Thursday, September 02, 2010

பீமிலி’ யிலிருந்து ஞான ஒளி பரப்பும் கலங்கரை விளக்கு



குரு என்ற வார்த்தைக்கு ஜீவன் கொடுத்தது பாரதம்தான். இந்த பாரதத்தில்தான் மனிதப் பிறப்பு என்பதே அந்தப் பிறவியின் மூலம் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே என்ற கோட்பாடும் காலம் காலமாக உண்டுதான். முனிவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் படித்தாலே தெரியும். எதையும் வரமாக அளிக்கும் சக்தி வாய்ந்த ரிஷிகள் அந்த சக்தியை ஒருநாளும் தமக்கென பயன்படுத்திக் கொண்டதில்லை. வசிஷ்டரிடம் நந்தினி என்றொரு பசு வளர்ந்து வந்ததையும், அந்தப் பசு விசுவாமித்திரருடன் கூட வந்த பல்லாயிரம் வீரர்களுக்கு பசியாறச் செய்ததையும் படித்திருக்கிறோம். ஆனால் ஒருநாளும் அந்தப் பசுவிடம் தனக்காக அவர் வேண்டியதில்லை. காட்டிலே வாழ்ந்து எளிய முறையைக் கடைபிடித்து சுகதுக்கங்க்ள் தம்மைத் தாக்காதவாறு வாழ்ந்து காட்டிய புண்ணிய புருஷர்கள் அவர்கள்.

ஆனால் மனிதப் பிறவியையே ஒரு வரமாகப் பெற்ற மனிதன் சுக துக்கங்களில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தவிக்கிறான். அப்படித் தவிக்கும்போது அவனைக் கரையேற்றுபவர் குரு ஒருவர்தான் என்பதும் கூட பாரதம் உலகுக்குக் கற்றுக் கொடுத்த பாடம். உண்மையான தேடலில் உள்ள ஒருவனுக்கு உடனடியாகத் தேவைப் படுவது ஒரு நல்ல குரு என்று எந்தப் பெரியவரும் உடனடியாக சொல்லி விடுவார்கள். குரு என்கிற வார்த்தையே புனிதமானது என்றுதான் நம் இதிகாசங்களும், திருமந்திரமும் சொல்கின்றன..

குரு எப்படி வருவார் என்று அவ்வப்போது கேள்விகள் என்னுள் வரும். குரு என்பவர் ‘இதோ பார், இன்று முதல் நான் உனக்கு குருவாக அப்பாயிண்ட்மெண்ட் ஆகியிருக்கேன், அதனால் நான் சொல்படி எல்லாம் கேட்பாயாக’ என்று சொல்லிக்கொண்டே திடீரென வானத்தில் இருந்து வருவாரா எனவெல்லாம் கூட என் எண்ணங்கள் போகும். ஆனால் உண்மையில் குரு என்பவர் எப்போது தேவைப்படுகிறாரோ அப்போது நிச்சயமாக நம்மைத் தேடியாவது நேரடியாக வந்துவிடுவார் என்பதுதான் என்னுடைய முடிவான எண்ணம். எவ்வெப்போதெல்லாம் எவரெவர் நமக்கு நல்வழி காட்டுகிறார்களோ அவர்கள் எல்லோரையுமே நம் குரு என்றே கொள்ளவேண்டும்.. தனிப்பட்ட முறையில் வேண்டாது தனக்கேயல்லாமல் இந்த உலகமே உயர்வாக அமையவேண்டும் என்று பாடுபடும் பெரியவர்கள் அனைவருமே நம் குரு. அப்படிப்பட்ட உயர்வான பெரியவரைப் பற்றிதான் இந்தப் பதிவு.


ஆந்திரத்தில் தற்சமயம் குருஜி என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படுபவர், ஏன் குருஜி என்றாலே அது விசாகப்பட்டினம் அருகே பீமிலியில் அருளாட்சி செய்துவரும் சத்குரு சிவானந்த மூர்த்தி அவர்களைத்தான் குறிக்கும். உலக நன்மை,- லோக க்‌ஷேமம் என்ற உயர்ந்த குறிக்கோள் உடைய உத்தமத் தலைவர் அவர், அவருடைய காலத்தில் அவரைப் பார்த்துக் கொண்டே நாமும் வாழ்கிறோம் என்பதே ஒரு மகா பாக்கியம் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன். அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்கள் இங்கே.. ஆனால் குருஜி அதை விரும்புவது மட்டுமல்ல, அதற்கான செயல்களையும் ஒழிவில்லாமல் செய்துவரும் மகான்.

குருஜி என்றால் காவி உடை என்பதெல்லாம் கிடையாது. எளிய சாதாரண வேட்டியும் சட்டைதான். மிக மிக எளியவர். யாரிடமும் எந்தப் பேதமும் காணாத மகான். இவருக்கும் மாபெரும் கூட்டம் உண்டு. ஆனால் படாடோபத்தையே விரும்பாதவர். ஒரு சில பத்திரிகைகளில் குருஜியை சாட்சாத் சிவபிரானின் அம்சம் என்று கூட எழுதுகிறார்கள். ஆனால் எந்தப் புகழ்ச்சியுமே இவர் செவிகளில் ஏறுவதில்லை. தான் சொல்லும் நல்ல விஷயங்களைக் கேட்பவர்கள் அதை மேலும் பலருக்கு எடுத்துச் சொல்வார்கள் இல்லையா.. இப்படி சத்விஷயங்கள் பரவினாலே போதாதோ, என்று சொல்வார். ஏன், தன்னை மற்றவர்கள் குரு என்று சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குவார்.

எனக்கு எப்போதும் ஒரு வகையில் அதிருஷ்டம் அமையும். நான் குருஜியைக் காண பீமிலி செல்லும்போதெல்லாம், ஒரு மணி கால நேரத்துக்கும் அதிகமாக பிரத்யேகமாக அவருடைய உரைகளை கேட்க சந்தர்ப்பங்கள் அதுவாக அமையும். என் பணி கேள்விகள் கேட்பதே.. அவர் கோபம் கொள்ளாமல் விளக்கங்கள் சொல்லும்போதெல்லாம், எத்தகைய ஞான விளக்கின் ஒளியில் நாம் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம் என்றுதான் தோன்றும்.
இவரிடம் ஞானௌபதேசம் பெறுவதாகவே ஒரு உணர்ச்சி கூட வரும். எத்தனையோ முறை ஹிமாலயப் பிரதேசங்களுக்கு குழுக்களாக அழைத்துச் சென்று பனிமலையின் பெருமைகளை பலருக்கு உணரச் செய்திருக்கிறார். அவருடன் சென்ற போதெல்லாம் ஞானத்தின் உச்சியை தரிசித்ததாகவே பலரும் என்னிடம் சொல்வார்கள். ‘என்னை எனக்கே அறிமுகப்படுத்தியவர்’ என இசைக்கவி ரமணன் எழுதுகிறார்.

சனாதன தர்மம் உயர்ந்தது என்று அடிக்கடி சொல்வதை விட அந்த தர்மத்தை சாதாரணமாகக் கடைபிடித்தாலே போதும் எனச் சொல்வார். சனாதன தர்மம் என்றல்ல, நம் பாரதம் தந்த சரித்திரத்தின் பாடங்களையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பார்.

’குருஜி! சாதி விஷயம் சனாதன தர்மத்தைப் பற்றிய ஒரு கேவலமான எண்ணத்தை இந்த சமுதாயத்திடம் ஏற்படுத்திவிட்டதோ’, என்று ஒருமுறை கேட்டேன். சனாதன் தர்மத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று திருப்பிக் கேட்டார். வசதிக்காகவும், ஒரு மனிதனைப் பற்றி அவன் தொழிலால் ஒருவருக்கொருவர் அறியப்படுவதற்காகவும் ஏற்பட்டதுதானே சாதிமுறை, என்பார்.

