வெளியூரில் தமிழ்ச்சங்கம் வைத்து அதை சரியாக வளர்ப்பது எப்படி ?.....இப்படி யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல நான் உடனே பள்ளி மாணவன் கையை தூக்குவது போல தூக்கி விடுவேன்.
இது பதினைந்தாவது வருடம்..ஒரே பதவி - செயலாளர்.. 1994 ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் தமிழ்ச்சங்கம் நலிந்து கிடந்த நிலையில் அப்போது செயலற்று இருந்தவர்கள் செயல் புரிய செயலாளர் ஒருவரைத் தேடியபோது நானாக போய் வலிய வலையில் விழுந்தவன்தான். இன்னமும் எழுந்திருக்கவில்லை...எழுந்திருக்கவும் விடவில்லை....
சென்ற மாதம் கூட நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சொல்லிப்பார்த்துவிட்டேன். பதினான்கு வருடம் ஆகிவிட்டது.. ராமர் வனவாசம் போல... ஏன் ...ஆயுள் கைதிகளுக்கு கூட அதிகபட்சம் 14 வருடம் என நிர்ணயிக்கப்படுவது உண்டு... என்னையும் இந்தப் பதவியிலிருந்து விட்டுவிடுங்களேன்.. ஊஹூம்.. இந்தப் பேச்சு யார் காதிலுமே சென்று விழவில்லை..அல்லது இந்தச் சமயம் பார்த்து அவர்கள் செவிகள் ஊனமுற்றதோ என்னவோ என்று நினைத்து TV Replay போல மறு முறை சொன்னேன்.."விழலுக்கு இறைத்த நீர்தான்..."
சரி..விடுங்கள்.. தமிழ்ச்சங்கம் நடத்துவது என்பது நிச்சயம் சாதாரண வேலையல்ல...அரசியல் கட்சி கூட சற்று வலிமையும் பணபலமும் "வாழ்க" போட ஆள் பலமும் இருந்தால் போதும் - தேர்தல் வரும்போது யாராவது பெரிய கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் ஜெயித்தோ அல்லது தோற்றுக்கொண்டோ, வெற்றிகரமாக கட்சியை நடத்தலாம்...ஆனால் தமிழ்ச்சங்கங்கள் நடத்துவது எல்லாம் அப்படி அல்ல...
முதல் குவாலிஃபிகேஷன் : எல்லோரையும் அணைத்துச் செல்லத் தெரிந்திருக்கவேண்டும்.. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறுவார்கள்.. ஒவ்வொரு விதமான சிந்தனை..பல சமயம் சிந்தனைகள் பலவிதமாக மாறுபடும். சங்கத்தில் செயல் குழு உறுப்பினர்கள் பலர் பல சமயம் கூட்டங்களுக்குத் தலையே காண்பிக்கமாட்டார்கள். ஆனால் ஏதாவது ஒரு கூட்டத்துக்கு வந்து சரமாரியான ஆலோசனைகளை அள்ளி வீசிவிட்டு ஏதோ பெரிய கடமையை முடித்தது போல கடமை வீரன் பார்வையையும் மற்றவர்கள் மேல் வீசி விட்டுப் போய் விடுவார்...அவர் கூறிய யோசனைகளையும் அவரே அடுத்த நாளும் மறந்து விட்டிருப்பார்... ஒரு வேளை நீங்கள் போன் செய்து அவற்றை ஞாபகம் படுத்தினால்... 'என்ன நான் சொன்னாமாதிரி செஞ்சுட்டீங்களா.. செய்யுங்க சார்.. அப்பத்தான் தமிழ் மன்றம் வளரும்..." என்று இன்னொரு பெரிய பொறுப்பையும் வழங்குவார்..
