொது நோக்கம் அதுவும் நல்ல நோக்கத்துக்காக பிள்ளையார் அருள் பெற்று வந்தவர்கள் அங்கே நின்று கேட்கும்போது தேவார அறையைத் திறக்கமுடியாது என மறுக்கவும் முடியாது.

இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். தேவாரப் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவேண்டும் என்று ராஜராஜசோழன் முயன்று வருவது சோழ தேசமே அறிந்த அக்கால கட்டத்தில் தேவாரமூவர்கள் எழுதிய அத்தனைப்பாடல்களையும் மூவாயிரவர் தங்களிடத்தே இருக்கிறது என்று சொல்லாமல் இருந்திருக்கமுடியாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். 

அப்படி இருக்கையில் எப்படி தேவார ஓலைகள் தில்லை சிற்றம்பலத்தே வந்திருக்கவேண்டும்.. அதை முதலில் பார்க்கவேண்டுமே.. இந்தக் கேள்விக்கு விடையை உமாபதி சிவம் அவர்கள் திருமுறை கண்ட புராணம் என்ற பாடலில் சற்று மறைமுகமாகத் தந்துள்ளார்கள். 

அப்பரும் ஞான சம்பந்தரும் சேர்ந்து ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடிய காலத்துக்குப் பின்னர் சுந்தரர் பிறந்து அவரும் ஏராளமான பாடல்கள் பாடியதும் இவை அனைத்தும் ஓலைகளில் பதிக்கப்பட்டு தில்லையம்பலத்தான் கோவில் அறையொன்றில் வைக்கப்பட்டு மூவர் இலச்சினையுடன் (முத்திரை) மூடப்பட்டுவிட்டன. இது தெய்வகாரியமாக இருந்திருக்கிறது. தெய்வகாரியங்களை ஏன், எப்படி, எதற்கு என யாரால் கேட்க முடியும், தேவார மூவர்கள் தோன்றி முன்வந்தே இத்தகைய விதமாகச் செய்து இவையனைத்தும் தகுந்தவர் வந்து கேட்கும்போது அந்தத் தகுந்தவர்களின் முயற்சியால் திரும்பக்கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அறைக்கதவு மூடப்படுவது என்பதில் சிவன் கோயில்களில் புதிதல்ல. ஏற்கனவே திருமறைக்காட்டுக்கோவில் நேர்பெருங்கதவுகள் மூடப்பட்டிருந்தன. வேதங்கள் வழிபட்டு மூடிய கதவுகளை திருநாவுக்கரசர் ’பண்ணினேன் மொழியாள்’ எனும் பதிகப்பாடல் பாடித் திறந்ததும் ஆனால் வேதங்கள் ஏதோ காரணத்தினால் மட்டுமே இந்தக் கதவை மூடியிருக்கலாம் என்று தெரிந்ததும் திருஞானசம்பந்தர் இன்னொரு பாடல் பாடி அக்கதவை மூடிவைத்ததும் அந்த மறைக்காட்டுக் கோவில்பதிகங்கள் மூலமாக அறியலாம். ஆகையினால் தில்லையில் தேவாரப்பதிக அறை தேவார மூவர் இலச்சினை பதியப்பெற்று மூடியது ஒன்றும் புதிதல்ல என்றே கூறவேண்டும்.

முறைகளெல்லாந் திருத்தில்லை மூதூர் தன்னில்
அன்றவர்கை இலச்சினையால் வைத்தார்
மன்ன ஆராய்ந்து தருக என அருளிச் செய்தார்


ஓலைகள் அறையில் வைக்கப்பட்ட முறையைப் பற்றி இப்படி எழுதிய உமாபதி சிவம் அவர்கள் அதே ஓலைகள் திரும்பபெற்ற முறையை விவரிக்கும்போது ராஜராஜசோழனும் நம்பியாண்டார் நம்பியும் மூவர் சிலைகள் செய்வித்து, பூசை செய்து, ஊர்வலமாக வந்து அறைக்கதவு திறக்கப்பட்டதும் தெரிந்த விஷயம்தான். உமாபதி சிவம் அதன் பிறகு எழுதுகிறார்.

அருள்பெற்ற மூவர்தம தருள் சேர் செய்ய
கையதுவே இலச்சினை யாய் இருந்த காப்பைக்
கண்டவர்கள் அதிசயப்பக் கடைவாய்நீக்கி’
 

எனப் பாடுகிறார். ராஜராஜனுக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் தேவார மூவர் ஒப்புதல் கிடைக்கிறது. இந்த நிலையில் தில்லை மூவாயிரவர் தலையிடுவது என்பது அங்கே ஒரு தேவையில்லாத ஒரு விஷயம். இன்னும் சொல்லப்போனால் தேவார ஓலை மீட்பு விஷயத்தில் அங்கே தில்லை மூவாயிரவர் தலையீடல் என்ற ஒன்றே இல்லை என்றும் சொல்லலாம்.
தில்லை மூவாயிரவர் இவ்விஷய்த்தில் தலையீடு இல்லாமையால்தான் அவர்கள்தம் பெருமை மேலும் அங்கே உயர்ந்தது. பின்னாட்களில் தேவாரம் அதிகமாகப் பாடப்பட்ட சிவத்தலம் என்பதனால் தலைமைப் பீடம் அக்கோயிலுக்குக் கிடைக்கப்போகின்றது. அதனால்தானோ என்னவோ சேக்கிழார் பெருமான் அவர்களைப் பற்றிப் பாடும்போதே அந்தப் பெருமை அவர் தெய்வத்தமிழில் ஒளிர்கின்றது.

இன்றிவர் பெருமை எம்மால்
இயம்பலா மெல்லைத் தாமோ
தென்றமிழ்ப் பயனா யுள்ள
திருத்தொண்டத் தொகைமுன் பாட
அன்றுவன் றொண்டர் தம்மை
யருளிய ஆரூர் அண்ணல்
முன்திரு வாக்காற் கோத்த
முதற்பொரு ளானா ரென்றால்.

(தென்தமிழின் பயனாய் விளங்குகின்ற திருத் தொண்டத் தொகையை முன்பு நம்பியாரூரர் பாடி அருளுதற்கு அருளாணை வழங்கியருளிய திருவாரூர்ப் பெருமான், அத்தொகையில் முதற்கண் கோக்கப்பெற்ற பொருளாக இத்தில்லைவாழ்ந்தணர்கள் அமைந்திருப்பவர் என்றால், இன்று இவர்கள் பெருமை எம்மால் சொல்லப்பெறும் எல்லையில் படுவதாமோ? - நன்றி தேவாரம் தளம்)

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே
(திருமந்திரம் 12-2-4) 

(ஆகக்கூடியது ஆகும்....
அழியக்கூடியது அழிந்தே தீரும்..
போகவேண்டியது போகும், புதுமையாயப்..
புகவேண்டியது புகுந்தே தீரும்.
என்பதை எம் இறைவனான சிவன் காண்பிப்பதை கண்டு..
அவன் அருளாணையால் ஏவிய செயல்களையே செய்திருப்பான்.).

தில்லை மூவாயிரவருக்கும் தேவார ஓலை மீட்புக்கும் தொடர்பு இல்லை என்பது இங்கே தெளிவாகிறது. இனி இந்தத் தீந்தமிழ்ப்பாடல்கள் தேவாரம் என எப்படி அழைக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

(மேலே உள்ள படத்தில் மாணிக்கவாசகர் தில்லை சிற்றம்பலத்தில் பூரணகும்பம் கொடுக்கப்பட்டு வரவேற்கும் கீழவாசல் கோபுரக்காட்சி - படங்கள் கூகிளார்)

இன்னும் வரும்..