ஈகோ என்ற உணர்ச்சி மனிதனை ஆட்டிப் படைக்கும் போதெல்லாம் மனிதன் அதற்கு அடிமை ஆகிறான். ஒரு கம்பெனி இருக்கிறது.முதலாளி இருக்கிறார், அவருடைய வேலைக்காக ஒரு பொது மேலாளர் இருக்கிறார். அவருக்கு கீழே நிர்வாகி வருகிறார். நிர்வாகிக்கு கீழே குமாஸ்தாக்கள் வருகிறார்கள்.. குமாஸ்தாக்குக் கீழே பியூன்கள் எனச் சொல்லப்படும் பணியாள் வருகிறார். இப்போது இங்கே யார் உயர்ந்தவர். இதுதான் ஜாதியின் ஆரம்பகட்டம். ஆனால் அலுவலக வேலை முடிந்தவுடன் அந்த உயர்ந்த பதவிக்காரருக்கும் கீழேயுள்ள பணியாட்களுக்கும் என்ன வித்தியாஸம் இருக்கும்.. சில அரசாங்க அலுவலகங்களில் பியூன்கள் வேலை முடிந்தவுடன் யாரையுமே கண்டுகொள்ளக் கூட மாட்டார்கள். ஆனால் ஜாதியின் ஆரம்பகட்டத்தில் இருந்த இந்த அலுவலக நிலை காலாகாலத்தில் ரத்தத்தில் ஊறுவதுபோல பிறப்பு வழியாக வந்தது போல நிலையாக நின்றுவிட்டது. இந்த நிலையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் ஜாதிவித்தியாசம் எல்லாம் பார்க்கமாட்டார்கள்., என்பார். அலுவலகங்களிலாவது முயற்சியை தீவிரப்படுத்தினால் பதவி உயர்வு வந்து பியூன், ஒரு பொது மேலாளர் வரை செல்ல முடியும். ஆனால் காலமும் மனிதர்களும் இந்த சாதி வழக்கைத் திசை மாற்றிவிட்டார்கள் என்பதுதான் உண்மை, என்பார்.

குருஜி தமிழில் பேசுவார், சிறிது எழுதவும் செய்வார். என்னுடையை புத்தகங்களை அவரிடம் கொடுத்து ஆசிகள் கோருவது உண்டு. ‘இத்தனை பக்கங்களை எப்படித்தான் எழுதுகிறாயோ’ என்று சிரித்துக் கொண்டே கேட்பார். சரி, இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, படிப்பதற்கு ராகவேந்திரன் (குருஜியுடனேயே இருப்பவர், பேராசிரியர்) இருக்கிறார், அவர் படித்தபின் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்’ என்பார். அழகான மகாலட்சுமி கோயில் ஒன்றினைக் கட்டியுள்ளார். ஏன் மகாலட்சுமி கோயில் எனக் கேட்டதற்கு, இந்தப் பிராந்தியமே சுபிட்சமாக மாற வேண்டாமா, அதற்கென வைத்துக் கொள்ளுங்களேன், என்றார்.

சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் இருண்டு கிடந்த காலத்தை ‘இருண்ட காலம்’ என்று சரித்திர ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். அந்த இருண்ட காலம் மகேந்திரபல்லவன் மூலம் ஒளிமயமானதை புதினமாக ‘விசித்திரசித்தன்’ மூலம் எழுதினேன். எனக்குப் பல விஷயதானங்களை அந்தக் கால கட்டத்தில் செய்தவர் குருஜி. இன்னமும் நிறைய விஷய்ங்கள் சரித்திரத்தில் நோண்டலாம் என்பார். சில உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்பார். ஆராயுங்கள்.. தேடுங்கள், நிறைய கிடைக்கும் ஆந்திரத்திலேயே, என்பார்.

குருஜியைப் பற்றிய நிறைய புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். கட்டுரைகள் ஏராளம். அவரே நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.

சமீபத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது, அவரது அந்தரங்கம் கூட அவரே வெளிப்படுத்தினார். ஆந்திரக் காவல் துறையில் பணிபுரிந்து, திடீரென ஒருநாள் ’நாளையில் இருந்து வேலைக்கு வருவதில்லை’ என எழுதிக் கொடுத்து விட்டார். ’ஏன் இப்படி செய்கிறீர்கள், உங்களுக்கு ஏதேனும் குறை வைத்துவிட்டோமா’ என்று பலரும் கேட்டனராம். ’இல்லை, என் மனைவிக்கு சிலகாலம் ஆறுதலாக அவள் அருகே இருக்கவேண்டும்.. போதும் இத்தனை வருஷம் இங்கே சேவை செய்தது’ என்று அரசாங்க ஜீப், வேலையாட்கள் இவைகள் அனைத்தையும் அன்றே அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். மனைவியாருக்கு உடல்நலம் சரியில்லாத வேளை அது, அவர் நினைத்தது போலவே மனைவியார் தேறி வந்ததும் வாஸ்தவம். சிலகாலம் மகிழ்ச்சியுடன் இருந்து அதன் பிறகே மனைவியார் இந்த உலகை விட்டு மறைந்தார். ”இவையெல்லாமே வாழ்க்கையில் கடந்து போகும் கட்டங்கள். இன்பம் துன்பம் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்துப் பார்க்கப் பழகவேண்டும்.. வாழ்க்கையில் முடிந்தவரை மற்றவரை சந்தோஷமாக வைத்துப் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும். முக்கியமாக மற்றவர்களுக்கு நாம் ஒரு ஆதர்சமாக இருக்கவேண்டும். நம்மிடையே உள்ள நல்ல கருத்துகள் மட்டும் அவர்களிடம் சென்றால் போதும். நம் தேசம் நமக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம். நம் தேசத்தில் உள்ள செல்வங்கள் போல வேறு எங்கேயுமே கிடையாது. நம் தேசத்தை நேசிக்கவேண்டும்.. தேசத்தைப் பற்றிய நல்லவைகளை எடுத்துச் சொல்லுங்கள்.. மிகப் பெரிய ஆன்மீகச் சொத்தாக உங்கள் தேசத்தைப் பாருங்கள்.. குடும்ப வாழ்வை நிலைப்படுத்துங்கள்.. குடும்பம் ஒரு கோயிலாக மாற வழி செய்யுங்கள்.. பாரத சனாதன தர்மம் தானே செழிக்கும்..”

பகவான் பக்தருக்கு எளியவன் என்று நம்மாழ்வார் சொல்கிறார். எளிமையே உருவாகக்கொண்ட குருஜியின் வார்த்தைகளில் உள்ள தெய்வீகத்துக்கு ஈடு இணை ஏது?

பீமிலி கடற்கரையோரம் இருக்கும் குடிலிலிருந்து ஒரு கலங்கரை விளக்கு கடல் பக்கம் ஒளியைப் பாய்ச்சாமல் சற்று திரும்பி நிலத்துப்பக்கமாகப் பார்த்து் தன் ஒளியைப் பாய்ச்சுகிறது.

குருஜி ஆந்திரத்தின் ஆன்மீக விளக்கா.. என்று கேட்டால். பாரதத் தாய் தன் மக்களுக்காக அனுப்பி வைத்திருக்கும் ஞான விளக்கு.. என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. குருஜியைப் பற்றி இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. எல்லோருக்கும் ந்ன்மை பயக்கும் விஷயங்கள்தான் அவை. காலம் வரும்போது தமிழில் புத்தகமாகவும் வெளியிட ஆசைதான்.. காலம் கருணை புரிந்து கனியட்டும்..