Monday, August 29, 2011

மாணிக்கவாசகர் மூவருக்கும் முன்னவரா, பின்னவரா..
திருவாதவூரரின் வரலாறு நடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்று ஒரு எண்ணம் ஏழு வருடங்களுக்கு முன்பே தோன்றியது. உடனே பல புத்தகங்களில் அவரைப் பற்றி எழுதின கட்டுரைகளை அலச ஆரம்பித்தேன். ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. அவரின் பாடல்கள் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சேர்க்கப்பட்டிருந்ததால் திருவாதவூரர் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பேயே வாழ்ந்தவர் என்பது. ஆனால் இந்தத் தேடல்களெல்லாம் இன்னொன்றை நோக்கி என் மனதை இழுத்தது.

அது அவர் எழுதிய பாடல்கள் மீதுதான். ஏற்கனவே சில பாடல்கள் பரிச்சயம் என்றாலும் திருவாசகம் முழுவதும் பருக ஒரு அவகாசம் கிடைத்தது. அழகு தமிழ், எளிமையான வரிகள், படிக்கப் படிக்க ஆனந்தம், இவருக்கு சிவன் குருவானால் இவர் தமிழர் அனைவருக்கு குருவன்றோ என்ற புரிதல் ஏற்பட ஆரம்பித்தது. என்னுடைய இந்த வெளிப்பாடுதான் நான் எழுதின திருமலைத் திருடன் நாவலில் இந்தப் பாடலுக்காகவே ஒரு பாத்திரப் படைப்பையும் உண்டாக்க வைத்தது. அவர் பாடல்களில் சில வரிகள் அவ்வப்போது ஆங்காங்கே விரவிக் கிடப்பதைப் பார்க்கலாம்..

ஏற்கனவே பல சமயங்களில் நான் குறிப்பிட்டதுதான். தெய்வப் பாடல்கள் பாடிய பலரும் பொதுமக்களின் பொது நன்மை கருதியும், தெய்வத்தின் மீதுள்ள அன்புப் பெருக்காலும், பக்தியாலும், மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக ஞானவெளிப்பாடாகப் பாடினரே தவிர தம் கால நிலை இதுதான், இப்போது இந்தச் சமயத்தில் இந்த ராஜா ஆண்டுகொண்டிருந்தபோது, என் தந்தையாரான இவர் இன்னின்ன செய்துகொண்டிருந்தபோது, என் தாயான இவர் மகிழ்ச்சி அடைவதற்காக இந்தப் பாட்டுகளையெல்லாம் எழுதி வைத்தேன் என்ற சுயநலமான வகையில் எழுதவில்லை.

பதிகங்களின் முடிவில் பாடல் எழுதியவரைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு. பல ச்ருதி என்பார்கள். இந்த பல ச்ருதுதிகள் மூலம் தெரியவரும் விவரங்கள் கூட இவ்வூரைச் சேர்ந்த இன்னார் என்றுதான் வரும். ஆனால் அவை கூட எதற்காக சொல்லப்பட்டது என்று கவனிக்கவேண்டும். இந்தப் பாடல்களின் மகிமையால் என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்பதையும் அந்த பல ச்ருதியில் பொதுமக்களைக் கருத்தில் கொண்டு விவரித்து அவர்களை நல்ல நெறியில் அழைத்துச் செல்லவே இத்தகைய பாடல்கள் எழுதப்பட்டதாக அவர்கள் சொல்லும்போதுதான் அவர்களுக்கு இருந்த கருணை உள்ளம் புரியும். மக்கள் மீது எத்தனை அபரிமிதமான அன்பு இந்தத் தெய்வப் புலவர்களுக்கு!

மாணிக்கவாசகர் பற்றிய வரலாறு சரியாகக் கண்டுபிடிக்கப்படவேண்டுமானால் நாம் செல்லவேண்டியது மாணிக்கவாசகரிடத்தேதான். அதாவது அவர் எழுதிய தெய்வத் திருவாசகத்திடம்தான். சமீபத்தில் இந்தக் குறிப்புகளெல்லாம் மறுமுறை படிக்க ஒரு நல்வாய்ப்புக் கொடுத்த நண்பர்களுக்கு ஒரு நன்றி! அதே சமயம் மாணிக்கவாசகரைப் பற்றிய சரித்திரக் கல்வெட்டுகள் அறவே கிடையாது என்பதால் இலக்கியச் சான்றுகள் பலவற்றை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நாம் நடுவில் இருக்கிறோம். எந்தப்பக்கம் சென்றால் எந்தப் பாதையில் நடந்தால் நாம் தேடவேண்டியது கிடைக்கும் என்று நாம் முடிவு செய்து கொள்ளவேண்டும். அப்படி சில நோக்குகளைக் கொண்டு இக் கட்டுரையை துவங்கியுள்ளேன். கூடுமானவரை எனக்கெனத் தோன்றும் எண்ணங்களையும் முடிவுகளையும் திணிக்கக்கூடாது என்பதிலும் சில கட்டுப்பாடுகள் எனக்கென விதித்துக் கொண்டதால் திறந்த மனதுடன் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதுதான் விவரங்களின் மதிப்புத் தெரியவரும். மேலும் மாணிக்கவாசகரின் காலம் பற்றி எழுதும்போதே வேறு சில சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும் விவரித்து எழுத வேண்டிய கட்டாயம் உண்டென்பதால் சில சமயம் செல்கின்ற பாதை பிரிந்தால் கூட வரவேண்டிய சமயத்தில் சரியான பாதையில் திரும்ப அடைய முடியும் என்ற நம்பிக்கையும் உண்டு. இப்படி மற்ற விஷயங்கள் என வரும்போது கூடுமானவரை சரித்திர சம்பந்தமான விஷயங்கள் கொடுக்கப்படும்.

அப்பர் பெருமான், ஞானசம்பந்தர், சுந்தரர் (மூவர்) இவர்கள் காலம் ஓரளவுக்கு அனைவருமே ஒப்புக் கொள்ளத்தக்க வரையில் தெரியவந்துள்ளது. அப்பர் பெருமான் காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பதும், ஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் அதாவது பல்லவ மாமல்லன் காலத்திலும், பாண்டிய கூன்மாறன் காலத்திலும் தோன்றியவர் என்பதும், சுந்தரர் ஏழாம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலிருந்து எட்டாம் நூற்றாண்டின் முதல் பகுதிவரை வாழ்ந்ததாகவும் சரித்திர ஆசிரியர்களும் சமயப் பெரியவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். பல்லவ ராஜசிம்மன் (கைலாசநாதர் கோயிலை எழுப்பித்தவன்) காலத்தில் சுந்தரர் வாழ்ந்ததாக தி,வை. சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ளார்.

ஆகையினால் இக்கட்டுரையின் முதல் நோக்கமாக வாதவூரரின் காலம் என்பது மூவரின் காலத்துக்கு முன்பாகவா அல்லது பின்பாகவா என்பதை மனதில் இருத்திக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். அப்படி ஆரம்பிக்கும்போது நமக்கு முதலில் தெரிய வருவது சுந்தரர் எழுதிய ’திருத்தொண்டத்தொகை’ பாடல்களாகும். இந்தப் பாடல் பிறந்த விதம் பற்றிய கதையில் ஆரூர்த் தலைவனான தியாகேசப்பெருமான் தம் அடியார்களைப் பற்றிப் பாடுக என சுந்தரரைத் தூண்ட, சுந்தரர் முதலில் எப்படி ஆரம்பிப்பது எனக் கேட்க ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என ஆண்டவனே அடி எடுத்துக் கொடுக்க, அப்பாடல் பின் சுந்தரமூர்த்தியாரால் பல அடியார்கள் பெயர் சொல்லி முடித்ததாக சொல்லப்படுகிறது.

சுந்தரர் எழுதிய அடியார்கள் பற்றிய குறிப்பில் மாணிக்கவாசகர் பெயர் இல்லை. மாணிக்கவாசகர் என்ற பெயர் வாதவூரர் என்ற பெயரிl முற்காலத்தில் வழங்கப்பட்டதாக சைவசமயக் குறிப்புகள் சொல்கின்றன. சரி, சுந்தரர் தாம் பாடிய அடியார்கள் பெயர் பற்றி ஒரு குறிப்பு கீழே தருகிறோம். (நன்றி – தேவாரம் தளம் www.thevaaram.org)

”தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப் பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டுபற்றி வந்த சிறப்புப் பெயரே என்க.
`திருநீலகண்டர்` என்னும் பெயருடைய நாயன்மார் இருவர் உண்மையின், அவர்களை, `குயவனார், பாணனார்` என, சாதிப் பெயர்களால் பிரித்தோதியருளினார். இங்ஙனம் சாதி முதலிய சிறப்புப் பற்றி வரும் பெயர்கட்குப் பின்னர், `ஆர்` என்பதனைச் சேர்த்து உயர்வுப் பன்மை கூறுதல் பிற்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் இயற்பெயர்க்குப் பின்னரே, `ஆர்` என்பது சேர்க்கப் பட்டது. (தொல்.சொல்.270) எனினும், பிற்கால வழக்கினையும், தொல்காப்பியனார் காலத்து வழக்கென்பது படவே உரைகள் உள்ளன.
`இல்லையே` என்னும் ஏகாரம் தேற்றம்; அது, உள்ளதை `இல்லை` என்று மறைத்துக் கூறுதல் என்னுங் குறிப்பினை உணர்த்திற்று.
`மாறர்` என்னும் பெயரினராகிய நாயன்மார் மூவர் உளராதலின், அவர்களை, `இளையான்குடி மாறர், சோமாசி மாறர், நின்றசீர் நெடுமாறர்` எனப் பிரித்தோதி யருளினார். `இளையான்குடி` என்பது ஊர்ப்பெயர். அதன்கண் உள்ள, `இளையான்` என்பது, ஒரு தலைவன் பெயராகலின் அதனோடு `தன்` என்னும் சாரியை புணர்த்தல் பொருந்துவதாயிற்று.
`வெல்லுமாறு மிக வல்லர்` என்றது, பகையரசர் பலரை வென்றமையேயன்றி, `மெய்த்திருவேடமே மெய்ப்பொருள்` (தி.12 பெரிய புரா. மெய்ப்பொருள். புரா. 15) என்னும் உணர்வில் தோலாது மிக்கு நின்றமையை.
குன்றை, மலைநாட்டில் உள்ள செங்குன்றூர். நாயன்மாரது குலம், ஊர், தொண்டு முதலிய சிலவற்றையும் ஒரோவிடத்து, நாயனார் எடுத்தோதியருளினார் என்க.
அல்லி - அகவிதழ். முல்லைமாலை, வணிகர்க்கு உரியது; எனவே, `அல்லிமென் முல்லையந்தார்` என்றது மரபு குறித்தவாறாம்.”


சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடியார்கள் மீது கவனமாக அவர்கள்தம் பெயரைக் கூட மறைமுகமாகவே, அந்த அடியார்கள் எப்படி விரும்புவார்களோ அந்த வகையில்தான் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலம்மையை பேயார் எனக் குறிப்பிட்டுள்ளதுதான் அந்த அம்மைக்கும் விருப்பம் என்பது உண்மைதானே.. இப்படி மறைமுகமாகப் பெயர் கொடுத்தது சுந்தரரது விருப்பமாகவும் இறைவனது திருவெண்ணமாகவும் இருந்திருக்கவேண்டும் ஆனால் இந்த அடியார்கள் வரிசையில் வாதவூரர் பெயர் குறிப்பிடவில்லை.

திருத்தொண்டத்தொகையையோடு சுந்தரரின் ஏனைய பாடல்களையும், தேவாரப் பாடல்களையும், திருவாசகத்தையும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி ராஜராஜசோழன் காலத்தவர் (பதினோராம் நூற்றாண்டவர்). நம்பியவர்கள் இந்தத் திருத்தொண்டத்தொகையை அடிஒற்றி திருத்தொண்டர் அந்தாதி இயற்றினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுதிய அடியார்கள் பெயரோடு அதிகப்படியாக ஒரே ஒரு அடியார் பெயரையும் சேர்த்தார். அவர் கோச்செங்கணான் எனும் சோழ அரசன். இரண்டாம் நூற்றாண்டில் சிவபெருமான் அருளால் பிறந்தவன், சிவனுக்காக திருவானைக்காவில் கோயில் எழுப்பியவன். அவன் பிறந்த கதையும் விசித்திரமானது. இவன் சற்று நேரம் கழித்துப் பிறந்தால் சிறந்த சிவத்தொண்டனாக விளங்குவான் என்று சோதிடம் கணிக்கப்பட்டதால், அவன் தாய் தலைகீழாய் நல்ல நேரம் வரும் வரை காத்திருந்து பெற்று, உயிர் நீத்த கதை அனைவருக்கும் தெரியும். திருமுறையில் பலபாடல்கள், திவ்யபிரபந்தத்தில் திருமங்கையின் பாடல் இந்த அரசனைப் போற்றிப் புகழ்கின்றன. இத்தகைய கோச்செங்கட்சோழனையும் அடியார்கள் வரிசையில் சேர்க்கிறார் நம்பியாண்டார் நம்பி.

திருத்தொண்டரடிப்புராணம் எனப்படும் பெரியபுராணத்தில் நாயகனாகவே சுந்தரரை அறிமுகப்படுத்தும் சேக்கிழார் பெருமானுக்கும் சுந்தரரின் திருத்தொண்டத்தொகையே ஆதாரம், எனினும் நம்பியாண்டார் நம்பிகள் சேர்த்த கோச்செங்கட்சோழனோடு சோழர்களின் பெருமைமிகு சோழர்களின் ஆதிஅரசர்களில் ஒருவனான மனுநீதிச் சோழனையும் சிவனடியாராகச் சேர்த்துப் பெருமை சேர்க்கிறார்.

நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் எட்டாம் திருமுறையாக திருவாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் திருத்தொண்டர் திருவந்தாதியில் மாணிக்கவாசகர் பெயர் விடுபட்டுள்ளது.

பெரிய புராணமும் மாணிக்கவாசகர் பெயரைக் கூறவில்லை. ஆனால் பொய்யடிமை இல்லாப் புலவர் எனும் சிவனடியார் ஒருவரைப் பற்றி சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் கூறும்போது அது மாணிக்கவாசகர் பற்றிக் கூறியதாக இருக்கமுடியாது என்று சேக்கிழாரும், நம்பியாண்டார் நம்பிகளும் கருதியதால் பொய்யடிமை இல்லாப் புலவர் என்பது மாணிக்கவாசகர் அல்லது வாதவூரராக இருக்கமுடியாது என்றே கொள்ளலாம். இப்படிச் சொல்லும்போது ஒரு நிதர்சனத்தை நாம் கவனிக்கவேண்டும். சேக்கிழார் பெருமான் கண்ணை மூடிக்கொண்டு சுந்தரர் சொன்னதையே அதே போல பெரியபுராணத்தைப் பாடவில்லை. சுந்தரர் எழுதிய ஒவ்வொரு அடியார் பெயரையும் அவர் ஊர், அவர் எவ்வாறு சிவனருள் பெற்றார் என்பதையும் கடினமாக உழைத்து, சேகரித்து, ஆராய்ச்சி செய்தபின் எழுதப்பட்டதுதான் பெரிய புராணம். அப்படி இல்லாவிட்டால் இறைவனே வந்து ‘உலகெலாம்’ எனும் சொல்லை எடுத்துத் தருவானா? தமிழகத்தின் முதல் ஆய்வாளரே சேக்கிழார் பெருமான் அவர்கள்தான்.

பதினொன்றே பாடல்களுடன் 88 வரிகள் கொண்டதுதான் திருத்தொண்டத்தொகை. ஆனால் பெரிய புராணமோ 4272 பாடல்கள் கொண்டது. 71 புராணங்களை விலாவாரியாகச் சொன்னது. எழுதி ஏறத்தாழ் 750 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் மிகச் சிறப்போடு இந்தக் காவியம் தமிழ்த்தாயின் கூந்தலில் வைரமணியாக ஒளிர்கின்றது. தமிழ் உள்ள வரை, உலகம் உள்ளவரை ஒளிரும் காவியமாகத் திகழும் வகையில் இந்தப் பெரியபுராணத்தைப் படைத்துள்ளார் சேக்கிழார் பெருமான்.

ஆனால் இப்படிப்பட்ட அரிய காவியத்தில் மாணிக்கவாசகர் பெயரோ அவர் வரலாறோ குறிப்பிடப்படவில்லை.. அதே சமயத்தில் சுந்தரர் குறிப்பிடாத கோச்செங்கட்சோழனும், மனுநீதிச் சோழனும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

மாணிக்கவாசகரின் வரலாறு மூவருக்கும் முன்னவரா, பின்னவரா எனும்போது, அவர்தம் பாடல் இருக்கின்றது, ஆனால் அவர்தம் வரலாறே பன்னிரண்டாம் நூற்றாண்டின் த்மிழின் மிகப் பெரிய காவியத்தில் இல்லை. இது மிகப் பெரிய கேள்வி. இவை பற்றிய ஒரு பார்வையை பார்த்துவிட்டு மேலும் சில விஷயங்களுக்குச் செல்வோம்.

திவாகர்
(இன்னும் வரும்)

(நண்பர்களுக்கு, இந்தக் கட்டுரையில் மேலே கண்ட விஷயங்கள் அனைவரும் அறிந்ததுதான். அதே சமயத்தில் இது ஆய்வுக் கட்டுரை அல்ல. ஆய்வுக்கு உதவும் கட்டுரை என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கவும். அத்தோடு விவரங்கள் ஆதியிலிருந்து சொன்னால்தான் கட்டுரை எழுதப்பட்ட பயனைத் தரும். இந்தக் கட்டுரை சற்று நீளும், நிறைய விஷயங்கள் பேசப்படும்.. அதனால் பொறுத்தருளவும்.. கேள்விகள் வந்தால் கடைசியில் பதிலளிக்கிறேன்.)