Tuesday, June 19, 2012

ஏடு தந்தானடி இறைவன் - 2







இந்த விஷயங்களைத் தொடருமுன் முக்கியமான இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

1. தேவார மூவர் காலத்தில் (சுமாராக கி.பி.600 லிருந்து 750 ஆண்டுக் காலம்) தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐநூற்றுக்குள்தான் இருக்கும் என்பது, தேவாரம் பாடல் பெற்றத் திருத்தலங்கள், வைப்புத் தலங்கள் மூலமாக அறிகின்றோம். கோயில்கள் அது கற்கோயிலாக இருந்தாலும், வேறு வகையாகக் கட்டப்பட்டாலும் அவைகள் எப்போது கட்டப்பட்டிருக்கலாம் எனப் பார்க்கையில் முற்காலச் சோழர்களின் கடைத் தலைமுறையில் புகழ்பெற்ற கோச்செங்கட்சோழன் காலத்திலிருந்து ஆரம்பித்தது எனக் கூறலாம். ’எண்தோளீசர்க்கு எழுபத்திநான்கு மாடக்கோயில்களை’ இந்த சோழன் மட்டுமே எழுப்பியுள்ளதாக திருமங்கை ஆழ்வாரே கட்டியம் கூறுகிறார். கோச்செங்கட்சோழன் காலம் மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தது என சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதன் பிறகு அதிகமான அளவில் கோயில்கள் எழுப்பப்பட்டது பிற்காலத்து சோழனான ஆதித்த சோழன்தான் (கி.பி.870-907 வரை), காவிரியின் இரு கரைகளிலும் சிவ-விஷ்ணு ஆலயங்களை எடுப்பித்தவன். ஆனால் இவன் காலம், மூவருக்கும் பின்னர் என்பதால் இவன் கட்டிய கோயில்களை நாம் இந்தக் கட்டுரைக்கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. கோச்செங்கணானுக்குப் பிறகு மூவர் பாடும் காலம் வரை, மூவர்களால் பாடப்பட்ட அத்தனைக் கோயில்களும் அந்தந்த நாட்டு (சரித்திரத்தில் இடம் பெறாத சிறிய நாடுகள்) அரசர்கள் கட்டிய கோயில்கள்தான். இதில் தேவாரப்பாடல்கள் மிகவும் போற்றிக் கொண்டாடிய, காலத்தால் புகழ்பெற்ற திருவாரூர் கோயிலும் தஞ்சை வளநாட்டு மாடக் கோயில்களும் அடங்கும். ஆகையினால் பாடல்பெற்ற தலங்களாக குறைந்தபட்சமாக 275 கோயில்கள் இடம் பெற வாய்ப்பும் கிடைத்தன.

2.சோழர்களின் மிகப்பெரிய அரசனான ராஜராஜசோழன் ஆட்சிக்கு வரும் வரை தமிழகம் முழுவதும் பல சின்னஞ்சிறிய நாடுகள் இருந்தன என்பதும் அந்நாட்டின் ஒவ்வொரு அரசனும் ஏறத்தாழ அந்நாட்டைப் பொறுத்தமட்டில் ஏகாதிபத்திய அரசனைப்போலத்தான் ஆண்டு வந்திருந்திருக்கிறார்கள்.. இன்றைய காலத்தைப் போல மைய அல்லது மாநில அரசு ஆளுமைக் கட்டுப்பாடில் அவை வரவில்லை. அது பல்லவர்களாக இருந்தாலும் பாண்டிய சேரர்களாக இருந்தாலும் அப்படித்தான் இருந்தன். குறிப்பிட்ட சின்ன நாடுகள் அந்த பேரரசனுக்கு கப்பம் கட்டியும், அவனுக்குத் தேவையான படைகள் அனுப்பியும் உதவி புரிந்தவரையில் பெரிய அரசுகளாக சொல்லப்பட்ட பல்லவரோ, பாண்டியரோ எந்த நாட்டின் உள் விவகாரங்களிலும் தலையிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு கோயில் விஷயத்தில் மட்டுமே பெரிய ராஜாக்கள் பெயரையும், அவர்களின் மரியாதைக்குத் தக்கவாறு கல்வெட்டில் பொறித்து வைத்திருந்தார்கள் என்ற விஷயத்தை எந்த சரித்திர ஆராய்ச்சியாளரும் ஒப்புக் கொள்வர். இந்த நிலை ராஜராஜ சோழன் ஆட்சிக்காலம் வரைப் பரவலாகவே இருந்தது. ஒரு உதாரணத்தைச் சொல்லலாம்.

சுந்தரர் சிவபெருமானைத் தோழராகப் பாவித்து திருவாரூரில் பரவையாருக்கு தூது போக வைத்தார் என்ற விஷயத்தில் ஒரு அரசனுக்குக் கோபம் உண்டாகி, இறைவனையே கீழ்ப்படிய வைத்த சுந்தரரை தன் நாட்டு எல்லைக்குள் அனுமதிக்க மறுத்த கதை உண்டு. இந்த அரசன் நடு நாட்டைச் சேர்ந்தவன் என்பதும் இவனும் இவன் மனைவியும் சிவபக்தர்கள் என்பதும், அத்தோடு கூடவே இவன் மனைவி சுந்தரரின் பக்தை என்பதால் இறைவனிடம் தடைநீக்க உதவுமாறு வேண்டிக் கொள்ள, இறைவன் அருளால் அரசன் மனம் மாற, சுந்தரர் அங்கு விஜயம் செய்தார் என்று ஒரு நாட்டுப்புறக் கதை சொல்கிறது (இந்தக் கதை நாடகமாகவும் பின்னர் வடிக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது). இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் சரித்திரபூர்வ ஆதாரம் ஏதுமில்லாவிட்டாலும், ராஜ்யங்களும் ராஜாக்களும் எப்படி தங்கள் நாடுகளுக்குள் சுதந்திரமாகவும் எதேச்சதிகாரமும் கொண்டு செயல்பட்டனர் என்பது மட்டும் நன்றாகவே புரியும். ஆக இதை போன்ற பல நாடுகள், பல அரசர்கள் கொண்ட தேசமாக தமிழ்த் தேசம் அன்று இருந்தது. இந்த விஷயத்தை நினைவில் வைத்துக் கொண்டு மேற்கொண்டு தொடருவோம்.



திருநாவலூரில் அவதரித்த சுந்தரமூர்த்தி நாயனார் எட்டாம் நூற்றாண்டு காலத்தவர். திருமணப்பருவம் வந்த போது இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு தெய்வீகத் தமிழில் பாட ஆரம்பித்தார். இவர் காலம் பல்லவ சாம்ராஜ்யத்தின் உச்சகட்டமாகக் கொள்ளலாம். ஆளுடை நம்பியான சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் பாடிய நரசிங்கத்தரையர் எனும் அரசர் கூட பல்லவ சக்கரவர்த்தியாக இருந்த ராஜசிம்மபல்லவனைக் குறிக்கும் என சிலராலும், அந்த அரசன் பல்லவன் இல்லை, சிற்றரசன் மட்டுமே என சிலராலும் சொல்லப்படுவதையும் நாம் மேற்சொன்ன குறிப்புகளோடு ஒப்பு நோக்கிக் கொள்ளலாம். சுந்தரர்தாம் திருத்தொண்டர்புராணம் எனும் பெரிய புராணத்துக்கு முன்னோடி. எட்டாம் நூற்றாண்டில் கொடுத்த இவர்தம் பாடல் குறிப்புகளைக் கொண்டுதான் பதினோராம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பியும், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமானும் திருத்தொண்டர் பெருமைகளை தங்கள் செந்தமிழ் மூலமாக உலகறியச் செய்தார்கள். சுந்தரரின் பாடல்களும் சரி, அவருக்கு அந்த நாளில் கிடைத்த நாயகத் தன்மையும் சரி, அவருக்கு நிகர் அவரே. அவர் பெருமைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட சேரநாட்டு அரசராகிய சேரமான் பெருமாளும் திருவாரூர் வந்து அவரைச் சந்தித்து அவருடன் கூடவே இருந்து, ஒரே சமயத்தில் கைலாயம் சென்றதாக பெரிய புராணப்பாடல்கள் சொல்கின்றன. சுந்தரருக்கு ஒரு மாபெரும் ரசிகப் பட்டாளமே இருந்திருக்கவேண்டும். அத்துடன் அவர்தம் பாடல்களும் சேரும்போது அவை மிகப் பெரிய அளவில் நாடெங்கும், கோயிலெங்கும் பாடப்பட்டிருக்கவேண்டும் என்றும் தெரிய வருகிறது.