அடுத்த குவாலிஃபிகேஷன் : நிதி, ஃபைனான்ஸ்... இது இல்லையென்றால்...எதுவும் இல்லை..செயலாளர் என்பவர் செயல்கள் சரியாக நடைபெறத்தானே நியமிக்கப்படுகிறார். என்று யாரும் நினைத்து விடக்கூடாது. நிதி நிலைமை சீராக இல்லையென்றால் முதலில் செயலாளருக்கு மதிப்பு இருக்காது. ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால் அதற்கான நிதி எப்படி என்று திட்டமிடவேண்டும்... யார் sponsor செய்வார் என்று பார்க்கவேண்டும்.. sponsor எப்போதுமே குறைந்த அளவில்தான் கிடைக்கும்.. ஏனைய செலவுகளை எப்படி சமாளிப்பது என்று பார்க்கவேண்டும்..டிக்கெட் போட்டால் அவைகளை சரியாக விற்பது எப்படி என்ற கலையைத் தெரிந்திருக்க வேண்டும்.. இதற்கும் மேலாக செலவு ஏற்பட்டால் யாராவது 'பணம் படைத்தவரை' கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கவேண்டும். பணம் படைத்தவர்தான் பக்கத்திலே இருக்கிறாரே என்று அவரை அடிக்கடி தொந்தரவு செய்யவும் கூடாது. பணமும் அவர் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்..ஆனால் அதை வாங்காத அளவுக்கு செயலாளர் அந்தத் தொடர்பை வைத்துக் கொண்டே இருக்கவேண்டும். (இது எப்படி சாத்தியம் என்று கேட்காதீர்கள்.. சாத்தியமாக்கவேண்டும்)
நிதி நிலைமையை நன்றாக ஆராய்ந்து பார்த்து விட்டு நிகழ்ச்சியை நடத்துவது நல்லதா -அல்லது நிகழ்ச்சியை நடத்தும் வேலைகளைத் தொடங்கி விட்டு நிதிக்காக அலைவதா என்று யாராவது கேட்டால்...'இரண்டையுமே செய்யலாம்..அவரவர்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்து..' என்பேன்..
முதலில் சொன்னபடி செய்யும்போது பணம் சேரவில்லை என்றால் நிகழ்ச்சியை நிறுத்திவிட வாய்ப்புள்ளது..
இரண்டாவது வகையில் செய்யும்போது 'குறிக்கோள்' ஸ்ட்ராங்காக இருக்கும் பட்சத்தில் உங்களால் பணம் எப்படியும் சேர்க்கமுடியும்..நிகழ்ச்சியையும் குறிப்பிட்ட காலத்தில் நடத்தமுடியும் ..நிகழ்ச்சி நன்றாக நடைபெறும் பட்சத்தில் பெருமையும் பெறமுடியும்.
இந்த இரண்டாவது வகைப்படிதான் விசாகப்பட்டினம் தமிழ்க்கலை மன்றம் தன் 'நூற்றாண்டு' விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியது. இந்த இரண்டாவது வகைப்படித்தான் ஆந்திர மாநிலத்திலேயே முதன்முறையாக விசாகப்பட்டினத்தில் தமிழ்ச் சங்கத்திற்கென ஒரு சொந்தக் கட்டிடமே எழுப்பியிருக்கிறோம்...
அடுத்து கும்பல் சேர்ப்பது. இது மாபெரும் கலை. வீட்டில் டி.வி. அதிலும் பல தமிழ் சேனல்கள், சதா ஏதாவது சினிமா, மெல்லிசை என்றெல்லாம் தொலைக்காட்சிகள் தொல்லை(?) கொடுத்துக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழரையும் அவர்தம் குடும்பத்தினரையும் இழுப்பது என்பது ஏறத்தாழ மணலைக் கயிறாக திரிப்பது போலத்தான். ஆனாலும் அவர்களை இழுக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்திக் காட்ட வேண்டும்..
