லண்டனில் திருவள்ளுவர்
அன்புள்ள விஓவி குடும்பத்தாருக்கு,
சென்னையில் பாலா அவர்களின் நாட்டுக்குறள் பாட்டு வெளியீடு விழாவும், ஈரோட்டில் சங்ககிரி சகோதரி ஹெலனா எழுதிய வள்ளுவம் பற்றிய புத்தக வெளியீடு விழாவும் சிறப்பாக நடந்தேறியது கண்டு மகிழ்ந்தேன். இரண்டு விழாக்களிலும் பெரிய அளவில் நம் வள்ளுவ குடும்பத்து அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான். மேலும் தலைவர் சி.ரா அவர்களும் சென்னையிலே வந்து குடியேறிவிட்டது ரெட்டிப்பான மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான்.
வணக்கம்.
இந்தக் கடிதம் முழுதும் திருவள்ளுவரின் சிலை பற்றியதுதான் என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன். அதுவும் லண்டன் திருவள்ளுவர் சிலை பற்றிய விஷயம் என்றால் சாதாரணமானதல்ல என்பதால் உடனடியாக இந்தக் கடிதத்தை எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது.
எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1995 இல் ஜனவரி மாதம் முதல்வாரத்தில் தஞ்சையில் நடந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் இந்த மகாநாட்டினை லண்டன் மகாநகரத்தில் நடத்தத்தான் திட்டமிட்டிருந்தார்களாம். அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்கிணங்க லண்டனிலிருந்து தஞ்சைக்கு மாற்றப்பட்டதாம். இருந்தாலும் லண்டனுக்கு தமிழக அரசால் ஏதாவது தமிழ் சார்பாக செய்யவேண்டும் என்று கோரப்பட்டதால் லண்டனில் திருவள்ளுவர் சிலை ஒன்றினை அன்பளிப்பாக அமைக்க ஒப்புக்கொண்டதாக மாநாட்டிலேயே சொன்னார்களா. (மாநாட்டில் சொன்னார்கள் என்பது உறுதி செய்யப்படவேண்டும்தான். கலிபோர்னிய ராஜம் அம்மா இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அவர்களை கேட்கிறேன்) ஆனால் கொடுத்த வாக்கினை உடனடியாக செல்வி ஜெயலலிதா காப்பாற்றியதோடு அந்த சிலை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
லண்டன் நகரத்தில் மட்டமத்தியில் உள்ள லண்டன் பல்கலைக்கழகத்தின் எஸ் ஓ ஏ எஸ் - (ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆஃப்ரிகன் ஸ்டடீஸ்) வளாகத்தில் இந்த சிலை வைக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட, 1996 ஆம் ஆண்டு மே மாதம் அங்கே ஒரு மரத்தின் கீழே பீடம் செய்து அந்த மரத்து நிழலில் நம் வள்ளுவரை அழகாக உட்கார வைத்துவிட்டார்கள். ஆடம்பரம் இல்லை.. கோலாகலம் இல்லை. மிக எளிமையான முறையில் அன்றைய இந்தியத் தூதர் சிங்க்வி தலைமையில் மொத்தம் பத்து பேர் கலந்துகொள்ள திருவள்ளுவர் ஹாயாக மரத்தின் கீழே அமர்ந்து விட்டார் என்று ஸ்வாமிநாதன் தெரிவித்தார்.
அடடா, நம் லண்டன் ஸ்வாமிநாதன் பற்றி இன்னமும் ஓன்றுமே சொல்லவில்லையே.. தங்கத்துக்கு மறு பெயர்தான் லண்டன் ஸ்வாமிநாதன். தமிழுக்கு இந்த லண்டன் மாநகரத்திலே பல சேவைகளை செய்துகொண்டு வருபவர் திரு ஸ்வாமிநாதன். பிபிசிக்காக 1987 இல் லண்டன் வந்தவர் தமிழ் அவரை நன்றாக பயன்படுத்திக்கொண்டதுதான். மாயவரத்தைச் சேர்ந்தவர் மதுரை புலம் பெயன்று அங்கிருந்து லண்டன் மாநகரத்துக்கு வந்து சேர்ந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தொண்டு செய்கிறார். இன்னமும் கூட வகுப்புகள் எடுத்துக்கொண்டு வருகிறார். இங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் இவரின் மேலான ஆலோசனைகளைக் கேட்டு தமிழ்ச் சேவைகள் புரிகின்றன. தமிழ் இலக்கியங்கள் மேல் இவருக்குள்ள ஆழ்ந்த பற்று அவரை பல சமயங்களில் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தும். மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்குறளும் இவரை வெகுவாகக் கவர்ந்தவை.
கம்பராமாயணமும் பெரியபுராணமும் கூட அவர் மாணவச் செல்வங்களுக்கு கற்றுத் தரும் இலக்கியங்கள்தான்.இவரோடு பேசப் பேசத்தான் இவரிடம் தமிழ் பயிலும் மாணவர்கள் எத்தனை கொடுத்து வைத்தவர்கள்தான் என்பதை நாம் உணரலாம்..
இதற்கும் மேலாக இவரின் வலைப்பூக்கள் ஏராளமான வாசகர்களை இவரிடம் ஈர்த்தவை. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் 1996 இல் இந்த இடத்தில் நடந்த திருவள்ளுவர் சிலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பத்து பேரில் இவரும் ஒருவர். ஆகையினால்தான் நான் லண்டன் திருவள்ளுவரைச் சந்திக்கவிரும்பிய போது திரு ஸ்வாமியுடன் செல்லவேண்டுமென அவருடன் தொடர்பு கொண்டேன். மிக மகிழ்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்று திருவள்ளுவரை அங்கே அறிமுகம் செய்தார். அங்கே சென்றவுடன் சில திருக்குறள்கள் ஓதினோம். நெஞ்சுக்கு நிம்மதி.
நாங்கள் சென்றபோது யாருமில்லைதான். ஆனால் எங்கள் பின்னாலேயே ஒரு இசுலாமியக் குடும்பம் அங்கே வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது. ஈராயிரம் வருடங்களுக்கு முன் பிறந்து உலகுக்கு இந்த உலகமக்கள் உய்ய திருக்குறளைப் பரிசாகத் தந்த முனிவர் என்று அவர்களுக்கு எடுத்துச் சென்னார். வந்தவர்களின் ஆர்வம் கூடியதை அவர்களின் முகக்குறிப்பே எங்களுக்குச் சொன்னது.
எத்தனைதான் பல்கலைக்கழக திறந்தவெளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இருந்தாலும் யாராலும் பராமரிக்கமுடியாத சூழ்நிலையில் இருந்தது அந்த இடம். இப்போது குளிர்காலம்.. அவர் அமரந்த இடத்தில் இருந்த மரத்தில் இலைகளெல்லாம் விழுந்து விட்ட காலகட்டம். பறவைகளே அரிதாக வசிக்கும் கால கட்டமும் கூட. அதனால் சற்று சுத்தமாக இருந்ததுதான். ஆனால் கோடை வர ஆரம்பித்து இலைகளும் துளிர்விட ஆரம்பித்துவிட்டால் மீண்டும் பறவைகள் வாசம் செய்ய ஆரம்பிக்கும். இதனால் திருவள்ளுவருக்கு சில கஷ்டங்கள் அங்கே உண்டு. பறவைகளின் எச்சங்கள் அவர் மேனி மீது விழுந்து அசுத்தப்படுத்த அந்த காய்ந்து போன எச்சங்களை பலவருடங்களாய் அகற்றாமல் இருந்ததால் லண்டன் பல்கலைக்கழக நிர்வாகம் சுத்தம் கருதி திருவள்ளுவரையே சென்றவருடம் இங்கிருந்து அகற்றி எடுத்து உள்ளே வைத்துவிட்டார்கள். ஆனால் மறுபடியும் சுத்தம் செய்து இந்த வருடம் ஜூன் மாதத்தில் வைத்தாலும், மறுபடியும் கோடையும் வரும், பறவைகளும் வந்து ம்ரத்தில் குடியேறும். மறுபடியும் எச்சங்கள் வருவதும், அவர் மேல் விழுவதும்,அதனை அகற்றமுடியாமல் காலத்தைப் போக்குவதையும் தடுக்க முடியாது.
திருவள்ளுவரை வேறு இடத்துக்கு மாற்றவும் முடியாது. ஆனால் தற்சமயம் இருக்கும் இடத்திலேயே அவரைச் சுற்றி கம்பிகளும், தலைக்கு மேலே கூரையும் வைக்க ஆறாயிரம் பவுண்ட் எஸ்டிமேட் ஒன்று போடப்பட்டுள்ளதாக திரு ஸ்வாமி தெரிவித்தார். பல்கலைக் கழக நிர்வாகம் செலவு செய்யாவிட்டாலும் இதற்கான பணத்தைச் சேர்ப்பது ஒன்றும் கடினமல்ல என்று ஸ்வாமி தெரிவித்தார். ஆனால் கோடை வருவதற்குள் இந்த வேலை முடியவேண்டுமே என்ற கவலை அவருக்கு உண்டுதான். தமிழ்மக்கள் அதிலும் லண்டன் வாழ் தமிழ்மக்கள் தங்கள் ஆதரவை நல்கிடவேண்டும். விரைவில் திருவள்ளுவர் சிலை பொலிவுடன் இருப்பதற்கான ஆயத்தங்களைத் தொடரவேண்டும்.
திருவள்ளுவரின் குறளைப் பரப்பினால் போதாதா, சிலை வைத்துதான் என்ன ஆகப் போகிறது என்று தோன்றலாம். சிலை வைப்பதில் சிரமம் கூட இருக்கிறது. சிலை வைத்தால் அவர் நிற்பது போலா, அமர்வது போலா, அல்லது அவருக்குத் தாடி இருக்கிறது என்று எப்படி ஊகிக்கமுடிந்தது. மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று முழங்கியவருக்கு தாடி எதற்கு, என்றெல்லாம் கேள்வி எழும்பும்தான்.
ஏற்கனவே விசாகப்பட்டினத் தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பதற்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்தவன். ஏன் சிலை வேண்டுமென்றால் எதிர்கால குழந்தைகள் தெரிந்து கொள்ளவேண்டும்.. இப்படி ஒரு மனிதர் அந்தக் காலத்தில் தமிழகத்தில் உதித்து. உலகத்துக்கே நல்வழி காட்ட திருக்குறள் எழுதி அந்த நல்வழியைத் தந்தார் என்று சிலைகளை முன் வைத்து திருக்குறளின் பெருமையை எதிர்காலத்தவர் கருத்தில் ஏற்ற வேண்டும்... சிலை ஒரு கருவிதான், ஆனால் அதன் பின்னே ஒளிந்திருக்கும் உண்மையான கருத்து உன்னதமான கருத்தல்லவா..
லண்டனில் பாராளுமன்றத்துக்கருகே பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டில் உதித்த உலகத் தலைவர்களை சிலைகளாகச் செய்து சுற்றுலாக்காரர்களைக் கவர்கிறார்கள். காந்தி, சர்ச்சில், மாண்டெலா போன்றவர்களை பொதுமக்கள் பார்வையிடும்போது அவர்கள் உலகத்துக்குச் செய்த சேவைகள் நினைவுக்கு வருகின்றன என்பது உண்மைதானே. திருவள்ளுவரோ இவர்களையெல்லாம் விட மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர் என்பதை உலகமெலாம் உணரவேண்டும். அவர் எழுதிய திருக்குறள் வழியைத் தேர்ந்தெடுத்து வாழவேண்டும் என்பதுதானே நம் எல்லோர் விருப்பமும் கூட..
இதனிடையே பனி படர்ந்த லண்டன் மாநகரத்து ஈரவீதிகளில் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டே நடந்து செல்வது கூட ஒரு தனி இன்பம்தானே... அந்த அனுபவத்தை என்னவென்று சொல்ல..
அன்புடன்
உங்கள் குடும்பஸ்தன்.
திவாகர்.