Wednesday, March 18, 2009>பிரிவு நிரந்தரமே:


ஒன்றா இரண்டா
ஐம்பது வருட பந்தம்
உன்னோடு என் உறவு
இனியும் வேண்டுமோ

எப்படியெல்லாம் இருந்தோம்
எண்ணிப்பார்க்கிறேன் நான்
அழுகை வருகிறது எனக்கு
அன்பான அந்தக் காலகட்டம்

உன் சிரிப்பில் என் பங்குண்டு
உன் கோபத்திலும் கூட
உன் அழுகையை விரும்பாது
உன் அழகை ரசித்தேனே

ஆரம்ப கால அன்பு
அத்தனையும் பேரின்பம்
ஊட்டி ஊட்டி வளர்ப்பாய்
உனக்காகவே பிறந்தாயென்பாய்

உமிழ்நீர் வந்து விழும்போதெலாம்
எச்சம் என்றா நினைப்போம்நாம்
அமுதமென்றல்லவா அனுபவிப்போம்
ஆனந்தமாய் சுவைப்போமே

ஒருநாள் ஒரு இரவு
உன்கனவில் நான் விழுந்தேன்
அடுத்த நாளெல்லாம் துடித்தாயே
ஆருயிர்தாம் போய்விடுமோ என

ஒரு சின்ன வலியென்றால்
ஓராயிரம் முறை துடிப்பாய்
இளமைவேகம் இதுதானோ
இன்பமோ இன்பமென இனித்தேனோ

அந்தக் காலம் என்றில்லை
இந்தக்காலத்திலும் உனக்குத் தேனாய்
இனிக்கிறேன் என இறுமாந்தேனே
இப்படியே காலம் ஓடிவிடாதா

ஆனால் இந்த ஆறுமாதந்தான்
என் மீது உன்கவனம் இல்லை
ஏனிப்படி என ஒருநாளாவது
உன் நினைவு சென்றிருந்தால்
என்னைப் பற்றி சிந்தித்திருந்தால்
என் சேவையை மதித்திருந்தால்
உன்னை நான் பிரிவேனா
ஏதேதோ நீயும்தான் செய்தாய்
ஒப்புக்கொள்கிறேன் ஆனால்
அத்தனையும் ஒப்புக்குத்தான்
அன்று சரியானால் போதுமென
அப்போதைக்கப்போது எதையாவது
அடாவடியாக சரிசெயவதுபோல
அடம் பிடித்தெனை ஆளுவாய்

ஆறுமாதகாலத்தை எண்ணிப்பார்
எத்தனை நாட்கள் துன்பம்
எத்தனையோ தூங்காத இரவுகள்
உன்னோடு போராடி இதுதான் முடிவா

அளவுக்கு மீறிய ஆசையோ
ஆண்டவனுக்கே பொறுக்கவில்லையோ
இதுதான் எனது விதியோ
இறைவனே நீ சொல்வாயோ

ஆனாலும் நீ சொல்லிவிட்டாய்
அந்த அழகான டாக்டரிடம்
என் தொல்லை தாளவில்லை
என் துணையினி தேவையில்லை

இதுதானோ உன் முடிவு
உனக்கும்தான் சொல்கிறேன்கேள்
உன்னால் நான் அழிந்தாலும்
இம்மண்ணினுள்ளே மறைந்தாலும்

எனக்கிணை யார் வருவார்
அப்படியே வந்தாலும்
என் போலே உன் உணர்வில்
உள்ளத்தில் கலப்பாரோ சொல்வாயே

(நேற்றிரவு மருத்துவரால் (ஆறு மாதமாக தொல்லைக் கொடுத்து) வேறு வழியில்லாமல் பிடுங்கப்பட்ட எனது பல் என்னைப் பார்த்து முறையிட்டுக் கேட்ட கேள்விதான் இது - சாரி.. அப்படி முறையிட்டதாக நான் நினைத்தது )

திவாகர்
மின் தமிழ் பின்னூட்டங்கள்:

I should have known!! :))))))))))))) Anyhow Congratulations!
Geetha Sambasivam

கங்கிராட்ஸ் எதுக்கு? பிரிஞ்சுதுக்கா? :))
V, Dhivakar

பல் எடுத்தவங்க குழுமத்திலே சேர்ந்ததுக்கு! :))))))))
Geetha Sambasivamஉன் உயிரோடு வேரூன்றி
உதிரம் பகிர்ந்து ஒன்றாய் பிணைந்த
என்னை தூக்கி எறிந்து விட்டு ,

புதிதாக இன்னொருத்தியை
வெள்ளையாக இருக்கிறாளே என்றா
விலை கொடுத்து இணைத்து்க்கொண்டாய்

என்னதான் தங்கத்திலே அவளை நீ கட்டினாலும்
நான் உடன்பிறப்பு அவள் நடுவில் வருபவள்.
நானும் நடுவில் வந்தவள் தானே என்கிறாயா

அது சரி - உனக்காக ஓடாக தேய்ந்தேன்
நீ செழிக்க நான் கரைந்தேன்
முடிவில் நான் சாய்ந்தது
வைத்தியரின் குப்பை தொட்டியில்
vj kumar
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man

:)))))))))))))))) ஒரு பல்லுக்காகக் கவிதை மழை பொழியுது!
Geetha Sambasivam


மண்ணிலே மறைந்ததுக்கு நினைவஞ்சலியாக எடுத்துக் கொள்ளுங்களேன்.. :)))))))
V, Dhivakar

எழுத்தாளர் பல்லல்லவா - மடிந்தும் எழுத வைக்கிறது
vj kumar
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man

பல் சுவை

அன்புடன்
தமிழ்த்தேனீ

Labels: