Saturday, June 06, 2009

விஜயவாடா-எங்கள் விஜயவாடா பகுதி 3

மேற்பார்வை P D மணி

கொஞ்சம் துறு துறு, கொஞ்சம் மிடுக்கு, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கருப்பு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் தாபம், கொஞ்சம் குள்ளம், கொஞ்சம் முடி, கொஞ்சம் அடாவடி, கொஞ்சம் ரவுசு, கொஞ்சம் பெருசு, ஆனால் மனசு மட்டும் ரொம்ப ரொம்பப் பெருசு.. இப்படிப்பட்டவைகளுக்கு ஒரு ஆண் உருவம் கொடுத்துப் பிறக்க வைத்தால் அதற்குப் பெயர் P.D. மணி என்ற பெயர் வைத்துவிடலாம். வைக்கலாம் என்ன.. அவன் விஜயவாடா மணியேதான்.

1970-90 களில் மணியைப் பற்றி அறியாத விஜயவாடா தமிழ்க்காரர்களோ, ஏரியா தெலுங்குக் காரர்களோ கிடையாது என்றே சொல்லிவிடலாம்தான். தெலுங்கு நாளிதழில் பணிபுரிவதால் மக்கள் தொடர்பும் சற்று அதிகம்தான். தீவிர எம்ஜீயார் ரசிகன்.

மணியைப் பற்றி சொல்லுமுன் அவன் சைக்கிளைப் பற்றி சொல்லிவிடவேண்டும். அதை அவன் நடத்தி அழைத்து வருவதைத்தான் நாங்கள் எப்போதும் பார்த்திருக்கிறோம். ஸ்டைலாக சிங்கப்பூர் கட்பனியன் கலர் நாடா வெளியே தெரியும்படி தன் சிங்கப்பூர் பலவண்ண சட்டையின் இரண்டு மேல்பட்டன்களை அவிழ்த்துக் கொண்டு சிங்கப்பூர் ரப்பர் செருப்பு தேயத் தேய சப்தம் போட்டுக்கொண்டே அந்த சைக்கிளையும் அவன் நடத்தி வரும் அழகே தனிதான். இங்கே அடிக்கடி சிங்கப்பூர் என்று எழுதுவதற்கு காரணம் உண்டு. மணியிடம் சிங்கப்பூர் சாமான்கள் அத்தனையும் உண்டு. உறவுக்காரர்கள் மூலம் வருவதால், விற்பனையும் செய்வான்.

நான் மணியை எப்போது சந்தித்து எப்போது அவன் நண்பனானேன் என்பது எனக்கு நினைவில்லை. எனக்கு மட்டுமல்ல, யாருக்குமே நினைவிராது. காரணம் அவன் முதல் பழக்கத்திலேயே அப்படி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடுவான். நெருங்கிப் பழகிவிட்டால் நமக்காக எதையும் செய்யும் அதிசயப்பிறவி அவன். அப்படி ஒரு தோழமை உணர்வு அவனிடம் உண்டு. என் மேல் ஒரு ஸ்பெஷல் பாசம் வேறு வைத்திருப்பவன்.

மணியைப் பற்றி சொல்வதற்கு எத்தனையோ நிறைய விஷயங்கள் உண்டு என்றாலும் எங்கள் நாடகம் ஒன்றுக்கு அவன் கொடுத்த பீதியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். நானும் தேவாவும் சேர்ந்து எழுதிய இரண்டாவது நாடகம் ‘ஓடாதே நில்’. முதல் நாடகம் வெற்றி பெற்ற தைரியத்தில் இரண்டாவது நாடகத்தை இன்னும் சிறப்பாகத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நகைச்சுவைத் தோரணங்களாகவே கட்டி எழுதப்பட்ட நாடகம் அது. கதை ஒரு கதம்பம். அதில் எல்லாமே உண்டு, எல்லோருக்கும் இடமும் உண்டு (முன்னமேயே சொல்லியிருந்தேன், நம் நண்பர் குழாம் ரொம்பப் பெரிசு என). கதை இதுதான்.. பரிட்சையில் பெயில் ஆகிற இரண்டு மாணவர்கள் சினிமாவில் சேர்ந்துவிடும் ஆசையில் வீட்டை விட்டு ஓடி விடுகிறார்கள். நானும் தேவாவும்தான் அந்த இரண்டு மாணவர்கள். நாங்கள் ஓடிச் செல்லும் பாதையில் கிடைத்த அனுபவங்கள் மறுபடி எங்கள் வீட்டுக்கே திருப்பி அனுப்பிவிடுகின்றன. முதலில் போட்ட நாடகத்தில் ஏற்பட்ட அனுபவத்தில் நிறைய நண்பர்களுக்கு ஏறத்தாழ தேர்வு முறையில் ஏற்பாடு செய்து தேர்ந்தெடுத்தோம்.