இது ஒரு மாபெரும் கஷ்டம்தான்.. ஏனெனில் நிகழ்ச்சிகளில் இரண்டு வகை உள்ளன. ஒன்று உள்ளூர்காரர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்துவது... இரண்டாவது தமிழகக் கலைத் துறையின் பிரபலங்களை அங்கிருந்து வரவழைப்பது. இந்த இரண்டாவது நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் கூட்டம் கூட்டலாம்தான்.. டிக்கெட்டுகளையும் கூட விற்று விடலாம்தான்.. ஆனால் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு சங்கம் முழுவதும் ஒத்துழைக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து செய்யும்போது கிடைக்கும் வெற்றி சாதாரணமானதல்ல.
ஆனால் உள்ளூர்காரர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளைத்தான் நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்..காரணம் இவைகளைப் போன்ற நிகழ்ச்சிகளின் போது உள்ளூர் தமிழர்களின் கலை வெளிப்படுகின்றது. தன்னம்பிக்கை பெரிதாகிறது, இந்த தன்னம்பிக்கை உள்ளூர் தமிழர் எதிர்காலத்தில் இவர்கள் முன்னேற பெரிதும் உதவுகிறது.
ஆனால் அந்த வகையில் உள்ளூர்காரர் செய்யும் நிகழ்ச்சிக்கு கூட்டம் கூட்டுவது என்பது மகா கஷ்டம்தான். இதற்கும் ஒரு வழி வைத்துள்ளோம்..எல்லோரும் சேர்ந்து நிதிவகைகளில் உதவிசெய்து இரவுச் சாப்பாடு வைத்துவிடுவோம்.. அனைவரும் சேர்ந்து அதுவும் தமிழர் உணவு வகைகளை, உண்ணும்போது எல்லோருக்குமே தனி இன்பம் உண்டாகும்தான்.
யாராவது எதையாவது குறை சொல்லிக்கொண்டே இருந்தாலும் நாம் கண்டு கொள்ளக் கூடாது.. கோபமும் கொள்ளக்கூடாது. கோபம் பொதுவாக யாருக்கு வந்தாலும் வரலாம்.. ஆனால் இந்த செயலாளருக்கு வரவே கூடாது. மனதில் உறுதி வேண்டும்.. இந்த உறுதி பல கட்டங்களில் காப்பாற்றும்.
ஆனால் பெரிய நகரங்களில் (மும்பை, தில்லி, கல்கத்தா) உள்ள தமிழ் மன்றங்களுக்கு அவ்வளவாக இந்தக் கஷ்டங்கள் கிடையாது.. ஏனெனில் அங்கு தமிழர்கள் மிக அதிக அளவில் வசிப்பது ஒரு வசதியான காரணம் என்று சொன்னாலும், தமிழ்ச் சங்கத்தை நடத்தும் பொறுப்பாளர்கள் பாடு எங்கேயுமே திண்டாட்டம்தான். இந்தக் கஷ்டங்களையெல்லாம் பொதுவாக வெளிநாடுகளில் உள்ள எல்லா தமிழ்மன்றங்களுமே அனுபவிக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்.
இத்தனை சொல்கிறேனே தவிர இந்தத் தமிழ்மன்றத்தில் இன்னமும் நான் ஏன் செயல்பட ஒப்புக்கொள்ளவேண்டும் என்று யாராவது கேட்டால் அது இந்தத் தமிழ்மன்ற நண்பர்கள் என் மேல் தனிப்பட்ட முறையில் காட்டும் 'அன்பு' ஒன்றுதான். அன்புதான் மூலதனம்..அந்த அன்பு ஒன்றைக் காட்டியே அடிமைப்படுத்தி விடுகிறார்கள். எல்லோருமே நல்லவர்கள் என்றுதான் அவர்களைப் பார்க்கும்போது பல சமயங்கள் எனக்குத் தோன்றும்...
இந்தக் கட்டுரையை இவர்கள் யாரும் படிக்காமல் இருக்க வேண்டுமே... ஒரு வேளை படித்தால் தமிழ்மன்றத்தின் அடுத்த கூட்டத்தில் நம் கதி அவ்வளவுதான் .. (அப்படியாவது அடுத்து என்னைக் கழட்டி விட்டால் சரி..)
திவாகர்