இப்படிப்பட்ட நாயகத் தன்மை உடைய சுந்தரர் பாடிய பாடல்களில் அப்பரும் ஞானசம்பந்தரும் இடம் பெறுகின்றனர். எப்படி சுந்தரருக்கு அவர் காலத்தில் ஒரு நாயகத் தன்மை இருந்ததோ அதே போல சம்பந்தப் பெருமானுக்கும் ஒரு பெருங்கூட்ட,ம் இருந்ததாக அவர் திருமுறைப் பாடல்களே சொல்கின்றன. இந்த பக்தர்களில் முக்கியமானவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர் எனும் சிவபக்தர். சம்பந்தர் பாடல்களுக்கு ஏதுவாக வீணை மீட்டி, இசையையும் சேர்த்ததால் அப்பாடல்கள் மிகவும் மக்களிடையே பரவின. தேவாரப் பதிக வரலாறு ஒன்/று சொல்லும் விவரம் பார்ப்போம்.

”திருவேட்டக்குடியை வணங்கிய ஆளுடைய பிள்ளை யார் திருத்தருமபுரத்தை அடைந்தபோது , திருநீலகண்ட யாழ்ப் பாணரது தாய்வழிச்சுற்றத்தார் அனைவரும் அவரை எதிர் கொண்டு வணங்கினார்கள் . பாணனார் , ` சுவாமிகள் திருப்பாடல்களை யாழிலிட்டு வாசிக்கும் புண்ணியப்பேறு பொருந்தினேன் ` என்று புகன்றார் .அவர்கள் , ` நீர் யாழில் இட்டு வாசிப்பதால் தான் அப்பாடலின் சிறப்புஉலகத்தில் பரவுவதாயிற்று ` என்றார்கள் . இதனைக் கேட்ட பாணர் மனம் நடுநடுங்கி அவர்கள் உண்மை உணர்ந்து உய்யவேண்டும் என்ற திருவுள்ளத்தால் சம்பந்த சுவாமிகளின் திருவடியை வணங்கி ` யாழில் அடங்காத திருப்பதிகம் ஒன்று அருளிச் செய்யவேண்டும் ` என்றுகேட்டுக் கொண்டார் . பிள்ளையார் மக்களது கண்டத்திலும் யாழிலும் இசை நூலில் சொல்லப்பட்ட எல்லாமுயற்சியிலும் அடங்காத ` மாதர் மடப்பிடி ` என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார் . பாணர் இதனை யாழிலிட்டு வாசிக்கத் தொடங்கி முடியாமை கண்டு , மனம் உளைந்து , ` இக்கருவியன்றோ இவர்களுக்கு இத்தகைய எண்ணத்தை அளித்து என்னையும் ஈடழித்தது ` என , அதனை உடைக்கப்புக்கார் . பிள்ளையார் அதனைத்தடுத்து ` ஐயரே ! சிவசக்தியின் திருவிளையாட்டெல்லாம் இக்கருவியில் அமையுமோ ? முடிந்த அளவு முயறலே முறை ` என்று அமைதிகூறி , யாழை அவர் கையில் தந்தார் . அதனால் இப் பதிகம் யாழ் மூரியாயிற்று . (மூரி – வலிமை . யாழ்மூரி யாழைக் காட்டிலும் இசைவன்மை வாய்ந்தது என்பது பொருள்)”.
(நன்றி - பதிக வரலாறு – ஒன்றாம் திருமுறை, 136 ஆவது பதிகம் - www.thevaaram.org)

திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவர் ஊரில் மிகப் புகழ்பெற்றவர் என்பது இதிலிருந்து தெரியவரும்போது இன்னொரு விஷயமும் புரிகின்றது. இப்படிப் புகழ்பெற்றவர்களால் திருஞானசம்பந்தர்தம் பாடல்கள் இசையோடு கலந்து வெகுவாகப் பரப்பப்பட்டிருக்கின்றன. அத்துடன் ஞானசம்பந்தர் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து அவனைப் போற்றி வெறும் பத்துப் பாடல் கொண்ட பதிகம் பாடுவதோடு விடவில்லை. இந்தப் பதிகத்தை யார் பாடினாலும் இன்னின்ன பலன்கள் கிடைக்கும் என பலச்ருதியில் (பதினோராவது பாடலாக சேர்க்கப்பட்டிருக்கும்) சம்பந்தப் பெருமானே தெளிவாகப் பாடியதால் உலகக் கஷ்டங்களில் வாடி வேதனை படும் பல சாதாரண மக்கள் தாங்கள் துன்பங்கள் அகல நிச்சயமாக பயன்படுத்தியிருக்கவேண்டும். சம்பந்தர்தம் திருவாயால் பாடப்பட்ட இந்தப்பாடல்கள் பற்பல பக்தர்களாலும் பின்பற்றப்பட்டு அவர்தம் வாயால் பாடி மனதினால் சிந்திக்கப்பட்டிருக்கவேண்டும். கல்வியில் சிறந்தோர் சம்பந்தருடனும், அப்பர் சுவாமிகளுடனும் கூடவே தொடரும்போது (இதைப் பற்றி தேவாரப் பாடல்களில் பல இடங்களில் தெரியவரும்) அவர்களும் இப்பாட்டுக்க்களை ஓலைச் சுவடிகளில் பதிவிட்டிருக்க வேண்டும். அக்கால சமண மதத்தில் ஒரு சிறந்த வழிமுறை பயிற்றுவிக்கப்பட்டது. அவர்கள் சமயக் கல்வியை நூற்றுக்கணக்கில் பிரதிகள் எடுத்து சாத்விகள் மூலமாக கிராமம் கிராமமாகப் பயில்வித்துத் தங்கள் மதத்தைப் பரப்பிய வரலாறு பற்றி கர்நாடகத்தில் (இந்திரகிரி, சந்திரகிரி) ஓவியங்கள், சிற்பங்கள் இன்னமும் பறைசாற்றுகின்றன. சமண மதத்தில் இருந்து சைவத்துக்குள் வந்து பல்லாயிரம் பாடல்கள் பாடிய அப்பர் பெருமானுக்கு இந்த ஓலைப் பிரதிகளின் உதவிகள் தெரியாமலா இருக்கும்.. நிச்சயமாக இந்த தமிழ்ஞானியர் தம் பாடல்களை ஓலைகளை எழுதியிருப்பர். இதைப் பற்றி இன்னொரு தகவல் ஒன்று

”ஞானசம்பந்தர் காலத்தில் அவருடனே இருந்து அவர் பாடல்களையெல்லாம் எழுதி வந்த சம்பந்த சரணாலயரே திருமுறைகளை முதன்முதலில் ஓலைச்சுவடிகளில் எழுதியவர். அதன்பிறகு ஏறத்தாழ ஞானசம்பந்தர் காலத்தில் இருந்தவராகக் கருதப்பெறும் சீகாழி கணநாதநாயனார், திருமுறைகளை எழுதுவோர் வாசிப்போரைத் தயாரித்தார் என்பது அவரைப் பற்றிய செய்தி.

பிற்காலத்தில் திருநெல்வேலிப் பகுதியிலும், வேதாரண்யம் பகுதியிலும் சில தேசிகர் குடும்பத்தினர் ஓலையில் திருமுறைகளை எழுதி, பலருக்கும் வழங்கி அதனால் வரும் ஊதியம் கொண்டு வாழ்க்கை நடத்தினர் என்று மர்ரே கம்பெனி திரு. ராஜம் குறிப்பிட்டு உள்ளதும் சிந்திக்கவேண்டிய செய்தி. இதில் காலக் குறிப்பில்லை.”

(நன்றி – தருமை ஆதீனம் அவர்களில் ஆசியுரை- தேவார தளம்)

ஏழாம் நூற்றாண்டில் ஞானக்குழந்தையாலும், அப்பர் பெருமானாலும் பாடப்பட்டது அவை அப்படியே தொடரப்பட்டு எட்டாம் நூற்றாண்டில் சுந்தரரால் மேலும் சேர்க்கப்பட்டு தமிழ்த்தேசம் முழுதும் கோயில்கள்தோறும் புகழ்பெறுகிறது. அவைகள் ஒன்பதாம் நூற்றாண்டிலும் பத்தாம் நூற்றாண்டிலும் தொடர்ச்சியாகப் பாடப்படுகின்றன.. சரி, இது பற்றி வேறு என்ன ஆதாரபூர்வத் தகவல்கள் உள்ளன என்பதையும் பார்ப்போம்.




இன்னும் வரும்.