எங்கள் முதல் நாடகம் வெற்றி பெற பக்க பலமாக இருந்த நண்பன் மணிக்கு இந்த நாடகத்தில் என்ன பங்கு கொடுப்பது என்று தெரியாமல் விழித்தோம். மணிக்கு வாழ்க்கையில் மட்டுமல்ல மேடையிலும் நடிக்க வராது என்ற உண்மை தெரிந்ததாலும், அவனை ஒதுக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததாலும் நானும் தேவாவும் ஒரு முடிவெடுத்தோம். இந்த நாடகக் கதை, வசனம், டைரக்ஷன் ‘திவா தேவா’ என்று எங்கள் இருவரையும் போட்ட கையோடு, மேற்பார்வை P.D. மணி என்றும் போடுவது என முடிவுசெய்து அதை மணியிடமும் தெரிவித்தோம். மேற்பார்வை என்றால் என்ன வேலைடா.. என்று அவன் கேட்டான். இந்த நாடகம் எல்லாத்துக்கும் பெரிய போஸ்ட்டே மேற்பார்வைதான்.. அவன் கீழேதான் நாங்கள் இருவர் கூட வருவோம் என்று சொல்லி அவன் வாயைப் பிளக்க வைத்ததோடு, அவன் ஒப்புதலையும் பெற்றுவிட்டோம். அதன்படி நோட்டிசும் அச்சாகிவிட்டது (அவன் செலவுதான்). அவனுக்கும் பரமசந்தோஷம். நாடக ரிகர்ஸல் சமயத்திலெல்லாம் ‘ஆய் ஊய்’ என்று கொஞ்சம் அதட்டல் போட்டு எங்கள் அனைவருக்கு தேநீரையும் வாங்கிக் கொடுப்பான். நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது இதுவரை,

இந்த நாடகத்தில் ஏகப்பட்ட நண்பர்கள் சின்னச் சின்னப் பாத்திரத்தில் வந்து நடித்து தூள் கிளப்பி வருவதைப் பார்த்தவுடன், நம் மணிக்கும் ஆசை வந்துவிட்டது. ‘டேய், எப்படியாவது ஒரு சீன்ல நான் மேடைக்கு வரா மாதிரிப் பார். அவ்வளவுதான்,, இது மேற்பார்வை மணியோட ஆர்டர் னு வெச்சுக்கோ..’ அப்படின்னு சொல்லிப் பிடிவாதம் பிடித்த மணியை எங்களால் விட்டுக் கொடுக்க முடியவில்லை. அவனுக்காக ஒரு புது பாத்திரம், அதாவது எங்கள் எதிவீட்டில் ஒரு சின்ன வயது மனநோயாளி ஒருவிதமாக நடந்துபோவான். அந்த நடையை மாத்திரம் பயன்படுத்தி நாடகத்தில் நானும் தேவாவும் ஓடிப் போகும் வழியில் ஒரு பார்க்கில் இளைப்பாற வரும்போது அந்தச் சமயத்தில் இதைப் போல மணி மேடையில் ஒருமுறை நடந்துகாட்டினால் போதும். கீழே பார்க்கும் பசங்க கூட கையைத் தட்டுவாங்க, ன்னு சொன்னதும் மணியிடம் பழைய குஷி வந்துவிட்டது. ரிஹர்ஸலில் பலமுறை செய்துகாட்டி ‘வெரி குட்’ என்ற பெயரையும் வாங்கிவிட்டான்.

நாடகநாள் அன்று எங்கள் எல்லோருக்குமே ஏகப்பட்ட டென்ஷன். அப்போதெல்லாம் தொ(ல்)லைக் காட்சி விஜயவாடாவில் இன்னமும் பரவாதசமயம் ஆதலால் தமிழர் கூட்டம் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகவே வந்தது. நாடகமும் நன்றாகவே போய்க் கொண்டிருக்க, நகைச்சுவையையே மையமாக வைத்து பின்னப்பட்டிருந்ததால் கூட்டம் சிரித்துக் கொண்டே இருந்ததையும் கைதட்டல்களையும் அவ்வப்போது கவனித்துக் கொண்டுதான் இருந்தோம்.

நாடகம் ஆறாவது சீன். மணி ஒரு மாதிரி நடை போட்டு வரும் சீன். பார்க் சீன். ‘அண்ணா பூங்கா’ என்ற பெயர் பலகை போடப்பட்டுள்ள மேடையில் ஓடிக் கொண்டே இருந்த நானும் தேவாவும் சற்றுக் களைப்பாற அமருவோம். அங்கு ஏற்கனவே பார்க் பெஞ்சில் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு சினிமா இசை அமைப்பாளர் எங்களைப் பற்றி விசாரித்துப் பிறகு தன்னைப் பற்றி அதிகமாக பீலா விடும் இந்தக் காட்சியில்தான் மணி ஒரு ‘வழிப்போக்கன்’ போல எங்களை கடக்கிறான். கடக்கும்போது அவன் ஸ்பெஷல் ‘நடையும்’ நடக்கிறான். எக்ஸ்ட்ராவாக ஒரு விரல் சூப்பு வேறு வைத்துக் கொண்டான். எங்களை விநோதமாகப் பார்த்துக் கொண்டே போய்விடவேண்டும். அவ்வளவுதான். ஆனால் அவன் எங்களை விநோதமாகப் பார்த்ததும் அல்லாமல் அந்த சினிமா இசை அமைப்பாளரையும் ஒரு விதமாகப் பார்த்தான். (இது அவனுக்கு சீனில் கிடையாது).

அதோடு விடாமல் அந்த இசை அமைப்பாளராக நடித்த சந்திரனிடம் “இன்னா.. ம்யூசிக் பார்ட்டி.. எப்படிக் கீறே? இன்னா.. இன்னும் பீலா வுட்டுக்கினே காலம் தள்ளறியா.. இன்னா.. ஷோக்கா மேக்கப்லாம் போட்டுக்கினு பார்க்குக்கு டாவடிக்கி வந்துகினியா.. ஆமா.. போன வாரம் இன்னாத்துக்கு உன்னிய ரெண்டு மூணு நாளா பார்க் பக்கம் ஆளையே காணோம்.. இன்னா மெய்யாவே எதுனாச்சும் சான்ஸ் மாட்டிகிடுச்சா..”

இது எதிர்பாராத பேச்சு. இவனுக்கு நாடகத்தில் வசனமே கிடையாது. நானும் தேவாவும் பயந்துவிட்டோம். எப்படி சமாளிப்பது என சட்டெனத் தெரியவில்லை. ஏதேனும் பேசி அனுப்பி வைத்தால் போதும் என்று நான் எழுந்துகொள்வதற்கு முன்னேயே சந்திரன் (ம்யூசிக் பார்ட்டி) முந்திக் கொண்டான். ‘ஏய்.. கஸ்மாலம்.. குந்து நைனா இப்பிடிக்கு.. இன்னா கேட்டே.. சினிமால சான்ஸ் கிடைச்சுடுச்சான்னா.. நீ இன்னா நினைச்சுக்குனு இப்பிடிக் கேட்டுட்டே..’ என ஆரம்பித்ததும் மணிக்கு சந்தோஷம் அதிகமாக அதே சென்னை பாஷையில் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்தான். ஒரு இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு நான் அவனைக் கையால் பிடித்து அழைத்து மெல்ல அட்ஜஸ்ட் செய்வது போல அவன் பேசிய அதே பாஷையிலேயே சமாதானமாகப் பேசி மேடையை விட்டு அனுப்பி வைத்தவுடன்தான் எங்களுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. ஆனால் நல்ல காலம், தொடர்பில்லாத இந்த வசனங்கள் நாடகத்தைத் திசை திருப்பவில்லை.. அதே சமயத்தில் சென்னைத் தமிழின் இன்பத்தை மக்கள் மிகவும் ஆனந்தமாய் கேட்டு ரசித்தார்கள் என்பது சபையில் உள்ளோர் கைதட்டலால் நன்றாகவே தெரிந்தது.

ஒருவழியாக நாடகம் முடிந்தது. ரொம்பநாள் கழித்து மனசு விட்டுச் சிரித்துப் பொழுதைப் போக்கினோம் என ஒரு பெரியவர் வந்து சொல்லிப் பாராட்டிவிட்டுப் போனார். நிறைய ஜனங்கள் நல்லதோர் நாடகத்திற்காக தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தனர்.

இருந்தாலும் நான் மணியை மன்னிக்க அப்போது தயாராக இல்லை. அவனைத் தனியே அழைத்து வந்து கேட்டேன். ‘என்னடா.. இப்படி பண்ணிட்டே.. ரிஹர்சல் பண்ணாத சீன், நாங்க எழுதாத டைலக், இப்படியெல்லாம் பண்ணிட்டியேடா.. உனக்கு டைலக் பேசணும்னு ஆசையிருந்தா முன்னாடியே சொல்லவேணாமாடா.. திடீர்னு நாடகத்துல நடுவுல நாங்க உன்னோட வசனத்துக்கு ஏதாவது பதில் பேசாம நிப்பாட்டி ‘பே பே’ ன்னு நின்னா என்ன ஆகியிருக்கும் தெரியுமா’ ன்னு காரமாகக் கேட்டேன்.

‘அடப்போடா.. நீ எழுதிக் கொடுத்தா நான் மறந்திருப்பேன்.. என்ன.. ஜனங்க ரசிச்சாங்களா.. அதைப் பாரு.. ஏண்டா, மேற்பார்வை P.D. மணின்னு போட்டுட்டு இதைக் கூட பண்ணாட்டா எப்படிடா.. நீதான் கரெக்டா சமயத்துல நடுவுல வந்து என்னை மேடைலேருந்து கழட்டி விட்டுட்டே.. இன்னும் கொஞ்சம் பேச வுட்டிருந்தா, நம்ம பெருமை ஊரே பேசும்டா” என்று சிம்பிளாக சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

மணிக்கு மிகப் பெரிய மனசு என்று முன்னமேயே சொல்லியிருந்தேன் இல்லையா.. என் கல்யாணத்திற்குப் பரிசாக, இறந்துபோன தன் மனைவியின் 12 பவுன் தாலிச் சங்கிலியைப் பெற்றுக் கொள்ளுமாறுப் பணித்தான்.எப்பேர்ப்பட்ட அன்பு அது.. ஆனாலும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். நான் மறுத்ததற்குக் காரணம் அந்தத் தங்கமான பெண்மனியின் போட்டோவில் இந்த சங்கிலி எப்போதும் தொங்கவேண்டும் என்று சொன்னாலும் மணிக்கு நான் மறுத்துவிட்டதில் மகாவருத்தம்தான்.

மணியைப் பற்றி இந்தக் கட்டுரை ஆரம்பத்தில் எழுதியிருந்தபோது எல்லாமே கொஞ்சம் என்பது போல எழுதியிருந்தேன். அவன் சாப்பாடும் கொஞ்சம்தான். தூக்கம் கூட குருவித் தூக்கம் போல கொஞ்சம்தான். எப்போதாவது மது அருந்துவான் அதுவும் கொஞ்சம்தான். அதே போல அவ்வப்போது கொஞ்சம் வயிற்றுவலியும் வரும். கொஞ்சமாக வந்த அந்த வயிற்றுவலி நாளடைவில் குடல் புற்றுநோயாகி மாறி அவன் வாழ்நாளையும் கொஞ்சமாக்கி விட்டது (1990) இன்றளவும் எங்கள் நண்பர்கள் நெஞ்சத்தில் கலக்கமடையச் செய்கிறது என்பது என்னவோ வாஸ்தவம்தான்.

திவாகர்

Labels: